Advertisement

அத்தியாயம் 26

 

                   வேதமாணிக்கத்தின் தோட்டத்தில் பெரிய பெரிய பந்தல்கள் போடப்பட்டு சுற்றிலும் தென்னங்கீற்றுகளால் தட்டி போன்று தடுத்திருக்க, அங்கு விருந்துக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. மாப்பிளைகளும், மணப்பெண்களும் அங்கிருந்த அவர்களின் பண்ணைவீட்டில் அமர்த்தப்பட்டிருக்க, வெளியே உறவுகள் வருபவர்களை வரவேற்று கவனித்துக் கொண்டிருந்தனர்.

                    தொழித்துறை, நட்புவட்டம், அறிந்தவர், தெரிந்தவர் என்று அனைவரும் திருமணத்திற்கே வந்து சென்றிருக்க, இந்த விருந்து முற்றிலும் உறவினர்களுக்காக மட்டுமே. மாப்பிள்ளை வீட்டிலிருந்தே இந்த விருந்தை ஏற்பாடு செய்வது அவர்களின் வழக்கமாக இருக்க, இங்கே மாப்பிள்ளை வீடு யார் என எப்படி பிரிப்பது ? எனவே பொதுவான இடமாக வேதமாணிக்கத்தின் பண்ணைவீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் வீரபாண்டியன்.                          

                                  மாணிக்கத்தின் வற்புறுத்தலுக்காக அவரிடமும் ஒரு தொகையை வாங்கி கொண்டிருக்க, வேந்தனையும், தனஞ்செயனையும் இதில் பேசவே விடவில்லை பெரியவர்கள். அவர்களே அனைத்து வேலைகளையும் முடித்திருக்க, வீரபாண்டியனுக்கு விடுமுறை முடிவதால் அவர் சென்னைக்கு கிளம்புவதற்கு முன் இந்த விருந்தை முடிக்கவேண்டும் என்று திருமணத்திற்கு அடுத்தநாளே ஏற்பாடு செய்திருந்தனர் இதை.             

             மதிமாறன் அனைத்து வேலைகளையும் முன்னின்று கவனித்துக் கொள்ள, சுந்தரபாண்டியன் வரும் உறவுகளை விசாரித்து கொண்டிருந்தார். வீரபாண்டியன் வேதமாணிக்கத்துடன் நின்று கொண்டவர் விருந்தை கவனித்துக் கொள்ள, இவர்கள் இருவரும் இருப்பதால் பந்தி எந்தவித சச்சரவும் இல்லாமல் அமைதியாகவே நடந்து கொண்டிருந்தது.

 

                     சக்தியும், விசாலமும் சிவகாமியுடன் சமையல் வேலைகளை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்க, செவ்விக்கு மசக்கை படுத்தி எடுப்பதால் அவள் வீட்டிலிருந்து வெளியே வரவே இல்லை. மதி மற்றும் தாமரையுடன் அமர்ந்து கொண்டவள் அவர்களுடனே இருந்துகொண்டாள்.

                       அந்த வீட்டின் மாடியில் இருந்த ஒரே அறையில் ஆதித்யன் ஓய்வில் இருக்க, அவன் கீழே இறங்கவே கூடாது என்று சக்தியின் உத்தரவு. அவன் காயங்கள் ரணமாகவே இருக்க அவனாலும் எரிச்சல் தாங்க முடியாததால் அவளை எதிர்த்து பேசவில்லை அவன். சக்தி கொடுத்த உணவை உண்டு மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்தவன் கீழே நடக்கும் விருந்தை பற்றி அலட்டிக்கொள்ளாமல் உறங்கி விட்டிருந்தான்.

                       கீழே வரவேற்பறையில் தாமரை, வேந்தன், தனஞ்செயன், மதியழகி, செவ்வி என்று அனைவரும் கூடி இருக்க அந்த நேரம் தான் அன்பு  அவர்களுக்கு தோட்டத்தில் பறித்த இளநீர்களை எடுத்து வந்து வெட்டிக்கொடுக்க, மதிமாறன் சக்தியை கையோடு கூட்டி வந்திருந்தான்.

