Advertisement

அத்தியாயம் 2

அந்த காலை நேரத்தில் அரிசி மில்லில் கணக்கை பார்த்துக் கொண்டிருந்த இளவேந்தன், நேற்று அனுப்பிய லோடுக்கு எவ்வளவு பணம் இன்னும் வரவேண்டி இருந்தது. நெல்கொள்முதல் செய்த பணம் கொடுத்தாகிவிட்டதா என்று ஒவ்வொன்றாக ஆராய்ந்து கொண்டிருந்தவன் அன்றைய வேலைகளை வரிசைப்படுத்திக் கொண்டிருந்தான்.

நேற்றைய கணக்கு வழக்குகளை பார்த்து முடித்தவன், எழுந்து மில்லிற்குள் உலா வர ஆரம்பித்துவிட்டான். இது தினமும் அவன் செய்வது தான். தூசி  இருக்கும், உடை அழுக்காகிவிடும் என்று எதையும் யோசிக்காமல் சட்டையை மாற்றி கொண்டு உலாவர ஆரம்பித்துவிடுவான். அதில் அப்படி ஒரு உவகை அவனுக்கு.

தந்தையின் டிரான்ஸ்போர்ட் தொழிலை அண்ணன் பார்த்துக் கொள்ள, தன்னுடைய ஆசைக்காக இந்த அரிசி ஆலையை தன் பெரியப்பாவின் தூணையோடு துவங்கி இருந்தான் அவன். வீரபாண்டியன் பணத்தை கொடுத்ததுடன் சரி.அவன் மேல் இருக்கும் நம்பிக்கையில் இன்றுவரை அந்த பணத்தை பற்றியோ, அந்த ஆலையை பற்றியோ ஒரு வார்த்தை கூட அவனை கேட்டது கிடையாது.

இவனாக அழைத்து ஏதும் கூறினால் மகிழ்ச்சி கொள்பவர், தானாக அவனை ஏதும் கேட்கமாட்டார் என்பதோடு இப்படி செய் அப்படி செய் என்று அறிவுரையும் இருக்காது. இவன் பெரியப்பனிடம் பித்தாகி போக அதுவும் ஒரு காரணம். அப்பாவிடம் கேட்டிருந்தாலும் ஏற்பாடு செய்துகொடுத்திருப்பார் என்றாலும் ஏன் எதற்கென்று ஆயிரம் கேள்வி வந்திருக்கும் மேலும் டன் டன்னாக அறிவுரையும் கிடைத்திருக்கும். அந்த ஒரு காரணத்திற்காகவே தனிக்காட்டு ராஜாவாக மில்லை தொடங்கி அமர்ந்துவிட்டான் அவன்.

அதிலும் இந்த இரண்டு ஆண்டுகளில் சொல்லிக்கொள்ளும்படியாக அவன் வளர்ந்திருக்க அவன் தந்தைக்கே சற்று பெருமை தான். ஆனால் வெளிக்காட்டி கொள்ளமாட்டார் சுந்தரபாண்டியன

இப்போது தன் தினசரி வழக்கமாக மில்லை சுற்றி வந்தவன் ஆங்காங்கு கண்ணில்பட்ட விஷயங்களில் செய்ய வேண்டிய மாற்றங்களை மனதில் குறித்துக் கொண்டே வர, அந்த நேரம் அங்கே ஓடி வந்தான் அவனின் நண்பன் அன்பு. வேந்தனுக்கு அன்பே.

