Advertisement

தித்திக்கும் முத்தங்கள்

அவர்கள் குடியிருப்பின் கீழே இருந்த பெட்டிக்கடையின் அருகே அமர்ந்திருந்தார் தங்கராஜ். ஏறத்தாழ ஒருமணி நேரமாக அங்கு காத்திருக்கிறார் அவர். ஆனால், இன்னும் அவர் மனைவி வேலை முடிந்து வந்திருக்கவில்லை.

மகாலட்சுமி வழக்கமாக வீடு வரும் நேரம் கடந்து, மேலும் அரைமணிநேரம் ஆகிவிட்ட பின்பும் அவர் வராதது வேறு சந்தேகத்தைக் கொடுக்க,’வரட்டும் அவ’ என்று ஒரு முடிவுடன் தான் அமர்ந்திருந்தார் தங்கராஜ்.

அவரை மேலும் அரைமணிநேரம் காக்கவைத்த பின்னரே மகாலட்சுமி வீடுவர, கீழே வாசலில் அமர்ந்திருந்த தன் கணவரைக் கண்டாலும், அவரைக் கண்டுகொள்ளாமல் குடியிருப்புக்குள் நுழைய முயன்றார் மகாலட்சுமி.

ஆனால், தங்கராஜ் விடாமல், “ஏய் அவுசாரி மு…. நில்லுடி.” என்று உரத்தகுரலில் கத்த, ஆங்காங்கே நின்று கொண்டிருந்த ஒரு சிலரது கவனம் இவர்கள் மீது திரும்பியது.

இதுவரை என்ன சண்டையாக இருந்தாலும், மகாலட்சுமி வீட்டைத் தாண்டி வெளியே வந்ததே கிடையாது. தங்கராஜ், கதிர்வேலுவை வெளியே தள்ளி கதவை சாற்றி விடுவார். ஆனால், அவர்களுக்கு சரியாக எப்போதும் தெருவில் இறங்கமாட்டார் மகாலட்சுமி.

அப்படிப்பட்டவரை அத்தனைப் பேரின் முன்பு கட்டிய கணவன் ‘அவுசாரி’ என்றுவிட, திடமானவராக இருந்தாலும் கண்கள் கலங்கியது. ‘இவனோட இத்தனை வருசம் குடும்பம் பண்ணி, அடியும் உதையும் வாங்குனது இந்த சொல்லு கேட்கவா’ என்று மனம் விட்டுப்போனது.

அந்த வார்த்தையிலேயே அவர் உடைந்து நிற்க, அவர் குமுறலைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், “மணி இன்னா ஆவுது… இந்த நேரம் வரைக்கும் உன்னை கூப்புடுறாங்களா? வேலை முடிஞ்சா வூட்டுக்கு வராம எவனை பார்க்கடி போயிருந்த.” என்றவர் மகாலட்சுமியின் காதோடு சேர்த்து ஒரு அறைவிட, அந்த குடியிருப்பின் பக்கவாட்டு சுவற்றில் மோதி நின்றார் மகாலட்சுமி.

அந்த சுவற்றில் இடித்துகொண்டது தலைவலியைக் கொடுக்க, தலையைப் பிடித்துகொண்டு நின்றுவிட்டார். அது தங்கராஜுக்கு இன்னும் வசதியாகிவிட, அவர் தலைமுடியை கொத்தாக பிடித்துக் கையில் சுருட்டிகொண்டவர் “என்னடி… ஆத்தாளும் மவளும் சேர்ந்து எனக்கே ஆட்டம் காட்டறிங்களா.. அவ போறா மாறி போவா. நீ பின்னாடியே துணியெல்லாம் கொடுத்து அனுப்புவ. திட்டம் போட்டு நாட்டியம் ஆடறிங்களா?” என்றவர் பேசிக்கொண்டே, இன்னும் சில அடிகள் அடித்துவிட, அத்தனையும் வாங்கிக்கொண்டு நின்றார் மகாலெட்சும.

இருதியகா அவர் கூறியதற்கு மட்டும், “அவளே வேண்டாம்னு விட்டுட்டேன். அவ துணிமணியை வச்சு மட்டும் என்ன செய்யப் போறேன். எதுவா இருந்தாலும் வீட்டுக்கு வந்து கேளு. மரியாதையா என்மேல இருந்து கைய எடு.” என்றார் மகா.

