திருப்பதியில் இருந்து வர வழியில டீக்காக அப்பா நிறுத்த சொன்னார், அங்க இவர் இறங்கி முகம் கழுவிட்டு இருந்தார்அப்போ அவர் கழுத்து செயின் வெளிய வந்து விழுந்துச்சு, அதுல இருந்த டாலர் பல்லவிகிட்ட நான் ஒரு  நாள் பார்த்தேன், சிவனோட உருவம் அவுட்லைனா இருக்கிற டிசைன், சோ எனக்கு நல்லா ஞாபகம் இருந்தது. அப்போவே அவகிட்ட கேட்டா ப்ரண்டுதுன்னு சொல்லிட்டா, யோசிச்சு பார்த்தப்போ புரிஞ்சுது இவருக்கு அவ கிப்ட் கொடுத்திருக்கணும்ன்னு..”

அதோட எங்க வீட்ல தெரிஞ்ச அடையாளம் இவர் கையில் இருக்கிற இந்த டாட்டூ.. அதை வச்சு இவர் தான்னு தெரிஞ்சிருச்சு, அப்போவே இவர் சட்டையை பிடிச்சிருப்பேன், ஆனா எனக்கு என் தங்கச்சி கிடைச்சா போதும்ன்னு தான் எல்லாம் விசாரிச்சு பொறுமையா கேட்டு வந்திருக்கேன்..” பரணி முடிக்க, ஈஷ்வர் எதுவும் பேசவில்லை. பேசவும் தோணவில்லை.

“நான் உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும், ஆனா நீங்க பல்லவியை விட்டுடீங்கன்னு நினைச்சிருந்தேன், அதான் இப்படி வந்து கேட்கவும் இப்போ மட்டும் என்ன புதுசா மகள் மேல பாசம்ன்னு பேசிட்டேன்..”  கங்கா உடனே வருத்தத்துடன் சொன்னவர், மகனை பார்த்தார். 

அவரை தொடர்ந்து பரணியும்  ஈஷ்வரிடம்  சென்றவன்,  “உண்மையை சொல்லணும்ன்னா உங்களை கேள்வி கேட்கிற தகுதி எங்களுக்கு இல்லை, எங்க வீட்டு பொண்ணை நாங்க தான் பாதுக்காத்திருக்கணும், ஆனா என்னமோ அப்போ எங்க அப்பா நடந்துக்கிட்டாரு..”  பரணி மிகவும் இறக்கத்துடன் பேசியவன், 

“உங்களுக்கு உண்மையிலே பல்லவி இருக்கிற இடம் தெரியாம கூட இருக்கலாம், ஆனா அவ எங்க போயிருப்பான்னு உங்களுக்கு ஒரு அஸம்ப்ஷன் இருக்கும் இல்லை, அதை மட்டும் சொல்லுங்க போதும் நாங்க அவளை கண்டுபிடிச்சுகிறோம்..” மிகவும் இழுத்து பிடித்த பொறுமையுடன் கேட்டான்.

“எனக்கு அப்படி எதுவும் தெரியல..” ஈஷ்வர் சொல்ல, பரணி அவனின்  கைகளை இறுக்கி கொண்டான். 

“உங்களை நம்பி தான் அவ வந்தா..” வார்த்தைகள் வெறுப்புடனே  வந்தது. 

“இல்லை.. அவ என்னை நம்பலை..”

“அப்படி என்ன பண்ணீங்க அவளை..”

“எனக்கும் தெரியல, யாரோ எதோ சொன்னாங்கனு என்னை விட்டுட்டு போயிட்டா, எங்க காதல் மேல சாட்சி வச்சு என் கண் முன்னாடி எப்போவும்  வராதீங்கன்னு சொல்லிட்டு போயிட்டா..” ஈஷ்வர் மிகவும் வெறுமையுடன் சொல்லி கொண்டிருந்தான். 

“உங்களால எப்படி இவ்வளவு  சாதாரணமா சொல்ல முடியுது..? உங்களுக்காக எங்களை எல்லாம் தூக்கி போட்டு வந்தவளை எங்கேயோ தொலைச்சிட்டு நிக்கிற.. என்ன மனுஷன் நீ..” பரணியால் தாங்கவே முடியவில்லை. 

“தம்பி என்ன பேசுறீங்க..?”  கலையரசு சத்தம் போட, 

“தொலைஞ்சுது என் வீட்டு பொண்ணு, அந்த ராத்திரில இவர் மேல நம்பிக்கை வச்சு வீட்டை விட்டு வெளியே வந்த என் தங்கச்சி எங்கன்னு கேட்டா தெரியலன்னு சொல்லிட்டிருக்கான், இவனுக்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு..?”  

