Advertisement

அத்தியாயம்-15

குற்றாலம்.மெயின் ..அருவி ஆர்ப்பரிப்பில்,வெள்ளை புகை எழுந்தது….ஆண்கள் தண்ணீர் மூன்றாகப் பிரிந்து விழுந்தது..பெண்கள் பிரிவில் தண்ணீர் வரத்து போது மானதாக இருந்தது… கை கட்டி வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த கும்பலில்,பச்சையும்,நிஷாவும் அடக்கம்..இருவரும் கைகளை கோர்த்திருந்தனர்….

‘’எப்டியிருக்கு எங்க ஊர் அருவி? என்று பச்சை பெருமையுடன் கேட்க…

‘’ஏதோ நீயே இந்த அருவிய கண்டுபிடிச்சாப்புல கேக்குற’’ என்று கிண்டலாய் சொன்னாள் நிஷா…

‘’மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை எங்க ஊர் கோயில்‌னு தம்பட்டம் அடிச்சுக்கிரீகள்ல …அது போலத்தான்’’

‘’மதுரைக்கு  வந்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப் போகுது…இன்னும்,உனக்கு திருனவேலி பாஷை போகலியே’’

‘’ஏன் போகணும்?..எங்க மண் வாசனை அப்டி’’

‘’எப்டி’’

‘’மண்ணையும் ,பொண்ணையும் யாருக்கும் விட்டு தர மாட்டோம்…’’

‘’நீ சொல்றப்ப காதால கேக்க நல்லாயிருக்கு…கல்யாணாம்னு போயி நிக்கையில,எங்கப்பாவும்,உங்கப்பாவும் ஆள் வச்சு அடிப்பாகள்ல…..அப்ப இந்த டயலாக்கை சொல்லு…ஒகேயா’’

‘’யாருக்கும் அசர மாட்டான் இந்த பச்சை…எத்தனை பேர் வேணாலும் வரச் சொல்லு…மோதிப் பாத்துரலாம்’’என்றான் பச்சை கை பூஜங்களை தட்டியவாறு…சுற்றியுள்ளவர்கள் திரும்பிப்பார்க்கும் அளவு அடக்க மாட்டாமல் சிரித்தாள் நிஷா…

‘’உன் பேரு காமெடியா இருந்தாலும், பேச்சு சீரியசாத்தான் இருக்கு…ஓகே…அது நடக்கறப்ப பார்த்துக்கலாம்…இப்ப என்ன செய்யலாம்..அதை சொல்லு…’’

‘’அருவிய பாத்ததும் குளிக்கணும்னு ஆசையா இருக்கா’’

‘’ம்….ஃபுல்லா ஹெர்பல் வாட்டராமே ….பேசிக்கறாங்க..’’

‘’ஆமா…உடம்புக்கு குளிர்ச்சி ,,,,எவ்வளவோ ஆராய்ச்சி பண்ணிப் பார்த்துட்டாங்க….இந்த அருவி எங்க இருந்து வருதுன்னே கண்டுபிடிக்க முடியல…’’

‘’இயற்கையோட அதிசயம்’’

‘’ஒரு அதிசயம் இன்னொரு அதிசயத்தப் பாக்குது ‘’

‘’புரியுது…என்னைதானே அதிசயம்னு சொல்றே…..மொக்கை போடறதை கொஞ்சம் நிறுத்தறீயா ’’

‘’உனக்கு ரசனை இல்ல சரி விடு…’’

‘’ஹலோ…யாருக்கு ரசன இல்ல…ஸ்பாட்ல இந்த அருவி பத்தி சொல்றேன்…கேக்குறியா’’

‘’கேட்டுத்தானே ஆகணும்…இரு…மொளகா பஜ்ஜி வாங்கிட்டு வாரேன்….தின்னுக்கிட்டே கேப்போம்’’

சுட சுட மிளகாய் பஜ்ஜி,சுக்கு வென்னீரோடு வந்தான்..

‘’இப்ப சொல்லு பாப்போம்’’

‘’புரவிப் பாய்ச்சலில்,

பொங்கும் நுரையுடன்

தரையிறங்கும் தண்ணீரை

காணக் கண்கோடி வேண்டும்..

