Advertisement

தித்திக்கும் முத்தங்கள் 28

கார்த்திகைச்செல்வி -குமரகுருவின் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்திருக்க, குமரகுருவின் வாழ்வில் இன்றியமையாதவள் ஆகியிருந்தாள் கார்த்திகா. அவனது ஒவ்வொரு செயலும் கார்த்திகையை மனதில் கொண்டு, அவளுக்காக என்பதாகத் தான் இருக்கும்.

கார்த்தியும் அவனுக்கு குறையாத அன்பை அள்ளிக்கொடுக்க, இருவருக்கும் மகிழ்ச்சிக்கு குறைவில்லாத நிலைதான். அன்றும் சனிக்கிழமை என்பதால் கல்லூரி விடுமுறையாக இருக்க, காலையில் குமரனை வெளியே செல்ல விடாமல் பிடித்து வைத்திருந்தாள்.

குமரன் சலிப்பதுபோல் பாசாங்கு செய்தாலும், விருப்பத்துடனே தான் அவள் கைகாட்டிய இடத்தில் அமர்ந்திருந்தான். குமரனின் சிறுநீரக கல் பிரச்சனை இப்போது சரியாகி இருந்தாலும், அவனின் உடல்சூடு அவ்வபோது படுத்திக்கொண்டே தான் இருந்தது அவனை.

அவன் செய்யும் வேலையும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. இந்த தொழிலை விட்டுவிடும்படி ஒருமுறை கார்த்திகா கூறியதற்கு, “கடலுக்கு போகவா.” என்று வெகு சாதாரணமாக குமரன் கேட்டு வைக்க, கார்த்திகாவால் அதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

இதைவிட, அதில் ஆபத்துகள் அதிகம் ஆகிற்றே. அதுவும் செய்திகளில் தினம் கேள்விப்படும் மீனவர்களின் இறப்பு செய்திகளையும், கைது நடவடிக்கைகளையும் அத்தனை எளிதாக கடந்துவிட முடியுமா அவளால். அவர்கள் இருப்பது கடலுக்கு வெகு அருகில் என்பதால், பெரும்பாலான மக்கள் மீன்பிடிப்பதைத் தான் தொழிலாக மேற்கொண்டிருந்தனர்.

கணவனையும், பிள்ளைகளையும், சகோதரர்களையும் கடலுக்கு அனுப்பிவிட்டு அந்த பெண்கள் பயந்து கொண்டிருப்பதை பார்த்துப் பார்த்து வளர்ந்தவள் தானே அவளும். அவள் எப்படி குமரனை கடலுக்கு அனுப்பி வைப்பாள்.

அதற்கு ஆட்டோ ஓட்டுவதே மேல் என்று முடிவெடுத்தவள் அதன்பின் அவனிடம் அதைப்பற்றி பேசியதே இல்லை. ஆனால், அவன் உடல்நலனில் முன்பைவிட அதிகமாக அக்கறை எடுக்கத் தொடங்கியிருந்தாள். ஆரோக்கியமான உணவுமுறை, சில முறையான பழக்கவழக்கங்கள் என்று அத்தனையும் மாற்றியமைப்பட்டு இருந்தது கார்த்திகாவால்.

நினைத்த நேரம் உறங்கி, கிடைத்ததை உண்டு, பலநேரம் பட்டினி கிடந்து, உழைத்து உழைத்து ஓடாகி இருந்தவனை இந்த இரண்டு மாதங்களில் வெகுவாக மாற்றியிருந்தாள் என்று சொல்வதை விட தேற்றியிருந்தாள் கார்த்திகா.

அவன் முகத்தின் பொலிவும், முன்பைவிட ஒரு சுற்று சதைப் பிடித்திருந்த உடலும் பார்ப்பவர்களுக்கு அவன் வாழ்வை எடுத்துக் கூறியது. சுந்தரி ஒரு முறை மருமகனைப் பார்க்க வந்தவர் கார்த்தியின் கைகளைப் பிடித்து நன்றியுரைத்து சென்றிருந்தார். அவன் மீது உண்மையாக பாசம் வைத்திருவர் ஆகிற்றே.

இந்த பெண்ணின் கையால் இவன் சீரடைய வேண்டுமென்று தான் அவனுக்கு இத்தனை துன்பங்களோ என்று என்னும் அளவுக்கு தான் இருந்தது குமரனின் வாழ்வு.

