Advertisement

அத்தியாயம்—9

ஆறுமுக நேரியில் திருச்செந்தூர் செல்லக்கூடிய மெயின் ரோட்டில் தான் உலகநாதன்-தனலெட்சுமியின் வீடு….ஆறுமுக நேரி சால்ட் சொஸைட்டியில்,வேலைக்கு சேர்ந்த புதிதில் உலகநாதன் வாங்கிப் போட்ட வீடு,,,ஒரு ஹால்,ஒரு படுக்கை அறை,சமையலறை ,உள்ளடக்கிய,அந்த வீட்டின் அளவு,காலியிடம்,வீட்டின் பின்பகுதியில் உண்டு…பொருளாதார வசதி அனுமதிக்காத தால் அப்படியே போட்டு வைத்து விட்டார்…அந்த வீட்டிலும்,ஒன்றும் குறையில்லை…இரண்டு பெண்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியாகி விட்டது…பெரியவள் பார்கவி  பெயருக்கு ஒரு டிகிரி படித்தாள்…வேலைக்கெல்லாம் போகவில்லை…உள்ளூரில், வாழைப் பழ மொத்த வியாபாரம் செய்யும்,குணாளனுக்கு மணமுடித்துக் கொடுத்தார் உலகநாதன்…நான்கு வயதில் ஒரு ஆண்குழந்தை இருக்கிறது…சின்ன மகள் சண்முகப் பிரியா  நன்றாகப் படித்தாள்…கல்லூரி விரிவுரையாளர்..மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார் அவளுக்கு,,

சண்முக பிரியா கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்…

‘’பிரியா…மதியத்துக்கு, தேங்காய் சாதம் பண்ணியிருக்கேன்,,,இப்ப,அதையே ஒரு வாய் சாப்ட்டுக்கிடுதியா’’..என்று,சோர்வுடன் கேட்டாள் தனம்…காலையில் இருந்து,வாசல் தெளிப்பு,காபி பால்,வெந்நீர்,சமையல் என்று தொடர் வேலை…

50 பிளஸுக்கு உரிய உடல் தளர்வு இருக்கத்தானே இருக்கும்..அது இளையோருக்கு புரிவதுமில்லை…புரிந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை…அவர்களைப் பொறுத்த அளவில்,அம்மாக்களுக்கு,வயது ஏறுவதே இல்லை..

‘’வாட்மா …தேங்காய் சாதம்,மாங்காய் சாதம்னு…அது மதியம் சாப்பிடறதுக்கே,கொஞ்சம் சுமாராய்த்தான் இருக்கும்,,,காலையிலயும்,அது கூட மல்லுக்கட்ட முடியாது…கல்லைப் போட்டு,முறுகலா ரெண்டு தோசை ஊத்திக்குடேன்…அதிகமா வேண்டாம்.’’ என்று கொண்டை போட்டவாறே சொன்னாள்…பின்பக்கத்தில்.செம்பருத்திப் பூ பறித்துக் கொண்டிருந்த உலகநாதனின் காதுகளில் விழுந்தது…மனதில் சலித்துக் கொண்டார்….ஆண்களுக்காவது,அரசு கட்டாய ஓய்வு அளித்து விடுகிறது…இல்லறக் கடமைகளில் இருக்கும் பெண்களுக்கு இறுதி நாள் அன்றுதான் ஓய்வு  போலும்…விட்டு விடுத்லையாதல் என்பது இவர்களுக்குத்தான் பொருந்தும் என எண்ணிக்கொண்டார்….வாசல் கேட் திறக்கும் சத்தம்….பார்கவி வருகிறாள்…அடுத்த இம்சை….குரல் கொடுத்துக் கொண்டே நுழைந்தாள்…

‘’ம்மா….ரெண்டு இட்லி ஊத்தேன் உன் பேரனுக்கு……எங்க வீட்டுல மாவு அரைக்கலை… அவனுக்கு லேசா காய்ச்சல் இருக்கு’’