மலையெங்கும்

வெள்ளிக்கீற்றாய்

விழும் அருவிக்கு

வீரியம் அதிகம் …

வீழ்வது அருவியல்ல…ஆனந்தம்..

எழுவது நுரையல்ல…

நரைகளுக்கான திரை…

குடம் தண்ணீரில்,

குளித்ததாய் பேர் பண்ணும்,

பரிதாப ஜீவன்களுக்கு,–இது

பரவச அனுபவம்..’’

கவிதையும் முடிந்தது….கையில் இருந்த பஜ்ஜியும் தீர்ந்தது…

‘’ஐயோ…அதுக்குள்ள முடிஞ்சுதே’’—பச்சை

‘’அவ்ளோ நல்லாவா இருந்துது கவிதை’’ என்று நிஷா கண்களை விரிக்க,

‘’நான் பஜ்ஜியச் சொன்னேன்’’

‘’த்து…அல்பம்..சுக்கு தண்ணி அபாரம்’’

‘’நம்மளை மாதிரி காதலர்கள் சேர்ந்து  குளிக்க,இங்க வசதியில்லையே’’என்றான் பச்சை…

‘’பீலிங்கு….சரி…குளிச்சிரலாம் …மாத்த வேற டிரஸ் கொண்டாரலியே’’

‘’அது ஒண்ணும் பிரச்சினையில்லப்பா….நடந்து போகச்சில,காத்துலயே காஞ்சிரும்…நீ லேடீஸ் சைட் கியுவுல நில்லு…’’

‘’நீ குளிக்கலியா பச்சை’’

‘’ஹூம்…நான்லாம் வளர்ந்ததே இந்த தண்ணியில தான்…நீ இது மாதிரி அருவிய எல்லாம் எங்க பாத்திருப்ப….போ…கூட்டம் ஏறுது பாரு…வாட்சை கழட்டி என்கிட்ட  குடுத்துட்டு போ’’.

 யாரும் பார்க்காமல் காதலிக்கு,குற்றால அருவியை காண்பித்து ஊருக்கு கூட்டி வந்து  விட்டோம் என்று நினைத்தான் பச்சை…

ஆனால்,இரவு,அவன் வீட்டில் நடந்த கதையே வேறு…

மல்லிகாவை கூட்டிக்கொண்டு மருத்துவமனை சென்று வந்த ஆண்டவன் மனைவியிடம்,

‘’செல்லம் …குடிக்க ,தண்ணி எடுத்துட்டு ரூமுக்கு வா’’ என்றதும் மிரண்டு போன செல்லம்..டம்ளர் தண்ணீருடன்,அறைக்குள் சென்று

‘’என்னங்க…மதினிக்கு டெஸ்ட் ரிசல்ட் வந்துட்டா’’

‘’அதுக்குள்ள எப்டி வரும்….ரெண்டு நாளாகும்…நான் அதுக்கு கூப்டல…பச்சை வந்தானா’’

‘’இன்னிக்கு புதன் கிழம்மைல்லா…அவன் சனிஞாயிறுதான வருவான்’’

‘’அது தெரியும்…நான் அக்காவோட ஆஸ்பத்திரியில, இருக்கப்ப,என் ஜூனியர் ஃபோன் பண்ணான்…’’

‘’என்னான்னு’’

‘’பச்சை குற்றாலத்துக்கு வந்திருக்கான்’’

‘’என்னது’’ அதிர்ந்தாள் செல்லம்..

‘’இதுக்கே வாயப் பொளந்துட்ட ….வந்தவன் தனியா வரல…ஒரு பொண்ணைக் கூட்டிக்கிட்டு வந்துருக்கான்…ஏற்கெனவே அக்காவுக்கு, கேன்சரா இருந்தாலும் இருக்கும்னு டாக்டர் சொல்லிட்டாங்களேன்னு நான் நடுங்கிப் போயி கெடக்கேன்…ரிசல்ட் எப்டியிருக்குமோன்னு பயந்துகிட்டு இருக்கையில,இவன் வேற இப்டி ஒரு

குண்டைத் தூக்கி போடுதான்…’’ அதற்குள் மல்லிகா அழைக்க,’’செல்லம் அக்காகிட்ட ஒண்ணும் சொல்லிராத…என்ன ஏதுன்னு தெரியிர வரை இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்’’ என்றார்..

