Advertisement

அத்தியாயம்—18

பகல் கனவுதான் பலிக்குமேண்பார்கள்…இரவு கனவுகளும்,இவ்வளவு விரைவில் பலிக்குமா??…இதோ பலித்து விட்டதே…இதோ கண்முன் பார்கவி,,பிரியா, பிள்ளைகள் என எல்லோரும் இருக்கிறார்களே…ஒரு மணி நேரம் முன்பாக,செல்லம் ஃபோன் செய்து அழைத்த போது,அது ஒரு சாதாரண அழைப்பு என்றுதான் நினைத்தாள் தனம்….வந்து பார்த்தால் இனிய அதிர்ச்சி….அவள் வீட்டிற்குள்,தனம் குடும்பம்…பேச்சே வரவில்லலை…பிள்ளைகளைக் கட்டிக்கொண்டு,அரை மணி அழுது முடித்தாள் தனம்….அவர்கள் குடும்பத்தை ஒரு அறையில் விட்டு,வேலையிருப்பதாகச் சொல்லி சமையல் அறைக்கு ஒதுங்கி விட்டாள் செல்லம்…..அதுதான் அன்பின் அக்கரையின் எல்லை…

‘’என்னடி…ரெண்டு பேரும் இப்டி., மெலிஞ்சு போயிட்டீங்க….’’-தனம்…

‘’ரொம்ப நாள் கழிச்சு பாக்கறதால அப்டி தெரியுதும்மா…அப்பா எப்டிம்மா இருக்காங்க’’

‘’ம்..நல்லா இருக்காக…பிள்ளைக எல்லாம் நல்ல வளர்ந்துருச்சுங்க….’’

‘’ஏம்மா…எங்களை பாவிகளாக்கிட்டு,ஊரை விட்டே வந்துட்டீங்க …ஊர்ல எங்களை ஏசாத ஆள் பாக்கியில்ல…’’’ என்று அழுதாள் பிரியா …

‘’வேணும்னு செய்யலம்மா…அப்பாவை மீறி என்னால எதும் பேச முடியல…கண்ணு மூடி திறக்கறதுக்குள்ள என்னென்னவோ நடந்து போச்சு’’ ..என்று தனம் மூக்கை சிந்த,அங்கு காபி கொடுக்க வந்த செல்லம்

‘’பார்கவி,பிரியா, …பழய கத பேசக்கூடாதுன்னு சொல்லிதான உங்களை இங்க கூப்பிட்டேன்…மறந்தாச்சா’’ என்றாள்..

கண்களை துடைத்து ‘’சரிங்க ஆண்டி’’ என்றாள் பார்கவி…

‘’இப்டி ஒரு நல்ல ஹவுஸ் ஒனரை நான் இப்பதான் பார்க்கறேன்’’ என்றாள் பார்கவி..

‘’கரெக்ட்’’-பிரியா

‘’தங்கமான குணம்…கூடப் பிறந்த பொறப்பு மாதிரி அப்பிடி ஒரு பாசம்..

ஐந்தாறு வருட கதையை அம்மாவும்,பெண்களும்,ஆனமட்டும் பேசி தீர்த்தார்கள்…

‘’உங்களை வீட்டுக்கு கூட்டிட்டுப் போயி ஒரு வாய் சோறு போட முடியலையேன்னு ஆதங்கமா இருக்கு’’

‘’அதுக்கும் ஒரு காலம் வரும்மா…எங்களுக்கு உன்னைப் பார்த்ததே,வடை பாயசத்தோட,விருந்து சாப்டாப்புல இருக்கு’’

‘’விருந்து தயார்…தனம் அக்கா உங்க பிள்ளைகளுக்கு உங்க கையால பரிமாறி,நீங்களும்,அவங்க கூட உக்காந்து சாப்டுங்க’’

‘’எதுக்கு ஆண்டி இவ்ளோ சிரமப்படறீங்க’’—பார்கவி..

‘’சிரமமா….சந்தோசம்டா…உக்காருங்க…சாப்டலாம்’’

‘’அம்மா..அப்பாவுக்கு சாப்பாடு?’’

