Advertisement

முகூர்த்தம் 18

எத்தனை இம்சிக்கிறது

அத்தனையும் தித்தித்திக்கிறதே

காதல்

 

”டேய் சேது, பூபதி எங்கடா போனீங்க, எங்க போய்த் தொலைஞ்சீங்க, ஸ்வாதிக்கு என்னாச்சுன்னு தெரியலை, எங்கடா எல்லாரும் டேய்” ராஜா கண்களைத் திறக்காமலே கத்திக் கொண்டிருந்தான்.

கைகளையும் கண்களையும் இறுக்க மூடிக் கொண்டிருந்தான். முழு வேகத்தையும் செலுத்தி கைகளை இறுக்கியதில் ஊசிகள் கிழித்து இரத்தம் வந்து கொண்டிருந்தது.

ஆனால் அவன் இட்ட சத்தம் மட்டும் குறையவே இல்லை, “சேது பூபதி, போனை எடுங்கடா, இப்போ என்னடா பண்றது ஸ்வாதியை எப்படியாச்சும் காப்பாத்தனும்டா”

“நீ எவ்வளவு சத்தம் போட்டாலும் ஸ்வாதியை உன்னால காப்பாத்த முடியாது மைத்ரேய ராஜா” அருகில் அமர்ந்திருந்த ஸ்ரீராம் எந்தவித பதற்றமும் இல்லாமல் சொன்னான்.

“ஏன் ஏன் ஏன் ஸ்வாதிக்கு என்னாச்சு, வானதி சொன்னதும் அத்தனையும் உண்மைதானா”

“ஏன்னா ஸ்வாதி இறந்து நாலு வருஷமாச்சு, வானதி சொன்ன அத்தனையும் உண்மைதான் ராஜா”

“நோ நோ நோ” என்று மேலும் சத்தம் போட்டவனை அமைதிப்படுத்த அவன் தோள்களை பிடித்து அழுத்தினான் ஸ்ரீராம்.

தன்னை யாரோ தொடவும் தான் நிகழ்காலத்திற்கு வந்தான் ராஜா, சட்டென கண்ணைவிழித்துப் பார்க்க, அங்கே ஸ்ரீராம் இருந்தான்.

”நீ நீ… யாரு”

“ஸ்ரீராம்”,

“ஸ்ரீராமா”

“ உங்களுக்கு என்னைத் தெரியாது, ஆனா உங்களை எனக்குத் தெரியும் மிஸ்டர் மைத்ரேய ராஜா”

“எப்படி எங்க ஏன்” என்று வரிசையாய் அடுக்கினான் கேள்விகளை,

தூக்கத்தில் இருந்து கனவில் விழித்தோமா, கனவிலிருந்து உண்மையில் விழிக்கவில்லையோ என்ற குழப்பம் தீராதவனாய் விழித்தவனை நோக்கி,

“கூல் கூல் ராஜா, நான் யாரு என்னன்னு போகப் போக தெரிஞ்சுகுவீங்க, அண்ட் நவ் யூ ஆர் அண்டர் மை கண்ட்ரோல்”,

“நீ யாரு என்னைக் கண்ட்ரோல் செய்ய”

“என் ஹாஸ்பிட்டல்ல ட்ரீட்மெண்ட்ல இருக்க பேஷண்ட் ஓகே, அந்த நினைப்பு மட்டும் இருக்கட்டும்” என்றுவிட்டு சென்ற ஸ்ரீராம் யார் என்ன என்பது ராஜாவிற்கு எவ்வளவு யோசித்தும் தெரியவில்லை.

