திகம்பரனின் திகம்பரி அவள் 17 1 15363 திகம்பரனின் திகம்பரி அவள் 17 அவ்வளவு தான் இவன் முடிவெடுத்துவிட்டான், இனி பேசி பயனில்லை புரிந்து கொண்ட விஷ்ணு இரவோடு இரவாக திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்க செய்தான். பல்லவியின் உடை மட்டும் ஈஷ்வர் அவளுடன் சென்று வாங்கி வர, மீதி எல்லாமே விஷ்ணு பொறுப்பு தான். அவன் உதவிக்கு சுப்ரமணிய வரசொன்னவன், அவன் அம்மாவிடமே என்னென்ன தேவை என்று கேட்க வைத்தான். அவனும் எதார்த்தமாக கேட்க, அவனுக்கு பல மண்டையிடிகள் நீ தான் கல்யாணம் பண்ண போறியா என்று அவனின் அம்மா ஆடி தீர்த்துவிட்டார். ஒரு வழியாக ப்ரண்டுக்கு என்று சமாதானம் செய்து லிஸ்ட் தயாரித்தவர்கள் கடைசி நேரத்தில் எல்லாம் வாங்கி குவித்தனர். ஒரு கல்யாணத்திற்கு தேவையான மிகவும் அத்தியாவசிய பொருட்களான தாலி, மாலை, ஈஷ்வருக்கான உடை, மட்டுமே வாங்கினர். அதற்கே இரவு கடை மூடும் நேரம் என்பதால் ஓடி ஓடி வாங்கினர். “எனக்கு டிரஸ் வாங்கிட்டியா..?” ஈஷ்வர் விஷ்ணுவிடம் கேட்க, அவன் திரும்பி பல்லவியை ஒரு பார்வை பார்த்தவன், “என் வாயை கிளறாத, அப்பறம் உனக்கு தான் கஷ்டம்..” என்று வார்னிங் கொடுக்க, உதடு சுளித்த ஈஷ்வர், “ரொம்ப பண்ணாதடா, உனக்கும் நான் தான் பன்ணனும்..” என்றான். “நல்லா பண்ணுவ போ..” எரிச்சல் கொண்ட விஷ்ணு, “இப்போ எங்க தங்க போறீங்க..?” கேட்டான். “**** ஏரியால இருக்கிற நம்ம சர்வீஸ் அப்பார்ட்மென்டுக்கு போலாம்.. அதுக்கு முன்னாடி அங்க இருக்கிற அப்பா வாட்ச்மேனை கிளப்பிட்டு நம்ம ஆளை வரச்சொல்லணும்..” என்ற ஈஷ்வர் போன் எடுத்து செய்து முடித்தான். “டேய்.. இதெல்லாம் முதல்லே ஸ்கெட்ச் போட்டு வச்சிருந்தியாடா..?” விஷ்ணு தலையை ஆட்டிகொண்டவன், “கிளம்புங்க போலாம்..” என, நால்வரும் பல நிமிடங்கள் பயணம் செய்து ஒரு அபார்ட்மென்டுக்குள் வந்தனர். பல்லவி கண்களில் மிரட்சியுடன் பார்க்க, “இது நம்மது தான் லவி, அம்மாவோட அப்பா எனக்கு கொடுத்தது, இதை தவிர வேற சில காம்ப்ளெக்ஸும் நமக்கு இருக்கு, அதுல இருந்து வர இன்கம் எல்லாம் என் அக்கவுண்டுக்கு வந்துடும்..” சொன்ன படி காலியாக இருந்த வீட்டின் கதவை திறந்தான். ஒரு குடித்தனம் நடத்த தேவையான பொருட்கள் எல்லாம் இருக்க, விஷ்ணு நேரே சோபாவில் சென்று விழுந்தான். “சரி நான் கிளம்பவா..? அம்மா போன் பண்ணிட்டே இருக்காங்க..” சுப்ரமணி கிளம்ப பார்க்க, “அடிங்.. எங்க சார் கிளம்புறீங்க, உட்காருடி, நாளைக்கு ஒரேடியா கல்யாணம் முடிச்சிட்டு கிளம்பலாம்..” விஷ்ணு அவனை பிடித்து அமர வைக்க, பல்லவியை ரூமுக்கு அனுப்பி வைத்த ஈஷ்வர் ஹாலில் இவர்களுடன் இருந்து கொண்டான். “ஆனாலும் நானும் பார்த்தது