‘’அப்பா வீட்டுல இல்ல…திருனவேலி போயிருக்காக’’

வயிறும்,மனமும்,நிறைந்த நிலையில்,பிள்ளைகள் விடை பெற்று கிளம்பினார்கள்…தனம் செல்லத்தை கட்டிக்கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டாள்…

போர்ட் மாட்டிக்கொண்டு தான் சேவை செய்ய வேண்டுமென்பதில்லை…போகிற போக்கில் செய்யலாம்.—செல்லத்தை போல…அப்படியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது…அதனால்தானே,மழை மண்ணில் வந்து விழுகிறது…

இரவு வீடு திரும்பிய ஆண்டவனிடம் நடந்த விஷய த்தை சொல்லவும் ,மகிழ்ந்தான்…

‘’நல்ல விஷயந்தான்…பாதி கரைக்கு வந்துட்ட…மீதி தூரம் எப்டி போவே?’’

‘’அம்மாவும் பொண்ணுகளும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க….சரி…அப்பா தனியா நிக்காரே  அப்டின்னுதான சொல்றீக’’

‘’ஆமாங்க செல்லம்’’

‘’அம்மாவுக்கு, ருசி காமிச்சாச்சு…இனி,வீட்டுக்காரரை வழிக்கு கொண்டார வேண்டியது அவங்க பாடு…அது தன்னால நடந்துரும்’’

‘’எப்டி…அவ்ளோ நம்பிக்கையா சொல்லுத’’

‘’பொம்பளைக அப்டித்தான்…தீவிரமா ஒரு விஷயத்த முடிவு பண்ணிட்டாகன்னா,குடும்பத்த தான் நெனக்கிற புள்ளியில கொண்டாந்து நிறுத்திருவாக…அந்த சாமர்த்தியம் உண்டு’’

‘’சர்தான்’’

‘’என்ன சர்தான்’’

‘’நம்ம வீட்டுலயும்,நீ சொன்ன பொம்பளைக சாமர்த்தியம் வேலை செய்யுதுன்னுதான் நெனைக்கேன்’’

‘’புரியலங்க’’

‘’இப்ப ரெண்டு மூணு தரமா ,நானும் அக்காவும் மதுரைக்கு போகையில,பச்சையும்,அந்த பொண்ணும் ஆசுபத்திரிக்கே வாராக’’

‘’எந்த பொண்ணு’’

பதிலாக,ஆண்டவன் முறைக்க,

‘’ச்சரி..ச்சரி..நிஷாவா’’

‘’பேரெல்லாம் சொல்லி கூப்புட ஆரம்பிச்சாச்சா’’

‘’கூப்டத்தான பேரு’’

‘’அது எனக்கு தெரியாது…நான் கூப்டப் போறது இல்ல’’

‘’எனக்கு பச்சையை தேடுது…பாத்து ரெண்டு மாசமாகப் போகுது’’

‘’அந்த எண்ணம் அவனுக்கும் இருக்கணும்லா…மொளைச்சு மூணு இலை விடல…அதுக்குள்ள நாய்க்கு பொம்பளை கேக்குது’’

‘’அப்டியெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசாதீக…வயசு கோளாறு..சரியாயிரும்…’’

‘’வயிறு எரியுதுடி…பெத்து நோய் காத்து,பேய் காத்து வளர்த்த பிள்ள,எவளோ ஒருத்தி,அவ முந்தானைய பிடிச்சிக்கிட்டு திரியிறான்…நான் சொல்றதே உனக்கு சங்கடமா இருக்குன்னா,நாளைக்கு ஊரே பேசும்…அப்ப என்ன செய்வ?’’

குரல் உடைந்து செல்லம் கேட்டாள்.

‘’உங்க கிட்ட பேசுனானா’’

‘’எப்ப வந்தீங்கன்னான் …அதோட சரி…அப்றம்,அத்தைக்கிட்ட தான் பேசிக்கிட்டு இருந்தான்’’

‘’அந்த புள்ள பேசுனாளா’’ ‘

‘’நாம பெத்ததே சரியில்ல…இதுல ஊரான் பிள்ளைய குறை சொல்லி என்ன செய்ய….போ…போயி சாப்பாடு எடுத்து வையி…அக்காவுக்கும் என்ன வேணும்னு கேட்டு குடு’’ என்றார் …மேற்கொண்டு அந்த பேச்சை தொடர விரும்பாமல்….இந்த ஆண்டவன் வெறுத்து என்ன செய்ய?அந்த ஆண்டவன் பச்சை நிஷா உறவு தொடர வேண்டும் என்றல்லவா விரும்புகிறான்…

