Advertisement

முகூர்த்தம் 22

 

விடிவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. சீதாவும் ராஜேந்திரனும் வந்திருந்த நெருங்கிய உறவினர்களை வேனில் அமரவைத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒரு முதிய பெண்மணி, “யேப்பா ராஜேந்திரா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிளம்பிட்டாங்களா கேட்டியா..?”

”கேட்டேன் பெரியம்மா… அவங்களும் இன்னும் அஞ்சு நிமிஷத்தில கிளம்பிருவாங்களாம், நாமளும் புறப்பட வேண்டியது தான்…” என்றார்.

“அம்மாடி சீக்கிரம் அலங்காரத்தை முடிங்க, கிளம்பணும்ல… மாப்பிள்ளை வீட்டுக்காராங்க கிளம்பீட்டாங்களாம், முகூர்த்தம் தவறக்கூடாதும்மா சீக்கிரம் சீக்கிரம்…” என்று மகளின் தோழியான பவியிடம் முடுக்கியவர், அவர்களை கிளப்பி வண்டியில் அமரவைத்த பின்னரே ஓய்ந்தார்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் அனைவரும் அகிலாண்டேஷ்வரி சமேத ஜம்புகேஷ்வரர் அருளும் திருவானைக்கோவில் ஆலயத்தில் இருக்க, பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமான ஆலயத்தில் உன்னை இனி நீங்க மாட்டேன் என மங்கல நாணான புது மஞ்சள் கயிற்றில் மாங்கல்யத்தை அவள் கழுத்தில் மூன்று முடிச்சுட்டு தன் இல்லாளிடம் மொத்தமாய் சரண் புகுந்திருந்தான் மைத்ரேய ராஜா.

தன் மனம் கவர்ந்த திருநிறைச்செல்வனின் கரம் பற்றி அவனின் திருமதியாய் நின்றிருந்தாள் மைவிழிச்செல்வி. நாணத்தாலும் பூரிப்பாலும் மெருகேற்றப்பட்ட அழகுமுகத்தில் உள்ளத்தின் மகிழ்வு அப்பட்டமாய் வெளிப்பட, இந்த தருணத்தில் தான் தங்கள் வாழ்வின் நிறைவை அடைந்ததாய் அவர்களின் பெற்றோர்கள் அகமகிழ்ந்திருந்தனர்.

நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் சூழ நிகழ்ந்த அற்புதமான புதுவாழ்வு தொடக்கம் இன்னும் இன்னும் இன்பத்தை அள்ளி வழங்கி இணைபிரியா தம்பதிகளாய் மனமொத்து வாழ்வாங்கு வாழ அந்த ஆதிஅந்தமில்லா இறைவனையும் அன்னையையும் மனதார வணங்கினர்.

அங்கிருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு அனைவரும் கிளம்ப அங்கே அவர்களுக்கு விருந்து ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மாப்பிள்ளை வீட்டாரும் பெண்வீட்டாரும் ஒருவருக்கொருவர் ஏற்கனவே உறவுமுறை என்பதால் அவர்களுள் அளவளாவிக் கொண்டிருந்தனர்.

செல்வியும் ராஜாவும் வந்திருந்தவர்களோடு போட்டோ எடுத்துக் கொண்டிருக்க, அவர்களின் நண்பர்கள் மொத்தமாய் ஒன்று கூடி அரட்டையில் இறங்கியிருந்தனர்.

சேதுபதி அவனின் மனைவி குழந்தைகள், பூபதியும் அவன் வருங்கால மனைவி மலர்விழி, பவி அவள் கணவன் குழந்தையுடன் வந்திருக்க, கலையும் அவளின் குடும்பத்தோடு வந்திருந்தனர்.

இவர்கள் ஒரு பக்கம் செல்வியின் பாக்கு மட்டை தொழிற்சாலையில் வேலை செய்வோர், அவளின் தொழில்முறை நண்பர்கள், ராஜாவுடன் வங்கியில் வேலை செய்வோர் அவனின் உயரதிகாரிகள் என அவர்களும் வந்திருந்தனர்.

