Advertisement

முகூர்த்தம் 11

சிறகு விரித்து பறக்கையில்

வானம் வியர்த்த தருணமாய்

பூமியெங்கும் காதல் மழை

 

விடிந்து விடியாத அதிகாலைப் பொழுதில், சாலையோரத்தில் அந்த முனகல் கேட்டுக் கொண்டிருந்தது. இரவு முழுவதும் வலியில் துடித்த அந்த ஜீவன் இன்னும் உயிரோடு இருக்கிறோம் என்று உணர முடியாமல் மயக்கமுற் நிலையிலும் முனகிக் கொண்டிருந்தது.

சாலையில் போவோர் வருவோர் அந்த சகதியில் புரண்டு மயக்கமுற்ற நிலையில் கிடப்பவனை, எவனோ குடித்துவிட்டு போதை தலைக்கு ஏறி வானில் பறந்து கொண்டிருக்கிறான் என்று தங்கள் வேலையில் முனைப்பாய் நகர்ந்துவிட்டனர்.

நேரம் கடக்க கடக்க அவன் நிலை மோசமாகிக் கொண்டே போனது. அதுவரை சென்றவர்களின் கவனத்தை ஈர்க்காமல், அந்த ஸ்கூட்டியில் வரும் யுவதி கவனத்தை முழுதும் தன் மேல் திருப்பியிருந்தான்.

சட்டென்று குழப்பம் சூழ்ந்த அந்த யுவதி அவனைத் தாண்டி செல்ல முடியாமல் நின்றாள். வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி அவன் அருகில் வந்தவள், வீரிட்டதில் சாலையில் போவோர் வருவோர் அவளை நோக்கி ஓடி வந்தனர்.

அடிபட்ட குருதி அவன் சட்டையில் உறைந்து முகமெங்கும் வழிந்து காய்ந்திருந்தது. அவளிட்ட கூச்சலில் கூடியவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸிர்க்கு அழைத்ததில் அடுத்த அரைமணி நேரத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தான் ராஜா.

நேற்று காலை வங்கிக்கு கிளம்பிச் சென்றவன், மாலை வீடு திரும்பவில்லை, இரவு முழுவதும் வரவில்லை, விடாமல் வந்த தொலைபேசி அழைப்புகள் எதையும் ஏற்கவில்லை. அவனோடு வேலை பார்க்கும் அனைவரிடத்திலும் விசாரித்ததில் அவர்கள் பார்த்தவரை, அவன் அவர்களுக்கு முன்னதாகவே கிளம்பிவிட ஒருவருக்கும் விவரம் எதுவும் தெரியவில்லை.

நள்ளிரவு வரை அழைப்பை ஏற்கும் நிலையில் இருந்த அவன் கைபேசி அதற்கு மேல் தாக்குபிடிக்கமுடியாமல் தன் உயிரை விட்டிருந்தது.

திருமண நிச்சயதார்த்தம் முடிந்து சில நாட்களே ஆன நிலையில் முகூர்த்தக்கால் ஊன்றிய அன்றே மகன் வீட்டிற்கு திரும்பவில்லை என்றதும் வீட்டில் ஒருவரின் நிலையும் சொல்லும் படி இல்லை. இத்தணை நாளாய் தான் கொண்டிருந்த தவத்திற்கு கிடைத்த வரமாய் வந்தவன் வாழ்க்கை முழுதும் வருவேனா மாட்டேனா என்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.

வீட்டிற்கு தெரியப்படுத்திவிட்டு அவர்கள் வரவிற்காய் காத்திருந்தாளோ இல்லையோ, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்த சில நிமிடங்களில் உள்ளிருந்து வந்த மருத்துவர்,

“ஏம்மா இவ்வளவு நேரமா அழைச்சிட்டு வராமா என்ன பண்ணிகிட்டு இருந்தீங்க, இவ்வளவு லேட்டா கொண்டு வந்திருக்கீங்க, என்ன நடக்கும்ன்னு எங்களால எதுவும் இப்போ சொல்ல முடியாது” என்றுவிட்டு உள்ளே சென்று விட்டார்.