அடிபட்டது போல் உடலெங்கும் வலித்தது. கைகளில் வந்து கொண்டிருந்த குருதியை சுத்தம் செய்து மருந்திட வந்த செவிலியிடம், ”சிஸ்டர் , எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்களேன் என் பேமிலி மெம்பர்ஸ் என் வெய்ப் யாராச்சும் வெளிய இருந்தா வர்ச்சொல்லுங்களேன்”

“என்ன சார் கல்யாணத்துக்கு முன்னாடியே வொய்ப்பா, ஹா ஹா “

”ஸ்ஸ்ஸ் சிஸ்டர் ப்ளீஸ் இதெல்லாம் ரசிச்சு சிரிக்க கூடிய நிலைமையில நான் இல்லை, ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க”

“ஓ கே ஓ கே கூல் ராஜா நீங்க இப்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்க கூடாது, நான் வரச் சொல்லுறேன்”

“சிஸ்டர் ஒன் மினிட்”

“சொல்லுங்க”

”நான் நல்லாத்தான் இருந்தேன், எதுக்கு இப்ப ட்ரீட்மெண்ட் குடுத்து என்னை பேஸண்ட் ஆக்கி வச்சிருக்கீங்க”

“உங்க கால்ல துருப்பிடிச்ச கம்பி கிழிச்சு இன்பெக்‌ஷன் ஆகியிருக்கு”

“அது எப்போ”

“நீங்க இங்க அட்மிட் ஆகி ஒன் வீக் ஆச்சு சார், ஆனா இந்த காயம் ரெண்டு நாளாதான் இருக்கு, நடுவுல உங்களுக்கு ஸ்பெஷல் ஸ்கேன் எடுக்க கூட்டிட்டு போயிருந்தாங்க, உங்க கேஸ் ஹிஸ்டரி படிச்சு தான் இதையும் தெரிஞ்சிகிட்டேன், இதுக்கு மேல நான் சொல்லக் கூடாது ராஜா”

“தாங்க் யூ சிஸ்டர், அப்படியே என் வொய்ப்”

“இன்னும் அஞ்சு நிமிசத்துல வருவாங்க” புன்னகைத்தபடி அந்த செவிலியர் நகர்ந்துவிட்டாலும் ராஜா உச்ச கட்ட குழப்பத்தில் இருந்தான்.

உடலின் அசதி ஏன் என்று புரியவில்லை, யார் இந்த ஸ்ரீராம், என்ன செய்கிறான் இங்கு, தன்னைப் பற்றி ஸ்வாதியைப் பற்றி எப்படித் தெரியும் கேள்விகள் வரிசைகட்டிக் கொண்டு நிற்க,உள்ளே வந்தாள் மைவிழிச்செல்வி.

“நீ நல்லாருக்கியா மைவிழி, உனக்கு ஒண்ணுமில்லையே”

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பேசாம படுங்க ராஜா, எனக்கு ஒண்ணுமில்லை, நல்லாருக்கேன்”

“ஹப்பாடி இப்போ தான் நிம்மதியா இருக்கு, மாமா எப்படி இருக்காங்க”

“நான் வந்ததும் அப்பாவுக்கு பாதி குணமாயிடுச்சு, உங்களையும் பார்த்ததும் பூரண குணமாயிட்டார்”

“நல்ல வேளை யாருக்கும் எதுவும் ஆகலை, ஆமா எனக்கு என்னாச்சு, எதுக்கு ஒரு பக்கம் இரத்தம் ஏறுது, ஒரு பக்கம் குளுக்கோஸ் என்ன நடக்குது இங்க”

இன்னிக்கு தான் கண்ணுமுழிச்சிருக்கீங்க, ரெண்ட் நாளா தூங்கீட்டு இருக்கீங்க உங்களுக்கு என்னன்னு டாக்டருக்கே புரியலையாம்”

“வாட், ரெண்டு நாளாவா என்ன சொல்ற”

“ஆமா நாம இங்க வந்து ரெண்டு நாளாச்சு, யாரையும் பார்க்க விடலை, ஒரு நர்ஸ் மட்டும் தான் கூட இருந்து பார்த்துக்கிட்டாங்க, கேட்டா ட்ரீட்மெண்ட்ன்னு சொல்லீட்டாங்க, ரெண்டு மணி நேரத்து ஒரு தரம் டாக்டரும் இன்னொருத்தரும் வந்து பார்த்திட்டு போனாங்க”

“என்ன சொல்ற எனக்கு ஒண்ணுமே இல்லை, என்னைய வச்சு ரெண்டு நாள் ட்ரீட்மெண்ட்டா”

“அம்மா அப்பா பயந்திருப்பாங்க, ஏற்கனவே நான் செஞ்ச கூத்துல அவங்க ரொம்ப ஆடிப்போயிட்டாங்க, இதுல இது வேறையா, அதெல்லாம் நடிப்புன்னு தெரிஞ்சா என்னை கொன்னேபுடுவாங்க, இப்போ என்னைய வச்சு ஒருத்தன் ரெண்டு நாளா படம் காட்டியிருக்கான், என்னத்த சொல்ல”

“உங்களால தான் இவ்வளவும், தேவையில்லாத வேலை பார்த்து எல்லாரையும் டென்ஷனாக்கி எவ்வளவு பிரச்சனை உங்களால”

“ஹே இது நான் இந்த வேந்தனுக்காக செஞ்ச ப்ளான் அதுல நம்ம குடும்பத்துல தேவையில்லாத குழப்பம் வரும், நீ புரிஞ்சுக்காம வெளிய கிளம்புவைன்னு நான் என்ன கனவா கண்டேன்”

“ம்க்கும் இந்த வாய்க்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை, எது செஞ்சாலும் சொல்லீட்டு செய்றதுக்கு என்ன, ஏடாகூடமா எதாவது ஆகியிருந்தா”

“என் வாய்க்கு என்னடி குறைச்சல், சொல்லீட்டு செய்யனுமா, சொல்லீருந்தா என்ன செஞ்சிருப்பீங்க”

“ம்ம் எதாவது ஒத்தாசையா இருந்திருப்பேன் ல”

”ஏற்கனவே சொல்லீட்டு செஞ்சதுக்கே, ஒண்ணும் பதிலைக்காணோம், இதுல இது வேறையா”

“என்ன என்ன சொன்னீங்க, எப்ப சொன்னீங்க”

“இன்னிக்கு இல்லை, அதை சொல்லி பல வருசமாச்சு, அதுக்கே ஒத்தாசையக் காணோமாம்”

ராஜா என்ன சொல்கிறான் என்று மெல்ல புரிந்தது மைவிழிக்கு,

முதன் முதலில் ராஜா தன் காதலைச் சொன்னது தான் அதை நிராகரித்தது, அதன் பின் பார்வைகள் பரிமாறி, கண்களால் கதை பேசியும் நகர்ந்த நாட்கள், காதலை மனதினுள் நுழைய விடக்கூடாது என சபதம் எடுத்துக் கொண்டு திரிந்த அந்த நாட்கள், அதன் பின் சில வருடங்கள் கழித்து வங்கியில் வைத்து மீண்டும் அவனைப் பார்த்து, பார்த்ததும் மனதினுள் தோன்றிய பரவசம், அத்தனை நாளாய் ராஜாவின் காதலை ஏற்காமல் தன் கட்டுப்பாட்டில் இருந்த மனம் அவனைக் கண்டதும் குதூகலித்ததைப் பொறுக்க முடியாமல் அவனிடமே அந்த கோபத்தை காட்டியது.

தன்னிடம் பழைய பார்வையை வீசுவான், காதல் என்று கவின்மொழி பேசுவான் என்று எதிர்பார்த்து ஏமாந்தது.

திருமணம் என்றதும் மனம் அவனை நினைத்தது, அவனைத் தவிர வேறு ஒருவனை எண்ண மறுத்தது, காதலும் அவனே , கணவனும் அவனே என்று உணர்ந்தது என ஒவ்வொன்றாய் மனதில் வர, அத்தனைக்கும் காரணமானவன் அருகில் இருக்கிறான், அதுவும் தனிமையில் அவனுடன் இருக்கிறோம் என்பதை உள்ளூர ரசித்தாள்.

