Advertisement

முகூர்த்தம் 17

தலைப்பு செய்திகளில் இடம் பெற வேண்டும் என்ற வேந்தனின் தீராத கனவு நிறைவேறத் துவங்கியிருந்தது.

“ஆளுங்கட்சி அரசியல் பிரமுகரும், மத்திய அமைச்சரின் தம்பியுமான மதுராபுரி வேந்தன் திடீர் மாயம்”

கடந்த மாதம் சென்னைக்கு கட்சியின் முக்கிய பிரமுகர்களுடனான அவசரக்கூட்டத்திற்கு வந்திருந்த மதுராபுரி வேந்தன் அவர்கள், ஒரு வாரம் கட்சி ஏற்பாடு செய்திருந்த விடுதியில் தங்கி தனது ஆதரவை தெரிவித்துவிட்டு, மீண்டும் தன் சொந்த ஊரான திருச்சிக்கு திரும்ப விமானம் மூலம் தனது பயணத்தை மேற்கொண்டார்.

ஆனால் திருச்சி விமான நிலையத்திலிருந்து அவர் மாயமாகி இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனைக்குறித்து போலீஸ் அதிகாரி சேதுபதி கூறுகையில், “மதுராபுரிவேந்தன் மேலே ஏகப்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கு, சமீபத்தில் வங்கிக்கடன் வழக்குல அவரை கைது செய்ய கோர்ட் அரெஸ்ட் வாரண்ட் கொடுத்திருக்காங்க, இந்த மாதிரி சூழ்நிலையில அவர் மாயமாயிருக்கிறார்னா எங்களுடைய சந்தேகமெல்லாம் அவர் மேலதான் இருக்கு, கூடிய சீக்கிரம் அவரை கண்டுபிடிப்போம், அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக்கப்பட்டிருக்கிறது, சட்டம் தன் கடமையை பாரபட்சமின்றி செய்யும்.”

தன் கண் முன் கிடந்த தினசரி நாளிதழின் தலைப்புச் செய்தியாய் வந்திருந்த வேந்தனைப் பற்றி நினைக்கையில் ராஜாவிற்கு கண்கள் சிவந்தது.

நாளிதழின் முகப்பிலிருப்பிலிருந்த வேந்தனின் முகத்தை கிழித்துவிட துடித்து எழுந்தவனின் கைகளில் சுரீர் என்ற வலி.

அப்போது தான், தான் எங்கிருக்கிறோம் என்று உணரத்துவங்கினான் ராஜா.

மருத்துவமனையில் தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் படுக்கையில் கிடந்தவனின் கைகளில் க்ளுக்கோஸ் ஏற்றுவதற்கான ஊசி குத்தப்பட்டிருந்தது. இன்னொரு கையில் ரத்தம் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது.

கைகளை அசைக்க முடியாமல் போனபோதும், நினைவுகள் பின்னோக்கி அசையத்துவங்கியிருந்தது.

ஸ்வாதி காணாமல் போய் அன்றோடு இரண்டு நாட்கள் முடிந்திருந்தது. எங்கு தேடியும் அவளைப் பற்றிய விபரங்கள் எதுவும் கிட்டவில்லை.

ஓய்ந்து அமர்ந்த நிலையில் அவளின் பெற்றோர் அவளிடமிருந்து எந்த போனும் இல்லாததாலும், அதே நேரம் கல்லூரியிலிருந்து கட்டணம் செலுத்த கடைசி நாள் அப்படி இல்லையேல் உங்கள் மகள் கல்லூரியிருந்து நீக்கப்படுவாள் என்ற கடிதம் கண்டும் ஓடி வந்திருந்தனர்.

ஆனால் அவர்களிடம் உங்கள் பெண் இரண்டு நாட்களாய் கல்லூரிக்கு வரவில்லை என்ற தகவல் மட்டுமே அளிக்கப்பட்டது.

அவர்களோ படிக்காத ஏழை விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கவும், கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து கேள்வி கேட்கத் தெரியாமல் மகளைக் காணவில்லை என்று அழுது புலம்பியபடி நின்றிருந்தனர்.

