Advertisement

“எல்லாமேவா? எங்க அம்மாவை சந்தோஷப்படுத்தினது கூட மனிதாபிமானம்தான்? உனக்கு என்னை பிடிச்சிருந்ததே, ரூல்ஸ் மாத்திக்கலாம்னு பேசினமே அதுகூட மனிதாபிமானம்தானா?”
இப்படி வாத்தியார் வைவா கேள்விகள் கேட்பதுபோல குடைந்து கேட்கும் வினோத்தை எப்படி சமாளிப்பது என்று புரியவில்லை வானதிக்கு.
“நாந்தான் சொன்னேனே வினோத். நட்புன்ற எல்லைக் கோட்டைத் தாண்டினா என் எதிர்பார்ப்புகள் வேற மாதிரி இருக்கும். அப்ப என்னால நிறைய விஷயம் கடந்து வரமுடியாதுன்னு. அதையே நீங்க ஒரு வாட்டிக்கு இரண்டா ப்ரூவ் பண்ணிட்டீங்க. அதனாலதான் பிரியலாம்னு சொல்றேன்.”
“வானதி… உன் பிறந்த நாளை தெரிஞ்சிக்கலைங்கறது தப்புதான், அதுக்காக டைவர்ஸ் வரை போவியா? அன்னிக்கு நான் எமோஷனலா உடைஞ்சிருந்தேன். உன் நெருக்கம், என்னோட ஆறுதலை வேற விதமா எடுத்துக்க தோணியிருக்குன்னு நினைக்கிறேன். நான் வெறுமனே ரியாக்ட்தான் செஞ்சேன், யோசிக்கலை. ஆனால் உனக்கு அது நியாயமேயில்லைன்றது நானும் ஒத்துக்கறேன். நான் மேல தப்பு செய்திடாம நிறுத்தின. ஆனா இதுக்கு ஏன் பிரியணும்? நான் அட்ஜட் ஆக டைம் தரமாட்டியா? அவசரமில்லை, மெதுவா போகலாம்னு சொன்னதான?”
முயன்று தன்னை வானதி கட்டுப்படுத்துவது தெரிந்தது. “ வினோத்… நீங்க மெதுவா டைம் எடுத்து யோசிக்கறதுக்குள்ள, நான் ….நான் உடைஞ்சிடுவேன்… வேணாம்… எனக்கு வேணாம்….”, என்றாள் கையை ஆட்டி.
அவள் கையில் இருந்த காலி காபி கோப்பையை வாங்கி வைத்தவன், “எது உன்னை இவ்வளவு டிஸ்டர்ப் பண்ணுது வானதி… எனக்கு புரியலை. என்ன நான் செய்தது உன்னை ப்ரேக் பண்ணும்னு நினைக்கற?  நான் உன்னை தேடினப்பவும்,  நீ தெளிவாத்தான இருந்த?”
அவள் கை பிடித்து, தன்னை பார்க்கவைத்துக் கேட்டான் வினோத். “அதுதான்… அப்ப என் மனசு பூரா  நீங்க தேடுற ஆறுதலை குடுக்கத்தான் விரும்புச்சு…. இப்படியா… இந்த மாதிரி ஒரு சூழ்னிலையிலா நான் உங்களை சேரணும்? மறு நாள் என்னால என்னை ஃபேஸ் பண்ண முடியுமா? “, கண்ணில் கண்ணீர் வழிய வேதனையோடு வானதி கேட்டதில் வலி வினோத்திற்கும் சமமாக இருந்தது.
“இல்லை…  நீ தடுத்தது கரெக்ட்தான். நான் ரொம்ப சுயனலமா இருந்துட்டேன், பல விஷயத்துல. தப்பு என் மேலதான்.”, வினோத் சொல்லவும்,
“ஆனா, அதுக்கெல்லாம் நாந்தான் விலை குடுக்கறேன்…. என்னால முடியாது வினோத்… நான் ரொம்ப போராடி என்னை மீட்டிருக்கேன். அதை திரும்ப தொலைக்கமாட்டேன். “, அவன் கையை விடுத்து எழுந்து ஜன்னலருகில் சென்றாள்.  அங்கே பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை என்றாலும், வானதியால் அவன் அருகே இருக்க முடியவில்லை.
