Advertisement

கல்யாணக் களைப்பு நீங்க, ஷவரை திறந்துவிட்டு அதில் நின்றபடி கண்மூடி மைவிழி முகத்தை விழித்திரையில் வரைந்து கொண்டிருந்தான் மைத்ரேய ராஜா.

எவ்வள்வு நேரம் நின்றிருப்பானோ தெரியாது, உடல் மனம் அனைத்தும் குளிர்ந்து உதறல் எடுக்கும் வரை நின்ரிருந்தவன் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு குளித்து முடித்து வெளியே வந்தான்.

“குளிக்கிறதுக்கு அஞ்சு நிமிஷம் போதாதாடா…. எவ்வளவு நேரமா கதவை தட்டுறது….” என்றான் பூபதி கடுப்பாக

“அது ஒண்ணுமில்ல சகலை, மனசெல்லாம் ஜில்லுன்னு ஆயிடுச்சா, கண்ணுமுன்னாடி என் ஆளு வந்து நின்னுட்டா டா, அப்புறம் எங்க சீக்கிரம் வரது, அவள மனசார கொஞ்சுதுக்குள்ள கதவை தட்டீட்ட…”

“என்னது மைவிழி உள்ள இருக்கா… இப்போதானே பக்கத்து ரூம்ல பாத்திட்டு வந்தேன்….”

“அடேய் அடேய் நீயெல்லா லவ் பண்றன்னு சொன்னா, நானே நம்ப மாட்டேன் டா…”

“நீ ஏன் டா நம்பனும் என் ஃப்ளவர் நம்புனா போதும்…”

“யாருடா அந்த ஃப்ளவர்..? காலிஃப்ளவர்…”

“டேய் மலரை தான் அப்படி செல்லமா சொன்னேன்…”

“செல்லமா சொல்றதெல்லாம் அவகிட்ட சொல்ல வேண்டிதுதானே….”

“ஏண்டா பேச மாட்ட… இன்னும் ஒரு மாசத்துல எங்களுக்கும் கல்யாணம் ஆகப்போகுது டா, அதுக்கப்புறம் நானும் உன்னை விட பேசுவேன் டா…”

“உனக்கு அடுத்த மாசம் கல்யாணம்னு ஃபிக்ஸ் பண்ணதே நான் தான், என்கிட்டயே சொல்றியா…”

”எதோ அத்தை மாமாகிட்ட சொல்லி ஓகே பண்ண வச்சிட்ட, அதுக்கு என்ன இப்ப, உன் கால்ல விழனுமா என்ன…?

“விழுந்தா என்னடா தப்பு, ஒரு அத்தை மாமா கிட்ட இல்ல, ரெண்டு அத்தை மாமாகிட்ட பேசி கண்வின்ஸ் பண்ணி இந்த வீட்டுக்கு பொறுப்பான மாப்பிள்ளையா பதவி ஏத்த அன்னிக்கே என் பணி செவ்வனே செஞ்சிருக்கேன்… உன்னால முடியுமாடா… முடியுமா…”

“முடியாது ராசா, முடியாது…. உனக்கு ஒரு கொழுந்தியாவை கொடுத்த ஆண்டவன் எனக்கு குடுக்கலயே… அத்தை மாமா இப்படி எனக்கொரு இளைய கொழுந்தியாவா கொடுத்திருந்தா, நானும் கல்யாணம் பண்ணி அழகு பாத்திருப்பேன்…”

“எதே….”

“இல்லடா கல்யாணம் செஞ்சுவைச்சு அழகு பாத்திருப்பேன்னு சொன்னேன்…”

“ஹான்ன்ன் அது….” என்று ராஜா முடிக்கும் முன்

“மொதல்ல நடந்த கல்யாண வேலையை ஒழுங்கா பாருங்க… அதுகுள்ள அடுத்த கல்யாண வேலைப்பத்தி பேச்சு ஒருபக்கம்னா, இல்லாத இளையவளுக்கு கல்யாணம் பண்ண முடியலையாம்…” என்ற படி வந்து நின்றாள் மலர்விழி.

“என்ன மலரு… இப்படி சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிற, மாமனுக்கு ஒரு பதட்டமா இருக்கா இல்லையா…” என்றான் ராஜா.