இதெல்லாம் கல்லூரியின் அலுவலக அறையோடு நின்றுவிட, வகுப்பறையில் அமர்ந்திருந்த ராஜாவிற்கு சேதுபதியிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த விரிவுரையாளரே, “ராஜா, கெட் அவுட் ஃப்ரம் மை க்ளாஸ்” என்று பல்லைக் கடிக்க,

நிம்மதிப் பெருமூச்சுடன் வெளியேறிவனோடு கை கோர்க்க, அங்கே பூபதியும், சேதுபதியும் நின்றிருந்தனர்.

அழுதபடி சென்று கொண்டிருந்த ஸ்வாதியின் அப்பாவை தடுத்து நிறுத்தினான் பூபதி. “நீங்க ஸ்வாதியோட அப்பாவா”

சட்டென கண்ணில் ஒளி பிறந்தது அந்த தகப்பனின் கண்ணில், “ஆமா கண்ணு, உங்களுக்கு எம்மவள தெரியுமா”

“தெரியும் பா, ஆபீஸ் ரூம்ல என்ன சொன்னாங்க”

”பாப்பாவை ரெண்டு நாளா காணலையாம் பா, இங்கயே தங்கி படிக்கிறேன்பா, நான் படிச்சு நம்ம குடும்பத்து கஷ்டத்தையெல்லாம் சரிபண்ணிடுவேன், நீ கவலைப்படாம இருங்கப்பான்னு சொல்லீட்டு வந்த புள்ளை யா அது, இப்ப காணோம்னு அசால்ட்டா சொல்றாங்க, எங்க போய் தேடுவேன் என் தங்கத்தை” என்று கதறிவிட்டார் அவர்.

“அப்பா, கவலைப்படாதீங்க, நாம விசாரிக்கலாம் ஸ்வாதிக்கு ஒண்ணும் ஆகியிருக்காது, நாங்க சொல்ற மாதிரி ஹாஸ்டல்ல வந்து கேளுங்க”

புது தெம்பும் நம்பிக்கையும் வந்திருந்தது அந்த பெரியவருக்கு, கண்களையும் முகத்தையும் அழுந்தத் துடைத்தவர், அவர்களுடன் நடக்கத்துவங்கினார்.

விடுதியின் காப்பாளர் அறையின் முன்பு நின்றவரோடு, அவரின் மனைவி மட்டுமே இருந்தார்.

அங்கிருந்த காப்பாளரிடம், “நான் ஸ்வாதியோட அப்பா வந்திருக்கேன், ஸ்வாதி எங்க” என்றார்.

“எந்த ஸ்வாதி சார் இப்படி மொட்டையா கேட்டா எப்படி சொல்றது, இங்க ஆயிரக்கணக்கான பொண்ணுங்க இருக்காங்க, அதுல நூறு ஸ்வாதி இருக்காங்க ” மிக அலட்சியமாய் வந்தது பதில்.

“ரெண்டு நாளா காணாம போனதா சொல்றாங்களே அந்த ஸ்வாதி மா”

மெல்லிய அதிர்வு அந்த விடுதிக் காப்பாளரின் முகத்தில் ஒடி மறைந்தது.

ஓ அந்த ப்ர்ஸ்ட் இயர் பொண்ணா, அந்த பொண்ணு எங்க சார் நாங்களே உங்கள்ட கேக்கனும்னு இருந்தோம், காலேஜ் ஃபீஸ்  கட்டலையாம், ஆளையும் காணோம்”

“என்னம்மா இப்படி சொல்றீங்க என் பொண்ண இங்க தானே சேர்த்துட்டு போனேன் இப்படி பொறுப்பில்லாம பதில் சொல்றீங்க, இந்த ஹாஸ்டல்ல தான் என் பொண்ணு தங்கியிருந்தா, நீங்க அனுமதிக்காம அவ எப்படி வெளியில போக முடியும், அவுட் பாஸ் நீங்க குடுத்தீங்களா, அப்படீன்னா எப்ப குடுத்தீங்க, ரெண்டு நாளா காணோம்னா அதுக்கு நீங்க தான் பொறுப்பு, என் பொண்ணு வராம இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்”

