திகம்பரனின் திகம்பரி அவள் 1 1 30372 திகம்பரனின் திகம்பரி அவள் 1 “சுப்ரமணி.. சுப்பு.. மணி..” ராகம் இழுத்து கொண்டிருந்தான் அவன் ஈஷ்வர். “டேய்.. இன்னும் என்னடா வேணும்..? அதான் பப்பே காலியாகிருச்சு இல்லை, கிளம்புங்கடா போலாம்..” என்றான் சுப்ரமணி என்பவன் நொந்து போய். “என்ன அதுக்குள்ள கிளம்புறதா..? வாய்ப்பே இல்லை மச்சி, இன்னும் ஒரு ஹாப் சொல்லு..” டேபிளில் தாளம் போட்டான் மற்றவன் விஷ்ணு. “அநியாயம் பண்றீங்கடா, நேரம் இப்போ நைட் பன்னிரண்டு மணி. இன்னும் எவ்வளவு நேரம்டா..” “இப்போதான் பன்னிரண்டு மணியா..? ச்சு.. அப்போ ஒரு புல்லே சொல்லு மச்சி..” ராகம் இழுத்தான் ஈஷ்வர். “கொஞ்சமாவது என் நிலைமையை புரிஞ்சுக்கோங்கடா.. இங்க பப்ல அதெல்லாம் அலோவ்டே இல்லை, உங்களுக்காக நான் பக்கத்து டாஸ்மார்க்ல வாங்கி வந்து கொடுத்துட்டு இருக்கேன்டா, அவனும் கடைய மூடிட்டு ஓடியிருப்பான், இப்போ உங்க புல்லுக்கு நான் எங்க போகட்டும்..?” “என்ன அதுக்குள்ள கடைய மூடிட்டானா..? என்ன தைரியம் அவனுக்கு.. வா மச்சி போய் அவனை என்னன்னு கேட்போம்..” இருவரும் எழுந்து பப்பை விட்டு வெளியே வந்தவர்கள், ரோடை கிராஸ் செய்ய, வேகமாக வந்த காரில் மோதி நின்றனர். சென்னை மவுண்ட் ரோட், நடுஇரவு நேரம். “எவண்டா அது.. எங்க கார்ல வந்து மோதுறது, கொஞ்சம் விட்டிருந்தா உங்களை அடிச்சு தூக்கியிருப்போம்..” காரில் இருந்து மூவர் இறங்கி வந்தனர். அவர்களை பார்த்தாலே தெரிந்தது அவர்களும் இவர்களை போல முழு தள்ளாட்டத்தில் இருந்தனர் என்று. போச்சு.. சுப்ரமணி வேகமாக இவர்களிடம் வர, ஈஷ்வர், விஷ்ணுவோ அவர்களிடம் வம்பு வளர்க்க ஆரம்பித்துவிட்டனர். “தோடா.. எவண்டா அது எங்களை அடிச்சு தூக்குறது..” ஈஷ்வர் அவர்கள் காரில் ஏறி அமர, விஷ்ணு நின்றிருந்த மூவரை தள்ளிவிட்டு ட்ரைவிங் சீட்டில் வெளியே கால் விட்டு அமர்ந்தான். “இதோ பார்றா நீங்களும் எங்களை மாதிரி தானா..? அதுக்காக இது எல்லாம் ரொம்ப ஓவர், இறங்குங்குடா முதல்ல..” “இறங்கலைன்னா என்னடா பண்ணுவீங்க..?” காரில் இருந்த மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்து சத்தத்தை கூட்டி வைத்தான் விஷ்ணு. “இதேதடா ரொம்ப ஓவரா போகுது, நீங்களா காரை விட்டு வரல தூக்கி போட்டுடுவோம்..” “இன்னா மாமு.. என்னை தூக்கிடுவியா.. வா தொட்டு பாரு முதல்ல..” விஷ்ணு தள்ளாட்டத்துடன் எழுந்து வந்தவன் நெஞ்சாலே மற்றவன் நெஞ்சில் முட்டி தள்ளினான். “இதென்னடா வம்பா இருக்கு, போலீஸ் வந்தா மொத்தமா தூக்கிட்டு போயிடுவாங்க.. எங்களை விட்டுடுங்க, நாங்க கிளம்புறோம்..” “சரி போ.. அதுக்கு முன்னாடி ஒரு புல் வாங்கி கொடுத்துட்டு போ..” ஈஷ்வர் கார் மேலே படுத்து கொண்டான். “இந்த நேரத்துக்கு புல் எங்க கிடைக்கும்..?” “அது உங்க பாடு.. மச்சி பாட்டு