Advertisement

திருமதி.திருநிறைச்செல்வன்

இவள் வாழ்வில்
வருமோ காதல்….

முகூர்த்தம் 1

என் வெட்கங்களின்
வேர் தேடினேன்
உன் விழிகள்
என்றது நாணம்….

 

எங்கு நோக்கினும் பசுமையாயிருந்தது அந்த சோலை. அதன் நடுவே ஓர் பூந்தோட்டம், புல்வெளி மீது பூக்கள் சிரித்துக்கொண்டிருந்தது. பூக்களைச் சுற்றி அமர்ந்திருந்த மனிதப்பூக்களான பெண்களிடையே அந்த சிரிப்பில்லை.

அதிலும் மத்தியில் அமர்ந்திருந்த மைவிழியின் பார்வையில் உக்கிரம் சற்று கூடுதலாகவே இருந்தது.
யார் இந்த மைவிழி..? நம் கதையின் நாயகி… பொறியியல் இறுதியாண்டு படிக்கிறாள், அதிகபட்ச அழகு சாதனங்கள் தேவைப்படாத இயற்கையான அழகு, பார்க்கும் பார்வையில் எதிரில் இருப்பவரை எடை போட்டுவிடுவாள்.
துணிச்சல் தைரியம் இவள் அகராதி… எதற்கும் பயப்படுவதில்லை. எதிலும் தயக்கமில்லை. எது நன்று எது தீது, எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்பதில் ஒரு தெளிவு, அவளைப் பற்றி சொல்லச் சொல்ல இன்னும் வளர்ந்து கொண்டே போகும், உடன் பயணிக்கையில் அறிந்து கொள்வோம்.

சுட்டெரிக்கும் வெயில் தன் உக்கிரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த பெண்கள் மட்டும் இங்கு என்ன செய்கிறார்கள்.

”இதுல தேன்மொழி யாரு..?” அந்த மூன்று பெண்களை நோக்கி கேட்டாள் மைவிழி.
“நான் தான் கா…”
“உன்ன கூப்பிட்டா ஊரையே கூட்டீட்டு வந்திருக்க…”
“இவங்க என் பிரெண்ட்ஸ் கா, அதான் கூட்டீட்டு வந்தேன்…”
“அவ கூப்பிட்டான்னா உடனே வந்திடுவீங்களா உங்களுக்கு கிளாஸ் இல்லையா..? கிளம்பு… கிளம்பு…”
“இல்லைக்கா, அது வந்து…”
“நீங்க எல்லாரும் ஹாஸ்ட்டல்லா டேஸ் ஸ்காலரா..?”
“ஹாஸ்ட்டல் கா… “
“அப்ப இன்னிக்கு நைட் டின்னர் முடிஞ்சதுக்கு அப்புறம் ரூம் நம்பர் தெர்ட்டீனுக்கு வா…”
“எ எ எதுக்கு கா…”
“உங்கப்பா அன்னிக்கு காலேஜ்ல சேர்த்துவிடும் போது என்ன சொன்னாரு…”
“உங்களை கேட்டு நடந்துக்க சொன்னாங்க…”
“நான் சொன்னது கேட்டுச்சா…”
“கேட்டுச்சு கா…”
“அப்ப கிளம்பு நைட் வந்து சேரு…”
”ம்ம்ம்ம்…”
”நேரா கிளாஸுக்கு போறீங்க, கேண்டீன்ல உங்களை பார்த்தேன், தொலைச்சிடுவேன்…“
“ஹே மைவிழி அந்த புள்ளைங்கள ஏன் டி இந்த மிரட்டு மிரட்டுற, பயந்து ஓடுதுங்க பாரு…” மைவிழியின் தோழி பவி இதுவரை பிடித்து வைத்திருந்த பொறுமையை பறக்கவிட்டு கேட்டாள்.
“யாரு அதுங்களா… அட ஏன் டி நீ வேற நைட் தெரியும் உனக்கு அதுங்க யாருன்னு…”
“அப்படீங்குற…” இவள் மற்றுமொரு தோழி கலை.