“உங்க பொண்ணு எங்க ஓடிப் போனாளோ, என்ன சார் இங்க வந்து ப்ரச்சனை பண்ணுறீங்க”

“தொலைச்ச இடத்துல தானே தேட முடியும் வெளிச்சமாய் இருக்குங்குறதால வேற இடத்துலயா போய் தேட முடியும்”

”சார் இதெல்லாம் சரியில்லை நான் செக்யூரிட்டிய கூப்பிடுவேன்” என்று பதறத் துவங்கிய விடுதிகாப்பாளரை நோக்கி அங்கு வேலை செய்யும் பெண் ஓடி வந்தார்.

அவர் முகத்தில் கலவரம் மிக அதிகமாகவே இருந்தது. காதில் ஏதோ கிசுகிசுக்க, அந்த பதற்றம் விடுதிக்காப்பாளரையும் தொற்றிக் கொண்டது.

சொல்லாமல் கொள்ளாமல் நான்காவது மாடிக்கு ஓடினார் அந்த பெண்மணி.

அங்கே குளியலறைகள் வரிசையாக இருக்குமிடத்தில் கடைசி குளியலறையில் துப்பட்டாவை கழுத்தில் சுற்றி இறுக்கிய நிலையில் கண்கள் மேலே பார்க்க,சரிந்து அமர்ந்த நிலையில் இருந்தாள் ஸ்வாதி.

”இவ எப்படி டீ ரூம்ல இருந்து வெளியில வந்தா நான் தான் சாப்பாடு குடுத்து இன்னிக்கு முழுக்க பூட்டி வைன்னு சொன்னேன் ல”

அவசரமா பாத்ரூம் போகணும்னு சொன்னுச்சு மேடம், எல்லா பிள்ளைங்களும் காலேஜ்க்கு போய்ட்டாங்க யாரும் இல்லை அதுனால தான் திறந்து விட்டேன்.

”திறந்துவிட்டாலும், கவனிச்சுகிட்டே இருக்கவேண்டாமா, இப்ப எவ்வளவு பெரிய ரிஸ்க் தெரியுமா,”

சரி யாரையும் இங்க வரவிடாத பூட்டி வைச்சிடு, அவங்கப்பா வேற பொண்ணு வராம போகமாட்டேன்னு உக்காந்திருந்து உயிரை எடுக்குறார், அவருக்கு எப்படி நியூஸ் போச்சுன்னே தெரியலை, சிக்கல் மேல சிக்கல் இரு ப்ரின்ஸிக்கு போன் பண்ணீட்டு வரேன்.

வெளியே நடக்கும் பேச்சுக்களை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தபடி நின்றிருந்தாள் ஸ்வாதியின் வகுப்புத் தோழி வானதி, அவள் இன்று தாமதமாக ஊரிலிருந்து வந்ததால் கல்லூரிச் செல்லவில்லை, இந்த விசயம் தெரியாமல் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, அத்தனையும் கேட்டுவிட்ட அவளோ எப்படி வெளியே செல்வது எனப்புரியாமல் சிரமபட்டு தன் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

அங்கே நின்றிருந்த வேலை செய்யும் பெண்மணி, “பாப்பா நீ உள்ளேயா இருந்த”

“ஆமா ஆயா ஏன் கேக்குறீங்க”

“இல்லைம்மா சும்மா தான் சரி சரி காலேஜ்க்கு லேட்டாவுது சீக்கிரம் போ, போ”

“ஆமா ஆமா செகண்ட் அவர் முடியும் முன்ன போகணும், வார்டன் கிட்ட சொல்லீராத ஆயா, திட்டுவாங்க”

“சரி சரி நீயும் இங்க என்னையப் பார்த்ததை மறந்துடு சரியா”

தப்பித்தோம் என்று ஓடியவள் அடுத்த பத்தாவது நிமிடத்தில் கிளம்பி கல்லூரி நோக்கி ஓடினாள்.