அவளுக்கு அவர் சொன்னது புத்திக்குப் புலப்படவே சில நொடிகள் தாமதமானது அந்தளவிற்கு எண்ணம் அனைத்தையும் அவனே ஆட்கொண்டிருந்தான். திருமணக்கோலத்தில் காண்போம் என்று கனவு கண்டு கொண்டிருந்தவள் காணக்கூடிய கோலத்திலா அவனைக் கண்டாள் இன்று.

கடவுளே என் வாழ்வில் காதல் என்ன கானல் நீரா, கண்ணில் காட்டினாய் நெருங்கவே யோசிக்க வைத்தாய், துணிந்து தொடுகையில் காற்றோடு கலந்திடுதே, என்ன பாவம் செய்தேன், ஏனிந்த நிலை, எனக்கென்றாலும் தாங்கிடுவேன், என்னை உயிரென சுமந்து காதலை நெஞ்சில் நிறைத்து திரிந்தவனை இப்படி செய்துவிட்டாயே என்று கதறிக் கொண்டிருந்தவளை தேற்றுவார் யாரும் இன்னும் அங்கு வந்திருக்கவில்லை.

இன்னும் எதுவும் கெட்டுப் போய்விடவில்லை, கடவுளே உன் கருணை தவிர அவனை எனக்கு மீட்டளிக்கும் மருந்து இவ்வுலகில் வேறு எதுவுமில்லை. ஒற்றை நொடியில் வாழ்வையே புரட்டிப் போட்டுவிட்டாயே, உனக்கு இரக்கம் உண்டென நிரூபிக்க இன்னுமொரு சந்தர்ப்பம் தருகிறேன், பயன்படுத்திக் கொள் என்று மனதினுள் பிரார்த்தனையைக் கூட கட்டளையாக பிறப்பித்துக் கொண்டிருந்தாள்.

அதற்குள் மருத்துவமனையின் நுழைவாயிலில் கூச்சலும் அழுகையும் கேட்டது. அங்கே, மகாலட்சுமி தன் உச்ச ஸ்ததியில் கத்திப் புரட்டுகொண்டிருந்தார். “ அய்யோ அய்யோ என் மகனே உன்னை இந்தக் கோலத்தில பார்க்குறதுக்கா இத்தனை வருஷமா கண்ணுக்குள்ல வச்சு வளர்த்தேன், எங்களை எல்லாம் ஏமாத்திட்டு இப்படி போயிட்டியே, அந்த எமனுக்கு உசுரு தான் வேணும்னா என்னைக் கொண்டு போயிருக்கக்கூடாதா, வாழ்ற புள்ளை உன்னை தூக்கிட்டு போயிட்டானே” என்று வெள்ளைத்துணியால் மூடப்பட்டு வாசலில் கிடத்தப்பட்டிருந்த உடலைக் கட்டிக் கொண்டு அழுது கொண்டிருந்தவரை ஓடிச் சென்ற அணைத்து தடுத்தாள் மைவிழி.

“அம்மாடி உன்னை என் மருமகளா கொண்டு போகணும்ன்னு கனவு கண்டேனே, என் மகனையே அந்த விதி கொண்டு போயிடுச்சே என்று மீண்டு அழுதார்.

அழுகையோடு அவரைத் தடுத்து தடுத்து முடியாமல் ஓங்கிய குரலெடுத்து, “அத்தை அத்தை அவருக்கு ஒண்ணும் ஆகலை உயிரோட இருக்கார் உள்ள ட்ரீட்மெண்ட் நடக்குது அத்தை அவருக்கு ஒண்ணும் ஆகலை……” என்று கத்தவும் அவர்களின் சப்தம் நின்றது.

சமாதானப்படுத்தி அவசர சிகிச்சை பிரிவின் முன் அழைத்து வந்து அமரவைத்தாள். செய்வதறியாத அதிர்ச்சியில் உறைந்து கிடந்த ராஜாவின் பெற்றோரையும் தன்னை பெற்றவர்களையும் எப்படி மீட்டு பழைய நிலைக்குக் கொண்டுவருவது என்று ஒரு பெரிய கேள்வி அவள் முன் நின்றது.

அத்தனையும் மீள்வதும் வீழ்வதும் உள்ளிருப்பவனின் மூச்சில் மட்டும் தானே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் சுதாரித்து சகஜ நிலைக்கு மெல்ல திரும்பியது ராஜாவின் தந்தை  நந்தகோபன் தான்.