மாத்து..” ஈஷ்வர் சொல்ல, விஷ்ணு காரில் ஏறி மியூசிக் சிஸ்டத்தை நோண்டி கொண்டிருந்தான். “இவனுங்களை விட்டா ரொம்ப மேலேறுறானுங்க..” ஒருவன் ஈஷ்வர் மேல் பாய போக, அவனின் கை மின்னலாக வந்தவன் மூக்கில் குத்த, கால்கள் அவனின் வயிற்றை உதைத்து தள்ளியது. “மேல கை வைக்கிறீங்க.. வாங்கடா.. வாங்கடா..” ஈஷ்வர் படுத்தபடியே கத்த, விஷ்ணு “மச்சி எனக்கும் ஒரு டிக்கெட் தள்ளு.. கை பரப்பரங்குது..” என்றான் காரில் அமர்ந்தபடி. “பண்றதையும் பண்ணிட்டு அடிக்கவா செய்றீங்க..” மற்ற இருவரும் அவர்கள் மேல் பாய, நொடியில் இருவரும் ரோட்டில் உருண்டனர். “அடங்கி இருங்கடா..” “இல்லை அடக்கம் பண்ணிருவோம்..” “மச்சி சூப்பர் பன்ச்..” விஷ்ணு குதூகலிக்க, “எங்கிருந்து சுட்டதோ..?” என்றான் சுப்ரமணி தலையில் கை வைத்தபடி. “டேய்.. போலீஸ் சைரன் கேட்குதுடா..” விழுந்திருந்தவர்கள் எழுந்து ஓட, போலீஸ் இவர்களை நெருங்கிவிட்டது. “யாருடா நீங்க எல்லாம், எங்க ஓடுறீங்க, நில்லுங்கடா..?” ரோந்து பணியில் இருந்த போலீஸ் இவர்களை வழி மறைத்தது. “ஓஹ்.. போலீஸா.. மச்சி இவங்ககிட்ட கேளுடா புல் கிடைக்கும்..” ஈஷ்வர் சுப்ரமணியிடம் சொல்ல, “என்னங்கடா லந்தா..?” போலீஸ் கேட்டு ஏறி வந்தார். “சார்.. சாரி சார்..” சுப்ரமணி ஓடி வந்து அவரை தடுத்தான். “டேய் நீ யாருடா..? இவனுங்களுக்கு சப்போர்ட்டா.. ஒழுங்கா ஓடி போயிடு, இல்லை உள்ள வச்சு தோலை உறிச்சிடுவேன்..” அவனை மிரட்டினர் போலீஸ். “ம்ப்ச்.. இப்போ எதுக்கு எங்க செல்லத்தை மிரட்டுறீங்க போலீஸ், உங்களுக்கு தேவை இது தானே.. இந்தாங்க..” பர்ஸில் இருந்த பணத்தை எடுத்து போலீஸ் சட்டையில் சொருகினான் விஷ்ணு. “அடிங்க.. பணம் கொடுத்தா இப்படி நடந்துக்குதா சொல்லுதா..? உங்களை மொத்தமா தூக்கிட்டு போய் ஸ்டேஷன்ல வச்சு வெளுக்கிறேன் இரு..” காவலர் எகிற, “அட இவர் என்னடா..?” சலித்து கொண்ட ஈஷ்வர், “இப்போ என்ன நாங்க போலீஸ் ஸ்டேஷன் வரணும் அதானே.. வாங்க போலாம்..” என்று ட்ரைவர் சீட்டில் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்ய, விஷ்ணு முன்னால் அமர்ந்து கொண்டு, “வந்து ஏறுங்க சார்..” என்றான் போலீசை பார்த்து. இந்த கலவரத்தில் பலர் கூடிவிட, எப்போதும் போல அதில் சிலர் வீடியோவும் எடுக்க ஆரம்பித்திருந்தனர். “சார்.. அவங்க மேல கை வைக்காதீங்க, பின்னாடி உங்களுக்கு தான் பிரச்சனை..” சுப்ரமணி அவர்களை அடிக்க நெருங்கிய போலீசை மறித்து சொன்னான். “அப்படியென்ன பெரிய ஆளா அவங்க.. பார்க்கிறேன் யார் என்ன பண்றாங்கன்னு..” போலீஸ் நெஞ்சை நிமிர்த்தினார். “உங்க கமிஷனர் தான் பண்ணுவார், அவர் மகனை அடிச்சா உங்களை விட்டுடுவாரா..?” சுப்ரமணி சொல்லி கொண்டிருக்கும் போதே, அங்கு வேகமாக வந்தது கமிஷனர் கார். அந்த காரை பார்த்தவுடன் விஷ்ணு வெறுப்புடன் முகம் திருப்பி