Advertisement

திருமதி.திருநிறைச்செல்வன்

 

இவள் வாழ்வில் வருமோ காதல்….

 

முகூர்த்தம் 19

 

தொலைக்காட்சியின் அத்தணை செய்தி சேனல்களிலும் முக்கியச் செய்திகள், பிரேகிங் நியூஸ், ஃப்ளாஸ்  நியூஸ் என்ற வாசகங்கள் மின்னி மறைய அதன் பின்னே,

“பிரபல அரசியல்வாதி மர்மமான முறையில் மரணம்…” என்ற தலைப்புச் செய்திகள் இடம் பெற்றிருந்தது.

நதிக்கரையோரம் கிடந்த அடையாளம் தெரியாத மர்மமனிதன் வேந்தன் தான் என்ற அதிகாரப் பூர்வமான வெளியீட்டை செய்தியாளர்களுக்கு அறிவித்துக் கொண்டிருந்தான் சேதுபதி.

“கடந்த சில நாட்களாக தேடப்பட்டு வந்த அரசியல் பிரமுகர் வேந்தனுடைய உடல்தான் இது…” சொல்லி முடிக்கும் முன் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்திலிருந்து ஒரு குரல்,

“இதை எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க சார், பிரபலமான அமைச்சரோட தம்பி, அதுமட்டுமில்லாம ஆளுங்கட்சியுடைய முக்கிய அரசியல் புள்ளி, இவர் இப்படி மர்மமான முறையில இறந்துட்டார்னு சொல்றீங்க நாங்க எப்படி நம்புறது, இது அவரோட உடல்தான் அப்படீன்னு சொல்றதுக்கு உங்களுக்கு என்ன ஆதாரம் கிடைச்சிருக்குன்னு சொல்ல முடியுமா…”

“ஹலோ ஸ்டாப் ஸ்டாப் , காவல்துறையின் அறிவிப்பை இன்னும் சொல்லி முடிக்கவே இல்லை, சோ ப்ளீஸ் லிஸன்…” என்றவன் தொடர்ந்தான்.

“அரசியல் பிரமுகரான வேந்தனுடைய டெட்பாடி தான் இதுன்னு அரசு மருத்துவர்கள் கொடுத்த அறிக்கை இருக்கு, அதை வச்சு தான் நாங்களும் கன்பார்ம் பண்ணியிருக்கோம், இது கொலையா தற்கொலையா, அதுக்கான மோடிவ் என்ன, இதெல்லாம் விசாரிக்க காவல்துறையின் தனிப்பிரிவு அமைக்கப்பட்டிருக்கு, கூடிய விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்…”

சொல்லி முடித்ததும் பெருங்கூச்சலாய் அடுத்தடுத்த கேள்விகள் பத்திரிக்கையாளர் கூட்டத்திலிருந்து கிளம்ப, அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்திருந்தான் சேதுபதி.

டி.ஜி.பி அலுவலகத்தின் முன் நின்றபடி செய்தி ஊடகங்கள் தங்கள் கடமையை செய்து கொண்டிருக்க, உள்ளே டி.ஜி.பி சுதாகரன் அலைபேசியில் அவரின் கடமையை தீவிரமாக ஆற்றிக் கொண்டிருந்தார்.

போனின் மறுமுனையில் ஸ்ரீ ராம், “ என்ன மிஸ்டர்.சுதாகரன் நான் சொன்ன படி தானே எல்லாம் நடக்குது, எந்த இடத்திலயும் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது, ஏன்னா இதுல யாரெல்லாம் சம்மந்தப்பட்டிருக்காங்கன்னு தெரியும் தானே, ரொம்ப கவனமா ஹாண்டில் பண்ணுங்க, மீதிய நம்ம நேர்ல மீட் பண்ணும் போது பேசிக்கலாம்…”

“தெரியும் மிஸ்டர் ராம், எல்லா ப்ரொஸிஜரும் நீங்க சொன்ன படிதான் நடக்குது, இனிமேலும் அப்படித்தான் நடக்கும். யூ டோண்ட் வொரி… ஓ கே…” என்ற டிஜிபி போனை வைத்துவிட்டு நிமிரும்போது எதிரே நின்றிருந்தான் சேதுபதி.