“வானதி…. நீ தனியா போராட வேண்டாம். என்ன பிரச்சனைன்னு சொல்லு. நானும் இருக்கேன். உன்னை விரும்பித்தான் உன்னோட வாழணும்னு நினைக்கறேன்.”, வினோத் கேட்கவும்,
“அது எதுக்கு? நான் என் வழியில போனா, தானே சரியாகிடுவேன்.”, விதண்டாவாதமாகக் கூறுபவளை என்ன செய்வது என்று விழித்தவன், ‘இருடா… இன்னும் அவ முதல் கேள்விக்கே பதில் சொல்லலை…. வேற மாதிரி அட்டாக் பண்ணுவோம்…’, என்று நினைத்தவன்,
“வானதி… நீ ஏன் கல்யாணம் வேண்டாம்னு தள்ளிப்போட்ட?”, என்று கேட்டான்.
“இப்ப எதுக்கு அதெல்லாம்….?”
“நேத்து வாசு கிட்ட பேசும்போது நீ சிங்கப்பூர்ல இருக்கும் போதே உனக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சதா சொன்னார், அப்பவெல்லாம் நீ கல்யாணம் வேண்டாம்னு சொல்லலை. மதன் கூட நீ ஃப்ரெண்டானதும், ஒரு வேளை அவரை கைகாட்டுவியோன்னு கூட நினைச்சிருக்காங்க. ஆனா அப்படியில்லாம, ஒரு சில வரன் கிட்ட பேசியும் இருக்க.  எப்ப கல்யாணம் வேண்டாம்ன்னு முடிவு செஞ்ச?”
“இந்த அண்ணாக்கு வெவஸ்தையே இல்லை…. இப்ப எதுக்கு உங்ககிட்ட பழசையெல்லாம் பேசணும்?”, பல்லைக் கடித்தாள்.
“நான் பேச்சு வாக்குல கேட்டது. அவர சொல்லாத. ஸ்வேதா போகறதுக்கு ஒரு வருஷம் முன்னாலேயே, கல்யாணம் இப்ப வேண்டாம்னு ஆரம்பிச்சிருக்க. சோ, ஸ்வேதா விபத்துனால நீ கல்யாணம் வேண்டாம்னு சொல்லலை. எது உன்னை சொல்ல வெச்சது….”, வினோத் கேட்கவும், ‘அச்சோ… இவர் ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிட்டாரே….’, என்றுதான் போனது வானதியின் எண்ணம்.
“ஷ்…. நான் அப்போ கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருந்தேன். அதான் கவுன்சலிங் எல்லாம் போனேன்… அந்த நேரத்துல கல்யாணம் எல்லாம் யோசிக்க முடியலை. அதான் தள்ளிப்போட சொன்னேன்… அப்பறம் ஸ்வேதா ஆக்சிடென்ட்…”…அதுதான்…என்பதுபோல கையை விரித்து ஆட்டினாள்.
 “அதுக்கப்பறமும் அஞ்சு வருஷம்… நீ பிடி கொடுக்கவேயில்லை. ஏன்?”, உன்னை விடுவதாக இல்லை என்று குடைந்தான் வினோத்.
அதில் கடுப்பானவள், “ இதெல்லாம் தேவையில்லாத பேச்சு. இப்ப உங்களுக்கு என்ன தெரியணும் ? ஏன் டைவர்ஸ்? அதுக்கான காரணம் சொல்லிட்டேன். உங்களுக்காக… உங்களுக்காகன்னு நான் செய்யறதுல, என்னை விட்டுடறேன். அதுவும், அன்னிக்கு நீங்க எங்கிட்ட வரும்போது, நான் என்னை மீட்டுகிட்டு வந்தது ரொம்ப ரொம்ப கஷ்டமாயிருந்தது. அடுத்து ஒரு முறை அப்படி ஆச்சுன்னா, தடுப்பேனாங்கறது டவுட்தான். அத்தனைக்கு அப்பறமும், என்னையே தடுக்க முடியாமத்தான்,உங்களுக்கு பாலும், மாத்திரையும் கொண்டு வந்து குடுத்தேன்…. ராத்திரி பூரா நாந்தான் அவஸ்தைபட்டேன் இரண்டு பக்கமும் என் உணர்வுகளோட என்னால போராட முடியலை. என் மேலையே எனக்கு வெறுப்பு. அதோட பலன்தான்… அவள் கையில் இருந்த கட்டைக் காட்டியவள், “நானேதான்….. கையை கிழிச்சிகிட்டதும். கண் மண் தெரியாத ஆத்திரம்… இது ஒரு வழிப் பாதையா இருக்கற அக்கறை, ஆனாலும் என்னால கட்டுப்படுத்த முடியலைங்கற ஆத்திரம். ”, என்று பொரிந்தாள்.