“மருவாதையா.. நீ என்னிக்குடி என்னை மதிச்சிருக்க. கட்ன புருஷன நீ மதிச்சாதானே உன் புள்ளைங்க மதிக்கும். நீ என்னை மதிக்காம சுத்தினு இருக்கவும்தான் உன் பொண்ணும் அப்படியே பூட்டா.” என்று தங்கராஜ் கத்திக் கொண்டிருக்க,

“எப்பா.. தங்கம். அவ முடிய விடுப்பா. எதா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசு. இப்பிடி ரோட்ல நின்னு சண்டை போடறது அசிங்கமா இல்ல.” என்று ஒரு பாட்டி பேச,

“அண்ணன் உடுண்ணே. ரோட்ல வச்சு பொம்பள மேல கைய வைகிறது நல்லாவா இருக்கு.” என்றார் மற்றொருவர்.

“ஏய்… நீ யாருடா. என் பொண்டாட்டி நான் இழுத்து போட்டு அடிக்கிறேன். நீ ஏன் இவளுக்கு வக்காலத்து வாங்குற. உனக்கும் இவளுக்கும் இன்னா லிங்கு.” என்று அநாகரிகமாக தங்கராஜ் பேசிவைக்க,

“யோவ். உனக்கு இது தேவையாய்யா. அந்த மானங்கெட்டவன் என்னவோ பன்னின்னு போறான்னு போவாம, நீ என்னய்யா அவளுக்கு ஏத்துன்னு போற.” என்று அந்த நபரின் மனைவி அவன் சட்டையைப் பிடிக்க, அவளை அடக்கி அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் ஓடிவிட்டார் அவர்.

ஓடியவரைப் பார்த்து சிரித்த தங்கராஜ், “பார்த்தியா. என்னை எவன் பகைச்சுகினாலும் இதான் கதி. நீ சொல்லுடி… எவனைப் பார்க்க போயிருந்த.” என்று மீண்டும் மனைவியின் தோளில் இருந்த சேலையைப் பிடித்துக்கொண்டு கேட்க,

“ஒழுங்கா கைய எடுத்துடு. ரோட்ல வச்சு உன்னை அசிங்கபடுத்த வேணான்னு பார்க்கிறேன். இப்படியே பண்ண…” என்று மகா பேசும்போதே அவர் வாயில் குத்திவிட்டார் தங்கராஜ்.

மகா நடுத்தெருவில் விழுந்துவிட, “என்னடி ஷோ காட்றியா. நான் காட்டுனேன் பார்த்தியா. என்னை மீறி உன்னால ஒன்னியும் பு… முடியாது. வூட்டுக்கு வந்து பேசணுமா உன்னான்ட. பன்னாட.”

“பெத்த பொண்ணை கூட்டிக் கொடுத்துட்ட… புருசங்காரனும் வேணாம். புள்ளையையும் நேக்கா தனியா அனுப்பிட்ட.இன்னாடி உன் கணக்கு. ராத்திரில எவனாவது வர்றானா.?” என்று அசிங்கமாக அவர் பேசியதில் மொத்தமாக ஜீவனற்றுப் போனார் மகா.

‘இனி வாழ்ந்தென்ன.’ என்று தோன்றிவிட, வேகமாக எழுந்துவிட்டார். தங்கராஜ் மீண்டும் அடிக்கவர, ஒரே தள்ளாக அவரைப் பிடித்து தள்ளியவர் வேகமாக தன் குடியிருப்புக்குள் நுழைய, அந்த நேரம் தான் வந்து சேர்ந்தான் அவர் மகன்.

அந்த கடைக்காரப்பாட்டி அவனைக் காணவும், “டேய் கதிரு.. உன் ஆத்தாளை பாருடா… ஓடு, இந்த கசுமாலம் பேசுன பேச்சுல, நிக்கமுடியாம ஓடியிருக்காடா. மொத அவளைப் போய் பாருடா.” என்று அவசரபடுத்த, என்ன  ஏதென்று புரியாதவனாக மேலே தன் வீட்டை நோக்கி ஓடினான் கதிர்வேல்.

அவன் ஓடிய வேகத்தில் இரண்டாம் தளத்தில் நின்றிருந்த தன் மனைவிக்கூட கண்ணில்படவில்லை. அந்த பாட்டி கூறிய விதத்தில் பயந்து போனவனாக அவன் ஓட, அங்கு ஏற்கனவே சிலர் மகாவின் வீட்டுக்கதவைத் தட்டிக் கொண்டிருந்தனர்.

