Advertisement

அத்தியாயம் – 19
ட்ரெக் முடித்து வருபவர்களுக்கு பெரியகுளம் ஹோட்டல் ஒன்றில் அறைகள் ஏற்பாடாகியிருந்தது.  வட்டக்கனல் சென்று வந்த குழு உள்ளே நுழையவும், அவர்களை வரவேற்றது வினோத். கண்கள் வானதியை தேடியது.
வேர்வையும் களைப்புமாக வந்தவளைக் கண்டு “வானதி”, என்றான். அவன் குரலில் சட்டென்று நிமிர்ந்தவள், திகைத்துப் பார்த்தாள்.  “வினோத்… நீங்க எங்க இங்க?” என்று கேட்டபடியே அருகே வரவும்,
“ஹா ஹா… தணிகா சொன்னது சரிதான் போல வானதி மேடம்…. உங்க வீட்டுக்காரர் அனேகமா இன்னிக்கு வந்து நிப்பார்னு காலையில சொன்னார்.”, என்று வந்தார் கிரிதர்.  தணிகாசலத்திற்கு எப்படி தெரிந்தது என்று வானதி முழித்துக்கொண்டிருந்தாள்.
“வணக்கம் சர். நான் வினோத்.”, என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்,
“என்னமா… அவரை தவிக்க விட்டுட்டு, நீங்க ஜாலியா வந்துட்டீங்க. அவர் தணிகா ஆஃபீஸ்ல நாம நல்லபடியா காம்ப் சைட் வந்தமான்னு கேட்க தவமிருந்திருக்கார். கந்த சஷ்டி கவசமெல்லாம் சொல்லிகிட்டு இருந்திருக்கார் “, என்று வானதியை பார்த்துச் சொன்னவர், அவனோடு கை குலுக்கி தோள் தட்டி, “இவ்ளோ அன்பான தம்பதிங்களை பார்க்க சந்தோஷமாயிருக்கு யங் மேன், அதுவும் கடவுள் பக்தியோட. அடுத்த முறை தனியா அனுப்பாம, கூடவே நீங்களும் வந்துடுங்க. “,’நான் சஷ்டி கவசம் சொன்னதைக்கூட கவனித்தார்களா?’, இப்போது முழிப்பது வினோத்தின் முறையாயிற்று. மைய்யமாக தலையாட்டி ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தான். ‘அச்சோ.. வானதி என்னை மென்டல்னு நினைக்கப்போறா. இந்த மனுஷன் இப்படியா போட்டுக்குடுக்கணும்?’, என்று மனதுக்குள் அவரை தாளித்துக்கொண்டிருந்தான்.
“நீங்க உங்க மனைவியைப் பாருங்க. நான் செக்-இன் வேலையைப் பார்க்கறேன்.”, என்று ஒரு வழியாக கிளம்ப யத்தனித்தார் கிரிதர்.
“வானதிக்கு வேண்டாம் சர். நான் ரூம் எடுத்துட்டேன். சென்னை திரும்பறதுக்கும் நான் ஏற்பாடு செய்துட்டேன்.”, என்று வினோத் சொல்லவும்,
“மதுரை பஸ்க்கு பே பண்ணது திரும்ப வராது. பட், வானதி நீங்க இதுல சைன் பண்ணிட்டு உங்க ப்ளான் பார்த்துக்கலாம். மதுரை வரைதான் எங்க பொறுப்பு.”, என்று கருத்தாக அவர் வேலையை முடித்துக்கொண்டார்.
அதுவரையுலுமே முழித்துக்கொண்டிருந்த வானதி, அவர் தந்த படிவத்தில் கையெழுத்திட, அவள் தோளிலிருந்த ஹைக்கிங் பையை கழட்டி தன் முதுகில் மாட்டியிருந்தவன், “வா…”, என்று கையோடு அழைத்துக்கொண்டு லிஃப்ட் ஏறினான்.
“நானே சாயந்திரம் வந்திருப்பேன். ஏன்… என்னதுக்கு ட்ரெக்கிங் கிளப் போனீங்க?”, வானதியின் கேள்விக்கு எதுவும் பதில் சொல்லவில்லை வினோத்.
அவர்களது அறையைத் திறந்து உள்ளே சென்றவன், முதுகிலிருந்த பையை கீழே போட்டுவிட்டு, கதவை அடைத்த கையோடு, அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.
இதை எதிர்பார்க்காத வானதி, “என்ன…வினோத்… அழுக்கா இருக்கேன். விடுங்க… என்னாச்சு?”
ஒன்றும் பேசாமல், அவளை தன் மார்போடு சாய்த்தவன், நெற்றி வகிட்டில் முத்தம் இட்டு, ‘ ரொம்ப பயந்துட்டேன் வானதி. கை எப்படி இருக்கு?”
நிமிர்ந்து பார்த்தவள், “உங்களுக்கு எப்படி தெரியும்?”, என்றாள்.
“உங்க அண்ணன் வீட்டுக்கு வந்தார். நீ தையல் போட்டுட்டு உங்க வீட்டுக்குப் போயிருக்க, உங்க அம்மாகிட்ட நமக்குள்ள சண்டைன்னு சொல்லியிருக்க. அடமா ட்ரெக் கிளம்பி போயிருக்க. சந்தேகம் வரத்தான செய்யும். நாந்தான் எதாவது செஞ்சிட்டேனோன்னு.”, அரைப் புன்னகையுடன் கூறினாலும், வினோத்தின் கண்ணிலிருந்த வலியை பார்த்தாள் வானதி.
“ஒஹ்… இந்த அண்ணா…ரொம்ப ஓவராத்தான் பண்றாங்க. நான் பேசறேன் அவர்கிட்ட…. உங்களை எதுவும் பேசியிருந்தா….சாரி….”, மன்னிப்புக் கேட்பவளை, “கை எப்படியிருக்கு ?”, என்று கேட்டான்.
“ம்ம்… பரவாயில்லை. நேத்து நைட்டும் கட்டு பிரிச்சி க்ளீன் பண்ணேன். ஓக்கேதான். விடுங்க… போய் குளிச்சிட்டு வரேன்.”, தன்னை விடுவித்துக்கொண்டாள்.
அவள் குளித்து வரும் வரை அமைதியாக அமர்ந்திருந்தான். அவளை முழுதாகப் பார்த்ததே மனதில் ஒரு நிம்மதியை வரவழைத்திருந்தது. அவள் மீது இத்தனை அபிமானம் வளர்ந்திருப்பதைப் பார்த்து நேற்றிலிருந்தே அவனுக்கு அச்சரியம்தான். அமைதியாக அவனுக்கே தெரியாமல் அவனை ஆக்ரமித்திருந்தாள்.
வந்து அமர்ந்தவளிடம், வரவழைத்திருந்த காபியை தந்தவன், “ஏன் வானதி இந்த ட்ரெக் ?”, என்று கேட்டான்.
“நான் யோசிக்க வேண்டியிருந்தது. அம்மா வீட்ல இருந்தா, நீங்க கண்டிப்பா வந்திருப்பீங்க. அதான் கிளம்பிட்டேன்.”, என்றாள். அவன் அனுமானித்திருந்த பதிலைத்தான் கூறினாள்.
“சரி… தமிழ் நாட்ல இருக்கறதுலயே கஷ்டமாக ட்ரெக்ல இதுவும் ஒண்ணாம். ஏன் இதுக்கு போன? என்னை தவிக்கவிடவா?”, வினோத்தின் குரல் மாற்றத்தில், காபியை ஊதிக்கொண்டிருந்தவள் சட்டென்று நிமிர்ந்தாள்.
“இல்லை… கண்டிப்பா அந்த மாதிரியெல்லாம் இல்லை. உடனே கிளம்பணும், இரண்டு நாளாவது ஆகணும். இந்த கண்டிஷனுக்கு இதுதான் மாட்ச் ஆச்சு. இடம் இருக்குன்னு சொல்லவும் உடனே கிளம்பிட்டேன்.”, சமாதானமாகக் கூறினாள்.
“நீ எங்க போறன்னு கூட உங்க வீட்ல தெரியலை. பெரியகுளம் பக்கதுலங்கறார் வாசு. நீ ரெகுலரா போற ட்ரெக்கிங் க்ளப்புன்னு சொல்லவும் தணிகாவை பிடிச்சேன். அவர் காட்டுக்கு நடுவுல போகணும், போனவாரம் மழையில பாதை சகதியா இருக்கும்னு எல்லாம் சொல்லவும் பயந்துட்டேன்.”. வினோத் அமைதியாக சொல்லவும், அவனது அதீத பயம் ஸ்வேதாவைப் போல ஆகிவிடுமோ என்ற நினைப்பில்தான் என்று புரிந்து, வானதி, “ வினோத்… எனக்கு நிறைய அனுபவம் இருக்குதான? கண்மூடித்தனமா எதுவும் செய்ய மாட்டேந்தான?”, என்று கேட்டாள்.