“மாமா என்ன செய்றீங்க இவ்ளோ நேரம், இவர் கூட வெட்டி அரட்டை அடிக்க உங்களுக்கு இந்த நேரம் தான் கிடைச்சுதா, அங்க அக்கா ரெடியாகி வெயிட் பண்ணீட்டு இருக்கா… அவ கோபமாகுறது முன்னாடி போங்க…” என்று மலர் ராஜாவை விரட்ட,

“என்னை எவ்ளோ நாள் காக்க வைச்சா, இப்ப கொஞ்ச நேரம் வெயிட் பண்ணா என்னவாம்…” என்று வாய் தான் சொன்னதே தவிர கால்கள் அவளறை நோக்கி சென்றிருந்தது.

அதைப்பார்த்து சிரித்த இருவருக்கும் மனதில் அவர்கள் மகிழ்ச்சியான வாழ்விற்கான வாழ்த்துகள் இருந்தது.

மலர்விழி ஒரே நாளில் இத்தணை பாவம் காட்டுவாள் என்று பூபதியும் அறிந்திருக்கவில்லை. அவள் மீதான காதலின் வித்தே அவள் தைரியத்தில் பிறந்தது தான். அவளின் துணிச்சலும் துடிப்பான பேச்சிலும் கவரப்பட்ட பூபதி பாண்டியன் அவள் வசம் காதலில் சிக்குண்டான்.

ஆனால் இன்று அவளது அதிர்ச்சியும் மௌனமும் அவனுக்கு புதிதாக இருந்தது. எல்லா சூழ்நிலையிலும் தன் மனதில் உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தும் மலர்விழி இன்று பெரும்பகுதி நாள் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

அவளுக்கு ஆர்ப்பரிக்கும் கடலின் சீற்றம் இருந்தது. அதை விட ஆழமாய் அன்பு இருந்ததில் அவளின் சீற்றமெல்லாம் வலுவிழந்த புயலாய் போனது.

மழையும் இல்லை இடியும் இல்லை. அவளை வளர்த்த டேவிட் ஜென்சிக்கு அவளின் அமைதி புதுமையாக இருந்ததென்றால், சீதா ராஜேந்திரனுக்கு அவளை எப்படி அணுகுவது என்றே புரியவில்லை.

அவள் எதாவது பேசியிருந்தால், அதற்கு பதில் பேசலாம், அழுதிருந்தால் ஆறுதல் சொல்லலாம், கோபத்தில் கத்தியிருந்தால், சாந்தப்படுத்தலாம். அவளோ அமைதியாகவே இருக்க, தங்களை ஏற்றுக் கொள்வாளா, தங்களின் இத்துணை வருட தேடலை, அன்பை, ஏக்கத்தை புரிந்து கொள்வாளா, என்ற ஐயத்தில் தயங்கி நின்றவர்களிடம் அவளே மாலை வந்து பேசுவாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

பூபதி உடனிருந்தான் தான் ஆனால் பேச வாயெடுக்கும் முன் அவளே சைகையால் தடுத்துவிட்டாள். அவளுக்கு தேவையானது அமைதியாக மட்டுமே இருந்தது. எப்போதுமே அவளுடன் மட்டுமே அவளது அனைத்தும் பகிரப்பட்டுவிடும்.

பெற்றோர்கள், வளர்த்தவர்கள், காதலன் என யாராலும் விடுவிக்க இயலா புதிராவே நின்றவள் மாலை தானே விடையுமாகி, அனைவரிடமும் சகஜமாக பேசத்துவங்கினாள்.

ஜென்சி டேவிட்டிடம் சீதாவும் ராஜேந்திரனும் கோபத்தை மறந்திருந்தனர். பெரியவர்கள் நால்வரிடமும் ஒரு அளவோடு நின்று கொண்டவள், மைவிழியிடம் ஒன்றிப்போனாள்.

மைவிழியும் கணவனை கண்ணெடுத்தும் பாராமல், ஜீன்ஸ் ஐஸ்வர்யராய் பாணியில், ”நாங்க இன்னும் எல் கே ஜி கதையே பேசி முடிக்கல…” என்றுவிட்டு மலரோடு பேசத்துவங்கியிருந்தாள்.