    அத்தியாயம்—19

சமீப நாட்களில், மதுரையில் இருந்து  சிகிச்சை முடித்து வரும்,ஆண்டவனின் முகம் வாடியே காணப்படுகிறது…மருத்துவர் ,மல்லிகாவிற்கு,எதிர் பார்த்த அளவு ரிசல்ட் இல்லை என்று சொல்கிறாராம்…இதெல்லாம் கணிக்க முடியாது…நம்மை மீறிய சக்தி இருக்கிறது என்கிறாராம்…இத்தகைய பதில்கள்தான் ஆண்டவனை சோர்வடைய செய்கின்றன…இரவு படுக்கை அறையில், பேசிக் கொண்டிருந்த போது, தனது மன சோர்வுக்கு வேறு ஒரு காரணம் இருப்பதாய் சொன்னார் ஆண்டவன்…

‘’பச்சை ,அந்த நிஷா பிள்ளை பின்னாலயே அலைதானே ,அதை சொல்லுதீகளா’’ என்று கவலையுடன் கேட்டாள் செல்லம்…

‘’அது ரெண்டாவது….மூணாவது ஒரு டென்ஷன்’’

‘’புதுசு புதுசா நமக்குன்னு,முளைச்சுதான் வருது…அது என்னது?’’

‘’அக்கா,கார்ல வரும்போது,அவ வீட்டுக்காரரைப் பத்தி பேச்செடுத்தா..’’

ஒரு பெரிய மூச்சு எடுத்து அதிர்ந்தாள் செல்லம்…

‘’இது என்ன புதுக்கதையா இருக்கு…அந்த அண்ணன் பத்தி,மருந்துக்கும் பேச்செடுத்து பேசமாட்டாகளே மதினி….காலம் போன காலத்துல,நோய்ல,அவஸ்தைப்பட்டுக்கிட்டு இருக்காக..இப்ப என்ன?’’

‘’அதனாலதான்…எரியுறதைப் பிடுங்கினா,கொதிக்கறது அடங்கும்னு எங்கப்பா சொல்லுவாக…உடம்புல,ரத்தம் சுண்டிப்போனா,மனசு இறங்கி வரும்…இவ்வளவுதானா வாழ்க்கை அப்டின்னு மண்டைக்கு உரைக்கும்…அதுதான் செல்லம்,இப்ப நடந்திருக்கு’’

‘’அண்ணனை பாக்கணும்னு சொல்லுதாகளா’’

‘’ஆமா…நேரடியா அப்டி சொல்லலை…அவ பேச்சுல,நானா புரிஞ்சுக்கிட்டேன்’’

‘’இப்ப என்ன செய்யப் போறீக…கூப்ட்டா பாக்க வருவாகளா’’

‘’தெரியல…முதல்ல,அவங்கல்லாம்,எங்க இருக்காங்கன்னே தெரியலையே….ஒரு வெறுப்புல,அப்டியே கண்டுக்கிடாம விட்டாச்சு…இனி தான் விசாரிக்கணும்..அக்கா சாப்ட்டாளா’’

‘’வாய் வரை வீக்கம் வந்துட்டு…மென்னு சாப்ட முடியல…..ரெண்டு இட்லிய மோர் விட்டு கரைச்சு குடுத்தேன்…அதே அவுகளால முழுங்க முடியல..’’

கேட்டுக் கொண்டிருந்த ஆண்டவன் தாள முடியாமல்,வாய் விட்டு அழுதார்….எப்பேர்ப் பட்ட மனிதரையும் அசைத்துப் போட்டு விடும் ஆயுதமல்லவா பாசம்….உடல் குழுங்க,துண்டால் வாய் பொத்தி அழும் கம்பீரமான அந்த மனிதரை,ஆறுதலாக,தன் மடியில்,சாய்த்துக் கொண்டாள் செல்லம்…தாரம் தாயுமானவள் தானே….

