Advertisement

அத்தியாயம் – 17
சமையலை முடித்து மலர் கிளம்பவும், தன் அறையில் லாப்டாப்பில் தஞ்சமானான் வினோத். வந்த ஈமெயில்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில், உங்கள் ஐந்து வருட சந்தா முடிவுரும் தருவாயில் இருப்பதால், அதனை நீட்டிக்க இந்த மாதத்திற்குள் கட்டணம் செலுத்துங்கள். இல்லாவிட்டால் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் டேட்டா அழிந்துவிடும், என்று ஒரு பிரபலமான கணிணி டேட்டா ஸ்டோரேஜ் மையத்திலிருந்து அவன் பெயருக்கு ஈமெயில் வந்திருந்தது.
‘நான் எதுவும் யூஸ் பண்ணலையே..’, என்று நினைத்தவன், யூசர் ஐடியைப் பார்த்ததும், அது ஸ்வேதாவினுடையது என்று புரிந்தது. இவன் க்ரெடிட் கார்ட் உபயோகித்து சந்தா செலுத்தியிருப்பாள் போல. ‘என்ன செய்யலாம்?’, என்று யோசித்தவன், மிஞ்சிபோனா போட்டோஸ் சேர்த்து வெச்சிருப்பா. எல்லாத்தையும் டவுன்லோட் செய்துட்டு, ஸ்டோரேஜ் வேணாம்னு சொல்லிடலாம் என்ற முடிவுடன்,அவள் அலமாரியைத் திறந்து, அவள் லாப்டாப்பை எடுத்து சார்ஜில் போட்டான்.
ஸ்வேதா வைத்திருக்கும் போட்டோக்கள் கண்டிப்பாக தன்னை இம்சிக்கும். ‘ரொம்ப பார்க்காம, எல்லாத்தையும் காப்பி பண்ணிட்டு மூடிடணும்’ , என்ற நினைப்பில் லாப்டாப்பை உயிர்பித்தான். அதில் கடவுச் சொல் எதுவும் ஸ்வேதா வைக்கவில்லை. அதனால் நேராக உள்ளே சென்றது.
ப்ரௌசர் ஹிஸ்ட்ரியில் அவன் தேடி வந்த டேட்டா ஸ்டோரேஜ் லிங்க் இருக்க, அதை கிளிக் செய்தான். ‘எப்படியும் பாஸ்வர்ட் சேவ் பண்ணியிருப்பா, மேடம்குத்தான் பாஸ்வர்ட் ஞாபகம் வெச்சிக்க அலர்ஜியாச்சே’, என்று நினைக்க, அவன் நினைப்பை பொய்யாக்காமல் ஆட்டோ லாகின் அவனை உள்ளே அழைத்துச் சென்றது.
எதிர்பார்த்தபடியே, போட்டோ, வீடியோக்கள் ஃபோல்டர்கள் இருந்தன, வம்சி என்ற பெயரில்  தனியாக ஒன்று. எதையும் திறக்காமல் மொத்தமாக பென் ட்ரைவில் தரவிறக்கம் செய்ய ஆரம்பித்தான். அது ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கையில், அதில் “My thoughts”, என்ற ஆன்லைன் வடிவ டயரி ஆப் இருந்தது.
 அதை சொடுக்கியவன், அவள் அதில் எழுதியிருப்பது தெரிந்தது. அவள் விபத்து நடந்த தேதியில் இருந்தது. அவனையும் மீறி கண்கள் படித்தது. ஆங்கிலத்தில் எழுதியிருந்தாள்.
கண் மண் தெரியாத கோவத்துல இருக்கேன்… டாமிட்… என்ன ஒரு நெஞ்சழுத்தம் அந்த கிழவிக்கு. நாங்க வெளிய தங்கப்போறோம்னு சொன்னாலும், கல்யாணத்துக்குப் போகணும், கூட்டிட்டுப் போன்னு ஆர்டர் போடுது வினோத் கிட்ட. இவரும், சரிம்மா…சரிம்மான்னு தாளம் தட்றார். நேத்திக்கே என்னை அப்படி பேசிச்சு அந்த கிழவி, அதுக்கும் ஒன்னும் சொல்லாம என்னை வந்து சமாதானப் படுத்தினார் வினோத். இப்பவும் என்னைத்தான் சமாதானப் படுத்தறார். கேக்காம வீக்கென்ட் ரிசார்ட் புக் பண்ணது என் தப்பாம். மாமியார் கிழம் மட்டும் என்ன கேட்டுட்டா வந்துச்சு? சொல்லாம கொள்ளாமத்தான் வந்துச்சு. அதை கேட்க துப்பில்லை. சர்ப்ரைஸ் குடுக்கணும்னு நான் புக் பண்ணது தப்பாமாம்.
