Advertisement

முகூர்த்தம் 2

விருப்பங்கள் வேறில்லை

வினோதம் இதிலில்லை

விழிகளின் சந்திப்பில்

விளைந்தது காதல்….

”டேய் நீ என்ன சொன்னாலும் நான் கேக்குறதா இல்லை, என்னைய சமாதானம் பண்றத விட்டுட்டு மரியாதையா பத்து நாள் லீவ் எடுத்துகிட்டு வந்து சேரு” மைத்ரேயனின் முகத்தை பார்க்காமலே பேசிக் கொண்டிருந்தார் மகாலட்சுமி.

“ம்மா என்னமா நீங்களே இப்படி சொன்னா உங்கள வச்சு அப்பாவை எப்படி நான் சரிகட்டுறது” பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாலும், எப்பாடுபட்டாவது இந்த முறை சம்மதிக்க வைத்துவிடவேண்டும் என்று உறுதியாய் இருந்தான் மைத்ரேயன்.

”இங்க பாருடா ராஜா நீ சொல்றத நானே ஒத்துக்க மாட்டேன், என்னை வச்சு நீ வேற எதுவும் ப்ளான் பண்ண முடியாது.”

“ம்மா பேங்க் ல மேனேஜரா ப்ரமோசன் கிடைச்சு முழுசா மூணு மாசம் கூட ஆகலை மா, அதுக்குல்ல பத்து நாள் லீவு போட முடியாது”

“உன் கான்வகேசனுக்கு வந்ததுமே முடிவு பண்ணீட்டேண்டா, உனக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு, நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது”, என்ரவர் தன் போக்கில் அன்று நடந்தவைகளை பொறிந்து தள்ளினார்.

”ஒரு ஆம்புள புள்ளை நிக்கிறானேன்னு இல்லாம அத்தணை பொண்டுகளும் வந்து மேல விழுறது மாதிரி வந்து நிக்குதுங்க, இதுல அஸ்டகோணலா மூஞ்சி வேற வச்சிகிட்டு அப்பப்பா என்ன தான் படிச்சிதுங்களோ”

“ம்மா அது செல்பி மா எல்லாரும் சேர்ந்து எடுத்துக்கிட்டோம்”

“பொய் சொல்லாதடா அதுல மத்த பசங்கள ஒருத்தனையும் காணோம் பொம்பள புள்ளைங்கள சுத்தி நிக்கவச்சு எடுத்துட்டு என்கிட்ட கதை விடாத”

“நானாவா போய் எடுத்துகிட்டேன், எல்லாரும் என் ப்ரெண்ட்ஸ் மா, அவங்களா வந்து கேக்கும் போது எப்படி முடியாதுன்னு சொல்ல முடியும், அதுல பாதி பேருக்கு கல்யாணம் கூட ஆயிடுச்சு மா, என்னை நம்பு மா மீ குட் பாய்”

“குட் பாயா நீயா, இப்ப முடியாதுன்னு என்னுகிட்ட சொல்றவன் அன்னிக்கு அவளுக கிட்ட அப்படி சொல்றதுன்னு என்ன..? , இதுல நீ குட் பாய், காலேஜ் படிக்கிறப்ப வந்த போன் ஒண்ணாவது பசங்ககிட்ட இருந்து வந்திருக்கா, “மைத்து இல்லயா ஆண்ட்டின்னு எவளா ஒரு பொண்ணு தான் பேசிருக்கா, எத்தனை பேருன்னு கணக்கில வச்சுக்கவே முடியலை”

“இதுக்கும் இப்ப உடனே பொண்ணு பாக்கணும் கல்யாணம் பண்ணனும் சொல்றதெல்லாம் என்ன மா நியாயம்”

”எல்லா விசயத்திலயும் கண்டிப்பா இருக்க உங்க அப்பா கூட இப்ப கொஞ்சம் தள்ளி வச்சுக்கலாம்னு தான் சொன்னார் ஆனா அதென்னவோ என் மனசுக்கு ஒப்பலை, நீ அடுத்த மாசம் வர்றபோ பத்து நாள் லீவு போட்டுகிட்டு வர்ற அவ்வளவு தான்” என்றவர் அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்பது போல் சென்றுவிட தலையில் கைவைத்த படி அமர்ந்திருந்தான் மைத்ரேயன்.

