திகம்பரனின் திகம்பரி அவள் 1 2 22615 “பேசுனா தூக்கம் வராதுன்னு தானே கேள்விப்பட்டிருக்கேன்..” முணுமுணுத்த கோமதி வாய் மூடி கொள்ளவே செய்தார். கார் சென்னையை விட்டு திருப்பதி செல்லும் பாதையில் வேகம் எடுக்க, காருக்குள் இருந்தவர்களில் கோமதி, ஸ்மிதா, மகிளா மூவரும் தூங்கிருந்தனர். முழித்திருந்த மற்ற மூவரின் கண்களும் இருட்டை வெறித்து கொண்டிருந்தது. ரத்னா கண்கள் கலங்கி போய் அமர்ந்திருந்தார். முன் கண்ணாடி வழியே பார்த்த ஈஷ்வர் கைகளில் கார் இன்னும் வேகம் எடுத்தது. இடையில் காபி, டீ என்று எதற்கும் நிற்காமல் கார் கீழ் திருப்பதியில் நின்றது. “ பரவாயில்லையே சொன்ன நேரத்தை விட சீக்கிரமா தான் கூட்டி வந்திருக்க, வா சாப்பிடலாம்..” கோமதி கூப்பிட, தன் ஷோல்டர் பேக்கை எடுத்தவன், “நானே கொண்டு வந்திருக்கேன்..” அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டான். “பரணி.. நீங்க சாப்பிடுங்க, தரிசனத்துக்கு இன்னும் நேரம் இருக்கு..” ரத்னா உணவு கூடையை எடுத்து பிரித்து கோமதிக்கு இட்லி வைத்து கொடுத்தார். “ஏங்க..” அடுத்து கணவருக்கு கொடுக்க, “எனக்கு வேண்டாம் ரத்னா..” என்றுவிட்டார் அவர். “மூர்த்தி தரிசனம் முடிய நேரம் ஆகும், பசி தாங்க மாட்ட, சாப்பிட்டுக்கோ..” கோமதி சொல்ல, “வேண்டாம்மா..” என்றுவிட்ட மூர்த்தி ஈஷ்வர் பக்கத்தில் அமர்ந்து தானும் மலை உச்சியை பார்த்தார். “பரணி.. உனக்கு..” ரத்னா மகனிடம் கேட்க, “அவர் மட்டும் எப்படி சாப்பிடுவார் அத்தை..?” மகிளா குரல் சொல்லி கொள்ளும் படி இல்லை. ஈஷ்வர் கவனித்தவன் பெரு மூச்சோடு மலை உச்சியை பார்த்தான். “ரத்னா நீயும் சாப்பிட மாட்டியே..?” கோமதி கேட்க, “இல்லை அத்தை.. ட்ராவல் பண்ணது ஒரு மாதிரி இருக்கு..” பேத்திக்கு ஊட்டி கொண்டே சொன்னார். “க்கும்.. ஓடி போனவளுக்காக இது ரொம்ப அதிகம்..” என்றார் கோமதி பட்டென. “அத்தை..” ரத்னா கண்கள் கலங்கிவிட, ஈஷ்வர் கைகளோ பெஞ்சை அழுத்தமாக பிடித்தது. “பாட்டி.. பாப்பா பத்தி பேசினது போதும், சாப்பிடுங்க..” சொன்ன பரணியின் முகத்தில் கோவம் வெளிப்படையாக தெரிய, சீண்டிவிட்டது போலான கோமதி, “என்னடா கோவப்படுற..? நான் என்ன பொய்யா சொன்னேன், எவனோ ஒருத்தனை நம்பி நீங்க எல்லாம் வேண்டாம்ன்னு உங்களை தூக்கி போட்டு ஓடி போனவ தானே அவ.. அப்பறம் என்ன..? இதுல இன்னும் பாப்பாவாம் பாப்பா.. இந்நேரத்துக்கு எத்தனை பாப்பா பெத்திருக்காளோ..?” கோமதி பேச, ஈஷ்வர் வேகமாக எழுந்து மறைந்தான். “பாட்டி.. வெளி ஆள் இருக்கும் போது இப்படி தான் பேசுவீங்களா..?” பரணி ஆத்திரத்துடன் கேட்க, “என் பெரிய வெளிஆள்.. இவ ஓடி போனது தான் ஊர் உலகத்துக்கே தெரியுமே..” அடங்காமல் பேசினார். “பரணி.. எதுவும் பேசாதடா..” ரத்னா கெஞ்சவே செய்தார். அவன் பேச பேச கோமதி மற்றவர் நெஞ்சை கிழித்து கொண்டிருந்தாரே. “பாட்டி.. எனக்கு போதும்..” ஸ்மிதா ஈஷ்வர் சென்ற பக்கம் செல்ல, பரணியும் மகளுடன் சென்றான். “நீங்க சாப்பிடலையா..?” எங்கோ பார்த்து நின்ற ஈஷ்வரிடம் பரணி கேட்க, “நான் இவ்வளவு சீக்கிரம் சாப்பிடுறதில்லை..” என்றான். “ம்ம்.. உங்களை பார்த்தா ட்ரைவர் போல தெரியலையே..?” உருவமும், உடையும் கணக்கெடுத்து கேட்டான் பரணி. “பார்ட் டைம் இந்த மாதிரி வருவேன்..” முடித்துவிட, பரணியால் அதற்கு மேல் கேட்க முடியவில்லை. மகள் அங்கும் இங்கும் ஓட அவளை பார்த்து கொள்ள போனான். உணவு முடிக்கவும், “நீங்க இவங்களை கூட்டிகிட்டு மேல போங்க..” என்ற பரணி ரத்னாவுடன் நடைபாதையில் ஏற ஆரம்பிக்க, ஈஷ்வர் மற்றவர்களுடன் மேலேறினான். குறித்த நேரத்தில் அங்கு இருக்கும் படி மேலேறியவன், அவர்களின் தரிசன இடத்தில காரை நிறுத்தி அவர்களை கியூவில் நிற்க வைத்தவன், “முடிச்சிட்டு இதே இடத்துக்கு வந்துடுங்க..” என்றான் மூர்த்தியிடம். அவர்கள் கியூ நகரவும், காரை சற்று தள்ளி நிறுத்தியவன், நின்றபடி வெங்கட ராமணின் கோபுரத்தை பார்க்க ஆரம்பித்துவிட்டான். கண்களில் அவ்வளவு இறைஞ்சுதல் இருக்க, முகம் மிகவும் அழுத்தமாக இருந்தது. மூர்த்தியுடன் சென்றவர்கள் திரும்ப வரும் வரை நின்றவனுக்கு கால் நகர மறுத்தது. “நீங்க உள்ள உட்காருங்க..” ரிமோட் மூலம் காரை திறந்தவன், கஷ்டப்பட்டே நடந்து சென்று தண்ணீர் எடுத்து முகம் கழுவி, காலுக்கு கொஞ்சம் ஊத்தினான். “தம்பி.. நீ சாப்பிட்டியா..?” மூர்த்தி கேட்க, “முடிஞ்சது சார்.. “ என்றுவிட்டவன் வயிறு இன்னும் தண்ணீர் கூட நினைக்கவில்லை. “தம்பி.. இங்க ரூம் போட்டிருக்கோம்.. என் மகன், பொண்டாட்டி வர வரைக்கும் அங்க இருக்கலாம்..” என, அவர்களை கூட்டிச்சென்று அங்கு விட்டவன், “சார்.. நான் அவங்களை இங்க கூட்டிட்டு வந்துடுறேன்..” அவனின் நம்பரை கொடுத்துவிட்டு காருடன் திரும்ப கோவிலுக்கருகில் வந்தவன், காரை பூட்டிவிட்டு நடக்க ஆரம்பித்துவிட்டான். அவனின் கால்கள் முழுக்க வெங்கடராமனின் கோபுரத்தை தான் சுற்றி வந்தது. “பரணி.. இந்த வருஷமாவாவது பாப்பா நம்மகிட்ட வந்துருவா இல்லை..” ரத்னா கண்களை துடைத்தபடி வெளியே வர, பார்த்துவிட்ட ஈஷ்வர் அப்படியே நின்றான். “ம்மா.. கண்டிப்பா வருவா, நம்பிக்கை வைங்க..” பரணி அவரின் தோள்களை சுற்றி அணைத்தபடி கூட்டி வந்து கொண்டிருந்தான். “போலாமா..?” ஈஷ்வர் அவர்கள் முன் சென்று கேட்க, ம்ம்.. என்ற பரணி, ரத்னா இருவரும் அமைதியாக காரில் ஏறிக்கொள்ள, ரூம் இருக்கும் இடத்திற்கு சென்றனர். கோமதி வாசலிலே நின்றிருந்தவர், ரத்னா அழுத முகத்துடன் வருவதை பார்த்து, “இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி அழுதுட்டு இருக்க..? உனக்கு எப்போ பாரு இதே வேலை தான், ஒரு மனுஷி நிம்மதியா கோவிலுக்கு வர முடியுதா..? “ மருமகளை சிடுசிடுத்தார். “பாட்டி.. அம்மா டையர்டா இருக்காங்க, வழி விடுங்க..” உள்ளே கூட்டி சென்ற பரணி, அவருக்கு உணவு வைத்து கொடுத்தே, தான் சாப்பிட்டான். “அவ்வளவு தான் கிளம்பலாம்ப்பா..” மூர்த்தி ஈஷ்வர்க்கு போன் செய்ய, பக்கத்தில் இருந்தவன் வந்து கார் எடுத்தான். “ம்மா.. எனக்கு