Advertisement

முகூர்த்தம் 15

காதலின் ஆழமதை கண்களில்

கண்டுகொள்ள

தேடலின் நீளமது தெளியாத

வானமானதேனோ

 

காதில் விழுந்த ஒவ்வொரு வார்த்தைக்கும் மைவிழியின் கண்கள் உதிரத்தை கசியவிட்டுக் கொண்டிருந்தது. பட்டாம்பூச்சியின் இறகுகள் அசைந்ததில் சுனாமி வந்த கயாஸ் தியரியை அவள் வாழ்வில் பிரதியிட்டது யாரோ.

தான் வைத்த சில அடிகளில் தன் உலகம் பெரிய சுழலில் சிக்கும் என அவள் எதிர்பார்க்கவில்லை.

பேசும் நிலையில் மட்டுமல்ல அசையக்கூட முடியாமல் சிலையென நின்றிருந்தாள். மைவிழியை இத்தனை பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கிய உரையாடல் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது ராஜாவிற்கும் மலர்விழிக்கும் இடையில்,

”உன்னை பிக் அப் பண்ண வரணும்னு தான் இந்த பூபதி சொல்லிகிட்டு இருந்தான், ஆனா நீ என்னடான்னா ஹாஸ்பிட்டல்ல இருந்த அங்க எப்படி நீ” ராஜா மலரிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

“அதை ஏன் கேக்குற, நான் எர்லி மார்னிங் அஞ்சு மணிக்கெலாம் வந்திடுவேன், வந்து கூட்டீட்டு போயிடுடான்னு இவன்கிட்ட சொல்லி வச்சிருந்தேன். வரே வரேன்னு சொல்லீட்டு போனை கூட எடுக்கலை” மலர் பூபதியை எண்ணி எரிச்சலடைந்தாள்.

“ஹா ஹா டீல்ல விட்டுட்டானா” ராஜா தன் சிரிப்பை மறைத்துக் கொண்டு கேட்க,

“அந்நேரத்தில இந்த சிட்டில நான் எப்படி அட்ரெஸ் கண்டுபிடிச்சு வரதுன்னு தெரியாம, அங்க இருக்கவங்ககிட்ட கேக்கவும் தயக்கமா இருந்துச்சா, டக்குன்னு உன் ஞாபகம் வந்து உனக்கு கால் பண்ணுனேன்”  என்றாள் ஏமாற்றத்தின் சாயல் மறையாமல்,

“எனக்கு கால் பண்ணவ அங்கயே நிக்காம நேரா ஹாஸ்பிட்டலுக்கே வந்துட்டியே எப்படி” ராஜா தன் சந்தேகத்தை கேட்க,

“அதுவா நீ வருவைன்னு வெயிட் பண்ணீட்டு இருந்தேனா, அப்போவே நல்லா விடிஞ்சிடுச்சு, சரி ஒரு காபி குடிக்கலாம்னு போனா, அந்த காபிஷாப்ல ஒரு பெரியவர் வந்து நான் தான் அவர் பொண்ணுனு நெனச்சு, வீட்டுக்கு கூப்பிட ஆரம்பிச்சுட்டார்”

“அய்யய்யோ இந்த சிட்டியில அப்படியெல்லாம் பேசி ஏமாத்துறவங்க நெறைய பேர் இருக்காங்க மலர், கேர்ஃபுல்லா இருக்கணும் , நீ என்ன சொன்ன”

“அவரைப் பார்த்தா ஏமாத்த வந்தவர் மாதிரி இல்லை ராஜா, பாவம் அவர் பொண்ணு வீட்டை விட்டு போயிட்டா போல, கல்யாணம் வேற ஏற்பாடு பண்ணீட்டார் போல, பாவம் மனுசன் கண்ணுல அவ்வளவு வலி, என்னைய அவர் பொண்ணுன்னு நெனச்சு அப்படி பேசுறார், எங்கப்பா உயிரோட இருந்திருந்தாக் கூட என்கிட்ட அவ்வளவு பிரியமா பாசமா இருந்திருப்பாரா தெரியலை”

“சோ மேடம் நல்ல ஏமாந்துட்டீங்க, எவ்வளவு பணம் குடுத்த”

“டேய் லூசு, அவர் பணம் கேக்கலை, என்னைய வீட்டுக்கு வாமா, மாப்பிள்ளைக் கண்ணு முழிச்சா உன்னைய கேப்பாருன்னு கூப்பிட்டுக்கிட்டே இருந்தாரு”

“ஓ….”