விடுதி வாயிலில் அமர்ந்திருந்தவர் ஸ்வாதியின் அப்பா என்று தெரியாததால் அவள் நேரே கல்லூரிக்கு ஓடினாள்.

பிரின்ஸிபாலிடம் பேசிவிட்டு வந்த விடுதி காப்பாளப் பெண்மணி, நான் போய் அவங்க அப்பாவை அனுப்பிவிட்டுட்டு வரேன், அவங்க ஊருக்கு போய் சேர, மதியம் ஆயிடும், மத்தியானம் ஹாஸ்டலுக்கு சாப்பிட வர்ற பிள்ளைங்க பாத்துட்டு சொல்லும், நீ போய் வேலையை பாரு மதியம் வரைக்கும் இந்த பாத்ரூமை பூட்டி வை, 

அதற்குள் வகுப்பில் விசயத்தை சொல்ல ஓடிய வானதியை தடுத்து நிறுத்தினான் ராஜா.

“ஹேய் வானதி என்ன இப்படி ஓடி வர்ற என்னாச்சு”

“ரா… ரா… ராஜா….”மூச்சு வாங்கியது அவளுக்கு

ஹே ரிலாக்ஸ் ரிலாக்ஸ், என்னாச்சு”

“ஸ்வாதி ஸ்வாதி”

“ஸ்வாதி எங்க, அவளுக்கு என்னாச்சு, ஹாஸ்டலுக்கு வந்துட்டாளா”

“ஸ்வாதி இறந்துட்டா, என்றவளால் அதற்கு மேல் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

பயத்தில் அவளின் கை கால்கள் நடுங்கியது, முகமெல்லாம் வியர்த்து நின்றிருந்தவளை சமாதானப்படுத்துவதா காதில் கேட்ட விசயம் உண்மை தானா என்பதற்கும் மேல் மூவரும் ஒரு நொடி, ஸ்தம்பித்து போயினர், விசயம் இவ்வளவு விபரீதமாக இருக்கும் என்றோ, இவ்வளவு பெரிய முடிவு ஸ்வாதிக்கு ஏற்படும் என்றோ அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.

“ஹே ஹே இங்க பாரு வானதி பதட்டப்படாம என்ன நடந்துச்சுன்னு சொல்லு, மே பீ அது பொய்யாக்கூட இருக்கலாம் “

“பொய்யெலாம் இல்லை,” என்றவள் தான் காதால் கேட்ட விசயத்தை, அங்கு நடந்ததை முழுவதும் கூறி முடித்தாள்.

திரைப்படங்களில் பார்ப்பது போலிருந்து அவர்களுக்கு, ”இப்படியெல்லாம் உண்மையில நடக்குமா, ரெண்டு நாளா காணாம போன ஸ்வாதி திடீர்னு ஹாஸ்ட்டல்ல செத்து கிடக்குறாளா, என்னால நம்பவே முடியலை, நீ உண்மையத்தான் சொல்றியா” என்றான் ராஜா.

”டேய் இங்கயே கேட்டு ஒரு பிரயோஜனம் இல்லை, வா போகலாம்” என்றான் பூபதி.

“எங்க” என்ற சேதுபதியை முறைத்தான் ராஜா.

“டேய் முறைக்காத, நீ போய் இப்ப ஹாஸ்ட்டல்ல கேட்டா, எப்படி உனக்கு தெரியும்ன்னு கேப்பாங்க, வானதி பேர் வெளியில வரும்”

“நீயும் வானதியும் க்ளாசுக்கு போங்க எதுவும் சொல்லவேண்டாம், நான் ஸ்வாதி அப்பாவுக்கு போன் பண்ணி என்ன நடக்குதுன்னு கேக்குறேன்”

அவரின் எண்ணை அழைத்தால் அழைப்புகள் எடுக்கப்படாமலேயே இருந்தது.

விடுதியைக் கடந்து நடந்து போவது போல் சென்று நிலவரம் பார்த்தான் பூபதி, அங்கே அவர் இல்லை.

என்ன நடந்திருக்கும் என்று யுகிக்கவே முடியவில்லை அவர்களால்.