“சார் என்ன பாக்கணும்னு சொல்லியிருந்தீங்க…”

“வேந்தன் கேஸ் நீங்க தானே ஹாண்டில் பண்றீங்க…?”

“எஸ் சார்…”

“இந்த கேஸ் பத்தின டிடெய்ல்ஸ் இந்த பைல்ல இருக்கு, இத ஃபாலோ செஞ்சு இந்த கேஸை முடிச்சிருங்க…”

“சார் இன்னும் விசாரணை தொடங்கவே இல்ல அதுக்குள்ள ரிப்போர்ட் குடுக்குறீங்களே சார்…”

“நீ என்ன விசாரிக்கணும், எப்படி, யார்கிட்ட, எங்க விசாரிக்கணும் எல்லாம் இதுல இருக்கு, நீ மூளைக்கு ரொம்பவேலை குடுக்காம இதுபடி கேஸை முடி அவ்ளோ தான்…”

“சார் ஆனா நீங்களே இப்படி…”

“என்னயா இப்படி… என்ன இப்படி இன்னும் மூணு மாசத்துல ரிடையர் ஆகப்போறேன், ஆறு மாசத்துல எலெக்‌ஷன் வேற வருது… எல்லாம் மேலிடத்து முடிவு, அதோட இதுல செண்ட்ரல் ப்ரஸர் வேற… நான் சொல்ற படி செய், நாளைக்கு வீட்டுக்கு வா…”

      அவர் ’வீட்டுக்கு வா’ என்றதிலேயே அவனுக்கு ஏதோ புரிந்துவிட அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் அங்கிருந்து கிளம்பினான்.

நாளிதழின் செய்தியைப் பார்த்த ராஜாவிற்கு முகம் அதிர்ச்சியில் உறைந்து மீண்டது. ஆனால் அதை வெளிக்காட்டாதவாறு சமாளிக்க முயன்றது ஸ்ரீராமிற்கு நன்றாகவே தெரிந்தது.

ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாத ஸ்ரீராம்,

“நாளைக்கு நீங்க வீட்டுக்கு போகலாம் ராஜா… யூ ஆர் ஆல் ரைட்…” என்றான்.

“ஆனா எனக்கு என்ன ஆச்சு…”

“ஒண்ணும் ஆகலை, உங்களை கொஞ்சம் விசாரிக்க வேண்டி இருந்துச்சு, அதுக்காக என் கஸ்டடியில் வச்சிருந்தேன், இப்ப முடிஞ்சுது அதான் போகச் சொல்றேன்…”

தான் என்னவோ நினைத்து செய்த காரியத்திற்கு இவன் புது விளக்கம் கொடுக்கிறானே என்று எண்ணியவன்,

“விசாரிச்சீங்களா, எங்க ஹாஸ்பிட்டல்ல வச்சா… ஆனா இது ட்ரீட்மெண்ட் குடுக்குற இடம்னு நெனச்சேன், ஆனா நீங்க டாக்டரும் இல்ல இது ஹாஸ்பிடலும் இல்லன்னு இப்பதான் தெரியுது…”

“ப்ரில்லியண்ட் ராஜா, இவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிச்சிட்டீங்க, காயமே இல்லாத உங்களுக்கு ரெண்டு வாரம் ட்ரீட்மெண்ட் நடக்கும் போதே நீங்க கண்டுபிடிச்சிருக்க வேண்டாமா…”

“வாட்…”

“கூல் கூல் ராஜா, கொஞ்சம் நான் சொல்றத பொறுமையா கேளுங்க..”

“…..”