“பரணி..”

“ம்மா.. நீங்க பேசாம இருங்க, நானும் பல்லை கடிச்சு பொறுமையா கேட்டுட்டு இருந்தா..”

“ஒரு இருப்பத்தி ஒன்னு, இருப்பத்தி இரண்டு வயசு பொண்ணு அவ, எப்படி தனியா இருக்க முடியும்..? அவளுக்கு யார் பாதுகாப்பு, சாப்பாட்டுக்கு, தங்கறதுக்கு, ஏன் போட்டுக்கிற துணிக்கு கூட என்ன செய்வா..?”

“அவளை தனியே விட்டு மரம் மாதிரி நிக்கிறார்.. கேட்டா காதல் மேல சத்தியம் வச்சுட்டு போய்ட்டாளாம்.. இவர் தேடலையாம்.. அப்படியென்ன காதல்.. மxxறு காதல்.. மண்ணாங்கட்டி காதல்..” பரணி வெடித்தே விட்டான். 

“மxxறு காதல்..”  ஈஷ்வர்க்கு உள்ளுக்குள் என்னென்னமோ செய்தது. அழுத்தம் தாங்காமல் மொத்தமாக வெடித்து சிதறிவிடுவோம் என்றே நினைக்கும் அளவுக்கு உள்ளம், உடல் ரெண்டும் இறுக்கமாக மாறி போனது.

“இப்போ தான் கரெக்ட்டா பேசுறான், அப்படியென்ன காதலோ இத்தனை பேர் இவ்வளவு கஷ்டப்படுற அளவுக்கு..”  விஷ்ணு சொல்ல, ஈஷ்வரின் துடிக்கும் கழுத்தோர நரம்புகளை பார்த்த சுப்ரமணி அவனின் வாயை மூடவே செய்தான்.

“சார்.. உங்களுக்கு தெரியும் இல்லை என் தங்கச்சி எங்கன்னு, சொல்லுங்க..” பரணி வெளியே நின்ற நரசிம்மனிடம் கேட்க, 

“எனக்கு சரியா தெரியல தம்பி..” என்றுவிட்டார் அவர். தான் சொல்வதை விட மகனே எல்லாம் கண்டுபிடித்து கொள்ளட்டும் என்று நினைத்துவிட்டார் அவர். 

ரத்னாவிற்கு இங்கு வரும் போது இருந்த நம்பிக்கை குறைந்து போக,  “தம்பி நாட்டு நடப்பு உங்களுக்கு தெரியாதது இல்லை, ஒரு வயசு பொண்ணு எப்படி தனியா பாதுகாப்பா இருக்க முடியும், இத்தனை வருஷத்துல அவ எவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருப்பா..? கடவுளே..”

“இப்போ என்ன அவ உங்களை தானே கண்  முன்னாடி வரக்கூடாதுன்னு சொன்னா எங்களை இல்லையில்லை..”  பரணி ஈஷ்வர் முன் நின்று கூர்மையாக கேட்க, 

“எனக்கு இரண்டு நாள் டைம் கொடுங்க, உங்க தங்கச்சி இருக்கிற இடம் சொல்லிடறேன்..” என்றுவிட்டான் ஈஷ்வர்.

கேட்டிருந்த நரசிம்மன் அடுத்து என்ன செய்ய வேண்டுமே என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.

இத்தனை வருடம் அவளின் வாக்கிற்காக கட்டப்பட்டிருந்த ஈஷ்வர் இப்போது அவளின் குடும்பத்துக்காக அவளை தேடி கிளம்பினான். 

இத்தனை பிரச்சனைக்கும்  காரணமான  பல்லவியோ மகளிடம் போராடி கொண்டிருந்தாள். 

மதிய உணவிற்கு எப்போதும் பல்லவி தான் வந்து ஊட்டி விட்டு செல்ல வேண்டும். சில நேரங்களில் வேலை அதிகமாக இருக்கும் போது வர தவறினால் சாப்பிடாமலே அமர்ந்திருப்பாள்.

இப்போதும் அவள் வர நேரமாகிவிட அனு சாப்பிடாமலே முகம் தூக்கி வைத்து அமர்ந்திருந்தாள். “அனு குட்டி சாப்பிடலாமா..?” அவளின் முன் மண்டியிட்டபடி அமர்ந்தாள் பல்லவி. 