“போட்டோ எடுக்க, நீ பாட்டு மரத்து மேல ஏறியிருக்க? கை அடிபட்டிருக்கு, மரத்துல விஷ பூச்சிங்க இருக்கலாம், ஏன் பாம்பு கூட இருக்கலாம்னு தெரியுமில்ல?”, வினோத்திடம் கோவம் கொஞ்சம் எட்டிப்பார்த்தது.
“ஓஹ்… எல்லா அப்டேட்டாத்தான் இருக்கீங்களா? செக் பண்ணிட்டுதான் வினோத் ஏறினேன், ரொம்ப உயரம் கூட இல்லை, ஜஸ்ட் இரண்டாவது கிளைதான். கீழ இரண்டு பேர் இருந்தாங்க, ஹெல்ப்க்கு. நான் தனியா இல்லை.”, பொறுமையாகக் கூறினாள் வானதி.
கண்களை அழுத்தித் துடைத்தவன், நிமிர்ந்து, “சரி… யோசிக்கறதுக்காக போனேன்னு சொன்னியே, என்ன முடிவு பண்ணிருக்க வானதி?”, என்றான்.
“இது சரி வராது வினோத்.  நாம டைவர்ஸ் பண்ணிக்கலாம். “, என்றாள் எதிரே இருந்த சுவரைப் பார்த்து.
அதைக் கேட்டவனுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. முயன்று கட்டுப்படுத்தியவன், “ஏன் …இப்படி ஒரு முடிவு?”, என்றான். அவன் குரலில் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை வானதியால். ஆனால், எந்த பாதிப்பும் இல்லாமல் அவன் பேசுவது அவளைக் காயப்படுத்தியது.
“நான் சொன்னதுதான். நாம ஒன்னா இருந்தா, என்னை… என் சுயத்தை விட்டுடுவேனோன்னு தோணுது.”, அவனை ஒரு வழியாக நிமிர்ந்து பார்த்தாள்.
“ம்ம்… இந்த கல்யாணத்துல உனக்கு நியாயமில்லைன்னு மெசேஜ் போட்டிருந்த. நானும் யோசிச்சேன்.”, வினோத் நிறுத்தவும் வானதிக்கு குழப்பமாக இருந்தது. அவனின் இந்த விட்டேத்தியான பேச்சு அவள் எதிர்பார்க்கவில்லை. கோபம் கொள்ளுவான்.  அதை எப்படி கையாள வேண்டும் என்று யோசித்து வந்தவளுக்கு, வினோத்தின் நடத்தை வினோதமாக இருந்தது.
அவளின் நெற்றி சுருங்கலைப் பார்த்தவன், “ம்ம்… நான் கூட அப்பப்ப அறிவா யோசிப்பேன் வானதி. “, என்றான் சற்று நக்கலாக.
“அப்பதான், இந்த கல்யாணத்துல எனக்குத்தான் நிறைய நன்மை இருந்திருக்குன்னு புரிஞ்சுது. ஆனா, இரண்டு விஷயம் புரியலை. நீ என்ன எதிர்பார்த்து என்னை கல்யாணம் செய்த ? கல்யாணமே வேண்டாம்னு தள்ளிப் போட்டவ, என்னை எதுக்கு செலக்ட் செஞ்ச?”, என்றான் தொடர்ந்து.
எதிர்பாராத விதமாக வினோத் இப்படிக் கேட்டதும், உள்ளுக்குள் அதிர்ந்தவள், “ இப்ப எதுக்கு அதெல்லாம் வினோத் ?”
“நீயா என்னை கல்யாணம் செய்துக்கறேன்னு சொல்லி, என்னை கார்னர் செய்வ. நான் சம்மதிக்கணும். இப்ப நீயா வேணாம்னு முடிவு செஞ்சு பிரியலாம்னு சொல்லுவ, நான் தலையாட்டணும்? என்னை என்ன பொம்மைன்னு நினச்சியா? உங்க வீட்லயும், எங்கம்மாகிட்டயும் என்ன சொல்றதா உத்தேசம்?”, அவனையும் மீறி கொஞ்சம் பொரிந்தான்.
