Advertisement

அத்தியாயம் —7

ஆண்டவன் குடும்பம்  இரண்டாம் படை வீடான செந்தில்ஆண்டவன் சன்னிதானத்தில் இருந்தது…பச்சை கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்ததை அடுத்து,மல்லிகாவின் விருப்பத்தின் பேரில்,திருசெந்தூர் ஆன்மீக பயணம் திட்டமிடப்பட்டது..கார் எடுத்துக் கொண்டு கிளம்பியாகி விட்டது….தனலெட்சுமியை அழைத்தாள் செல்லக்கிளி…’’திருச்செந்தூரைத் தவிர வேறு எங்கு கூப்பிட்டாலும் வரத் தயார்’’ என்று கூறி மறுத்து விட்டாள் தனம்..அது சாதாரண நாள்தான்..என்றாலும் கூட்டம் நிரம்பி வழிந்தது….’

‘’கூட்டத்தைப் பாரேன்…எங்கிருந்துதான் வருவாகளோ’’—மல்லிகா..

‘’அத்த…நம்மளை மாதிரித்தான்,,இன்னிக்கு கூட்டம் இருக்காதுன்னுட்டு,வந்திருப்பாங்க’’என்றான் பச்சை…’’மருமகனின் பேச்சை ரசித்து சிரித்தாள் மல்லிகா…

‘’பெறவு பேசலாம்…கவனமா வாங்க…செல்லக்கிளி கழுத்தை சேலையால மூடிக்கோ…செயின் பத்திரம்’’என்றபடி,கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னே நடந்தார் ஆண்டவன்…மாவிளக்கு மாவு விளக்கு,அங்க பிரதட்சிணம்,காவடி,பால்குடம்,மொட்டை அடித்தல்,என வழியெங்கும்,வேண்டுதல் செய்யும்,பக்தர்களைக் கடந்து,கோவிலுக்குள் சென்றார்கள்….ஐயப்ப சாமி பக்தர்கள்.அரோகரா போட்டவாறு வரிசையில் வந்தனர்…அரை மணி நேர காத்திருப்பிற்க்குப் பின்னர் மூலவர் சன்னிதானத்தின் முன்பு வந்து நின்றது ஆண்டவன் குடும்பம்,….ஆஹா…ஆஹா.சந்தனக் காப்பு அலங்காரத்தில்.குமரன்,கந்தன்,வேலன்,சுப்ரமணியன்,தேவலோக சிறுவனாய்,ஏகாந்த புன்னகையுடன்,கருவறையின் ஒளியாக, அருள் புரிந்தபடி நின்றிருந்தான்…காணக் கண் கோடி போதுமா கந்தனின் நின்ற கோலத்தை.. பக்தர்கள் உணர்ச்சிப் பெருக்கில் பலவாறாக கோஷமிட்டனர்…

‘’ஓம் திருச்‌செந்தூர் பதி வாழும் பரம் பொருளே போற்றி !

ஓம் திருச்சீரலைவாயில் திகழ்பவனே போற்றி !

ஓம் திருநீற்று தவக்கோலம் உடையவனே போற்றி!

ஓம் திருமுருகாற்றுப்படை கண்ட ஆறுமுகனே போற்றி!

ஓம் சூர சம்ஹார மூர்த்தியே போற்றி!

ஓம் கந்த  ஷஷ்டி திருநாள் காணும் கடம்பனே போற்றி!

ஓம் சேவற்க் கொடி கொண்ட ஜெய வேலே  போற்றி’’

முன்னாள் நின்றிருந்த ஒரு பெண்மணி அழகாய் முருகன் போற்றி பாட,பக்தி கானமும் பரவச தரிசன காட்சியும்,கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்க,நகர மனமில்லாமல் காவலாளியின்,வற்புறுத்தலுக்குப் பின் நகர்ந்து,சண்முகரையும்,தரிசனம் செய்து,விட்டு வெளி வந்து,கொடி மரத்தின் முன்பாக,விழுந்து நமஸ்காரம் செய்து விட்டு,மாணிக்க விநாயகர்,பெருமாள்,பைரவர்,ஆகியோரை வணங்கி விட்டு வெளிவந்தனர்…

