Advertisement

முகூர்த்தம் 10

 

சூழ்ந்திடும் குளுமையில்

உன் கனல்பார்வையில்

சூழ் கொண்டேனடி

காதலின் கதகதப்பிற்காய்…

 

காதலின் இதம் அளித்த சுகத்தில் ஒருவித நிம்மதியுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான் மைத்ரேய ராஜா. இரவின் கரங்கள் பூமியை அணைக்கத் துவங்கியிருந்த நேரமது.

சாலையோர மரங்களில் இருந்து உதிர்ந்த பூக்கள் இருமருங்கிலும் கிடக்க, தன் ஜீன்ஸில் கைகளை விட்டபடி, நடந்து சென்று கொண்டிருந்தான். தன்னைக் கடந்து செல்லும் மனிதர்களில் தான் எத்தனை ரகம் அத்தணை பேரும் எதற்காகவோ ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

எதுதான் அதில் முதல் நிலை வகிக்கிறது…..? பணம். எத்துணை அதிமுக்கிய விசயங்கள் இருப்பினும், வாழ்வாதாரப் போராட்டங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு முதல் இடத்தில் அமர்ந்திடும் கிரிக்கெட் மோகம் போல, அன்பு, நேசம், இயற்கை, என அனைத்திற்குமான இடைவெளிகளில் மிக நேர்த்தியாய் பின்னப்பட்டிருக்கிறது இந்த பணம்.

அனைவரின் ஓட்டத்திலும் எரிபொருளாய் குடும்ப பாரங்களும் தேவைகளும் நிறைந்திருக்க, வெற்றி என்பது இங்கே அவரவர் ஓட்டத்தின் வகையைப் பொருத்தே அமைகிறது.

நிதானமாக ஓடுபவன் காயங்கள் அதிகமின்றி சீரான வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறான்.

என்ன இது இளமையின் கனவுகள் ஆக்கிரமிக்க வேண்டிய மனதை முற்றிலும் முரணாக இப்படியான எண்ணங்கள் முற்றுகையிடுதே என்ன மாயம்….. சற்றே நிறுத்தி தன் எண்ணவோட்டத்தை ஆராயத் துவங்கினான்.

மீண்டும் அதற்கொரு யோசனையா என்றாலும் தவிர்க்கமுடியாததாகிப் போன அலசல்கள் என்னவென்று பார்த்திடுவோமே என்றது மனது மீண்டும்.

அப்போது தான் கையில் இருக்கும் கவரைப் பார்த்தான் அதில் பத்திரிக்கைக்கான மாதிரிகளும், அதில் எழுதவேண்டிய சாராம்சம் அடங்கிய தாளும் இருந்தது.

அட காரணம் கையில் இருக்கையில் கனவோடு என்ன கைகலப்பு வேண்டியிருக்கிறது.

ஒரு சில நேரங்களில் திடீரென உணவுப் பதார்த்தங்களின் மேல் கவனம் பாயும், இதுவரை சுவைத்ததில் எது மிகச்சுவையானது என பட்டியலிடும், ஏன் நமக்கு இப்படி சாப்பிடும் ரகங்களாய் நினைவில் வருகிறது என்று யோசித்து கடிகாரத்தைப் பார்த்தால் அது சொல்லும் ‘உன் உணவு நேரம் இது’ என்று.

அப்படித்தான் சிந்தனைகளும், தான் நடக்கவேண்டிய நேரமோ காலமோ தேவையோ வருகையில், அதற்கான வேலையில் தானாகவே இறங்கிவிடும்.

காதல் வாழ்க்கையில் பூ பூக்கும் தருணத்தின் எதிரொலி, அழகாய் மலர்ந்து வண்ணங்களோடும் வாசனையோடும் ரசனையின் ரம்மியங்களை முழுமையாய் தனதாக்கிக் கொண்டது.

அதன் பின் இயற்கையால் சூல் கொண்டு தன் அடுத்த சந்ததிகளை உருவாக்கி அவற்றின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து, உரிய இடம் சேர்ப்பித்து ஆல் போல் நிலைப்பதுவும் வாழ்வில் உண்டு. அனைவரின் வாழ்வும் ஒரே பாதையில் செல்வதில்லை இருப்பினும்,

பூத்தலின் அடுத்த நிலையை எதிர்கொள்ள தயாராகி இயற்கையின் போராட்டங்களும் தன்னை தயார் படுத்திக் கொள்ளும் மனநிலை தனக்கு எட்டிப்பார்க்கிறது என்பதை மிக நன்றாகவே உணர்ந்து கொண்டான்.

