Advertisement

  • தாமிரபரணி…
தென்காசி காளிதாசன் நகரில் உள்ள ஆண்டவப் பெருமாள்-செல்லக்கிளி தம்பதியின் வீடு ,வழக்கமான காலை நேரத்தை விட சற்று கூடுதல் பர பரப்பாய் இருந்தது..காரணம் அவர்களது ஒரே மகன் பச்சை மாமலை இன்றுதான் முதல் முதலாக கல்லூரிக்கு செல்கிறான்
…பதினெட்டு வருடங்களுக்கு முன்னாள் அவர்கள் வீட்டில் காலடி எடுத்து வைத்தான்…பிறகு,நான்கு வயதில் பள்ளிக்கூடத்தில் காலடி படித்தான்…இதோ இன்று கல்லூரிக்குள் நுழைகிறான்…கல்லூரி மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் மதிய உணவும் கையிலேயே கொண்டு செல்வதாய் ஏற்பாடு.
…கலந்த சாதமேல்லாம் மகனுக்கு தொண்டையில் இறங்காது….ஆகவே மோர்க்குழம்பு,உருளை பொரியல்,கீரை கடைசல் ,ஆகியவை தயாராகிறது…செல்லக்கிளியின் கணவன் ஆண்டவப் பெருமாள் வழக்கறிஞர்‌ ….சிவில் கேஸ் லாயர் …பெயரும் தொழிலும்தான் டெர்ரர் ஆக இருக்குமே தவிர,ஆள் ரொம்ப சாது…தலையில் அடித்து விட்டு,கையில் கொடுத்தாலும் ,வாங்கி வாயில் போட்டுக் கொள்ளும் அப்பாவி…கட்சி வழக்குகள்,சொத்து தகராறு,விவாகரத்து வழக்குகள்,இவைதான் வரும்,
,,,ஆக்ரோஷமாக வரும் நபர்கள்,ஆண்டவபெருமாளைப்  பார்த்துவிட்டு,அந்த ஆண்டவனையே பார்த்து விட்ட பரவசத்தில்,அப்படியே அமுங்கி விடுவார்கள்…அதிலேயே பாதி வேலை முடிந்து விடும்…எப்படியோ வேலை செய்து பணம் சம்பாதி த்துக் கொண்டு வந்து போடுகிறார்…அந்த மட்டில் கதை நடக்கிறது.
..அவர் மனைவி செல்லக்கிளி ஜாடிக்கேத்த மூடி…கணவனும்,கடமையுமே கண் கண்ட தெய்வம் என வாழ்பவள்…வாய்க்கு ருசியாக சமைத்து வீட்டை நேர்த்தியாக வைத்துக்கொள்வாள்… அதிகம் பேசமாட்டாள்…பேசவும் முடியாது…ஏனெனில் அவர்கள் வீட்டில் இன்னும் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது..
.அது ஆண்டவப் பெருமாளின் அக்கா  மல்லிகா,,,கணவன் வீட்டுக்குப் போன கையோடு திரும்பி வந்து,அம்மா வீட்டோடு,செட்டில் ஆனவள்…பெற்றோர் போனபின்,தம்பி வீட்டோடு வந்து,தங்கல்‌ போட்டவள்.வீட்டு உறுப்பினராகவே மாறி விட்டாள்..மல்லிகா இயல்பிலேயே சற்று ஓங்கிப்பேசக்கூடியவள்….பேச்சின் வீச்சும் அதிகமாகவே இருக்கும்…இடி சத்தத்தில் இருமல் சத்தம் எடுபடவா போகிறது?…அப்படியே அடக்கி வாசித்தே பழகி விட்டார்கள்.–ஆண்டவனும்,செல்லக்கிளியும்.
..காரணம் தம்பதி இருவரும் முறைப் பையனும்,முறைப் பெண்ணும்…ஒன்றுக்குள் ஒன்று என்பதால்,செல்லக் கிளியும் மல்லிகாவை தள்ளி வைத்துப் பார்க்கவில்லை…சமயல் வேலை முடியும் தறுவாயில் இருந்தது…கீரை மட்டும் கடைய வேண்டும்…மிக்ஸி கூடாது…மத்தினால்தான் கடையவேண்டும்…சூடாக இருக்கும்போது செய்தால்தான் உண்டு…ஆறிவிட்டால்,திப்பி திப்பியாக திறண்டு நிற்கும்…
கணவன் கூட சத்தமில்லாமல் சாப்பிட்டு விடுவான்..ஆனால்,மல்லிகாவிற்கு பதில் சொல்ல முடியாது…கீழே அமர்ந்து.கால்களுக்கிடையில்,மண் சட்டியை வைத்து,வேகமாக கடைந்தாள்….வாசலில் நிழலாடியது….ஆண்டவன் எட்டிப் பார்த்தான்,,,
”டயமாச்சு செல்லா…நீ உக்காந்து விளையாடிக்கிட்டு இருக்கே…ஃபர்ஸ்ட் டே யே லேட் ஆயிடப்போவுது…ஃபாஸ்டா ரெடி பண்ணு..”