வானதி சொல்வது உண்மைதான் என்று முழுதாக நம்பவும் முடியவில்லை, அதே நேரம் காணமல் போன ஸ்வாதி பற்றி இது வரை ஒரு தகவலும் இல்லை.

விபரம் கேகரிக்க, விடுதிக்குச் சென்ற ஸ்வாதியின் தந்தை தாயையும் காணவில்லை, என்ன செய்வதென்று புரியாமல் நின்றிருந்தவர்கள் காதில் விழுந்த மணிச்சத்தம், மதிய இடைவேளைக்கு இன்னும், ஒரு வகுப்பு தான் இருக்கிறது என்று நினைவு படுத்த,

“டேய் பேசாம இப்ப எல்லாரும் க்ளாசுக்கு போவோம், லன்ச் ப்ரேக்ல சாப்பிட ஹாஸ்ட்டலுக்கு பிள்ளைங்க போவாங்க இல்லை, அவங்களை பார்த்திட்டு வரச்சொல்லுவோம்”

அது தான் எனக்கும் சரின்னு படுது, நாம போய் சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க, தேவையில்லாம வானதிக்கு பிரச்சனையாயிடும், சோ, இப்ப க்ளாசுக்கு போவோம்”

“இன்னும் அரைமணி நேரம் தானே வாங்கடா” என்று நால்வரும் வகுப்பறைக்குச் சென்றனர்.

முதலில் சென்ற வானதி தனக்கு உடம்பு முடியாததால் ஊரிலிருந்து தாமதமாக வந்ததாக கூறி அமர்ந்து கொள்ள,

அதற்கு பிறகு சென்ற ராஜா, “எக்ஸ்யூமீ மேம்” என்று கேட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தால், இவனை வெளியே போகச்சொன்ன அதே மேடம் நின்று கொண்டிருந்தார்.

“அப்போ வெளிய போனவன் இப்ப க்ளாசுக்கு வர்ற, படிக்கணும்னு அக்கறை இருந்தாத்தானே, எதுக்குதான் காலேஜிக்கு வருவியோ நீயெல்லாம்”

என்று தன் அர்ச்சனையைத் துவங்க, “படிக்கணும்னு ஆர்வமா க்ளாசுல உக்காந்திருந்தவனை நீங்க தான் வெளிய அனுப்புனீங்க, இப்பயும் படிக்கலாம்னு வந்தா நிக்க வைச்சு கேள்வி கேக்குறீங்க, படிக்குறது அவ்வளவு கஷ்டமா மேம்” என்று அப்பாவியாய் கேட்க வகுப்பில் அனைவரும் சிரித்துவிட்டிருந்தனர்.

அதுவரை வானதியின் மேல் படிந்திருந்தவர்களின் பார்வை கூட மாறியிருந்தது.

ராஜாவின் தோரணையும் பேச்சையும் கேட்ட அந்த விரிவுரையாளருக்கும் கூட சிரிப்பு வந்தாலும் , அதை மறைத்துக் கொண்டு சற்றே முறைப்பாய், ”போ போய் உக்காரு” என்றார்.

அவன் வகுப்பில் சென்று அமர்ந்த அடுத்த பத்தாவது நிமிடத்தில் உணவு இடைவேளைக்கான மணி அடித்தது.

வானதி தான் சாப்பிட்டுவிட்டதாக மற்ற மாணவிகளிடம் கூறிவிட்டு பெஞ்சின் மீது படுத்துக் கொண்டாள், விடுதிக்கு போகலாம் என்று அழைத்த மாணவிகளிடமும் வரவில்லை என்று கூறிவிட்டாள்.

அந்த ஒருமணி நேரம் எப்படி கடக்க போகிறது என்ன செய்தி வரப்போகிறது என்று கூர்ந்து கவனித்தபடி இருந்தனர் ராஜா சேதுபதி பூபதி மூவரும்,

ஆனால் எதிர்பார்த்தபடி எந்த தகவலும் வரவில்லை.