“அட ஆமாங்குறேன்…”
மூவருமாய் கேண்டீன் நோக்கிச் செல்ல,
“அந்த புள்ளைங்களை ஏன் கேண்டீன் வரக்கூடாதுன்னு சொன்னேன்னு இப்ப புரியுது டி மைவிழி…”
“ஹா ஹா ஹா… அடியே நமக்கு க்ளாஸ் முடிஞ்சுது, ஸ்டடி ஹாலிடேஸ்ல மீட் பண்ண முடியாதேன்னு படிக்கனும்னு சொல்லீட்டு நாம வந்திருக்கோம், நமக்கும் அந்தப் புள்ளைங்களுக்கும் வித்தியாசம் இல்லையா டி…”
“ஆமா ஆமா நாம படிக்க வந்தோம்ல… “ என்றாள் பவி சட்டென ஞாபகம் வந்தவளாய்
“அது சரி…. இப்பயாச்சும் அந்த பட்டர்ப்ளை டைகிராம சொல்லிக்குடுங்களேண்டி…”என்று மைவிழி கேட்க
“யாரு கேக்குறது அப்படீன்னு, நம்ம மைவிழியா… என்ன அதிசயமா இருக்கு…” என்று கலை சொல்ல
“அடியே கலை சொல்லிக்குடு டீ…”
அதற்குள் பவி அடுத்த டேபிளில் அமர்ந்திருந்த சுஜியை நோக்கி…
“ஏ…. சுஜி…………………………………..” என்று களவாணி பட பாணியில் இழுக்க
“என்னாடி பவி………………………………………..”
“நம்ம மைவிழி இருக்கால்ல…………………………….”
“யாரு…………………………………………”
“நம்ம மைவிழி டி மைவிழி………………………………………”
“ஆமா மைவிழி……………………………………………..”
“அவ பட்டர்ப்ளை டைகிராம் கேக்குறா டி………………………..”
“அடிப்பாவிமகளே நேத்து கூட பாத்தேனே நல்லாத்தானே இருந்தா திடீன்னு இப்படி படிக்கிற புள்ளையாயிட்டாளே………………”
”என்னாங்கடி பண்றீங்க எனக்கேவா….” என மைவிழி சிலிர்த்துக்கொண்டு எழ அந்தக் கேண்டீனின் மொத்த கூட்டமும் கைதட்ட துவங்கியது.
”அடிப்பாவிங்களா மொத்த கிளாஸும் இங்க தான் இருக்கோமா..?” என்று சிறு அதிர்வுடன் சொன்னவள்,
“அந்த டிஜிட்டல் சிக்னல் ப்ராசஸிங் பேப்பர்ல ஒரே ஒரு டைகிராம் கேட்டேன் அது ஒரு குத்தமா..? ” என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்ட மைவிழியை அங்கிருந்த அனைவரும் முறைக்க,
“க்ளாஸ் ல ஒருத்திய விட்டு வச்சிருக்கியா நீ, புது டிரஸ் போட்டா, பூ வைச்சா, புது மொபைல் வாங்குனா, லீவ் போட்டா, அரியர் வச்சா, பதில் சொல்லாம எழுந்து திட்டு வாங்கினா கூட இப்படித்தான பண்ணுன, அதுக்கு தான் இந்த ரிவீட்…” இந்த ஆதங்கம் சுஜி.
மைவிழி மீண்டும் அதே பாணியில் தான் ரிவீட் வாங்குன கதையை சொல்ல அந்த இடமே கலகலத்தது.
சிரிப்பின் நடுவே வாட்ச்சை பார்த்து அதிர்ந்த கலை, ”மணி நாலாச்சு, இன்னைக்கும் உருப்படியா படிக்கவே இல்லை…” என்றாள்.
”என்னமோ இதுக்கு முன்னாடி மட்டும் நாம ஒழுங்க படிச்சது மாதிரியே ஒரு ஃபீல் குடுக்குற, எப்பயும் இப்படித்தானே அப்புறம் என்ன, இன்னிக்காச்சும் மாமா டியூட்டிக்கு போறதுக்கு முன்னாடி வீட்டுக்கு கிளம்பு…”
“கிளம்பீட்டேன், நீங்களும் ஹாஸ்ட்டலுக்கு கிளம்புங்க…”
“ஆஹான் கிளம்புறோம் கிளம்புறோம்…”
கலை கிளம்பிய பின்னும் நீடித்த அரட்டை கேண்டீன் பூட்டனும் மா, என்று அங்கிருந்தவர் வந்து சொல்லும் வரை நீடித்தது.