”இதோ முடிஞ்சிட்டு….பச்சையை சாப்ட வரச்சொல்லுங்க..”
கையை கழுவி விட்டு தோசைக்கல்லைப் போட்டாள்…
”செல்லம் …தோசை ஊத்திட்டியா…பிள்ளை.கிளம்பிட்டான்.”மல்லிகா
‘’இல்ல மதினி,…நேத்து ராத்திரி,இந்த கல்லுல சப்பாத்தி போட்டாம்லா…அதான் தோசை சரியா வரமாட்டாக்கு..இல்லன்னா,பட்டுப் போல அழகா வருமே…’’
‘’ஆமா …நீதான் மெச்சிக்கணும் உன் தோசைக்கல்லை…அவசரமான நேரத்துலதான்,கல்லை சுரண்டிக்கிட்டு உக்காந்திருப்பா ‘’ என்று மல்லிகா சிடுசிடுக்க…..செல்லக்கிளி பதிலேதும் பேசவில்லை….பேசி புண்ணியமில்லை என்று தெரியும்…ஆகவே தர்க்கம் செய்யும் எண்ணத்தை கை விட்டு.காரியத்தில் வீரியத்தை காட்ட முனைந்தாள்…வெங்காயத்தை வில்லைகளாக நறுக்கி கல்லில் தேய்த்தாள் …அதற்குள் வேகமாக உள்ளே வந்த மல்லிகா,ஒரு தட்டெடுத்து,அதில் சோறு குழம்பை ஊற்றி,எடுத்துப் போனாள்..
..மருமகனை உட்கார வைத்து,சாதத்தைப் பிசைந்து.உருட்டி,வாயில் தந்தாள்….கை வேலை செய்து கொண்டிருக்க, வாய் அது பாட்டுக்கு,மல்லிகாவை வசை பாடிக்கொண்டிருந்தது…
..செல்லக்கிளிக்கு அரை குறையாய் காதில் விழுந்தது….இருந்தும் கண்டுகொள்ளவில்லை…பழகிப் போயிற்று….ஒரு வழியாய் முழுதாக ஒரு தோசை சுட்டு எடுத்தாள்….
‘’மதினி தோசை ரெடி…பச்சையை வரசொல்லுங்க,’’
‘’ம்..ம்…நீயே தின்னு…அவன் சோறு சாப்டாச்சு…மதிய சாப்பாட்டையாவது,ஒழுங்கு முறையா டப்பாவுல எடுத்து வையி’’ என்று கடித்தாள் மல்லிகா…பெருமூச்சுடன்,அடுப்பை அணைத்து விட்டு,மகனுக்கு,லஞ்ச் பேக் தயார் செய்து எடுத்துக் கொண்டு,ஹாலுக்கு,சென்றாள்…அங்கே, மல்லிகா,மருமகனுக்கு,தலை வாரிக் கொண்டிருந்தாள்.
..கல்லூரிக்கு செல்லும் பையனுக்கு தலை சீவத் தெரியாதா? சொல்லவில்லை…மனதில் எண்ணிக்கொண்டாள்…ஆண்டவப்பெருமாள் மகனுக்கு தண்ணீர் பாட்டில் பிடித்து வர,ஒரு வழியாய் பச்சை கல்லூரி செல்ல தயாரானான்…மல்லிகா பச்சையிடம்,
‘’ஏல தம்பி,திருநீத்து மரவை எடுத்தா’’ என்றாள்… அவன் மரத்தால் ஆன விபூதி கிண்ணத்தை கொண்டுவர,அக்காவும் ,தம்பியும்,அவனுக்கு திருநீறு பூசி ஆசீர்வதித்து அனுப்பினார்கள்..செல்லக்கிளி,இன்னும் குளிக்காததால்,மகனுக்கு விபூதி இடும் உரிமை மறுக்கப்பட்டது..மகனுக்காக,மனதில் பிரார்த்தித்துக் கொண்டாள்..
