Advertisement

அத்தியாயம் –13

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்று மன நிம்மதி அடைந்தார் உலகநாதன்…வீட்டு விவகாரம் தொடர்பாக,திருச்செந்தூர் சென்று,அலுவலகத்தில் வைத்து மருமகனை சந்தித்தார்…குணாளன் தன்மையாகப் பேசினான்

‘’விடுங்க மாமா…பிரியா ஏதோ சின்னப் புள்ளத்தனமா பேசிக்கிட்டு இருக்கா…இந்த வயசில நீங்க எங்க போவீங்க பாவம்! நான் வேற வீடு பாத்துக்கிட்டு தான் இருக்கேன்..’’ என்று சொல்லி மாமனாரின் நெஞ்சில் பால் வார்த்தான்….’’யார் பெத்த பிள்ளையோ…மனிதத் தன்மையோடு பேசுகிறது…அதுவரை சந்தோஷம் ‘’ என்று நினைத்துக் கொண்டார் உலகநாதன்…அதன் பின் பிரியாவிடமிருந்தும் பேச்சில்லை…அப்படியே சில நாட்கள் கழிந்தது….ஒரு நாள் பிரியா தனது பிறந்த நாள் அன்று,பெற்றவர்களிடம்,ஆசி வாங்கும் பொருட்டு,பிள்ளைகளை கூட்டிக்கொண்டு வந்தவள்,வீட்டுக்கு கிளம்புகையில்,

‘’அப்பா…வீட்டுப் பத்திரத்தை காண்பிங்களேன்…நான்  பார்க்கலை..’’என்றாள்..

‘’நல்லாப் பாரு…இதோ எடுத்துட்டு வரேன்’’

பத்திரத்தை பரவசமாய் பார்த்தவள்,

‘’ம்மா…நான் இத எடுத்துட்டு போயி எங்க மாமியார்ட்ட,காமிச்சுட்டு கொண்டு வாரேன்…பொண்ணுக்கு வீடு தாரதா சொல்ல கேள்வி…அம்புட்டுதான்…கண்ணால யார் பாத்தா?அப்டிங்குது,,எங்க அத்தை….வீட்டுக்கு கொண்டு போறேன்…சரியாம்மா…’’ என்று கொஞ்சியபடி கேட்க,தலையாட்டி வைத்தாள் தனம்…..பேச முடியாமல் வாயடைத்து நின்றார் உலகநாதன்…பத்திரம் போனது போனதுதான்…ஒரு சில மாதங்கள் ஆகியும் தரவில்லை…மனதிற்குள் உறுத்தினாலும்,உலகநாதன்,தனம் இருவருக்குமே,மகளிடம்,கேட்க,வாயெழவில்லை…இதற்கு நடுவில்,பார்கவிக்கு பத்திர விஷயம் எப்படியோ தெரிந்து போனது…பிலு பிலுவென பெற்றவர்களை பிடித்துக் கொண்டாள்..

‘’ஆத்துக்கு மூத்தது அசடும்பாங்க….என்னய அது போலவே ஆக்கிட்டீங்கள்ளே….எனக்கு அப்புறம் பொறந்தவளுக்கு,லட்டு மாதிரி இவ்ளோ பெரிய வீட்டை தூக்கி குடுத்து இருக்கீங்க…என் புருஷன் என்ன ஏமாந்த ஆளா?பழ கடக்காரர் தான…இவருக்கு இவ்ளோ போதும்னு முடிவு பண்ணிட்டீகளா’’ என்று பொரிந்து போனாள்..

‘’ஏண்டி…என்னென்னவோ பேசுத….பெத்தவுக பிள்ளை கள்ட்ட வித்தியாசம் பாப்பாகளா ….’’

‘’நீங்க பாத்துடீங்கள்லா,,,சத்தமா பேசற வளுக்குத்தான் காலம் போல…’’

‘’நாக்குல நரம்பு இல்லாம பேசாத பார்கவி..உனக்கு நாங்க என்ன குறை வச்சொம்?’’