அனைவருக்கும் காலை சிற்றுண்டி, மதிய உணவு தயாராகியிருந்தது.

எண்ணியபடி திருமணம் நல்ல முறையில் முடிந்ததில், அனைவருக்கும் மகிழ்ச்சி என்றால் ராஜேந்திரனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. கைகள் வந்தவர்கள் வரவேற்று உபசரித்து, உதடுகள் அவர்களோடு பேசியபடி இருந்தாலும், கண்களும் மனமும் மலர்விழியை சுற்றி வந்தது.

இவள் தங்களின் தொலைந்த மகளாய் இருந்திட மாட்டாளா என்று உள்ளம் ஏங்கியது. ராஜேந்திரனின் பேசியபிறகு மலரைப் பார்த்த சீதாவிற்குமே, வயிற்றுக்குள் ஒரு இனம் புரியாத உணர்வு தோன்ற ஆரம்பித்தது. இத்தனை வருடங்களாய் அவர் இப்படி உணரவில்லை.

இதற்கு எப்படி தீர்வு காண்பது என்று யோசித்தபடி ராஜேந்திரன் வலம் வர, கேள்வியை தேடிக் கொண்டிருப்போரிடம் ட்இன்று உங்களுக்கான விடையே கிடைத்துவிடும் என்று ராஜா செல்வியும் அர்த்தமாய் புன்னகைத்துக் கொண்டனர்.

அதேநேரம் வீட்டினுள் ஒரு நடுத்தர வயது தம்பதி நுழைய, அதைக் கண்ட ராஜா, கண்களால் பூபதியைத் தேடினான். எல்லாம் சக்ஸஸ் என்பது போல் நான்கு விரல்களை மடக்கி, கட்டைவிரலை உயர்த்தி தம்ஸப் சிம்பளை பூபதியின் கை காட்ட ஆசுவாசமாய் உணர்ந்தான் ராஜா.

”ஜென்சி மலர் இந்த அட்ரஸ் தான் அனுப்பினாளா, கன்பார்ம் ஆ தெரியுமா… இங்க யாரையுமே தெரியலையே மா…”

“எல்லாரும் தெரிஞ்சவங்களா இருக்க இடத்துக்கு அவ ஏன் அட்ரஸ் அனுப்பி நம்மள வரச் சொல்லப் போறா, நாமளே போயிருக்கமாட்டோமா…?”

“ஓ ஆமால… சரி எதுக்கு வர சொல்லியிருக்கும்…?

“உங்க மாப்பிள்ளை உங்களுக்கு அறிமுகப்படுத்தத்தான்…”

”என்னது மாப்பிள்ளையா..? ஓ அவளே பாத்துட்டாளா, அப்புறம் நான் எதுக்கு… என்னைய பத்தி என்ன நெனச்சிட்டு இருக்கா உன் மக.. இதுக்கெலாம் நான் ஒத்துக்கவேமாட்டேன் தெரியும்ல…”

“ரொம்ப ஓவர் ஆக்ட் குடுக்காதீங்க, உங்களுக்கு கொஞ்சம் கூட செட் ஆகவே இல்ல…”

”என்னது ஆக்ட்டிங்கா, நான் உண்மையத் தான் சொல்றேன்…”

”மலர் எல்லாத்தையும் எங்கிட்ட சொல்லிட்டா… உங்களுக்குத்தான் முன்னாடியே எல்லாம் தெரியுமே அப்புறம் எதுக்கு இப்படி சீன் போடுறீங்க…” என்று ஜென்சி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அமர்ந்திருந்த மலர் ஓடி வந்து ”அப்பா…..” என்று டேவிட்டைக் கட்டிக் கொண்டாள்.

“எண்ட மோளே….” என்று மகளைக் கட்டிக் கொள்ள,

அதே நேரம் எதிர்பாராமல் அவர் முதுகில் பலமாக ஒரு அடி விழ, அதிர்ந்து போய் யாரென்று அங்கிருந்த அனைவரும் பார்க்க,

அங்கே ராஜேந்திரன் நின்றிருந்தார், டேவிட் சுல்லென கோபம் வந்து அடித்தவரை திருப்பி அடிக்க ஓங்கிய கை ராஜேந்திரனை பார்த்ததும் அப்படியே நின்றது.