.அதற்கு தடையேதுமில்லையே….பச்சை அப்பாவுடன் வண்டியில் ஏறிப் போனான்..கணவன் வருவதற்குள் குளித்து விடலாம் என்று பாத்ரூம் நோக்கி செல்ல,
‘’இந்தா செல்லம்,…..புள்ள மொத மொதல்ல,பெரிய படிப்புக்கு,வெளிய போறான்,,கொஞ்சம் பொறுத்துக் குளி….இவ்ளோ நாளூ கைக்குள்ளேயே இருந்த பய..அவ்ளோ தூரம் போயி படிக்கப் போறான்,..அந்த பேராச்சி அம்மாதான் அவனுக்கு துணையிருக்கணும்,,,’’
பதில் பேசாமல் சமையலறையை ஒழுங்கு செய்தாள் செல்லக்கிளி..ஆண்டவப் பெருமாள் மகனை கல்லூரியில் விட்டு விட்டு ,வீட்டுக்கு வருகையில்,மல்லிகா விளக்கு பூஜை செய்து கொண்டிருந்தாள்…சிவபுராணம் படித்துக் கொண்டிருந்த மல்லிகா
‘’ஆண்டவா,,,புள்ளையைப் பத்திரமா காலேஜூல விட்டுடியா ?’’
‘’ ஆமாக்கா..’’
‘’சாயங்காலம் நீ போய்த்தான் கூட்டிட்டு வரணுமா’’?
‘’இல்ல..பஸ்ல வந்திருவான்’’
‘’வா(வாய்)பாக்காம ,அங்க இங்க நிக்காம, வீடு வந்து சேருவானா”
‘’வருவான் ,,,சின்னபுள்ளையா? நானும் பஸ் ரூட்டெல்லாம் காமிச்சிக் குடுத்திருக்கேன்,,,’’
செல்லக்கிளி மணியடித்து பூசை செய்ய அக்காவும் தம்பியும்,பூஜையறை வாசலில் நின்று கண் மூடி வணங்கினார்கள்.தோப்புக்கரணம் போட்டு விபூதி இட்டுக்கொண்டார்கள்…
‘’செல்லா,,,தோசை சுடு…. எனக்கு டயமாச்சு….’
’நல்ல வேளை…கல் நன்றாக ஒத்துழைத்தது..நிலா போல வட்ட வட்டமாக சுட்டுப் போட்டாள் …செல்லக்கிளியின் கை மணம் அப்படி…ஆண்டவப் பெருமாளின், நாக்கு நீளமும் அப்படி.. அவரை கோர்ட்டுக்கு அனுப்பி விட்டு மீண்டும் கல்லைப் போட்டாள்…மல்லிகாவும் வயிற்றுக்கு வஞ்சனை இல்லாமல் சாப்பிடக் கூடியவள்
…ஐந்தாறு தோசைகள் உள்ளே போனது…கடைசி தோசை சாப்பிடும் போதே சூடாய் ஒரு காபி வேண்டும் மல்லிகாவுக்கு…அதையும் போட்டுத் தந்தாள்…தனக்கு இரண்டு சுட்டுக்கொண்டு,சாப்பிட அமர்ந்தாள்…இரண்டு விள்ளல் வாயில் போட்டிருப்பாள்….வாசலில் காய்கறிப் பாட்டி.