“அவரோட பாசத்துக்கு அப்போ கண்ணு தெரியலை, என்ன சொல்லி புரியவைக்குறதுன்னு யோசிச்சுகிட்டு இருக்கும் போதே, மனுசன் நெஞ்சைப் பிடிச்சிகிட்டு கீழ விழுந்துட்டார்”

“அய்யய்யோ என்னாச்சு அவருக்கு”

“பல்ஸ் செக் பண்ணுனா ரொம்ப லோ, சோ உடனே ஆட்டோ பிடிச்சு பக்கத்தில இருக்க ஹாஸ்பிட்டல்ல கொண்டு போய் சேர்த்தேன், ஐசியூக்கு கொண்டு போனாங்க, அங்க டாக்டர்கிட்ட என்னாச்சுன்னு கேட்டுட்டு வரலாம்னு பார்த்தா நீ அதுக்குள்ள கால் பண்ணுன,

எங்க இருக்கன்னு கேட்ட ஆஸ்பிட்டல் நேம் சொன்னதும் வாசல்ல வந்து நிக்குற அப்போ ஒண்ணும் உன்கிட்ட சொல்ல முடியலை, நானும் உன் கூட கிளம்பி வந்துட்டேன்”

“அப்போவே என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல, என்ன ஏதுன்னு பார்த்திட்டு வந்திருக்கலாம், “

“பாவம் அந்த பெரியவர், என்ன ஆச்சோ” என்று மலர்விழி சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

”அப்பா……………………………”என்ற வீறிடலுடன் சரிந்து அழத்துவங்கினாள்.

மலர் சொல்வது மைவிழியின் தந்தையாக இருக்கும் என நொடியும் சிந்தித்துப் பார்க்காத ராஜாவுக்கு இவளின் அழுகைக்கு காரணம் புரியவில்லை.

மைவிழியின் ஒரு புறம் அவளைத் தாங்கியிருந்த ராஜா அப்போதுதான் அவர்கள் இருவரையும் மிக அருகில் பார்த்தான்.

சற்றே ஒத்துப்போன அவர்களின் முகஜாடையும், சிறிய ஒப்பனையில் ஒருவரை இன்னொருவராகவே மாற்றிடுமளவு உருவ ஒற்றுமையும் இருப்பதைக் கவனித்தவனுக்கு அடுத்த நிமிடம் அனைத்தும் தெளிவாகப் புரிந்தது.

“மாமாவுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது நீ தைரியமா இரு செல்வி” என்றுவிட்டு அங்கிருந்த ராயல் என்ஃபீல்டை உசுப்பினான்.

அடுத்த சில நிமிடங்களில், ராஜாவின் முதுகில் சாய்ந்தபடி மைவிழியும் அவளை பிடித்தபடி அவளுக்கு பின்னால் மலர்விழியும் என மூவரும் அந்த ஆஸ்பிட்டல் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

நடந்தவற்றை செல்லும் வழியில் மலர், பூபதிக்கும் சேதுபதிக்கும் குரல் செய்தி அனுப்பினாள்.

மைவிழியின் கண்ணீர் வெம்மை ராஜாவின் முதுகில் இறங்கத் துவங்கியது.

நான் நேசித்த ஒருத்தியின் சந்தோஷத்திற்கு காரணமாய் இருக்கவேண்டியவன், அவள் கண்ணீருக்கு காரணமானதை எண்ணி தனக்குள் நொந்து கொண்டான்.

அத்தனையும் தன்னால் வந்தது, என எண்ணத்துவங்க, அவன் கண்முன்னால் பலத்த சிரிப்போடு வேந்தன் வந்து நின்றான்.