அவன் மூச்சிரைக்க ஓடி வந்து நிற்கவும் ” என்னடா அன்பே. நண்பனை பார்க்காம இருக்க முடியலையா. இப்படி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வந்து நிக்குற ” என்று வேந்தன் நக்கலாக கேட்க

வந்தவனோ ” டேய். உங்க அத்தை என்னடா நினைச்சிட்டு இருக்கு. காலையில விடியுங் காட்டியும் நம்ம தாமரை வீட்டு முன்னால வந்து நின்னு ஊரையே கூட்டிருச்சிடா. பாவம்டா அந்த புள்ளை”  என்று நிறுத்தவும்

” என்னடா சொல்ற. மங்கை அத்தையா வந்தது.என்ன பேசினாங்க தாமரையை  சொல்லுடா ” என்று அவன் சட்டை காலரை வேந்தன் பிடித்துவிட “எல்லாம் உன் அத்தைக்காரிதான். அவங்க மக உன்னை விரும்புதான். அது தெரிஞ்சு தாமரை உன்கூட பழகுறா.உன்னை மயக்கிட்டா. அப்படி இப்படின்னு இன்னும் என்னென்னவோ டா. காது கொடுத்து கேக்க கூட முடியல டா அது பேசினாவார்த்தை எல்லாம்.”

” பாவம்டா தாமரை. அவங்க அண்ணன் வரவும் அவனை கட்டிக்கிட்டு கதறி அழுதுடுச்சிடா. உன் அத்தை நேக்கா தாமரை வீட்ல வெடிகுண்டை போட்டுட்டு போய் இருக்கு. பார்த்துக்கோ ” என்று முழுதாக கூறி முடிக்க, கேட்டவனின் முகமோ ரத்தமென சிவந்து போனது.

வேந்தனுக்கு அந்த நேரம் மங்கையை கொன்று புதைக்கும் அளவுக்கு வெறியே கிளம்ப, “என்ன நினைச்சிட்டு இருக்காங்க எல்லாரும். யார் கல்யாணத்தை பத்தி யார் முடிவெடுக்கறது. அதுவும் அவ வீட்டுக்கு யாரை கேட்டு போனாங்க. இதை இப்படியே விடறதா  இல்ல. இன்னைக்கே ஒரு முடிவு பண்றேன் ” என்று முடிவெடுத்துக் கொண்டவன்

அன்புவிடம் ” இங்க நீ பார்த்துக்கோடா. நான் கொஞ்சம் வெளில போயிடு வந்திடுறேன் ” என்றவன் தன் புல்லட்டை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான். கிளம்புவதற்கு முன்பே தந்தைக்கும் அழைத்து சொல்லியிருக்க சுந்தரபாண்டியனும் மகன் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பின்பு தனக்கு அழைத்ததில் மகிழ்ந்தாலும், அவன் உடனே வருமாறு கூறியதில் என்னவோ ஏதோ என்று பதற்றத்துடனே வீட்டிற்கு கிளம்பினார் அவர்.

அவர் வருவதற்கு முன்பே வேந்தன் வீட்டை அடைந்திருக்க, செவ்வியின் கெட்ட நேரமாக அப்போது அவள் மட்டுமே வீட்டில் இருந்தாள். மதியழகி கல்லூரிக்கு சென்றிருக்க, ரங்கநாயகி கோவிலுக்கு சென்றிருந்தார். அவள் மதியத்திற்காக சமைத்துக் கொண்டிருக்க அந்த நேரம் வீட்டிற்குள் நுழைந்திருந்தான் வேந்தன். வரும்போதே அவன்

” அம்மா.. அம்மா ” என்று கத்திக் கொண்டே வரவும், செவ்வி சமையல் அறையிலிருந்து வெளியே வந்தவள் ” அத்தை கோவிலுக்கு போய் இருக்காங்க இளா. வர நேரம் தான் ” என்றவள் சமையல் அறைக்கு செல்ல திரும்பவும்

” ஹ்ம்ம். இப்படி வீட்ல யாரும் இல்லாம இருக்க நேரத்தை பயன்படுத்தி தான் இங்க நடக்கிறதெல்லாம் உங்க வீட்டுக்கு சொல்லிட்டு இருக்கீங்களா ” என்று கோபமாக கேட்கவும்

அவன் பேச ஆரம்பிக்கவும் நின்றவள் அவன் குற்றச்சாட்டில் கண்கள் கலங்கி போக “என்ன இளா சொல்ற. நான் என்ன சொன்னேன். நான் அவங்ககிட்ட பேசியே ரொம்ப நாள் ஆச்சு இளா” என்று பொறுமையாகவே கூற

அவனுக்கு அது புரிந்தால் தானே. ” நீங்க எதுவும் சொல்லாம தான் உங்க அம்மா தாமரை வீட்டு முன்னால போய் சண்டை போட்டுட்டு வந்தாங்களா. அது எப்படி எல்லாம் பண்ணிட்டு எனக்கு எதுவுமே தெரியாதுன்னு நின்னுடறிங்க நீங்க.”