ஆதரவாய் தலை கோதப்பட நிமிர்ந்து யாரென்று பார்த்தான். அவனுடைய அப்பா நின்று கொண்டிருந்தார். அவன் தோளைப் பிடித்தவர்,

“உங்க அம்மாவுக்கு எங்க நீ எதாவது ஒரு புள்ளைய லவ் பண்ணி கூட்டீட்டு வந்துடுவியோன்னு ஒரு பயம் வந்துடுச்சு, அதான் இப்படி உனக்கு கல்யாணம் பண்ணனும்னு ஒரே பிடிவாதம் பிடிக்கிறா”

“அம்மா இன்னோசண்ட் பா நீங்களாச்சும் புரிஞ்சுக்க கூடாதா, எனக்கு ஹெல்ப் பண்ணக்கூடாதா”

“இவ்வளவு விவரமா இருக்கவ உனக்கு இன்னோசண்ட்டா சரிடா மகனே அப்ப உங்க அம்மா சொல்ற மாதிரியே லீவு போட்டுட்டு வந்திடு, பத்து நாள்ல உங்க அம்மா உன்னை கல்யாணம் முடிச்சு அனுப்பி வைப்பா”

“அப்பா அப்பா நில்லுங்கப்பா, நீங்களாச்சும் ஹெல்ப் பண்ணுங்கப்பா,” மைத்ரேயனின் குரல் காற்றில் சிதறி சுவற்றில் பட்டு அவன் காதுகளைத்தான் மீண்டு வந்தடைந்தது.

ஆனது ஆகட்டுமென கிளம்பிவிட்டான், அவனுக்கு தெரியும் காதில் வாங்காதது போல் சென்றாலும் தனக்கு பிரியமில்லாததை எப்போதும் தன் பெற்றோர்கள் செய்ய மாட்டார்கள் என்பதை.

மைத்ரேயன் பொறியியல் படித்துவிட்டு வங்கியில் பணிபுரியும் இளைஞன், பொறியியல் படித்துவிட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசைகள் அவன் வேலைக்காக முயற்சித்துக் கொண்டிருந்த ஆறுமாதத்தில் கானல் நீராகிப் போயிருந்தது.

அதே நேரம் அவன் அக்காளின் கணவர் வங்கி வேலைக்கு விண்ணப்பிக்குமாறு சொல்ல, அதையும் அவன் தந்தை முன் சொல்லிவிட வேறு வழியில்லாமல் அதற்கான பயிற்சிகளுக்கு செல்லத் துவங்கினான்.

முதலில் ஆர்வமில்லை என்றாலும், எடுத்த காரியத்தை ஏனோ தானோவென செய்யும் பழக்கம் அவனுக்குக் கிடையாது. முழுமனதோடு படித்தான், வென்றான், இதோ வேலைக்குச் சேர்ந்த இரண்டு வருடத்தில் தன் பணியின் அடுத்தடுத்த படிகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறான்.

செய்யும் காரியங்களில் அவனின் தனித்தன்மை அவனை மிளிரவைத்தது. வேலை போக மற்ற சமயங்களில் அவன் அருகில் இருப்பவர்கள் சிரிக்காமலிருந்தால் தான் ஆச்சர்யம், தன்னைச் சுற்றி இருப்பவர்களை கலகலப்பாக வைத்திருப்பதில் அவனுக்கு நிகர் அவனே.