கிடப்பதெல்லாம் கிடக்கட்டும்…கிழவியைத் தூக்கி மனையில் வை என்று சொல்வார்கள்…அது போல ஆண்டவன்..,பச்சையை,வரவழைத்து வீட்டில் துணைக்கு வைத்து விட்டு,சென்னைக்கு கிளம்பி விட்டார் மல்லிகாவின் கணவரை தேடி…ஸ்பிக்கில் இருந்து வி‌ஆர்‌எஸ் வாங்கிக் கொண்டு சென்னை யில் சென்று செட்டில் ஆகி விட்டாராம்…மல்லிகாவின் மோசமான உடல் நிலை கண்முன் நிழலாட…..காலத்தின் அருமை கருதி வாகை குளத்தில் இருந்து விமானத்தில் போனார் ஆண்டவன்…உடன் உதவிக்கு,ஜூனியர் வக்கீல்‌ ஒருவர் வேறு….போரூரில் இருப்பதாய் தகவல்…பகல் முழுவதும் அலைந்தார்கள் ,,பயனில்லை…இரவு அறை எடுத்துத் தங்கினார்கள்…வெறும் கையுடந்தான் வீட்டுக்கு போகவேண்டி இருக்குமோ என்ற பயம் பிடித்துக் கொண்டது ஆண்டவனை…அவரது வாடிய முகத்தை காண சகியாமல்,ஜூனியர் சதீஷ் ஒரு ஐடியா சொன்னான்..

‘’சார்…கடைசியா ஒரு வழி இருக்கு…எங்க அப்பா ஸ்பிக்ல வேலை பாத்தவருதான்..அவரோட ,முக நூல் பக்கத்துல,உங்க மச்சான் சோம சுந்தரத்தப் பத்தி,போஸ்ட் போட சொல்றேன்…அங்க பிடிச்சு,இங்க பிடிச்சு எப்டியாவது லிங்க் கிடைச்சுரும்’’ என்றான் கண்களில் நம்பிக்கை ஒளி படர….

‘’செய்’’ என்ற ஒற்றை வார்த்தையுடன்,கண்மூடி படுத்துக் கொண்டார் ஆண்டவன்…ஆனால் சதீஷின் முயற்சி படுக்கவில்லை,,,,பலித்தது…விடிவதற்குள்,சோமசுந்தரத்தின், விலாசம் கைக்கு வந்து விட்டது….அதன் பின் என்ன தடை? …காற்றாய் பறந்து போய் சோமசுந்தரம் வீட்டில் நின்றார் ஆண்டவன்…சோமசுந்தரம்  யாரையும்,எதையும் மறக்கவில்லை போல….இயல்பாய் வரவேற்றார்…குசலம் விசாரிக்க வாய் திறக்க….

‘’ப்ளீஸ்…கார் கொண்டாந்திருக்கேன்…அதுல ஏறுங்க….நாம தென்காசிக்கு மல்லிகாவை பாக்க போறோம்…மத்த வெவரங்கள பிரயாணத்துல,பேசிக்கிடலாமே’’என்றார் ஆண்டவன்

கெஞ்சும் பாவனையில்…ஒரு நிமிடம் யோசித்த சோமசுந்தரம்,உடையை மாற்றிக்கொண்டு,மாறுப்பேதும் சொல்லாமல் கிளம்பினார்…வண்டியில் பேசிக்கொண்டே வந்தார்கள்…மல்லிகா பிரிந்து வந்த பின்னர்,சோமசுந்தரம் கைகுழந்தையுடன் நிராதரவாய் நின்ற,கணவனை இழந்த பெண் ஒருத்தியை திருமணம் செய்து கொண்டாராம்…அதன் பின் ஆண் குழந்தை ஒன்று பிறந்ததாம்…மூவரும் உறவினர் வீட்டு விஷேசத்திற்கு போயிருக்கிறார்களாம்…இத்தகைய முக்கியமான விஷயங்களை மட்டும் கேட்டுக்கொண்டார் ஆண்டவன்..மற்றபடி சோமசுந்தரம் பேசிய எதுவும் அவர் மனதில் ஏறவில்லை…மல்லிகாவின் நிலையை பற்றி சுருக்கமாக சொன்னதை ,சோமசுந்தரம் எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல்,கேட்டுக் கொண்டார்…இரவு பத்து மணி போல ஆண்டவன்,சோமசுந்தரத்தை கூட்டிக்கொண்டு,வீட்டிற்குள் நுழைந்தார்…..செல்லம் என்ன சொல்வதென்று தெரியாமல் கை கூப்பி வரவேற்றாள்….மல்லிகாவின் அறைக்குள் நுழைந்தார்கள்….விளக்கை போட்டதும்,அரை மயக்கத்தில்,இருந்த மல்லிகா கண்ணைத் திறந்தாள்….கட்டிலுக்கு எதிரே இருந்த நாற்காலியில் சோமசுந்தரம் அமர்ந்தார்….இருவரையும் ஒன்று சேர பார்த்த ஆண்டவனால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த