“நான் ஸ்ரீராம் சி.பி.ஐ ஆபிசர், ஸ்பெஷலி அப்பாய்ண்டட் ஃபார் ஸ்வாதி மர்டர் கேஸ்…”

“ஸ்வாதி மர்டரா…?”

“ஆமா உங்க கூட படிச்ச ஸ்வாதி கேஸ் தான்… அந்த கேஸை பத்தி உனக்கு தெரிஞ்சதை விசாரிக்கணும் தான் நெனச்சேன்…”

”ஆயிரக்கணக்கான பேர் படிக்கிற காலேஜில என்ன மட்டும் விசாரிச்சா உண்மை தெரிஞ்சுடுமா என்ன…!” என்றவனின் பதில் சற்று விரக்தியாகவே வந்தது.

“நானும் நிறைய ஓல்ட் ஸ்டூடண்ட்ஸ் கிட்ட விசாரிச்சேன், முக்கால்வாசி பேருக்கு ஸ்வாதின்னு ஒரு பொண்ணு அங்க படிச்சதே தெரியலை, தெரிஞ்ச கொஞ்ச பேருக்கும் அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை…” என்றான் ஸ்ரீராம்.

“ஓ அப்ப என்னை கேக்கணும், விசாரிக்கணும்னு எப்படி முடிவு செஞ்சீங்க, விசாரிச்சு உண்மைய தெரிஞ்சுகிட்டீங்களா…?” என்று ராஜா கேட்க, சிரித்த ஸ்ரீ ராம்,

“உண்மை எனக்கு தெரியும், உன்னை விசாரிச்ச அப்பறம் தான் தெரிஞ்சுது, அது உனக்கு தெரியாதுன்னு…” என்றதில் குழம்பிய ராஜா…

“சொன்னா நானும் தெரிஞ்சுப்பேன்…” என்றான்.

“தெரிஞ்ச உண்மைக்கே நீ நெறைய செஞ்சுட்ட, போதும், இனி நீ எதுவும் செய்யத் தேவையில்லை, நீ கிளம்பலாம், எல்லாமும் தெரிஞ்சு நீ பண்ணபோறது எதுவுமில்லை. சில விசயங்கள் அப்படித்தான். இனிமேலாவது, உன் வேலை, காதல் கல்யாணம்னு உன் வாழ்க்கையை மட்டும் பாரு….” என்றான் ஸ்ரீ ராம் கட்டளையிடும் விதமாக.

      அவன் சொன்ன விசயம் சரி என்றாலும், சொன்ன விதம் ஏனோ ராஜாவை தூண்டியது. “ஏன் ஏன்…? நான் வேற என்ன செஞ்சுட்டேன்…?” என்று ராமை ஆராய்ந்து அறிந்து கொள்ளும் நோக்கில் ராஜா கேட்க, இதுவரை இருந்த முகபாவம் மாறி முகத்தை கடுமையாக்கியவன்,

      ”அது உனக்கே தெரியும், நான் சொல்லத் தேவையில்லை, நீ கிளம்பலாம்…” என்றவன் அங்கிருந்த செவிலியை அழைத்து,

      ”சிஸ்டர் இவரை நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க… அண்ட் அவர் ரிலேடிவ் ஒருத்தர் அட்மிட் ஆகி இருந்தாரே… ஹான்… ராஜேந்திரன் அவரையும் டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க…” என்றுவிட்டு நில்லாமல் தன்னறைக்குச் சென்றுவிட்டான்.

இப்போது யோசிப்பது ராஜாவின் முறையாயிற்று, ‘ஸ்வாதி மர்டர் கேஸுன்னு சொல்றான், வேந்தன் மர்டர் நியூஸ் காமிச்சு என்ன ரியாக்ட் பண்றேன்னு நோட் பண்றான்,. கேட்டா…? ’சிபிஐ’ங்குறான், இங்க பார்த்தா ஹாஸ்பிடல் ஓனரா இருக்கான், என்ன தான் நடக்குது…? பிளான் செஞ்சு அந்த வேந்தனை மாட்ட வைக்க நான் நடிச்சா… நான் இங்க அட்மிட் ஆனதும் இவன் என்னை விசாரிச்சேன்னு சொல்றானே… எப்படி விசாரிச்சிருப்பான்…?’என்றெல்லாம் யோசித்தபடி அமர்ந்திருந்தான் ராஜா. ஆனால் விடை தான் கிடைத்தபாடில்லை.