‘’உங்க வீட்டுல மாவெல்லாம் அரைப்பீங்களா பார்கவி’ ‘’என்றாள் பிரியா பொடி தொட்டு தோசையை விழுங்கி கொண்டே…

‘’ம்….ஏன் கேக்க மாட்ட? அன்னிக்கு ஒரு நாள் அடைமாவு அரைச்சு கொண்டு வந்தேன்…அம்மாட்ட கேளு’’

மகளின் தட்டில் நான்காவது தோசையை போட்ட தனம் ‘’ அது இருக்கும் நாலு மாசம்’’ என்று சொல்ல.பிரியா சிரித்த சிரிப்பில் அவள் வாய் தோசை வெளியில் சிதற…

‘’வெந்தய தோசையாம்மா…மணக்கு….நானும் ரெண்டு சாப்டவா’’

வேண்டாமென்றா சொல்ல முடியும்…

‘’பார்கவி, குட்டிப் பயலுக்கும்,தோசையே கொண்டு போயேன்’’

‘’இல்லம்மா…டாக்டர் அவனுக்கு,இட்லி தான் குடுக்க சொல்லியிருக்கார்…’’

அடுத்த அடுப்பில் இட்லிப் பானை ஏறியது…சுமார் ஒன்பது மணி அளவில் அப்பாடா என்று தரையில் கால் நீட்டி அமர்ந்தாள் தனம்…அவளை பார்க்க பாவமாக இருந்தது…

‘’தனம்….நம்ம பிள்ளைங்க ஸ்கூலுக்கு போகும் போதும் நீ இதே பர பரப்புலதான் இருந்த…இன்னிக்கு அவங்க பிள்ளைக ஸ்கூலுக்குப் போற வயசிலயும், உனக்கு ரெஸ்ட் இல்ல,,,ஓடிக்கிட்டு தான் இருக்க,,’’

சிரித்தாள்…’’பொம்பளப்புள்ள நிமிர்ந்துட்டா பெத்தவளுக்கு ஒத்தாசை அப்பிடிம்பாக….அது ஒரு காலம்,,,,இப்ப அவுகளும் வெளிய போயி சம்பாதிக்கிறாக….அதனால அவுக வாலை பிடிச்சுக்கிட்டு நாமளும் ஓட வேண்டியிருக்கு..’’

‘’பார்கவி என்ன வேலைக்கா போறா’’

‘’நம்ம அம்மாதானேன்னு ஒரு செல்லம்’’

‘’என்னவோ போ…படுத்துகிடாத…..வீடு நாறிப் போயிரும்..சரி நான் போயி குளிச்சுட்டு வாரேன்,,,எனக்குன்னு ஒண்ணுஞ்ச் செய்ய வேண்டாம்…இருக்கறத சாப்ட்டுக்கிடுவேன்’’

மனைவிக்காக கணவன் அனுசரித்தால் தான் உண்டு போலும் என்று எண்ணியவள்,ஆயாசமாய் சோபாவில் போய் சாய்ந்து உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டாள்..

    அத்தியாயம் —10

பிரியாவுக்கு மாப்பிள்ளை தேடும் படலம் ஒரு வழியாய் முடிவுக்கு வந்தது…திருச்செந்தூர் தேவஸ்தான அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பையன் அமைந்தான்….

‘’தனம்,உன் பொண்ணு கல்யாணத்துக்கு சரி சொல்லிட்டாள் லா’’

‘’கழிக்கற மாதிரி இல்லேன்னுட்டா….அப்டின்னா பிடிச்சுருக்குன்னு தான அர்த்தம்’’

‘’ம்ஹூம்..எல்லாம் அனுமானத்துலயேதான் செய்ய வேண்டியிருக்கு…பாவம் தான் அந்தப் பையன்’’

‘’ஏங்க அப்டி சொல்றீங்க’’

‘’உன் பொண்ணுக குணத்துக்கு அப்டித்தான சொல்ல வேண்டியிருக்கு….சரி அது கிடக்கட்டும்…மத்ததெல்லாம் சரிதான்…நகைக்கொரு வழி பண்ணனுமே’’