‘’எனக்கு பசி வந்துட்டும்மா ‘’ என்றான் பச்சை…

‘’எல்லாருக்கும் பசிதான்…இந்தா  நேரா மணி ஐயர் ஹோட்டலுக்குத்தான் போறோம்’’ என்றார் ஆண்டவன்…பசியாறி விட்டு கடற்கரை  அருகே வந்து அமர்ந்தனர்…கடலின் குளுமையும்,வெயிலின் வெப்பமும்,சேர்ந்து ஒரு இதமான சூழல் நிலவியது..அங்கிருந்து திரும்பிப் பார்க்கையில்,133 அடி கோபுரம்,பிரம்மாண்ட அழகில் காட்சியளித்தது…

‘’என்னங்க…இலை விபூதி வாங்கினீங்களா ‘’—செல்லக்கிளி.

‘’ஆமா…ஐயர் குடுத்தாரு’’

‘’ஒரு சின்ன பாப்பாவுக்கு காது குத்தாறாங்க,,,,அது பாவம் பயங்கரமா அழுது’’ என்றான் பச்சை…’’

‘’கண்ணு,உனக்கும் இப்பிடித்தான்…இங்க கூட்டியாந்து தான்,மொட்டை போட்டு,காது  குத்தினோம்…..அப்ப,பிள்ள கால்லெருந்து,ஒத்த கொலுசு காணாமப் போச்சு…ஆண்டவா…உனக்கு,நெனவிருக்கா’’—மல்லிகா.

‘’ஆமாமா….கூட்டத்துல யாரோ கழட்டிக்கிட்டாக…’’

‘’கோயிலுக்கு திருடறவங்களும்,வருவாங்களா’’

‘’ஆமா,..நாமதான் பாத்து,பதமா நடந்துக்கணும்…வா பாத்துகிட்டே அலையக் கூடாது…’’

‘’இங்க தைப்பூசம் விஷேஷமா இருக்கும்,,நெறைய பேரு பாத யாத்திரை வருவாக,,’’என்றாள் செல்லக்கிளி…

‘’ஆமா…ஆவணி திருவிழா,மாசி திருவிழா,ஷஷ்டி, வைகாசி விசாகம், இப்டி வருசம் பூரா கோலா கலமா இருக்கும்’’

‘’சூர சம்ஹாரத்துக்கு,கோடி சனம் வந்து போகும்….சிக்கலில் வேல் வாங்கி ,செந்தூரில் சம்ஹாரம்னு பழ மொழியே உண்டு…இங்க சம்ஹாரம் நடக்கறப்ப,சிக்கல் சிங்கார வேலனுக்கு,வேர்த்து ஊத்துமாம்..இதெல்லாம் ஒரு அதிசயந்தானே’’ என்று சிலாகித்தாள் மல்லிகா..

‘’ம்மா..நம்ம ஊரு பெட்டிக்கடை செந்தில் அண்ணனுக்கு,இந்த முருகன் பேருதானா’’

‘’ஆமா…சண்முகம்,குமரன்,கிருபாகரன்,வடிவேலன் இப்டில்லாம் பேரு வைப்பாங்க’’

‘’செல்லம்,செந்திலோட மூத்த மகள் எப்ப்டியிருக்கா….வீட்டுக்கு வரத்து போக்கு உண்டா?’’

‘’ஆமா…இப்ப வந்து போறா…பேரனைப் பாத்ததும்,செந்திலுக்கும்,மீனாவுக்கும்,கோவமெல்லாம்,கோவப்பழமாப் போச்சு’’என்று சொல்லி,கணவன் மனைவி இருவரும் சிரிக்க,பொறுக்குமா மல்லிகாவிற்க்கு…

‘’கோயிலுக்கு,கும்பிட வந்த இடத்துல,அந்த ஓடுகாலியப் பத்தி என்ன பேச்சு?’’ என்று அதட்டல் போட்டாள்,மல்லிகா…ஆஹா…மதினி இருப்பதை மறந்து பேசி விட்டோமே என்று நாக்கை கடித்துக் கொண்டாள்செல்லக்கிளி..மல்லிகாவின்    சிறப்புத்தன்மையே அதுதான்…அவள்,உள்நோக்கத்துடன், ஒரு கருத்தை சொன்னாலும்,கேட்பவர்களுக்கு,அது உண்மை போலவே தோன்றும்….தாங்கள் தவறிழைத்து விட்டதாக மற்றவர்களை வருந்தச் செய்து விடுவாள்….சிறிது நேரம் அமைதியாய்,கடல்,அதன் அலைகள்.அதன் வீச்சு,மக்களின் ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை ரசித்தனர்….