தனக்குத்தானே சுய அலசலில் ஈடுபட்டு தன்னிலை ஆய்ந்து எதிர்கொள்ளப் போகும் சூழல்களுக்காய் தன்னை தானே தயார் படுத்திக் கொள்ளுதல் அவனுக்கே புதுமையாய் இருந்தது.

நிதர்சனங்களின் சூடு மிகஅதிகமாய் தைத்த இடத்தில் காலச்சுழற்சியில்  வலிகள் குறைந்தாலும் தழும்புகள் தருணங்களை மறக்க விடுவதில்லை. அப்படியான எரிமலைகள் நிறைந்த தீவில் தான் தன் வேலை என அவனுக்குத் தெரியும்.

சிந்தனை சிறைபடுத்தாத கால்கள் தன் பாதையில் தொடர்ந்து இயங்கியதில், எதுவரினும் எதிர்கொள்வோம் என்று வீடு வந்து சேர்ந்தான். அன்றைய இரவு புயலின் முன் வரும் அமைதியாய் கழிய, அடுத்த நாளின் விடியல் வந்துவிட்டதென அலைபேசியின் ஒளிர்த்திரை காட்டியது.

அகம் நிறைத்த அலைப்புறுதலில் எதை வெளிக்காட்டவென அறியாத முகமோ வெறுமையாய் இருந்தது. அலுவல் நேரத்திற்கு முன்பே வங்கிக்கு வந்துவிட்டவன்,

முந்தைய நாள் தான் கேட்ட கோப்புகள் தன் பிரத்யேக அலமாரியில் அடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்தான். தான் அலசி எடுக்க வேண்டிய தகவல்களுக்காய் அவற்றுள் மூழ்கிப் போனான்.

நேரம் ஆக ஆக வங்கியின் ஊழியர்கள் ஒவ்வொருவராய் வரத்துவங்கினர். கடமையே கண்ணாய் கோப்புகளுக்குள் மூழ்கி இருந்தவனைப் பார்த்தவர்களுக்கு ஏனோ அடிவயிற்றில் புளி கரைத்தது.

எந்நேரமும் பாயத் தயாராய் இருக்கும் புலியாய் அவர்கள் கண்களுக்கு அவன் தெரிந்தான் போலும், சாதாரண பேச்சுகள் எதுவும் இன்றி அமைதியாய் வேலைகள் நடந்தது.

சற்று நேரத்தில் தான் எடுத்த குறிப்புகளை கணினியில் பதிவேற்றினான் சில நிமிடங்களில் கணினி வெளிதள்ளிய தாட்களை தன் கோப்புகளில் பத்திரப்படுத்தியவன் அடுத்த ஒருமணி நேரத்தில் துவங்கவிருந்த மேலாளர்களுக்கான கூட்டத்தில் முதல் ஆளாய் அமர்ந்திருந்தான்.

கழனிக்காரன்பட்டி 5கிமீ என்று காட்டிய படி அந்த பச்சை நிற பலகை நின்றிருக்க, தன் இருசக்கரவாகனத்தில் உச்சிவேளையின் கடுமையான வெயிலில் சென்று கொண்டிருந்தான் அவன். இருமருங்கிலும், இந்நேரம் உழவு மாடுகளும், ட்ராக்டர்களும் உழுது கொண்டிருக்கும், எருவிட்டு மண்ணை தயார்படுத்தும் பணியை துவக்கியிருப்பார்கள் விவசாயிகள். ஆனால் அதற்கான அறிகுறிகள் இன்றி வறண்டு கிடந்தது அந்த பூமி.

சிறுவாய்க்கால் கரையோரங்களில் முளைத்திருந்த நாணல் புற்கள் அடையாளமின்றி போயிருந்தது.

இரண்டு வருடமாய் விவசாயிகளின் வியர்வையை தவிர நீரென்ற ஒன்றை அறியாத நிலம் எப்படி இருக்கும், மழைக்கும் வழியில்லை, அணையிலும் நீரில்லை மக்களிடம் பணத்தை மட்டும் வசூல் செய்யச் சொல்லும் நிர்வாகம் இக்கட்டான சூழலில் இறுகிப்போய் தன் இருசக்கரவாகனத்தில் வங்கி அலுவலகத்தை வந்தடைந்தான்.