இதோ இப்போதும் அவனை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்து அவன் தலையில் இதமான சூட்டுடன் இருந்த நல்லெண்ணையை தொட்டு கைகளால் மசாஜ் செய்து கொண்டிருந்தாள். அவள் கையின் அழுத்தமான தீண்டலில் கண்கள் சொக்கியது குமரனுக்கு.

அவனுக்கு உடல்சூடு குறைகிறதா இல்லையா என்பதெல்லாம் தெரியாது. ஆனால், வாரத்திற்கு இப்படிச் செய்வதால் உடல் புத்துணர்ச்சியாக இருப்பதை உணர முடிந்தது அவனால். தலைக்கு மட்டுமல்லாது கழுத்து, கைகள், கால் பாதங்கள் என்று கார்த்தி அவன் உடல் மொத்தமும் எண்ணெய் தேய்த்து பிடித்துவிட, சில நேரங்களில் எண்ணெய் வைத்து விடுபவளையும் சேர்த்து தன்னோடு பூசிக் கொள்வான் அவன்.

கார்த்தியின் கல்லூரிப்படிப்பு தடைபடுமோ என்று முதலில் சற்று பயந்திருந்தவன் முதல் முறைக்குப் பின் அவளை நெருங்காமல் இருக்க, அதற்கும் கார்த்திதான் வழி கூறினாள். அதன்படி கார்த்தியின் விடுமுறை தினங்கள் தான் அவர்கள் களிக்கும் நேரங்களாக இருக்கும். ஒரு வாரத்தின் மொத்த தேடலும் அன்று ஒருநாளில் மொத்தமாக வெளிப்படும் குமரனிடம்.

கார்த்திக்கும் எப்பொழுதும் தன்னையே முன்னிறுத்தி, தனக்காக மட்டுமே யோசிக்கும் குமரனை முன்பைவிட அதிகமாக பிடிக்க ஆரம்பித்து இருந்தது. அவள் காதல் உண்டியலில் சேர்க்கும் சில்லறைகளைப் போல் சிறுக சிறுகச் சேர்ந்து கொண்டே தான் இருந்தது.

கைகள் குமரனின் தலையையும், கழுத்தையும் இதமாக நீவிக் கொண்டிருக்க, பின்னணியில் அவள் அலைபேசியில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

ஆதாரம் அந்த

தேவன் ஆணை சேர்ந்தாய்

இந்த மானை

நாவார ருசித்தேனே

தேனை தீர்ந்தேன் இன்று

நானே

வந்தத் துணையே

வந்து அணையே

அந்த முல்ல

சந்திரனை சொந்தம்

கொண்ட சுந்தரியே…

அந்தப் பாடல் வரிகளில் தன்னைத் தொலைத்தவள் கைகளில் இளக்கம் கொடுக்க, அழுத்திக் கொண்டிருந்த கைகள் அழகாக வருடத் தொடங்கியது குமரனை. குமரனுக்கு அவள் தீண்டலின் பேதம் புரிந்துபோக, கழுத்தில் இருந்த கைகளை பிடித்து தன்மீதே அவன் இழுத்துவிட, மொத்தமாக குமரனின் முதுகில் ஒட்டிக்கொண்டாள் கார்த்திகா.

“அச்சோ… என் மேலேயும் எண்ணெய்யை பூசியாச்சு. ஏன் இப்படி பண்ணீங்க?” என்று கார்த்தி சினுங்க, அதைக் கண்டுகொள்ளாமல் அவளை இப்போது தன் மடிக்கு மாற்றியிருந்தான் குமரன்.

“நான் என்ன பொம்மையா? இப்படி தூக்கிப் போட்டு விளையாடிட்டு இருக்கீங்க?” என்று பெண் முகம் சுருக்க,

“சரி தூக்கிப் போடாம, கைக்குள்ள வச்சுக்கறேன்.” என்றவன் சொன்னதுபோலவே இருகைகளுக்குள் அடைத்துக் கொண்டான் அவளை.

அதோடு நிற்காமல், “என்ன ட்ரீம்சா.” என்று அவன் கேலியாக கேட்க, வெட்கத்தை மறைத்துக் கொண்டே, “அச்சோ…போச்சு.” என்று அவள் பதற, “இந்த அச்சோவ விடவே மாட்டியாடி நீ.” என்றான் அவன்.

