Advertisement

முகூர்த்தம் 20

ஸ்ரீராமிற்காக காத்துக் கொண்டிருந்த வானதியின் எண்ணங்கள் அவனையே சுற்றிக் கொண்டிருந்தது. அவனோ இவளைப் பற்றிய சிந்தனை துளியும் இன்றி பேசிக் கொண்டிருந்தான்.

அவன் எதிரில் சிவம் இவன் சொல்வதை நம்ப முடியாத அதிர்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

அனைத்தையும் கேட்டு முடித்தவர், “இதுக்கு மேல இந்த கேஸ்ல நமக்கு வேலையே இல்ல, சரி விடுங்க, ரிலாக்ஸ் அண்ட் கோ அஹெட்…” என்றார்.

அவரிடம் விடைபெற்று கிளம்பி காரில் ஏறினான்.காரில் இருந்த வானதியின் செல்போன் ஒலிக்க, “ஹைய்யயோ… நம்ம கூட ஒரு பிள்ளை வந்துச்சே…” என்று மனம் சைரன் அடிக்க, வேகமாக கோவிலைச் சென்றடைந்தான்.

அங்கு கோவில் நடை சாத்தப்பட்டுவிட, பிரகாரமும் சாத்தும் நேரம் வந்துவிட, அர்ச்சகர் கோவிலை பூட்ட தயாராய் நின்றுகொண்டிருந்தார்.

கண்ணில் தவிப்பும் கோபமும் கலந்து கலங்கி நிற்க, தேங்கி நின்ற துளியை தரையில் விழாமல் தடுக்க போராடி தோற்றுநிற்கையில், சரியாக ஸ்ரீராமின் கார் வந்து நின்றது.

அர்ச்சகரிடம் தலையசைத்துவிட்டு திரும்பியவள், அவன் இறங்கி வருவான், தன்னிலை விளக்கம் சொல்வான் என எதிர்பார்த்திருக்க, அவனோ அமர்ந்த நிலையிலேயே காரின் மறுபக்க கதவை மட்டும் திறந்துவிட்டு காத்திருந்தான் அவளுக்காக.

அவளும் இவன் இறங்கி வரும் வரை தானும் ஏறப்போவதில்லை என்ற முடிவோடு நின்றிருந்தாள். இருவரையும் மாற்றி மாற்றி பார்த்த அர்ச்சகர் குழம்பியபடி நிற்க, அவரின் செல்போன் ஒலிக்கவும், “ இவாள பாத்துண்டு நின்னா என் ஆம்படையா என்னைத் தொலைச்சிடுவா… “ என்றவர், அழைப்பை ஏற்று காதில் வைத்து “இதோ வந்துண்டே இருக்கேன்…” என்று தன் ஸ்கூட்டியை கிளப்பியிருந்தார்.

தப்பு தன்மேல் தான் என்பதை உணர்ந்திருந்தாலும் இறங்கிவர ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது. எந்த தவறும் இல்லாமல் இறங்கிவர அவளுக்கும் அவசியம் இருக்கவில்லை.

நொடிகள் நிமிடங்களாகி கடந்து கொண்டிருக்க, இதற்கு மேலும் அவளாக வருவாள் என்ற நம்பிக்கை கரைந்திருக்க, காரைவிட்டு இறங்கி வந்தான் ஸ்ரீராம்.

“வா போலாம் இன்னும் எவ்ளோ நேரம் இப்படியே நிப்ப, சாரி மா வா…” என்றெல்லாம் அழைப்பான் என்ற அவளின் எதிர்பார்ப்புகளை இல்லை என்றாக்கியவன்,

“வெத்தலை பாக்கு போதுமா இல்லை பழம் பணம் எல்லாம் வச்சு அழைச்சா தான் வருவியா…” என்றான். இதை சற்றும் எதிர்பார்க்காதவள், திரும்பி அவனை முறைத்துவிட்டு, ‘உங்கிட்ட போய் எதிர்பாத்து நின்னேன் பாரு என்னை சொல்லனும்…” என்று எண்ணியவளாய் சென்று காரில் அமர்ந்து கொண்டாள்.

