யார் நீங்க..?”  கங்கா கேட்க, பரணி, ரத்னா இருவரும் ஈஷ்வரிடம் சென்றனர். அவன் கை இறுக்க மூடி நின்றான்.

விஷ்ணு சாப்பிட்டு எழுந்து வந்தவன் இவர்களை பார்த்து தள்ளியே நின்றான். பரணி ஈஷ்வரை நெருங்க, அவனின் அடியை எதிர்பார்த்து நின்றான் ஈஷ்வர். ஆனால் பரணியோ அவனின் இரு கைகளையும் பிடித்தவன்,  

என் தங்கச்சியை எங்ககிட்ட கொடுத்துடுங்க, அவ எப்படி இருக்கா, என்ன பண்றா, ஏன் இருக்காளா இல்லையான்னு கூட  தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம்.. உங்க உயரம் தெரியாம அவ இப்படி செஞ்சது தப்பு தான்அவளை எங்ககிட்ட கொடுத்துடுங்க, நாங்க கூட்டிட்டு போயிடுறோம், இனி உங்க வழிக்கே அவ வரமாட்டா, உங்க அப்பாகிட்ட சொல்லுங்க ப்ளீஸ்..”

ஆமாம் தம்பி.. நேத்து தான் எங்களுக்கு எல்லாம் தெரிஞ்சது, தயவு செஞ்சு பல்லவியை  எங்ககிட்டேயே கொடுத்துடுங்க, இனியும் அவளை நினைச்சு அழ எங்களுக்கு தெம்பு இல்லை, ரொம்ப நரக வேதனையா இருக்கு.. பெத்த புள்ளையை தொலைச்சிட்டு ஒரு வாய் சோறு கூட மனசார சாப்பிட முடியல.. எங்க பிள்ளையை எங்ககிட்ட கொடுத்துடுங்க..” ரத்னா கையேந்தி அழ, ஈஷ்வர் கல்லாய் சமைந்து போனான்

என்ன நினைத்துவிட்டார்கள் என்னை..” அவர்கள் அடித்திருந்தால் கூட இப்படி வலித்திருக்காது, மொத்தமாய் கொன்று விட்டார்கள்.   நடுங்கிய கால்களை இழுத்து ரூமினுள் செல்ல, விஷ்ணு அவனின் பின் சென்றான்

சுவரை பார்த்து நின்றவன் முன் சென்று நின்ற  விஷ்ணு, “ரிலாக்ஸ்..”  என, ஈஷ்வர் அப்படியே  அவனை அணைத்து கொண்டான்.   அவனின்  கண்ணீர் விஷ்ணுவின் தோளை  நினைத்தது

உடல் குலுங்கவில்லை. சத்தம் இல்லை, கதறல் இல்லை. ஏன் சிறு அசைவு கூட இல்லை. ஆனால் கண்ணீர் மட்டும் அவனின் வலியை சொல்வது போல வழிந்தோடியது

அவன் இப்படி அழுவான் என்பது விஷ்ணு மட்டுமே அறிந்த ரகசியம். அவனும் வெறுக்கும் ரகசியம் இது. அப்படியென்ன காதல் இது. இப்போதும் அவனின் கண்ணீரை மொத்தமாக வெறுத்தவன், நண்பனாக அவனை தோள் சாய்த்தான்

அவனின் இந்த கண்ணீருக்கு காரணமானவளோ ஓரிடத்தில் மிகவும் பரப்பரப்பாக கிளம்பி கொண்டிருந்தாள்.

“போச்சு..  இன்னிக்கும் லேட்.. எல்லாம் இவளால.. அடியேய் அனு எங்கடி இருக்க..?”  கேட்டு கொண்டே பெட் ரூமிற்கு சென்றவளின்  முகம் கோவத்தில் இருந்து சிரிப்பிற்கு மாறியது

முகம் மட்டும் வெளியே தெரிய, முழு உடலும் பிளாங்கெட்டில் மறைய சுருண்டு படுத்திருந்தாள் மூன்று வயது  அனு ஸ்ரீ. பார்த்த பெண்ணிற்கு  அங்கு மகளின் முகத்தோடு வேறொரு முகம் தெரிய, பார்வை மென்மையாக மாறியது

அப்பாக்கும், மகளுக்கும் அப்படி என்னதான் இருக்கோ இந்த காலை தூக்கத்துல, பாரேன் குளிச்சிட்டு திரும்ப தூங்குறதை..”  மனதில் தூங்கும் மகளை கொஞ்சி கொண்டவள், நேரம் ஆவதை உணர்ந்து வேகமாக சென்று அவளின் பிளாங்கெட்டை உருவினாள்

