Advertisement

முகூர்த்தம் 16

 

கழிமுகம் தேடும்

நதியல்ல

புதிதாய் பிறந்த

ஊற்றாய் காதல்

 

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேந்திரனின் நிலையில் எந்த மாற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. கொடுக்கப்படும் சிகிச்சைகளையும் மருந்துகளையும் அவரது உடல் ஏற்றுக் கொள்ள மறுத்தது. காரணம் புரியாமல் மருத்துவர்கள் யோசனையில் ஆழ்ந்திருந்தனர்.

இன்னொரு பக்கம் சிகிச்சையில் இருந்த ராஜாவைக் காணவில்லை என்ற பதற்றம் மருத்துவமனை முழுவதும் பரவி இருந்தது. அந்த மருத்துவமனையின் நிர்வாகி ஸ்ரீராம் பார்த்தசாரதிக்கு அடுத்து அடுத்து அழைப்புகளும் அழுத்தங்களும் வந்தபடி இருந்தது.

நந்தகோபனின் உண்மையான முகத்தை இன்று தான் மகாலட்சுமி பார்க்க நேரிட்டது. அத்தனை கோபம் அத்தனை உக்கிரம், எப்போதும் சாதுவாக இருக்கும் அவரிடமிருந்து அந்த மருத்துவமனையே அதிரும் படியான சப்தம் வந்து கொண்டிருந்தது.

“என்ன சார் இவ்வளவு கேர்லெஸ்ஸா பதில் சொல்றீங்க, எம் பையனை இங்க தானே அட்மிட் பண்ணியிருந்தோம், ட்ரீட்மெண்ட் ல இருந்த பையனை திடீர்ன்னு காணோம்னா, என்ன சார் அர்த்தம், எப்படி சார்….? இவ்வளவு கவனமில்லாமதான் பார்த்துக்குவீங்களா” சிகிச்சை கொடுத்த மருத்துவர், அந்த நேரத்தில் இருந்த செவிலி, மருத்துவமனையின் மேலாளர் என அனைவரும் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் அவர் கட்டுப்படுவதாய் இல்லை.

“சார் சார் கொஞ்சம் பொறுமையாய் இருங்க சார் பேசிக்கலாம், இப்படி பப்ளிக்ல நின்னு சத்தம் போட்டா எங்க ஹாஸ்பிட்டல் பேரு கெட்டுப் போயிடும் சார்” மானேஜர் எவ்வளவு சொல்லியும் நந்த கோபன் கேட்பதாய் இல்லை.

“காணாமப் போனது எம்பையன் சார் க்ளுக்கோஸ் பாட்டிலைக் காணோம்ங்குற மாதிரி இவ்வளவு அசால்ட்டா பேசுறீங்க”

“சார் ஹாஸ்பிட்டல் முழுக்க சர்வைலன்ஸ் கேமரா வச்சிருக்கோம், சோ எதுவும் மிஸ் ஆகாது, வாங்க அதுல பாக்கலாம் அதை விட்டுட்டு சத்தம் போட்டா எல்லாம் நடந்திடுமா, வாங்க சார் படிச்சவங்க தானே நீங்க” என்றபடி புதிதாய் வந்து நின்ற இளைஞனிடம் பதிலுக்கு பதில் வேகமாய் பேசாமல் அதை ஆமோதிக்கும் வகையில் அமைதியானார் நந்தகோபன்.

அவன் முன்னால் செல்ல, மகனை கண்டுபிடித்துவிடும் முனைப்பில் அவர் நடையும் வேகமாகவே இருந்தது. இருவரும் அந்த மருத்துவமனையின் கட்டுப்பாட்டு அறையில் இருந்தனர்.

தனக்கு முன் சென்று கொண்டிருந்தவனின் நடையில் தெரிந்த துரிதமும் அவனைக் கண்டதும் அங்கிருந்தவர்களின் முக மாற்றம் என அனைத்தையும் கவனித்தவருக்கு யாரேனும் முக்கியமானவராக இருக்கக்கூடும் என்ற எண்ணம் வந்தது.