“அம்மாடி செல்வி என்னம்மா நடந்துச்சு, எப்படி மா “ என்று பதட்டத்தோடு வினவினார் அவர்.

“காலையில அம்மன் கோவிலுக்கு போயிட்டு இருந்தேன் மாமா, ரோ ரோ ரோட்டு ஓரத்துல அ அ… அவரு இ இ இரத்த வெள்ளத்துல…” என்றவள் அதற்கு மேல் அதை சொல்ல முடியாமல் வெடித்து அழுதாள்.

“என்னமா இதென்ன ஹாஸ்பிடலா இல்ல உங்க வீடா, இப்படி கத்திகிட்டு இருக்கீங்க, உங்க புருசன் மட்டுமா உடம்புக்கு முடியாம கிடக்குறார் மத்த பேசன்ட்ஸ் எல்லாம் இல்லையா, பேசாம இருமா” என்றவாறு கடந்து போன அந்த செவிலியரின் வார்த்தை சுட்டதில் அமைதியானாள்.

அதிலொரு வார்த்தை மட்டும் மனதில் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

“அண்ணே காத்தமுத்து பேசுறேன்ணே, நீங்க சொன்ன மாதிரியே அந்தாள முடிசிட்டோம்ணே,”

“யாரைடா”

“என்னன்ணே இப்புடி கேக்குறீங்க, அந்த பாங்க் மேனேஜரு உங்களுக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்புனானே அவனை தான்ணே”

“கிறுக்குப்பயலே கிறுக்குப்பயலே, அந்த புதுசா வந்திருக்க ஏசி.சேதுபதி எனக்கு அரெஸ்ட் வாரண்ட் வாங்கி வச்சிகிட்டு காத்திருக்கான், நான் ப்ளைட்ட விட்டு இறங்குனதும் அரெஸ்ட் பண்ணுவானாம் அவனை ராத்திரிக்குள்ள போட்டிருங்கன்னு சொன்னா அனாவசியாமா அந்த மேனேஜரை எதுக்கு டா போட்டீங்க,”

“அது அது வந்து ன்ணே எனக்கு அரெஸ்ட் வாரண்ட்க்கும் கோர்ட் நோட்டீஸிக்கும் குழப்பம் வந்திடுச்சுண்ணே”

“வெளக்கெண்ண வெளக்கெண்ண உங்கிட்ட போய் ஒரு வேலை சொன்னேன் பாரு, நான் வேற தலைவர்கிட்ட இன்னிக்கு ஆளுங்கட்சிக்காரன் மேல கையவச்சா என்ன நடக்கும்னு மக்களுக்கும் அந்த அதிகாரிகளுக்கும் இன்னிக்கு நல்லா புரியும் தலைவரே அந்தளவுக்கு ஹெவியா ஒரு வைத்தியம் பாத்திருக்கேன்னு தில்லா கெத்தா சொல்லீட்டு வந்தேன் டா, இப்போ திரும்பி போகவும் முடியாது, ஊருக்கு வரவும் முடியாது, உங்களையெல்லாம் என்கூட வச்சிருக்கேன் பாரு, கண்ணிலபட்டீங்க, முதல் பலி நீங்க தான் டா” என்று தன் ருத்ர குரலில் காத்தமுத்துவை மிரட்டிக் கொண்டிருந்தவனுக்கு உள்ளுக்குள் சிறு நடுக்கம் இருக்கவே செய்தது.

ப்ளைட்டை விட்டு இறங்கி பத்து நிமிடம் தான் ஆகிறது என்றாலும், யாரும் அறியாத காட்டுபங்களாவிற்குத் தான் செல்கிறோம் என்றாலும் பதட்டம் மறையவே இல்லை, எந்த நிமிடத்திலும் சேதுபதி வந்திடுவான் என்றே அவன் உள்மனம் சொல்லியது.

கைது என்பதோ சிறை என்பதோ அவனுக்கு புதிதில்லை தான் என்றாலும், இம்முறை அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வெளியே வரமுடியாது. இவன் கிளம்புகையில் தனியாக அழைத்து அவன் கட்சியின் தலைவர் கூறிஅனுப்பியிருந்தார்.