மகளோ முகம் திருப்ப,  “அனு தங்கம் சாரிடா, அம்மாக்கு ஆஃபிஸ்ல வேலை அதிகம், எஸ்டேட்டை சூபர்வைஸ்  பண்ண  பாஸ் அனுப்பின ஆளுங்க வந்துட்டாங்க,  அதனால தான் அம்மாக்கு லேட் ஆகிடுச்சு.. என் செல்லம் இல்லை..” கெஞ்சி கொண்டே அவளை தூக்க, மகளோ அவளிடம் செல்ல மறுத்து கை காலை உதைத்து தள்ளினாள். 

“பட்டு குட்டி.. ஏன் இவ்வளவு கோவம்..? இனி அம்மா லேட்டா வரவே மாட்டேன், என் கண்ணு இல்லை..” கன்னத்தை பிடித்து கெஞ்ச மகளோ இன்னும் வீம்பு பிடித்தாள். 

பல்லவிக்கோ அவளும் சாப்பிடாத சோர்வு. மகள் சாப்பிடாமல் இருப்பாள் என்பதால் இன்ஸ்பெக்ஷ்னுக்கு வந்த ஆட்களுடன் உணவுண்ண மறுத்துவிட்டவள், அவர்களை சுற்றி பார்க்க அனுப்பி வைத்துவிட்டு ஓடி வந்திருந்தாள். 

“அனு.. அம்மா தான் சொல்றாங்க இல்லை, அடம் பிடிக்காம சாப்பிடு..” கேர் டேக்கர் சொல்ல, அனு அழுகவே ஆரம்பித்துவிட்டாள். 

அச்சோ என்றாகிப்போன பல்லவி, அழுகும் மகளை இழுத்து மடியில் அமர வைத்து சமாதானம் செய்ய, அவளோ இவள் கெஞ்ச கெஞ்ச இன்னும் மிஞ்சினாள்.

“அனு.. ரொம்ப படுத்தாம சாப்பிடுடி..”  பல்லவி சமாதானம் செய்ய முடியாமல் ஓய்ந்து போக அதட்டலே இட்டாள். 

அம்மா, மகள் இருவர் மட்டுமே.. கண்டிக்க, செல்லம் கொஞ்ச எல்லாம் அம்மா மட்டுமே. அதனாலோ என்னவோ அனுவிற்கு பிடிவாதம் அதிகம். அடம் அதிகம். சில நேரங்களில் பொறுமையாக சமாளிக்கும் பல்லவி, பல நேரங்களில் கோவத்தில் அதட்டி, மிரட்டி தான் வழிக்கு கொண்டு வருவாள். இப்போதும் மகளை சமாளிக்க முடியாத இயலாமை அவள் மேலே கோவமாக வெடித்தது. 

“அடியேய்..  அம்மா எவ்வளவு நேரம் சொல்றேன், அப்படியென்னடி அடம்  உனக்கு.. ஒழுங்கா சாப்பிடு பார்த்துக்கோ..”  மிரட்டியே பருப்பு சாதம் எடுத்து ஊட்ட, அனு தேம்பலுடனே சாப்பிட்டு முடித்தாள். அடுத்து தண்ணீர் குடிக்க வைத்து நேரம் பார்த்தவள், 

“இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மா வந்துடுவேன், நானும் நீயும் மேரி ஆன்ட்டி வீட்டுக்கு போவோம், இன்னும் இரண்டு நாள்ல என் அனு தங்கத்துக்கு பர்த்டே வருதுல்ல, அதுக்கு பாப்பாக்கு புது துணி எடுக்க போறோம்..” என்று கன்னம் பிடித்து கொஞ்ச, அனு ஓரளவிற்கு சமாதானம் ஆனாள். 

“பார்த்துக்கோங்க..” கேர் டேக்கரிடம் சொல்ல, 

“பல்லவி மேடம் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. இன்னும் எத்தனை வருஷத்துக்கு இப்படி இங்க தனியா இருப்பீங்க, உங்க ஹஸ்பண்டை பாரினில் இருந்து வரச்சொல்லி அவரோட இருங்க, இல்லை நீங்க அங்க போங்க, அனு வளர வளர அப்பாவும் தேடுவா இல்லை..” என, பல்லவி முகத்தை சாதாரணமாக வைக்க போராடினாள். 