மாலை மெல்ல மறைந்து இரவின் இருள் சூழத் துவங்கியிருந்தது. அந்த பதின்மூன்றாம் எண் அறையில் மைவிழியும், பவியும் இருந்தனர். கையில் இருந்த காபி கோப்பைகளை உறிஞ்சியபடி,
“ஹே அம்மா கால் பண்ணாங்களா டி, பவி..?”
“ஆமான் டி, நீ தூங்கீட்டு இருந்த நான் தான் அட்டெண்ட் பண்ணி பேசுனேன், இந்த வீக் எண்ட் வர்றியான்னு கேட்டாக, அவளையே கால் பண்ண சொல்றேன்னு சொன்னேன் டி…”
“சரி இரு நான் பேசீட்டு வரேன்…”
“சரி சரி பேசு, இதோ எனக்கும் போன் வந்துடுச்சி…”
இருவரும் அவரவர் குடும்பங்களோடு அளவளாவி முடிக்கவும், இரவு உணவிற்கான மணி அடிக்கவும் சரியாக இருந்தது.
”ஏ மைவிழி என்ன திரும்ப படுக்குற, மரியாதையா எழுந்து வா, சாப்பிட போகலாம் எனக்கு பசிக்குது டி…”
“ஹே ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு டி என் தங்கமே, மணி அடிச்சதும் தட்ட தூக்கீட்டு போய் கியூவில நிக்கணுமா, கொஞ்ச நேரம் கழிச்சு போனா, எல்லாரும் வாங்கீட்டு கூட்டமில்லாம இருக்கும் நாம போனதும் வாங்கலாம்…”
“..ம்ம்ம்ம்…”
அவள் உம் சொன்ன விதமே பசியின் அளவைக் காட்டிவிட, சட்டென எழுந்து பவிக்கு முன் தட்டுடன் சென்று கொண்டிருந்தாள் மைவிழி, அங்கே மிக நீண்ட கியூ நின்றிருக்க, பள்ளி பிள்ளைகள் முதல் பொறியியல், கலை அறிவியல், மருத்துவம், செவிலியர் பயிற்சி, விவசாயக் கல்லூரி என அனைத்து படிப்புகளையும் கொண்ட கல்விக்குழுமத்தின் பெண்கள் விடுதி என்பதால் அனைத்து துறை பெண்களுமே இருந்தனர்.
சென்ற வேகத்தில் தட்டில் உணவுடன் வந்தவளை கண்ட பவி,
“எப்படி வாங்குன..?”
“நம்ம நர்ஸிங் டிபார்ட்மெண்ட் மீனு வாங்கி குடுத்தா, கார்டன் போலாமா, டைனிங் ஹால் போலாமா…”
“கார்டனுக்கே போவோம்…”
மின்விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட அருவி நடுவே பெண்ணொருத்தி பானையில் நீரெடுக்கும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த அருவியை சுற்றிலும் பச்சைக் கம்பளம். அதை சுற்றிலும் அமரும் வகையிலான மேடைகள் அமைக்கப்பட்டு சில்லென்ற தென்றலோடு மிக அழகான இடமாக இருந்தது.
அங்கு வந்தமர்ந்த தோழிகளின் பேச்சு சுவாரஸ்யத்தில், உணவு காலியாகி வெகு நேரமாகி இவர்கள் அங்கிருந்து நகரவில்லை.
இரவு உணவு முடிந்து அனைவருமே அறைகளுக்கு திரும்பியிருக்க
“ரொம்ப நேரமாயிடுச்சோ…”
“ஓ இப்பதான் தெரியுதா மைவிழி மேடம், அந்த பொண்ணு யாரு தேன்மொழி அதை வேற ரூமுக்கு வரச் சொல்லிருந்தீங்க போலருக்கு…”
“ஓ ஆமால்ல…”
“ஆமாவா இல்லையா…”
“ஆமா ஆமா…”
“அப்ப கிளம்பலாம் வா…”
அவர்கள் ரூமுக்கு வருகையில் ரூம் வாசலில் கல்லூரியில் பார்த்த அந்த மூன்று பெண்கள் நின்றிருந்தனர்.