அவளின் இந்த செய்கையைப் பார்த்து சிரிப்பு வந்தாலும் அதை வெளிக்காட்டினால் வரும் விபரீதத்தை நினைத்தவன், அமைதியாய் காரைக்கிளப்பி வீடு வந்து சேர்ந்தான்.

அதே நேரம் ராஜாவின் விரல்கள் மைவிழியின் எண்ணை டயல் செய்திருந்தது. அந்த பக்கம் எடுக்கப்படாமலே நின்று போகும் டோனை கேட்க சகியாமல் காதை விட்டு தூரமாய் வைத்திருந்த போன் சட்டென ஒலிக்க, மகிழ்ந்த அதிர்வில் யாரென்று பாராமல் இயக்கி காதில் வைத்து,

“ஹாய் முத்தம்மா….” என்றான்.

“…..”

மறுபுறம் எந்த பதிலும் இல்லாமல் போகவே, கோபமாக இருக்கிறாளோ, இல்லை ஒருவேளை நம்மிடம் இன்னும் காதல் மொழிகளை எதிர்பார்க்கிறாளோ என்று ஏடாகூடாமாய் எண்ணி,

“ஏண்டி முத்தம்மா, இப்போதான் மொத்தமா எல்லா பிரச்சனையும் முடிஞ்சுதே அப்புறம் என்ன, மாமன்கிட்ட ஆசையா பேசலாம், ரெஸ்ட் எடுத்து டயர்ட் ஆன மாமனுக்கு இதமா ரெண்டு வார்த்தை கொஞ்சலாம், இல்ல ஒரு முத்தமாச்சும் கொடுக்கலாம்னு தோணுதா, காலேஜ் முடியுற வரைக்கும் திரும்பிக் கூட பாக்கல, அதுக்கப்புறம் கண்ணால பாக்கக் கூட இல்ல, என்னோட காதலும் அந்த கடவுளும் மனசு வைச்சு, உன்னை என்கிட்ட கொண்டு வந்து சேர்த்திருக்காங்க இப்பாவாச்சும் நம்ம லவ்வ ஃபீல் பண்ணுடி… என்னோட இந்த லவ்வை புரிஞ்சுக்கோ…” என்று அவன் பேசிக்கொண்டிருக்கையில், போனின் மறுமுனையில் விடாது ஒலித்த முத்தசத்தங்களை இன்னும் அவனால் நம்பமுடியவில்லை.

“ஹே…. முத்தம்மா…. உம்மா…..” என்று அவன் பதிலுக்கு கொடுக்க, “ஹோஓஓ…. “என கோரஸாய் சப்தம் வர, அனிச்சை செயலாய் போனை கண்முன்னே நிறுத்தி யாரெனப்பார்க்க, சேதுவின் அழைப்பு கான்ஃபெரன்ஸ் காலாகி அதில் ’4people’ என்று காட்டவும் “ஹைய்யயோ….” என்று தலையில் கைவைத்த பின்பே போனை காதில் வைத்திருந்தான்.

இன்னும் மறுபுறம் கூச்சல் ஓயாமலிருக்கவும், “அடப்பாவிங்களா, நீங்க எப்போடா லைன்ல வந்தீங்க…” என்றான் சலிப்பாக.

“எப்போ வரலைன்னு கேளுடா, ஏன்னா போன் பண்ணதே நாங்க தான், உன் முத்தம்மா இல்ல…” என்று சேது சொன்னதைக் கேட்டவன், கண்னைச் சுருக்கி மிளகாயை கடித்தவன் போல் “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” என்றவன்,

“நீயா… “

“டேய் நாங்களும் இங்க தான் இருக்கோம்…”என பூபதியும் மலரும் கத்த, அந்த சத்தங்களோடு வெட்கத்தை துணைக்கழைத்து தவிப்போடு லைனில் இருந்தாள் மைவிழிச்செல்வி.

“நீங்கள்லாம் எப்பத்தான் டா என்ன லவ் பண்ண விடுவீங்க… கொஞ்சம் நான் சந்தோஷமா இருந்தா உங்க மூக்கு வேர்த்துடுமோ, உடனே வந்துடுறீங்க…”

“இதோ வந்துட்டோம்…” என நேரிலேயே வந்துநின்றனர் அனைவரும்.