..நாளை சமையலுக்கு,இன்றே வாங்கி வைத்தால் தான் உண்டு…கையை உதறி எழுந்து கொண்டாள்…’’வாங்கம்மா….என்ன காய் வேணும்’’ என்றாள் தாயம்மா பாட்டி..’’.நாளைக்கு செவ்வாய்க் கெழமல்லா… சாம்பார்க் காய் ஏதாவது தாங்க ‘’
‘’முருங்கைக்கா,,இருக்கு…வீட்டுக்காய்  …தரவா’’
அதில் இரண்டு,பொரியலுக்கு புடலங்காய் வாங்கிக் கொண்டாள்….இரவு துவையல் அரைக்க,கொத்தமல்லிக் கட்டு ஒன்றை எடுத்தாள்…வாரக் 
கணக்குதான்,,,ஆகவே,காய்கறிகளுடன்,செல்லக்கிளி.வீட்டிற்குள்,திரும்ப முனைந்த பொது,தாயம்மா,
‘’எம்மா…இந்த வெயிலுக்கு ஆயாசமா வருது…ஒரு காபி தாங்களேன்’’
‘’இந்தா  கொண்டாறேன்…’’
காபி குடித்து விட்டு ,சிறிது நேரம் ஆசுவாசப்படுத்தியபின்,கூடையைத்தூக்கிக் கொண்டு,கிளம்பினாள் தாயம்மா…
மீண்டும் சாப்பிட உட்காருவோம் என்று செல்லக்கிளி எண்ணியபோது,அயன் காரர் வந்து சேர்ந்தார்…இவரையும் விட முடியாது…வேலை  நடக்க வேண்டுமே…கணவன் மகனது, துவைத்த உடைகளை, தேடி எடுத்து,ஒரு பையில் வைத்து அமுக்கித் தந்தாள்….’’அம்மா…தம்பியோட,பழைய பேன்ட் சட்டை இருந்தா குடுங்களேன்..என் மவன் போட்டுக்கிடுவான்’’என்றார் அயன்‌காரர்….
‘’இருக்கு…தாரேன்…எடுத்து வச்சிருக்கேன்…சாயங்காலம் வந்து வாங்கிக்கிடுதீகளா’’
‘’ஆட்டும்மா ….வாரேன்’’
வயிறு கபகபவெனப் பசித்து, தோசையை நினைவூட்டியது…கை வைக்கப் போனவளை காதில் விழுந்த குரல் தடுத்து நிறுத்தியது…வேலைக்காரி கணபதி….எரிச்சலில்,காய்ந்து கிடந்த தோசைகளை தூக்கி குப்பையில் போட்டாள்…’’இன்னிக்கு சிவன் படி அளக்கலை போல’’ என்றாள்….
‘’என்னம்மா…தன்னால பேசுதீக’’—கணபதி தான் சாப்பிட ஆரம்பித்த கதையைச் சொன்னாள் செல்லக்கிளி…கேட்ட கணபதி வெடித்தாள்…
‘’நல்லாச் சொன்னீக போங்க..ரெண்டு தோசைய புட்டுப் போட எம்புட்டு நேரம்‌ ஆயிரப் போவுது? சாப்பிட்டுட்டு வாங்க…நான் உக்காந்திருக்கேன்..’’
‘’ப்ச்….இல்லக்கா..பசியே அமந்து போச்சி..நீங்க வேலையை ஆரம்பிங்க….நாலு வீடு போற ஆளு….இந்த பாத்திரம் ஒழிச்சுப் போடுதேன்,,,’’என்ற படி செல்லக்கிளி வேகமாக சமயலறைக்குள் செல்ல,,,,
‘’கடல் மாதிரி வீடும்,கப்பல் மாதிரி காரும் இருந்து என்ன செய்ய,,,பசியாத்த நேரமில்ல…’’என்று தன் போக்கில் புலம்பியவள் .கிடந்த பாத்திரங்களை தேய்க்கத் தொடங்கினாள்…..செல்லக்கிளி காபி கலந்து கணபதிக்கு ஒரு தம்ளரில், ஊற்றித் தந்து விட்டு,தானும் குடித்தாள்…
‘’ மல்லிகாம்மா தூங்கியாச்சா?’’
‘’குறட்டையே வந்தாச்சு,,’’
இருவரும் சிரித்தார்கள்….
‘’தம்பி காலேஜுக்குப் போய்ட்டுதா’’
‘’ஆமா..காலையில உன்னைய பிடி என்னயப்பிடி ன்னு இருந்துச்சு…இந்த அழகுல,தோசைக்கல்லூ வேற மக்கர் பண்ணிட்டு ‘’
‘’பொறவு?
‘’சோறு தின்னுட்டு,அதையே கைல கொண்டு போறான்’’
‘’அடப் பாவமே…சமயத்துல இப்பிடித்தான்,,,ஏதோ பொங்கத் தெரியாதவ ஆக்கத்தெரியாதவ கத மாதிரி ஆயிரும்’’
‘’ஆமாக்கா…அப்பிடித்தான் ஆயிட்டு…மதினி ஏசிக்கிட்டு கிடந்தாவ…நான் என்ன செய்ய ‘’
‘’ஆமா,,அவுகளுக்கு வேலையென்ன,,சும்மாவே குதி போட்டு ஆடுவாக,,,இதுல கொட்டுஞ்ச் சேந்தா கேக்கவா வேணும்….நீங்கதாம்மா அவுக கூட காலந்தள்ளனும்…நான்லாம் ஒரு நிமிசம் இருந்துகிட மாட்டேன்’’ என்றாள் கணபதி ரகசியக் குரலில்….