ம்மா..” அழுகையுடன் சிணுங்கிய மகள் திரும்பவும் பிளாங்கெட்டை இழுக்க, அம்மாவோ அதை மடித்து எடுத்து வைத்து கொண்டிருந்தாள்

ம்மா..” அவள் கண்ணை கசக்கி அழுக, அப்படியே வாரி கொண்டு வெளியே சென்றாள்

ம்மா.. ப்ளீச்ம்மா.. தாச்சி  வேணும்..” மழலை குரலில் கெஞ்சி கொண்டிருக்க, அவளின் வாயில் பால் சிப்பரை வைத்தாள் அவள்

ம்மா.. நோ.. உவ்வேக்..”  அனு அதை தள்ளிவிட

என்னடி உவ்வேக்.. பால்ன்னாலே உனக்கும், உங்க அப்பாக்கும் தொண்டை அடைக்குமே, ஒழுங்கா குடி..” மிரட்டி திரும்பவும் வாயில் வைத்தாள்

ம்மா..  ம்மா.. லவி..”  பால் கொடுத்த பல்லவியின் கைகள் அப்படியே நின்றுவிட்டது

லவி.. பாவு நோ..” மகள் கெஞ்சி அவளின் தோள் சாய, பெண்ணவளின் கைகள் மகளை தன்னோடு இறுக்கியது. அவளும் பல்லவியின் அணைப்பில் திரும்ப சுகமாக தூங்க ஆரம்பிக்க, பல்லவியோ கணவனின் நினைப்பில் மிதந்தாள்

லவி ப்ளீஸ்டி இன்னும் கொஞ்ச நேரம்..” கெஞ்சி அவளை இழுத்து அணைத்தபடி தூங்கும் ஈஷ்வர், அவனின் அந்த இளஞ்சூடானா மூச்சு காற்று, கழுத்தோரம் குறுகுறுக்கும் அவனின் மீசை, இடையை வளைத்து அவனோடு இருக்கும் கைகள், கிட்டி கொள்ளும் கால்கள் என்று இப்போதும் அவனின் இருப்பை மனதால் உணர்ந்தவள் கண்கள் காதலில் மயங்கியது

மிஸ் யூ ஈஷ்வர்..”  உதடுகள் முணுமுணுக்க

மிச் யூ லவி..” என்றாள்  தோள் சாய்ந்த மகள் தூக்கத்திலே

ஸ்ஸ்..” பல்லவியின் காதல் உலகம் மறைந்து நிஜ உலகிற்கு வந்தவள், தூங்கும் மகளின் தலையில் லேசாக கொட்டி அவளின் தூக்கத்தை விரட்டினாள்

ம்மா..” மகள்  சிணுங்க

“என்னடி அம்மா, தினமும் உன்னோட இதே வேலை, பாரு இன்னிக்கும் லேட், இதுக்கு மேலயும் அம்மாவை படுத்தாம பால் குடி, கிளம்பனும் இல்லை..” கண்டிப்புடன் மிரட்ட, அனு முகம் திருப்பினாள் கோபத்துடன்

க்கும்.. இவங்களோட இது ஒன்னு.. கொஞ்சணும் இல்லை கெஞ்சனும், கோவம் மட்டும் படவே கூடாது..” நேரம் போய் கொண்டே இருக்க,

அனு குட்டி என் தங்கம் இல்லை.. ரொம்ப லேட் ஆச்சு.. சீக்கிரம் பால் குடி, நாம கிளம்பனும்..” கெஞ்சி, கொஞ்சி  பால் குடிக்க வைக்க, அவளோ பாதி குடித்ததே பெரிது என்பது போல சிப்பரை தட்டிவிட்டுட்டாள்

இது குடிச்சதே பெருசு..”  பல்லவி மகளின் வாயை சூடான நீரில் துடைத்தவள், அவளை இடுப்பில் வைத்தபடியே அவசர அவசரமாக பேக்கை தயார் செய்து வைத்தவள், மகளுக்கு மப்ளர், ஸ்வட்டர், கை, கால் சாக்ஸ் என்று முழுதும் கவர் செய்தாள்

அடுத்து தனக்கு ஷால் மட்டும் எடுத்து கொண்டவள், கதவை பூட்டி வெளியே வந்தாள். சுற்றிலும் பனி சூழ்ந்து இருட்டியிருந்தது. மணியோ காலை  ஒன்பது.. ஆனால்  சூரியன் உதித்த அடையாளமே இல்லை

பல்லவிக்கு இது பழக்கம் என்பதால் ஷோல்டர் பேக்கை மாட்டி கொண்டவள், சால்வையால் தன்னை மகளோடு சுற்றி கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.  