உண்மையில் அவனுக்கு இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இதை அவன் எதிர்பார்க்கவில்லை. ராஜா வீட்டு மாடியில் காற்று வாங்கியபடி செல்வியுடன் பேசவென வந்து நின்றிருக்க, இவர்கள் போனில் கலாய்த்து நேரில் வந்து நிற்பார்கள் என்று அவனென்ன கனவா கண்டான்.

“என்னடா திடீர்ன்னு சர்ப்ரைஸ் குடுக்குறீங்க, என்ன விசயம்…”என வாய் கேட்டாலும் கண்கள் மைவிழிச்செல்வியைத் தான் தேடியது.

“செல்வி வரல டா கல்யாணத்துக்கு முன்னாடி உங்க  வீட்டுக்கு அனுப்ப மாட்டோம்னு சொல்லிட்டாங்க, அதும் இந்த நேரத்துக்கு சான்ஸே இல்ல…” என்று அவன் கேட்காத கேள்விக்கு பதிலைச் சொன்னான் பூபதி.

அதில் சற்று ஏமாற்றமடைந்தாலும், இப்படி அனுப்பமாட்டார்கள் என்று அவனுக்கும் தெரியும் ஆதலால் அதை விடுத்தவன், “என்னடா திடீர்ன்னு… நான் எதிர்பாக்கவே இல்ல…”

“நாம கூடத்தான் எதிர்பாக்கல எல்லாம் இப்படி ஆகும்னு, என்ன தாண்டா நடக்குது… நாம ஒன்னு நினைச்சா ரிப்போர்டெல்லாம் வேற மாதிரி வந்திருக்கு…” என்றான் சேது.

“என்ன ரிப்போர்ட் வந்திருச்சா… அதுக்குள்ளயா… என்னடா சொல்ற…?”

“ஆமா ரிப்போர்ட் மட்டுமில்ல, கேஸையே முடிக்கிற வரைக்கும் எல்லாம் பர்ஃபெட் டா முடிச்சு கையில குடுத்துட்டாங்க டா, நான் விசாரிக்கவோ முடிக்கவோ இங்க ஒண்ணும் இல்ல, சொன்ன டேட்ல அதை கொண்டு போய் ஒப்படைக்கனும் அவ்ளோ தான்…”

“அப்படி என்னதான் அந்த பைல்ல இருக்கு சேது…?” என்று பூபதி கேட்க,

‘கேஸை முடிச்சுட்டாங்கன்னா எப்ப விசாரணை பண்ணாங்க…? ஒருவேளை என்னை விசாரிச்சதா அந்த ஸ்ரீராம் சொன்னானே அதுதானா…?’ என்று ராஜா தீவிர யோசனையில் இருந்தான்.

“வேந்தனுக்கு சிவியர் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டதாக ரிப்போர்ட் வந்திருக்கு, அதுக்கு தகுந்த மாதிரி அவனோட உடம்புல வேற எந்த காயமோ கொலை செய்யப்பட்டதற்கான அடையாளமோ இல்லைன்னு போஸ்ட்மாட்டம் ரிப்போர்ட்டும் இருக்கு…” என்று சேது கூற, அதிர்ச்சியில் உறைந்தனர் மற்ற இருவரும்.

“எப்படிடா ஹார்ட் அட்டாக்கா, அப்படியா ரிப்போர்ட்ல இருக்கு என்னால நம்பவே முடியல, நாம அடிச்ச அடியில உயிர் போயிருக்கும்னு நான் நெனச்சேன், ச்சே… நம்ம கையால அவன் உயிர் போகலயா அப்போ…” என்றான் பூபதி.

“அதான் எனக்கும் புரியல, யாரோ இந்த கேஸை அவசர அவசரமா முடிக்க ட்ரை பண்றாங்கன்னு மட்டும் புரியுது, யார் அது..? எதுக்காக இப்படி பண்றாங்கன்னு தான் தெரியல…?”என்று சேது சொல்ல, ராஜா எதுவும் பேசாமல் அமைதியாகவே இவர்கள் பேசுவதை கேட்டபடி இருந்தான்.