எப்படியோ நம் மகன் கிடைத்தால் போதுமென, சென்று கொண்டிருந்தார். அங்கிருந்த பணியாளரிடம் நேற்றிரவு முதல் ராஜாவை வைத்திருந்த அறை இருந்த இடத்தை சுற்றியிருந்த அனைத்து கேமராக்களின் பதிவான காட்சிகளையும் ஓடவிடச் சொல்லிப் பார்க்கத்துவங்கினான் ஸ்ரீ ராம்.

நடுஇரவு ஒருமணிக்கு மேல் ஒரு நொடி கேமரா ஒரு நொடி இருட்டாகி மீண்டும் எப்போதும் போல் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அடுத்த வந்த திரையில் நேரம் காலை 6 மணி எனக் காட்டியது.

இதை கவனித்த ஸ்ரீராம், “எப்டி மேன் , நடுவுல இவ்ளோ நேரம் கேமரா ஆஃப் ஆகியிருக்கு, ஹவ் இட் இஸ் பாஸிபில், இதை கவனிக்காம என்ன செஞ்ச”

திருதிருவென விழித்த அந்த கண்ட்ரோல் ரூம் அதிகாரிக்கு வியர்த்துவிட்டிருந்தது. அதன் பிறகு இயங்கிய கேமிராவில் எந்த வித்தியாசமான நகர்வும் நிகழவில்லை.

அடுத்த கேள்வி கேட்கும் முன், “சார் நான் ஏழுமணி பேட்ச் சார், நைட் டுயூட்டி பார்த்த முரளி தான் சார் இந்த பிரச்சனைக்குப் பதில் சொல்ல முடியும், எனக்கு ஒண்ணும் தெரியாது சார்”

“அடச்சீ இதை சொல்ல வெக்கமா இல்லை” என்ற ஸ்ரீராமின் மூளை வேகமாய் செயல்படத் துவங்கியது. அவனுள் நிகழ்ந்த கலந்துரையாடலில் எதோ புரிபடவும்,

“சார் கொஞ்ச்ம வெய்ட் பண்ணுங்க, அதுக்கு முன்னாடி உங்க சன் பத்தின எல்லா டிடெய்ட்ல்ஸ்ம் எனக்கு கொடுங்க, கூடிய சீக்கிரம் உங்களுக்கு நல்ல செய்தி சொல்றேன்” என்றான்.

இருட்டில் தொலைத்துவிட்ட பொருளைத் தேட எங்கிருந்தோ வந்த சிறு வெளிச்சமாய் தெரிந்தான் ஸ்ரீராம். அவனிடம் தன் மகனைப் பற்றிய அனைத்து விபரங்களையும் கொடுத்துவிட்டு எப்படியும் மகன் கிடைத்திடுவான் என்று நம்பிக்கையில் வெளியில் வந்தார்.

அங்கே அழுது அழுது ஓய்ந்த நிலையில் சீதா அமர்ந்திருக்க, தன்னை தேற்ற ஆள் தேடும் மகாலட்சுமி சீதாவுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்.

அதே நேரம் தன் அறையில் தனக்கு வந்த அலைபேசி அழைப்பை சேமித்ததிலிருந்து எடுத்து மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.

அந்த குரல் சொன்னது இதைத் தான், “ பாங்க் மேனேஜர் ராஜா உங்க ஹாஸ்பிட்டல்ல, அட்மிட் ஆகியிருக்கான், அவன் வீட்டுக்கு உயிரோட போகக்கூடாது, நீ அதுக்கு பெருசா ஒண்ணும் செய்ய வேண்டாம், நாங்களா செய்றதை கெடுக்காம இருந்தா போதும், இப்ப தான் ஹாஸ்பிட்டல்க்கு சார்ஜ் எடுத்திருக்கேன்னு கேள்விப்பட்டேன், உன்னோட புலனாய்வு புத்தியெல்ல்லாம் ஓரம் கட்டிவிட்டு, இந்த விசயத்தை கண்டுக்காம விட்டிடு, அது தான் உனக்கும், உன் ஹாஸ்பிட்டலுக்கும் நல்லது”

ஸ்ரீராமின் பதிலை எதிர்பார்க்காத அந்தக் குரல் தானாக நின்றும் போனது. இதைக்கேட்டவன் ராஜாவின் தந்தை சொன்ன விவரத்தையும் பொருத்திப்பார்க்கத் துவங்கினான்.