முடியவில்லை…

‘’அக்கா…பாருக்கா…உன் கல்யாணத்தன்னிக்கு மாப்ள அழைச்சு கூட்டிட்டு வந்தேன்ல…அது போல இனிக்கும் கூட்டிட்டு வந்திருக்கேன்…வாய் தெறந்து பேசுக்கா’’ என்று சொல்லி கட்டிலில் முட்டி அழுதார்…மல்லிகா தம்பியை தேற்ற கூட தேம்பில்லாமல் வெற்று பார்வை பார்த்தாள்…மிகவும் சிரமப்பட்டு கணவனை ஏறிட்டாள் …சோமசுந்தரமும் நேருக்கு நேராக மனைவியைப் பார்த்தார்…கருப்பு என்றாலும்,உயரமாய்,அளவான சதையோடு,நல்ல முக வெட்டுடன்,அழகான பல் வரிசையுடன்,ஜார்ஜெட் புடவையில்,கட்டளை பிறப்பிக்கும்,குரலும்,கம்பீரமான தோற்றமும்…ஆக இருந்த மல்லிகாவா இது??? ..விழுந்து போன தேகம்,மொட்டை தலை,தொள தொள நைட்டி,வாய் கோணி,தொண்டை வீங்கி,விழி பிதுங்கி,குச்சியான கை காலுடன்…மரண வாசலில் மல்லிகா நிற்பதை புரிந்து கொண்டார் சோமசுந்தரம்.அவள் கண்களில் மட்டுமே உயிர் மிச்சமிருந்தது…..அவரையும்,மல்லிகாவையும் தனியே விட்டு அனைவரும் வெளியேறினர்….மனதிற்குள் சிரித்தாள் மல்லிகா… வாய் ..பேச முடிந்த காலத்தில் விருப்பமின்றி,வெளியேறினேன்….விருப்பம் வந்த காலத்தில்,முடங்கி கிடக்கிறேன்….சோமசுந்தரமும் வாய் திறந்து எதுவும் பேசவில்லை…அவராலும் பேச முடியவில்லை…துக்கம் தொண்டையை அடைத்தது…கண்களால் நிறைய பேசினார்…

‘’ஏம்மா…என்னைய பிரிஞ்சு வந்துட்ட’’

‘’நான் எங்க பிரிஞ்சேன்….நீங்க கட்டுன தாலியும் என்கிட்ட இருக்கு…நீங்களும் இருக்கீங்க…’’

‘’உன்னை நினைச்சு எத்தனையோ ராத்திரிகளை நான் தூங்காம கழிச்சிருக்கேன்’’

‘’தெரியும்…அதை நான் உணர்ந்தீருக்கேன்’’

தனக்கு மனைவியும்,பிள்ளைகளும் இருப்பதை சைகையில் சொன்னார் சோமசுந்தரம்-அந்த அமைதியை கெடுக்க விரும்பாமல்…