மீண்டும் தன் கோப்புகளில் நுழைந்தவனுக்கு அந்த பெயர் பூதாகரமாய் நின்றது. “மதுராபுரிவேந்தன்” இந்த பெயருக்கும் வசூலிக்கப்பட வேண்டிய வாராக்கடன்களுக்கும் அதிக சம்மந்தம் இருப்பதாய் தோன்றியது.

தன்னிடம் வேலை பார்க்கும் பண்ணையாட்களின் பெயரில் விவசாயக்கடன்களைப் பெற்றுக் கொண்டு அவர்களை வலையில் விழவைப்பதாக அரசல் புரசலாய் ஒரு செய்தி அவன் செவி வந்து சேர்ந்திருந்தது.

அது எத்தனை தூரம் உண்மை என்பதை தானே நேரில் சென்று காணவேண்டும் என முடிவெடுத்தான்.

தனிநபர் தொழிற்கடன் மற்ற வங்கிகளில் கொடுக்கப்பட்டிருப்பதை விட, தன் கிளையில் அதிகம் கொடுக்கப்பட்டிருப்பதையும் கவனித்தான்.

இதற்கும் மதுராபுரிவேந்தனுக்கும் ஏன் தொடர்பிருக்க வேண்டும், இல்லாமல் கூட இருக்கலாமே என்று யோசித்தால், அடுத்த பக்கத்தில் மதுராபுரி வேந்தனின் கடன்பட்டியல் இருந்தது.

வங்கியின் உச்சபட்ச கடன்மதிப்பு அவன் கணக்கில் கடனாகக்கொடுக்கப்பட்டிருந்தது.

இத்தணை பெரிய தொகையை ஒற்றை ஆளிடம் கொடுத்துவிட்டு ஊர் மொத்தமும் கொடுக்க வேண்டிய கடனை சொற்பமாக்கி விட்டனரே என்று ஆயாசமாய் வந்தது.

முதல் வேலையாய் அந்த மதுராபுரிவேந்தனை சந்திக்க வேண்டும் என்று எண்ணியவன், அவன் வங்கியில் பதிந்திருந்த எண்ணை சொடுக்கினான்.’

ஒருசில அழைப்புகளில் போனை எடுத்திருந்தான் வேந்தன்.

“ஹலோ இங்கிட்டு மதுராபுரிவேந்தன் பேசுறேன், அங்கிட்டு யாரு”

“நீங்க கடன் வாங்கியிருக்க பேங்க் மேனேஜர் பேசுறேன்…”

“ஹா ஹா ஹா ஒண்ணா ரெண்டா ஞாபகம் வைச்சுக்க, நீங்களே சொல்லிடுங்க”

“ஓ அத்தனை பேங்கில கடன் வாங்கியிருக்கீங்க”

“அட என்ன பண்ண சொல்றீங்க, தேடி தேடி வந்து கொடுக்குறாங்க, வாங்கலைன்னா கோவிச்சுக்குறாங்க”

“உங்களை நேரில் பாக்கனுமே”

“ஓ தாராளமா பாக்கலாமே, நாளைக்கு காலையில நம்ம ரைஸ் மில்லுக்கு வந்திடுங்க தம்பி பாக்கலாம்” என்றவன் போனில் அழைப்பை துண்டிக்காமலே மேசையில் போட்டு விட்டு தன் சகாக்களிடம் பெருமை பீற்றத்துவங்கினான்.

“டேய் பசங்களா புதுசா எதோ பேங்க்கு மேனேஜர் வந்திருக்கான் போல, அவனும் கொண்டுவந்து பணம் குடுக்க போறான் பாரு, நேர்ல வரானாம்”

“ஹா ஹா ஹா வந்ததும் உங்களை பத்தி தெரிஞ்சிருக்கும் ணே, அதான் பயபுள்ளை விழுந்தடிச்சு வந்துவிழுகுறான்”

இணைப்பு துண்டிக்கப்படாததால் இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த மைத்ரேயராஜா ஏளனமாய் ஒரு புன்னகை உதிர்த்த படி வெளியேறினான்.

அடுததடுத்து செய்ய வேண்டிய வேலைகள் அவனுக்கென வரிசையில் காத்திருந்தது.

அவனுக்கென நண்பர்களுக்கு அழைப்பு வழங்குவதை மட்டும் விட்டு விட்டு ஏனையவற்ரை தன் பொறுப்பாக்கிக் கொண்டார் அவன் தந்தை.