‘’வாங்கிட்டு வந்த வரம்.மாட்டேன்னு சொல்லவா முடியும்,,..ராவெல்லாம் இருமலா இருக்குன்னீகளே,பரவாயில்லையா?’’
‘’ஆசுபத்திரிக்குப் போயி ஊசி போட்டுட்டு வந்தேன்,தலைய கீழ சாச்சாப் போதும் .ஒரே இருமலு..கொடலு வெளிய வந்து விழுந்திரும் போல…அப்டி இருந்துச்சு..இப்ப ,,கொஞ்சம் பரவால்ல…அது டாக்டரு வீட்டுல,ராத்திரி எட்டு மணிக்குத்தான் வேலைக்கு வரச் சொல்றாக.. இருட்டுன பொறவு தண்ணீக்குள்ள பொழங்குதம்லா….அது சேரலை என் ஒடம்புக்கு…’;
‘’அந்த முக்கு வீடுதான’’
‘’ஆமா…ஆமா’’
‘’அவுக வீட்டுல பகல்லியும் ஆள் இருக்காப்புல தெரியுது’’
‘’டாக்டர் கீழயும்,மகன் மாடியுமா குடியிருக்காக,,..மாமியா மருமகளுக்கு ஆகாது….அந்த பொண்ணு வேலைக்குப் போவுது…அதான் ராத்திரி வரச்சொல்லுது…’’
‘’கீழ மாமியார் வீட்டுல,சாவி குடுத்துட்டுப் போகாதா?’’
‘’ஆங்….அவுகளுக்குள்ள பேச்சு வார்த்தையே கெ டையாது…வீட்டு சாவியை குடுப்பாளாக்கும்….மருமகளுக்கு,மாமியா மேல அம்புட்டு மரியாத…மாமியாளுக்கு மருமக மேல அம்புட்டுப் பாசம்…என்னத்த சொல்ல…ஓலகம் பூராவும் இப்பிடித்தான் இருக்கு….வினை வெதச்சா,வினையைத்தான் அறுக்கணும்,,,அது யாருக்குப் புரியுது?..ஆனா பாருங்க,உங்க நல்ல மனசுக்கு.உங்களுக்கு நல்ல மருமகதான் வந்து வாய்ப்பா…வேனாலும் பாருங்களேன்…’’
‘’உங்க வாய் முகூர்த்தம்,பலிக்கட்டும்க்கா …எதிர்‌ வீட்டுல, நீங்க,இப்ப,வேலை பாக்கலியாக்கா ‘’ அடுப்பைத் துடைத்தபடியே,கேட்டாள் செல்லக்கிளி…
‘’நின்னு ரெண்டு நாளாய்ட்டே ….காலையில வேலைக்குப் போனா,விடியாம வந்து நிக்கியே..சோறு பொங்குனப்புறம்தான பாத்திரம் விழும்…அப்பிடின்னு துரத்தி விடுது….சரின்னுட்டு சாயங்காலமாப் போனா ,சட்டி பானையெல்லாம்.காஞ்சுகிட்டு,கெடக்கு..நீ என்ன ஆடி அசைஞ்சு வாறேன்னு சத்தம் போடுது…பார்த்தேன்..
..உன் சகவாசமே வேணாம்னு சொல்லாம கொள்ளாம வேலைய விட்டு நின்னுட்டேன்….ஒரு வீட்டுக்குப் போனமா,வேலைய முடிச்ச்மான்னு இருக்கணும்…இந்த நச்சரிப்பெல்லாம் நமக்கு ஆகாது,,,’’ என்று கணபதி சொல்லும் கதைகளைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தாள் செல்லக் கிளி…ஆடிப் பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்பார்கள்.
.அதற்குப் பதிலாக,அவரவர் மனங்களை பகிர்ந்து கொள்கிறார்கள் இந்தப் பெண்கள்…உடல் கழிவுகள் போல,மனக் கழிவுகளும்,அவ்வப்போது,வெளியேற்றபட வேண்டியவைதானே….இல்லாத பட்சத்தில்.அதுதான்.மன அழுத்தமாக உருவெடுக்கிறது….

Advertisement