”அவனைத்தூக்குறேன் இவனை செய்யுறேன்னு போலீஸுல மாட்டீக்காத என்னாலயெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது, ஏற்கனவே உட்கட்சி பூசல், நானே பொம்மை அரசாங்கம் நடத்திகிட்டு இருக்கேன், கீ குடுத்தா மட்டும் தான் என்னால அசையவே முடியும், நீ உள்ள போனா உன்னை கட்சியில இருந்தும் ஆட்சியில இருந்தும் தூக்குவோமே ஒழிய ஒத்தை போன்கால்ல உன்னை வெளிய எடுக்க முடியாது நியாபகம் வச்சுக்கோ”

நெஞ்சை கவ்விக் கொள்வது போன்ற விசயங்களை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு சட்டென தான் சென்று கொண்டிருந்த சொகுசுக்கார் நிற்கவும், முகமெங்கும் வியர்த்துவிட்டது.

டிரைவரிடம் என்ன என்பது போல் ஜாடை செய்ய அவனோ தெரியலண்ணே திடீர்ன்னு வண்டி நின்னுடுச்சு என்னான்னு பாக்குறேன் ரெண்டு நிமிசம்ண்ணே என்றபடி காரை விட்டு இறங்கினான்.

”இதைக்கூட சரிபண்ணி நல்ல கண்டிசன்ல உங்களால வச்சுக்க முடியாதாடா உங்களுக்கும் வண்டிக்கும் நல்லாத்தானே தீனி போடுறேன் அதை தின்னுட்டு ஒழுங்க வேலை பார்க்க என்ன கேடு உங்களுக்கு” என்று தன்னை மீறிய வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டிருந்தான் மதுராபுரி வேந்தன்.

அவன் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் வண்ணம் டிரைவர் பதிலுரைத்தான். “அண்ணே முன்னாடி வீல் ரெண்டும் பஞ்சர்ண்ணே”

“உங்களையெல்லாம் கூட வச்சிருக்கேன் பாரு என்னை என்னை செருப்பாலயே அடிச்சுக்கணும்”

“அடிச்சுக்கோடா…” மிக அருகில் ரொம்ப நக்கலாக உறுமியது அந்த குரல்.

“ஹான் யாரு யாரு… நீ நீ சேதுபதி தானே”

“ஹா ஹா அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயா தெரியுதோ”

“வேணா என் மேல கை வச்ச நடக்குறதே வேற”

“நான் கால் வச்சேன்னா நீ நடக்கவே முடியாது, சீ வாயை மூடு நாயே”

முகத்தில் கருப்புத்துணியை கண்கள் மட்டும் தெரியுமாறு சுற்றிக் கொண்டு கண்ணில் கனலோடு நின்றிருந்தவன் யார் என்று வேந்தனால் சற்றும் கணிக்க முடியவில்லை.

“ஏய் யாருடா நீ “

“உன்கிட்ட அட்ரெஸெல்லாம் குடுத்திட்டா உன்னை கடத்திட்டு போவேன், வாயை மூடிகிட்டு வாடா”

“டேய் நான் ஆளுங்கட்சியில முக்கிய புள்ளி டா”

“புள்ளியை மட்டும் தனியா விட்டா நல்லாருக்காது அதான் கோலம் போட கூட்டிகிட்டு போறேன்”

“என் ஆளுங்கள மீறி உன்னால ஒண்ணும் பண்ண முடியாது, டேய் பசங்களா இவனை என்னான்னு கவனிங்க”

“ஹா ஹா ஹா நான் கவனிச்ச கவனிப்புல அவனவன் சுருண்டு போய் ரொம்ப நேரமாச்சு, உன்கிட்ட விளக்கவுரையெல்லாம் குடுத்துகிட்டு இருக்க முடியாது, கிளம்புடா டேய்”

அதற்கு மேல் வேந்தனால் பதில் பேச முடியவில்லை, மயக்க மருந்து தெளித்த துணியால் அவனை மயக்க முற செய்து கை கால்களை கட்டி, போட்டு விட்டு முன்னால் நின்றிருந்த டிரைவரிடம் எதோ வித்தியாசமான சைகையை காட்டிவிட்டு காரை கிளப்பிச்சென்றுவிட்டான் அந்த மர்ம மனிதன்.

Advertisement