Advertisement

தித்திக்கும் முத்தங்கள் 31

கார்த்தியின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியாமல் திணறிப் போனவராக மகாலட்சுமி நிற்க, கார்த்திகா அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்வதாக இல்லை. எத்தனை ஆண்டுகால வலியோ… இன்று மொத்தமாக வெளிப்பட்டு கொண்டிருந்தது.

குமுறிக் கொண்டே இருக்கும் கடல், என்றாவது பொங்கி பேரலையாக எழுவது போல் தான் இருந்தது அவளின் இந்த புதிய அவதாரம். குமரனே அவளை வாயடைத்துத் தான் பார்த்தான் என்றால் மற்றவர்களை பற்றி என்ன சொல்வது?

கார்த்திகாவும் சுற்றி நின்ற யாரையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அவளது வழக்கு மகாவுடன் மட்டுமே,அதில் தெளிவாக இருந்தாள். உடன் நின்ற கதிர்வேலையோ, பிரியாவையோ எதுவுமே கேட்கவில்லை கார்த்திகா.

அவள் கேட்கவும் மாட்டாள். அவளுக்கு கதிர் மற்றும் பிரியாவின் குணம் தெரிந்த ஒன்று என்பதாலோ என்னவோ, பெரிதாக வலி எல்லாம் இல்லை. ஆனால், மகாவின் செயலை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பத்தொன்பது ஆண்டுகளாக அவரையே சுற்றி வந்தவள். அவள் சொன்னது போலவே நாய்குட்டியாகத் தான் வளர்ந்திருந்தாள் கார்த்திகா. அன்னை என்றாலே படத்தைவிட அதிகமாக பயம்தான் வரும். ஆனால், அடித்தாலும், விரட்டினாலும் வளர்த்தவரையே சுற்றி வரும்  வாயில்லா ஜீவனைப் போல், மகாவை சார்ந்தே வாழ்ந்து வந்தவள் அவள்.

அதனால் தானோ என்னவோ, அத்தனை சுலபத்தில் அவர் தன்னை தூக்கியெறிந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள் அவள். மகா அதோடு நிறுத்தியிருந்தால் கூட, மனது ஆறியிருக்கும். ஆனால், மகா கதிர்வேல், பிரியாவை ஏற்றுக் கொண்டது அதனினும் கொடிய வலி.

அவளது கோபமும், வருத்தமும் சிறுபிள்ளைத்தனமாக தோன்றினாலும், அவளின் வலி அவள் மட்டுமே அறிய முடிந்த ரகசியம். இந்த வாழ்வு தொடங்கிய நேரங்களில், நெருக்கமானவர்களின் துணையில்லாமல் குமரனைக் கண்டு அஞ்சி நடுங்கி கொண்டிருந்தது எல்லாம் அத்தனை சுலபத்தில் மறக்கக்கூடியதா?

அவள் கொண்ட காயமும், அதன் வலியும் அவளை உறுதியாக்கியிருக்க, யாரும் வேண்டாமென்பதில் ஸ்திரமாக நின்றுகொண்டாள் கார்த்திகா. தான் எத்தனை நேரம் நின்றாலும், மகள் தன்னை ஏற்கப் போவதில்லை என்பதை வெகு தாமதமாக உணர்ந்த மகாலட்சுமி, வேதனையுடன் குமரனின் வீட்டை விட்டு வெளியேறினார்.

பிரியாவும், கதிரும் அவர் பின்னால் சென்றுவிட, குமரனுக்கு மனைவியின் வேதனை தான் பெரியதாகித் தெரிந்தது. சென்ற யாரையும் குறித்து கவலை கொள்ளாமல், “நீ ஏண்டி அழுதுட்டு இருக்க? நான் இல்லையா?” என்று பேசிக்கொண்டே மனைவியை அணைத்து கொண்டவன், அணைப்பை விலக்காமல் சமையல் மேடையில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் வாய்க்கருகில் நீட்ட, மறுக்காமல் அருந்தியவள் கொஞ்சமாக ஆசுவாசம் கொண்டாள்.