‘’என் கிட்ட கேட்டேங்கன்னா…கல்யாணம் வச்சதும் வாங்கிக்கிடலாம்னு நீங்கதான் சொன்னீங்க’’

‘’நாந்தாம்மா சொன்னேன்..இல்லேங்கல…பிரியாவுக்குன்னு பேங்க்ல போட்டு வச்ச்ருக்குர பணத்துக்கு,இருபத்தஞ்சு பவுனு வாங்க முடியாது….விலைவாசி அப்டி யிருக்குல்லா….இப்ப அவளுக்கு என்ன நகை இருக்கு”’

‘’காதுல கழுத்துல கிடக்கறதுதான்,,,,அஞ்சாறு பவுன் தேறும் ..அவ்ளோதான்…மாப்ளைக்கும் மோதிரம்,செயின்,போடணும்லா’’

‘’அது போக, ஜவுளிக்கு ஒரு அமவுண்ட் ஆயிரும்….கல்யாண செலவு,அப்பறம்,ஒரு வருசக்,கட்டு,… வடிவேலு சொல்றாப்புல.இப்பவே கண்ணைக் கட்டுது…சரி,பாப்போம்….முருகப் பெருமான் ஏதாவது வழி விடுவார்….’’என்று சொல்லி விட்டு அலுவலகம் போய் விட்டார்…இரவு மகளிடம் பணப் பிரச்சினையை சொல்ல,

‘’ஏம்மா..பழம்பாஞ்சாங்கம் மாதிரி நகை நகைன்னு புலம்பறே…யாரு இப்ப கோல்டு ஜூவெல்ஸ் போடறா?கல்யாணத்தன்னிக்கு கூட இமீட்டேசன் நகை தான் போடறாங்க…பார்க்கவியவே எடுத்துக்க…நீ செஞ்சு போட்ட நகைய என்னிக்காவது போடறாளா’’

‘’நெசம்தாண்டி…அதுக்காக,கல்யாணப் பொண்ணுக்கு நகை போட வேண்டாமா?’’

‘’ஸ்‌ஸ் …கஷ்டம்மா உன்னோட…இப்பதான வெ ளக்கி சொன்னேன்….திருப்பியும்,மொதல்லேர்ந்து ஆரம்பிக்கிற’’

‘’சரி….உனக்கும் நகை வேண்டாம்…உங்க அப்பாகிட்டயும்,அந்தளவுக்கு,பண வசதி இல்ல…மாப்ள வீட்டுக்காரங்களுக்கு என்ன பதில் சொல்றது?’’

‘’ஓ…அப்டி ஒண்ணு இருக்கோ….பேசாம,இந்த வீட்டை என் பேருக்கு எழுதி குடுத்துரு….மாப்ள ஹாப்பி ஆயிருவாரு’’ என்றாள் பிரியா கண் சிமிட்டிய படி…முதலில் ஷாக் ஆன தனம்,உலகநாதனிடம் சொன்னபோது,சிரித்தார் உலகநாதன்….

‘’உன் பொண்ணுக்கு விவரத்தை பாத்தியா…வீட்டுல கண்ணு வைக்கிறா பாரு….அதுவுஞ்ச் சரிதான்…போகும் போது,தலைல வச்சா கொண்டுபோகப் போறோம்…பிள்ளைகளுக்கு தான் குடுக்கப்போறோம்…எப்பவோ குடுக்கப் போறதை, இப்பவே குடுத்தா என்ன…கல்யாண செலவை சமாளிக்க,வீடு,நமக்கு கை குடுத்த மாதிரியிருக்கும்…’’  என்றார்..