அவனின் அனுமானங்கள் எந்த அளவிற்கு உண்மையாக இருக்கப்போகிறது, ஸ்ரீராம் அந்த மிரட்டல் கும்பலின் பேச்சைக் கேட்பானா, இல்லை தன் மருத்துவமனையின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக நேர்மையாக செயல்படப் போகிறானா என்பதைப் பார்க்கும் முன் யார் இந்த ஸ்ரீராம்…?

ஸ்ரீராம் பார்த்தசாரதி, மருத்துவத்துறையில் மிகவும் விருப்பம் உள்ளவன், தன் அன்னையின் வற்புறுத்தலால் ஐ,பிஎஸ் முடித்துவிட்டு, சிபிஐயில் சேர்ந்து பணிபுரிந்து கொண்டிருந்த இளைஞன்.

திடீரென்று பாதிக்கப்பட்டுவிட்ட தன் தந்தையின் உடல்நிலை தேறும் வரை மருத்துவமனையின் பொறுப்புகளை கவனிக்க வந்தவன், ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் தவறிவிட, மருத்துவமனையை விற்றுவிடலாம் எனக்கூறிய அன்னையை சமாதானப்படுத்தி தற்சமயம் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு மருத்துவமனையை நடத்த வந்திருக்கிறான்.

தனக்கான விசயங்களை சாதூர்யமாய் முடித்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவன், தன்னை வளர்த்துக் கொள்ள மேம்படுத்திக் கொள்ள எந்த தயக்கமும் காட்டாதவன்.

எல்லாவற்றிலும் தனக்கென ஒரு தனிபாணி கொண்டும் இயங்குபவன். இன்று அவனது கனவான மருத்துவமனை மிகப்பெரிய ஒரு சிக்கலில் இருக்கின்றது.

காணாமல் போன ராஜா, அதனால் வெளியில் பாழாகிக் கொண்டிருக்கும் மருத்துவமனையின் பெயர், இதில் எதைக் காப்பாற்றுவது எப்படி காப்பாற்றுவது என சிந்தித்தபடியே தன் அறையின் கண்ணாடி சாளரம் வழியே பார்த்துக் கொண்டிருக்க,

மருத்துவமனையை நோக்கி மூவர் அமர்ந்திருக்கும் இருசக்கர வாகனம் ஒன்று மிக வேகமாய் வந்தது, வாசலில் வந்து நின்ற வேகத்தில் அதிலிருந்த மலர் இறங்க, மைவிழி இறங்காமல் ராஜாவின் முதுகில் சாய்ந்திருந்தாள்.

எழுப்பியும் எழாத அவளை உலுக்கிப் பார்த்த போது அவள் மயக்கத்தில் இருப்பது தெரிந்து அங்கிருந்த மருத்துவமனையின் உதவியாளர்களின் உதவியோடு அவளை உள்ளே அழைத்துச் சென்றனர் ராஜாவும் மலரும்.

அங்கே மருத்துவமனையே பதற்றத்தில் இருப்பதை அப்போது தான் கவனித்தான். தன் தலையில் தலைக்கவசம் கழற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொண்டான்.

மைவிழிக்கு பரிசோதனை ஆரம்பமாகியது. ஒரு நாள் முழுக்க உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தது, அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் செய்திகளென அவளின் மயக்கத்திற்கு ஆதாரமான காரணங்கள் கிட்டிவிட, மலரிடம் மட்டும் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து வெளியேற எத்தனித்தான்.