“ம்ம்.. எனக்கும் புரியுது, ஆனா என்ன செய்ய பேமிலி கமிட்மெண்ட்ஸ் அதிகம், அவர் அங்க, நான் இங்க வேலை பார்த்தா தான் கடன் எல்லாம் அடைக்க முடியும், அதான்..” என்றவள், “நான் வரேன்.. நேரமாச்சு..” எடுத்து வந்திருந்த தன் உணவை  சாப்பிடாமலே ஓடிவிட்டாள்.

மாலை சொன்னது போல நேரமே சென்று மகளை கூட்டி கொண்டவள் பக்கத்தில் இருக்கும் மேரி வீட்டுக்கு சென்றாள். “வா பல்லவி.. வாங்க ஏஞ்சல்..” இவர்களை வரவேற்ற மேரி இருவருக்கும் முதலில் குடிக்க  கொடுத்தார். பல்லவி மறுக்காமல் டீ எடுத்து கொள்ள, அனுவிற்கு பால். 

“இன்னும் இரண்டு நாள்ல எங்க ஏஞ்சலுக்கு பிறந்த நாளா..? பாருங்க ஆன்ட்டி உங்களுக்காக இந்த ட்ரெஸ் எல்லாம் வர வச்சிருக்கேன், இதுல எது பிடிச்சிருக்கு..” என்று மேரி எல்லாம் எடுத்து வைத்தார். 

மகளை தூக்கி கொண்டு ஒவ்வொரு முறையும் பல்லவியால் ஊட்டிக்கு செல்ல முடியாது என்பதால் துணி வியாபாரம் செய்யும் இவரிடமே சொல்லி உடை வாங்கி கொள்வாள். மற்ற இதர அத்தியாவசிய பொருள்களும் இப்படி தான் வாங்கி கொள்வாள். 

இப்போதும் அனுவின் பிறந்த நாளிற்கான உடையை தேர்ந்தெடுத்தவள், அவரிடமே கேக்கிற்கும் ஆர்டர் கொடுத்து கிளம்பினாள்.

அங்கு ஈஷ்வரும் சொன்ன படி இரண்டு நாளில் மனைவி இருக்கும் இடத்தை நெருங்கிவிட்டான். ஆனால் அவனின் முகத்தில் அந்த சந்தோஷம் சிறிதும் இல்லை. அவன் கேள்விப்பட்டது அவனை உயிரோடு எரித்து கொண்டிருந்தது. எரிமலை கங்கு எப்படி நெருப்பாய் தகிக்குமோ அப்படி உள்ளத்தால், உடலால் தகித்து கொண்டிருந்தான். 

“மச்சி.. என்ன செய்ய போற..?” விஷ்ணு கேட்க, 

“நேர்ல போலாம்டா..” என்றான் ஈஷ்வர். அவனின் இத்தனை வருட கண்ணீருக்கு, வேதனைக்கு, வலிக்கு அவள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அவன் பல்லவியை கண்டுபிடித்து பரணியிடம் சொல்ல மட்டுமே நினைத்திருந்தான். ஆனால் இப்போது இப்படி சொல்லவும், விஷ்ணு ஆச்சரியமாக பார்த்தான்.

“பரணி சொன்னது சரி தான்.. இது மxxறு காதல் தான்.. அது மேல அவ வச்ச சத்தியம் என்னை கட்டுப்படுத்தாது..” அந்த நொடியே இருவரும் கிளம்பினர். 

அனுவின் பிறந்தநாளும் விடிய, அம்மா, மகள் இருவரும் குளித்து பக்கத்தில் இருக்கும் சின்ன அம்மன் கோவிலுக்கு சென்றனர். பல்லவி செய்து எடுத்து வந்திருந்த சர்க்கரை பொங்கலை எல்லோருக்கும் கொடுத்து, சிறிது நேரம் அங்கேயே இருந்துவிட்டு இருவரும் நடந்தே வீடு திரும்ப, வழியில் ஒரு உருவம். 

பல்லவி மகளிடம் பேசி கொண்டே ஒதுங்கி கடந்துவிட்டவள், ஏதோ தோன்ற நின்று திரும்பி பார்த்தாள். பனியில் சிறிது மங்கலாக தெரிந்த போதும் அந்த முகம் அமைப்பு அவளை அந்த பனியிலும் வேர்க்க வைத்தது. 

“ம்மா..” அனு அவளின் முகம் பிடித்து கூப்பிட, அந்த கண்கள் அவளை எரித்து  கொண்டிருந்தது. அவனின் கோவம்  பல்லவியின் உடலை நடுங்க வைக்க, மகளை இறுக்கமாக பிடித்து கொண்டாள்.