“தேவாலா.. குமரன்  எஸ்டேட்..”  போர்டை கடந்து கேட்டிற்குள் நுழைந்தாள் 

தேவாலா என்பது ஊட்டியில் இருந்து அறுபது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஹில் ஸ்டேஷன். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தது. மிக சிறிய அளவில் தான் இருக்கும். அங்கிருக்கும் டீ எஸ்டேட்டில் தான் பல்லவி வேலை செய்வது

நான்கு வருடங்களுக்கு முன் தெரிந்தவர் மூலம் இந்த டீ எஸ்டேட்டின் நிர்வாகம் பார்க்க இங்கு வந்தவள். தங்கும் இடம், அனுவை பார்த்து கொள்ளும் வசதி எல்லாம் நன்றாக இருக்க, வேறு இடம் போக தோன்றவில்லை

கேரளா போல அடிக்கடி மழை, பனி என்று மிகவும் குளிர்ந்த இடமாக இருந்தாலும் பல்லவிக்கு மிகவும் பிடித்த இடம். எந்த ஆர்ப்பாட்டமும், அவசரமும் இல்லாமல் இயற்கையோடு ஒன்றி மிகவும் நிதானமாக, நிம்மதியாக வாழ சிறந்த இடம்

தேவைக்கு ஏற்ப டெக்னலாஜி மட்டும் அங்கிருப்பதும் அவர்களின் அமைதியான வாழ்க்கைக்கு காரணமாக இருந்தது. முக்கியமாக நெட் வொர்க். 

இவள் வந்த புதிதில் எல்லாம் இங்கு மொபைல் ஒன்று பயன்படுத்தவே வாய்ப்பில்லை. டவர் என்பது மிகவும் அரிதான விஷயம். இப்போது சில காலமாக ரிசார்ட்டுகள் அவர்களின் தேவைக்காக நெட்வொர்க் என்ற ஒன்றையே உள்ளே கொண்டு வர ஆரம்பித்திருக்கின்றனர்

நெட்வொர்க் இல்லை என்பது  முதலில் பல்லவிக்கு அவஸ்தையை கொடுத்தாலும் பின் காலத்தில் இதுவே நன்மையாக மாறி போனது. அவள் நினைத்தால் கூட எதை பற்றியும், யாரை பற்றியும் தெரிந்து கோள்ள முடியாதே

அப்படி எதுவும் தெரிந்தால் அவளின் மனஉறுதிக்கு தானே  சோதனையாக இருக்கும்எனவே இதுவே நன்று என்று இந்த வாழ்க்கைக்கே தன்னையும் மகளையும் பழக்க படுத்தி கொண்டவள் அதை முழு மனதுடன் ஏற்றும் கொண்டாள்.

அவளுக்கு வேறு வழியும் இல்லையே. அவளாக மிகவும் விரும்பி ஏற்று கொண்ட வாழ்க்கை இது. மிகவும் குறைந்த வயதிலே வாழ்க்கையின் பல பக்கங்களை, நிதர்சனங்களை, கசப்புகளை, காதலை அனுபவித்துவிட்டவள், இப்போது இதையும் ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறாள் ஒரு அம்மாவாக

ஹலோ பல்லவி வந்துட்டீங்களா..? குட் மார்னிங் அனு..”  அனுவை பார்த்து கொள்ளும் கேர் டேக்கர் பல்லவியிடம் இருந்து அனுவை வாங்கி கொண்டார்

அங்கு வேலை செய்பவர்களின் பிள்ளைகளை பார்த்து கொள்ளவே அங்கு ஒரு கிட்ஸ் கேர் சென்டர் உண்டு. ஆனால் அதற்கு இவர்கள் தனியாக கட்டணம் கட்ட வேண்டும். அதனாலே பலர் பிள்ளைகளை வீட்டு பெரியவர்களிடம்  விட்டு வர, பல்லவிக்கு தான் அப்படி யாரும் இல்லையே. எனவே மகளை இங்கு காலையில் கொண்டு வந்து விடுபவள் மாலை வேலை முடிந்து  கூட்டி சென்று விடுவாள்

அம்மாக்கு பை சொல்லு..”  கேர் டேக்கர் சொல்ல, இப்போதும் அனு பிதுக்கிய உதட்டுடன் தான் பை சொன்னாள். முதல் போல சத்தம் போட்டு அழுவதில்லை. ஆனால் முகத்தில் அந்த அழுகைக்கான அறிகுறி நிச்சயம் இருக்கும்

பார்த்த பல்லவியின் தாய் மனம் பிசைந்தாலும் அன்றாட வாழ்க்கை நிதர்சனம் என்று ஒன்று உண்டே. உணவு,, உடை இருப்பிடத்திற்காக ஓடி தானே ஆகவேண்டும்

பை தங்கம்..” மகளுக்கு முத்தம் வைத்தவள்கனத்த மனதுடன் அவளின் வேலையை பார்க்க சென்றாள்.