மறுநாள் காலை அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர். ஏற்கனவே எடுத்திருந்த மெடிக்கல் லீவ்வை இன்னும் நீட்டித்து மெயில் அனுப்பிக் கொண்டிருந்தான் மைத்ரேய ராஜா.

”இவ்ளோ முடியாதப்போ கூட வேலை பாக்கணுமாப்பா…” என்றபடி வந்த அவன் தாய் கையில் முருங்கைக்கீரை சூப்பை திணித்துவிட்டு அந்த மடிக்கணினியை பிடுங்கினார்.

“ம்மா ம்மா… பாத்து மா… லேப் மா…”

“தெரியும்டா… நான் என்னவோ லாப்டாப்பே பாக்காத மாதிரிதான்… மொதல்ல சூப்பை குடி ஆறிடபோகுது…”

”லீவ் தான் மா அப்ளை செஞ்சேன் அதை முழுசா முடிக்கிறதுக்குள்ள இந்த அமர்க்களமா…”

”ஒரு மாசத்துக்குத்தான லீவ் போட்டிருக்க…?” என்றார் அவனை நம்பாத நோக்கில்…

“ஆமா மா, நீங்க தான் இன்னும் இருபது நாள்ல கல்யாணத்தை வைச்சிருக்கீங்களே… நான் என்ன செய்றது…?” உள்ளுக்குள் மனதுக்கு பிடித்தவளை மணமுடிக்கும் மகிழ்ச்சி நிரம்பித் ததும்பினாலும் அதையெல்லாம் காட்டதாவாறு அவன் பேசுவதை கவனித்தவர்,

“பாவம் ரொம்பத்தான் சலிச்சுக்குற, கல்யாணத்தை வேணும்னா ஒரு ஆறு மாசத்துக்கு தள்ளி வச்சிருவோமா…?” என்று அவர் சீரியஸா கேட்டுவிட்டு அவன் முகத்தை பார்த்தார்.

சட்டென பதறியவன், “இல்ல இல்ல அப்படியெல்லாம் வேணா, எல்லா ஏற்பாடும் தான் செஞ்சிட்டோமே, இனி மாத்த முடியாது, வேணா…” என்று ராஜா சொல்வதைப் பார்த்து கலகலவென சிரிக்கத்துவங்கினார்.

“ஏம்மா ஏன் ஏம்மா ஏன் இப்படி…?” அவர் இவனை சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார் என்பது புரிந்து அவன் கேட்க, ”பின்ன என்னடா அவ மேல அவ்ளோ ஆசைய வளத்து வச்சிருக்க, அதுவும் எத்தனை வருசமா மனசுக்குள்ளயே வச்சு மருகியிருக்க, எங்களுக்கு தெரியாதுன்னு நெனச்சியா…?” என்று அவன் தாய் அவன் மனம் புரிந்தவராய் பேச, உளமாற நெகிழ்ந்தான்.

“எவ்வளவு நேரம் தான் நானும் வலிக்காத மாதிரியே நடிக்கிறது…” என்று வடிவேல் பாணியில் அவன் சொல்ல, சிரிப்பில் கலந்துகொள்ள அவன் தந்தையும் வந்துவிட, அந்த இடமே மகிழ்வில் திளைத்தது.

“நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

ஏகன், அநேகன், இறைவன் அடி வாழ்க! “ என்று சிவபுராணம் ஒலித்துக்கொண்டிருந்தது சிவன் கோவிலில், அன்று பிரதோஷம் என்பதால் கோவிலில் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.