கொண்டான். “அவங்களை இந்த கார்ல ஏத்துங்க..” காரில் இருந்தபடியே அவர் சொல்ல, விஷ்ணு இறங்கி மடமடவென நடக்க ஆரம்பித்துவிட்டான். “மச்சி..” ஈஷ்வர் அவன் பின்னால் செல்ல, கமிஷனர் போலீசை பார்த்த பார்வையில் வீடியோ எடுத்த போன் எல்லாம் அவர் கைக்கு வந்து சேர்ந்தது. “தம்பி.. ஏறுங்க போலாம்.. அய்யா உங்ககிட்ட எதோ முக்கியமா பேசணுமாம்..” வழியில் ஒரு கட்சி வேட்டி ஈஷ்வரிடம் சொல்ல, “உங்க நொய்யாவை பார்க்க எனக்கு இஷ்டம் இல்லை..” வார்த்தைகள் கடுமையாக ஒலிக்க சொன்னவன் விஷ்ணு பின் சென்றான். “தம்பி யாரு இவங்க..” போலீஸ் அங்கிருந்த சுப்ரமணியிடம் கேட்க, “அதான் சொன்னேன் இல்லை ஒருத்தன் உங்க கமிஷனர் மகன், இன்னொருத்தன் மினிஸ்டர் மகன்..” என்றவன் கார் எடுத்து அவர்கள் பின் சென்றான். “ஏறுங்கடா போலாம்..” அவன் இருவர் பக்கத்தில் கார் நிறுத்த, இருவரும் ஏறி கொண்டனர். கார் நேரே அவர்கள் தங்கியிருந்த வீடு சென்றது. இருவருமே எதுவும் பேசாமல் நேரே பெட்டிற்கு சென்றனர். மறுநாள் முழுதும் படுத்து தூங்க, அடுத்த நாள் விடியற்காலை ஈஷ்வர் குளித்து எங்கோ கிளம்பினான். …………………………………………………………………. அழகுண்ணா.. எல்லாம் ரெடியா..? இந்த பேக் எல்லாம் எடுத்து கார்ல வச்சுடுங்க.. சீக்கிரம்..” ரத்னம் பரபரப்புடன் கோவிலுக்கு செல்லும் ஏற்பாட்டை செய்து கொண்டிருக்க, “ரத்னா.. கிளம்பலாமா..?” என்று வந்தார் மூர்த்தி. “இதோ ஆச்சுங்க..” என்றவர் மிச்சம் இருந்த பைகளை எடுத்து வைக்க, “கொடுங்கம்மா..” என்று வந்தான் பரணி. “மகிளா கிளம்பிட்டாளா..?” மகனிடம் மருமகளை கேட்டார். “கிளம்பிட்டே இருக்காம்மா.. வருவா.. நீங்க முதல்ல போய் பாட்டியை கூப்பிடுங்க, அப்பறம் அதுக்கு வேற பேச்சு வாங்கணும்..” என்றான். “இதோ போறேன்.. நீ கொஞ்சம் இதை பாரு, அப்பறம் ட்ரைவர் இன்னும் வரல, போன் பண்ணி கேளு..” மகனிடம் சொன்ன ரத்னா கீழே இருந்த ரூமுக்கு ஓடினார். “அத்தை..” மூடியிருந்த கதவை தட்ட, சில நொடிகள் சென்று “உள்ள வா..” என்ற குரல் அதிகாரமாக ஒலித்தது. “அத்தை.. கிளம்பிட்டீங்களா..?” ரத்னா கேட்க, “பார்த்தா எப்படி தெரியுது..” மாமியார் மாமியாராக பேசினார். “சரிங்க அத்தை.. போலாமா..? பை ஏதும் எடுக்கணுமா..?” “எதுக்கு நாம என்ன அங்கேயே தங்க போறோமா என்ன..? போய் உன் மகளுக்கு நீ அழுதுட்டு வரதுக்கு இதுவே ஜாஸ்தி.. கிளம்பு போ..” விரட்டவே செய்ய, வதங்கிய முகத்துடன் வெளியே வந்தார். “அத்தை.. இவளை கொஞ்சம் பிடிங்க, நான் புடவை கட்டிட்டு வந்துடுறேன்..” மகிளா அவரின் கையில் ஐந்து மகள் ஸ்மிதாவை கொடுத்தவள் அவளின் ரூமுக்கு ஓட, ரத்னா பேத்தியிடம் குனிந்து உச்சி முகர்ந்து முத்தம் கொடுத்தார். “பாட்டி.. எனக்கு இன்னும் தூக்கம் வருது..” அவள் சிணுங்க, “கார்ல தூங்கிக்கலாம்டா.. வா..” அவளை வெளியே காருக்கு