Advertisement

எபிலாக்
பத்து வருடங்களுக்குப் பிறகு….
சாப்பாட்டு மேசைக்கருகில் அமர்ந்து, மேசை மேல் இருந்த கிண்ணத்தில் தோட்டத்தில பறித்த கீரையை கிள்ளிப் போட்டுக்கொண்டிருந்தார் சம்பூர்ணம். அவர் எதிரில் அமர்ந்திருந்தாள் அவர் பேத்தி சாம்பவி. முகத்தில் ஒரு அதிருப்தியுடன், தன் கையகல டாப்பில் தன் பெற்றோர் திருமணப் புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ம்ப்ச்… ஒன்னுகூட சரியில்லை…. அப்பா… ஏன்பா இவ்வளவு உர்ருன்னு இருக்கீங்க ?”, என்று சோஃபாவில் அமர்ந்து எதோ ஒரு பத்திரிக்கையில் மூழ்கியிருந்த வினோத்தை இங்கிருந்தே கடிந்தாள்.
“ம்ம்… நான் எங்க பட்டு உர்ருனு இருக்கேன்… படிச்சிகிட்டு இருந்தேன்டா…”, விளக்கம் சொல்லும் வினோத் இன்னும் வசீகரனாகத்தான் இருந்தான். நாற்பதுகளின் மத்தியில் இருக்க, சால்ட் அண்ட் பெப்பர் முடி, ரிம்லெஸ் கண்ணாடி, உடற்பயிற்சியில் கட்டுக்கோப்பான தேகம் என்று இன்னும் காலேஜ் ஹீரோதான். நெற்றியிலும் கண்கள் சுற்றிலும் சுருக்கங்கள் சற்றி தெரிந்தாலும், கன்னத்துக் குழி பார்ப்பவர்களை அங்கேயே கட்டிப்போடும்.
“ம்ப்ச்… இப்பயில்லை… அம்மாவை நீங்க கல்யாணம் பண்ணும்போது… அம்மாவும் வருத்தமாத்தான் இருங்காங்க….”, புகார் படித்தாள்.
“ம்க்கும்… அன்னிக்கு என்னாமா ஆடினான் உங்கப்பன். போடான்னு போகாம உங்கம்மா கல்யாணம் பண்ணதே பெரிய விஷயம்.”, சம்பூர்ணம் நொடித்தார்.
குறு குறு விழிகள் வினோத்தைப் பார்க்க, ‘ அப்படியே அவ அம்மா பார்வை ‘, என்று எண்ணம் தோன்ற முறுவலித்தவன், “ அது… அப்பா அப்ப கொஞ்சம் முட்டாளா இருந்தேன். அப்பறம் அம்மா வந்து சரி பண்ணாடா…”, என்றான்.
“ஏன் இப்படி ஒரு கோவில்ல கல்யாணம்பா ? என் ப்ரெண்டுஸ் அப்பா அம்மா கல்யாண போட்டோல்லாம் எவ்ளோ கிராண்டா இருக்கு… ஏன் அப்படி செய்யலை?”, சற்று கோபமாக மகளிடமிருந்து கேள்வி வரவும்,
“இப்ப எதுக்கு பட்டு இதை பார்த்துகிட்டு இருக்க?”, வானதி சமையலை விடுத்து அங்கே வந்தாள்.
நாற்பது வயது என்று சொல்ல முடியாதபடி இருந்தாள். பத்து வருடமும் ஒரு பிரசவமும் எடையை கூட்டாததிற்கு காரணம் இன்னும் அவள் விடாமல் காமிராவை தூக்கிக்கொண்டு மலை ஏறுவதும், உடற்பயிற்சியும்தான். அதனால் மட்டும் வயது தெரியவில்லை என்று கூறிவிடமுடியாது. வாழ்க்கையை மகிழ்ச்சியாக நிறைவாக வாழ்பவர் முகத்தில் இருக்கும் அந்த அமைதி மேலும் ஒரு அழகை, இளமையைக் கொடுத்திருந்தது வானதிக்கு.
“அதான… புருஷனை யாரும் ஒரு வார்த்தை சொல்லிடக்கூடாதே… உங்கம்மா ஆஜராகிடுவா…”, சம்பூர்ணம் வானதியைப் பார்த்து உதட்டை சுழிக்க, வானதி முகத்தில் புன்னகை விரிந்தது.
“ஸ்கூல்ல ப்ராஜெக்ட்மா… அதுக்கு ஒரு ஸ்டோரிபோர்ட் செய்யணும்… உங்க போட்டோ, அப்பறம் கல்யாணம்.. அப்பறம் நான் பேபியா… அப்பறம் கடைசியா இப்ப இருக்க மாதிரி ஃபாமிலி யா…”, சாம்பவி சொல்ல,
“ம்ம்… சந்தோஷமா கிராண்டா கல்யாண போட்டோ வேணும்னா… உங்க அப்பா அம்மாக்கு நீ அறுபதாம் கல்யாணம் பண்ணும்போது செய்… அப்பவாவது அவ கால்ல உங்கப்பன மெட்டிய போட சொல்லு….. நீ பார்த்துகிட்டு இருக்கறதுல ஒரு போட்டோவும் தேறாது பவிமா.”, சம்பூர்ணம் பேத்தியிடம் நொடித்தார்.