‘’சர்தான்…பெரிய பணக்காரக மாதிரி ,பொண்ணுக்கு, வீடு எழுதிக் குடுத்து,கல்யாணம் பண்ணா,பெருமையாத்தான் இருக்கும்….ஆனா பார்கவி எதுஞ்ச் சொல்வாளோ’’

‘’ம்,,சொல்லுவா…சோத்துக்கு உப்பில்லைன்னு…அவளுக்கு,இருபத்தஞ்சு பவுண் நகை போட்டு,சொளையா முப்பதாயிரம் ரொக்கம் வேற குடுத்து கல்யாணம் பண்ணி வச்சிருக்கு…அவ வாயைத் தொறக்கக் கூடாது..’’என்று சொல்லி விட்டார் உலகநாதன்….

‘’என்னங்க…அப்புறம் நமக்கு குடியிருக்க வீடு ?’’

‘’அட கூறு கெட்டவளே..வீடு அவ பேர்ல இருக்கும்…வீட்டுல,எப்பவும் போல நாம குடியிருப்போம்…நம்ம,காலத்துக்குப் பெறகு,அவளுக்கு வீடு சொந்தம்…’’ ….மொத்தத்தில்,வீட்டை பிரியா பெயருக்கு,எழுதி வைத்து, திருமணம் செய்வதென்று முடிவானது….

    அத்தியாயம்—11

எப்படியோ தட்டு தடுமாறி சீறும் சிறப்புமாக,மகளின் திருமணத்தை முடித்தார் உலகநாதன்….ஹனி மூனுக்கு, மணமக்கள் மைசூர் போய் வந்தார்கள்…அதன் பின்,இருவருக்கும் வேலைக்கு செல்ல வசதி என்பதால்,திருச்செந்தூரிலேயே வீடு பார்த்து,குடி யமர்த்தினார்கள்….ஏரலில்,தனியாக இருந்த பிரியா மாமியாரும், மகன் வீட்டோடு வந்து இருந்தாள்…தினமும் திருச்செந்தூர் முருகனைப் பார்க்கலாம் என்பது அவள் திட்டம்….தனக்கு எடுபிடி வேலைகள் பார்க்க ஒரு ஆள் தேவைதான் என்பது பிரியா கணக்கு…மனிதர்கள்,கூட்டல்,கழித்தல் மனக் கணக்கில்தானே வாழ்க்கையை கொண்டு செல்கிறார்கள்….திருச்செந்தூரில் குடி இருக்கிறார்கள்தான்…ஆனால்,வாரம்தோறும்,வெள்ளி இரவே பிரியாவும்,மாப்பிள்ளையும்,ஆறுமுக நேரி வந்து விடுவார்கள்…தங்கை வந்திருப்பதால்,அக்கா பார்கவி குடும்பமும்,ஆஜராகி விடும்,…அப்புறம் என்ன…ஒரே அரட்டையும்,ஆர்ப்பாட்டமும்தான்….என்ன…தனம் மட்டும்,சமையல் கட்டை விட்டு,வெளிவர முடியாது…வேலை தொடர்ந்து இருக்கும்…இப்படியே ஓடிக்கொண்டிருக்க, பிரியாவிற்கு ,மசக்கை வந்து விட்டது…அம்மா சமையல்தான்,வாய்க்குள் இறங்குகிறது என்று சொல்லி அம்மா வீட்டில் இருந்தாள்…மாப்பிள்ளை வந்து போனார்…மசக்கை தெளிந்து,வந்தாலும்,வயிற்றை தள்ளிக்கொண்டு,என்ன வேலை செய்வாள் என்ற கரிசனத்தில்,தனம் மகளை வீட்டிலேயே வைத்து,பார்த்துக் கொண்டாள்….பிரசவ நேரம் நெருங்கியது…பார்கவியை துணைக்கழைத்தாள்…..மகன் பள்ளிக்கூடம் போகிறான் என்று சொல்லி,ஒதுங்கிக் கொண்டாள்.அவள்…..பிரியாவின் மாமியாரும்,உலகநாதனும் உதவி செய்ய பேறுகாலம் முடிந்தது….இந்த அழகில் ரெட்டை பிள்ளைகள்..வேறு..கால் முளைத்த பூக்களாய் ,இரண்டு அழகு தேவதைகள்..உலகநாதன்-தனம் தம்பதிகளின்,உடல் சோர்வு,மன சோர்வு,பணத் தட்டுப்பாடு குறித்த கவலை அனைத்தையும், அந்த பிஞ்சுகள்தான் போக்கின….ஆயிற்று,,,ஒரு வழியாய்,தவழும் பிள்ளைகளை தூக்கிக்கொண்டு,தன் வீட்டுக்குப் போனாள் பிரியா…பிள்ளைகளை தூக்கி வைத்துக் கொண்டிருந்தால்,கை வலிக்கிறது….இறக்கி விட்டால் மனம் வலிக்கிறது என்பதைப் போல, பிரியா குடும்பம் சென்றதும்,தாத்தாவுக்கும்,ஆச்சிக்கும்,குழந்தைகளைப் பார்க்காமல் இருக்க முடிய வில்லை என்பதால்,இவர்கள்….திருச்செந்தூர் போய் வந்தார்கள்…இப்படியே வாழ்க்கை வண்டி ஓடிக்கொண்டிருந்த போது,ஒரு நாள் கம்பெனியிலிருந்து, வந்த உலகநாதன்,உடை மாற்றக் கூட போகாமல்,மனைவியிடம் பேச அமர்ந்தார்…