“போங்க. நான் ஏற்கனவே குளிச்சுட்டேன். இப்போ உங்களால உடம்பு மொத்தமும் எண்ணெய்.” என்று அவள் எழுந்து கொள்ள முயற்சிக்க, இரு கைகளிலும் எண்ணெயை பூசிக்கொண்டு எங்கே எழுவது. கைகள் வழுக்கியதில் மீண்டும் அவன் மீதே விழுந்தாள் அவள்.

“ம்ம்ம்ம்ம்ம்..” என்றவள் போலியாக அழுவதுபோல் முகத்தை சுருக்க,

“என்னடி இப்போ. லீவ்தானே விடு… பொறுமையா குளிக்கலாம்.” என்றவன் கைகள் அவளிடம் அத்துமீற,

“சும்மாயிருங்க கையை வச்சுட்டு. அதான் நைட் எல்லாம்…” என்றவள் மீதியைக் கூறாமல் வாயை மூடிக்கொள்ள,

“ஏன் என்ன செஞ்சேன் நைட்…” என்றவன் பேச்சோடு பேச்சாக அவளையும் சேர்த்து அணைத்துக்கொண்டு தரையில் மல்லாக்க விழுந்திருந்தான். அவன் கீழே கிடக்க, அவன்மீது கிடந்தாள் கார்த்தி.

“அதெல்லாம் சொல்ல முடியாது.என்னை விடுங்க.”

அதெல்லாம் விட முடியாது. இன்னிக்கு எனக்கு லீவு. ஒழுங்கா என்கூட இரு. சமைக்கிறேன், துணி துவைக்கிறேன்னு ஓடுன, நான் எழுந்து வேலைக்கு போய்டுவேன்.” என்று மிரட்டினான் அவன்.

“சமைக்கலைன்னா சாப்பிட முடியாது… துவைக்கலைன்னா இந்த துரை நாளைக்கு வேலைக்கு போக சட்டை கிடைக்காது…” என்றவள் அவன் தாடையைப் பிடித்துக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்டி. எனக்கு கிடைக்கறதே இந்த ரெண்டுநாள் தான். அதுக்கும் ஏகப்பட்ட ரூல்ஸ் போடற நீ.” என்றவன் அவள் வாயை அடைக்கும் வேலைகளில் இறங்கியிருந்தான்.

கூடல் முடிந்து விலகியவன் அவளையும் விடாமல் தூக்கிக்கொண்டு குளியலறைக்குள் நுழைய, இருவரும் குளித்து முடித்து வெளியே வரும்போது நேரம் மதியம் இரண்டு மணி.

அதற்குமேல் கார்த்தி சமையலில் இறங்க, வீட்டை ஒதுங்க வைப்பது, சமையல் அறையில் இருந்த அழுக்கு பாத்திரங்களை கழுவி வைப்பது, துணிகளை கார்த்தி சொன்னபடி பிரித்து ஊறவைத்தது என்று அத்தனை வேலைகள் செய்து கொடுத்தான் குமரன்.

இதுவும் அவளுக்காக அவன் செய்வது தான். காலை வேளைகளில் அரக்கப்பரக்க வேலைகளை முடிப்பவள் ஒருநாள் சமையலறையில் ரசத்தை கையில் கொட்டிக் கொண்டிருப்பாள். அவள் அத்தனை அவசரமாக வேலை செய்வதைக் கண்டவன் ஏகத்திற்கும் சத்தமிட, கார்த்திகா வாயைத் திறக்கவில்லை.

இதுவும் வழக்கம் தான். அவன் சாதாரணமாக பேசினால் தன்னை மறந்து அவனோடு வாயடிப்பவள் அவன் கோபம் கொண்டுவிட்டால் வாயைத் திறக்கவே மாட்டாள். அவன் கோபத்தில் இருக்கும் நேரம் என்ன சொன்னாலும் அவன் காதில் ஏறாது என்பது அவள் அனுபவத்தில் உணர்ந்த உண்மை.

அவன் கோபம் மொத்தத்தையும் தாங்கி கொண்டவள் அவன் காலையில் சமைக்க வேண்டாம் என்றதை மட்டும் ஒத்துகொள்ளவே இல்லை. வேறு வழியில்லாமல் அவள் சமைப்பதற்கு ஒப்புக்கொண்ட குமரன், அவளின் வேலைகளில் பாதியை தனதாக்கிக் கொண்டான்.