ஒன்றும் பேசாமல் உள்ளே சென்றவள், பவியிடம்
“இங்க நான் பேசும் போது எதுவும் குறுக்க பேசாதே அவங்க போனதுக்கு அப்புறம் பேசிக்கலாம்…” என்றாள்.
“ம்ம் சரி…” என்று யோசனையோடே தலையாட்டிய பவியிடமிருந்து பார்வையை விலக்கியவள், அவர்களை உள்ளே வருமாறு சைகை செய்தாள்.
“தேன்மொழியை தவிர மீதி பேர் ரூமுக்கு போகலாம்…”
“அக்கா அது வந்து…”
“சொல்றது புரியுதா, தமிழ்ல தானே சொல்றேன்” என்ற மைவிழியின் விழியில் என்ன தெரிந்ததோ மறுவார்த்தையின்றி அவர்கள் திரும்பிச் சென்றனர்.
“ஏம்மா தேன்மொழி என்ன பண்ணிக்கிட்டு காலேஜ் ல…”
“படிச்சிட்டு இருக்கேன் கா…”
“அடிங்க…”
“இல்ல கா வேற ஏதும் பண்ணலை…”
“யாருடி அவன்…” என்ற கேள்வியின் சற்றே அதிர்ந்தவள்
”யாரு கா…”
“யாருன்னு உனக்கு தெரியாது…”
“இல்ல கா தெரியாது”
சற்றும் யோசிக்காமல் மைவிழி விட்ட அறையில், கண்கள் கலங்கி கைகளால் கன்னத்தை தாங்கியபடி நின்றவளின் தொனி இப்போது மாறியிருந்தது.
“என்ன மேல கை வைக்குறீங்க, ஹெச் ஓ டி கிட்ட ராகிங் பண்றீங்கன்னு கம்ப்ளெண்ட் பண்ண வேண்டி இருக்கும்”
“உன்ன விசாரிக்க சொன்னதே அவர் தான்.”
”எ எ துக்கு நான் என்ன பண்ணேன்”
”நீ என்ன பண்ணுனியா, வந்து ஒரு செம் கூட முடியலை, கட் அடிச்சிட்டு அவனோட, சினிமா, பார்க், ஹோட்டல்னு சுத்தியிருக்க, அவன் யாருன்னு கேட்டா, என்கிட்ட திருப்பி கேக்குறா”
“நான் அதெல்லா பண்ணலையே”
“என்ன தெய்வீகக் காதலா, நம்ம பிள்ளையார் கோவில்ல, வைச்சு ப்ரபோஸ் பண்ணுனானா, அவனும் ஃபர்ஸ்ட் இயர் தான் போல இருக்கு, ஆமா அதெப்படி, காலேஜ்ஜின்னு நுழைஞ்சதுமே லவ் வந்துடுமா, அதெப்படி எனக்கு கொஞ்சம் சொல்லு, சொல்லு சொல்லுடி”
“அது வந்து”
“கவர்மெண்ட் கோட்டால சீட் கெடச்சும், அந்த நாப்பதாயிரத்த கட்ட உங்க அப்பா பாங்க்லோன், ஃபர்ஸ்ட் கிராஜிவேட் ஃபார்ம்னு என்ன பாடு படுறாரு, உனக்கெப்படி லவ் வருது”
”இதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாத விசயம், உங்க வேலையை மட்டும் பாருங்க”
“ஆமா உன் கூட சுத்துறாளுகளே ரெண்டு அல்லக்கைங்க அவளுகளுக்கும் இதே வேலை தானாமே”
“அதெல்லாம் எனக்கு தெரியாது”
“உனக்கு தெரியாதா, உனக்கே தெரியாதுன்னா, நான் எப்படி விசாரிச்சு, ஹெச் ஓ டிக்கு ரிபோர்ட் குடுக்குறது.”