யாரும் தன்னை கவனிக்கவில்லை என்று நினைத்தபடி வெளியேற சென்றவனை, அவன் எதிர்பாராதவேளையில் தோளில் கைப்போட்டு அறைக்குள் இழுத்தது ஒரு கரம்.

திமிறி வெளியேறும் முன் அறைக்கதவு பூட்டப்பட்டது. ராஜாவின் எதிரில் ஸ்ரீராம் நின்றிருந்தான்.

“ஹே யார் நீ என்னை எதுக்கு இப்ப உள்ள இழுத்த, வெளிய போகணும் கதவைத் திற” ராஜா வெளியேற முயன்றான்.

“நடந்து போய்கிட்டு இருந்தவனை இழுத்து உள்ள போடுறேன்னா, எதோ விசயம் இருக்குன்னு புரியவேணாமா மிஸ்டர் ராஜா.” நிதானமாகவே பேசினான் ஸ்ரீராம்.

“யார் நீ என்னை எதுக்கு இப்போ இழுத்து வைச்சிருக்க”

“நீ என் அத்தை பொண்ணு பாரு, திருவிழாவுல நடந்து போய்கிட்டு இருந்த உன்னை கைபுடிச்சு இழுக்குறாங்க”

“ஏ……”

“அதெப்படி, ஒரே நாள்ல என் ஹாஸ்பிட்டல் பேரும் கெட்டு, உன்னைய தொலைச்சிட்டோம்னு கேஸ் வேற ஏத்துக்க சொல்றியா, நீ ஹெல்மெட் போட்டிருந்தா, யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சு எஸ்கேப் ஆகப்பாக்குற, இதையெல்லாம் பார்த்துகிட்டு என்னால சும்மா உக்காந்திருக்க முடியாது மேன், பிகாஸ் இது என்னோட ஹாஸ்பிட்டல்” என்று பேசிக் கொண்டே ராஜாவை வலம் வரத் துவங்கினான்.

“உன்னோட ஹாஸ்பிட்டலா, இருந்துட்டு போகட்டும், அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்” ராஜாவின் அசால்டான பதிலில் அவன் முதுகிற்கு பின் நின்று கொண்டான் ஸ்ரீராம்.

“உன்னால இதுக்கு மேல எதுவும் பண்ண முடியாம என்னால செய்ய முடியும்” என்று தன் கையில் இருந்த ஊசியை எதிர்பாராத நேரம் ராஜாவின் கையில் குத்தி மருந்தை செலுத்திவிட்டான்.

வலியில் ஓங்கி அடித்து கையை உதறிய ராஜாவால் அதன் பின் தொடர்ந்து நிற்க முடியவில்லை, கால்கள் வலுவின்றி போனது, யாரோ பிடித்து தள்ளுவது போல் கீழ விழுந்த ராஜா அதன் பின் எழவில்லை.

கைதட்டி “பாய்ஸ்” என்று ஸ்ரீராம் அழைத்ததும் அங்கு வந்த மருத்துவமனையின் ஊழியர்கள், ராஜாவின் தலையில் இருந்த தலைக்கவசத்தை கழற்றிவிட்டு, அவனை தூக்கிச் சென்றனர்.

மயக்கத்திலிருந்த மைவிழி இரத்தத்தில் கலந்து கொண்டிருந்த குளுக்கோஸின் விளைவால் மெல்ல மெல்ல தெம்பு வந்தவளாய், கை கால்களை அசைக்கத்துவங்கினாள்.

அதன் தொடர்ச்சியாய் திறந்த அவள் விழிகளில், கண்ணீரோடு நின்றிருந்தார் சீதா. “தாயைக் கண்ட கன்றாய் “அம்மா” என்று அழைத்தபடி எழப்போனவளைத் தடுத்து படுக்க வைத்த சீதா அவள் வாகாய் படுத்ததும், ஓங்கி கன்னத்தில் ஒரு அறைவிட்டார்.