தான் பார்த்தேன் அந்த ஆள் மாதிரி மடையனை பார்த்ததில்லை. யாராவது வயசு பிள்ளையை வெளியே அனுப்புவாங்களா..? அதுவும் இந்த நேரத்துல..” பல்லவி கதவு மூடவும் மூர்த்தியை விஷ்ணு திட்ட, “டேய்.. கொஞ்சம் மரியாதையா பேசு என்ன இருந்தாலும் அவர் என் மாமனார்..” என்றான் ஈஷ்வர் உர்ரென்று. “தப்பு தான்டா, மடையன் சொல்லியிருக்க கூடாது, மடையர், லூசர், அறிவுகெட்டவர், மூளை இல்லாதவர், அரை மெண்டலர், இன்னும் வருது, ஆனா ஏன்னு பார்க்கிறேன்..” விஷ்ணு வாயை மூடி கொள்ள ஈஷ்வர் முகத்திலும் லேசான சிரிப்பும், மூர்த்தி மேல் கொலை வெறியும் இருந்தது. இவர்கள் கொஞ்சும் அந்த நல்லவரோ அங்கு மகளை தேடி தேடி தெரு தெருவாக சுற்றி கொண்டிருந்தார். அவளை வீட்டை விட்டு அனுப்பும் வரை அடங்காத அவர் கண் மூடி தனமான கோவம், அவள் கிளம்பிய சில நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. “எப்படி நீ அவளை வீட்டை விட்டு அனுப்பலாம், போறதுன்னா நீ போக வேண்டியது தானே, இல்லை என்னையும் துரத்தி விட்டிருக்க வேண்டியது தானே, அதைவிட்டு எப்படி அவளை தனியா வீட்டை விட்டு அனுப்பலாம்..? நீயா என் பொண்ணை பத்து மாசம் சுமந்து பெத்த, உனக்கு என்ன தெரியும் அந்த வலி..?” “ஊர் உலகம் இருக்கிற நிலைமையில என் மக எங்க இருக்காளோ..? என்ன செய்றாளோ..? நீயெல்லாம் ஒரு அப்பாவா..? போறேன் நானே என் மகளை தேடி போறேன்.. இனி இந்த வீட்டு வாசலை மிதிக்க மாட்டேன், நீயே வச்சுக்கோ உன் வீட்டை..” நேரம் விட்டு நேரம் விட்டு கத்தி, அழுது, கேள்வியாக கேட்டு மூர்த்தியின் சட்டையை பிடித்து ரகளை செய்துவிட்டார் ரத்னா. மூர்த்திக்குமே மகள் தன் பேச்சு கேட்கவில்லை என்ற கோவத்தில் செய்துவிட்டவர் மகள் வீட்டை விட்டு சென்ற பிறகே அவர் செய்தது உறைத்தது. வந்துடுவா எங்க போக முடியும் அவளால..? அப்போதும் ஏதோ ஒரு திமிரில் இருந்தவர், நிமிடங்கள் மணி நேரம் ஆனபிறகே அச்சம் நெஞ்சை கவ்வியது. “அவ தான் சொல்லிட்டு போனாளே எனக்கு என் ஈஷ்வர் இருக்கார்ன்னு, அப்போ அந்த பையன் கிட்ட தான் போயிருப்பா..” கோமதி சொல்ல, ரத்னாவிற்கு அவரை குதறும் ஆத்திரம். “அந்த பையன் நல்ல பையனா இருந்தா ஆச்சு, வேற மாதிரி இருந்தா என் மக நிலமை..” ரத்னா கோபத்துடன் அழுக, “அதை நீ ஓடி போன உன் மகளை தான் கேட்கணும், என் மகனுக்கு என்ன தெரியும்..?” “அவ ஒன்னும் ஓடிபோகல, நீங்க எல்லாம் தான் பேசி பேசி அவளை துரத்தி விட்டீங்க..” “ஆமா நாங்க தான் காதல் பண்ண சொல்லி சொல்லிக்கொடுத்தோமா..?” “ச்சே.. உங்ககிட்ட பேசுறது வேஸ்ட், நானே என் மகளை தேடி போறேன்..” ரத்னா கிளம்ப, மூர்த்தி நானே போறேன் என்று கிளம்பியவர் விடியும் வரை தேடி கூட அவளை கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் தான் வேறு