இவர்களின் பேச்சை மற்றவர்கள் வேடிக்கை பார்க்க, ராஜா மட்டுமே கடுப்பாகி இருந்தான். பின்னே திருமணத்திற்கு பின்பாவது இந்த திருநிறைசெல்வனிடம் அந்த திருமதி சேர்ந்திடுவாள் என்று பார்த்தால், மீண்டும் காத்திருப்பு என்றால் அவன் மட்டும் என்ன செய்வான்…

’நாமளும் எவ்வளவு நேரம் தான் ஹீரோவாவே இருக்குறது…’ என்று மனதிற்குள் வில்லனாய் மாறியவன், சமயம் பார்த்து எல்லார் முன்பும், பூபதி பாண்டியன் மலர்விழியின் காதலை போட்டு உடைத்தான்.

அவன் நினைத்தது போலவே அவர்கள் இருவரின் பேச்சும் நின்றது. மைவிழி சட்டென எழுந்து வந்து “இப்படியா போட்டு உடைப்பீங்க… பொறுமையா சொல்லலாம்ல இன்னிக்கே சொல்லனுமா…” என்றாள் அவன் காதோரம்.

அவன் நினைத்தது நடந்துவிட்ட மகிழ்ச்சியில், சிறுபிள்ளைத்தனமாக “அப்போ நீங்களும் பொறுமையா பேசலாம்ல, இன்னிக்கே பேசனுமா, கட்டின புருசன், அதும் இன்னிக்கு தாலிகட்டின புருசன கூட திரும்பிப் பாக்காம அப்படிப் பேசனுமா…” என்று அவன் கேட்ட விதத்தில் சட்டென சிரித்துவிட்டவள், யார் பார்க்கிறார்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் யோசிக்காமல், அவன் சட்டையைப் பிடித்து உள்ளே இழுத்துச் சென்று, கதவைச் சாத்திக்கொண்டாள்.

அனைவரும் புரியாத பார்வையாய் சாத்தப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டிருக்க, முகத்தை துடைத்துக் கொண்டு, திருதிருவென விழித்தபடி ராஜா முன்னே வர எதுவுமே நடக்காதது போல் மைவிழி வந்து நின்றாள்.

என்னவாக இருக்கும் என்று கணித்து பேசத்துவங்கும் முன் அவனே பேச்சை துவக்கி இருந்தான். “என் மச்சினிச்சி மலர்விழி ரொம்ப நாள் கழிச்சு அவ அம்மா அப்பாவ மீட் பண்ணியிருக்குறதால உடனே உங்க கல்யாணத்தை வைக்க முடியாது பூபதி, புரியுதா, அவ அவங்க அம்மா அப்பா கூட சந்தோசமா ஒரு மாசம் இருந்தப்புறம் உங்க கல்யாணத்தை வச்சுக்கலாம், அவசரப்படக்கூடாது, ஓ கே… எல்லா பெரியவங்க சார்பா நானே சொல்லீட்டேன், எல்லாருக்கும் ஓகே தானே…” என்றுவிட்டு அனைவரின் முகத்தையும் பார்க்க, யார் முகத்திலும் ஈ ஆடவில்லை.

இவனே போட்டும் குடுக்குறான், இவனே காப்பாத்தியும் விடுறானேன்னு பூபதி இவனைப் பார்க்க, “யாருமிருக்க பயமேன்…” என்று ஆபத்பாந்தவன் போல சைகை செய்ததில் அவனே பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர் மலர்விழி உட்பட.

அதன் பிறகு ஜென்சி டேவிட், சீதா ராஜேந்திரன் அனைவரும் மலர்விழியை மட்டும் ராஜா வீட்டில் மைவிழியின் துணைக்கு விட்டுவிட்டு கிளம்ப, சேதுபதி மதியமே அவசர வேலையால் தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.

பூபதி கிளம்பலாம் என்று நினைக்கையில், ராஜாவே அவனை வற்புறுத்தி நிறுத்திவிட, மலர் இருக்கிறாள் என்று குஷியில் ஒப்புக் கொண்டான்.