இந்த வினோத் கூட வர வர சரியில்லை. அவங்க அம்மா முகத்தைப் பார்த்தாலே அவங்க பக்கம் சாஞ்சிடறார். இன்னிக்கு ஒரு பாடம் கத்துக் குடுக்கறேன். ஸ்வேதாக்கு அப்பறம்தான் எல்லாரும்னு புரியணும். நீங்க போங்க உங்க அம்மாவோட, நான் என் பிள்ளையோட ரிசார்ட்டுக்குப் போறேன். நாங்க சந்தோஷமா இருந்துட்டு வரோம்னு சொல்லிட்டேன். ஆனா, போற வழியில லைட்டாஆக்சிடென்ட் பண்றேன். என்னையும் வம்சியையும் பார்க்க அலறி அடிச்சிகிட்டு வர வெக்கறேன். எப்படி அவர் அம்மாவை அந்த ரிசப்ஷனுக்கு கூட்டிட்டு போறார்னு பார்க்கறேன். அடுத்த ஒரு வாரம் எங்களைத் தவிர மனுஷனுக்கு எந்த ஞாபகமும் வரமுடியாத மாதிரி செய்யறேன். அப்ப தெரியும் ஸ்வேதா யாருன்னு….. “
அதோடு முடிந்திருந்தது. ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை வினோத்திற்கு. மீண்டும் படித்தான். அந்த வரிகள் தாங்கியிருந்த செய்தி இடியாக இறங்கியது. ‘அப்போ…அப்போ… வேணும்னுதான் காரை இடிச்சியா? ஆக்சிடென்ட் பண்ணப் போறேன்னு தெரிஞ்சு, என் பிள்ளையையும் கூட்டிட்டுப் போனியா?’, மெல்ல புரியவும், “அடிப் பாவி… சாகடிக்கவா கூட்டிட்டு போன… ப்ளடி….”, தகாத வார்த்தைகள் வந்து விழுந்தது., சுவரில் முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது. முட்டிக்கொண்டிருப்பான் போல, நெற்றி விண்ணென்று தெரித்தது.
கோபம் வினோத் கண்ணை மறைத்தது. அவள் அலமாரியை திறந்தவன், அவள் உடைகளையெல்லாம் விசிறியடித்தான். “சீ…. ராட்சசி…. உன்னைப்போய்… உன்னைப்போய் லவ் பண்ணிருக்கேனே… கொலைகாரி… என் பிள்ளை என்னடி பாவம் பண்ணினான்?…. எவளாவது, தெரிஞ்சே தன் குழந்தையை வெச்சிகிட்டு காரை ஆக்சிடென்ட் பண்ணுவாளா? “, கத்தி தீர்த்தாலும் கேட்க ஆளில்லை. மலர் கூட மதியம் சென்றுவிட்டார்.
கண்ணில் வம்சி எப்போதும் வைத்திருக்கும் முயல் பொம்மை பட்டது. அதைப் பார்த்தவன் கண்களில் தாரை தாரையாக கண்ணீர். நெஞ்சை அடைத்தது. “ராட்சசின்னு தெரியாம சரி, புள்ளை ரிசார்ட்ல விளையாடுமே சந்தோஷமான்னு நினேச்சேன்டா… வம்சி… ஐயோ… எனக்கு தெரியலைடா… உன்னை சாக அனுப்பறேன்னு….”, கேவிக்கொண்டே பொம்மையை நெஞ்சோடு அணைத்தவன், தள்ளாடிப் படுக்கையில் விழுந்தான்.
ஒன்றுமே யோசிக்கமுடியாதபடி வலித்தது. அவளோடு சண்டை போட்டு தடுத்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது என்ற குற்ற உணர்வு எப்போதும் அவனிடம் இருந்தது. ஆனால் இன்று புரிந்தது, எப்படியும் பழி வாங்கியிருப்பாள் ராட்சசி, தடுத்திருக்க முடியாது. என்னை நம்பி இந்த உலகில் வந்த ஒரு ஜீவனைக் காப்பாற்றக் கூட துப்பில்லாதவனாக, குருடனாக, மடையனாக இருந்திருக்கிறேன் என்று அவன் மேலேயும் கோவம் வந்தது.