ஆரம்பத்தில் தடுமாறினாலும் அழகாக கற்று தேர்ந்திருந்தான் இந்த ஒருமாதத்தில். தான் சாப்பிட்ட தட்டைக் கூட எடுத்து வைத்து பழக்கம் இல்லாதவன் மனைவிக்காக பாத்திரம் தேய்க்க பழகியிருந்தான்.

இப்போதும் அடுத்த ஒரு மணி நேரத்தில் அத்தனை வேலைகளையும் முடித்தவர்கள்,மாலை நேரத்தில் வெளியே கிளம்பி இருந்தனர்.

இருவரும் மெரீனா கடற்கரைக்கு வர, அடுத்த ஒருமணி நேரம் குமரனின் கைகளை விடவே இல்லை கார்த்திகா. கடல் அலையில் அவன் கையைப் பிடித்துக்கொண்டு குழந்தையாக குதூகலித்துக் கொண்டிருந்தாள் அவள்.

மகாலட்சுமியை மீறி எதையும் செய்யும் துணிவு இல்லாததால் கடற்கரைக்கு ஒருமுறை கூட சென்றதில்லை அவள். இத்தனைக்கும் கடற்கரைக்கு எதிரில் தான் கல்லூரி என்றாலும், முயற்சி கூட செய்தது இல்லை. அதற்கென்ன தண்டனை கிடைக்குமோ என்ற பயத்திலேயே கடற்கரையை நினைத்துக்கூட பார்த்ததில்லை அவள்.

பேச்சுவாக்கில் ஒருமுறை இந்த தகவலைக் கணவனிடம் உளறிக் கொட்டியிருக்க, அவனோ கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பிவிடுவான். பெசன்ட் நகர், கோவளம், மகாபலிபுரம், மெரீனா என்று நினைத்த நேரம் கிளம்பிவிடுவர் இருவரும்.

கையில் அவனது ஆட்டோ இருப்பதால் இரவு நேரம் கூட, பயமில்லாது அவன் சுற்றி வந்தான் என்றால், அவன் அருகில் இருக்கும் தைரியத்தில் அவன் கையைபிடித்துக் கொண்டே சுற்றி வருவாள் அவள்.

என்னவோ, அவனைமீறி என்னை யாரும், எதுவும் தொட முடியாது என்று ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை அவளுக்கு. ஆண்டுக்கணக்கில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களுக்கே இந்த நம்பிக்கை என்ற வார்த்தை நம்பமுடியாததாக இருக்க, கார்த்தி அப்படியே நேரெதிர்.

குமரன் மீது அவள் கொண்ட நம்பிக்கைதானே அவளின் இந்த வாழ்வு. அதை மறுக்க முடியுமா?

இரவு பத்து மணி வரை கடற்கரையில் இருந்தவர்கள் அதன்பின்னரே வீட்டிற்கு கிளம்ப, அவன் வீட்டிற்கு வரும் வழியில், அவள் வேலை பார்க்கும் கடையின் முன்னே ஆட்டோவுக்காக காத்திருந்தாள் பிரியா.

தூரத்தில் வரும்போதே குமரன் கவனித்துவிட, அப்போது தான் அவளின் சீருடை யையும் கவனித்தான் அவன். “இவ வேலைக்கு போறாளா?” என்று குமரன் அதிர்ச்சியடைய, அதற்குள் அங்கு வந்து நின்ற ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறிக் கிளம்பியிருந்தாள் பிரியா.

இந்த நேரத்தில் கொஞ்சமும் பயமில்லாமல் அவள் ஆட்டோவில் ஏறிக்கொள்ள, ‘இன்னும்கூட முழுசா புத்தி வருதா பாரு.’ என்று தங்கையை நினைத்து பற்களை கடித்தவன் திரும்பி மனைவியைப் பார்க்க, நீரில் ஆடிய களைப்பில் உறங்கியிருந்தாள் அவள்.

அந்த ஷேர் ஆட்டோ ஆங்காங்கே நின்று நின்று நிதானமாக செல்ல, அவனை தொடர்ந்து தானும் வேகத்தைக் குறைத்துவிட்டான் குமரன். பிரியா அவன் வீட்டிற்கு அருகில் இருந்த பிரதான சாலையில் இறங்கியவள்  வீட்டை நோக்கி நடக்க, அவள் அருகில் வந்து வண்டியை நிறுத்தினான்.