ராஜேந்திரன் ருத்ரம் கொண்டு நிற்க, ஜென்சி அவரைக் காணமுடியாமல் தலை கவிழ்ந்திருந்தார். ஒன்றும் புரியாமல் மலரும் மற்றவர்களும் விழிக்க, மீண்டும் தன்னால் முடிந்த மட்டும் டேவிட் அடித்துக் கொண்டிருந்தார் ராஜேந்திரன்.

சிறுசலசலப்பாய் உருவானது, மணமக்கள் உட்பட அனைவரும் வந்தும், என்ன பிரச்சனை ஏன் அடிக்கிறார் என்று தெரியவில்லை, யார் தடுத்தும் நிற்கவில்லை. டேவிட்டும் தவிர்க்கவோ, தடுக்கவோ முயலாமல் அடிவாங்கிக் கொண்டிருந்தார்.

கோபத்தின் உச்சிக்கு சென்ற மலர், ”ஸ்டாப் இட்….” என்று கண்களை மூடிக் கத்தினாள்.

அதுவரை சற்றும் யோசிக்காமல் அடித்துக் கொண்டிருந்த ராஜேந்திரன் நிறுத்தினார்.அழுகையும் ஆத்திரமுமாக அவரை முறைத்துக் கொண்டே டேவிட்டிடம், “எதுக்குப்பா அவர் உங்களை அடிக்கிறார், நீங்க கொஞ்சம் கூடத் தடுக்காம, இப்படி அடி வாங்குறீங்க, என்னப்பா நடக்குது இங்க…?” என்று கேட்டாள்.

பதில் சொல்லும் திராணியற்று தலை கவிழ்ந்து நின்றவர், “ஏன்னா நீ அவர் பொண்ணும்மா…” என்றார்.

சுற்றி இருந்த அனைவரும் பேச்சற்று நின்றிருக்க, அவர் பல வருடங்கள் பின்னே சென்றிருந்தார்.

 

ஜென்சியும் டேவிட்டும் காதல் திருமணம் முடித்து வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர். டேவிட்டும் ராஜேந்திரனும் ஒரே கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்ததில் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் அறிந்து வைத்திருந்தனர். பெரிய அளவிற்கு நெருங்கிய நட்பு என்று இல்லாமல், பெயரளவில் நட்பாகி இருந்தனர்.

எங்கு செல்வது என்று புரியாமல் பிரிமியர் மில்ஸ் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தவர்களை கண்ட ராஜேந்திரன் தன் வீட்டிற்கு அழைத்து வந்தார்.

சீதாவும் அவரும் மணமொத்த தம்பதிகளாய், அவர்களை வரவேற்று விருந்தளித்து தங்கள் வீட்டிலேயே சில நாட்கள் தங்க வைத்தனர்.

“இதுக்கு மேலயும் உங்கள கஷ்டப்படுத்த விரும்பல தோழர், நாங்க கிளம்புறோம்…” என்றார் டேவிட்.

“ஏண்ணா, அவங்களை கூட்டிட்டு எங்க போய் தங்குவீங்க, நான் சொல்றதை கேளுங்க, இங்கயே லைன்ல ஆறு வீடு இருக்கு, அதுல ஒண்ணு காலியா இருக்கு, ஓனர் அக்காகிட்ட கேட்டு உங்களுக்கு வாடகைக்கு பேசிவிடுறோம், பேசம இங்கயே தங்கி இவரோடவே வேலைக்கு போங்க…”

“ஆமா டேவிட், சீதா சொல்றது சரிதான் அங்க இங்க அலையுறது, பேசாம எங்களுக்கு பக்கத்து வீட்டலயே குடியிருங்களேன், ஜென்சியும் சின்னபொண்ணு சீதா கூட இருந்து பாத்துப்பா…” என்று ராஜேந்திரனும் மனைவியின் பேச்சை வழிமொழிந்தார்.