“என்னடா நீ ஒண்ணுமே சொல்ல மாட்டேன்ற… என்ன தான் யோசிக்கிற அப்படி…? “என்று பூபதி கேட்டும் அவன் மௌனமாகவே இருக்க, இவர்கள் இருவரும் ராஜாவையே பார்த்திருந்தனர்.

சில நிமிடங்களுக்குப்பின் யோசனையில் இருந்து மீண்டவன், “டே நம்ம வானதி ஞாபகம் இருக்கா…?” என்று கேட்க, கடுப்பாகிய சேது, “ஏண்டா நான் இப்ப என்ன சொல்லீட்டு இருக்கேன் நீ என்ன கேட்குற… இப்ப வானதிய தெரிஞ்சு என்ன ஆகப்போகுது…” என்றான்.

“டேய் கேட்குறதுக்கு பதில் சொல்லு, ஞாபகம் இருக்கா இல்லையா…?

“அதெப்படிடா மறக்க முடியும், ஸ்வாதியைப் பத்தி நம்மகிட்ட சொன்னவளே அவ தான, பொண்ணாச்சே அவ லைப் இதுல எந்த வகையில பாதிக்கக்கூடாதுன்னு தானே நாமும் அவகிட்ட எந்த காண்டாக்ட்டும் வச்சுக்காம இந்த விசயமெலாம் அவகிட்ட சொல்லாமயும் இருக்கோம்… இப்ப ஏன் திடீர்னு அவளைப்பத்தி கேட்குற…? என்றான் பூபதி.

”நாம காண்டாக்ட் பண்ணலைன்னாலும் அவ நம்மள மறக்கல டா, ரீசண்ட்டா முடிஞ்ச அவளோட கல்யாணத்துக்கு நம்ம எல்லார்க்கும் மெயில்ல பத்திரிக்கை அனுப்பியிருந்தா… உங்க பழைய மெயில் ஐடி ஓபன் செஞ்சு பாத்திருந்தீங்கன்னா தெரிஞ்சிருக்கும்…” என்ற ராஜாவின் விளக்கத்திற்கு,

“இப்ப அதுக்கும் நாம பேசுறதுக்கு என்ன சம்பந்தம் இருக்கு சொல்லு…? இப்ப என்ன பேசணுமோ அத சொல்லுவியா… என்னமோ பேசுறான் இப்பத்தான்…” என்று சேது சலித்துக் கொள்ள,

“டேய் மொதல்ல பொறுமையா கேளு, அவ இன்விடேசன் நான் பாத்தேன், அந்த மாப்பிள்ளை பேரு ஸ்ரீராம்… எனக்கென்னவோ அந்த ஸ்ரீராம் தா இந்த ஸ்ரீராமோன்னு சந்தேகமா இருக்கு டா…?” என்று யோசனையாய் சொன்ன ராஜாவிடம்

“எந்த ஸ்ரீராம்…?” என்றான் பூபதி.

“அதா ஹாஸ்பிடல்ல என்னை விசாரிச்சான்னு சொன்னேனே…?”

“உன்னையா… உன்னை எப்படி கரெக்ட்டா அவன் கண்டுபிடிச்சு விசாரிக்க முடியும், என்ன க்ளூ கிடைச்சிருக்க முடியும்…? அப்படி என்னதான் டா விசாரிச்சான் உன்னை..?” என்று சேது கேட்க

“ எனக்கு தூங்கி எழுந்த மாதிரிதான் இருந்துச்சு அவன் தா சொன்னான் நான் உன்னை விசாரிச்சேன்னு… அப்படி என்னதான் விசாரிச்சன்னு கேட்டா, அது உனக்கு தேவையில்லாதது அப்படிங்குறான்… அதா எனக்கும் புரியல…”

”அவன் என்ன தா சொன்னான் முழுசா சொல்லு, எதுனா ஐடியா கிடைக்குதான்னு பாக்கலாம்…” என்று சேது கேட்டான்.