மகாலட்சுமியும் நந்தகோபாலனும், வந்தவர்களை உபசரித்து களைத்திருந்தனர். அந்த களைப்பிலும் மகனின் திருமணத்தை வெற்றிகரமாய் முடித்துவைத்து அவன் வாழ்வை துவக்கி வைத்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியும் நிம்மதியும் அவர்களின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

இங்கு நடந்த அனைத்தை பார்வையாளராய் நின்று பார்த்தனரே தவிர அதற்காக எந்த ஆர்பாட்டமும் காட்டவில்லை. இந்த திருமணத்தில் பிரிந்த மகளை சம்மந்திவீட்டினர் கண்டுகொண்டனர் என்ற நிம்மதியே இருந்தது.

மருமகளை உச்சிமுகர்ந்து ஆசீர்வதித்து தன் வீட்டின் குலம்தழைக்க கடவுளை வேண்டிக் கொண்டு, தன் கையாலேயே அலங்கரித்தார் மகாலட்சுமி.

மைவிழிச்செல்வியை தன் மகனின் திருமதியை திருநிறைசெல்வனான மைத்ரேயராஜாவின் அறையில் அமரவைத்துவிட்டு வெளியே வந்தவர், மலரை அழைத்தார்.

“அம்மாடி இந்த ராஜா என்ன செஞ்சிட்டு இருக்கான்னு தெரியலை நீ பூபதிகிட்ட சொல்லி அவனை இந்த ரூமுக்கு அனுப்பச் சொல்லிட்டு வந்து என் கூட படுத்துக்க, சரியா…”

“சரிங்க அத்தை..” என்று பூபதியை தேடி வர அங்கே ராஜாவும் இருக்க தன் மாமனிடம் நேரிடையாக சொல்லி அனுப்பி வைத்துவிட்டாள்.

ராஜா கிளம்பியும் ஒரு புன்னகையோடே அவளும் வெளியேறப் பார்க்க, பூபதி அவளைத் தடுத்திருந்தான்.

“ஹேய் ஃப்ளவர் நீ எங்க போற…”

“ம்ம்ம் தூங்க…”

“இருடி ஒரு நிமிஷம் போகாத…”

“இன்னிக்கு எங்க அக்காவுக்கும் மாமாவுக்கும் தான் ஃபர்ஸ்ட் நைட் சோ, என் கைய விட்டிட்டு நீங்க போய் தூங்கலாம்…”

“அது தெரியாமத்தான் இப்ப உன்னை ஒரு நிமிஷம் இருக்கச்சொன்னேனா… நேத்து வரைக்கும் என் ப்ரண்டுன்னு ராஜாவை நினைச்சு அண்ணான்னு கூப்பிட்டு, இப்ப என்னடான்னா மூச்சுக்கு முன்னூறு தரம் மாமா, மாமாங்குற… என்னை ஒரு நாளாச்சும் ஆசையா மாமான்னு கூப்பிட்டிருப்பியா…”

“இதுக்குத் தான் கூப்பிட்டீங்களா…”

“ஆமா, ஒரே ஒரு தரம் என்ன மாமான்னு சொல்லு விட்டுடுறேன்…”

“அய்ய… என்ன இது மாமான்னு சொல்லுன்னு நாட்டுபுறமாட்டம் கெஞ்சீட்டு இருக்க, இவ்ளோ நாள் நீ வா போ பூபதின்னு தான் சொல்லீட்டு இருந்தேன். எதோ போனா போகுது அடுத்தமாசம் கல்யாணம் வேற பிக்ஸ் பண்ணீட்டாங்க, இந்த ஓல்டீஸ் லா வேற வாட்ச் பண்ணுதேன்னு வாங்க போங்கன்னு சொன்னா… மாமான்னு சொல்லணுமா, அதெல்லா முடியாது முடியாது…”

“ஹே ஹே நீ மாமான்னு சொல்றது அவ்ளோ அழகா இருக்குடி, ஆயிரந்தான் மாடர்னா இருந்தாலும், ஹைடெக்கா யோசிச்சாலும், இண்டர்னெட் ல லவ் பண்ணாலும், பொண்ணுங்க, அதுவும் கட்டிக்கப்போற பொண்ணு மாமான்னு கூப்பிட்டா, வர ஃபீலே தனி டி, அப்போ வரும் பாரு மனசுக்குள்ள ஒரு கெத்து, எனக்குன்னு ஒருத்தி இருக்காடான்னு… அத அடிச்சிக்கவே முடியாது… ஒரே ஒரு தரம் சொல்லுடி…”