‘’மாத்திர போடணும்…இட்லியும்,குடிக்க வெந்நீரும் கொண்டா’’ –மல்லிகா..

மன குழப்பத்திலேயே வேலை செய்தாள் செல்லம்..பச்சை பெயருக்குப் பொருத்தமாய் பச்சப் புள்ளை மாதிரி இருப்பானே….அவன் இப்படி ஒரு வேலை செய்திருப்பான் என்று நம்ப முடியவில்லை…நம்பிக்கைக்குரிய ஆள் தகவல் சொல்லியிருப்பதால் நம்பாமலும் இருக்க முடியவில்லை…வீட்டிற்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது…மல்லிகாவின் தொண்டை அழற்சி எத்தனையோ சிகிச்சைக்குப் பின்னும்,குணம் தெரியாமல்,இப்பொழுது கேன்சர் டெஸ்ட் வரை வந்து நிற்கிறது..ஆண்டவனின் பெரியம்மா ஒருவர் கேன்சர் நோயில் தான் இறந்து போனார்களாம்..பரம்பரைத்தன்மை வேறு சேர்ந்து கொண்டதால்,மல்லிகாவிற்கு கேன்சருக்கான வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர் சொல்லியிருக்கிறார்…அந்த வெப்பத்தில்,வீடு தள்ளாடிக்கொண்டிருக்கும் போது,இவன் வேறு எதையோ கிறுக்குத்தனமாக செய்து வீட்டின் கொதிநிலையைக் கூட்டுகிறான்….என்று மனதிற்குள் குமைந்தாள் செல்லம்…

    அத்தியாயம்—16

துக்க வீட்டின் சாயல் அப்படியே படர்ந்தது ஆண்டவன் வீட்டில்…காரணம் மல்லிகாவிற்கு த்ரோட்

கேன்சர் உறுதி செய்யப்பட்டு விட்டதுதான்…ஆரம்ப நிலை அல்ல..முற்றிய நிலையும் அல்ல…உயிரை காப்பாற்ற முயன்று பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார் மருத்துவர்…மதுரை அப்பல்லோ மருத்துவமனையில்தான் சிகிச்சை நடக்கிறது…ரே டியேஷன் தெரப்பி முடிந்து,கீமோதெரப்பி சிகிச்சை நடக்கிறது…ஆண்டவன்தான் அக்காவைக்கூட்டிக் கொண்டு மதுரைக்கு அலைகிறார்…செல்ல த்திற்குதான் வேலை கூடி விட்டது…சோர்வு,மன அழுத்தம் காரணமாக ,மல்லிகாவால் அதிகம் நடமாட முடிய வில்லை…எனவே,நேரத்திற்கு,சாப்பாடு,காபி,வெந்நீர் ,ஜூஸ் என அவள் அறைக்கு எடுத்து சென்று,தர வேண்டியிருக்கிறது…வீட்டில் எந்நேரமும்,மாத்திரை,மருந்து,சிகிச்சை குறித்த பேச்சுகள் தான் ஓடுகிறது…ஆண்டவனின் நண்பர்கள்,உறவினர்கள்,அக்கம் பக்கத்தினர் என பார்வையாளர்களையும் ,கவனிக்க வேண்டியதாக உள்ளது…தனம் வந்தாள்…

‘’மல்லிகாவ பாக்க சங்கடமா இருக்கு…நல்ல வாழ்க்கை தான் இல்ல…கை,கால்,சொகத்தொட,நடமாடவாவது விட்டான் இல்ல இந்த கடவுள்’’

‘’ஆமாக்கா..அவுக படுத அவஸ்தைய கண் கொண்டு பாக்க முடியல’’

‘’கேன்சர்னு எப்டிக்கா சந்தேகம் வந்துது’’

‘’தொண்ட வலி,தொண்டையில புண்ணு,எரிச்சல் …இப்டி இருந்துச்சு…அதுக்கே வைத்தியம் பாத்துக்கிட்டு இருந்தது..அப்புறம்,குரல் மாற ஆரம்பிச்சுது…திடீர்னு வெயிட்டும் குறஞ்சுது..அதனாலதான் டாக்டருக்கே டவுட்டு வந்து,டெஸ்ட் எடுத்து பாக்கணும்னுட்டாக….’’