‘’எல்லாமே குறைதான்…நீயே யோசனை பண்ணிப் பாரு..நான் படிச்சது கவர் மெண்ட் ஸ்கூல்…அவ கான்வெண்ட்ல படிச்சா….என்னை டிகிரியோட நிறுத்திட்டு,கெடச்ச ஆளுக்கு கட்டி வச்சீங்க..அவளை…..போதும் போதும்னு படிக்க வச்சி,வேலைக்கு அனுப்பி,வீடு வாசலோட, நல்ல வேலையில இருக்கறவருக்கு,கல்யாணம் பண்ணிக் குடுத்து பாத்துக்கிடுதீங்க..’’ என்று கண்ணீர் சிந்த,  பேச மனமில்லாமலும்,பேசமுடியாமலும்,தாயும் மகளும் பேசிக் கொள்ளட்டும் என வெளியே போய்விட்டார்…அப்பாவின் மௌனத்தை தனக்கு சாதகமாக எண்ணிக்கொண்டு மேலும் கத்தினாள் பார்கவி…

‘’பார்கவி….இப்டியெல்லாம் பேசாதேடி…உனக்கு நகை போட்டோம்…அதுக்கு பதிலாத்தானே அவளுக்கு வீட்டை குடுத்தோம்…இதெல்லாம் தெரியாதா உனக்கு..”’என்று தனம் கண்கலங்க…

‘’சும்மா அழாதாம்மா…உங்க நகையப் பத்தி சொல்லிரக்கூடாது…அடகு வச்சி பணம் வாங்கக் கூட முடியல…பாத்தா தங்கம் மாதிரி தெரியலேங்கான் …கடைசியா சொல்லிட்டேன்,,,எனக்கும் ஏதாவது செட்டில் பண்ணுங்க.என் புருஷன் கௌரவத்த நான்தான் காப்பாத்தணும்’’ என்று சொல்லிவிட்டு,விருட்டென்று வெளியேறி விட்டாள்…

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகி விட்டதே என தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டாள் தனம்…வீடு திரும்பிய கணவனிடம் ஆதங்கத்துடன்,பெரிய மகள் பேசியதை எல்லாம் சொல்ல ,தனம் வாயெடுக்க, கை காட்டி அமர்த்தி விட்டார் உலகநாதன்…

‘’அவ என்ன பேசியிருப்பானு தெரியும்…சொல்லி சொல்லி என்னை புண்ணாக்காத’’ என்றார்…மனப் புழுக்கம் தாங்க முடியாமல்,தனம் வாய் விட்டு ஆழ..

‘’அழு…நல்லா அழு…இப்டி பிள்ளைகளை பெத்த பாவத்தை அழுதுதான் தொலைக்கணும்’’ என்று வேதனையுடன் சொல்லி விட்டு சாப்பிடாமலே படுத்துக் கொண்டார்..தனமும் உணவு எடுக்கவில்லை…வயதான காலத்தில்,துணையாய் இருக்கா வேண்டிய பிள்ளைகளே,வினையாய் வந்து நின்றனர்…அடுத்து வந்த நாட்களும்,சோகமாகவே இருந்தன…பிள்ளைகள் இருவரும் அம்மாவிடம்,அலைபேசியில் பேசிக்கொள்வதோடு சரி….வீட்டுக்கு வருவதில்லை…

‘’ஒரு மாசமாகப் போகுதுங்க..பேரபிள்ளைகளப் பாத்து…தேடுது…’’—தனம்…

‘’பைத்தியக்காரி…நம்ம பிள்ளைகளே நமக்கு சொந்தமில்லேன்னு இருக்கு…அதுக பெத்த பிள்ளைக நாளைக்கு நமக்கு ஒண்ணுன்னா வந்து நிக்கப் போகுதூகளாக்கும்,,,,போவியா’’

‘’நீங்க அடுத்த மாசம் ரிட்டாயர்ட் ஆகப் போற அன்னிக்கு ,பிள்ளைகளை கூப்ட வேண்டாமா?’’