கதிர் பயத்துடன் அவர்களை நெருங்கி, “என்னாச்சு…” என்று கேட்டபடியே கதவைதட்ட, “டேய். உன் அம்மா அழுதுட்டே உள்ள போய் கதவை மூடிகிச்சுடா.. உன் அப்பன் கொஞ்சநஞ்ச பேச்சு பேசல. எதாவது செஞ்சுக்க போறா.. கதவை உடைடா.” என்று கத்தினார் விஜயா.

அவர் பேச்சில் பயந்து போனவன் தன் முழுபலத்தையும் குவித்து கதவை ஓங்கி உதைக்க, அந்த தகர கதவை உடைப்பது அத்தனை கடினமாகவும் இல்லை. இரண்டே உதையில் கதவை உடைத்து விட்டவன் அங்கே கண்ட காட்சியில் உறைந்து நின்றுவிட்டான்.

‘தன் அன்னையா’ என்று நினைக்கையிலேயே உள்ளுக்குள் பதறியது. ‘உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு நிற்கும் அளவுக்கு பலவீனமானவர் இல்லையே.’ என்று அதிர்ந்து நின்றவன் கண்களில் அவர் கையிலிருந்த தீப்பெட்டி தென்பட, விரைந்து அன்னையை நெருங்கியவன் “மோவ்… இன்னாம்மா பண்ற நீ. உடும்மா.” என்று அதட்டி, அந்த தீபெட்டியையும் ஜன்னல் வழியே வெளியே வீசிவிட்டான்.

அவனோடு சேர்ந்து வீட்டிற்குள் வந்திருந்த விஜயா சமையல்கட்டில் இருந்த தண்ணீர்க்குடத்தை எடுத்து அப்படியே விஜயாவின் மீது கவிழ்த்துவிட, “இன்னாவேலை செய்ய பார்த்தம்மா நீ..” என்று அழுகையுடன் அன்னையைக் கட்டிகொண்டான் கதிர்வேல்.

மகனின் இந்த திடீர்பாசத்திற்கான காரணம் புரியாவிட்டாலும், அந்த நேரம் அவனது இந்த அன்பு மனதிற்கு அப்படி ஒரு நிம்மதியைக் கொடுத்தது. முழுவதும் துவண்டு போனவராக, மடிந்து அமர்ந்துவிட்டார் மகாலட்சுமி.

விஜயா, “அந்தாளைப் பத்தி தெரிஞ்சுது தான. இன்னிக்கு நேத்தா பார்க்கற. கொஞ்ச நேரத்துல பயம் காட்டிட்டியேக்கா.” என்று நெஞ்சில் கைவைத்துவிட,

“இன்னாம்மா. இன்னாவாம் அவருக்கு. ஏன்மா இப்படி பண்ண.” என்று விசாரிக்கத் தொடங்கினான் கதிர்வேல்.

“உன் அப்பனுக்கு என்ன? இந்த வயசுல உன் அம்மா எவன்கூட போனான்னு கணக்கெடுத்துனு இருக்காரு மனுஷன். ரோட்ல இழுத்துபோட்டு அடிச்சா, எவதான்டா சும்மா இருப்பா.” என்றார் மற்றொருவர்.

“அந்தாளெல்லாம் ஒரு மனுஷனாம்மா. அவர் ஏதோ பேசுனா, நீ இப்படி பண்ணுவியா.?” என்று கதிவேல் அன்னையின் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அப்போதுதான் வந்து வாசலில் நின்றாள் அவர் மருமகள்.

விஜயா “வாடியம்மா… மாமியாரைப் பார்க்க ரொம்ப சீக்கிரம் வந்துட்ட. நல்ல மருமவ கிடைச்சிருக்கா மகாக்கு.” என்றார் நொடிப்பாக.

கதிரும் அதிருப்தியாக மனைவியைப் பார்க்க, “அப்போதான் குளிச்சுட்டு வெளியே வந்தேன் மாமா. எனக்கு என்ன சண்டைன்னு கூட தெரியல.” என்றாள் ப்ரியா.

கதிர் அப்போதும் அவளை முறைத்தபடியே, “இந்த வீட்டை கழுவி எடு.” என்றான் மனைவியிடம்.

“அம்மா. புடவையை மாத்தும்மா.” என்றவன் எழுந்து சென்று வாசலில் நின்றுகொண்டான்.

ப்ரியா ‘வராமலே இருந்திருக்கலாம்’ என்று நினைத்தபடியே வீட்டிற்குள் நுழைய, விஜயா மகா உடைமாற்ற உதவி செய்து கொண்டிருந்தார்.