வேகமாக ஓட்டிவிடப்பட்ட காணலியில் காட்சிகளைப் போல் நின்று ரசிக்கும் முன் காலம் கடந்து கொண்டிருந்தது.

அடுத்த ஒரு வாரத்தில் அனைத்து வேலைகளும் முடியும் தருவாயில் இருந்தது.

ஆனால் இந்த ஒரு வாரமாக முயற்சித்தும் அந்த வேந்தனை மட்டும் ராஜாவால் சந்திக்க இயலவில்லை.

ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகராக இருப்பதாக வெளியே காட்டிக் கொண்டிருப்பதால் நாட்டில் நடக்கும் உச்ச பட்ச அரசியல் குழப்பத்தை ஒற்றி ஆளாய் தீர்த்துவிடுபவரைப் போல அந்த வேந்தன் கட்சியின் டஹ்லைமை அலுவலகத்ட்தைக் கட்டிக் கொண்டிருந்ததால் ராஜா வருகிறேன் சந்திக்க வேண்டும் என்றுஇ சொன்னது கூட அவனுக்கு நினைவில்லை.

ராஜா மீண்டும் மீண்டும் முயற்சித்து பார்த்ததில் “அய்யா, தலைநகரத்தில் இருக்கார், அவரா வந்தா தான் உண்டு அங்கயே போனாலும் பாக்கமுடியாது “ என்ற பதில் தான் வந்தது.

இங்கிருக்கும் அல்லக்கைகளிடம் பேசி ஒரு உபயோகமும் இல்லை என தெரிந்து விட்டது. ஆக இனி தான் நகர்த்த வேண்டிய காய் வேறு அதன் பாதையும் வேறு என முடிவெடுத்துக் கொண்டான்.

இதற்கிடையில் அவ்வப்போது சட்டென்ற சாரல் மழையாய் அவள் நினைவில் நனையவும் அவன் தவற வில்லை.

திருமணத் தேதியை எண்ணி நாட்களை கடத்திக் கொண்டிருக்கும் ஒரு சராசரிப் பெண்ணாய் வலம் வந்தாள் மைவிழி.

முன்பைவிட அவள் அன்னையை சுற்றி சுற்றி வந்தாள்.

வீட்டின் ஒவ்வொரு மூலையும் அறையும் தான் இல்லாவிட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்ப்பாள், எப்போதும் கலைந்து கிடக்கும் அலமாரி, வீடெங்கும் சிதறியிருக்கும் புத்தகங்கள், அவள் எந்த பாதையில் சென்றிருக்கிறாள் என உணர்த்தும் படி, அவள் காலனி துவங்கி துப்பட்டா , அணிகலன்கள், கடைசியாய் அவள் தலையிலிருந்து எடுத்துப் போட்ட பூ வரை வரிசையாய் கை வந்த வாக்கில் வைத்துச் செல்வாள்.

”ஒரு வயசுப்பொண்ணு இருக்க வீடாவா வச்சிருக்க, எல்லாம் கலஞ்சு கிடக்கு, ஹேர்பின் ஒரு இடத்தில ஊக்கு ஒரு இடத்துல, உன் துப்பா ஒரு இடத்தில இந்த காய்ஞ்ச பூவை குப்பையில போடாம கம்ப்யூட்டர் டேபிள்ல வச்சிருக்க, நீ போற வீட்டிலயும் இப்படி இருந்த என் பொழப்பு கிழிஞ்சிரும், நீயே பாரு எப்படி இருக்குன்னு”

”அட என்ன மா நீங்க நாம ஒரு இடத்தில வாழ்ந்தோம்னு ஒரு அடையாளம் வேணாமா”

“வேணுனா வாசல்ல ஒரு கல்வெட்டு வச்சிருவோமா”

“ஓ வைச்சிடலாமே, கீழடி மாதிரி யாரும் உள்ள போட்டு மூடாம இருந்தா சரி”

“ஆமா இந்த மகாராணி சரித்திரத்தை அழிச்சிட போறாங்க, அட ஏன் டி, உன் தொழில் எவ்வளவு கண்டிப்பா இருக்குற, சரியான நேரத்துக்கு வரணும், ஆர்டர் எடுத்த குறிச்ச நேரத்தில டெலிவரி பண்ணனும், அப்புறம் எடுத்த ஃபைலை எடுத்த இடத்தில வைக்கணும்னு”