”என்னை விசாரிச்சதுல அவனுக்கு எந்த உண்மையும் கிடைக்கலயாம், எனக்கு உண்மை தெரியாதுங்குறது மட்டும் அவனுக்கு தெரிஞ்சுதாம், சோ இனிமேலாவது உன் காதல், கல்யாணம், வேலை, வாழ்க்கைன்னு உன்  வேலைய மட்டும் பாருன்னு சொல்றாண்டா…”என்று ராஜா கூற,

“அப்போ கன்பார்ம் டா…” என்றான் பூபதி

“என்ன என்ன கன்பார்ம்…?” என்று சேது கேட்க,

“இந்த ஸ்ரீராம் தான் வானதியோட ஹஸ்பெண்ட்….” என்றான் பூபதி உறுதியாக

“எப்டிடா… இவ்ளோ ஸ்யுரா சொல்ற…? என்று ராஜா கேட்க

“உனக்கு இதுல சந்தேகமே தேவையில்லை, வானதியோட இன்பூயன்ஸ்ல தான் அவன் உன்ன பிடிச்சு விசாரிச்சதே…”

“அப்படி பாத்தா அவன் என்னை அரெஸ்ட் பண்ணியிருக்கனும், பண்ணலையே விட்டுட்டானே…?”

“அங்க தான் அவன் நம்மள திசை திருப்புறான்னு எனக்கு தோணுது…”

“அட என்னங்கடா ஆளாளுக்கு ஒரு கதை கதை சொல்றீங்க…”என்று ராஜா புலம்ப

“ஒண்ணு பண்ணலாமா…?” என்று பூபதி கேட்க

“சொல்லு என்ன செய்யனும்…?” என்றான் சேது.

“பேசாம வானதிகிட்டயே பேசிட்டா என்ன…? அவகிட்டயே கேட்டா உண்மை என்னான்னு நமக்கும் தெரிஞ்சிட போகுது எதுக்கு இந்த டென்சன்…”

“வாடா வா எப்படித்தான் உனக்கு இந்த மூளை இப்படி வேலை செய்யுதோ…?”

“ஏண்டா…?” என பாவமாய் பூபதி கேட்க,

“ஹே லூசு, இத்தன வருசம் கழிச்சு நேரா அவகிட்ட பேசி கேக்குறேன்ற பேர்ல அவளையும் இதுல கோர்த்து விடப்போற, எதுக்காக இவ்ளோ நாள் பேசாம இருந்தோமோ அதெல்லாம் மொத்தமா கெட்டுப்போயிடும் டா…” என்றான் ராஜா.

“அட ஆமால…” என்று அவன் தலையில் தட்டிக்கொள்ள,

அப்போது நோட்டிபிகேஷன் டோன் அடிக்கவும், கையில் இருந்த ஸ்மார்ட்போனில் ராஜா தன் மெயிலைத் திறக்க,

வானதியின் திருமண அழைப்பிதழை நண்பர்களிடம் காட்டலாம் என யோசித்துப் பார்த்தவனுக்கு, அவள் அனுப்பியிருந்த திருமண புகைப்படங்கள் மெயிலில் வந்திருந்தது. இவ்வளவு நேரம் குழம்பிய எண்ணங்களை தெளியவைத்திட  ஸ்ரீராம் வானதியுடன் புன்னகை முகமாய் காட்சியளித்தான்.

“ஹே இங்க பாருங்கடா…!” என்று அவர்களுக்கு காட்டியவன், இவன் தான் தன்னை விசாரித்த ஸ்ரீராம் என்றும் கூறினான்.

”அப்போ வானதி சொல்லித்தான் ஸ்ரீராம் உன்னை விசாரிச்சான்னு சொல்றியா… ஆனா அவன் இந்த கேஸ்ல அபீசியலா இருக்க மாதிரியே தெரியலையே, அவன் சிபிஐன்னு நீ தான் சொல்ற, ஆனா அவன் ஒரு ஹாஸ்பிடல் ஓனரா தான் இந்த சொஸைட்டியில தன்னை ப்ரொஜக்ட் செஞ்சிருக்கான்…” என்ற சேதுவிற்கு,

“டே அவன் ஸ்வாதி மர்டர் கேஸை விசாரிக்கிறதா சொன்னான் டா…, நீ விசாரிக்கிறது என்னவோ வேந்தன் கேஸ் தா, அதுல ஆபீஸ்ர் லிஸ்ட்ல அவன் பேர் வராதுல…” என்றான் ராஜா.