டெடி வேணும்..” ஸ்மிதா வழியில் உள்ள கடைகளை பார்த்து கேட்க, “உங்க அப்பாக்கு இப்போ நாம கண்ணுக்கு தெரிய மாட்டோம் ஸ்மிதா, அவர் வேண்டுதல் புல்லா அவர் பாப்பா மேல தான் இருக்கும்..” மகிளா உள் குத்துடன் சொல்ல, பரணி திரும்பி மனைவியை முறைத்தான். ஈஷ்வர் கைகளில் கார் தானாகவே நிற்க, “நீங்க எல்லாம் கார்லே இருங்க, நான் குட்டி மேடத்துக்கு டெடி வாங்கிட்டு வரேன்..” தகவலாக சொன்னவன், ரோடை கடைந்து எதிர்புறத்தில் இருந்த பெரிய டெடியை வாங்கி வந்தான். “ஐய்.. சூப்பர் அங்கிள், எனக்கு இந்த டெடி தான் பிடிக்கும்ன்னு உங்களுக்கு எப்படி தெரியும்..?” ஸ்மிதா வாங்கி கொண்டு ஆர்பரித்தாள். ஈஷ்வர் சிரிப்பை பதிலாக தந்தவன் கார் எடுக்க, “பணம்..” என்றான் பரணி. “எனக்கு கொடுக்கும் போது சேர்த்து கொடுத்துடுங்க..” என்றுவிட்டான். காலை கிளம்பியவர்கள் நடு இரவு போல சென்னை வந்து சேர்ந்தனர். “இவங்க ஓடி போன பொண்ணு வேண்டுதலுக்காக நான் இந்த வயசிலும் பட வேண்டியிருக்கு.. என்ன செய்ய என் தலையெழுத்து..” கோமதி புலம்பி அந்த ட்ரிப்பை முடித்து வைத்தார். “ஈஷ்வர்.. இந்தாங்க.. ரொம்ப நன்றி.. நல்லா ஸ்மூத்தா கூட்டிட்டு போய் வந்தீங்க..” பரணி பணம் கொடுக்க, கசந்த முறுவலுடன் வாங்கி கொண்டவன், அவர்கள் தெருவை விட்டு வெளியே வர, பர்டியூனர் கார் அவனுக்காக காத்திருந்தது. “என்னடா போலாமா..?” விஷ்ணு கேட்டான், “போலாம்..” என்றவன் முன் சீட்டில் அமர்ந்து கண் மூடி கொண்டான். அவனின் உடலை விட மனம் மிகவும் சோர்ந்து போயிருந்தது. “டீ கடையில நிறுத்துடா..” என்றவன், ஒரு நாள் முழுதும் விட்டு இப்போது தான் வயிற்றுக்கு ஒரு டீ கொடுத்தான். விஷ்ணு பார்த்திருந்தவன் எதுவும் கேட்கவில்லை. கார் நேரே அவர்கள் வீடு செல்ல, காலையில் எடுத்து என்ற உணவு பையை டேபிளில் வைத்த ஈஷ்வர், ரூம் சென்று அப்படியே கட்டிலில் விழுந்தான். கண்கள் மேலே நின்றிருந்த பேனை பார்க்க பார்க்க, கண்ணீர் தானாக வழிந்து ஓடியது. “ஓடிப்போனவ இந்நேரத்துக்கு எத்தனை பாப்பா பெத்திருக்காளோ..” கோமதி குரல் நெஞ்சில் அறைய, கண்ணீர் வேகம் கூடியது. “அப்படி பிறந்திருந்தா கூட அவ என்னை விட்டு போயிக்க மாட்டாளே பாட்டி..” வாய் விட்டு சொன்னவன் குரலை விட மனம் அதிகமாக கதறியது. “பல்லவி.. அவனின் லவி..” அவனை நம்பி வந்தவள் சென்ற இடம் தெரியவில்லை. அவளை தொலைத்துவிட்டான். அவள் இத்தனை பேச்சு வாங்க காரணமாக இருந்தவன். அந்த எவனோ ஒருத்தன்.. இவன் தான். அவளின் பெற்றவர்களிடம் சொல்ல தைரியம் இல்லை. கோழையாக திரும்பி வந்துள்ளான். “மௌனமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதே..!! உயரமான கனவு இன்று தரையில் வீழ்ந்து போனதே..!! இசையும் போனது..!! திமிரும் போனது..!! தனிமை தீயிலே வாடினேன்..!! நிழலமும் போனது நிஜமும் போனது..!! எனக்குள் எனையே தேடினேன்..!! கனவே கனவே கலைவதேனோ..? கணங்கள் ரணமாய் மறைவதேனோ..? நினைவே நினைவே அறைவதேனோ..? எனது உலகம் உடைவதேனோ..?”