‘’ஒரு மண்ணும் வேண்டாம்..நாலு பேரு வந்து இருக்கப்ப,என் மானத்தை வாங்குவாளுக…பிள்ளை இல்லாதவங்க என்ன செய்வாங்க?அது மாதிரி நெனச்சுக்க…’’ என்று தழு தழுத்த குரலில் சொன்னார் உலகநாதன்..ஓய்வு பெறும் நாளில்,மருமகன்கள் இருவரும் வந்து,மாமனாருக்கு,பொன்னாடை போர்த்தி விட்டு போயினர்…உண்மையில் ,இவர்கள் இருவரும்தான் தியாகிகள்…இவர்களுக்கு நான்தான் பொன்னாடை போட்டு,கௌரவிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார் உலகநாதன்..ஓய்வு பெற்று வீட்டில் உட்கார்ந்தாகி விட்டது…மறு நாள் மனைவியிடம்,’’தனம்…வீட்டு பத்திரம் பிரியாகிட்ட இருக்குன்னுதான் பெரியவளுக்கு ஆத்திரம்….நீ பிரியாவுக்கு ஃபோன் போட்டு, வெவரத்த சொல்லி பத்திரத்தை கொண்டாரச் சொல்லு’’என்றார்…தனம் தயங்கிய குரலில்,மெதுவாய் பார்க்கவியின் போக்கு பற்றி சொல்லி.பத்திரத்தைகேட்க, அடிக்காத குறையாய் கத்தினாள் பிரியா.

‘’ஆங்….இதுக்குதாம்மா நான் பயந்தேன்,,,,இப்ப சரியாப் போச்சா…நீங்க ரெண்டு பேரும் இருக்கையிலேயே,இவ்ளோ பிரச்சினன்னா..உங்க காலத்துக்குப் பெறகு,அந்த வீடு எப்டி என் கைக்கு வரும்?….நான் எடுத்த முடிவுதான் கரெக்ட்….நடுவுல,என் வீட்டுக்காரர்தான் குழப்பி விட்டுட்டாரு…இந்த பாரும்மா…லாஸ்டா சொல்றேன்…நீ ஒரே முடிவா வீட்டை காலி பண்ணி எனக்கு குடுத்துரு…நீயும் அப்பாவும்,ஒரு சின்ன வீடாப் பாத்து,மாறிக்கிடுங்க….ஒரு மாசம் டயம்…அதுக்குள்ள,நல்ல சேதி சொல்லுங்க…’’ என்று இணைப்பை துண்டித்து விட்டாள் பிரியா…கணவன் மனைவி இருவரும் நொந்து போனார்கள்..எடுக்க எடுக்க வளரும் புற்றுபோல் இருக்கிறதே பிரச்சினை!!

என்று மனம் குமைந்தார்கள்…ஃப்யூஸ் புடுங்கிய பல்பு போலானார் உலகநாதன்…அன்றாடங்க் காய்ச்சி போல் இருந்திருக்கலாமோ ….சொத்து சேர்த்ததானால் தானே ,இன்று செத்து சுண்ணாம்பாகிக் கொண்டிருக்கிறோம்…என்று தோன்றியது…பிரியா ஏதோ கோபத்தில்,காலக் கெடூ கொடுத்திருப்பாள்…நாள் செல்ல செல்ல மறந்து விடுவாள் என்றுதான்  நினைத்தார் உலகநாதன்…ஆனால் இரண்டாம் மாதம் வக்கீல் நோட்டீஸ் பறந்து வந்தது…வீடு தூக்க வீடு போல் ஆயிற்று…இருவரும்,சோறு தண்ணீர் இல்லாமல் கிடந்தார்கள்… மூன்றாம் நாள் வெளியில் போய்விட்டு வந்த உலகநாதன் மனைவியிடம்

‘’தனம்.உன் பொண்ணு ஒரு மாசம் டயம் குடுத்தாள்ல…நான்  ஒரு நாள்தான் உனக்கு டயம்…குடுப்பேன்..அதுக்குள்ள.நம்ம ரெண்டு பேருக்கு தேவையான சாமான்களை மட்டும் எடுத்துக்கிட்டு கிளம்பு..’’