எத்தனை நேரம் சென்றதோ தெரியவில்லை. பின் மாலை நேரம் வானதி வந்தவள், அவன் அறையில் வெளிச்சம் இல்லை என்றதும், ‘ என்ன, இன்னேரம் வீட்லையும் லைட் போடலை,காரும் இங்கதான் இருக்கு’, என்று யோசித்தபடியே அறையை எட்டிப் பார்க்க, வெராண்டாவின் லைட் வெளிச்சத்தில் அறை அலங்கோலமாக இருப்பது தெரிந்தது. சட்டென்று அறையில் விளக்கைத் தட்டினாள்.
ஓய்ந்து போன தோற்றத்தில் வினோத் படுத்திருக்க, நெஞ்சோடு ஒரு சிறிய பொம்மை. அறை முழுதும் ஸ்வேதாவின் உடைகள். மயங்கிக்கிடக்கிறானோ என்று பயந்து, ஒரே பாய்ச்சலில் அவன் அருகில் சென்று, “வினோத்…வினோத்”, என்று குரல் கொடுத்தபடியே அவன் தோளை பிடித்து ஆட்டினாள்.
சட்டென்று விழித்தவன், அவளை உறுத்துப் பார்க்கவும், என்னவென்று புரியவில்லை என்றாலும், தன்னால் ஒரு அடி பின்னால் சென்றாள்.
“வினோத்… என்னாச்சு?”
“உனக்கு தெரியுமா? ஸ்வேதாதான் எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லுவாளே? அன்னிக்கு அவ கிளம்பறதுக்கு முன்னாடி உங்கிட்ட பேசினாளா?”, வினோத்தின் கேள்வி புரியவே சில நொடிகள் பிடித்தது வானதிக்கு.
அதற்குள் எழுந்தவன், ‘சொல்லு… சொல்லு… என் புள்ளையை சாகடிக்கப்போறேன்னு உங்கிட்ட சொல்லிட்டு போனாளா?”, என்று அவள் தோளை உலுக்கினான்.
“வினோத்…. இருங்க… என்ன சொல்றீங்கன்னு புரியலை… ஆனா …அன்னிக்கு அவ எங்கிட்ட பேசவேயில்லை. என்ன ஆச்சு… ?”, வானதி வேகமாக சொல்லவும், அவளை இழுத்துக்கொண்டு லாப்டாப் இருக்கும் மேசைக்கு சென்றவன், “ உன் ஃப்ரெண்டு எழுதி வெச்சிருக்கா பாரு…. “, என்று கீபோர்டை தட்டி லாப்டாப்பை உயிர்பித்தவன், காட்டிவிட்டு மீண்டும் தள்ளிச் சென்றான். அந்த வார்த்தைகளை மீண்டும் படிக்க தைரியம் இல்லை… ஆனால் நினைவடுக்கிலிருந்து படித்ததை அழிக்கவும் முடியவில்லை. உறுமிக்கொண்டே அவள் அலமாரியை ஓங்கி ஒரு உதைவிட்டான்.
அந்த சத்தத்தில் திடுக்கிட்டவள், வேகமாக அவன் காட்டியதில் கண்களை ஓட்ட… ஒரு நிமிடம் மூச்சே நின்றுவிட்டது. “ அடிப் பாவி… படிச்சு படிச்சு சொன்னேனே…. அந்த பழக்கத்தை நிறுத்துன்னு…. அடிப்பாவி….”, தலையில் அடித்துக்கொண்டாள்.
அவள் பேசியதைக் கேட்டவன், பாய்ந்து வந்தான் அவளிடம்….” சொல்லு… என்ன … என்ன பழக்கம் ? எனக்கு தெரியும்டி… உனக்கு தெரியாம இருக்காது… அதுக்குத்தான் என்னை கல்யாணம் செய்தியா ? , மீண்டும் அவளை உலுக்க, தள்ளாடினாலும், “வினோத்…. ப்ளீஸ்…. பொறுமை… ஒரு நிமிஷம்…”, வானதி கெஞ்ச,
“ என்ன… என்ன பொறுமை… என் புள்ளையை மொத்தமா வாரிக் கொடுத்திருக்கேன். ஒரு ராட்சசியை கல்யாணம் செய்து குடும்பம் நடத்திருக்கேன். என் புள்ளையை…. கொன்னுட்டா….”, ஆங்காரமாக ஆரம்பித்தவன், நா தழுதழுக்க கண்ணில் நீர் வர முடித்தான்.