” என்னவோ பண்ணிட்டு போங்க. ஆனா உங்க வேலை எல்லாம் உங்க புருஷனோட நிறுத்திக்கோங்க. என் வாழ்க்கையில தலையிட நீங்க யாரு. எனக்கும் தாமரைக்கும் நடுவுல உங்க வேலைய காட்ட நெனச்சிங்க உங்களையும் சும்மா விடமாட்டேன். உங்க அம்மாவையும் சும்மா விடமாட்டேன்” என்று அவன் பாட்டிற்கு கத்தி க்கொண்டிருக்க இத்தனை வார்த்தைக்கும் செவ்வி ஒன்றுமே பதில் பேசவில்லை.

அந்த நேரம் வீட்டிற்குள் நுழைந்த ரங்கநாயகி தான் அப்போதும் மகனிடம் சத்தம் போட்டார்.” என்னடா நினைச்சிட்டு இருக்க உன்மனசுல. வீட்ல யாரையும் மதிக்கிறது இல்ல. யார்கிட்டயும் முகம் கொடுத்து பேசுறது இல்லனு பார்த்தா, இன்னிக்கு அவ உன் அண்ணன் பொண்டாட்டி அந்த மரியாதை கூட அவளுக்கு கொடுக்காம உன் இஷ்டத்துக்கு பேசிட்டு போற. அவ இந்த வீடு மூத்த மருமக இளா. அவளுக்கான மரியாதையை நீ எப்பவும் கொடுத்து ஆகணும்”

” இனி ஒருமுறை நீ அவகிட்ட இப்படி மரியாதை இல்லாம பேசின, நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது பார்த்துக்கோ ” என்று அவர் அவனை சத்தம் போட

செவ்வி அவரின் கையை பிடித்தவள் ” அத்த. கோபப்படாதிங்க. அவர் பேசினதை நான் பெருசா எடுத்துக்கல அத்தை விடுங்க. என்னைப்பத்தி என் புருஷனுக்கும், என் மாமியாருக்கும் தெரியும். எனக்கு அது போதும் அத்தை. விடுங்க ” என்றவள்

இளாவின் புறம் திரும்பியவள் ” நான் இந்த வீட்டு விஷயங்களை ஒருநாளும் சக்தி,தாமரைகிட்ட கூட சொன்னதில்லை இளா. அப்படி இருக்க எப்படி என் அம்மாகிட்ட சொல்லுவேன். நான் ஒருவார்த்தை கூட என் அம்மாகிட்ட பேசல. அப்படியும் நீ நம்பலைன்னா என் போன் அங்க டேபிள்ள இருக்கு நீயே எடுத்து பார்த்துக்கோ. பாஸ்வோர்ட் லாம் எதுவும் இல்ல” என்றவள் அவள்பட்டிற்கு சமையல் அறைக்கு சென்று தன் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தாள்.

அவள் கண்ணில் கண்ணீர் வழிய தயாராக இருக்க, உனக்கு இப்போது நேரமில்லை என்று கூறி அதை உள்ளிழுத்து கொண்டவள் அமைதியாக சமையலை கவனித்தாள்.

இங்கு கூடத்தில் நின்றிருந்த ரங்கநாயகி எதுவும் பேசாமல் மகனை முறைத்து கொண்டிருக்க,சரியாக அதே நேரம் வீட்டிற்குள் நுழைந்தார் சுந்தரபாண்டியன்.