“என்னது”
”என்ன புதுசா ஷாக் ஆகுற, ஃபர்ஸ்ட் இயர் நீங்க முடிச்சு, டிபார்ட்மெண்ட்க்குள்ள வரும் போது உங்க மார்க் லிஸ்டோட , இந்த கேரக்டர் ரிபோர்ட்டும் வரும், அத வச்சு, தான் மீதி மூணு வருசமும் உன்ன டிபார்ட்மெண்ட் ல ஹாண்டில் பண்ணுவாங்க”
“அப்படியா”
“அப்படித்தான், இந்த நாலு வருசம் முடியறதுக்குள்ள உன்கிட்ட ப்ரபோஸ் பண்றவனை விட, அவன் மத்த பொண்ணுக கிட்ட பண்ற ப்ரப்போசல் அதிகமாயிருக்கும் இதுக்கு பேர் காதலா, இந்த காதல் கத்தரிக்காய் எல்லாம் ஹார்மோனல் இன்பேலன்ஸ் தான், ஒழுங்கா போய் படிக்கிற வேலையை பாரு”
“ம்ம்ம்ம்”
“இன்னொரு தடவை உன் மேல இப்படி எதாச்சும் கம்ப்ளெண்ட் வந்துச்சு, தொலைச்சிடுவேன், ஓடிப்போ”
தேன்மொழி மிரண்ட பாவனையில் வெளியேற, பவியோ, இவளுக்கு மட்டும் இப்படி கேஸா எப்படி மாட்டுதோ” என்ற தோரணையில் அமர்ந்திருந்தாள்.
“ஏன் மைவிழி உனக்கு இந்த தேவையில்லாத வேலை, எத்தனை தடவை உனக்கு சொல்லிருயிருக்கேன் ஊர் வம்புக்கு போகாதே, எவளோ எப்படியோ போறா, நாம வந்த வேலையை பார்த்துகிட்டு போவோம்னு, எவன் எவ கூட சுத்துனா உனக்கென்ன”
“ஏன் டி அந்த பொண்ணோட அப்பா அட்மிசன் போட வரும் போது நம்ம கிட்ட வழி கேட்டாருல்ல, அப்ப அவர் எப்படி புலம்புனாருன்னு உனக்கும் தெரியும் ல,. அத கேட்ட நமக்கே இப்படி இருக்கு அவ்வளவு கஷ்டத்தையும் பார்த்து அனுபவிச்சு வர்ற புள்ளைக்கு இதெல்லாம் தெரிய வேணாமா, அப்படி என்ன கண்ணு முன்னு தெரியாம காதல் வருது”
“அதெல்லாம் நமக்கு எதுக்கு இதுல தேவையில்லாம ஹெச் ஓ டி, ரிபோர்ட்னுலா வேற சொல்ற”
”அப்ப தான் அந்த புள்ள காதல் கண்றாவியெல்லாத்தையும் விட்டுட்டு ஒழுங்கா படிப்பா, இன்னிக்கு கஷ்டமா தான் இருக்கு நாளைக்கு நல்லாயிருக்கும் போது, இதெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு தோணும்”
“இவ பண்றது காதலே இல்ல, ஒரு இன்பாட்சுவேசன், அதுக்கு காதலை ஏன் திட்ற”
“காதலை திட்டுறேனா எப்போ, சரி திட்டுனா தான் என்ன, அதப்படி டி, திடீர்ன்னு ஒருத்தனை பார்த்ததும் தொபுக்கடீர்னு காதல் வருது, இல்லை தெரியாமத் தான் கேக்குறேன். ”
“அதெல்லாம் ஒரு அழகான் ஃபீல் டி, அந்த ஃபீல் மனசுல யாரை பாத்து எப்போ வரும்னு சொல்லவே முடியாது, “
“மனசுக்குள்ள மணி அடிக்குமாமே அதெல்லாம் விட்டுட்ட”
“என்னடி நக்கலா”
“பின்ன இல்லையா, ஒரு பூவை பாக்குற பிடிக்குது, அந்த மாதிரி உங்களுக்கு யாரையாச்சும் பிடிச்சிட்டா அது லவ்வா”