பிரியா யாரோ என்று பயந்து பார்த்தவள் அண்ணனைக் காணவும் பதட்டம் தணிந்தாள். நெஞ்சம் கொஞ்சமாக செய்த தவறை உணர்ந்திருக்க, அவன் முகம் பார்க்க முடியாமல் தலை குனிந்தாள் அவள்.

குமரன் அவளிடம் எதுவும் கேட்காமல், “கார்த்தி… கார்த்தி…” என்று இருமுறை கன்னத்தில் தட்டி தன் மனைவியை எழுப்பினான். அவள் அடித்துப் பிடித்து எழுந்து பார்க்க, மனைவியைப் பார்த்து சிரித்துக்கொண்டே, “அவளை வண்டியில ஏற சொல்லு.” என்றான்.

கார்த்தி புரியாமல் வெளியே பார்க்க, அப்போதுதான் பிரியா அவள் கண்ணில்பட்டாள். அவளது வாய், ‘அண்ணி’ என்று முணுமுணுக்க,

“வாங்க… உட்காருங்க.” என்று தயக்கமே இல்லாமல் அவளை அழைத்தபடி உள்ளே நகர்ந்து அமர்ந்துகொண்டாள் கார்த்தி.

பிரியா எதுவும் பேசினால் அழுதுவிடுவோமே என்ற அச்சத்தில் வாயைத் திறக்காமல் அமைதியாக அத்தீவில் ஏறிக் கொண்டாள். இவர்கள் வந்து இறங்கும்போது நேரம் பத்தரையைக் கடந்திருக்க, அப்போதும் ராணியின் தண்ணீர் டேங்க் மீட்டிங் முடிந்திருக்கவில்லை.

மகன் ஆட்டோவில் மகள் வந்து இறங்குவதைப் பார்த்தவர் பிரியாவை ஏளனமாக பார்க்க, அவரது பார்வையைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக குமரன், கார்த்திகாவிடம் தலையசைத்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தாள் பிரியா.

அவள் ராணியைக் கடக்கும் நிமிடம், “த்தூ..” என்று அவள் முகத்தில் துப்பாத குறையாக கீழே காறி உமிழ்ந்தார் ராணி. பிரியா அப்படியே நின்றுவிட, “கேடுகெட்ட நாயே.. உனக்கு சூடு, சுரணை இல்ல. அவன் கூட வந்து நிற்கிற.? தங்கச்சியே இல்லன்னு சொல்லிட்டு போனவன்கூட உனகென்னடி உறவு?” என்று கத்தினார் ராணி.

பிரியா, “லேட்டாகிடுச்சுன்னு கூட்டிட்டு வந்தான்மா.” என்று பிரியா அமைதியாக கூற,

“ஏன் இத்தனை நாள் நீயா வரல? இன்னிக்கு என்ன சொகுசு வேண்டி கிடக்கு.. என் பொண்ணாடி நீ” என்று அவர் பேசிக்கொண்டே செல்ல, நின்றால் இன்னும் பேசுவார் என்பதால் அதற்குமேல் அங்கே நிற்காமல் வேகமாக வீட்டிற்குள் நுழைந்துவிட்டாள் பிரியா.

குமரன் அதுவரை நின்று பார்த்திருந்தவன் தங்கை உள்ளே செல்லவும், தானும் மனைவியை அழைத்துக்கொண்டு தனது வீடு இருந்த குடியிருப்புக்குள் நுழைந்துவிட்டான். கத்தி கொண்டிருந்த ராணியை ஒரு பொருட்டாக மதிக்கவே இல்லை அவன்.

ஆனால், வீட்டிற்குள் நுழைந்த நிமிடம் வேறெதையும் சிந்திக்க முடியாமல் அவனை அலைக்கழிக்கத் தொடங்கினாள் பிரியா.

பெற்றது ராணியாக இருந்தாலும், அவனுக்கு ஓரளவு விவரம் தெரிந்த நாளிலிருந்து அவளுக்கான தேவைகளை பார்த்து பார்த்து கவனித்து வந்தவன் அவன்தானே. அப்படி வளர்ந்தவள் இன்று துணிக்கடையின் சீருடை அணிந்து கொண்டு அந்த இரவு நேரத்தில் அந்த ஆளில்லாத சாலையில் நின்றது அவனை கலங்கச் செய்தது.