‘’எங்கேங்க’’

‘’அதெல்லாம் கேக்காத…நாளை மறு நாள் விடியும்போதே கார் வந்துரும்…இல்ல…எனக்கு என் பிள்ளைகளை விட்டு வரமுடியாதுன்னு நெனச்சின்னா..தாராளமா இரு…ஆனா நான் கெளம்பிருவேன்’’ என்றார்…அதற்கு மேல் தனம் என்ன பேச முடியும்?…மறு நாள் உலகநாதன்,தனது செட்டில் மெண்ட் பணத்திலிருந்து,பாதி தொகையை பார்கவி கணக்கிற்கு மாற்றினார்…தனது உடமைகளை திரட்டினார்..தனமும்,அழுதபடியே,ஏதோ கைக்கு கிடைத்த பொருட்களை மூட்டை கட்டினாள்..மறு நாள் அதிகாலை இரண்டு ஜீவன்களும்,அனாதைகளாய் ஊரை விட்டு கிளம்பின..

அத்தியாயம்—14

ஆறுமுக நேரி கதையை அழுது கொண்டே சொல்லி முடித்தாள் தனம்…கலங்கிய மனதுடன் கேட்டு முடித்தாள்.செல்லம்….அங்கு சிறிது நேரம் கனத்த மௌனம் நிலவியது..

‘’செல்லக்கிளிதான், பேச்சை தொடங்கினாள்.. .

‘’எல்லாம் சரிதாங்க்கா…அழகா மொட்டு போல, ரெண்டு பிள்ளைக இருக்கறச்ச,பிள்ளைக கெடையாதுன்னு ஏங்க்கா சொன்னீக’’

‘’எங்க வீட்டுக்காரரு,வேலைதான்…பிள்ளைகளைப் பத்தி மூச்சு விடக் கூடாதுன்னு சொல்லித்தான் தென்காசிக்கு கூட்டிக்கிட்டு வந்தாக..வெறுப்பு…மனுசளை வெட்டத்தான் முடியாது..வெறுக்கவுமா முடியாது..அப்டின்னுட்டாக. எனக்கும் பேச வாயில்லாமப்  பண்ணி.ட்டாளூகளே என் பிள்ளைக ‘’

‘’பிள்ளைகளும் உங்களைத் தேடி வரலியா’’

‘’நாங்க தென்காசியில இருக்கறது யாருக்கும் தெரியாது..அதோட,சின்னவளுக்கு,வீட்டு  சாவிய குடுத்து விடும்போது,எங்களை தேடி யாரும் வரக் கூடாது…வந்தா,நாங்க தூக்குல தொங்கிருவோம்னு லெட்டர் எழுதி குடுத்து விட்டுட்டாக..’’

‘’கதையா காவியமா முடிச்சாச்சு….நான் வாரேன்…அவுக ஊருக்குப் போயிட்டு  வந்துருவாக.’’ என்று தனம் கிளம்பிப் போக,அவள் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள் செல்லக்கிளி…மனதை மீட்டெடுக்க,மிகவும் சிரமப்பட்டாள்….மல்லிகா எழுந்து வந்தாள்..

‘’என்ன..உன் பிரண்டு ரொம்ப நேரம் ,அளந்தாள … என்னவாம்’’

சுருக்கமாக சொன்னாள்..

‘’கேக்கறவன்,கேனயன்னா ,கேழ்வரகுல நெய் வடியுதும்பாக….அவ சொன்னான்னு,நீ ஒரு பைத்தியக் காரி கேட்டுகிட்டு இருந்தியாக்கும்…’’என்று மல்லிகா கேலியாய் சிரிக்க,’’நீ கூடத்தான் அற்ப காரணத்துக்கு,வாழ்க்கையை தொலைச்சுட்டு வந்து,நித்தம் என் பிராணனை எடுத்துக்கிட்டு இருக்கே…இது கூடத்தான் நம்பற மாதிரி இல்ல…அதுக்கென்ன செய்ய’’ என்று வாய்க்குள் சொல்லிக்கொண்டாள் செல்லக்கிளி..