                    காலையிலிருந்து அவள் நிற்காமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டே இருக்க பார்த்தவன் அவளை இழுத்து வந்திருந்தான். இப்போது தாமரையின் அருகில் அவளை அமர்த்தியவன் செவ்வியிடம் “கால்ல சக்கரத்தை கட்டின மாதிரி ஓடிட்டே இருக்கு காலையில இருந்து. இங்கேயே உட்கார வை” என்று கூறிவிட்டு திரும்ப, அவன் கையை பிடித்து இழுத்த வேந்தன் அவனையும் உடன் அமர்த்திக்கொள்ள, அவனோ அலறியவனாக

                 “டேய், அங்க பந்தி விசாரிக்க தாத்தாவும், பெரியப்பாவும் மட்டும் நிற்கிறாங்க. நான் போகணும் விடுடா ” என்று கூற

                   “உன் தாத்தாவும், பெரியப்பாவும் ரெண்டு ஊருக்கு சமம். அதெல்லாம் நல்லாவே விசாரிப்பாங்க, நீ உட்காருடா. என்னமோ இவன் மட்டும்தான் இருக்க மாதிரி ” என்று அவனை மிரட்டியவன் அவனிடமும் ஒரு இளநியை கொடுக்க, இருந்த களைப்பில் அவனும் மறுக்காமல் வாங்கி கொண்டான்.

                   இளமாறன் அதுவரை மதியிடம் இருந்தவன் இப்போது தந்தையிடம் வந்து நிற்க, வேந்தன் அவனை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு அவனுக்கும் கொடுக்க, இளநீரின் சுவையில் நாக்கைத் தட்டிக்கொண்டு சப்புக் கொட்டிக் கொண்டிருந்தான் அவன்.

           இளநீரை குடித்து முடித்ததும் மதிமாறன் எழுந்து கொள்ள, வேந்தனும் உடன் எழுந்துவிட்டான். எங்கே என்பதுபோல் பார்த்த மதியிடம் ” எவ்ளோ நேரம்டா இங்கேயே உட்கார்த்திட்டு இருக்கறது. நானும் வரேன் வா ” என்று கூற, தனஞ்செயனும் உடன் எழுந்து கொண்டான்.

                        மூவரும் ஒன்றாக வெளியில்வர அதுவும் வேந்தன் வழக்கம்போல் எதுவோ சொல்ல மதியும், தனாவும் சிரித்துக் கொண்டே வந்தனர் அவன் பேச்சில். தூர இருந்து இவர்களை பார்த்த வீரபாண்டியனுக்கு அத்தனை நிறைவாக இருக்க, தம்பியிடமும் இவர்களை சுட்டிக் காட்டினார் அவர்.

                இவர்கள் வெளியில் வந்ததும் வேந்தனின் மாமன் முறையிலிருந்த ஒருவர்  “என்னய்யா மாப்ளே, என் மகளோட வருவேன்னு பார்த்தா, அவ அண்ணனோட சுத்திட்டு இருக்க ” என்று கேட்க

                வேந்தனோ  “என்ன பண்றது மாமா, எங்க வீட்டு மாப்பிளை ஆகிட்டாரே. அதோட நீங்க யாரும் அவரை சரியா கவனிக்கலன்னு சொல்லிடக் கூடாது இல்ல, அதான் கூடவே சுத்திட்டு இருக்கேன் ” என்றுவிட

             கூட நின்ற மற்றொருவர் “அதெப்படி அப்படி சொல்லிடுவாரு, அவரு மாப்பிள்ளை ன்னா நீயும் மாப்பிள்ளை தானே. நீ சொல்லமாட்டியா உன்னை கவனிக்கல ன்னு” என்று  இடக்காக கேட்க

             “அதெப்படி சொல்லுவேன். என் மச்சான் தான் என்கூடவே சுத்திட்டு இருக்காரே, அப்புறம் எப்படி நான் சொல்லுவேன் ” என்று விட

                     எதிரில் நின்றவர்  “அதானே நீ ஏன் சொல்லப்போற. பாண்டியனுக்கு இனி மூத்தவன் தான் கஞ்சி ஊத்தணும் போலவே.” என்று விடாமல் பேச

                             “எப்படி உங்க புள்ளை உங்களுக்கு ஊத்துறானே அப்படியா. ஏன் சித்தப்பு ” என்று வேந்தன் சட்டென்று கேட்டுவிட அவன் அப்படி கேட்பானென்று எதிர்பார்க்காதவர் முழிக்க, கூட நின்றிருந்த இவனின் மாமா “ஏதோ மாமனும், மச்சானும் ஒண்ணா வராங்களேன்னு சும்மா வம்பிழுத்தா என் தங்கச்சி புள்ளைய கஞ்சி ஊத்த மாட்டான்னு சொல்லுவியா நீ. இப்போ கேட்டான்ல நறுக்கா ” என்று அவரும் உடன் சேர்ந்து கொள்ள அந்த மனிதருக்கு முகத்தை எங்கு கொண்டு வைப்பது என்றே தெரியவில்லை.