இடத்திற்கு வந்துவிட்டாளே..? அந்த இரவு யாரும் தூங்கவில்லை. விடியும் முன்னே பல்லவி ரூம் கதவை தட்டி குளிக்க சொன்ன ஈஷ்வர் தானும் கிளம்பி வர, நால்வரும் பக்கத்தில் இருக்கும் கோவில் சென்றனர். காலை பூஜை முடியவும், டோக்கன் கொடுத்து, திருமணத்திற்கு சன்னதியில் நிற்க வைத்தனர். சில்க் சேலை, ரெடிமேட் பிளவுஸில், ஈஷ்வர் வற்புறுத்தி வாங்கி கொடுத்த மெலிதான தோடு, கைகளில் ஒற்றை வளையல் ஆடி கொண்டிருக்க, வேர்த்துவிட்ட கைகளுடன் ஈஷ்வரை பார்த்த பல்லவி, “நாம ரொம்ப அவசர போடுறோம்ன்னு தோணுது.. இப்போவாவது யோசிங்க ப்ளீஸ்..” என்றாள் மீண்டும். காலையில் கிளம்பி வந்ததில் இருந்து அவள் அதையே சொல்லி கொண்டிருக்க, ஈஷ்வர் அமைதியாக, “இப்போ நாம கல்யாணம் செஞ்சுக்கலன்னா நமக்கு இந்த வாய்ப்பு திரும்ப கிடைக்காது, புரிஞ்சுக்கோ, நம்மை சுத்தி நிலைமை சரியில்லை, இது ஒரு கண்பர்மேஷன் நீ என் பொண்டாட்டின்னு மத்தவங்களுக்கு தெரிய, அவ்வளவு தான்..” “அதோட அப்பாவும் இப்போ ஊர்ல இல்லை, டெல்லி போயிருக்கார், அவர் வந்ததுக்கு அப்பறம் இது எப்படி மாறும்ன்னு நமக்கு தெரியாது, மே பி உன்னை தனியா எங்கேயாவது வைக்கலாம், இல்லை உன் வீட்லே பேசி உன்னை அங்க கொண்டு போய் விடலாம், இது எதுவும் நமக்கு வேண்டாம், அதுக்கு தான் இப்போ இது..” பொறுமையாக அவளுக்கு புரிய வைக்க முயன்றவன், அவள் முகம் தெளியாமல் இருந்ததில் முகம் இறுகி தான் போனது. ஆனாலும் இந்த வாய்ப்பை இழக்க அவன் விரும்பவில்லை. மாங்கல்யம் பூஜை முடிந்து வர, முதலில் மாலை மாற்றி கொண்டவர்கள், அடுத்து ஐயர் கொடுத்த மாங்கல்யம் வாங்கி மிக அழுத்தமாக இறுக்கமாக அவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் சரிபாதியாக்கினான் அர்த்தநாரீஸ்வரனான திகம்பரன். விஷ்ணு அதை வீடியோ, போட்டோ எடுக்க, கோவில் சுற்றி வந்தவர்கள் அங்கயே சில நொடிகள் அமர்ந்தனர். ஒரு உண்மையான திருமண உணர்வு, மகிழ்ச்சி அங்கு சிறிதும் இல்லை. பல்லவி அழும் நிலையில் தான் தன்னை கட்டுப்படுத்தி அமர்ந்திருக்க, ஈஷ்வருக்கு மனம் முழுதும் நரசிம்மன் என்ன செய்வார் என்ற யோசனை தான். “அடுத்து என்ன..?” விஷ்ணு கேட்க, “சாப்பிட போலாம்டா, நேத்து நைட் கூட சாப்பிடல..” ஈஷ்வர் சொல்ல, பக்கத்தில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்று உணவு முடித்தனர். சுப்ரமணி அங்கிருந்து விடைபெற, மற்ற மூவரும் அப்பார்ட்மென்டுக்கு வந்தனர். பல்லவி ரூமுக்கு செல்ல, விஷ்ணு, ஈஷ்வர் மட்டும் ஹாலில் இருந்தனர். “நாளைக்கு மாமா வந்துடுவார், நீ என்ன பண்ண போற..? உங்க விஷயம் சொல்ல போறியா..? இல்லை பல்லவியை ஹாஸ்டல் விடலாமா கொஞ்ச நாளைக்கு..?” விஷ்ணு கேட்க, உள்ளிருந்த பல்லவிக்கும் அதே யோசனை தான். “அப்பாக்கு தெரிய வாய்ப்பில்லை, அப்படியே தெரிஞ்சாலும் சமாளிச்சு தான் ஆகணும், அப்பறம் லவி எதுக்கு ஹாஸ்டல் போகணும், இங்கேயே இருக்கட்டும்..” என்றான் ஈஷ்வர். “ச்சு.. எப்படி தனியா இருப்பா..? நீயும் கூட இருக்க போறியா என்ன..?” சந்தேகத்துடன் கேட்டான். “ஏன் இருந்தா என்ன என் பொண்டாட்டி தானே..? அவளை எப்படி தனியா விடமுடியும்..?” ஈஷ்வர் வேகமாக கேட்க, “உன்னை சாவடிச்சிடுவேன், இந்த வயசுல கல்யாணம் செஞ்சதே மிஞ்சின வேலை, இதில குடித்தனம் நடத்த வேற ஆசைப்படுறியா..?” விஷ்ணு தாழ்ந்த குரலில் காய்ந்தான். “ம்ப்ச்.. விஷ்ணு நான் அதுக்கு சொல்லலை, அவளை தனியா விட கூடாதுனு தான் கல்யாணமே செஞ்சேன், இப்போ ஹாஸ்டல் விடுன்னா எப்படி..?” “டேய்.. ரியாலிட்டியை புரிஞ்சிக்க ட்ரை பண்ணு, உன் வயசு, உனக்கான அடையாளம் எதுவும் நேரா இல்லை, இப்போ போய் நீங்க ரெண்டு பேரும் எப்படி தனியா ஒரு வீட்ல தனியா இருக்க முடியும்..? பல்லவி கொஞ்ச நாள் ஹாஸ்டல்ல இருக்கட்டும், நாம பார்த்துக்கலாம்..” “விஷ்ணு நீ சொல்றது எனக்கு புரியாம இல்லை, இன்னும் ஒரு வருஷம் போதும் எனக்கான அடையாளத்தை நான் உருவாக்கிடுவேன், ஆனா அதுவரைக்கும் அவ ஏன் யாரும் இல்லாதவங்க போல தனியா ஹாஸ்டல்ல இருக்கனும்..? முடியதுடா, என்னோட இருக்கட்டும்..” “ஈஷ்வர்.. சும்மாவே உனக்கு லவி பைத்தியம், இப்போ உரிமை பட்டவன் வேற, எப்படி உனக்கு புரிய வைக்கன்னு தெரியல..” விஷ்ணு பொரிந்து கொண்டிருக்க, “நான் ஹால்டலே போறேன்..” என்று வந்தாள் பல்லவி. “லவி.. அங்க எல்லாம் எதுக்கு..? இங்கேயே இரு, நான் வேணா வீட்டுக்கு போயிடுறேன்..” ஈஷ்வர் சொல்ல, “எனக்கு இங்க இருக்க முடியாது.. ப்ளீஸ்.. இதுலையாவது என் பேச்சை கேளுங்க..” பல்லவி கெஞ்சலாக சொல்ல, அவன் முகத்தில் மறுப்பு தான். “ஈஷ்வர்.. முதல்ல கொஞ்சம் நிதானத்துக்கு வா, இந்த விஷயம் உங்க அப்பாக்கு தெரிஞ்ச என்ன ஆகும்ன்னு யோசிக்கவே மாட்டியா..? என்னை பொறுத்த வரை இப்போதைக்கு உங்க விஷயம் வெளியே தெரியாம இருக்கிறது நல்லது, முதல்ல உங்க படிப்பை முடிங்க, அப்பறம் பார்ப்போம்..” விஷ்ணு சொல்ல, பல்லவியும் ஹாஸ்டல் போவதில் உறுதியாக நின்றாள். ஈஷ்வர் சொல்லி பார்த்தவன் அவள் ஏற்க மாட்டாள் என்று புரிய, அவளை ஹாஸ்டல் சேர்ப்பது தவிர அவனுக்கு வேற வழி இருக்கவில்லை. “சரி நம்ம ஏரியா ஹாஸ்டல் பார்க்கலாமா..?” கேட்க, “இல்லை எனக்கு அங்க வரவே வேண்டாம், இங்கேயே பார்க்கலாம்..” என்றாள் பல்லவி உள்ளுக்குள் பெற்றவர்கள் மேல் பொங்கிய கோபத்துடன். சரியென்று அங்கேயே இருக்கும் ஹாஸ்டல் பார்த்தவர்கள், அவளுக்கு தேவையான உடை, அத்தியாவசிய பொருட்கள், மொபைல் எல்லாம் வாங்கி கொடுத்து, ஹாஸ்டல் வந்தனர். “கோச்சிங் கிளாஸ் என்ன பண்ண போற..?” என்று இறுக்கமான முகத்துடன் கேட்டான். “இப்போ வேண்டாம் கொஞ்ச நாள் போகட்டும்..” என்றுவிட்டாள். தண்ணீராக செலவான பணத்தை பார்த்தவளுக்கு மேலும் செலவு வைக்க மனம் வரவில்லை. அதோடு அந்த பணம் ஏனோ தனக்கு சொந்தமில்லாததாக தான் தோன்ற, ஒருவிதத்தில் மனதுக்குள் கூசவே செய்தது. “சரி அப்போ நாம கிளம்பலாமா..?” அவர்களை தனியே விடாமல் அடை காத்து கொண்டிருந்த விஷ்ணு சொல்ல, ஈஷ்வர் கோவமும், வருத்தமுமாக பல்லவியை பார்த்தவன், “நான் கிளம்புறேன்..” என, பல்லவிக்கு தொண்டை அடைத்தது. “ம்ம்..” என்று தலை மட்டும் ஆட்ட, ஈஷ்வருக்கு வெளியே வைத்து எல்லோரும் பார்க்க எதுவும் செய்ய முடியாத நிலை. அவள் நெற்றி குங்குமம், கழுத்தில் தொங்கிய புது மஞ்சள் தாலியும் அவன் உரிமையை சொல்ல, “நீ என்னை கொல்ற லவி, இதெல்லாம் தேவையா சொல்லு..” அவளை தனியே விட்டு கிளம்ப முடியாமல் தத்தளித்தான். “பார்த்துக்கோம்மா..” விஷ்ணுவிற்கு ஏதோ போல் இருந்தது பல்லவியின் அழுகை முகம். அதனாலே தனிமை கொடுத்து விலகி சென்றான். “இப்போ நான் என்ன செய்யட்டும்..?” ஈஷ்வர் கேட்க, அந்த நொடி இருவரின் கண்களும் சிவந்து தான் இருந்தது. “நீங்க கிளம்புங்க.. நான் நைட் போன் பண்றேன்..” பல்லவிக்கு புரிந்து போனது இன்னும் கொஞ்சம் நேரம் சென்றால் அவனுடனே கிளம்பிவிடுவோம் என்று. அதனாலே அவனை கிளம்ப சொல்ல, ஈஷ்வருக்கு தான் தாங்க முடியவில்லை. “உனக்கு எப்போவும் என்னை விட்டு தள்ளி இருக்கிறது தான் வேணும் இல்லை, ஆனா என்னால முடியலடி, இப்போ கூட உன்னை விட்டு.. ச்சு..” தொண்டை குழி ஏறி இறங்க நின்ற இடத்திலே நிலையில்லாமல் அசைந்தவன், “நீ என்னை ஏதோ செய்றடி.. உன்னால நான் என்ன ஆக போறேன்னு எனக்கே தெரியல..” விர்ரென்று கிளம்பிவிட்டான். பல்லவி கண்களில் கண்ணீர் வழிய ரூமிற்கு ஓடிவிட்டாள். அவர்கள் திருமண வாழ்க்கை அழுகையில், வேதனையில், பிரிவில் தான் ஆரம்பித்ததது. ஈஷ்வர் அங்கு, பல்லவி இங்கு என்று நாட்கள் சென்றது. நரசிம்மன் டெல்லி சென்று திரும்பி வந்தவர்க்கு மகன் திருமணம் முடிந்தது தெரியவில்லை. முழுதும் இரவில் நடந்த ஒன்று என்பதோடு, ஈஷ்வர் அப்பா ஆட்கள் எங்கெல்லாம் இருப்பார்கள் என்று பார்த்து பார்த்து எல்லாம் முடித்திருக்க, அவருக்கு தெரிய நாட்கள் எடுத்தது. அதுவும் ஈஷ்வராலே. அதுவரை ஈஷ்வரும், பல்லவியும் போனில் தான் பேசி கொண்டனர். ஈஷ்வர் நேரில் வர பல்லவி மறுத்தாள். “காலேஜ் போய்ட்டு, கோச்சிங் கிளாஸ் போய்ட்டு இங்க வரதெல்லாம் உங்களுக்கு அலைச்சல் வேண்டாம்..” என்றுவிட, ஈஷ்வர் எப்போதும் போல அவளிடம் முட்டிகொண்டான்.