”வேந்தன் வேந்தன் அத்தணைக்கு காரணம் இவனே. பூந்தோட்டமாய் இருக்க வேண்டிய எங்கள் வாழ்வை இப்படி ஒரு போர்களமாக்கியவன் அவனே. அவன் கண்களில் அவர்களின் பசுமையான பக்கங்கள் புரட்டப்பட்டன…

சேதுபதி, பூபதிபாண்டியன், மைத்ரேய ராஜா மூவர் கூட்டணி கல்லூரியின் பாடவேளைகள் தவிர எப்போதும் ஒன்றாகத் தான் இருக்கும்,

விடுதி அறையில் உலகப் பிரச்ச்னைகளை ஆராய்வது துவங்கி, கேண்டீன் போண்டாவில் உப்பு சரியாக இருக்கிறதா, என்பது வரை அனைத்து பிரச்சனைகளும் இவர்களின் அலசலுக்காக காத்திருக்கும்.

அப்படி இருக்கையில் கல்லூரியில் நடப்பவை மட்டும் தப்பிக்குமா என்ன…?
மடிக்கணினிக்கென கல்லூரியில் செலுத்தப்பட்ட தொகைக்கும் வழங்கப்பட்ட மடிக்கணினிக்கும் சற்றும் சம்பந்தம் இல்லை எனக்கூறி முதலில் போராட்டத்தில் இறங்கியவர்களும் இவர்களே,…  

இரண்டாமாண்டின் துவக்கத்திலேயே இதற்காக பதினைந்து நாட்கள் இடைநீக்கம் முடிந்து அன்று தான் முதல் நாள்.

“டே மச்சி, யார் என்ன சொல்லி சீண்டுனாலும் கொஞ்சம் பொறுமையா இருங்கடா, அவசரப் பட வேண்டாம், இப்ப தான் ஒரு பிரச்சனை முடிஞ்சிருக்கு” சேதுபதி படித்து படித்து சொல்லித்தான் அனுப்பினான்.

வகுப்பறையில் அமர்ந்திருக்கையில் இதை எண்ணிதான் ராஜாவும் பூபதியும் அமர்ந்திருந்தனர்.

ஆனாலும் முதல் ஒருமணிதான் முடிந்தது, சேதுபதியின் நோக்கியா குறுஞ்செய்தி வந்ததை உணர்த்த அமைதியாய் உறுமியது.

“மச்சி கேண்டீன் வா”

என செய்தி வந்திருக்க, ”ம்ம்ம்….ஆரம்பிச்சுட்டானுங்க” என்றபடியே அடுத்த லெக்சரர் வருவதற்குள் மாயமானான் சேதுபதியும்.

”அண்ணே மூணு போண்டா, ரெண்டு பாதாம்பால், ஒரு காபி” என எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வந்த பூபதியை முறைத்தான் சேதுபதி.

“உனக்கு காபி தான் டா கேட்ட அதான் வாங்குனேன், அதுக்கு ஏன் இப்படி முறைக்கிற, வேணும்னா இந்தா பாதாம் பால் குடிச்சிக்கோ” பூபதி பெரிய மனதாய் கூற

“அடச்சீ, உங்களால ஒருமணிநேரம் கூட முழுசா க்ளாஸ்ல உக்காந்திருக்க முடியாதா டா” அங்கலாய்த்தான் சேதுபதி.

“உன்னால முடிஞ்சுதா, நீயும் இப்ப கேண்டீன் ல தானே இருக்க, என்னமோ சின்சியரா நோட்ஸ் எடுத்துக்கிட்டு இருந்த பையனை நாங்க என்னமோ வேணும்னே மெசேஜ் பண்ணி கூப்பிட்ட மாதிரி சொல்றியே”

“அடேய் அடேய் உங்க போண்டால உப்பே இல்லாம போக, ஒழுங்கா படிச்சிகிட்டு இருந்தவனை வரசொல்லீட்டு என்ன விளையாட்டா”

“ஆமா அடுத்த அமெரிக்க ஜனாதிபதி ஆகுறவனை நாங்க தான் கையபுடிச்சு இழுத்துட்டு வந்துட்டோம், அட ஏண்டா, எப்படியாயிருந்தாலும் இன்ஜினியரிங்க்கு எவனும் வேலை குடுக்க மாட்டான், உனக்கு ஒரு யூபிஎஸ்சி, இவனுக்கு ஐபிபிஎஸ், எனக்கு ஒரு கிக்பாக்ஸிங் சோ எதுக்கு க்ளாஸ்க்கு போகனும்”