‘’தனம்,எங்க கம்பெனிக்கு இது அம்பதாவது வருஷம்….அதனால,இருபது வருசத்துக்கு,மேல சர்வீஸ்ல இருக்கறவங்களுக்கு,ஒரு லட்ச ரூபா தாராங்க…பணமா இல்ல..பீல்டிங் மெட்டீரியல்சா வாங்கிக்கிடலாம்னு சொல்லியிருக்காங்க..’ரிட்டயர்ட் ஆகப்போற நேரத்துல, லக் அடிக்கு’’ ’

‘’சரி….சிமெண்ட்,செங்கல்லு தானே,,,,அதை வாங்கியாந்து வச்சிக்கிட்டு,என்ன பண்ண?’’

‘’என்னடி….பொசுக்குன்னு இப்டி கேட்டுபூட்ட..இந்த வீட்டை நாம வாங்கினதொட சரி…பராமரிக்கவே இல்லையே…..கை வச்சா இழுத்துடும்னு, பெயிண்ட் கூட அடிக்கல….இப்ப,இந்த பணத்தை வச்சி, தரைக்கு,டைல்ஸ் மாத்தி,பெயிண்ட் அடிச்சிரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்’’

‘’முடிவே பண்ணியாச்சா?’’

‘’ஆமாமா…அதோட,தனம்,பின்வாசல்ல,இடம் கிடக்குல்ல,அதுல ஒரு ரூம் இழுத்துக் கட்டிரலாம்னு பாக்கேன்….நீ என்ன சொல்லுத’’

‘’அழகா செய்யலாம்…பிள்ளைக வந்தா தங்க வைக்க, சங்கடமாத்தான் இருக்கு…’’