                                      “போய் பொறுப்பா பந்தியை பாரு சித்தப்பு. உன் புள்ள கல்யாணம், நீ பார்க்காம யாரு பார்ப்பா. அந்த பொறுப்பு கூட இல்லாம இங்க நின்னு ஊர் நியாயம் பேசிட்டு இருக்கீரு.போம் ” என்று அவனே விரட்டிவிட, இவன் மாமாவும் சிரித்துக்கொண்டே நகர அந்த மனிதர் விட்டால் போதும் என்று நகர்ந்துவிட்டார்.

                      இது போல ஆரம்பிக்கும் சில பேச்சு வார்த்தைகள் சில பல சமயங்களில் வெட்டு குத்தில் கூட முடிவது உண்டு.அதனைக்கொண்டே அவரை மேலே பேசவிடாமல் அவர் வாயை அடைத்து வேந்தன் அனுப்பி இருக்க, உடன் நின்றிருந்த தனஞ்செயனோ அவன் மச்சான் என்றதிலேயே இவன் நல்லவனா ? கெட்டவனா ?? என்று யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தான்.

                        பின்னே நேற்று வரை ஏன் இன்று கொஞ்ச நேரத்திற்கு முன்புவரை கூட திரும்பிக் கூட பார்க்காதவன் இப்போது யாரோ ஒருவரிடம் மச்சான் என்று விட்டு கொடுக்காமல் பேசினால் அவனும் தான் என்ன செய்வான்.

                        ஒருவழியாக கூட்டம் சற்று ஓயவும் வீட்டு பெரியவர்களை அமரவைத்து மதிமாறன், சக்தி,அன்பு மூவரும் பரிமாற அவர்களுக்குள் பேசிக்கொண்டே அனைவரும் உண்டு முடித்தனர். இத்தனை பெரிய விருந்தில் ஊரே வந்து கலந்திருக்க, அதனை பெரும் குடும்பம் குடும்பமாக வேறு வந்து சென்றிருக்க தனியாக வந்திருந்த ஒரே ஆள் கந்தகுரு தான்.

                ஆனால் அதற்காக அவர் வருத்தப்பட்டதாகவும் தெரியவில்லை. காலையில் வந்தது முதல் குடும்பத்து ஆளாக சுந்தரபாண்டியனுடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்தவர் அவர் பாட்டிற்கு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். சக்தி கூட முதலில் அவரை ஆராய்வது போல பார்த்திருந்தவள் அவர் இயல்பாக இருக்கவும்தான் அடுத்த வேலையை பார்க்க சென்றிருந்தாள்.

 

                          இப்போதும் வீரபாண்டியன் முதலில் அமர அடுத்ததாக வேதமாணிக்கம் அமர்ந்தவர் மகனை தனக்கு அருகில் அமரவைத்துக் கொள்ள அடுத்ததாக சுந்தரபாண்டியனும்,மாணிக்கமும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு இளையவர்கள் பார்த்து பரிமாற திருப்தியாக உண்டு முடித்த ஒருவரின் மனத்திலும் நந்தினியை பற்றியோ, மங்கையை பற்றியோ எந்த நினைவுமில்லை.

                         இவர்கள் உண்டு முடிக்கவும் சக்தி ஆதித்யனுக்கான உணவை கையில் எடுத்துக் கொண்டு மாடி ஏற, அவளை மடக்கிய தாமரை இருமுவது போல் லேசா கையை குவித்து சத்தம் கொடுக்க, எப்போதும் நாணுபவளோ “ஹேய் என்ன இன்னிக்கு நீதான் புதுப்பொண்ணு. என்னை வம்பிழுக்க நீ இன்னும் கொஞ்சம் வளரனுமே தாமரைக்குட்டி.” என்று கூற