“அத்தை… இன்னும் அதை விடாம பிடிச்சிகிட்டு இருக்கீங்களா?”, என்றவள் பார்வை ஒரு மென் சிரிப்புடன் நடக்கும் பேச்சுகளை கவனித்துக்கொண்டிருக்கும் கணவனைப் பார்த்தது.
போட்டுக்கொள்கிறேன் என்று அவள் சம்மதித்தபோதும்…. “இல்லை… உன் காலைப் பார்க்கறப்போல்லாம் என் கோவம், அதனால நான் இழந்ததுன்னு எனக்கு ஞாபகம் இருக்கணும் கண்ணம்மா….”, என்றவன்… இதழால் பல நூறு முறை தனிமையில் அவள் விரலில் மெட்டியிட்டிக்கொண்டிருக்கிறான்.
அவன் பார்வை கடத்திய, “மெட்டி போட்டு நாளாச்சே…இன்னிக்கு போட்டுருவோம்..”, என்ற செய்தியை வாங்கியவள் முகம் புன்னகையை அடக்க சிரமப்பட்டது.
இன்னமும் அவனிடம் மயங்கித்தான் இருக்கிறாள்… இதனால்தான் என்று இன்னமும் காரணம் சொல்ல முடியவில்லை. அவன் காட்டும் காதலிலும் அக்கறையிலும் திக்கு முக்காடிப்போவாள் பல நேரம்.
“சீமந்த போட்டோவை எடுத்துக்கோ பவிமா…அது க்ராண்டா இருக்கும். ஊரையே வளைச்சு போட்டு நடத்தினான் உங்கப்பன்.”, சம்பூர்ணம் பேத்திக்கு யோசனை கூறினார்.
“எது… நான் மம்மி தொப்பைக்குள்ள இருக்கும்போதா…”, கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டவள்,  அந்த ஆல்பத்தை தேடியெடுத்தாள். சந்தவாசலில் பூர்வீக வீட்டில் கிராமத்து மணம் கமழ நடந்தது அவள் சீமந்தம்.
அதற்குள் புகைப்படங்களைப் பார்த்த சாம்பவியும் “வாவ்… இதுக்குத்தான் அம்மாக்கு அந்த டயமண்ட் ஹாரம் வாங்கிக் குடுத்தீங்களாப்பா? சூப்பர்.”, என்று கைதட்டினாள்.
“ம்க்கும்… உங்க பார்வதி பாட்டி வைர வளையல் போடவும், உங்கப்பன் ஹாரம் போட்டான்… ஊரே அன்னிக்கு வாயப் பிளந்து பார்த்துச்சு. இன்னமும் ஊர் பொண்ணுங்க அவங்க புருஷமார ஏசுதுங்க… நீ என்ன அவங்களாட்டம் ஹாரமா போட்டன்னு.”, சம்பூர்ணம் சொல்ல வினோத்திற்கு அப்படி ஒரு புன்னகை.
“பூம்மா… நான் வைரக் கம்மல் வாங்கிக் குடுத்தா உன் மருமக ரிஜெக்ட் பண்ணிட்டா… அதான்…”, என்று வானதியைக் கோர்த்துவிட்டான்.
“ஹா… அது நீங்க பர்த்டே மறந்துட்டு லஞ்சமா குடுத்தீங்க… அதையும் சேர்த்து சொல்லுங்க.”, என்று வானதி விளக்க…
“போக்கிரி… உன் தப்பை மறைச்சிட்டு சொல்ற பார்த்தியா…”, என்றார் சம்பூர்ணம்.
வானதியின் நினைவுகள் பின்னோக்கி சென்றது.சாம்பவி பிறக்கும் சமயம் பிரசவ நேரத்து சர்க்கரை வியாதியில் அவஸ்தை பட்டுக்கொண்டிருந்தாள் வானதி…. அப்படி கருத்தாய் பார்த்துக்கொண்டான் வினோத். அவள் அம்மாவைக்கூட விடவில்லை. சுகப் பிரசவம் என்று நினைத்துக்கொண்டிருக்க, சில மணி நேர பிரசவ வலிக்குப்பின் திடீரென்று பல்ஸ் இறங்கியது… அவசரமாக அவளுக்கு சிசேரியன் செய்ய அழைத்துச்செல்ல, அரை மயக்கத்துக்கு சென்று கொண்டிருந்தவளை நெருங்கி… ‘”எங்கிட்ட பத்திரமா வந்துடு கண்ணம்மா…..”, என்று காதருகில் கேட்ட அவன் குரல் இன்றும் அவளுக்கு ஞாபகம் இருந்தது. கன்சென்ட் பார்மில் கண்ணீரோடு கை நடுங்க கையெழுத்திட்டவனின் வலி அங்கிருந்த அத்தனை பேரையும் அசைத்தது. இன்னமும் வாசு அவளிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்துபோவான்.