‘’இப்ப முன்னேற்றம்…இருக்கா’’

‘’சுகர் வேற இருக்கா,,,மனசை அமைதியா வச்சுக்கங்க…குணமாயிரும்னு நம்புங்க அப்டின்னு மாசம் ஒருக்கா கவுன்சிலிங்கும் குடுக்காக…எங்க வீட்டுக்காரருதான் ரொம்ப மனசுஓடிஞ்சு போனாக..அப்பா அம்மா தான் சீக்கிரமா போயி சேர்ந்துட்டாக…அக்கவாவது இருக்கக் கூடாதா அப்டின்னு ராவும் பகலும் பொலம்பல்தான் ‘’

‘’வருத்தப்படாதீக..எங்க பெரியம்மா மகளுக்கு,மார்பகப் புற்று நோய்…ஆபரேஷன் பண்ணி இப்ப. நல்லாருக்கா…பொல்லாத நோய்தான் இது…ஆனா

வந்து குணமானவுகளும் இருக்கத்தான் செய்தாக…மல்லிகாவுக்கு என்ன வச்சிருக்கானோ கடவுள்’’ என்று ஆறுதல் சொல்லிப் போனாள் தனம்…

அந்த வாரம் வீட்டிற்கு வந்திருந்தான் பச்சை…அத்தையின் நிலையை பார்த்து பார்த்து அழுதான் பச்சை…அத்தைக்கு கொடிய நோய் வந்திருப்பதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..செல்லம்தான் ஆறுதல் சொல்லி தேற்றினாள்….பகலில் ஆண்டவன் மகனிடம் எதுவும் பேசவில்லை…இரவில்,மல்லிகா உறங்கிய பின்,மகனை தங்களது,அறைக்கு அழைத்து,விசாரித்தார்…

‘’ போன வாரம் குற்றாலத்துக்கு வந்திருந்தியால ‘’

என்ன பதில் சொல்வதென சிறிது நேரம் திகைத்தான்..’’நானா’’

‘’நீதான்’’

‘’யார் சொன்னா?’’

‘’அது எங்களுக்கு ஆளிருக்கு…வந்தியா…இல்லியா…அத மட்டும் சொல்லு..’’என்று மிரட்டும் தொனியில் சொல்ல…அப்பாவின் கடுமைக்குப் பின்னால் காரணமிருக்கிறது என்று தெரிந்து கொண்டவன்,இனி எதையும் மறைக்க முடியாது…மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று புரிந்து கொண்டான் பச்சை…

‘’ஆமா…வந்திருந்தோம்’’என்றான் உறுதியான குரலில்….செல்லம் அரண்டு போனாள்…பிள்ளை பயந்து விடுவான் என்று நினைத்தாள்….நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் பிள்ளையைக் கண்டு அவளுக்கு வியப்பு…ஆண்டவன் நிலையும் அதுதான்..எனினும்,அவர் வெளிக்காட்டிக்கொள்ள வில்லை..

‘’வந்தோம்னா….யார் கூட வந்தே’’

‘’உங்ககிட்ட விஷயம் சொன்னவங்க அதை சொல்லலியாப்பா’’

‘’அது எதுக்கு உனக்கு?கேட்டதுக்கு பதிலை சொல்லு’’

‘’நிஷா வந்திருந்தா’’

‘’யார்ல நிஷா’’

‘’என் கூட வேலை பாக்கா’’

‘’ச்சரி…வேலை பாக்கட்டும்…உன் கூட குற்றாலத்துக்கு ஏன் வரணும்?’’

தன்னுடைய கற்பனை பொய்யாக இருக்க வேண்டும் என்ற நப்பாசையில்,ஒன்றும் புரியாதவர் போலவே கேட்டார் ஆண்டவன்..தகப்பனாரிடம் தனது காதல் சமாச்சாரத்தை கிடைத்த சந்தர்ப்பத்தில் போட்டு உடைத்துவிட,மனம் துணிந்து விட்டாலும் ,பயத்தின் காரணமாகவும், பழக்கத்தின் காரணமாகவும், வார்த்தைகள் வாய்க்குள் நொண்டியடித்தன….