வினோத்துக்கு மிகவும் கஷ்டமாகிப்போனது. அன்று இரவு அவளைப் பற்றி யோசிக்கவேயில்லை. போடி என்று அவன் கடிந்ததும் நினைவுக்கு வந்தது.
“என்னது… நீ,…. நீயே கிழிச்சிகிட்டயா? வாசு எதோ ஃப்ரிட்ஜ் திறக்கும்போது மேல இருந்த கத்தி கையில பட்டு காயமாச்சுன்னு சொன்னார்.”,  திகைப்பாய்க் கேட்டான்.
“ம்ம்.. வேற வினையே வேண்டாம். நான் உண்மையை சொல்லியிருந்தா, என்னை வெளிய விட்டிருக்கவே மாட்டாங்க…. பஞ்சாயத்து உங்ககிட்ட வந்திருக்கும், ஏன் இப்படியாச்சு ? என் பொண்ணை என்ன கொடுமை படுத்தறீங்கன்னு“, என்றாள் அவனை ஏளனமாகப் பார்த்துக்கொண்டே.
‘மூக்கை உறிஞ்சிட்டே  நக்கலாக இவளால் மட்டும்தான் பேசமுடியும்’ என்று அந்த கலவரத்திலேயும் யோசித்தான் வினோத்.
“வானதி… சாரிங்கற வார்த்தை பத்தாதுதான்…ஆனாலும் ரொம்ப ரொம்ப சாரி…. இனியும் ஸ்வேதா நமக்குள்ள வரமாட்டா…. எல்லா வகையிலையும் அவள் அத்தியாயம் முடிஞ்சதை முழுசா ஏத்துகிட்டுத்தான் நான் உன்னை தேடி வந்ததே. நீ இவ்வளவு தூரம் ஹர்ட் ஆவன்னு ….”, என்று வினோத் சொல்லிக்கொண்டிருக்கும்போதே…
“ஏன் திடீர்னு ஸவேதா சாப்டர் க்ளோஸ்…. அவதான் விபத்துக்கு காரணம்னு தெரிஞ்சதாலயா? உயிரா நினைச்சவளை தூக்கிப் போட்டுட்டீங்களா? அப்ப அவ எழுதினது உங்களுக்கு தெரியவே வரலைன்னா?”. வானதி வேண்டுமென்றே உசுப்பேற்றினாள்.
“இல்லைன்னாலும் கடந்துதான் வந்திருப்பேன்… உன்னை விரும்பறேன், இந்த வாழ்க்கை உன்னோட வேணும்னு புரிஞ்சுதான், அதுக்கான பாதையிலதான் இருந்தேன்… அதுவும் உனக்குத் தெரியும். இப்பவும், அவ என் பாஸ்ட்ங்கறதை ஏத்துக்கிட்டேன்னுதான் சொன்னேன்… அவளை தூக்கிப்போட்டதா சொல்லவேயில்லை.”
 “வேற ஆப்ஷன் இல்லாம இப்படி என் மேல விருப்பம் வர நான் விரும்பலை. தாலி கட்டினதால வந்த கம்பல்ஷனா இது? வேண்டாம்.”, வேகமாய் வந்தது வானதியின் பதில்.
“வெயிட்… இப்ப நான் உன்னை விரும்பறதுகூட தாலி கட்டின கம்பல்ஷன்னாலன்னுதான் நினைக்கறயா?”, சற்று அதிர்ந்துதான் கேட்டான்.