அதிகப்படியான பிரச்சனைகளும், அதன் காரணமான மன உளைச்சல்களும் அதிகமாக இருக்கும் பட்சத்தில், தன்னைச்சுற்றி இருக்கும் இன்பங்களை எண்ணி சற்றே இளைப்பாறிக் கொள்ளும் மூளையைப் போல, ராஜாவுடனான முதல் சந்திப்பு நிகழ்ந்த போது உணராத அவன் அருகாமைக்கு இப்போது அவள் மனம் ஏங்கியது.

அதை உணரத்துவங்கிய அந்த நொடி, குங்குமமாய் சிவக்கத் துவங்கியது அவள் முகம். கடல் மடியில் சாயும் அந்திச்சூரியனின் அழகிய நிறமென உருக்கொள்ளத்துவங்கிய அவள் வதனம் விட்டு நகர்த்த முடியாத பார்வைகளை தனதாக்கிக் கொண்டிருந்தான் மைத்ரேய ராஜா.

கண்கள் பேசும் கவிதைகளுக்கு, காதல் சொல்லும் விழிகளுக்கு, ஒற்றை மொழியாகிப் போன மௌனம் அத்தனை அழகாய் இருந்தது இருவருக்கும்.

ஆயிரம் வார்த்தைகள் கொண்டு கோர்த்தாலும் சொல்லாத சொல்லமுடியாத காதலை அந்த ஆழ்ந்த மௌனம் எடுத்துரைத்துக் கொண்டிருந்தது.

அவள் காதலைச் சொன்ன தருணத்தில், உணர்ச்சிப் பெருக்கும், அவனுக்கு ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது என்ற அவள் பதைபதைப்பின் உச்சம், எல்லாம் சேர்ந்து அவனைக் கண்டதும் எங்கே தன் காதல் மீண்டும் கைசேராமல் போய்விடுமோ என்று நாணம் தொலைத்து தானே கூறிவிட்ட காதல் இன்று, அவளை நாணி அவன் முன் அமரவைத்திருந்தது.

நேருக்கு நேர் சந்தித்து எத்தனை முறை திட்டியிருப்பாள், உணர்வுகளின் கைப்பிடியில் காற்றை ஒலியாக்க முடியாமல் திணறினாள்.

காதலை சுகிக்கும் அத்தனை பேரும் இதையெல்லாம் கடந்து தான் வந்திருப்பார்களோ, எத்தனை இம்சிக்கிறது அத்தனையும் தித்தித்திக்கிறதே…

இவ்வளவு நேரம் படபடப்பாய் பேசிக் கொண்டிருந்தவள் சட்டென அமைதி கொண்டிடவும், அவனும் அவள் முகம் பார்த்தபடியே படுத்திருந்தான்.

அவன் கைக்கு மிக அருகில் அவள் கை இருந்தது. மறத்து போயிருந்த விரல்கள் உயிர் கொள்ள துவங்கியது.

முதல் ஸ்பரிசத்திற்காய் ஏங்கும் பிறந்த குழந்தையாய் மெல்ல அவள் கைதொட்டு பார்த்தான்.

உணர்வுகளின் கைப்பிடியில் தன்னை உணர்ந்து அமர்ந்திருந்தவள் அவனின் முதல் ஸ்பரிசத்தில் சிலிர்த்துப் போனாள்.

சட்டென தூண்டப்பட்ட மின்னோட்டமென உடல் முழுதும் பாய்ந்தது இரத்த ஓட்டம்.

அனிச்சை செயலாய் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். இமைகளால் அழைத்தவனை நோக்கிச் சென்றாள்.

தாய்மை தேடும் சேயாய் அவள் மடிசாய ஏங்கினான். கைகூடிய காதலின் முதல் தனிமை, தூங்காமல் கழிந்த அத்தனை இரவுகளின் அடையாளமாகிப்போனது அந்த நொடி.