‘’பதில் சொல்லுல…எவளோ ஒருத்தி எதுக்கு உன்கூட நம்ம ஊர் வரைக்கும் வரணும்?’’ என்று குரலை உயர்த்த…

‘’எவளோ ஒருத்தி இல்லப்பா…நான் கல்யாணம் பண்ணிக்கப் போறவ…’’ எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,சொல்லி விட்டான் பச்சை…

ஊர் உலகத்தை மிரட்டி வரும் காதல் என் வீட்டிற்குள்ளும் வந்து விட்டதா??.மிரட்சியுடன் மனைவியைப் பார்த்தார் ஆண்டவன்.. கண்கள் விரிய மென்று விழுங்கினாள் செல்லம்….நான் வளர்த்த பச்சையா இது?? ஆண்டவன் சற்று ஓங்கிபேசி விட்டால்,கண்கலங்கும் என் பிள்ளையா இது?.

‘’என்னல பேசுத நீ?…நம்ம வீட்டு வழக்கம் என்னன்னு தெரியாதா உனக்கு….இப்டி ஒரு வேலை பண்ணி வச்சிருக்கே…’’

‘’எப்டியும் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கத்தானே போறீக…அது நிஷாவா இருந்துட்டு போறா’’

‘’என்னல ஏதோ கத்திரிக்கா வாழக்கா வாங்குதாப்புல ஈஸியா சொல்லுத…கல்யாணம்ங்கது ஆயிரம் காலத்துப் பயிறு..உனக்கு அவ்ளோ வெளையாட்டா இருக்கா.பி.காம்.லா இந்த காலத்துல ஒரு படிப்பா…மேல படிக்கணும்னு எண்ணமில்லையா … ..அந்த புள்ளைக்கு எந்த ஊரு? நம்ம ஆளுகளா?’’

‘’அதெல்லாம் தெரியாது…அவளுக்கு ஊரு சிவகாசி’’

‘’கைல நாலு காசு பார்த்ததும், புத்தி பொம்பள தேடுதோ நாய்க்கு..’’என்று பற்களை கடித்தார் ஆண்டவன்..

‘’என்னங்க…பொறுமையா பேசுங்க…மதினி காதுல விழுந்திரப்போவுது ‘’—செல்லம்..

‘’என்னைய அடக்குதியே….இதையே உன் பிள்ளைக்கு,நல்ல புத்தி சொல்லி குடுத்து ,வளர்த்து இருந்தீன்னா,இன்னிக்கு இப்டி பேசுவானா’’

‘’ஏன்ப்பா ,,அம்மாகிட்ட பாய்தீக…நான் ஒண்ணு கேக்கேன்…பதில் சொல்லுங்க…அத்தைக்கு தாத்தா ,நீங்க எல்லாரும் பாத்துதான,கல்யாணம் பண்ணி வச்சீங்க….என்னாச்சு’’

‘’ம்…அதுக்காக நீங்க இப்டி கெளம்பிட்டீகளோ….நீ ஒரு உதாரணம் தான சொன்ன…கோர்ட்டுக்கு வா…காதல் கல்யாணம் பண்ணி ,நாலு வருசத்துல,நாலு மாசத்துல,நாலு நாள்ல கோர்ட்டுல வந்து நிக்கிற நூறு கேஸ் நான் காட்டுதேன்…என் கிட்டேயே வாதமாக்கும்,,,’’

‘’பேச பேச வளரும்…முடிவா என்னதான் சொல்லுதீக’’ ‘’உன் இஷ்டத்துக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வைக்க முடியாது…ஆனத  பாத்துக்கோ’’ என்று ஆண்டவன் முகத்தை திருப்ப…

‘’நீ என்னம்மா சொல்லுத’’

‘’அவ என்னல சொல்லுவா…என் முடிவுதான் அவ முடிவு’’

‘’அதான…என்னிக்கு பேச விட்டுருக்கீக…சரி…என் முடிவையும் கேட்டுகிடுங்க…என்னிக்கிருந்தாலும், நான் அவளைத்தான் கட்டுவேன்…இதுவும் மாறாது..’’என்று பச்சை சொல்லவும்,ஆத்திரம் மேலிட,அவனை அடிக்க கை ஓங்க ,செல்லம் வேகமாய் வந்து தடுத்தாள்..

‘’தோளுக்கு வளர்ந்த பிள்ளைய கை நீட்டாதீங்க…விட்டு பிடிப்போம்….கொஞ்சம் அமைதியா இருங்க…இப்ப பேசி பிரயோஜனமில்ல….நிதானமா எடுத்து சொன்னா புரிஞ்சுக்கிடுவான்’’ என்று அப்போதைக்கு ஆண்டவனை அமைதிப் படுத்தினாள் செல்லம்..

    அத்தியாயம்-17

மல்லிகாவின் உடலில்,முன்னேற்றம் தெரிந்தது…எனினும் சிகிச்சைகள் தொடர்ந்த படியேதான் இருந்தன..நோய்வாய்ப்பட்ட அக்காவை நினைத்து ஆண்டவனும் நலிந்து போனார்…மகனின் காதல் விவகாரம் வேறு மனதை அரித்துக் கொண்டிருந்தது…மல்லிகாவிடம் பச்சையின் காதல் பற்றி கணவன் மனைவி இருவரும் வாய் திறக்கவில்லை…ஆனால்,இரண்டு மூன்று வாரமாக,மருமகன் வீட்டிற்கு வரவில்லையே என்று புலம்பிக்கொண்டுதான் இருக்கிறாள்…செல்லம் ஏதோ சொல்லி சமாளித்து வந்தாள்…வர வர மல்லிகாவின் பேச்சும் சரியாகப் புரிவதில்லை…கவனித்துக் கேட்டால்தான் என்ன சொல்கிறாள் என்பது தெரிகிறது…தான் திடீரென்று முடங்கி விட்டதை நினைத்து வருத்தம் வேறு அவளுக்கு.சிகிச்சையின் சூடு தாங்காமல் ..தலை முடியில் பாதி கொட்டிவிட்டது …. வாயில் புண்கள் வேறு….ஆகையால் காரமில்லாமல்,கவனமாய் சாப்பாடு தயார் செய்ய வேண்டியிருக்கிறது…அக்காவும்,தம்பியும்,மதுரைக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்….சாப்பாடு,தண்ணீர்,வெந்நீர்,என எல்லாவற்றையும்,பார்த்து பார்த்து,எடுத்து வைத்தாள்,செல்லம்….இரவு வீட்டுக்கு திரும்பி விடுவார்கள் என்பதால்,அதற்கு ஏற்ற முறையில்,தேவை யானவற்றை கொடுத்தனுப்பினாள்…ஆனால்,அன்று ஆண்டவன் ஃபோன் செய்து,

‘’செல்லம்,,டாக்டர்,அக்காவை ஆஸ்பத்திரியில சேர்க்க சொன்னாரு’’

‘’ஏன்?என்னவாம்?’’ செல்லம் பதற,

‘’ஒண்ணுமில்ல,,ஒரு நாள் என் கண்காணிப்புல இருந்தா நல்லதுன்னுட்டாரு…நாளைக்கு திரும்பிருவோம்…நீ தனம் அக்காவை துணைக்கு கூப்பிட்டுக்கோ..’’ என்றார்…இரவு துணைக்கு ஆள் தேவையில்லை…படுத்தால்,அலுப்பில் தூங்கி விடுவாள்….ஆனால்,தனம் அக்காவுடன் இரவு பிரீயாகப் பேசலாம் என்ற எண்ணத்தில்,இரவு தனத்தை அழைத்தாள்…அவளிடம்,அவள் பிள்ளைகள் இருக்கும் இடம் பற்றி தெளிவாகக் கேட்டு தெரிந்து கொண்டாள்…

‘’திருச்செந்தூர் போகச்சில,நான் உங்க பிள்ளைகளை பாத்துட்டு வாரேன்’’என்று செல்லம் சொல்லவும்,கண் கலங்கி விட்டாள் தனம்…

‘’இப்டி யாராவது சொல்லமாட்டாகளான்னு காத்து கெ டந்தேன்…அப்பன் முருகன் உங்க ரூபத்துல,வந்து சொல்லியிருக்கான்….ராத்திரி நிம்மதியா கண்மூடி தூங்கி ரொம்ப நாளாச்சு…எங்க வீட்டுக்காரரு,கல்லா,வைரமா இருந்துட்டாக….எனக்கு மனசு கேக்க மாட்டேங்குதே….’’