தலையாட்டி மகிழ்ந்து கொண்டாள் மல்லிகா…

தண்ணீர் கேட்டாள்..செம்பில் இருந்த தண்ணீரை, கவனமாக, குழந்தைக்கு ஊட்டும் பாவனையில் சிறிது சிறிதாக அவள் வாயில் விட்டார்‌… கணவன் கை பச்சை தண்ணீரும் தேனாய் இனிக்குமா….தெரியாமல் போயிற்றே….உணராமல் போனது,ஒன்றா இரண்டா? ..எமனின் அருகாமையில்,பாடங்கள் பக்குவமாய் புரியுமே மானிடர்க்கு….ஒரு செம்பு தண்ணீரையும் ஒன்றாய் குடித்து முடித்தாள் மல்லிகா…அது வாழ்வின் தாகமாயிற்றே….தனது கைதுண்டால்,மனைவியின் வாயை பொத்தினாற்போல்,துடைத்து விட்டார் சோமசுந்தரம்…அது அவரின்,மன காயத்திற்கும்,குற்ற உணர்விற்கும் கூட,மருந்தாய் அமைந்தது…தனது தலையணைக்கு அடியில் இருந்து ,ஃபோட்டோ ஒன்றை எடுத்து கொடுத்தாள் மல்லிகா..அது மல்லிகா-சோமசுந்தரத்தின் திருமண ஃபோட்டோ….அதை வாங்கி அவர் பத்திரப் படுத்திக் கொண்டார்…கணவரது கண்களில் துளைத்துப் பார்த்தவாறே அவர் கைகளில் சரிந்தாள் மல்லிகா…சத்தம் கேட்டு ஓடி வந்த ஆண்டவனும்,செல்லக்கிளியும்,மல்லிகாவின் உயிரற்ற உடலையே பார்த்தனர்….பறந்து வந்த கணவனைக் கண்ணாரக் கண்டு விட்டு,பறந்து விட்டது மனையாளின் உயிர்ப் பறவை…

‘’அலையோடு பிறவாத கடல் இல்லையே…

நிழலோடு நடக்காத உடலில்லையே.

துடிக்காத இமையோடு விழியில்லையே

துணையோடு சேராத இனமில்லையே..

என் மேனி உனதன்றி எனதில்லையே’’

மல்லிகாவின் வாழ்க்கையில் ஒலிக்காத கீதம் அவள் மரணத்தில்,மௌனமாய் ஒலித்தது…

    அத்தியாயம்—20

முடிந்தது….மல்லிகா இருந்த அறையில் அவளது புகைப்படமும்,விளக்கும் தான் இருக்கின்றன….மனதொடிந்த ஆண்டவன் தேறிவர பத்துநாட்கள் பிடித்தது…பச்சையும்,அத்தையின் நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவித்தான்…மகனை கட்டிப் பிடித்து ஆறுதல் சொன்னார் ஆண்டவன்…சடங்கு சம்ப்ரதாயங்கள் நடந்தாக வேண்டுமே….பதினாறாம் நாள் ஐயரை கூப்பிட்டு ஆத்ம சாந்தி பூஜைகள் செய்யப்பட்டது…ராமக்ரிஷ்ணா ஆசிரமத்தில் ,தன் செலவில் அன்று மதிய உணவு அளித்தார் ஆண்டவன். ..மாலை உறவினர்கள் ,பச்சை எல்லோரும் கிளம்பிய பின்,செல்லம் ஒரு கடிதத்தை கணவனிடம் நீட்டினாள்…

”என்னது?”

”லெட்டர்”

”அது தெரியுது…மொட்டையா சொன்னா என்ன அர்த்தம்? யாரு யாருக்கு குடுத்தது”

”உங்க அக்கா உங்களுக்கு குடுத்தது”

”என்னது…எனக்கா….எப்ப எழுதி குடுத்தா”

”நீங்க சென்னைக்கு போன அன்னிக்கு எழுதி குடுத்தாங்க..”

பிரித்துப் பார்த்தார்…கிறுக்கலாக இருந்தது எழுத்து…அக்காவின் கையெழுத்தை பார்த்ததும்,

மீண்டும் கண்களில் நீர் திரையிட்டது…சமாளித்துக் கொண்டு படித்தார்…

”அன்பு தம்பி ஆண்டவனுக்கு,

பேச முடியாததால் எழுதித் தருகிறேன்…பச்சை அவன் ஒரு பெண்ணை நேசிப்பதாய் என்னிடம் சொன்னான்..உனக்கு அதில் அவ்வளவு இஷ்டமில்லை என்பதையும் சொன்னான்…காலம் இருக்கின்ற இருப்பில்,கல்யாணத்துக்கு அவன் அனுமதி கேட்பதே நம் பாக்கியம்.அந்த பெண்ணும் நான் பழகிப் பார்த்த வரையில்,குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணாகத்தான் தெரிகிறாள்..ஜாதி மதமெல்லாம் நம்மோடு போகட்டும்..பச்சைக்கு  விருப்பமில்லாத திருமணத்திற்குள் அவனைத் தள்ளி விடுவது பெரும் பாவம்…நம் குடும்பத்தில்,திருமண வாழ்க்கையை தொலைத்து நின்ற கடைசி நபர் நானாகத்தான் இருக்க வேண்டும்…என் கண்மணி பச்சை வாழ்வாங்கு வாழ ,அவன் விருப்பப்படி திருமணம் செய்து வைக்க வேண்டியது உன் பொறுப்பு…இது ஆண்டவனுக்கு நான் இடும் கட்டளை…என் மருமகனுக்கு நானே மகவாய் வந்து பிறப்பேன்…என்னை இத்தனை நாள் முகம் சுளிக்காமல்,பார்த்துக் கொண்ட,உனக்கும்,செல்லத்திற்கும்,எனது ஆசீர்வாதங்கள்…”