‘’ம்…அதான் யோசிச்சேன்….எல்.ஐ.சி பாலிசி ஒண்ணு அடுத்த மாசம் முடியுது…அது ஒரு அம்பதாயிரம் வரும்….எல்லாத்தையும் வச்சி வீட்டை,உருப்படியா ஆக்கிட்டோம்னா,நம்ம காலத்தை நிம்மதியா கழிச்சிரலாம்…இனிமே,நம்மளுக்கு,பெரிய செலவுன்னு ஒண்ணுமில்லேல்ல…வாய்ப்பு வாரப்ப,இதை செஞ்சிருவோம்’’ என்றார் உலகநாதன்….தலையாட்டி ஆமோதித்தாள் தனம்…நன்றே செய் ..அதை இன்றே செய் என்ற கொள்கை உடையவர் உலகநாதன்…ஆகவே.நாள் கிழமைக்காக.காத்துக் கொண்டிராமல்,கையிலிருக்கும் பணத்தை வைத்து,வேலையைத் தொடங்கினார்…அவர் மனம் போல,கம்பெனி பணம்,காப்பீடு முதிர்ச்சி தொகை எல்லாம் உரிய நேரத்தில் வந்து சேர,,,,வீடு வேலை மள மள வென்று நடந்தது…கொத்தனாருக்கு,ஆலோசனை சொல்லி,சிரமம் பாராமல் மேற்பார்வைக்கு நின்று,கல் மண் அள்ளிப்போட்டு,திருத்தங்கள் செய்து,கையில் இருக்கும்,பணத்தை எல்லாம் துடைத்தாற்போல்,எடுத்து,போட்டு,புது வீடு கட்டும் உற்சாகத்தில் வீட்டு பராமரிப்பு வேலைகளை செய்து முடித்தனர்…உண்மையில் புதுவீடு போலவே தோன்றியது…இழுத்து கட்டப்பட்ட கூடுதலான ஒரு அறை,டைல்ஸ்,பெயிண்ட்,புதிய கதவுகள்,சகிதம்,வீடு,பெரிய வீடு போன்ற தோற்றத்தை தந்தது…

‘’என் பொண்ணு பேருக்கு,வீட்டு பத்திரத்தை மாத்தினதும்,வீடு எப்டி மாறிருச்சு பாத்தியா தனம்…அவ ராசி அப்டி..’’என்று சொல்லி பூரித்துப் போனார் உலகநாதன்…ஆனால்,வீடு தொடர்பான,ஏற்றமே,தனக்கு இறக்கமாகப் போகிறது என்பதை அவர் அறிந்தாரில்லை….

அத்தியாயம்-12

ஆசை யாரை விட்டது….தனது கனவு இல்லம் கைக்கு வந்த மகிழ்ச்சியில்,ஹோமம் வளர்த்து பால் காய்ச்சும் முடிவுக்கு வந்தார் உலகநாதன்…தனத்திற்கு இதில் பெரிய ஆர்வமில்லை…அதற்காக வேண்டாம் என்றும் சொல்ல வில்லை….நாள் ,நேரம் குறி க்கப்பட்டது …பிள்ளைகள்,சம்பந்தார் வீடுகள்,அக்கம் பக்கம்  அவ்வளவே..உள்ளூரில்,தனத்தின் அண்ணன் சாய்ராம் இருப்பதால்,அவனையும் கணக்கில் சேர்த்துக் கொண்டனர்….மகள்கள்,மருமகன்கள்.,பேரன்,பேத்திகள் ஆகியோருக்கு புதிய உடைகள் வாங்கியாயிற்று….விழா அன்று காலையில்,கணபதி ஹோமம்,நடத்தி,பால் காய்ச்சி அனைவருக்கும் தந்து,மதியம் சோதி குழம்பு சாப்பாடு போட்டு ,வந்தோருக்கு,தேங்காய் பழம் உள்ளடக்கிய தாம்பூலக் கவர் கொடுத்து அசத்தி விட்டார் உலகநாதன்….அவருக்கு இப்பொழுதுதான் வீடு கட்டிய மகிழ்ச்சி முழுமையாய் மனதுக்குள் வந்தது…..திருஷ்டி சுற்றி போட்டு விழாவை நிறைவு செய்தார் …..எனினும் திருஷ்டி விலகவில்லை போலும்..இரண்டு மூன்று மாதங்கள் சுமூகமாக ஓடியது…பிரியா வந்து விட்டுப் போன ஒரு நாளில்,தனம் குண்டைத்தூக்கிப் போட்டாள்…

‘’என்னங்க’’

‘’சொல்லு…பக்கத்துலதான இருக்கேன்’’

‘’பிரியா வீட்டு ஓனர் வீட்டை காலி பண்ணச் சொல்றாராம்..’’