இரவு இந்த கதையை மீண்டும் ஆண்டவனிடம் சொன்ன போது,அவர் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை…’’ அப்டியா சங்கதி…வில்லங்கமா எதுவும் இல்லேல்ல…இது குடும்பப் பிரச்சினை…என்னிக்கு வேணாலும்,சரியாகும்…சரி அதை விடு…நம்ம பச்சை,பேங்க் பரிச்சைல பாஸ் பண்ணிட்டான்…சொன்னானா?’’

‘’ஆமா..சொன்னான்…’’

‘’என்னடி..சுரத்தில்லாம தெரியும்னு சொல்லுத’’

‘’இல்ல..தனம் அக்கா கதையே மனசுல ஓடுது’’

‘’அதுதான் தப்பு…அடுத்தவங்களுக்கு உதவி செய்யலாம்….ஆனா,அதுலயே,கரைஞ்சு,காணாமப் போயிரக்கூடாது.நம்ம மனசை நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிக்கிரனும்,,..சரி…நீ…தூங்கு…எனக்கு,கொஞ்சம் எழுத்து வேலை இருக்கு’’ என்று சொன்னார் ஆண்டவன்….தனம் கதையை கேட்டதிலிருந்து, தனக்கு எப்படிப்பட்ட மருமகள் வரப் போகிறாளோ என்ற பயம் ஏற்ப்பட்டது..ஆணோ,பெண்ணோ,

.அப்பாவியாய் வளரும் பிள்ளைகள், திருமணத்திற்கு பின்னர் எப்படி இப்படி சுயநலமாய் மாறிப் போகிறார்கள்?..இதில் தவறு யாருடையது?

‘’என்ன செல்லம்,தூங்கலையா?’’

‘’இந்த காலத்து பிள்ளைங்க பெத்தவுகள ஒரு பொருட்டாவே நெனைக்க மாட்டேங்காகளே…அது ஏங்க’’

‘’இனிமே அப்டித்தான்…அதெல்லாம் எதிர்பாக்கக்கூடாது….பெத்தவுகளுக்கு,பயந்து நடந்த கடைசி தலைமுறையும் நாமதான்,,,,பெத்த பிள்ளைகளுக்கு,பயந்து நடக்கற முதல் தலைமுறையும் நாமதான்…’’

‘’அழகா சொல்லிட்டேகளே’’

‘’நான் சொல்லலை..வாட்சாப்ப்ல வந்துச்சு…நாமெல்லாம் பொலம்பறதோட நிறுத்திக்கிடறோம்..எவனோ ஒருத்தன் அதை அழகா வார்த்தையில சொல்லிருதான் பாத்தியா’’

உண்மைதான்…அனுபவங்கள் தானே,சிறு படைப்புகளையும்,பெரும் படைப்புகளையும்,உருவாக்குகிறது…

‘’ஆனா செல்லம்,நம்ம பச்சை அப்டி கிடையாது…மட்டு,மரியாத தெரிஞ்ச பய’’

‘’ஆமா…அடக்கமான பிள்ள’’

‘’எங்க அக்கா வளர்ப்பு அப்பிடி….என்ன செல்லம்’’

‘’எனக்கு தூக்கம் வருதுங்க’’