 

இறைவனை தரிசித்துவிட்டு பிரகாரத்தில் அமர்ந்திருந்த ஸ்ரீராம் உடன் அவன் மனைவி வானதியும் அமர்ந்திருந்தாள். புதுமணத் தம்பதி என்பதை பார்த்தவுடன் சொல்லிவிடலாம். அவள் முகத்தில் இருந்த பூரிப்பும் செழுமையும், அவள் கழுத்தில் இருந்த புதுமஞ்சள் தாலிக்கயிறும் அவள் அழகை இன்னும் மெருகூட்டியது என்றே சொல்லலாம்.

 

ஆனால் இதையெல்லாம் ரசித்து காதல் கவின்மொழி பேசும் நிலையில் ஸ்ரீராமின் மனம் இல்லை. அவன் எண்ணமெல்லாம் கண்முன் தெரியும் முடிச்சுகளையும் அவிழ்க்கும் கயிற்றைத் தேடிக்கொண்டிருந்தது.

 

அவன் எண்ணமறியாத வானதி அவனுடன் சுயமி எடுக்க நினைத்து அவன் கைப்பேசியை எடுக்க, அதே நேரம் எதோ புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அவளிடம் இருந்து வாங்கியவன் தனியே சென்று பேசினான்.

 

சில நிமிடங்கள் அவன் பேசும் அழகை ரசித்துக்கொண்டிருந்தவள் சுற்றுப்புறம் உணர்ந்து, அங்கிருந்த சிற்பங்களின் மேல் பார்வையை திருப்பினாள்.

 

அவனோ உடன் ஒருத்தியை அழைத்து வந்த நினைவே இன்றி பேசிக்கொண்டே போய் காரில் அமர்ந்து ஸ்டார்ட் செய்ய, தான் ரசித்துக் கொண்டிருந்ததை போல கணவனும் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று எண்ணிய படி நின்றிருந்த வானதி மெல்ல திரும்பிப் பார்க்க,

 

ஸ்ரீராமின் கார் அவளைக் கடந்து சென்று கொண்டிருந்தது. அழைக்கும் எண்ணமின்றி அப்படியே நின்றவளின் முகம் ஏமாற்றத்தோடு கோபத்தையும் கொண்டிருந்தது.

 

அடுக்குமாடிக்குடியிருப்பின் முன் நிறுத்தி காரைவிட்டு இறங்கிய ஸ்ரீராமின் விழிகள் லிப்ட் இருக்குமிடத்தை தேட கால்கள் காத்திருக்காமல் படிகளில் ஏறத்துவங்கியிருந்தது.

 

அவன் கால்கள் நின்ற இடம் அந்த வீட்டின் வரவேற்பறை, அவன் முன் நின்றிருந்த சிவம் சீறிய சிந்தனையில் இருந்தார்.

 

“சார்…”

 

“வா ராம், உன்ன தான் எதிர்பார்த்திட்டு இருந்தேன்…”

 

“உங்க கிட்ட முக்கியமான விசயம் பேசனும் சார்…”

 

“சொல்லு… கேஸ்ல என்ன க்ளூ கிடச்சது, வேந்தனை மர்டர் பண்ணது யார்னு கண்டிபிடிச்சியா, இல்லை இன்னும் அந்த பாங்க் மேனேஜரை கஸ்டடியில வச்சு செஞ்சிட்டு இருக்கியா…”

 

“சார்… கேஸ் மொத்தமும் முடிஞ்சது சார் அதை சொல்ல தான் வந்தேன்…” என்று கூறியவன் நடந்த மொத்தத்தையும் சொல்ல சிவத்தின் முகம் முதலில் அதிர்ந்து பின் தெளிந்து, கடைசியில் நிம்மதியை தத்தெடுத்துக் கொண்டது.

 

 

 

 

 

 

 

 

Advertisement