வீட்டை கழுவி முடிக்கும் வரை மகாவை அங்கிருந்த படியில் அமர்த்திய கதிர்வேல் அவர் அருகிலேயே அமர்ந்திருக்க, கணவனை நினைத்து உள்ளுக்குள் பொருமிக் கொண்டிருந்தாள் ப்ரியா.

‘இவன் என்ன இன்னிக்கு ஓவரா உருகுறான். நாமதான் இவன் அப்பன்கிட்ட சொன்னோம்னு தெரிஞ்சா என்ன செய்வானோ தெரியலையே.’ என்று அதுவேறு உள்ளுக்குள் பீதியை கிளப்பிக் கொண்டிருந்தது.

ஆனால், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவள் அரைகுறையாக அந்த வீட்டை சுத்தம் செய்து முடிக்க, அதன்பின்னரும் அன்னையுடனே அமர்ந்து கொண்டான் கதிர்வேல்.

நடந்த நிகழ்வு மொத்தமாக புரட்டியிருந்தது அவனை. அவன் அறிந்தவரை அப்படி ஒரு துணிச்சல் மிக்கவர் அவன் அன்னை. எதற்கும் அவர் பயந்து, கலங்கி நின்றெல்லாம் பார்த்ததே இல்லை அவன்.

அவனை எப்போதும் கண்டித்துக் கொண்டும், அதட்டிக் கொண்டும் இருப்பதால் அவரை அவ்வளவாக பிடிக்காது. ஆனால், பெற்ற தாய் சாகத் துணிந்துவிட்டது அவனுள் எங்கோ ஓர் மூலையில் ஒளிந்து கொண்டிருந்த துளி பாசத்தை தட்டி எழுப்பியிருக்க, அவரை விட முடியாமல் அவருடனே இருந்தான் அவன்.

அன்று இரவு உணவையும் அவனே வாங்கி வந்து கொடுத்து உண்ண வைத்தவன் இரவும் தன் வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே படுத்துக் கொண்டான். ப்ரியாவும் அவனுடனே வந்து படுத்துக்கொள்ள, அவள் நினைவு கூட இல்லை கதிரிடம்.

‘தான் நல்ல மகனாக இருந்திருந்தால், தன் அன்னைக்கு இந்த நிலை வந்திருக்காதோ.’ என்று சாட்டையடியாக அடித்துக் கொண்டது மனது.

அவன் செய்த தவறுகளும் ஒன்றன்பின் ஒன்றாக கண்முன் நிழலாட, தன்னைக் குறித்தும், தன் தந்தையை குறித்தும் வாழ்வில் முதல்முறையாக அவமானமாக உணரத் தொடங்கினான் கதிர்வேல்.

அதே நேரம் மகாலட்சுமியும் உறங்காமல் தான் படுத்திருந்தார். கண்கள் மட்டும் மூடியிருக்க, எண்ணங்கள் விழித்துக் கொண்டு அவரை அலைகழித்துக் கொண்டிருந்தது.

தங்கராஜ் பேசியதும், அடித்ததும் வழக்கமாக நடப்பதுதான் என்றாலும், நடுத்தெருவில் அத்தனைப் பேர் பார்க்கும்படி நடந்துவிட்ட கொடுமையை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இந்த இருபத்தைந்து ஆண்டு திருமண வாழ்க்கையில் எத்தனையோ பார்த்துவிட்டார் அவர். இதைவிட பெரிய சண்டையெல்லாம் நடந்திருக்கிறது.

ஆனால், இப்படி மற்றவர்களின் முன்னிலையில் நடுத்தெருவில் எப்போதும் நின்றவரில்லை என்பதால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை மகாலட்சுமியால்.

‘நாளை இதே தெருவில் இறங்கி நடக்க வேண்டுமே.. அடுத்தவர்களின் பார்வை என்மீது ஏளனமாகவும், பரிதாபமாகவும் படியுமே.’ என்ற நினைவே அவரைத் தளர்ந்து போகச் செய்தது.

ஒரு தனி மனிதியாக அவரும் எத்தனையைத் தான் தாங்கிக் கொள்வார். நியாய அநியாயங்களுக்கும், நமது கடைநிலை சமூகத்தின் எழுதப்படாத விதிகளுக்கும் உட்பட்டு வாழ வேண்டிய கட்டாயத்தில் இருப்பவராகிற்றே.

‘ஏன் என்னை இப்படி ஒரு நிலையில் நிறுத்தினாய் இறைவா.’ என்று கண்ணீர் சிந்தியபடியே அந்த இரவை உறங்காமல் கழித்துக் கொண்டிருந்தார் மகாலட்சுமி.

Advertisement