“இதெல்லாம் வக்கனையா பேசு, இப்போ எதுக்குடா கூப்பிட்ட, இந்த ராஜாவுக்கு என்னாச்சு, ஏன் இப்படி கான்கிரீட் போட்டது மாதிரி மூஞ்சிய வச்சிருக்கான்”

“அதை பத்தி பேசத்தான் மாப்ளை கூப்பிட்டேன்”

“என்னடா என்னாச்சு, திரும்ப அந்த மைவிழி திட்டிருச்சா”

“அது தான் தினம் நடக்குதே”

“அதை விட பெரிய பிரச்சனையா, வேற எதாவது பொண்ணு ப்ரப்போஸ் பண்ணிருச்சாடா, சொல்லு, என்ன ஏதுன்னு பேசிக்கலாம்”

“வாய்ல நல்லா வருது, என்ன பிரச்சனைன்னு கேக்குறியே, ஒரு தரமாவது சொல்ல விடுறியாடா, மனுசனா நீயெல்லாம்”

“தெய்வம்டா”

“அய்யா தெய்வமே, அவங்க க்ளாஸ்ல, ஸ்வாதின்னு ஒரு பொண்ணு இருந்துச்சே தெரியுமா”

”தெரியும்டா, அந்த குள்ளமா சிகப்பா, க்யூட்டா, சிரிச்சா கூட கன்னத்துல குழிவிழுகுமே”

“உன் முதுகுலதான் இப்ப விழபோகுது, அவ ஜெனி டா, இந்த பொண்ணு ரொம்ப அமைதி வந்து போறதே தெரியாது”

“அப்புறம் எப்படி எனக்கு தெரியும்”

“டேய்”

“சரி சரி சொல்லு என்ன பிரச்சனை”

“அந்த பொண்ணு மிஸ்ஸிங்”

“மிஸ்ஸிங்கா, எப்படிடா, பசங்க எவனாச்சும் உஷார் பண்ணீட்டானுங்களா”

“ சீ வாய மூடு, டேய் அந்த பொண்ணு லோன் போட்டு தான் படிக்கிறா போல, லேட்ரல் எண்ட்ரி வேற, பாங்க் ல என்ன பிரச்சனையோ, சேங்சன் ஆன லோனை குடுக்க மாட்றானுங்க போல, இதெல்லாம் தான் நமக்குத் தெரியும், கடைசியா நேத்து பீஸ் கட்டாதவங்களை பிரின்ஸிபல் ரூமுக்கு அழைச்சிட்டு போயிருக்காங்க, என்ன சொன்னாங்கன்னு தெரியலை, நேத்து அழைச்சிட்டு போகும் பார்த்தது தானாம், அதுக்கப்புறம் அவ ரூமுக்கும் வரலை, வீட்டுக்கும் போகலை, ஆபிஸ் ரூம்ல இருந்து அப்போவே போயிடுச்சுன்னு ப்யூன் சொல்லிருக்காரு, என்ன ஆச்சின்னே தெரியலை டா”

“ஏண்டா இவ்வளவு பெரிய ப்ரச்சனை போயிகிட்டு இருக்கு, இதை சொல்லாம என்னென்னவோ சொல்லி டைம் வேஸ்ட் பண்ணீட்டியே”

”நீ எங்கடா சொல்ல விட்ட”

“இது உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது, அந்த பொண்ணு உங்ககிட்ட ஏதும் சொன்னுச்சா”

நாம அந்த பில்லு பிரச்சனைக்காக ஆபீஸ் ரூமுக்கு போயிருந்தோம் ஞாபகம் இருக்கா”

“மறக்கமுடியுமாடா, இன்னும் அந்த பத்தாயிரத்துக்கு அவனுங்க பில்லு குடுக்கலை”