மெல்ல மெல்ல தன்னை நோக்கி முன்னேறும் அவளின் நாணம் தொலைந்து காதல் குடிகொண்டிருந்த கண்கள் முழுக்க அவனே நிறைந்திருந்தான்.

நெருங்கிவந்தவள், அவன் உச்சியில் இதழ்பதித்தாள், நொடிகள் நீண்டு நிமிடக்கணக்கு வந்திருந்தது. ஆனாலும் இதழெடுக்கவில்லை.

இருகைகளாலும் அவன் கன்னங்களை பிடித்திருந்தவளின் மூடியிருந்த கண்களின் வழியே அவளின் அத்தனை காதலையும் சுமந்த படி வந்து விழுந்த அந்த ஒற்றைத் துளியின் இதம் உணர்ந்து விழித்தான் அவன்.

சங்கமிக்கத் தயாரான பெருங்கடல்களின் துளிகள் கலக்காத அழகிய காதல் உருக்கொள்ளும் ரம்மியமான காலமானது அது.

அவளின் தாடையை எட்டி முத்தமிட்டான் ராஜா. உயிரே நீதானென உணரவா எனக்கு இத்தனை காலம், இனி உன்னை ஒரு போதும் பிரியேன் என்று இதழ்பிரிக்காமல், இதழ் பிரிக்காமல் கூறியவளை விழிக்க வைத்தான்.

வெட்கம் மேலிட நகரப்போனவளை அருகில் அழைத்தான். அவள் மறுத்தாள், அவன் எழ முயன்றான் முடியாமல் கைகள் தடுத்தன.

அதகுள் வந்து தோள் பிடித்து படுக்க வைத்தாள். அவன் தலையசைத்து மறுத்தான். தலையின் பின் புறம் தாங்கிப்பிடித்து மேலும் இரு தலையணைகளை வைத்து அவனை நிமிர்த்தி சாய்த்து அமரவைத்தாள்.

அவன் முகத்தருகே மிக நெருக்கமாய் ஊஞ்சாலாடும் ஜிமிக்கிகளின் அசைவில் அவன் மனம் ஆனந்தக்கூத்தாடியது.

அவள் காதோரம் முத்தமிட்டான். அவளும் முகம் நகர்த்தாமல் அவனோடு இழைந்தாள். சவரம் செய்யாத அவனின் தாடியும் மீசையும் அவள் பட்டுக் கன்னத்தில் உரசியது.

கனன்றிடும் அனலும் தோற்றிடும் இந்த தீயை அணைக்க முடியாமல் அவன் முகத்தை நெஞ்சோடு புதைத்து அணைத்துக் கொண்டாள்.

தாய்ப்பறவையின் சிறகில் தஞ்சமடையும் சேய்ப்பறவையாய் அவனும் அமிழ்ந்து கொண்டான்.

”லவ் யூ டி பொண்டாட்டி” சொல்லும் முன் முகமெங்கும் நூறு முத்திரையேனும் பதித்திருப்பான்.

அவனின் வார்த்தைகள் கேட்டுத்தான் அவளின் விழிதிறந்தது. “லவ் யூ டூ ராஜா” என்று சொல்லி முடிக்கும் முன் அவள் இதழ்களை அழகாய் சிறைசெய்தான்.

உயிர் உறையும் இடமும் தருணமும் ரகசியமானவை, மெல்லிய உணர்வுகளால் பின்னப்பட்ட மாயவலையில் சிக்கிக் கொண்ட பட்சிகள் இரண்டும் இனி பிரியாமல் கூடியிருக்கட்டும்.

 

ஆனால் விதி வலியது, ஸ்ரீராம் வடிவில் வந்து கதவைத்தட்டியது. ஸ்ரீராமின் கைகளில் இருந்த மாலைநாளிதழில்,

 ”நதிக்கரையோரம் மர்ம பிணம்”

“ காணாமல் போன பிரமுகர் பிரேதமா”

 என போலீஸார் சந்தேகம் என்ற தலைப்புச் செய்தி இடம் பெற்றிருந்தது.

Advertisement