ஆண்டவன் சிரித்துக் கொண்டார்…ஒரு வீட்டுக்குள் இருக்கும் பெண்கள் எல்லாம்,ஒருவருக்கொருவர் பகை உணர்வு இல்லாதவர்கள்  என்றெல்லாம் நாம் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது …அவர்களுக்குள்,அன்பு,கடமை உணர்வு,பகைமை,பொறாமை எல்லாம் கலந்துதான் இருக்கும் போலும்….என்று அவர் மனதில் ஓடியது…இன்று வரை அதிகம் புரிந்து கொள்ளப் ப்பாடாததாக,இருப்பது பெண் மனம்தானே…அதை நிரூபிப்பது போல்,மறுநாள், செல்லக்கிளியின் சிந்தனை மகனை சுற்றியே ஓடியது…கணவர் சொல்வதிலும் உண்மை இல்லாமலில்லை….சிறு வயதில் இருந்தே ,பச்சையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மல்லிகாதான்…அதில் செல்லத்தின் பெருந்தண்மையும் ஒளிந்திருப்பதை மறுக்க இயலாது….தனிமரமாக நிற்கும்,மல்லிகாவிற்கு,பிள்ளை ஒரு பிடிமானமாக இருக்கட்டும் என விட்டு விட்டாள்…

‘’செல்லம்…அக்காவும் நானும்  ஆசுபத்திரிக்கு போயிட்டு வாறோம்…கதவைப் பூட்டிக்க…’’என்று சொல்லி விட்டுப் போனார்.ஆண்டவன்…..வீட்டிற்குள்ளேயே எந்நேரமும்,அடைந்து கிடக்கும் மல்லிகா,வெளியே சென்றதும்,வீடே பெரிதாகத்தோன்றுவது போலவும்,தான் சுதந்திரமாய் இருப்பது போலவும் உணர்ந்தாள்..செல்லம் ..ஃபோன் செய்து தனம் அக்காவை வரச்சொல்லி கூப்பிட்டாள்…..அவள் வரவும்,இருவருக்கும்,ஏலக்காய் டீ போட்டுக்கொண்டு வந்து பேசத் தொடங்கினாள்…

‘’டீ சரியா இருக்காக்கா’’

‘’ஆமா…நானும் இப்டித்தான் போடுவேன்…பச்சைக்கு வேலை கிடைச்சுட்டாமே..கேள்விப்பட்டேன்’’

‘’ஆமாக்கா…பேங்க்ல கிடைச்சிருக்கு….மதுரையில,போட்டுருக்காக…..வேலையில சேர்ந்து ரெண்டு நாளாச்சு…’’

‘’சந்தோசங்க்கா…உங்க மனசுக்கும், உங்க வீட்டு அண்ணாச்சி மனசுக்கும்,எல்லாம் நல்லபடியா நடக்கும்….மல்லிகாவுக்கு என்ன செய்யுது’’

‘’தொண்டையில எரிச்சலா இருக்காம்…கைப் பக்குவமா எல்லாம் செஞ்சு பாத்தாக….கேக்கல…அதான் இன்னிக்கு ஆசுப்பத்திரிக்கு கெளம்பியாச்சு’’

‘’ஐயோ பாவம்…எது வந்தாதான் தாங்க முடியுது?..’’

‘’ஆமா…அக்கா…திருப்பி திருப்பி கேக்கறேன்னு தப்பா நெனக்காதீங்க…உங்க பிள்ளைக,ஃபோன் கூட பண்ணாதுகளா?’’

‘’பண்ணுவாக…நித்தம் காலையில பதினொரு மணிக்கு,பெரியவ கூப்டுவா…நாங்கதான் எடுக்க மாட்டோம்..’’

‘’ஏங்க்கா…அப்டி…அதுகளும் பாவந்தான’’

‘’ஆமா…எனக்கு,எடுத்து பேசனும் போல,கை பர பரக்கும்…எங்க வீட்டுக்காரரு வேண்டாம்னுருவாக…பேசி பேசி திருப்பியும் வளர்க்காத..பெறகு, உங்கள பார்க்க,வாரேம்பாளுக….இந்த நிம்மதியும் போயிரும்னு சொல்லிட்டாக….அதுக்கு மேல நான் என்ன பேச?’’

‘’ஆனா அவளும் விடாம,தினம் ஃபோன் பண்ணுதாளா?’’