அரண்டுபோய் விழித்தது மைவிழி மட்டுமல்ல மலர்விழியும் தான். மகளைக் காணவில்லை என்று அழுது புலம்பிய அரற்றல், பிள்ளைப்பாசம் எல்லாம் அவர் விட்ட ஒற்றை அறையில் ஊர்ஜிதமாகிப் போனது.

மைவிழிக்கு தான் செய்த தவறு புரிந்தது, எத்துணை பக்குவபட்ட மனமாயினும் முடிவுகள் மாற ஒற்றை நொடி போதுமே. அந்த நொடியின் கடினத்தை எண்ணிப்பார்க்கக்கூட மனம் ஒப்பவில்லை

”என்னை மன்னிச்சிடுங்க மா. கொஞ்சமும் யோசிக்காம் நான் செய்த முட்டாள்தனத்தால எவ்வளவு பிரச்சனைகள்…  இனி இப்படி ஒரு தப்பு கண்டிப்பா நடக்காது மா, இது எனக்கொரு பாடம், வாழ்க்கையில முதல் முறையா தப்பான முடிவெடுத்துட்டேன்”

“நீ அடுத்த முறை இப்படி முடிவெடுத்தா அதைப் பாக்க நாங்க இருந்தாத்தானே”

“ம்ம்ம்ம்ம்மா,,,,,,

என்னடி அம்மா, இங்க நடந்துதுன்னு தெரியுமா, என்னமோ உனக்கு மட்டும் தான் வலியோட வாழ்க்கை வந்த மாதிரி தப்பிச்சு ஓடுற, உன்னால மாப்பிள்ளைத் தம்பியை காணோம், உன்னைத் தேடி அலைஞ்ச அப்பா, இப்போ பேச்சு மூச்சில்லாம, பிழைப்பாரான்னு தெரியாம, ஐசியூவில கிடக்குறாரு,இதுக்கு மேல என்ன நடக்கணும்”

“ம்மா அப்பாக்கு என்னாச்சு, நான் அப்பாவை பாக்கணும், அவ….”

அடுத்த வார்த்தையை அவள் கூறும் முன் தடுத்த மலர்விழி, “அப்பாவை பாக்க போகலாம்” என்றாள்.

தடுத்தலையோ, மைவிழி சொல்ல வரும் விசயத்தையோ கவனிக்கும் மனநிலையில் சீதா இல்லாததால், ”அவரையும் நீ தான் கொண்டு வந்து சேர்த்த, இப்போ என் மகளையும் நீதான் கொண்டு வந்து சேர்த்திருக்க, யார் பெத்த பிள்ளையோ, நீ நல்லாருக்கணும் மா” என்றுவிட்டு அவர் வெளியே செல்ல கதவைத் திறக்க, அங்கே நின்றிருந்த மகாலட்சுமி,

“என் மருமகள் எப்படி இருக்கா அண்ணி, நல்லாருக்காளா”  என்று கண்ணில் ஆர்வத்தோடு நின்றிருந்தார்.

அந்த நேரம் செவிலி வந்து “ராஜேந்திரன் பேஸண்ட் அட்டண்டர் யாரும்மா, அவர் கண்ணு முழிச்சிட்டார், இனி பயப்பட ஒண்ணுமில்லை, பாக்குறவங்க போய் பாக்கலாம்” என்றார்.

செய்தி கேட்ட சந்தோசத்தில் சீதா வேகமாக கணவனைப் பார்க்க செல்ல, மகாலட்சுமியும் சீதா பின்னே நடந்தார்.

அவருக்கு மருமகள் வந்துவிட்டாள் என்றதுமே, மகன் கிடைத்துவிடுவான் என்றொரு நம்பிக்கை.

கையில் இருந்த ஊசியை பிடுங்கிய மைவிழி, வழிந்த இரத்தத்தை இன்னொரு கையால் பிடித்துக் கொண்டே படுக்கையை விட்டு இறங்கி தந்தையைப் பார்க்க ஓடினாள்.

Advertisement