“எங்க இரண்டு பேரையும் ஒரே நேரத்துலதான் பார்த்தீங்க. அவளை பிடிச்சிருந்து காதலிச்சு, கல்யாணமும் செஞ்சிகிட்டீங்க. இப்ப நாம கல்யாணம் செய்ததும் என்னை பிடிக்க ஆரம்பிச்சுது. அப்ப ?,  தோளைக் குலுக்கினாள் வானதி.
“புல் ஷிட்…. நீ உன்னையும் என்னையும் சேர்த்து கேவலப்படுத்தற? ஏன் … உன்னை உனக்காக பிடிக்காம போகும்னு நினைக்கற? அந்த வயசுல காதல்ல விழ நான் ரெடியா இருந்தேன். அழகான ஒரு பொண்ணு வந்து பேசவும், அவளைத்தான் பார்த்தேன். அதுக்காக நீ அழகில்லை உன்னை பார்க்கலைன்னு நீயா எப்படி அர்த்தம் கண்டுபிடிப்ப? நான் உங்க இரண்டு பேரையும் பார்த்து சாய்ஸ் போட்டு சூஸ் பண்ணலை வானதி. ஸ்வேதா என்னை செலக்ட் செஞ்சா, அவளைத் தாண்டி நான் பார்க்கலை. அதுதான் உண்மை. “, வினோத் வாதிடவும்,
 “நிஜமா? ஒரு வேளை அவளுக்கு பதிலா நான் முதல்ல உங்ககிட்ட வந்து பேசிகிட்டு இருக்கும்போது, ஸ்வேதா கூட வந்து நின்னு உங்ககிட்ட பேசியிருந்தா, அப்பவும் அவளை விட்டு நீங்க என்னை பார்த்திருப்பீங்க? “, எங்கிட்டயேவா என்பதுபோல வானதி பார்க்க,
“தெரியலை… சத்தியமா அப்ப என்ன பண்ணிருப்பேன்னு எனக்கு சொல்ல தெரியலை…. ஸ்வேதாகூட உனக்கு ஏன் இந்த கம்பேரிசன்? நீ அழகுதான் வானதி …உள்ளேயும் வெளியவும். பளபளன்னு ஜொலிக்கற ரூபியும் அழகுதான். அமைதியா ஒளிர்ற முத்தும் அழகுதான். ஏன் இப்படி ராங்க் போடணும் நான்?“, வினோத்திற்கு புரியவில்லை.
இப்படியெல்லாம் பேசக்கூடியவள் இல்லையே வானதி. என்னவாகிற்று? ஒரு  வேளை முன்பே தன்னை காதலித்தாளா? நாம்தான் கவனிக்கவில்லையா? ஆனாலும், அவளிடம் பழகியதே குறைவு. அதில் அவள் மனதை கலைப்பதைப் போல எதுவும் நடந்து கொண்டதாக ஞாபகம் இல்லை. வினோத் குழம்பிப்போனான்.
 “நான் உங்ககூட இருக்கறதுனால உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கு. நான் இல்லைன்னா, வேற  யாரையும் இன்னுமே பிடிக்க வாய்ப்பு இருக்குதான? நாம டைவர்ஸ்….”, அவள் அந்தப் பேச்சிலேயே நிற்கவும்,
“ஏய்… வாயை மூடுடி. என்னை … எவ்ளோ சீப்பா சொல்ற? நீ இல்லைன்னா, அடுத்து இன்னொருத்தியை பார்த்து அவள இன்னும் பிடிக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்லுவியா? என்னை என்னனு நினைச்ச? ஸ்வேதாவை விரும்பினேன்தான். அவளைத்தாண்டி வேற யாரையும் பிடிக்காதுன்னும் நம்பினேன். ஆனா இப்ப என் வாழ்க்கையை அவ பார்வையில் திரும்பிப் பார்க்கும்போது, அவ பக்குவமில்லாத சண்டிக் குழந்தையாத்தான் தெரியறா. வாழ்ந்திருந்தா, கொஞ்சம் வருஷத்துல நானும் அவ கேட்டதுக்கெல்லாம் வளைஞ்சு போகாம நிதானமா சொல்லிக்கொடுத்திருப்பேன், இன்னேரம் அவளுக்கும் கொஞ்சம் பக்குவம் வந்திருக்கும். முப்பத்தஞ்சு வயசுல இருக்க அனுபவம் அப்ப இல்லை. என்ன செய்ய சொல்ற அதுக்கு? நானே நினைச்சாலும், நடந்தது எதுவும் மாத்த முடியாது.