அதனாலயே கல்லூரிக் காலத்தில் அவனை அறியாதவர்கள் மிகச் சொற்பம். இவனைச் சூழ்ந்திருக்கும் கூட்டத்தில் பெரும்பாலும் பெண்கள் இருக்க அதுவே காரணம். இப்போது அதுவே வினையாகிப் போனது அவனுக்கு.

இது அவன் எதிர்பார்க்காதது. இந்த சூழல் மனநிலை எல்லாமே அவனுக்கு புதிது. சுற்றிலும் பெண்கள் இருந்த போது யார் மீதும் வராத ஒரு புது உணர்வு சில நாட்களாய் அவளைக் கண்டதும் இவனைத் தொற்றிக் கொண்டது.

வெள்ளைநிற தேவதைகள் சுற்றி சுற்றி வந்து ஆடவில்லை அது மட்டும் தான் பாக்கி, மற்றபடி காதல் அவனை ஆட்கொண்டுவிட்டதன் அத்துணை அம்சங்களும் அவனுள் பொருந்திவிட்டது.

எந்நேரமும் ஒலிக்கும் காதல் கீதங்கள், அவனது நாட்குறிப்பின் பேனாமுனையில் கவிதைப்பூக்கள் மலரத்துவங்கியிருந்தது. கண்ணாடியில் ரசம் கரையத்துவங்கியிருந்தது.

பசை போடாமலே இதழில் புன்னகை குடிகொண்டிருந்தது. கோபங்கள் காணாமல் போயிருந்தது, எதிரிகள் எறும்புகளாய் தெரிந்தனர். வலைதளங்கள் வேலையற்றவர்களின் உபயோகத்திற்கானதாய் தோன்றியது. உற்சாகம் கரைபுரண்டது. தூக்கம் தூரமானது.

விழித்திருக்கையில் கனவுகள் கூடாரமிட்டது, வாழ்க்கை அழகானதாய் தோன்றியது. அவள் மட்டும் உலகமானாள், ஆகாயம் நிலவுக்காகவே நின்றிருந்தது. நிலவாய் அவள் வருவாள் அந்திவானமாய் காத்துக்கிடந்தான் அவன்.

யாரவள் எங்கிருந்து வந்தாள், எனக்குள் விந்தைகள் புரிந்து செல்கிறாளே என்று அவன் மனம் கவிதை வடிக்கத்துவங்கியிருந்தது. இவனின் மூளையின் இயக்கமாகிப் போனவள், இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருந்தாள் அங்கே.

”முருகேசா இன்னுமா எண்ணிக் கட்டிகிட்டு இருக்க, ம்ம் சீக்கிரம் ஒவ்வொரு பேக்கிங்லயும் ஐம்பது தட்டு சரியா இருக்கணும், ஆச்சா”

”இதோ ஆச்சு கா”

“ம்ம்ம் சம்மனசு அக்கா, ஸ்னாக்ஸ் ப்ளேட் ஆர்டர் நியாபகம் இருக்குல்ல, ஐநூறு ப்ளேட் தனியா வைச்சிடுங்க, ஈவினிங் டெலிவரி குடுக்கணும், ”

“இப்பவே பாதிக்குமேல முடிஞ்சுதுப்பா, மதியத்துக்குள்ள முடிச்சு எண்ணி கட்டி வச்சிடுறேன்”

“சரிக்கா, டீ ஆறுது பாருங்க குடிச்சிட்டு வேலைய பாருங்க”

“அடடா மறந்துட்டேனே” என்ற சம்மனசின் பதில் காதுகளை அடைவதற்குள், டெலிவரி செக்சன் மாணிக்கத்திடம் இன்று டெலிவரி செய்ய வேண்டிய அட்ரெஸை சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.