கூட்டி செல்ல, அங்கு கணவரும், மகனும் நின்றிருந்தனர். “பரணி.. என்ன ஆச்சு..? ட்ரைவர் இன்னும் வரலையா..?” ரத்னா கேட்க, “போன் பண்ணிட்டேன்ம்மா.. பக்கத்துல வந்துட்டாராம்..” என்றான் பரணி. “சரி.. நாம கார்ல உட்காரலாம்..” மூர்த்தி இன்னோவா கிரிஸ்ட்டா காரை திறந்து முன்னால் ஏறிக்கொள்ள, ஸ்மிதா பின்னால் அமர்ந்து தூங்க ஆரம்பித்தாள். “ம்மா.. மீதி நான் பார்த்துகிறேன், நீயும் கார்ல உட்காரு..” பரணி சொல்ல, “இல்லை பரணி.. அத்தை வந்துரட்டும்..” என்ற ரத்னா உள்ளே சென்று மாமியார் கோமதியுடன் உடன் வந்தார். “என்ன கிளம்பலாமா..?” வந்தவுடன் கோமதி ஆரம்பிக்க, “நீங்க உட்காருங்க பாட்டி.. கிளம்பலாம்..” பரணி அவரை வசதியாக அமர வைத்தவன், உள்ளே என்று மனைவியுடன் வெளியே வந்தவன், கதவை பூட்டி கொண்டிருக்க, கேட்டை திரண்டு கொண்டு வந்தான் அவன். “ஏங்க ட்ரைவர் வந்துட்டார் போல..” ரத்னா சொல்ல, வந்தவன் முகம் பாதி தாடி மீசை தான். “கிளம்பலாமா..?” என்றான். “கீ கார்லே இருக்கு..” பரணி சொல்ல, “ஏன்ப்பா இவ்வளவு லேட்டாவா வரது..” என்றார் கோமதி குரல் உயர்த்தி. “பாட்டி.. அவர் டைம்க்கு தான் வந்திருக்கார்..” பாட்டியிடம் சொன்ன பரணி, “நீங்க எடுங்க.. போலாம்..” என்றவன் மனைவியுடன் பின் சீட்டில் ஏறிக்கொண்டான். ட்ரைவர் சீட்டில் அமர்ந்தவன் ஓர் நொடி திரும்பி வீட்டை பார்த்து விட்டு காரை கிளப்பினான். “ஏன்ப்பா.. வழி தெரியும் இல்லை.. நேரத்துக்கு திருப்பதி போகணும்.. அப்பறம் டோக்கன் நேரம் மிஸ் ஆகிடும்..” கோமதி கணீர் குரலில் கேட்க, “தெரியும் பாட்.. மேம்..” என்றான். “தெரிஞ்சா சரி.. அப்பறம் வழியில டீக்கு, காபிக்குன்னு எல்லாம் நிக்க கூடாது, உனக்கு எது வேணும்ன்னாலும் இங்கேயே இருக்கு, நாங்க கொண்டு வந்திருக்கோம்..” கோமதி விடாமல் பேச, டிரைவராக பட்டவன், “நானே கொண்டுவந்திருக்கேன் மேம்..” என்றான். “அப்பறம்..” கோமதி திரும்ப ஆரம்பிக்க, “ம்மா.. அவர் வண்டி ஓட்டட்டும்..” என்றார் மூர்த்தி. “நான் என்ன ஸ்டீயரிங்கை கையிலா பிடிச்சிட்டு இருக்கேன்..” கோமதி விடாமல் பேச, மூர்த்தி சலிப்பாக தலையை ஆட்டி கொண்டார். “அட ஆமாம்.. உன் பேர் என்ன..? அதை கேட்காமலே பேசிட்டு இருக்கேன் பாரு..” கோமதி திரும்ப வாய் திறக்க, “லிங்கா..” என்றான் அவன். லிங்கேஷ்வரன்.. ஈஷ்வர் தான் அது. “லிங்காவா.. முழு பேரும் இது தானா..?” “சார்.. எனக்கு தூக்கம் வருது..” என்றான் ஈஷ்வர் மூர்த்தியிடம். “என்ன தூக்கம் வருதா..? என்னப்பா சொல்ற..? நீ முதல்ல வண்டியை நிறுத்து..” கோமதி அலறவே செய்தார். “ம்மா.. நீ கொஞ்சம் அமைதியா வாம்மா..” மூர்த்தி சொல்ல, “பாட்டி.. நீங்க பேசிட்டே இருக்கிறதால தான் ட்ரைவர் அப்படி சொல்றாரு.. இது கூட புரியல..” மகிளா கிடைத்தது வாய்ப்பென்று பாட்டியின் காலை வாரினாள்.