அவளின் அழுகையும், வருத்தமும் காண சகிக்கவில்லை குமரனுக்கு. அவளை அதட்டி மிரட்டி, ஒருவழியாக இயல்பாக்கியவன் அன்று மாலையே ஒரு மகப்பேறு மருத்துவரிடம் அவளை அழைத்துச் சென்றான்.

சில பரிசோதனைகளை மேற்கொண்டவர் குழந்தை உண்டாகியிருப்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்து, கார்த்திகாவுக்கான கர்ப்பகால அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் கூறி அனுப்பி வைத்தார்.

அனைத்தும் முடித்து அவர்கள் வீட்டிற்கு வந்த நேரம் ராஜம்மா தன் கையால் சமைத்து கொண்டு வந்து கொடுத்தார். “என் கண்ணு… என் ராஜாத்தி…” என்று கார்த்திகாவை நெட்டி முறித்து கொஞ்சிக் கொண்டவர் அவரே அருகில் இருந்து பரிமாற, கணவனும் மனைவியும் திருப்தியாக உண்டு முடித்தனர்.

“தினமும் நானே சமைச்சு கொடுக்கறேன் குமரா. வெளிய எல்லாம் வாங்கி குடுக்காத. நீ இன்னும் கொஞ்ச நாளைக்கு ரொம்ப கவனமா இருக்கணும் கண்ணு. காலேஜிக்கு கூட முடிஞ்சா லீவு போட்டுக்கோ.” என்று அவர் பங்குக்கு அவரும் அறிவுறுத்த, அந்த செமஸ்டருக்கான பாடங்கள் ஓரளவு முடிந்திருந்ததால், அடுத்த சில நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டாள் கார்த்திகா.

அவளுக்கு தேவையான பாடக்குறிப்புகளை பூரணியும், தர்ஷினியும் அனுப்பி விடுவார்கள் என்பதால் கல்லூரி குறித்த கவலை இல்லை கார்த்திக்கு.

உணவு பொறுப்பையும் ராஜம்மாவிடமே ஒப்படைத்துவிட்டான் குமரன். “நீ மூணு வேளையும் சமைச்சு கொடுத்திக்கா.. உனக்கு பூ வியாபாரத்துல என்ன வருமானம் வருதோ, அதை நான் கொடுத்துட்றேன்.” என்று குமரன் கூறிட,

“நீ சமைக்க என்ன வேணுமோ வாங்கியாந்து குடு. நான் வாய்க்கு ருசியா என் பொண்ணுக்கு சமைச்சி போடறேன். காசு பத்தி எல்லாம் பேசக்கூடாது..” என்று முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார் ராஜம்மா.

கார்த்திகா கருவுற்று இருந்த செய்தி ராணியின் காதுகளுக்கும் சென்று சேர, அப்படியொன்றும் மகிழ்ந்து விடவில்லை அவர். அவருக்கு ‘குமரன் தன்னை மதித்து தன்னிடம் சொல்லி இருக்க வேண்டாமா’ என்று தான் தோன்றியது.

ஆனால், சேகருக்கு அப்படியெதுவும் இல்லை போல. மகனுக்காக காத்திருக்காமல் காலை விடிந்தும் விடியாத வேளையில் மகன் வீட்டுக்கு வந்துவிட்டார் அவர். மகனை கட்டி அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர் மருமகளையும் நெஞ்சார வாழ்த்திச் சென்றார்.

ராணியைக் கண்டாலே பயந்து நடுங்கும் கார்த்திகாவுக்கு மாமனாரை கண்டு பயமெல்லாம் வரவில்லை. மாறாக, பார்க்கவே பரிதாபமாக இருந்த அவர்மீது இரக்கம் தான் சுரந்தது.

குமரன் அவள் முகத்தைப் பார்த்தே அவள் நினைப்பைக் கண்டு கொண்டவன், “அவர அப்படியெல்லாம் லேசா எடை போடாத. ராணிக்கே டப்பு கொடுக்கற ஆள் அவரு. காலையில இன்னும் கடை திறந்து இருக்கமாட்டான். அதான் தெளிவா இருக்காரு.”  என்று எச்சரித்துச் சென்றான் குமரன்.