சரி எல்லாத்தையும் கரெக்ட்டா டெலிவரி பண்ணீடுங்க, ஸ்டாக் வந்துச்சுன்னா கோடௌனில் இறக்க சொல்லுங்க, நான் பாங்க் வரைக்கும் போய்ட்டு வரேன் என்றபடி சாலையில் இறங்கி நடக்கத்துவங்கியவள், மீண்டும் திரும்பி வந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

போக்குவரத்துக் கொள்கையைப் பொருத்தவரை இவள் சீனா, பெரும்பாலும் சைக்கிளையே உபயோகப்படுத்துவாள், ஏம்மா ஒரு ஸ்கூட்டி வாங்கிக்கலாமில்லை” என்று யாராவது கேட்டாள்,

”அதுக்கு தீனி போட்டு காத்த அழுக்காக்குறதுக்கு, சைக்கிள் எவ்வளவோ தேவலாம், உடம்புக்கு நல்லது, பிபி சுகர் வராது கை கால் ஆரோக்கியமா இருக்கும்,”

”இல்ல ஏதோ ஒரு அவசரம் வேகமா போகணும்னா தேவைப்படுமே,”

”அப்படி தேவைப்படும் போது பாத்துக்கலாம், இருக்க மரத்தை பூரா வெட்டிடுங்க, காத்துல கார்பன் டை ஆக்ஸ்டை அதிகமாக்கி விட்டுடுங்க, அப்புறம் அய்யோ வெயிலடிக்குதே, மழை பெய்யலையேன்னு அடிச்சுக்க வேண்டியது.வீட்டில நாலு பேர் இருந்தா நாலு பேருக்கும் நாலு செல்போன் மாதிரி இப்ப டூவீலரும் ஆகிப் போச்சு, அடுத்தவனை மாறுடா மாறுடான்னு கெஞ்சுறதுக்கு பதிலா, முதல் அடிய நாம எடுத்து வைச்சா அதைப் பார்த்து அடுத்தவனும் திருந்துவான்”

”கேட்டது ஒரு குத்தமா அதுக்கு இவ்வளவு பெரிய லெக்சரா”

“அடுத்தவன் என்ன பண்றான்னு ஆராய்ச்சி பண்ணி கேள்வி கேக்குறதை விட்டுட்டு உன் பொழப்பைப் பாரு, ரொம்ப அக்கறையா வந்து விசாரிச்சில்ல அதான் மெசேஜ் சென்னேன் கிளம்புய்யா”

அத்தியாவசியம் என்றாலொழிய அவசரத்தையோ அட்வைசயோ எப்போதும் பயன்படுத்தமாட்டாள், சீரான திட்டமிடல் இருந்தாலே போதும், நெருக்கடியான சமயங்களை தவிர்த்துவிடலாம் என்பாள்.

வங்கியின் முதல் வாடிக்கையாளராய் வந்து நின்றவளை சிசி டிவி கேமரா வழியே பார்த்துக் கொண்டிருந்தான் மைத்ரேயன். நேற்று கிளம்பியதிலிருந்து மனதை பாடாய் படுத்தியவள் வந்து நிற்கிறாள். ஆனால் அவன் அறை இருக்கும் பக்கம் கூட அவள் தலை திரும்பவில்லை.

காலை நேரம் தான் என்றாலும் சித்திரையின் கோடை அவள் நெற்றியில் முத்துக்களைக் கோர்த்திருந்தது, கைக் குட்டையை தவறவிட்டவள் துப்பட்டாவில் துடைக்கப்போன வியர்வைத்துளிகள் அவள் தலைக்கு மேலே சுழலத்துவங்கியிருந்த மின்விசிறியின் புண்ணியத்தில் சிலுசிலுவென்றிருந்தது.

கழுத்தை நிமிர்த்தி கண்களை மூடி அவள் காற்றுவாங்கும் அழகை ரசித்தபடி நின்றிருந்தவனை கேஷியர் உலுக்க, கையில் வைத்திருந்த பைலை அவரிடம் நீட்டி எதோ கேட்டவன் அவர் பதில் கூறும் போதும் அவளையே பார்த்திருந்தான்.