வந்தவர் நேராக மகனிடம் ” என்ன தம்பி உடனே வரச்சொல்லியிருந்தியே. என்னப்பா என்ன விஷயம் ” என்று கேட்க

” ஏன் என்ன நடந்ததுன்னு உங்களுக்கு தெரியாதா.” என்று அவன் அவரையே கேட்க அவர் டவுனிற்கு சென்றிருந்தவர் அப்போதுதான் திரும்பி இருக்க, இவன் கேள்வியில் முழித்தார் அவர். ரங்கநாயகி தன் கணவர் முழிப்பதில் இருந்தே அவருக்கு தெரியவில்லை என்பதை புரிந்து கொண்டவர்

” நீதான அப்பாவை வர சொல்லி இருக்க. நீயே சொல்லு என்ன விஷயம்னு. அதை விட்டுட்டு அவரை ஏன் கேள்வி கேட்கிற ” என்று மீண்டும் கத்தவும்

” என்ன நாயகி என்ன ஆச்சு. என்ன விஷயம் ” என்று அவர் மனைவியிடம் கேட்க

” உங்க மகன் இன்னும் என்ன விஷயம்னே சொல்லலைங்க ” என்று அவர் கூறவும், சுந்தரபாண்டியன் மகனிடம் திரும்பியவர் ” என்ன தம்பி என்ன விஷயம். ஏன் இவ்வளவு கோபமா இருக்க ” என்று கேட்க

இளா ஒரு முறைப்புடனே மங்கை செய்த காரியத்தை தந்தையிடம் கூறி முடிக்க, சுந்தரபாண்டியன் கொதித்துப் போனார். ” இவளுக்கு தங்கை தங்கை ன்னு இடம் கொடுத்தது தப்பா போச்சு. மக மனசு மாறுற வரைக்கும் பொறுத்துக்கோங்க அண்ணே. அவளுக்கு ஒருவழி பண்ணிட்றேன் அதுக்குப்பிறகு நீங்க இளாவுக்கு யாரை வேணும்னாலும் பேசி முடிங்கன்னு கால்ல விழாத குறையா கேட்டுக்கிட்டாளே ன்னு நான் அமைதியா இருந்தா இவ என் பிள்ளை வாழ்க்கைக்கே குழி பறிப்பாளா ” என்று நினைத்தவர்

ரங்கநாயகியிடம் ” நாயகி கெளம்பு. என் மருமகளை போய் பார்த்துட்டு வருவோம். அவ கலங்கி போய் இருப்பா. எதுக்கும் பயப்படாத ஆத்தா. இந்த மாமன் இருக்கேன்னு சொல்லணும் கெளம்பு ” என்றவர் இளாவிடம்

” அப்பா பார்த்துக்கறேன்பா. நீ கெளம்பு ” என்றுவிட, அவனோ

” தாமரை வீட்ல பேசுறது இருக்கட்டும்.அவளை தப்பா பேசின உங்க தங்கச்சிய என்ன பண்ண போறீங்க ” என்று கேட்க

” மொதல்ல என் மருமகளுக்கு பூ வச்சிட்டு வந்து, அவளுக்கு என் மாப்பிளை கிட்ட சொல்லி மந்திரிக்க சொல்றேன். என்ன செய்யனும்னு எனக்கு தெரியும் நான் பேசி முடிக்கிறேன். நீ கெளம்பு ” என்று அவர் கூறிவிட , அதற்குமேல் தந்தையிடம் வாதம் செய்யமல் கிளம்பி இருந்தான் மகன்.

அவன் கிளம்பிய சிறிது நேரத்தில் செவ்வி இருவருக்கும் உணவை எடுத்துவைக்க சாப்பிட்டு முடித்த சுந்தரபாண்டியனும், ரங்கநாயகியும் மாணிக்கத்தின் வீட்டிற்கு கிளம்ப அவர்கள் கொண்டுசெல்ல வேண்டிய பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் செவ்வி.அவளும் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாள் தானே.

இவர்கள் கிளம்பி தாமரையின் வீட்டுக்கு செல்ல, அந்த நேரம்தான் மாணிக்கமும், தனஞ்செயனும் வீட்டிற்கு வந்திருந்தனர். காலையில் நடந்த களேபரங்களால் தாமரை அழுதுகொண்டே இருக்க, விசாலம் ஒருவழியாக அவளை அப்போதுதான் சமாதானம் செய்திருந்தவர் சிறிது உணவையும் அவளுக்கு ஊட்டி உறங்க வைத்திருந்தார்.