அடுத்து வந்த நாட்களில் கார்த்திகாவை குமரனும், ராஜம்மாளும் கவனித்துக் கொண்ட விதத்தில், மேலும் மெருகேறி இருந்தாள் கார்த்திகா. அவளிடம் மகாவுக்கான தேடல் இல்லாமல் இல்லை. ஆனால், ராஜம்மாவின் அருகாமையில் மகாவை நினைக்காமல் இருக்க கற்றுக் கொண்டாள்.

அதுவும் தனது உணர்வுகள் குழந்தையை பாதிக்கும் என்று மருத்துவர் கூறியிருக்க, முயன்று தன் கவலைகளை ஒதுக்கி வைத்துவிட்டாள்.

அவள் குடும்பம் என்பது குமரனும், அவளும் மட்டும்தான் என்பதில் மிகத் தெளிவாக இருந்தாள் கார்த்திகைச்செல்வி. இருபக்க உறவுகள் மீதும் அதிருப்தி தான் அதிகமாக இருந்தது.

மகா அன்று ஒருநாள் வந்து அழுது கொண்டு நின்றவர் அதன்பின் மகளைத் தேடி வரவில்லை. அதில் குமரனுக்கே கொஞ்சம் வருத்தம் தான். அவ்வளவுதானா அவர் பாசம்? என்று கடுப்பில் தான் இருந்தான் அவனும்.

கார்த்தி பேசியதில் தவறே இல்லை  என்று அவனுக்குமே தோன்றிவிட்டது.  மகா மட்டுமில்லை கதிரும், பிரியாவும்கூட அதன்பின்னர் கார்த்திகாவை வந்து பார்க்கவில்லை.

இத்தனைக்கும் இன்னும் குமரனின் ஆட்டோவைத் தான் ஓட்டிக் கொண்டிருக்கிறான் கதிர். வாடகை கொடுக்க தினம் வீட்டிற்கு வந்து சென்றாலும், அவன் பேச்சு குமாரனோடு முடிந்து விடுகிறது. தாயை தங்கை மதிக்கவில்லை என்ற கோபம் அவனுக்கு.

இவர்கள் இப்படி என்றால், அடுத்தது ராணி… கார்த்திகா இப்போது நான்காம் மாத முடிவில் இருக்க, இன்னமும் எட்டிக்கூட பார்க்கவில்லை அவர். ஆனால், அவருக்கும் இன்னும் வாரம் தவறாமல் அழுது கொண்டு தான் இருக்கிறான் குமரன்.

இவர்களில் ஒரே ஒரு ஆறுதல் சேகர் மட்டுமே. அவர் வேலை செய்து கிடைக்கும் பணத்தில் தான் குடித்தது போக மீதியில் அவ்வபோது மருமகளுக்கு பழங்கள், தின்பண்டங்கள் என்று அவருக்கு தெரிந்ததை வாங்கி வந்து கொடுக்க ஆரம்பித்து இருந்தார் மனிதர்.

கணவன் குடிக்க முயற்சி செய்ததையே பொறுத்து கொள்ளாதவள் கார்த்திகா. ஆனால், சேகரை அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை. அவளைக் காண வரும் பெரும்பாலான நேரங்களில் குடித்துவிட்டு தான் வந்து நிற்பார் மனிதர்.

ஆனால், மருமகளின் முகத்தைக் கூட பாராமல், “தண்ணி சாப்பிட்டு இருக்கேன்மா. இதை வாங்கிக்கோ.” என்று வாசலிலேயே நின்று கையில் இருப்பதை கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்.

தன்னை மதிக்காத மனைவியையும், மக்களையும் பார்த்தே பழகியிருந்தவர் சேகர். கார்த்தி அவர் எப்படி இருந்தாலும், அவருக்கான மரியாதையை தவறாமல் கொடுத்துவிட, அதுவே அவள்மீது பாசம் கொள்ள வைத்தது.

இதில் தன் பேரனை சுமந்து கொண்டிருக்கிறாள் என்பதும் சேர்ந்து கொள்ள, மருமகள் மகளாகிப் போனாள்.

Advertisement