சிலநொடிகளில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள், ”நம்ம செலான் குடுக்கும் போது தான் ட்டௌட் வருமா” என்று மனதினுள் நினைத்தவள் சற்றே முகத்தை இறுக்கமாக்கிக் காத்திருந்தாள்.

ஒருமுறையாவது தன்னை பார்க்கிறாளா என்று பார்த்தவனுக்கு எப்போதும் போல இம்முறையும் ஏமாற்றமே கிடைக்க, தன்னறைக்குள் சென்றுவிட்டான். வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்தவள், சரிபார்த்தபடியே வரவும், அதே நேரம் லாக்கர் ரூமுக்கு செல்ல வெளியே வந்த மைத்ரேயனும் தற்செயலாய் இடித்துக் கொள்ள, நிமிர்ந்து பாரமால் வந்தது தன் பிழையே என்றெண்ணியவள் ”சாரி” என்றவாறு அவன் கண் நோக்க ஏதோ ஒரு வித்தியாசம் அவன் கண்ணில்,

நெஞ்சுக்குள் எதோ ஒரு குறுகுறுப்பு, முதல் முறையாய் இது போன்ற உணர்வை அனுபவிக்கிறாள். அவன் சிரிக்கவில்லை, முறைக்கவும் இல்லை, ஆனால் அது சாதாராண பார்வையாய் இல்லை என்பது மட்டுமே அவள் அறிந்தது.

தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவனை அரை நொடியில் அடையாளம் கண்டுவிடும் அவள், இன்று இது என்ன பார்வையென்றே புரியாமல் தவித்தாள்.

சிலநொடி சந்திப்பு என்றாலும் விழிகள் மோதிக் கொண்டதில், அது யுகமாய் தோன்ற மனதில் அதை பத்திரமாய் பதிந்து கொண்டவன், மிகுந்த உற்சாகமாகிப் போனான்.

பாஸ்புக்கில் எண்ட்ரி போடச் சென்றவள் அதை மறந்து சென்று கொண்டிருந்தாள். தான் செய்யும் பாக்குமட்டை தட்டுகளை இணையம் மூலம் பிரபலப்படுத்தியவள், அதை மேற்கொண்டு விரிவாக்க வங்கி லோன் கேட்கவேண்டும் என்று எண்ணியிருந்தாள்.

மைத்ரேயனை வங்கியில் முதல்முறை பார்த்த அனுபவமே அவளை லோன் பற்றி கேட்க சற்றே தயங்க வைத்தது. தன் தொழிலுக்காக அவ்வப்போது நகைகளை அடகு வைப்பதும் எடுப்பதும் அவளுக்கு வாடிக்கையான ஒரு செயல். அன்றும் அப்படித்தான் அடகு வைக்கச் சென்றிருந்தாள்.

தேவைப்பட்டது சில ஆயிரங்கள் தான் என்றாலும், யாரிடமும் கைமாற்று வாங்கவோ இல்லை வட்டிக்கு வாங்கவோ அவளுக்கு விருப்பமில்லை.

நகை மதிப்பீட்டாளர் முன் அமர்ந்திருந்தவர்கள் சிலர் தான் என்றாலும் இவள் செல்ல வேண்டிய தருணத்தில் இன்னொருவர் செல்ல, கவனிக்காமல் சென்றிருப்பார் என்று காத்திருந்தாள் அடுத்தவரும் இதையே செய்ய,

“சார் நான் போகணும்” என்றாள். இதை கவனித்த நகை மதீப்பீட்டாளர்,

“மேடம் மேனேஜர் சாரை பாருங்க பார்த்திட்டு வாங்க” என்றார்.

“இது என்ன புது வழக்கம் என்றெண்ணியவள் கதவை தட்டிவிட்டு “எக்ஸ்யூ மீ” என்றாள்.