“என்னது டி யா… “

“ஆமாண்டி, நான் டி சொல்லாம வேற யார் சொல்லுவா, மாமான்னு ஒரு தரம் கூப்பிடு டி உனக்கு ஆயிரம் உம்மா தரேன்…”

“அடப்பாவி முடியாது முடியாது சொல்லமாட்டேன் போ…” என்று வெளியில் செல்லப்போக, அவன் விடாது அவள் கையைப் பிடித்து இழுத்து தன்னோடு இறுக்கியிருந்தான்.

“டேய் விடுடா, யாராச்சும் பாக்கப்போறாங்க…”

“நீ மாமான்னு கூப்பிடாம விடமாட்டேண்டி, கத்தனுமா சத்தம் போடனுமா, யார வேணும்னாலும் கூப்பிடு, யார் வந்தாலும் நீ மாமான்னு சொல்லாம விடமாட்டேண்டி… என் மலரு…”

இவள் விலக முயற்சிக்க முயற்சிக்க, அவன் பிடி இறுகியதே தவிர குறையவில்லை. அடுத்து அவன் விரல்களும் விளையாடத் துவங்க, அவளால் அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. உடல் முழுதும் சிலிர்த்துவிட, காதுமடல்கள் சூடேறி, வயிற்றினுள் எதோ குறுகுறுக்க, அனுபவிக்கவும் முடியாமல் விடவும் முடியாமல் அப்படியொரு அவஸ்தையாகிப் போனது அவளுக்கு.

அவன் முகத்திற்கு மிக அருகில் எம்பி “மாமா… மா மா… “ என்றிட அவளின் தடுத்தலை விலக்கி, விளையாடிக் கொண்டிருந்தவனுக்கு சில்லென்ற முகத்தில் அடித்தது போல், அத்துணை புத்துணர்வு.

அவன் அதிலே லயித்து, ”இன்னொரு தரம் சொல்லு…” என்றிட அவனின் முகபாவனைகளை பார்த்தவள், மீண்டும் அவன் காதருகே சென்று கிறக்கமாய் “மாமா…” என்று உள்ளிருந்து ஆத்மார்த்தமாய் சொல்ல, அவன் அவளை முழுமையாய் விடுவித்திருந்தான்.

அதை உணராதவள், மீண்டும் அவன் காதருகே சென்று மெல்லிய முத்தமிட, “ஹே மைவிழி இதெல்லாம் அநியாயம் கதவைத்தொற…” என்று தூரத்தில் மெல்லிய சத்தம் கேட்டது.

கிறக்கத்தில் இருந்தவனுக்கு இவளின் சிரிப்பு அவனைப் பார்த்து ஏளனச்சிரிப்பு என்றுநினைத்து அவன் முறைக்க, அவளோ ராஜா சென்ற திசை நோக்கிக் கை காட்ட, அங்கே ராஜா அவனின் அறை வாயிலில் நின்று, “ஹே மைவிழி இதெல்லாம் அநியாயம் கதவைத்தொற…” என்று காலை தரையில் உதைத்தபடி கத்திக் கொண்டிருந்தான்.

அதே நேரம் வானதி உடை மாற்றி வந்து ஸ்ரீராமின் அருகில் அமர்ந்திருந்தாள். உர்ரென்று முகத்தை வைத்து அமர்ந்திருந்த ஸ்ரீராமின் முகத்தை இருகையிலும் தாங்கி தன் புறம் திருப்பியவள், ”என் மேல என்ன கோவம்…”

“அதா சொல்லீட்டனே, அப்புறம் என்ன ஃப்ஸ்ட்ல இருந்து ஆரம்பிக்கிற…”

“அது தெரியும் அந்த காரணத்தைத் தவிர பர்சனலா என் மேல ஏதாவது கோபம் இருக்கான்னு கேட்டேன்…”