“அடியே உன் இதயம் மட்டும் என்ன இரும்புலையா இருக்கு, இல்லை, சுத்தி இருக்குற அழகியல் எதையுமே அனுபவிக்கிறது இல்லையா நீ, ஒரு பூவை பிடிச்சிருந்தா அதை பறிச்சு தலையில வச்சுப்பாங்க, இதே அந்த பூவ லவ் பண்ணுனா அது செடியிலயே இருக்கட்டும்னு அதை பார்த்து ரசிப்பாங்க, எந்த காரணத்தைக் கொண்டும் பூவுக்கு வலிக்கக்கூடாதுன்னு நெனக்குறது தான் டி காதல்”
“ஆஹான் அப்படியா, இந்த ஆசிட் ஊத்துனானுகளே மூஞ்சியில அவனுக பண்ணது காதல் இல்லையோ, அந்த பொண்ண உருகி உருகி காதலிப்பானுங்களாம் , அவ ஓ கே சொல்லைன்னா ஆசிட் ஊத்துவானுங்களாம், இது தான் காதலா டி, நீ சொல்ற லாஜிக் படி பாத்தா, லவ் பண்றவன் அவளை கல்யாணம் பண்ணாம பாத்து ரசிச்சுகிட்டே இருக்குறது தான் காதல்னு சொல்லுவ போல”
“நெகடிவ் சைட் மட்டும் பாத்துட்டு பேசாத டி, எவனோ ஒருத்தன் பண்ணுனா, அது தான் காதல்னு முடிவு பண்ணுவியா, நியூஸ் பாத்து பாத்து நீ இப்படி ஆயிட்டே”
“நீ தமிழ் சினிமா பாத்து இப்படி ஆயிட்டா, ஒண்ணு தெரிஞ்சிக்க டி, என்னைய பொருத்தவரைக்கும் பெத்தவங்க வயிறு எரிஞ்சா நாம நல்லாயிருக்க முடியாது, அவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி புள்ளைங்க செய்ய கூடாது. ஆனா இத எல்லாத்தையும் செய்ய வைக்குறது காதல், நானும் பாக்குறேன் ஒரு பொண்ணு காதலிச்சா அப்பன் கொளுத்துறான், காதலிக்கலைன்னா காதலிச்சவன் ஆசிட் ஊத்துறான், இந்த பொண்ணுங்களுக்கு காதல் எவ்வளவு பெரிய தொல்லை. அதவிட்டு ஒதுங்கி இருந்தா தான் என்ன”
“போதும் டி போதும் இப்படி பேச ஆரம்பிச்சா நீ நிறுத்தவே மாட்ட, உனக்கெல்லா எப்படித்தான் காதல் வரப்போகுதோ”
“அடிப்போடி பைத்தியம், என்னைப் பொறுத்த வரைக்கும் காதல் இப்போதைக்கு ஒரு முட்டாள் தனம், அந்த அந்த ஸ்டேஜில செய்ய வேண்டியதை மட்டும் தான் செய்யனும்”
”அது சரி அப்போ பாட்டி ஆன அப்புறம் தான் லவ் பண்ணுவியோ, பாவம் அந்த தாத்தா”
”யாரு டீ அந்த தாத்தா”
“ஹ்ம்ம் உன்னைய கட்டிக்கப் போறவரு தான் வேற யாரு… ரொம்ம்ம்ம்ப்ப பாவம் டி”
“அடிங்க….. “
“ஒரே ஒரு டவுட்டு டி”
“என்னா”
மைவிழியின் காதில் பவி என்ன கேட்டாளோ, தெரியவில்லை, அப்போ பிடிச்ச ஓட்டம் இன்னும் நிற்கவில்லை பவி.
“அடியே யார பாத்து இந்த கேள்விய கேக்குற, ஒரு புள்ளை அறிவாளித்தனமா பேசுனா பொறுக்காதே, நீ எந்த ரூமுக்கு போனாலும் தூங்க இங்க தானே வருவ அப்போ பேசிக்கிறேன் டி உன்னை” ஊர் எல்லை அமர்ந்திருக்கும் அய்யனாரின் தோரணையில் காத்திருந்தாள் மைவிழி.

Advertisement