தங்களுக்கும் வேறு வழியில்லாததால் அவர்கள் சொல்வதே சரியென்று ஏற்றுக் கொண்டனர்.

அவர்களுக்குத் தேவையான பாய் படுக்கையிலிருந்து பாத்திர பண்டங்கள் வரை தங்களிடம் இருந்ததை பகிர்ந்தளித்து, ஓனர் அக்காவிடம் பேசி, அட்வான்ஸ் இல்லாமல், மாதா மாதம் ஐம்பது ரூபாய் வாடகைக்கு பேசிவிட்டனர்.

சமையல் என்றால் என்ன…? என்று கேட்கும் ஆளாக ஜென்சி இருந்ததில், சீதாவே அவளுக்கு சமையலும் கற்றுக் கொடுத்தார்.

நாட்கள் மாதங்களானது, சீதா கருவுற்றிருந்தார், அவர்களும் சொந்த ஊரை விட்டு வேலைக்காக அங்கு தங்கி இருந்ததால் சொந்தபந்தகளென பெரிதாக யாரும் வரவில்லை. அந்த சமயங்களில் ஜென்சி சீதாவிற்காக நிறையவே உதவி செய்தாள்.

மாதம் ஆக ஆக சீதா அமர்ந்து எழவே மிகவும் சிரமப்பட்டார். “ஏன்கா உங்களுக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கு, மத்தவங்களவிட உங்களுக்கு வயிறும் ரொம்ப பெருசா இருக்கே, ரெண்டு புள்ளங்க இருக்குமோ…” என்று யோசனையாய் ஜென்சி கேட்க,

“குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் நீயே தெரிஞ்சுப்ப…” என்பதோடு முடித்துவிட்டார்.

அடுத்த மாதமே சீதா இரு பெண் குழந்தைகளுக்கு தாயானார். இரட்டை ரோஜாப்பூக்களைப்போல ரோஸ் நிறத்தில் சிரிக்கும் அவர்களைப் பார்க்கப் பார்க்க ஜென்சிக்கு குழந்தைகள் மேல் பாசம் பொங்கியதோடு, தனக்கு குழந்தை இல்லையே என்ற ஏக்கமும் அதிகமானது.

அவள் திருமணம் முடிந்து வந்த நாள் முதல் தன் அன்னைக்கு கடிதமெழுதும் வழக்கத்தை கொண்டிருந்தாள். வாராவாரம் தவறாமல் எழுதிவிடுவாள். ஒற்றை மகளின் மீது உயிரை வைத்திருந்த அவளின் தாய் அவள் தந்தை அறியாமல் இந்த கடிதப் போக்குவரத்தைக் கொண்டிருந்தார்.

அப்படி இந்த வாரம் வந்திருந்த கடிதத்தில் ஜென்சியின் தாய் குழந்தை பற்றிய பேச்சை தொடங்கவும், அவளின் ஏக்கம் கோபமாய் கணவன் மீது பாய்ந்தது.

டேவிட்டுடன் சண்டையிடத் துவங்கினாள், அவனும் அவளை சமாதானம் செய்து மருத்துவரிடம் அழைத்துச் சென்றான். அவர்கள் இருவரையும் பரிசோதித்த மருத்துவர், ஜென்சிக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு மிகவும் குறைவு என கூறிவிட்டார்.

அதே நேரம் பக்கத்துவீட்டில் சீதா தன் மழலைகளுக்கு, மைவிழிச்செல்வி, மலர்விழிச்செல்வி என பெயர் சூட்டி மகிழ்ந்திருந்தார்.

ஏனோ சீதாவை பார்க்க ஜென்சிக்கு பெறாமை தலை தூக்கியது. அவர்களுக்கு இரண்டைக் கொடுத்த ஆண்டவன், தனக்கு ஒன்றைக் கூட கொடுக்கவில்லையே என மருகினாள்.

டேவிட் ராஜேந்திரன் ஒரே கம்பெனியில் வேலை செய்தாலும், ராஜேந்திரன் தன் நேர்மையாலும் உழைப்பாலும் நிரந்தர ஊழியராய் பதவி உயர்வோடு வலம் வந்தார்.

டேவிட்டால் தற்காலிக ஊழியராகக் கூட அங்கு தொடர முடியவில்லை. அவனுடைய அலட்சியத்தால் பெரிய மெசின் ஒன்று டேமேஜ் ஆனதால் சம்பளம் வாங்க முடியாமல் அந்த கம்பெனியை விட்டு வெளியேறினான்.

இதை அறிந்த ராஜேந்திரன், தனக்கு தெரிந்த பெரியவரின் பிசிரு கோடௌனில் ஜென்சிக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். அவளின் திறமையும் உழைப்பும் அவளுக்கு நல்ல சம்பளமும் பெயரும் வாங்கிக் கொடுத்தது. அவளின் சிபாரிசில் அதே இடத்தில் டேவிட்டும் வேலைக்கு சேர்ந்திருந்தான்.

ஜென்சியைப் போலவே டேவிட்டும் இருப்பான் என்று அந்த பெரியவர் பணபரிவர்த்தனைகளை டேவிட் மூலமாக செய்யத் துவங்கினார்.

ஆனால் கை நிறைய பணத்தைக் கண்டதும் டேவிட்டின் நேர்மை ஆட்டம் கண்டது. அவனின் மனம் பணத்தின் மீது சாய்ந்தது. ஜென்சியையும் அவனைப் போலவே மாற்ற வார்த்தைகளில் பணக்காரராய் வாழும் வாழ்க்கை உருவக்ப்படுத்தினான். ஒரு நேரம் கெஞ்சினான், ஒரு நேரம் மிரட்டினான், ஒரு நேரம் காதல் மொழி பேசினான், மொத்தத்தில் கரையாத அவள் மனதை கரைத்து அதில் கள்ளத்தை புகுத்தி இருந்தான்.

அதன் விளைவு ஒவ்வொரு முறை பிசிரு லோடு ஏற்றும் போதும் இறக்கும் இடம் இவர்களின் தனி கோடௌன் ஆனது, பாதிக்கு மேல் ஏமாற்றத் தொடங்கினர்.

இவர்களின் ஆரம்ப கால நேர்மையைப் பார்த்து பொறுப்புகளை ஒப்படைத்த பெரியவருக்கு, பெரிய அளவில் நஷ்டம் ஏற்படத்துவங்கியது.

அப்போதும் அவர் இவர்களை சந்தேகப்படவே இல்லை. இன்னும் தைரியமாய் தப்பு செய்யத் துவங்கினர் இருவரும். எந்தப் பொய்க்கும் ஆயுள் மிகக்குறைவு. இவர்களின் கள்ளத்தனம் மெல்ல மெல்ல பெரியவருக்கு புரியத் துவங்கியது.

பெரிய அளவில் நஷ்டமும் மன உளைச்சலும், சுற்றி நின்ற கடன்காரர்களும், அவரை பலவீனமாக்கியிருந்தனர். கோபப்பட்டு நஷ்டப்படுவதை விட அவர்களை அழைத்து பொறுமையா பேசி தன் நிலையை புரிய வைக்கலாம், ஒருவேளை திருந்தி தன்னிடமிருந்து திருடியதில் பாதியைக்கொடுத்தால் கூட இந்த பிரச்சனைகளை சமாளித்து விடலாம் என்று நம்பினார்.

கடைசி முயற்சியாய் அவர்களை அழைத்துப் பேசினார். அவர்களோ திருடவே இல்லை என சாதித்தனர். இனி பேசிப் பயன் இல்லை, போலீஸில் புகார் கொடுக்கப் போவதாக பெரியவர் கூறினார்.

டேவிட்டோ கொஞ்சமும் வாய் கூசாமல்,” என் பொண்டாட்டி உங்க ஆசைக்கு ஈடு கொடுக்கலன்னு இப்படி எங்க மேல திருட்டுப்பட்டம் கட்டுறீங்களே அய்யா, இது நியாயமா..?” என்றான். அவன் கேட்ட வார்த்தைகளை கேட்க சகிக்காமல் காதைப் பொத்தியவர், “ச்சீ நீயெல்லா ஒரு மனுசனா… என்னைப் போய்… என் மேல இவ்வளவு பெரிய… ச்சீ போடா… நாசமா போ என் பேத்தி வயசு டா ஜென்சிக்கு… தூ நாயே உங்களப் போய் நம்புனேன் பாரு…” என்று கோபத்தில் வார்த்தைகள் துண்டு துண்டாய் வந்து விழ, நெஞ்சைப் பிடித்தபடி அப்படியே சரிந்து விட்டார்.