வானதி ஒருவேளை எதாவது கனவு கண்டிருப்பாளோ என்று கூடத் தோன்றத்துவங்கியது.

அன்று வெள்ளிக்கிழமை, அடுத்த வாரத்திலிருந்து தேர்வுக்கு முந்தைய ஸ்டடி ஹாலிடேஸ் விடுமுறை விடுவதால் சனிக்கிழமை கல்லூரி வைப்பதாக இருந்தது.

ஆனால் மதிய இடைவேளை முடிந்து வந்த முதல் வகுப்பில் வந்த சுற்றறிக்கையில் நாளை முதல் கல்லூரி விடுமுறை என்றும் இன்று மூன்று மணியோடு கல்லூரி வகுப்பில் முடிவடைவதாகவும், ஹாஸ்டல் மாணவர்கள் அனைவரும் வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என்று அறிவிப்பு வந்தது.

அதுவரையில் இந்த விசயம் பொய்யாக இருக்கக்கூடும் என்று நம்பியிருந்த ராஜாவிற்கு சற்றே சந்தேகம் வலுக்கத்துவங்கியது.

இன்று கல்லூரியை விட்டுக் கிளம்பினால், முழுதாய் பதினைந்து தினங்கள் கழித்து தான் வர முடியும் அதுவும் நேரே பல்கலைக்கழகத்தேர்வுத் தான், என்ன செய்வது என்று புரியாமல் குழம்பினர் மூவரும்.

இதை யாரிடமும் சொல்லவும் முடியவில்லை.

இந்த சிந்தனைகளில் அமர்ந்திருந்த ராஜாவிற்கு மதிய வகுப்பிலும், “ராஜா எந்த உலகத்தில இருக்க, க்ளாசில உக்கார இஷ்டமில்லைன்னா எதுக்கு காலேஜிக்கு வர்ற, கெட் லாஸ்ட்” என்று தானாய் வெளியே செல்ல அனுமதி கிடைக்க,

மைவிழியும் ஹாஸ்ட்டல் தானே அவளிடம் சொல்லி விசாரிக்கலாமா என்று யோசித்தவன் வெளியே சென்று அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.

அவளோ மறதியாய் தன் கைப்பேசியை விடுதி அறையிலேயே வைத்துவிட்டு வந்திருக்க, இவனின் குறுஞ்செய்திகள் திறக்கப்படாமல் கிடந்தது.

இவ்வளவு அவசரம் என்று கூறியும் கூட பதில் அளிக்காமல் இருக்கிறாளே என்று ஆத்திரமாய் வந்தது அவனுக்கு.

எப்போதுமே இவன் அனுப்பும் குறுஞ்செய்திகளை பார்ப்பாளே தவிர ஒருநாளும் அவள் பதில் அனுப்பியது கிடையாது.

ஒரு கட்டம் வரை அவன் அனுப்பும் குறுஞ்செய்திகளுக்காய் அவனைத் திட்டியவள், அதன்பிறகு அதற்கான பிரதிபலிப்பாய் கோபத்தைக் கூட அவனிடம் காட்டாமல் நிறுத்திக் கொண்டாள்.

ஆனால் இப்படி சூழ்நிலையில் கூட அவள் இப்படி இருப்பாளா என்று கோபம் வந்தது ராஜாவிற்கு.

சேதுபதிக்கு அழைத்தான் அவனின் அழைப்பும் எடுக்கப்படவில்லை.

பூபதிக்கு அழைக்க அதுவும் அதே நிலை. இன்னும் ஒரு மணி நேரத்தில், அதிகபட்சம் இரண்டு மணிநேரத்தில் அனைவரும் கிளம்பிவிடுவார்கள், கல்லூரியே காலி ஆகிவிடும், யாரும் அழைப்பை எடுக்கவில்லை. வெளியேவும் வரவில்லை.

ராஜாவிற்கு சட்டென வானதியின் நினைவு வந்தது, வானதிக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.

பதில் இல்லை,

நினைத்தது போலவே அடுத்த இரண்டு மணி நேரத்தில் கல்லூரி காலியாகியிருந்தது.   

 

Advertisement