‘’உங்க வீட்டு அண்ணாச்சிக்கும் மனசுக்குள்ள பிள்ளைக நெனெப்பு இருக்கும்க்கா…வெளியில காட்டிக்கிட மாட்டுக்காக,,,அதான் வித்தியாசம்…’’

‘’வாஸ்தவம்தான்…ரெண்டு பொண்ணைப் பெத்து புண்ணா போனதுதான் மிச்சம்…போங்க’’ என்று தனம் மனம் நொந்து சொல்ல,

‘’ஆ..மா …ஆம்பளைப் புள்ள பெத்தவுக மட்டும்,மணத்துக்கிட்டா இருக்கோம்…எங்க வீட்டுலயும்,சத்தமில்லாம,ஒரு மகாபாரதம் நடந்துகிட்டு இருக்கில்லா’’

‘’உங்க வீட்டுல என்னா..மல்லிக்காவுக்கு கொணக்குதே …அத சொல்லுதீகளா’’

‘’அதான் எல்லாருக்கும் தெரியுமே…’’என்றவள்,பச்சையின் காதல் கதையை சொன்னாள்….வாய் பிளந்து விட்டாள் தனம்..

‘’எக்கா…பச்சையா இந்த வேலை பாத்துட்டான்…என்ன ஒரு அமைதி…அடக்கம்..அவனா இப்டி’’

‘’ஆமாக்கா…அவன் காலேஜ்ல,கால் எடுத்து வைக்கவுமே எங்க வீட்டுக்காரரு பயந்தாக…அது மாறியே ஆயிட்டு…நீங்க சொன்னாப்புல,தலையில அடிச்சுட்டு கைல குடுத்தா வாங்கி வாயில போட்டுக்கிடுவான்,,,அப்டி ஒரு அப்பாவிதான்…இப்டி செய்வான்னு யாரு நெனச்சா?’’ இருவருக்கும் படுக்கை போட்டவாறே சொன்னாள் செல்லம்…தண்ணீர் செம்பு எடுத்து பக்கத்தில் வைத்துக் கொண்டாள்…இருவரும் படுத்துக் கொண்டே பேச்சை தொடர்ந்தார்கள்…

‘’எப்பிடியாப்பட்ட பிள்ளைகளும்,இப்டி போயி எக்குதப்பா மாட்டிக்குடுதுகளே..’’என்று ஆற்றாமையில் வருந்தினாள் தனம்…

‘’ரெண்டு மாசமா வீட்டுக்கே வராமக் கெடக்கான் …பெத்து வளர்த்தவகளை விட,யாரோ ஒருத்திதான் பெரிசுன்னு ,இந்த பிள்ளைகளுக்கு தோணீருது …பாத்தீங்களா’’

‘’அத சொல்லுங்க…கடைசியில என்னதான் முடிவாயிருக்கு??’’

‘’ஒரு முடிவும் ஆகலக்கா…அந்தால நிக்கி…அவன் அப்பா மேல கோவப்பட்டுகிட்டு,அவுக கிட்ட பேசாம இருக்கான்…ஆசுபத்திரிக்கும்,வீட்டுக்கும் அலைஞ்சிக்கிட்டு இருக்கா?…அதனால அவன் விசயத்த அப்டியே கெடப்புல போட்டு வச்ச்ருக்கு..’’

அதற்குள்,பெண்கள் இருவருக்கும் கண்கள் சுழல,,,

கவலைகளை தற்காலிகமாக மறந்து,தூக்கத்திற்குள் சென்றனர்…தனம் கனவில்,வீடு நிறைந்து,மகள்கள்,மருமகன்கள்,பேரன்,பேத்திகள், சிரித்தபடி உலா வந்தனர்..எண்ணங்களும்,எதிர்பார்ப்புகளும் தானே கனவுகளாக வருகின்றன…

Advertisement