ஆனா… இப்ப உன் மேல வந்த பிடித்தம் உன் கூட இருந்து பழகி உன் குணம் பார்த்து வந்தது. நான் உன் கழுத்துல போட்ட அந்த தாலி செயின்னால இல்லை. உன் கூட இருக்கறதுக்கான ஒரு லைசன்ஸை அந்த தாலி குடுத்துச்சு. அவ்வளவுதான். ஆனா அதுக்காக நான் உன் மேல வெச்ச உண்மையான நேசத்தை கொச்சை படுத்தவோ, மட்டம் தட்டவோ உனக்கு உரிமையில்லை. “, வினோத்தின் கோபம் நியாயமானதுதான். கேட்கும் மூட்தான் வானதிக்கு இல்லை. அவள் முகத்திலிருந்தே அதைப் புரிந்தவன்,
“அப்படியே ஸ்வேதாவை காதலிச்சிருந்தா… ஏன் அவ போனப்பறம் உன் மேல வரக் கூடாதா. வாழ்க்கையில மறுபடி காதல் வரக்கூடாதா?”, வினோத் கேட்கவும்,
“வரலையே…எனக்கு அப்படி வரலையே….எல்லா வகையிலயும் பொருத்தமான ஒருத்தரைப் பார்த்துகூட, அவருக்கு என் மேல இருந்த காதலைப் பார்த்துக்கூட எனக்கு மட்டும் ஏன் வரலை…?”, அத்தனை ஆத்திரத்துடன் கையில் பிடித்திருந்த சீப்பை விசிறியடித்தாள் வானதி.
அவளது தடுமாற்றம் வினோத்திற்கு அதிர்வைக் கொடுத்தது. இவள் யாரைப் பற்றிப் பேசுகிறாள்? தன்னை இல்லை… அப்போ…. மதனா? அவனை காதலிப்பதாக வானதி சொல்லக்கூடும் என்று எதிர்பார்த்ததாக வாசு கூட சொன்னாரே. மதனை அவள் அப்படி உயர்த்திப் பேசியது உள்ளுக்குள் அப்படி ஒரு வலியைக் கொடுத்தது. ’ஸ்வேதா ஸ்வேதான்னு நீ பேசினப்பல்லாம் இந்த வலி அவளுக்கும் இருந்திருக்கும்தான…. பல்லைக் கடிச்சு கடந்து போடா…. யாருக்கு என்ன நல்லது செஞ்சியோ…. அவனை வேண்டாம்னு சொல்லியிருக்கா.’. ஒரு கணம் கண் மூடி நிதானத்திற்கு வந்தவன்,
“வானதி… காம் டவுன். இங்க உன்மேல எனக்கு இருக்கற அன்பை நான் விவாதிக்கப்போறதில்லை. இங்க பேச்சே என்னை பத்தியில்லை. உன்னை பத்தி.
“சொல்லு… எதுக்காக என்னை கல்யாணம் செய்த? இன்னும் இந்த கண்ணாமூச்சி, ஸ்மோக் அண்ட் மிரர் ஆட்டமெல்லாம் வேணாம். எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லு. நீ விரும்பற மாதிரி, உணர்ச்சிகளை தள்ளி வெச்சிட்டு அறிவு பூர்வமாவே யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம். அதுக்கு முடிவு டைவர்ஸ்தான்னு வந்தா, அப்ப ஒத்துக்கறேன். உன்னை நீயே இப்படி காயப்படுத்திக்கற அளவுக்கு இந்த கல்யாணத்துல இருக்கணும்னு உன்னை கட்டாயப்படுத்தமாட்டேன்”
எப்படியாவது அவள் மனதில் உள்ளவற்றை வெளியே கொண்டு வந்தே ஆகவேண்டும் என்ற உத்வேகத்தில் அவள் விரும்பும் வகையிலேயே பேசினான்.. இது நல்லவிதமாக முடியுமா? அவனுக்கும் தெரியவில்லை. முன்பிருந்த தன்நம்பிக்கை இப்போது ஆட்டம் கண்டிருந்தது .

Advertisement