மாணிக்கம் காலையில் இந்த பிரச்சனை நடந்த சிறிது நேரத்தில் மகள் அழுவதை காண முடியாமல் வெளியேறி இருந்தவர் நேராக சென்று வேதமாணிக்கத்தை சந்தித்து இருக்க அவரும் தான் பார்த்துக் கொள்வதாக கூறி இருந்தார். தனஞ்செயனும் அவனுக்கு தெரிந்த வழியில் சில வேலைகளை செய்திருக்க தந்தை மகன் இருவரும் சற்று நேரத்திற்கு முன்பு தான் வீட்டிற்கு வந்திருந்தனர்.

இவர்கள் வந்த சிறிது நேரத்தில் சுந்தரபாண்டியனும் ரங்கநாயகியும் வீட்டிற்குள் நுழைய விசாலம் வாங்க அண்ணே. வா ரங்கு” என்று அவர்களை பாசமாக வரவேற்க

ரங்கநாயகி விசாலத்தின் கைகளை பிடித்துக் கொண்டவர் கண்ணீர் விட சுந்தரபாண்டியன் மணிகத்திடம் சென்று அமர்ந்திருந்தார். விசாலம் இருவருக்கும் தண்ணீர் கொண்டுவந்து கொடுக்கவும், னால விசாரிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்க தனஞ்செயன் இவங்க எதுக்கு இப்போ வந்திருக்காங்க என்று யோசிக்க ஆரம்பித்திருந்தான்.அதுவும் காலையில் மங்கை வந்து கத்திவிட்டு சென்றிருக்க இப்போது இவர்களும் வந்திருக்கவே என்ன விஷயமாக இருக்கும் என்று அவன் கணக்கிட தொடங்க

அவன் யோசனைக்கு ஏற்றாற்போல் சுந்தரபாண்டியன் பேச்சை ஆரம்பித்தார்.

” மாணிக்கம் என் மகன் வேந்தனுக்கு நம்ம தாமரையை பொண்ணு கேட்டு வந்திருக்கேன். அவனுக்கு தாமரையை ரொம்ப பிடிச்சிருக்கு. நல்லா வச்சிருப்பான். என் மகன்ங்கிறதுக்காக வேண்டாம். நீ ஊருக்குள்ள விசாரிச்சிட்டு கூட பதில் சொல்லு” என்று உடைத்து பேசிவிட

மாணிக்கம் ” சுந்தரம் உனக்கு தெரியாதது இல்ல. என் மக வாழ்க்கை நிம்மதியா இருக்கணும்னு தான் நானும் ஆசைப்படறேன். ஆனா உன் மகன் ஆசைப்பட்டதுக்கே என் மக மயக்கிட்டான்னு பழி போட்டுட்டா உன் தங்கச்சி. இன்னும் சம்பந்தம் வேற பேசினா என் மகளை வார்த்தையாலேயே வதைச்சிப்புடுவா. என் மக வாழ்க்கை யாரோட வயித்தெறிச்சல்லயும் தொடங்க வேண்டாம்பா. அதோட அந்த மங்கையோட பொண்ணும் என் மக போல தானே அவளுக்கும் ஆசை இருக்கும்போது இப்படி ஒரு பேச்சு வேண்டாமே ” என்றுவிட

சுந்தரம் ஏதோ பேசவரவும் ” உனக்கு என்னை புரியும் சுந்தரம். நீயும் ஒரு மகளை வச்சிருக்க. என் பொண்ணு வாழ்க்கை இப்படி பிரச்சனையா தொடங்க வேண்டாமே ” என்று அவர்கூறிவிட

அதற்குமேல் எதுவும் பேசமுடியாமல் அங்கிருந்து எழுந்துவிட்டார் சுந்தரபாண்டியன்.

Advertisement