‘’ஆண்டவா,இந்த கடல் அலை வேகமா பெரிய அலையா வரும்போது,ஒண்ணு தலைய குனிஞ்சுரனும்…இல்ல,அலைய தாண்டி குதிச்ரணும்னு நம்ம அப்பா சொல்வாக ..தெரியுமா?’’

‘’ஆமாக்கா….அப்பா சாகுமட்டும் திருச்செந்தூருக்கு மாதாந்தம் வந்தாகளே’’

‘’ஆமா…மாசக் கார்த்திகைக்கு வருவாக’’

அப்படியிருந்தும் மகளின் வாழ்க்கை சிறக்க வில்லையே என்று மனம் வருந்திய செல்லக்கிளி,நாம் வாங்கி வந்த வினைகளை நாம்தானே கழித்தாக வேண்டும் என தன்னை தானே தேற்றி கொண்டாள்….ஆண்டவனுக்கு தெரிந்த ஐயர் ஒருவர் எதிர்ப்பட்டார்…

‘’வாங்கோ..ஆண்டவன்’’

‘’நல்லாயிருக்கீங்களா’’

‘’நேக்கென்ன…முருகன் படியளக்கறார்…கதை ஓடறது…தரிசனம் பண்ணிட்டேளா’’

‘’ஆமா…வீட்டுக்கு கிளம்பியாச்சு’’

‘’உங்க கிட்ட எனக்கொரு வேலை ஆகணுமே…எப்ப தென்காசி வரலாம்’’

‘’எப்ப வேனாலும் ஒரு ஃபோன் பண்ணிட்டு வாங்க’’

‘’பேஷா பண்ணிடறேன்…என் மச்சினனுக்கு ஒரு லீகல் ப்ராப்ளம்….அதான்…வேறொன்னுமில்ல’’

‘’தாராளமா வாங்க…நாங்க கிளம்பறோம்’’

என்று ஐயரிடமும்,ஆண்டவனிடமும்,விடை பெற்று,

ஆண்டவப் பெருமாள் குடும்பம் கார் ஏறி வீடு வந்து சேர்ந்தனர்…

    அத்தியாயம்—8

திருச்செந்தூரில் வைத்துப் பேசிய ஐயர் அடுத்த வாரமே ஆண்டவனைத் தேடிக்கொண்டு,தனது,மச்சினருடன் வந்து விட்டார்…அன்று கோர்ட்டுக்கு போக வேண்டிய வேலை இல்லை என்று சொல்லி.வீட்டில் இருந்த பொழுது,வந்தார் ஐயர்….மூவரும் ஹாலில் வைத்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்….அவர்களுக்கு மோர் தந்து உபசரித்தாள் செல்லக்கிளி…கணபதியும்,வேலைக்கு வந்திருந்தாள்…அவளுடன் பேசிக்கொண்டே.,மிச்ச சொச்ச வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்….

ஹாலில் பெண்குரல் கேட்டது…எட்டிப் பார்த்தாள்..தன லெட்சுமி அக்கா…மரியாதை நிமித்தம் ஹாலில் நின்று ஆண்டவனிடம்,இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு, உள்ளே வந்தாள்..தனம்….செல்லக்கிளியும்,கணபதியும்,அவளை வரவேற்றனர்….காபி கலந்து தனத்திற்கும்,கணபதிக்கும் தந்து,தானும் குடித்தாள்,செல்லக்கிளி…

‘’ஏதுக்கா…இவ்வளவு தூரம்’’

‘’கை முறுக்கு சுட்டேன் …பச்சை சாப்டுவானேன்னு கொனாந்தேன்’’என்று டப்பாவை நீட்டினாள்..