‘’ஆமா…உப்பை தின்னவுக தண்ணி குடிச்சுத்தான ஆகணும்…’’ என்றாள் தனம் வேதனையுடன்…பேச்சை மாற்ற எண்ணி,,,

‘’நம்ம பெட்டிக்கடை மீனா மகளுக்கு மாப்ள பாக்காளாம்…’’

‘’அதுக்குள்ளயா…என்ன வயசிருக்கும் அவளுக்கு?’’

‘’இருபது தான் முடிஞ்சுருக்காம்….மூத்த பிள்ள கதை மாதிரி ஆயிடக் கூடாதுன்னு பயப்படுதா போல..அதனால வேலைக்கெல்லாம் அனுப்பல..மாப்ள வீடு இருந்தா சொல்லுங்கக்கா அப்டின்னா’’

‘’அவ படிப்பை முடிச்சுட்டாளா’’

‘’ஆமா..பி.எஸ்ஸீ முடிச்சுருக்கா…இந்த காலத்துல இதெல்லாம் காணாது…மேல படிக்கணும்னு சொல்லுதாளாம்…கெணத்துல தள்ளுநாப்புல,இப்பவே என்னை தள்ளாதீங்க அப்டின்னு அவ அழுதாளாம்..அதையும் மீனாதான் சொல்லுதா ….என்ன செய்ய ‘’

‘’ரெண்டு பிள்ளைக இருக்கற வீட்டுல, ஒரு பிள்ளை செய்யுத தப்பு மத்த பிள்ளையை பாதிக்கத்தான செய்யுது’’

‘’ஆமாக்கா,,,பொம்பளப் பிள்ளைக,வயசு வேகத்துல,நடை தாண்டி போயிருதுக….ஆனா,அது காலத்துக்கும் அழிக்க முடியாத பேரால்ல ஆயிருது’’

‘’அத சொல்லுங்க…என் நாத்தனார் ஒருத்தி,இது மாதிரிதான்,வீட்டை விட்டுப் போயி,காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு,அவன் கூட வாழ்ந்து ,குப்பை கொட்டி,செத்தும் போனா…ஆனா,அவளுக்கு உண்டான பேர் இன்னும்,போகல’’

கணபதி நுழைந்தாள்…

‘’என்ன கத நடக்கு?’’

‘’நீயும் சேர்ந்துக்கா…மெதுவா பாத்திரம் கழுவலாம் ‘’ என்றாள் தனம்…

‘’வரும்போது எதிர் வீட்டு பொண்ணு காந்தி பிடிச்சிக்கிட்டுது…அவ மாமியாருக்கும் அவளுக்கும் ஏதோ சண்டையாம்….’’ –காந்தி

‘’எண்ணிக்குத்தான் சண்டை இல்ல…சத்தம் கேட்டுகிட்டே தான் இருக்கும்’’

‘’அந்த பொண்ணு மாமியாரை வீட்டை விட்டு அனுப்பிட்டு,தான் அம்மாவை கொண்டாந்து வைக்கலாம்னு பாக்கானு கேள்விப்பட்டேன்’’

‘’ஆனா அவ மாப்ள அதுக்கு சம்மதிக்க மாட்டான்,,,அவன் பாசக்காரன்,’’

‘’வீட்டுக்கு வீடு வாசப்படி….சண்டை சச்சரவு இல்லாத வீடு எது?’’

பேச வேண்டியது எல்லாவற்றையும் பேசி முடித்த பின்  இப்படி  ஒரு பொது தீர்ப்பு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்….இது வேண்டாத வெட்டிப் பேச்சு என்றும் ஒதுக்கி விட முடியாது…இதில் பெண்கள் வாழ்க்கை ரகசியங்களை கற்று கொள்கிறார்கள்…தங்களது துன்பங்கள் எல்லாம் ஒன்றுமேயில்லை என்ற தெளிவுக்கு வருகிறார்கள்…மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்….

Advertisement