”உன் மேல எனக்கு நம்பிக்கை வந்துச்சு, அதுவும் ஃபர்ஸ்ட் மீட்டிங்கிலயே, உன் கண்ணும் வாயும் உண்மையை மட்டும் தான் சொல்லுதுன்னு என் மனசு ஆழமா நம்புச்சு, சாதாரணமா எந்த எதிர்பார்ப்பும் இல்லாம உன்னை பாக்க வந்த எனக்கு அது உன் மேலான என் மனசை இன்னும் ஈர்த்துச்சு… சொல்லமுடியாத அளவுக்கு சந்தோசம் என் மனசுல, ஏன்னு தெரியல, ரொம்பவே ரிலாக்ஸா ஃபீல் பண்ணேன்…”

“இன்னும் சொல்லப்போனா உன்னைப் பார்த்த கொஞ்ச நேரத்திலயே நீ என் மனசுக்கு ரொம்ப நெருங்கீட்ட, நீ எனக்கு புதுசாவே தெரியல, யாரொ ஒரு பொண்ணுகிட்ட பேசுற மாதிரி இல்ல, நீ என் கூடவே ரொம்ப நாளா இருக்குற மாதிரி இருந்துச்சு… எப்பயும் எதையும் யார்கிட்டயும் ஸேர் பண்ணிக்காத நான், உன்கிட்டயும் அப்படியே இருந்துருவேன்னு நெனச்சேன்…”

“ஆனா நம்ம பாத்த நாள்ல இருந்து கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் உன்கிட்ட பேசாதது என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணீருச்சு, இதுக்குமேலயும் நான் இப்படி இருக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணேன்,அதுவும் உன்கிட்ட இப்படி இருக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணேன்…”

”ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கு சந்தோசமா உன்னைப் பார்த்தா கிட்ட வந்ததும் மயங்கீட்ட, மனுசனுக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா,சரி எதோ பதட்டத்துல மயங்கிருப்பன்னு, தெளியவைக்கப் பார்த்தா, அப்போ எவ்ளோ சொல்ற, இதெல்லாம் என்னைப் பார்த்த அன்னிக்கே சொல்லியிருந்தா என்ன…? நான் உன்மேல வச்ச நம்பிக்கையை நீ என் மேல வைக்கல இல்லையா, நீ எனக்கானவன்னு நான் நெனச்சேன், ஆனா நீ என்னை ஒரு அதிகாரியா மூணாவது மனுசனா மட்டும் தான் பார்த்திருக்க…. அப்படித்தானே….”

ஸ்ரீராமின் நீண்ட பேச்சில், பேச்சு மூச்சற்று அவனையே மெய்மறந்து பார்த்திருந்த வானதி அவனின் கடைசி வார்த்தைகளில் உயிர்பெற்று அவன் வாயை தன் கையால் அதற்கு மேல் பேசாமல் தடுத்திருந்தாள்.

அவன் கண்ணோடு கண் நோக்கியவள், “நான் உன்கிட்ட சொல்லாதது மட்டும் தான் உங்க பிரச்சனை, உங்க சொல்லாததெல்லாம் தான் என் பிரச்சினை, என்னைக்கு அந்த டைரிய படிச்சேனோ, அன்னைக்கே என் நிம்மதி தூக்கம் எல்லாம் போச்சு…” என்றவள் அந்த டைரியை எடுத்து அவன் கையில் கொடுத்தாள்.

அவள் கைகளில் மெல்லிய நடுக்கத்தை உணர்ந்திருந்தான் ஸ்ரீராம், சிறுபறவை தன் தாயிடம் பயத்தில் அடைக்கலம் ஆவது போல் அவனை நெருங்கி அமர்ந்து கொண்டாள்.

அவளின் நெருக்கத்தை உணர்ந்தவன் அந்த டைரியை படிக்கத்துவங்கினான்.

அதன் முன் அட்டையில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள், “அடுத்தவங்க டைரியை படிக்குறது அநாகரீகம்னு படிக்காம விட்றாதீங்க, என்னால இந்த உலகத்து சொல்ல முடியாத உண்மைகளை என் டைரி சொல்லும்…” என்றிருந்தது.

என்ன நினைத்தானோ கடைசியாக எழுதப்பட்டிருந்த பக்கத்தை தேடி எடுத்தான். அதற்கு முன் பக்கங்களை புரட்டியவன் ஸ்வாதியின் இறுதி குறிப்பை படிக்கத்துவங்கினான்.

Advertisement