‘’தனக்கா…எங்களுக்கும் வாயிருக்கு…முறுக்கு குடுத்தா

நல்லா, கடிச்சு சாப்டுவோம்’’ என்று கணபதி கலாய்க்க

‘’உணக்கில்லாததா கணபதி,பாத்திரத்தை கழுவிட்டு,சாப்டு’’ என்றாள் தனம் சிரித்துக் கொண்டே….முறுக்கை தின்று பார்த்த கணபதி,

‘’ஜடைப் பின்னல் மாதிரி, எப்பிடிக்கா இவ்ளோ பொடி சுத்து வருது உங்களுக்கு’’

‘’பழக்கம் தான்…சின்னவளுக்கு இந்த முறுக்கு ரொம்பப் பிடிக்கும்லா’’…. ‘’சின்னவளா’’

செல்லக்கிளியும்,கணபதியும்,ஒருவரைஒருவர் பார்த்து முழிக்க,’’ சின்னப் பிள்ளைகள் விரும்பி சாப்டுவாகள் லா …அதை சொன்னேன்’’ என்று சமாளித்தாலும்,செல்லக்கிளியின்,மனதில்,சந்தேகம் உருவாகி விட்டது…தனம் அக்கா சொன்ன வார்த்தை தவறி சொன்ன வார்த்தை போல தெரியவில்லை…வாய் தவறி உண்மையை உளறி விட்டது போல்தான் தெரிந்தது….செல்லக்கிளிக்கு மண்டைக்குள்,மர்மரேகை ஓடியது….அந்த கேள்விக்கு இரவு பதில் கிடைத்தது….வெளியில் இருந்து வந்த ஆண்டவன், சட்டை கூட மாற்றாமல்,ஹாலில் உட்கார்ந்தபடி மனைவியைக் கூப்பிட்டார்…

‘’உலகநாதன் சார் வீட்டுல அந்த அம்மா வருவாங்க கள்ல… காலையில கூட வந்தாங்களே …அவங்க பேரென்ன’’

‘’லெட்சுமிக்கா…அவங்களுக்கென்ன’’

‘’அதத்தான் நானும் கேக்கேன்…அவங்களுக்கு சொந்த ஊரு எது? பிள்ளைங்க உண்டா?’’

‘’என்ன தெரியாத மாதிரி கேக்கீக…அவகளுக்கு,குழந்தைக கிடையாதே’’

‘’உண்டுன்னு சொல்லுதாரு சாமி நாதன் ஐயரு’’

‘’என்னப்பா….இப்பிடி குண்டைத் தூக்கி போடுத’’ என்று கேட்டபடி வந்தமர்ந்தாள் மல்லிகா…’’கதை கிழிஞ்சுது’’ என்று நினைத்துக் கொண்டாள் செல்லக்கிளி…

‘’அவருக்கு எப்டி தெரியுமாம்?’’

‘’காலையில அவரு இருக்கும் போது  இந்த அக்கா வந்தாங்கல்லா…பார்த்துட்டாரூ.,’’இவங்களுக்கு ஆறுமுக நேரிதானே…இவங்க பிள்ளைகள் எங்க இருக்காங்க’’அப்டின்னு கேட்டாரு….நான் அவங்களுக்கு பிள்ளைகள் இல்லியேன்னு சொன்னேன்…யாரு சொன்னா அப்டின்னாரு…அவங்கதான் சொன்னாங்க….புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் என் வீட்டுலதான் வாடகைக்கு குடியிருக்காங்க’’அப்டின்னு சொன்னேன்…அதுக்கு அவரு’’ இல்ல ….அவங்களை எனக்கு நல்லாத் தெரியும்…கோவிலுக்கு வருவாங்க…பிள்ளைகள் உண்டு…ஏதோ காரணத்துக்காக பொய் சொல்லியிருக்காங்க…நல்லா விசாரிங்கன்னு போயிட்டாரு’’ என்று நீளமாக சொல்லி முடித்தார் ஆண்டவன்….செல்லக்கிளிக்கு மூச்சு வாங்கியது….இதென்ன புது பிரச்சினை…

தனம் அக்கா என்னிடம் பொய் சொல்லி விட்டார்களா? கற்பனையே கஷ்டமாக இருந்தது…சிறிது நேரம் அமைதி…மனதுக்குப் பிடித்தவர்களை தள்ளி வைத்துப் பார்க்க யாருக்குத்தான் முடியும்…

‘’உனக்கு ஏதாவது தெரியுமா,,,நீதான் என்கிட்ட சொல்லலியா’’