             அதில் கடுப்பானவள் “இன்னிக்கு நாந்தான்டி புதுப்பொண்ணு, உனக்கு அது நியாபகம் இருக்கே அதுவரைக்கும் சந்தோஷம் தான். அது எப்படி டி கல்யாணமாகி நாலு வருஷம் முடியப்போகுது,  இன்னும்கூட புதுப்பொண்ணு போலவே வெட்கப்படற, அதுவும் ஆதி அண்ணாவும் உன் பின்னாடியே சுத்திட்டு இருக்காரு. எப்படிடி. எனக்கு ஏதாவது கொஞ்சம் டிப்ஸ் கொடேன்.” என்று கூற

 

            சக்தி முறைத்தவள்  “ஹான், உன்  அண்ணனை என் முந்தனையிலா முடிச்சு வச்சிருக்கேன். பின்னாடியே சுத்தறாராம் போடி.” என்றவள் திரும்ப அதற்குள் செவ்வி  “ஓஹ் நீ இல்லன்னு வேற சொல்வியா ” என்று கேட்க

                 சக்தியோ “ஏண்டி என்னை வம்பிழுக்கிற. இன்னிக்கு கல்யாணப்பொண்ணு அவளா ? நானா?. அதோட நீ என்ன அவளுக்கு சப்போர்ட் பண்ற. நீ என்ன சொக்குபொடி போட்டியோ மதி அண்ணா இன்னிக்கு வரைக்கும் மந்திரிச்சு விட்ட மாதிரியே தான் சுத்துது. இதுல ரெண்டாவதும் வந்தாச்சு,ஆனா அவரோட பார்வை மாறவே இல்லை.”

 

                “அடுத்து நீ நானாவது கல்யாணம் ஆகி மூணு வருஷத்துக்கு பிறகு தான் உன் அண்ணனை சுத்த வைக்கிறேன்.அதுலயும் பாதி நேரம் நான்தான் அவர் பின்னாடி சுத்திட்டு கிடக்கணும் அதுவேற. ஆனா வேந்தன் எப்படி எதுவுமே இல்லாம தாமரை மணாளனாவே சுத்திட்டு இருக்கு.”

               “அதுவும் கிட்டத்தட்ட நாலு வருஷமா, இப்போ சொல்லு செவ்வி. நான் இவ அண்ணனை மயக்கி வச்சிருக்கேனா இல்ல இவ உன் கொழுந்தனை மயக்கி வச்சிருக்காளா. நீ இப்போவே கவனமா இருக்கணும்டி. இல்ல வேந்தனை மாதிரியே உன் மாமியாரையும் இவ கைக்குள்ள போட்டுடுவா. அப்புறம் நீ அண்ணின்னு கண்ணை கசக்கிட்டு என்கிட்டே தான் வரணும். பார்த்துக்கோ. அதுக்குதான் சொல்றேன், இப்போவே இவளை உன் கைக்குள்ள வச்சிக்கோ.” என்று செவ்விக்கு பாடமெடுக்க  

                     தாமரை அவள் காதை பிடித்து திருகியவள் “நான் உன்னை வம்பிழுத்தா எங்களுக்குள்ளவா சிண்டு முடிஞ்சி விடற. ஆத்தி, பெரிய ஆளா ஆகிட்டா செவ்வி இவ. ஆதி அண்ணா கூட சேர்ந்து பேச கத்துக்கிட்டா இல்ல.” என்று செவ்வியிடம் கேட்க

                    அவளோ ” கண்டிப்பா, என் அண்ணனோட ட்ரைனிங் தான் கண்ணு முன்னாடி தெரியுதே. இல்லன்னா நம்மை விட்டுட்டு படியேறுவாளா இவ. அதுவும் சாப்பாடு தட்டு வேற. என்ன ஒரு புத்திசாலித்தனம் பார்த்தியா ? என்று அவளும் சேர்ந்து கொள்ள

                       “அடியேய் விடுங்கடி. சத்தியமா அவருக்கு சாப்பாடு கொடுக்கதாண்டி போறேன்.” என்று அவள் அழாத குறையாக சொல்ல

               “உன்னை நம்ப முடியாது. எங்க அண்ணனுக்கு நாங்க சாப்பாடு கொடுக்கிறோம் தட்டை கொண்டா ” என்று விடாப்பிடியாக அவர்கள் இருவரும் நிற்க,