”ஆனா உனக்கு நியாபகம் இருக்கா, ஸ்வாதி டெத் ஆனப்போ அது தற்கொலைன்னு சொல்லி அந்த ஃபைலை அப்போவே க்ளோஸ் பண்ணீட்டாங்க… அதை சிபிஐ எப்ப கையில எடுத்து விசாரிக்க ஆரம்பிச்சாங்க, இந்த கேஸ்ல இவ்ளோ டீடெயில் கண்டு பிடிச்சு விசாரிச்ச நமக்கு இந்த விசயம் எப்படி தெரியாமப் போச்சு…?” என்றான் பூபதி.

“நாம என்ன அரசாங்கம் போட்ட விசாரணை கமிஷன் மெம்பரா நமக்கு எதுவும் தெரியாம இருக்காதுங்குறதுக்கு… சேது படிக்கும் போதே சிவில் சர்வீஸ்க்கு ரெடி ஆயிட்டுயிருந்தான், நடுவில வந்த டிஎன்பிஎஸ்சி எழுதி, அவன் ஹாட்வொர்க்ல  கான்வகேஷனுக்கு முன்னாடியியே அப்பாயிண்ட் ஆர்டர் கையில வாங்கீட்டான், நீயும் இண்டெலிஜன்ஸ் ப்யுரோ(intelligence bureau)ல எக்சாம் பாஸ் பண்ணி அதுல ஜாயின் பண்ணீட்ட,  உங்க பவர் ல அன் அபீஸியிலா விசாரிச்சு வேந்தனை பத்தி தெரிஞ்சுகிட்டோம்… ஒரு வேளை இதே வேலைக்காக ஸ்ரீராமை அபீஸியலா அப்பாயிண்ட் செஞ்சிருப்பாங்களோ என்னவோ…?” என்று ராஜா கூற,

“விடு அதையும் விசாரிச்சிடுவோம்…” என்றான் சேது.

“ஆமா எனக்கு இன்னொரு ட்டௌட் இருக்கு டா… எப்படி டா மைவிழிக்கு மாடர்ன்ஹேர்ஸ்டைல் மேக்கப் போட்ட மாதிரியே இருக்கா மலர்… இவ்வளவு நாளா ரெண்டு பேரையும் கிட்ட வச்சு பாக்காததால நமக்கு தெரியலையா, இல்ல எனக்கு மட்டும் தான் அப்படி தோணுதா…” என்று ராஜா தன் நீண்ட நாளைய சந்தேகத்தை கேட்க

“அந்த சந்தேகம் எனக்கும் இருக்குடா… ஆனா இவ திருச்சி, அவ கொச்சின், இவ தமிழ், அவ மலையாளம், இவ மைவிழிச்செல்வி, அவ மலர்விழிச்செல்வி…” என்று சொல்லிக் கொண்டே வந்த பூபதி அவர்கள் பெயரில் உள்ள ஒற்றுமை உணர்ந்து ஒரு நிமிடம் நிறுத்தினான்.

கேட்டுக்கொண்டிருந்த இருவருக்கும் இது புலப்பட, “எப்படிடா…?” என்றனர் தங்களையும் அறியாமல் ஒரே குரலாய்…

“இதென்ன புதையல் தோண்டுனா கதையா, கேக்க கேக்க கேள்வி வளர்ந்துகிட்டே போகுது, பதிலைக் காணோம்…” என்று ராஜா கூற…

“இதுல இருந்து என்ன தெரியுது…?” என்ற சேது, “இவ்ளோ நாளா நாம நேர்ல மீட் பண்ணி பேசிக்காதது பெரிய தப்புன்னு தெரியுது… சோ இனி எவரி சண்டே நைட் இங்க கூடுறோம், அதுக்குள்ள எல்லா கேள்விக்கான பதிலையும் கண்டுபிடிக்கிறோம்… ஓ  கே…”

“ஓ கே…” என்றனர் மற்ற இருவரும்.

Advertisement