அதற்கு மேல் அங்கிருப்பது நல்லதல்ல என கிளம்பியவர்கள், இரண்டு ஊட்டி சென்று வருவது போல் கிளம்பிவிட்டனர்.

உண்மைகளை தெரிந்து கொண்ட பெரியவர், அதையாரிடமும் சொல்லாமல் இறந்துவிட்டதாலும், பிள்ளை இல்லாத அவரின் இறப்புக்கு நியாயம் தேடுவோர் இல்லாமல், அவரிடன் கடனை அடைக்க யாரும் முன்வராததால், டேவிட் ஜென்சியின் திருட்டு, யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் அப்படியே புதைந்து போனது.

ஒரு சில மாதங்கள் வேலை தேடுபவர்கள் போல் போக்கு காட்டியவர்கள், அதற்கு அடுத்த மாதத்தில், கிணத்துக்கடவில் புதிதாய் ஒரு பிசிரு கோடௌன் துவங்கினர். அத்ற்கு அடுத்த ஒருவருடத்தில் அவர்களின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாய் இருந்தது.

யாரும் எதிர்பார்க்காத வகையில், இரண்டு கம்பெனி, கார் பங்களா என புதிய தொழில் அதிபராய் ஆகியிருந்தான். அவர்களின் வளர்ச்சி துவங்கியதுமே, அவர்களின் பேச்சு வார்த்தை நடவடிக்கைகளின் மாற்றம் தெரியவும், சீதாவும் ராஜேந்திரனும் அவர்களிடமிருந்து விலகியே இருந்தனர்.

ஆனாலும் தானாய் வலிய வந்து பேசும் ஜென்சி குழந்தைகளின் மீது மட்டும் எப்போதும், பொறாமை கொண்டிருந்தாள்.

ஒன்றரை வருடக் குழந்தைகள் கொழு மொழுக்கென அழகாய் எட்டு வைப்பதை பார்க்க பார்க்க மனதுக்குள் சீதாவை அழவைத்து பார்க்க எண்ணம் தோன்றியது ஜென்சிக்கு.

மனதுக்குள் சமயம் பார்த்தபடி இருந்தாள். ஒரு வெள்ளிக் கிழமை மாலை வேளையில் இரு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு சீதாவும் ராஜேந்திரனும் ஈச்சனாரி பிள்ளையார் கோவிலுக்குச் சென்றிருந்தனர்.

இறைவனை வணங்கி விட்டு, அங்கிருக்கும் மண்டபத்தில் அமர்ந்து குழந்தைகளை விளையாட விட்டு அழகு பார்த்தனர். சற்று நேரத்தில், தங்கத்தேர் வடம் பிடித்துவர கண்ணரக் கண்டவர்கள், வீட்டிற்கு கிளம்பினர்.

கோவில் மெயின் ரோட்டில் இருப்பதால், கோவிலை விட்டு வெளியே வந்ததும் மிகவும் கவனமாய் ஒரு குழந்தையாய் கையில் ஏந்தியபடி சாலைக் கடந்த ராஜேந்திரன் திரும்பி பார்க்கையில், சீதா இன்னும் ஒரு கையில் குழந்தையும் மற்றொரு கையில் பையுமாக சாலைக் கடக்காமல் தடுமாறியபடி இருந்தார்.

மீண்டும் கடந்து சென்று சீதாவை அழைத்து வர எண்ணியவர், ஒரு அடி எடுத்து வைக்க அங்கே வந்து கொண்டிருந்த கார் ராஜேந்திரன் முன் நின்றது.  

 

 

 

 

 

 

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 

 

 

 

 

Advertisement