உள்ளிருந்து “எஸ்” என்ற ஆமோதிப்பான பதில் வரவும் உள்ளே சென்றாள். பேங்க் மேனேஜர் என்றால் எப்படியும் நாற்பதிற்கு மேல் தான் இருப்பார் என்ற கணிப்பில் சென்ற அவளுக்கு ஏமாற்றத்தை மொத்தமாய் பரிசளிக்க இளமையின் தித்திப்பை கடக்காத வயதில் துடிப்பான இளைஞனாய் அமர்ந்திருந்தான் மைத்ரேயன்.

இவளை நிமிர்ந்தே பாராமல் கணினி திரையில் பார்வையை ஓட்டிய படி,

“சொல்லுங்க என்ன விசயம்”

முன்நெற்றியில் சரிந்திருந்த அவன் கேசமும் நேருக்கு நேர் காணாத விழிகளும் அவளுக்கு பரிச்சயமில்லாததாகவே தோன்றியது.அவன் முகத்தை காணும் ஆர்வம் தோன்றாதவளாய் பதிலளித்தாள்.

“நகை அடகு வைக்கணும்”

“உங்க பாஸ் புக் குடுங்க, எத்தனை கிராம் வைக்கணும்”

”பதினைஞ்சு கிராம்”

“ வாட்” என்ற அதிர்ந்த பதிலில் அவனை விநோதமாய் பார்த்தாள்.

அவனின் ”வாட்” பாஸ் புக்கைப் பார்த்தா இல்லை அவள் கூறிய பதிலாலா என சிந்தித்தவள், அவன் முகத்தை பார்த்தாள். அதில் தெரிந்த புன்னகை அவளுக்கு சிநேகமாய் தெரியும் என்று அவன் நினைத்திருக்க, அவளுக்கு அது பரிகாசமாகவே தெரிந்தது.

முகத்தை மேலும் இறுக்கமாக்கிக் கொண்டவளைப் பார்த்து, “இருபதாயிரம் தான் கிடைக்கும் போதுமா” என்றான்.

“போதும்”

“போதுமா”

“ஏன் ஒன்பதாயிரம் கோடின்னா தான் குடுப்பீங்களா” என்றாள்.

அவனோ பலமாய் சிரித்துவிட்டு, ”வெயிட் பண்ணுங்க மேடம்” என்றவன் மீண்டும் பாஸ்புக்கில் பார்வையை ஓட்ட சற்றே கடுப்போடு வெளியே சென்று அமர்ந்தாள்.

அவளுக்கு நேரே இருந்த கடிகாரம் காட்டிய நேரத்தைப் பார்த்தவளுக்கு, அடுத்த செய்ய வேண்டிய பணிகள் மண்டைக்குள் அணிவகுகத் துவங்கியிருந்தது.

சிந்தனைகள் ஓடியதில் அரைமணிநேரம் ஐந்து நிமிடம் போல தெரிய அவளது முறை வர, நகையை அடகுவைத்து பணத்தைப் பெற்றுக் கொண்டு சென்றுவிட்டாள்.

அன்று முதல் இந்த மூன்று மாதங்களாய் ஒவ்வொரு முறை வங்கிக்கு வரும்போதும் அவனை பார்க்க வேண்டிய சூழல் தானாக அமைகிறதா இல்லை அமைக்கப்படுகிறதா என்று அறியாமலேயே அவனை சந்தித்துச் செல்கிறாள்.

அதிலும் இன்றைய சந்திப்பு இதுவரை நிகழாதது, புதியது. அனுபவம் அதன் தாக்கம் அத்தணையுமே புதிதாகத் தோன்றியது. ஏதோ வித்தியாசமாக உணர்கிறோமே என்று அதை பற்றி சிந்திக்கத் துவங்கியவளை அடுத்தடுத்த வேலைகள் அலை பேசி மூலம் உசுபேற்றிவிட வேலைகளுக்குள் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள்.

தமிழ்நாட்டில் பயிர் செய்யவந்த விவசாயியைப் போல கன்னத்தில் கைவைத்து அமர்ந்துவிட்டது இவளைப் பார்த்து காதல். 

Advertisement