அக்கா மல்லிகா.

    பெருமூச்சுடன் படித்து முடித்தார் கடிதத்தை…தமக்கை சொல்லை தட்ட மனமில்லை…அவருக்கு….மூன்று மாதங்கள் கழித்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது…முதல் நாளே ஆண்டவன் குடும்பத்துடன் மதுரை போய் இறங்கி விட்டார்…மறக்காமல் சோமசுந்தரத்தையும் அழைத்திருந்தார்….அவரும் வந்து விட்டார்….மறுநாள் காலை ஒண்பது மணிக்கு முகூர்த்தம்…பச்சை பட்டு வேட்டியில் அமர்க்களமாய் இருந்தான்…நிஷா மெரூன் கலர் பட்டு,பச்சை வண்ண ரவிக்கை,பொருத்தமான அணிகலன்கள் ,பூ ஜடை,நிறைய வளையல்கள்,மெகந்தி என மணமகளுக்கு உரிய முழுமையான அலங்காரத்தில் இருந்தாள்…மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்த்து பூரித்துப்போக,அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பூரித்தனர்…செல்லம் மருமகளுக்கு ஆசையாக வைர நெக்லஸ் பரிசளித்தாள்…நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது….செல்லம் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்…

”செல்லம்…இன்னும் யாரு வரணும்?”

”பத்து நிமிஷம் பொறுங்க…”

”யாருமா’

”வந்ததும் சொல்றேன்….இதா வந்துட்டாக…..அக்கா வாங்க…வாங்கம்மா எல்லாரும் வாங்க…கணபதி அக்கா வாங்க…மீனா வா…பார்கவி பிரியா எல்லாரும் வாங்க…அண்ணாச்சி வாங்க”

என்று செல்லம் வரவேற்ற திசையில் பார்த்தார் ஆண்டவன்…அங்கே,உலகநாதன்.,பேரனை தூக்கிக் கொண்டு,மனைவி மக்கள் சகிதம் வர,கணபதி,மீனா,எதிர் வீட்டு காந்தி,அனைவரும் வேகமாக வந்து கொண்டிருந்தனர்…ஆண்டவனும்,எதிர் கொண்டு அனைவரையும் வரவேற்றார்…அனைத்தும்,அனைவரும் ஒன்று கூடியாகிவிட்டது…ஆண்டவன் தலையாட்ட,ஐயர் மந்திரங்களை சொன்னார்…பெற்றோருக்கு பாத பூஜை

செய்தனர் மணமக்கள்…இறைவனை இறைவியை வணங்கி விட்டு,ஐயர் தாலியை எடுத்து,ஆண்டவனிடம் தர,அவர் தனது குலதெய்வம்,பெற்றோர்,தமக்கை ஆகியோரை வேண்டிக்கொண்டு தாலியை மகனிடம் தந்தார்,,,பச்சை தாலியை கட்ட,பார்கவி உடன் பிறந்தாள் முடிச்சைப் போட்டாள்…அனைவரும் மலர்

தூவி ஆசீர்வதித்தனர்…

”மாலை சூடும் மணநாள்…இள

மங்கையின் வாழ்வில் திருநாள்…

சுகமேவிடும் காதலின் எல்லை…

வேறொரு திருநாள் இனி இல்லை…

காதல் கார்த்திகைத் திருநாள்

மனம் கலந்தால் மார்கழித் திருநாள்..

சேர்வது கார்த்திகை திருநாள்

நாம் சேரும் நாளே திருநாள்..”

மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில்,யாரோ ஒருவரது,அலைபேசி அழைப்பு பாடல் வாழ்த்துப் பாடலாக ஒலித்தது…

    (முற்றும்)

Advertisement