‘’சத்தியமா இல்லங்க…பிள்ளைக இல்ல..சொந்த பந்தமும் சொல்லிக்கிடுத மாதிரி யாரும் இல்லேன்னுதான் என்கிட்ட சொன்னாக…ஆனா’’

‘’சொல்லு…என்ன சொல்ல வந்தே’’

காலையில் நடந்த முறுக்கு சமாச்சாரத்தை சொன்னாள் செல்லக்கிளி…

‘’ஆங்…தெரிஞ்சு போச்சு…சாமிநாத ஐயர் சொன்னது உண்மைதான்’’

‘’அப்போ அவங்க ஏன்ப்பா யாருமில்லேன்னு பொய் சொல்லணும்?’’ என்று திரில்லாக கேட்டான் பச்சை…

‘’அதான் புரியல’’

‘’ஆரம்பத்துலெர்ந்து எனக்கு அவ மேல சந்தேகந்தான்..அவ பேச்சும்,சிரிப்பும்….’’ என்று மல்லிகா,சந்தர்ப்பம் பார்த்து,செல்லக்கிளியின் தோழி மீது,சாணி கரைத்து ஊற்ற,

‘’ச்சே…சாமிநாதன் ஐயர் முன்னால அசிங்கமாப் போச்சு’’—ஆண்டவன்..

‘’பெத்த பிள்ளைக இருந்தா,ஆக்கங்கெட்டாப்புல,யாராவது இல்லேம்பாகளா’’ என்றாள் செல்லக்கிளி பலவீனமான குரலில்…

‘’தோ…சொல்லியிருக்காள்லா உன் பிரண்டு’’

பட்டென்று பதில் வந்தது மல்லிகாவிடமிருந்து…

‘’அப்பா…ஏதாவது தீவிரவாத கும்பலா இருக்குமோ’’

‘’பச்சை சொல்றது வேடிக்கையா இருந்தாலும், யோசிக்கணும்…நம்ம வீட்டை அவங்களுக்கு வாடகைக்கு விட்டிருக்கோம்…..நமக்கென்னன்னு இருக்க முடியாது….அந்த அக்காகிட்ட மெதுவா என்ன ஏதுன்னு கேளு…..நானும் நாலு பேர்ட்ட விசாரிக்கேன்’’ என்று எழுந்து கொண்டார் ஆண்டவன்..  கணவனி டம் சுலபமாக சரி என்று சொல்லி விட்டாள் செல்லக்கிளி…ஆனால், மறுநாள் தனம் வீட்டிற்கு போனபோது,அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை….தனம் மறுத்து அழுதாள்…உலகநாதன் குதி குதியென்று குதித்தார்..

‘’அம்மா..உங்களுக்கு வீடு வேணும்னா சொல்லுங்க…காலி பண்ணி தாரேன்…அதை விட்டுபோட்டு,எவனோ,எதையோ சொன்னான்னு எங்களை வந்து குடையாதீங்க’’

‘’அண்ணாச்சி,தப்பா எடுக்காதீங்க…ஒரு சந்தேகத்துலதான் கேட்டேன்,,,’’

‘’எங்க சொந்த விசயத்த நோண்டாதீங்க….வாடகை ஒழுங்கா வருதான்னு மட்டும் பாருங்க’’ என்று முகத்திலடித்தாற் போல பேசி அனுப்பி விட்டார்…இரண்டு நாட்களாகியும் தனத்தின் நீர் நிறைந்த கண்கள் செல்லக்கிளியின் மனதை விட்டு அகலவில்லை….மூன்றாம் நாள் முன்மதியம் தனம் வந்தாள்….’

‘’அக்கா…அன்னிக்கு எங்க வீட்டுக்காரர் பட படன்னு பேசிட்டாக….மனசுல வச்சுக்கிடாதீக’’

‘’அதையெல்லாம்,அப்பவே மறந்துட்டேன்…உக்காருங்ககா ‘’

‘’அவுக சோலியா திருனவேலி போயிருக்காக…அதான் சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன்’’

‘’என்ன …சொல்லுங்க’’

‘’நீங்க கேட்டது தப்பில்ல’’

‘’பிள்ளைக உண்டான்னு கேட்டேங்களே…’’

‘’ஆமா’’

‘’அது நெசந்தான்…எனக்கு ரெண்டு பொம்பளப் புள்ளைக உண்டு’’ என்றாள் தனம்…

Advertisement