“அது… எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லைன்னு டாக்டர் சொல்லிட்டார். அதனால் பிரியறோம். நீங்க அட்லீஸ்ட் வேற பொண்ணை கல்யாணம் செய்துக்கலாம். நீங்களே ஒத்த பிள்ளை. உங்களுக்கு கண்டிப்பா வாரிசு வேணுமே.  அத்தை ஏத்துக்குவாங்க. எங்க வீட்லையும் கொஞ்சம் பேசினா சம்மதிப்பாங்க.”, நேற்று இரவு யோசிக்கும்போது நன்றாக பட்டது, இப்போது அவனது பார்வையின் தகிப்பில், அவளுக்கே கொஞ்சம் முட்டாள்தனமாகப் பட்டது.”
“இன்-விட்ரோ, வாடகைத் தாய், தத்து எதுவும் வேணாம். நேரா உன்னை விவாகரத்து பண்ணிட்டு இன்னொரு பொண்ணை ரெடி பண்ணிடலாம்? அவ்வளவு மட்டமானவன் நான். அப்படிதான? அப்பவும் நீ தியாகி பட்டம் வாங்கிக்குவ?”, காரமாய் வந்தது வினோத்தின் குரல்.
“தியாகி பட்டம் கிடைக்குமோ இல்லையோ மலடி பட்டம் வாங்கிக்குவேன். “, உதட்டை சுழித்துச் சொன்னாள்.
“ஸ்டாப்… ஜ்ஸ்ட் ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்.”, நெற்றியை அழுந்தத் தேய்த்தவன், ‘டேய்… பொறுமை… அவகிட்டருந்து பதிலை வாங்கு. இந்த பேச்சேல்லாம் வேஸ்ட்.’, என்று சொல்லிக்கொண்டான்.
“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு முதல்ல. ஏன் என்னை கல்யாணம் செய்த ? இந்த கல்யாணத்துல என்ன எதிர்பார்த்த?”
மீண்டும் அங்கேயே போய் நின்றவனை உறுத்துப்  பார்த்தவள், “ என்ன எதிர்பார்ப்பாங்க? வீட்லர்ந்து கல்யாணம் செய்ங்கற பிரஷர்லர்ந்து விடுதலை. நீங்க அந்த நேரம் கரெக்டா மாட்டினீங்க. அதனால உங்க பேரை சொன்னேன். இதெல்லாம் உங்ககிட்ட முன்னாடியே சொன்னேந்தான ? இரண்டு பேர்ல யாருக்கு முடியாதுன்னு பட்டாலும் விவாகரத்து பண்ணிக்கலாம்னு சொன்னேந்தான வினோத்?”
‘லாஜிக்கா அடிக்கறா பார், அசராதடா,’, என்று நினைத்தவன், “எங்கிட்ட இந்த கல்யாணத்துலர்ந்து என்ன எதிர்பார்த்த? அண்ட் நான் மட்டுமில்லை, அந்த நேரம் உனக்கு வேற துபாய் வரன் இருந்துச்சு.”
“உங்ககிட்டருந்து நான் எதுவும் எதிர்பார்க்கலை. ஜஸ்ட் நட்பு மட்டும்தான். உங்க எதிர்பார்ப்பு, அது கூட இல்லை அந்த நேரத்தில. துபாய் இல்லை கத்தார், அந்த வரன் எனக்கு பிடிக்கலை, சோ அந்த ஆப்ஷனே கிடையாது.”, விடாக்கண்டியாக பதில் கூறினாள்.
“ஆனால், என் கோவம், எரிச்சல் எல்லாம் தாங்கிட்டும் எனக்காக பார்த்து பார்த்து செய்த. எங்க அம்மாக்கு நல்ல மருமகளா இருந்த….இருக்க. என் ஃப்ரெண்ட்ஸ் கூட சேர வெச்ச, மறந்து போன சந்தோஷங்களை திருப்பிக்குடுத்த. முக்கியமா, ஸ்வேதா வம்சி போன துக்கத்தை ஃபேஸ் பண்ண வெச்ச. அன்னிக்கு நான் உடைஞ்சு கிடந்தப்போ எனக்கு ஆறுதலா இருந்த. நான் எல்லை மீறினப்போவும், எனக்காக தூக்க மாத்திரை குடுத்து, பாலையும் குடுத்துட்டுதான் போன. ஏன்?“, வினோத் அடுக்க அடுக்க, வானதி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவன் கேள்வியில் முடிக்கவும், ஒரு நொடி முழித்தவள், “மனிதாபிமானம்தான்.”, என்று சமாளித்தாள்.

Advertisement