“பல்லவி.. குழந்தை ரொம்ப அழுகிறா.. வீட்டுக்கு போலாம்..” ரத்னாவும் மகளை கூப்பிட, பல்லவி இப்போதும் கணவனை தான் பார்த்தாள். அவன் எதுவும் பேசாமல் நிற்க,
“வீடு பக்கத்துல தான்..” என்று அழும் மகளை சமாதானம் செய்த படி வேகமாக நடக்க ஆரம்பித்துவிட்டாள். கங்கா, ரத்னா இருவரும் அவளின் பின் நடந்தே செல்ல, நரசிம்மன், பரணி காரை அவர்களின் பின்னால் உருட்டி கொண்டு சென்றனர்.
“நாம என்ன..?” விஷ்ணு கேட்க, ஈஷ்வர் நடந்து செல்லும் மனைவி, மகளை பார்த்தான். அவனின் கால்கள் அவர்களின் பின் செல்ல, விஷ்ணு தள்ளி நின்றிருந்த அவர்களின் காரை சென்று எடுத்து வந்தான்.
பல்லவி வீட்டு கதவை திறந்து உள்ளே போக, உள்ளே மெல்லிய லைட் வெளிச்சம். மகளை இறக்கி விட, அவளோ பல்லவியை விடவில்லை. அவளை கையில் வைத்து கொண்டே சேரில் சிதறி இருந்த துணிகளை எடுத்து ரூமில் போட்டவள், டியூப் லைட் போட்டுவிட்டாள்.
“உட்காருங்க..” இருந்த இரண்டு சேரை எடுத்து போட, நரசிம்மன் மறுக்காமல் அமர்ந்து கொண்டார். ரத்னா, கங்கா இருவரும் நின்ற வண்ணம் வீட்டை சுற்றி பார்க்க, பரணி சுவற்றில் சாய்ந்து நின்று அனுவை பார்த்தான்.
சிறுவயதில் அவனின் தோள் தொங்கிய பல்லவி தான் நினைவிற்கு வந்தாள். அவளுடனான அவனின் பந்தம் எப்போதும் ஸ்பெஷல் தான். அவர்களின் அப்பா மூர்த்தி எப்போதும் அமைதி. மனைவி, பிள்ளைகளுடன் அமர்ந்து பேசி சிரித்து அவர்களுடன் நேரம் செலவழிக்கும் சராசரி தந்தை இல்லை. சில அப்பாக்களை போல அப்பா எனும் மாயை பிம்பம் கொண்டவர்.
பிள்ளைகளிடம் என்ன என்றால் என்ன என்று மரியாதையான இடைவெளியுடன் இருக்கிறேன் எனும் பேரில் சொந்த குடும்பத்திடமே ஒதுங்கி இருப்பவர். அதற்கு முக்கிய காரணம் அவரின் அம்மா கோமதி தான்.
“அவங்களோட டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணு மூர்த்தி, அப்போதான் உன் பொண்டாட்டி, பிள்ளைங்களுக்கு உன்கிட்ட ஒரு பயம் இருக்கும்.. இல்லை உன் தலைக்கு மேல ஏறி உட்கார்ந்திடுவாங்க..” என்று திருமணமான புதிதில் இருந்தே ஓதிய மாபெரும் அம்மா அவர். மூர்த்தியும் அவரின் ரத்தம் அல்லவா. அதை விரும்பியிருக்க வேண்டும்.
“என்னை பார்க்க உனக்கு என்னடி தகுதி இருக்கு..?” கணவன் பதில் பார்வை கொடுத்தான்.
“தம்பி.. இது நானும், நீயும் எடுக்கிற முடிவு இல்லை. அவங்க பேசட்டும்..” நரசிம்மன் பரணியிடம் அழுத்தமாக சொன்னவர், “நாம எல்லாம் ஹோட்டல் போய் சாப்பிட்டு வரலாம்..” என்று வெளியே நடக்க, பரணியால் அவரின் பேச்சை மீற முடியவில்லை.
ஈஷ்வர் இப்படி அனு வைத்து பேசுவான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. “இந்த முறையாவது எங்களை நினைச்சு பார்ப்பன்னு நினைக்கிறேன்..” பல்லவியிடம் சென்று சொல்லியே வெளியே வந்தான்.
ரத்னா மகளின் தலை தடவியர், “உன்கிட்ட என்ன பேசன்னு கூட தெரியலடா.. வந்து நிறைய பேசலாம்..” அனு யாரிடமும் வராததால் அவளை பல்லவியிடமே விட்டு எல்லோரும் கிளம்பினர். விஷ்ணு வீட்டிற்கு வெளியே அவர்களின் காரிலே இருந்து கொண்டான்.
“வாடா சாப்பிட்டு வரலாம்..” கங்கா கூப்பிட,
“அவங்களோட சேர்த்து எனக்கும் பார்சல் வாங்கிட்டு வந்துடுங்க..” என்றுவிட்டான்.
இப்போது அந்த சிறிய வீட்டில் பல்லவி, ஈஷ்வர், அவர்களின் மகள் மட்டுமே. ஈஷ்வர் நடு ஹாலில் மனைவி, மகளை பார்த்தபடி கை கட்டி நிற்க, “அனு.. நீ இதை விளையாடு..” என்று மகளை பில்டிங் பிளாக்ஸ் முன் உட்கார வைத்த பல்லவி, அவன் முன் வந்து நின்றாள்.
பரணியின் அறையில் பல்லவியின் வலது கன்னம் லேசாக சிவந்திருக்க, ஈஷ்வர் கைகள் அவளின் கன்னத்தை பிடிக்க பரபரத்தது.
“அடங்குடா..” கைகளை இறுக்கமாக கட்டி கொண்டான்.
“பேசட்டும்.. இன்னிக்கு இவளை பிரிச்சுடுறேன்..” மொத்த கோவத்தை தேக்கி மனைவியை பார்த்தான்.
அவளோ மிக மெதுவாக அவனின் இறுக்கமாக கட்டி கொண்ட கைகளை பிரித்தவள் முதலில் லேசாக அவனை அணைத்தாள். ஈஷ்வர் அதிர்ந்து நிற்க, அவளின் லேசான அணைப்பு.. நொடி செல்ல செல்ல மிகவும் நெருக்கமாக மாறி கொண்டே சென்றது.
அணைப்போடு மட்டும் பல்லவி நிற்கவில்லை. அவளின் உதடுகள் அவனின் டாலரோடு சேர்ந்து அவனின் கழுத்திலும் அழுத்தமாக பதிய, ஈஷ்வர் இந்த உலகத்திலே இல்லை.