‘’ஏனாம்’’

‘’அவரு மகனுக்கு கல்யாணம் ஆகி வீட்டோடாதான் இருந்தான்…இப்ப அவன் தனியா போகணுங்கானாம்’’

‘’அது அவரு பிரச்சினல்லா…நாம என்ன செய்ய முடியும்…’’

‘’ம்‌ …எடக்கு ரொம்பத்தான் உங்களுக்கு…உங்க மகள் இருக்கால்லா ,அந்த வீட்டுல மகனை தனிக்குடித்தனம் வைக்கப்போறாராம்….அதனாலதான்

பிரியாவை வீட்டை காலி பண்ணித் தரச்சொல்றாராம் ….இப்ப புரியுதா’’

‘’நீ விசயத்த சொல்ல ஆரம்பிக்கறப்பவே எனக்கு புரிஞ்சுட்டு….அதுக்கு,நாம என்ன செய்ய….நாம பிள்ளைகளுக்கு,வழியத்தான் காட்டலாம்…கூடவே போக முடியுமா’’

‘’இதுக்கே சலிச்சுக்கிடுதீகளே…இன்னும் இருக்கு ,,,கேளுங்க….நம்ம இந்த வீட்டை காலி பண்ணி குடுக்கணுமாம்…அவ வந்து குடியிருப்பாளாம்’’

‘’நம்ம? தெருவுல நிக்கனுமா’’

‘’அத அவ சொல்லல…நமக்கு இஷ்டம்னா, எங்க வேனாலும் இருந்துக்கிடலாம்…’’ என்றாள் தனம் எரிச்சலுடன்….உள்ளுக்குள் அதிர்ந்தாலும்.வெளிக்காட்டிக் கொள்ளவில்லை உலகநாதன்…

‘’இது என்ன புதுசா இருக்கு….அவ பேர்ல இந்த வீட்டை எழுதி வச்சது உண்மைதான்…இப்ப உடனே தாறோம்னு சொல்லலியே….’’

‘’ஆமா’’

‘’நோமாம்னு எண்ட்ட சொல்லு…அவகிட்ட இதை எடுத்து சொல்லலாம்லா’’

‘’அய்யோ…கடவுளே…எவ்வளவோ சொன்னேன்…அவ உங்க ரெண்டு பேருக்கும் எதுக்கும்மா இவ்ளோ பெரிய வீடு….எப்பிடியும் வீடு எனக்குத்தானே….அதை இப்பவே குடுத்தா எனக்கு பிரயோசனப்படும் அப்டீங்கா…’’

‘’எப்பவோ குடுக்கப் போறதும்,இப்ப குடுக்கறதும் ஒண்ணாயிருமா…’’

‘’சொந்த வீட்டுல இவ்ளோ நாள் இருந்தாச்சு…காலம் போன காலத்துல,இப்ப போயி,வாடகை குடுத்து இருக்க,கொள்ளுமா நமக்கு’’

‘’‘தப்பு பண்ணிட்டோம் தனம்…’நாம அவ பேர்ல வீட்டை எழுதி வைக்கப் போயிதான,உரிமை கொண்டாடிக்கிட்டு வந்து கேக்கா..எப்பாடு பட்டாவது ,அவளுக்கு நகை செஞ்சு போட்டுருக்கணும்…ப்ச்‌….பொம்பளைக.பேச்சைக் கேட்டு நானும் மூளைய கடன் குடுத்துட்டேன்..’’என்று புலம்ப ஆரம்பித்த கணவனைப் பார்க்க,பரிதாபமாக இருந்தது தனத்திற்கு…

‘’இதை இவளா சொல்றாளா…இல்ல குடும்பத்தோட பேசி வச்சிருக்காங்களானு தெரியல….எப்டின்னாலும்,அவ கேட்டதும் வீட்டைத் தூக்கி குடுத்துர முடியாது…ஞாயித்துக் கிழமை வருவாள்ல….அப்ப அவகிட்ட,நான் பேசுதேன்….நீ போட்டு குழப்பிக்கிடாம இரு…சாப்பாடு எடுத்து வையி…முகம் கழுவிட்டு வாரேன்’’ என்று எழுந்து போனார் உலகநாதன்…

Advertisement