“ஆமா யார் இல்லைன்னா, என்னோட நிர்வாகம் அப்படித்தான் இருக்கும்”

“அதே மாதிரி வீட்டிலயும் இருக்கக்கூடாதா”

“அய்யய்ய அப்படி இருந்தா அது வீடு இல்லைம்மா ஆபீஸ்”

“அடியே அதுக்கு வச்சது வச்ச இடத்தில இல்லாம இப்படி வீடே போட்டு வைக்கிறியே”

“வீடு உங்க நிர்வாகத்தில இருக்கு சீதா மேடம் இதெல்லாம் நீங்க தான் கவனிக்கணும் அதை விட்டுட்டு என்கிட்ட வந்து கேட்டுகிட்டு இருக்கீங்க”

“காலையில கிளம்பும் போது அதைக் காணோம் இதைக் காணொம்னு வருவீல்ல, அப்ப பேசிக்கிறேன்”

“இன்னும் எத்தணை நாளைக்கு மா, அப்புறம் தான் போயிடுவேனே, அப்ப நீங்க அடுக்கி வைச்சத கலைக்க கூட ஆள் இருக்காது” என்று சட்டென நெகிழ்ந்துவிட்ட மைவிழியின் குரலில், சமையலறைக்கு சென்று கொண்டிருந்தவர் நின்றுவிட்டார்.

“என்னடி இப்படி பேசுற, எங்க போக போற, உன் புருசன் வீட்டுக்குத்தானே, என்னைக்கா இருந்தாலும் நீ போய் தானே ஆகணும்”

“என்ன ஏன் மா பொம்பளைப் பிள்ளையா பெத்தீங்க, ஆம்பிளைப் பிள்ளையா இருந்தா நான் உங்க கூடயே கடைசி வரைக்கும் இருந்திருப்பேனே,” என்றவள் அவர் தோளில் சாய்ந்து கொண்டாள்.

பிரிவின் வலி தொனிக்கும் அவள் குரலில் சீதாவின் அடிவயிற்றில் சுருக்கென்றது. இதே போல் தானும் அழுது கொண்டே அன்னையை பிரிந்து வந்தது நினைவில் வந்தது.

நெஞ்சில் பாரம் கூடிவிட, பொம்பளையாப் பொறந்தா இதெல்லாம் அனுபவிச்சே ஆகணும் டா செல்வி, இது தான் நம்ம வாழ்க்கை முறை, எல்லாமே ஒரு காலம் வரைக்கும் தான் எதுவுமே நிரந்தரம் இல்லை, நீ பிறந்ததுல இருந்து கடைசி வரைக்கும் உன் கூட எல்லாருமே இருக்கணும் நா அது சாத்தியப்படுமா, எங்களுக்கான நேரம் வந்திடுச்சு, உன்னை ஒரு நல்லவன் கையில ஒப்படைக்கிற வரைக்கும் தான் நீ எங்க பொறுப்பு”

பதில் சொல்லாமல் தோளில் அவள் சாய்ந்திருக்க, அவளின் வெம்மையான கண்ணீர் அங்கே பதிலாகிக் கொண்டிருந்தது.

இன்னும் சொல்லப்போனா பொம்பளைப்புள்ளைங்க மட்டுமில்ல டா, ஆம்பிளைப்பிள்ளையா இருந்தாலும் , வேலை தொழில்ன்னு ஒரு கட்டத்தில பிரிஞ்சி போக வேண்டிய சூழல் தான் எல்லாருக்குமே, இப்ப இருக்குற அவசர உலகத்தில நினைச்சதும் பாத்துக்கலாம் பேசிக்கலாம், ஆனா முன்னை விட உறவுகளுக்குள்ள இப்ப தான் விரிசல் அதிகமா இருக்கு, உலகத்தோட இயக்கத்துக்குத் தகுந்த மாதிரி நாமும் வாழக்கத்துக்க வேண்டியது தான், அதுக்காக அஸ்திவாரத்தை மறந்திட்டா, எவ்வளவு வளர்ந்தாலும், நாளைக்கு நிலைச்சு நிக்க முடியாது இதெல்லாம் இந்தா காலத்து பிள்ளைங்களுக்கு எங்க தெரியுது. “ என்றவரின் தோளில் இன்னும் ஈரம் காயாதிருந்தது

Advertisement