கார்த்தி குளித்து உடையை மாற்றி வருவதற்குள்  வெறும் தரையில் கையை தலைக்கு வைத்துக்கொண்டு படுத்திருந்தான் குமரன். கார்த்தி யோசனையாக அவனைப் பார்த்தவள் “என்னப்பா.” என்று அவன் அருகில் அமர, வேகமாக நகர்ந்து கார்த்தியின் மடியில் சாய்ந்து கொண்டான் குமரன்.

அவன் மிகவும் கலங்கி போகும் நேரங்களில் தான் அவன் இப்படி கார்த்தியிடம் ஆறுதலைத் தேடுவது. பெரும்பாலும், ராணி அவனை வதைக்கும் நேரங்களில் தான் இப்படி அவளிடம் ஒண்டிக் கொள்வான்.

இன்றும் அவர் பேசியதைத் தான் நினைக்கிறானோ என்று தானாகவே முடிவெடுத்தவள், “அவங்க பேசுறது புதுசா? எனக்கு சொல்லிட்டு நீங்க ஏன் இப்படி இருக்கீங்க?” என்றாள் கார்த்தி.

“பிரியாவை பார்த்தியா?” என்றான் குமரன்.

“ஏன்… அவங்களுக்கு என்ன?”

“வேலைக்கு போறா போல.”

“என்ன சொல்றிங்க?”

“நீ கவனிக்கலையா? யூனிபார்ம் போட்டு இருந்தாளே…”

“இவங்க ஏன் வேலைக்கு போகணும்? நீங்கதான் காசு கொடுக்கறீங்க இல்ல…”

“உனக்கு என் அம்மாவை பத்தி தெரிஞ்சுது அவ்ளோதான். அம்மாக்கும், பொண்ணுக்கும் ஏதாவது வாக்குவாதமா இருக்கும். அதான் இவ முறுக்கிட்டு கிளம்பி இருப்பா.” என்று தாயையும், தங்கையையும் சரியாக கணித்தான் குமரன்.

“அதுக்கு ஏன் வேலைக்கு போகணும். அவங்க புருஷன் வீட்டுக்கு போக வேண்டியது தானே.”

“தலையில இருக்க கிரீடம் இறங்கிடாது… ராணி பொண்ணாச்சே.” என்று கசப்புடன் சிரித்தான் குமரன்.

“ம்ச்… அப்படியெல்லாம் தெரியல. கொஞ்சம் மாறி தான் இருக்காங்க.”

“நாமதான் நினைச்சுக்கணும்.அவனும் ஒழுங்காதான் இருக்கான். இங்கே இருந்து இதெல்லாம் பண்றதுக்கு ஒழுங்கா அவன்கூட போகலாம் இல்ல.” என்றான் குமரன்.

“அவன் வந்து கூப்பிடணும்னு நினைக்கிறாங்களோ என்னவோ…”

“எப்படி கூப்பிடுவான். அவனை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் இழுத்து விட்டிருக்கா… கொஞ்சமாவது அவனுக்கும் ரோஷம் இருக்கும்ல.”

“புருஷன் பொண்டாட்டிக்குள்ள என்ன ரோஷம் வேண்டி கிடக்கு. அவன் பொண்டாட்டி தானே, அவங்க பிரச்சனையை அவனே பார்த்துக்கட்டும்.” என்றவள் குமரன் என்ன ஏதென்று உணரும்முன்னே அவன் அலைபேசியில் இருந்து கதிர்வேலை அழைத்து விட்டாள்.

எதிர்முனையில் அவன், “சொல்லு குமரா…” என,

“உன் பொண்டாட்டி வேலைக்கு போறாங்க. அவரோட தங்கச்சியா இருந்தவரைக்கும், அவங்களுக்காக எல்லாமே என் புருஷன் பார்த்திருக்கார். இப்பவும் உங்களை நினைச்சு அவர் ஏன் கவலைப்படணும்? நீ புருஷன் தானே. உன் பொண்டாட்டியை பாரு.” என்றவள் அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

ஏதோ ஒரு அசட்டு துணிச்சலில் பேசிவிட்டாலும், பேசி முடிப்பதற்குள் கைகள் நடுங்க தொடங்கியிருக்க, குமரன் அவள் நடுக்கத்தை கண்டு சிரிக்க தொடங்கிவிட்டான்.

Advertisement