“அப்போ இந்த பொண்ணு ரெஜிஸ்ட்ரார் முன்ன நின்னு அழுதுகிட்டு இருந்துச்சு, அதுக்கப்புறம் க்ளாஸ் ல வந்து பார்த்தப்போதான் தெரிஞ்சுது எங்கக்ளாஸ்ன்னு, கூப்பிட்டு என்ன பிரச்சனைன்னு விசாரிச்சு அதுக்கு நாம என்ன பண்ணலாம்னு சொல்லி வச்சிருந்தேன், அதுக்குள்ள தான் ஸ்டிரைக், சஸ்பெண்ஷன்னு போயிடுச்சா, இப்போ க்ளாசுக்கு போனதும் தான் அவ இடத்தில அவளைக் காணோம்னு கேட்ட இப்ப சொல்லுறாங்க” தன் நீண்ட மௌனம் கலைத்து பேசினான் ராஜா.

”நம்ம அட்டெண்டர்ல இருந்து செக்யூரிட்டி வரைக்கும் விசாரிச்சு என்னாச்சுன்னு கண்டுபிடிக்கலாம் அதுக்கு ஏன் டா இவ்வளவு ஃபீல் பண்ணுற,” பூபதி சொல்ல, அதை ஆமோதித்தான் சேதுபதி.

“இங்க பாரு மச்சி இதுக்கு எதுக்கு நீ இவ்வளவு தூரம் மூஞ்சியை தூக்கி வச்சிருக்க, நாமளும் எவ்வளவு பஞ்சாயத்தை தான் பேஸ் பண்ணுறது, விடுடா அரசியல்ல, இதெல்லாம் சாதாரணம்”

“நான் அப்பயே இதை மைண்ட்ல வச்சு அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணியிருக்கனும்டா, அட்லீஸ்ட் உங்க கிட்டயாவது முன்னாடியே சொல்லியிருக்கணும்”

“சொல்லியிருக்கலாம் தான் மாசக்கடைசியில சிங்கிள் காபிக்கு வழியக்காணோம், இதுல ஏன் டா ஏன் டா”

“எனக்கென்னவோ மனசு சரியில்ல மச்சி, அந்த பொண்ணுக்கு ஏதோ பெரிய பிரச்சனைன்னு மட்டும் தெரியுது”.

”சரி வா கிளம்பு இப்பயே போய் விசாரிப்போம்”

மூவரும் கல்லூரி வளாகம் முழுக்க விசாரித்துவிட்டனர். யாரிடமும் ஒரு பதிலும் இல்லை. அதுவே சந்தேகத்தை அதிகமாய் கிளப்பியது.

கல்லூரி வளாகத்திற்குள் எதாவது வழியாக வெளியே சென்றிருக்கவேண்டும், ஒரு நாள் முழுக்க யாரையுமே தொடர்பு கொள்ளாமல் எங்கே சென்றிருக்க முடியும், விடுதிக்கும் செல்லவில்லை, வீட்டிற்கும் செல்லவில்லை, பிரின்சிபல் அறைக்குச் சென்றவள் அதன் பிறகு எங்கு சென்றிருப்பாள்…?

கேள்விகளின் பின்னால் நகர்ந்த அந்த இருதினங்களும் இப்பொழுது நினைக்கையிலும் மனதிற்குள் ப்ரளயத்தை உண்டாக்கியது ராஜாவிற்கு.

அவனையும் அறியாமல் கண்களில் கோர்த்துவிட்ட நீர், எதிரில் வருபவரை மறைக்க, சட்டென பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான்.

“என்னாச்சு ராஜா எனி ப்ராப்ளம்” என்று மலர் கேட்க,

“நத்திங் நத்திங் மலர்”என்றுவிட்டு நெல்மெட்டை கழற்றி முகத்தை அழுந்த துடைத்தபின் மீண்டும் வண்டியை உசுப்பினான். மைவிழியிடம் எந்த அசைவும் இல்லை என்பதையே மருத்துவமனை வரும் வரை அவன் கவனிக்கவில்லை.

கண்மூடி சாய்ந்திருக்கிறாள் என்று மலரும் நினைத்துக் கொண்டிருக்க, வண்டியை நிறுத்தி மலர் இறங்கி, அவளை அசைக்க அப்படியே மயங்கிச்சரிந்திருந்தாள் மைவிழிச்செல்வி.

Advertisement