                 இவர்களுக்கு பின்னால் “என்ன நடக்குது இங்க ” என்று வந்து நின்றனர் வேந்தனும், மதிமாறனும். சக்தி அவர்கள் இருவரையும் பார்த்தவள் பெண்களை நக்கலாக பார்த்துக் கொண்டே “ஹப்பா வேந்தா வந்துட்டியா. உன் பொண்டாட்டி ஒரே அடம், என் புருஷனுக்கு நான் தான் சோறு ஊட்டி விடுவேன்ன்னு. நீ அவளை பார்த்துக்கோ,” என்றவள்  “என்ன தாமரை சரியாய் சொல்லிட்டேன் உன் புருஷன்கிட்ட” என்றுவிட்டு

 

                            மதியிடம் திரும்பியவள்  “என்ன அண்ணா நீங்க, மாசமா இருக்க பொண்ணு அவளை சாப்பிட வைக்காம எங்க போனீங்க. உங்களுக்கு பொறுப்பே இல்லன்னு என்கிட்ட பொலம்பிட்டு இருக்கா பாருங்க, அவளை சாப்பிட வைங்க ” என்று வேகமாக சொன்னவள் அவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வேகமாக மாடிப்படிகளில் ஏறிவிட்டாள்.

                             மதி செவ்வியை பார்க்க “அவளை ஓட்டிட்டு இருந்தோம் நாங்க, அதான் உங்ககிட்ட கோர்த்துவிட்டுட்டு போறா. வாங்க நீங்க ” என்று முன்னால் நடக்க மதி அவள் பின்னால் சென்றுவிட்டான். அடுத்து தாமரையும் நகர முற்பட வேந்தன் அவள் கையை பிடித்தவன் மாடிப்படியில் வளைவில் அவளை மறைவாக நிறுத்திவிட பதறிப்போனாள் அவள்.

                          அவள் முகத்தை பார்த்தவன் நிதானமாக அவளை நெருங்க, “ஐயோ இளா, சத்தியமா நான் எதுவுமே சொல்லல. அவ சும்மா ஏதோ ….” என்று கண்களை இறுக்கி மூடிக்கொண்டு சொல்ல

                  ” என்னை உன் பின்னாடி சுத்த வைக்கணும் ன்னு என்கிட்டே கேட்டாலே ஐடியா கொடுத்திருப்பேனே, எதுக்கு இதெல்லாம் சக்திகிட்ட கேட்டுட்டு ” என்று அவன் அடுத்த வார்த்தையை கூற, முகம் வெகுவாக சிவந்து போனது தாமரைக்கு. “ஐயோ, எல்லாத்தையும் கேட்டுட்டானா ” என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள் வெளியே அசையாமல் நிற்க, அவள் இடையில் கைகொடுத்து தன்னிடம் இழுத்துக் கொண்டவன் அவளைப்பார்க்க அதிர்ந்து போய் கண்களை திறந்திருந்தாள் அவள்.

                     அவள் பார்வையில் புருவம் உயர்த்தியவன் என்னவென்பது போல் பார்க்க, அவள் மறுப்பாக தலையசைக்கவும், அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவன் “நேத்து என்ன சொன்ன, தெளிய வைக்கணுமா…. ” என்று இழுத்தவன் “இன்னிக்கு ராத்திரி முடிச்சிடுவோம்” என்றுவிட்டு அவள் மறுகன்னத்திலும் முத்தமிட்டு ஒன்றுமே நடக்காதது போல் அங்கிருந்து விலகி விட்டான்.

                                  நேற்று இரவு தாமரை அவனை அணைத்துக் கொண்டாலும், அவள் பயத்தை உணர்ந்தவன் அதற்குமேல் முன்னேறவில்லை. இரவு உறங்கும்போது கூட அவளை வெறுமனே அவன் அணைத்து கொள்ள தாமரை அவன் முகம் பார்க்கவும் “நாளைக்கு ராத்திரியே வராதா, யோசிக்காம தூங்குடி பொண்டாட்டி ” என்று அவள் நெற்றியில் முட்டியவன் அவளை இறுக அணைத்து கொண்டு உறங்கிவிட்டான்.

                            இன்று அவன் அதை குறிப்பிட்டு சொல்லி செல்ல, அந்த இடத்திலேயே அசையாமல் நின்றிருந்தாள் அவள். அவன் செய்து வைத்த வேலையில்  முகம் வேறு ஏகத்திற்கும் சிவந்து கிடக்க, யாரையும் ஏறெடுத்து பார்க்காமல் அமைதியாக சென்று அமர்ந்துவிட்டாள் அவள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

           

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement