“காலையிலே உனக்கு கோர்ட்டர் வேணுமா..?” திரும்பவும் விஷ்ணு தலையில் கொட்டிய கங்கா, திரும்பி ஈஷ்வரை பார்த்தார். அவன் கவனம் முழுதும் காபியிலே இருக்க, கிட்சன் சென்றவர் தட்டுடன் டேபிள் வந்தார்.
“சாப்பிட வாங்கடா..” என்றவர் தட்டை வைத்துவிட்டு வெளியே பார்த்து கை அசைக்க, பெரிய உணவு கூடையுடன் ஒருவன் வந்தான்.
“எல்லாம் எடுத்து வச்சுடு..” என்ற கங்கா திரும்பவும் ஹாலுக்கு வந்த, “உங்களை தான் கூப்பிடுறேன் சாப்பிட வாங்க..” மறுபடியும் கூப்பிட, ஈஷ்வர் மொபைலை பார்க்க செய்தான்.
விஷ்ணு அவனை பார்த்துவிட்டு தோளை குலுக்கி கொண்டவன் எழுந்து சாப்பிட சென்றான். மணியும் அவனை தொடர்ந்து சாப்பிட செல்ல, கங்கா மகன் பக்கத்தில் அமர்ந்து அவனின் பரட்டை தலையை வருடினார்.
“என்னடா இப்படி குத்துது.. எண்ணெய் ஒன்னு வைக்கிறேதே இல்லையா..?” கடிந்து கொண்டே உள்ளே சென்று எண்ணையுடன் வந்து அவனின் தலையில் வைக்க போக ஈஷ்வர் நிமிர்ந்து முறைத்தான்.
“சரிடா நான் வைக்கல.. நீயே வை..” அவனின் கையில் திணித்தவர், “என்னமோ இவன் பிறந்ததுல இருந்தே அவதான் எண்ணெய் வச்ச வளர்த்த மாதிரி என்னை தொட கூட விட மாட்டேங்குறான்..” சத்தமாக முணுமுணுத்தார்.
ஈஷ்வர் கையில் எடுத்த எண்ணெய்யை அப்படியே கீழே வைத்துவிட, பார்த்த கங்காவிற்கு கோபத்துடன் அழுகையும்.
“அப்படி என்னடா சொல்லிட்டேன் நான், பெத்த அம்மா நான் உனக்கு எண்ணெய் வைக்க கூடாதா..? எனக்கு அந்த உரிமை கூட இல்லையா..? என்ன நீ மொத்தமும் அவளுக்கு தான் சொந்தமா..? அப்போ நான் யாருடா..?” கத்தியவர் கண்களில் கண்ணீரும் தேங்கியது.
“நீயும் உன் அப்பாவும் சுயநலவாதிங்கடா, உங்களுக்கு உங்களை பத்தி மட்டும் தான் கவலையே, என்னை பத்தி நினைக்க கூட யார் இருக்கா..? நான் எக்கேடு கெட்டு போனா உங்களுக்கு என்ன..?”
“ம்ப்ச்.. ம்மா..”
“என்னடா ம்மா.. போடா..” அழுகையுடன் அமர்ந்துவிட, ஈஷ்வர் அவரின் கை பிடித்து தட்டி கொடுத்தான்.
“ஏண்டா உங்க பிரச்சனையில் என்னை இப்படி அழவைக்கிறீங்க, இன்னும் எத்தனை நாளைக்கு எனக்கு இந்த பாடு, நீ ஒரு பக்கம், உங்க அப்பா ஒரு பக்கம்ன்னு என்னை கிடந்து அல்லாட வைக்கிறீங்க..”
“பாரு இப்போ கூட உன்னை கூட்டிவர சொல்லி வெளியே இருக்கார் மனுஷன், என்னமோ முக்கியமான விஷயம் பேசியே ஆகணுமாம், நான் என்ன செய்யட்டும்..?” கங்கா கணவன் வெளியே இருக்கும் விஷயத்தை சொல்ல, ஈஷ்வர் முன்னால் இருந்த டீபாயை உதைத்து எழுந்து நின்றான்.