வேகமாக அவன் கண்களை துடைத்தவள், “வினோத்… என்னைப் பாருங்க. ஒரு நிமிஷம்… ஸ்வேதா உங்க மேலயும் வம்சி மேலையும் உயிரையே வெச்சிருந்தா… “, அவள் சொல்லி முடிக்கவில்லை,
“பொய்… “, என்று தள்ளிவிட்டான். அந்த வேகத்தில் நிலை தடுமாறினாலும் மேசையைப் பிடித்து தன்னை நிலை நிறுத்திக்கொண்டாள் வானதி.
“அப்படி உயிரையே வெச்சிருந்தா… காரை ஆக்சிடென்ட் பண்றதா இருந்தவ, பிள்ளையை கூடவே கூட்டிட்டு போவாளா? அம்மா அப்பவும் தடுத்தாங்க… கேட்காம கூட்டிட்டுப் போனா…. நான் பார்த்துகிட்டுதான் நின்னேன்… அம்மாகிட்டவும்… போனா அங்க ஜாலியா விளையாடுவான் விடுங்கமான்னு… சமாதானம் சொன்னேன்…. முட்டாள் நான்…. அடி முட்டாள்…”, முகத்தில் அறைந்து கொண்டவனை தடுத்து நிறுத்தினாள்.
அவளைப் பார்த்ததும், அவள் சொன்னது நினைவுக்கு வர, “என்ன … அப்ப என்னவோ சொன்னியே… எதோ பழக்கம் அவளுக்குன்னு… என்னது ? ட்ரக்ஸ் எடுப்பாளா?”, வினோத் கேட்கவும்,
“ச்சை… அதெல்லாம் ஒன்னும் இல்லை. நீங்களா எதுவும் கற்பனை பண்ணாதீங்க… அது ஸ்வேதாவுக்கு ஒரு குணம், அவள் சொல்லி கேட்கலைன்னா நம்மளை கில்டியா ஃபீல் பண்ண வெக்க, அவளை எதாச்சம் செஞ்சிக்குவா. சின்ன போதுல செஞ்சுக்குவேன்னு வாயாலதான் மிரட்டுவா… “, வானதி நிறுத்தவும்,
“சொல்லு… நிறுத்தாத… உண்மையை மறைக்காத…. “, இறுகி வந்தது வினோத்தின் வார்த்தைகள்.
“எனக்கு தெரிஞ்சு கல்யாணம் ஆன புதுசுல ஒரு வாட்டி, நீங்க சனிக்கிழமை அவ ஆசையை மீறி காலேஜ் போயிட்டீங்க. வேணும்னே படிகட்டுல தடுமாறி விழுந்து காலு பிசகி… நீங்க அடிச்சு பிடிச்சு ஓடி வந்தீங்க. …”, வானதி நிறுத்தவும்,
ஸ்வேதாவுடம் மருத்துவமனை சென்றது, ஒரு வாரம் லீவ் எடுத்து, அவளை பார்த்துக்கொண்டது. அவள் வலி பார்த்து அவன் அடைந்த வருத்தம், எல்லாம் வினோத்திற்கு ஞாபகம் வந்தது.
“எங்கிட்ட சொன்னா, ‘பாரு.. இப்ப என்னை அப்படி பார்த்துக்கறார். ஒரு அடி நடக்க விடறதில்லை. தூக்கிட்டேதான் போறார். இதுக்காக எவ்வளவு வலி வேணா பொறுத்துக்குவேன் வன்ஸ்.’ன்னு. எனக்கு அப்படி ஒரு கோவம், ஆனாலும் அவகிட்ட பொறுமையா சொன்னாத்தான் ஏறும். அதனால், உங்க உணர்ச்சிகளோட விளையாடக்கூடாது, நீங்க எவ்வளவு வேதனை பட்டிருப்பீங்கன்னு சொன்னதும், புரிஞ்சிகிட்டா. அவ பண்ணது தப்புதான்னு ஒத்துகிட்டு, இனிமே செய்ய மாட்டேன்னு சொன்னா.”
இதைக் கேட்டவனுக்கு கண்ணைக் கட்டாத குறை. எதுவுமே தெரியாமல் இருந்திருக்கிறோம் என்று உரைத்தது.
“சொல்லு… என்னை முட்டாளாக்கியிருக்கா… மேல சொல்லு…இன்னும் என்னன்ன நடந்துச்சு?”, வலியுடன் வந்த அவன் குரலில் வானதிக்கும் வேதனை கூடியது.

Advertisement