உயிர் பயம் காட்டிவிட்டு… சமத்தாக பிறந்தாள் சாம்பவி. சம்பூர்ணம், பார்வதி பேருடன் வினோத் வானதிக்காக ‘வி’ என்றுதான் அனைவரும் நினைத்தார்கள். ஆனால் அது வம்சிக்காக என்பது அவர்கள் இருவரும் மட்டும் அறிந்தது.
சாம்பவியை தொட்டிலில் இட்ட மறு நாள் திருத்தணி முருகனுக்கு தன் முடியை காணிக்கையாக்கியிருந்தான் வினோத்.
“என்னப்பா… இப்படி….”, என்ற வானதியை அணைத்தவன்… “போதும்… இவ ஒருத்தியே போறும் நமக்கு…. உங்களோட நானும் அன்னிக்கு செத்துப் பிழைச்சேன்… அதோட… எனக்காக உன் உடம்புல மறுபடி கத்தி பட்டிருக்கு கண்ணம்மா…. என்னால தாங்கவே முடியலை…. “, உடைந்த குரலில் சொல்ல, அவனை தேற்றும் பொறுப்பு அவளுடையாகியது.
இரண்டு வருடத்தில் அடுத்த குழந்தைக்கு அடிபோட்ட சம்பூர்ணத்திடம், ‘வம்சம், வாரிசு எல்லாம் சாம்பவி ஒருத்திதான்’, இனியோரு குழந்தை கிடையாது என்று ஒரேடியாக மறுத்துவிட்டான்.
“என்னால மறுபடியும் உன் மேல கத்தி படக்கூடாது கண்ணம்மா…. மத்ததெல்லாம் என்னை மீறி நடந்துச்சு…. இது கண்டிப்பா நீ செய்யக்கூடாது.”, என்று மறுத்துவிட்டு, கருத்தடை அறுவை சிகிச்சையை அவன் செய்துகொண்டு வந்தான். வானதிதான் திக்குமுக்காடிப் போனாள் அவன் அக்கறை கண்டு.
இந்த பத்து வருடங்களில் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்திருந்தனர். அதுவும் அவளைப்பற்றி அவளைவிட அவன் நன்றாக புரிந்து வைத்திருந்தான். ‘ம்க்கும் யோசிக்க விடாம நல்லா மயக்கி வெச்சிருக்கார் என்னை…’, என்று தனக்குள்ளே திட்டிக்கொண்டாலும், அதிலும் அவளுக்கு பெருமையே…
“பட்டு… கல்யாணம் கிராண்டா இருக்கறது பெரிசில்லைடா… அப்பறம் வாழற வாழ்க்கை கிராண்டா இருக்கணும். அம்மாட்ட கேளு… வேற ஹாப்பி பிக்சர் தருவா உன் ப்ராஜெக்ட்டுக்கு.”
“ம்க்கும்…  இப்படி எதாவது சொல்லியே என் மருமகளை கவுத்திடு. ஒழுங்கா சாம்பவிக்கு விளையாட ஒரு தம்பிய பெத்திருக்கலாம். அதுவும் கூடாதுன்னு நின்ன. இந்தப் பொண்ணும் உன் பேச்சைத்தான் கேட்டுது.”, சம்பூர்ணம் அவ்வப்போது இடிப்பார்.
“பூம்மா… முடிஞ்சு போன விஷயத்தைப்பத்தி என்ன பேச்சு? பட்டுக்கு விளையாடத்தான் நீங்க இருக்கீங்களே… இன்னும் யார் வேணும்?”, என்று திசை திருப்பிவிட்டான்.
சாம்பவி பிறக்கவும், சம்பூர்ணத்தை வம்படியாக சென்னைக்கே அழைத்துக்கொண்டனர் வினோத்தும் வானதியும். வருடா வருடம், மே மாதம் ஜெர்மனி செல்வான், அவன் படித்த கல்லூரியில் சம்மர் கோர்ஸ் எடுக்கும் சிறப்பு விரிவுரையாளராக. ஒரு முறை அங்கே வந்த சம்பூர்ணம், அதோடு கும்பிடு போட, அந்த இரண்டு மாதங்கள் மட்டும் கிராமத்துக்கு செல்லுவார். மகள் மனைவியோடு ஜெர்மனி செல்லுபவன், கிடைக்கும் வார விடுமுறைகளில் அவர்களோடு ஊர் சுற்றுவான். வானதியின் காமிராக்களுக்கு வித்தியாசமாக தீனி கிடைக்கும்.
அவளுடைய புகைப்படக்கலையில் சீராக முன்னேறிக்கொண்டிருக்கிறாள் வானதி. இரண்டு முறை ஆப்பிள் நடத்தும் ஐ-போன் புகைப்படப்போட்டியில் இயற்கை பிரிவில் முதல் பரிசை வென்று எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தாள். இங்க்ரெடிபிள் இண்டியாவிற்காக அவள் புகைப்படமும் அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இணைய தளத்தில் அவள் எடுக்கும் புகைப்படங்கள் விற்பனை நல்ல வருமானத்தை ஈட்டுகிறது. 
அவள் புகைப் படம் எடுக்க அதிகம் மெனக்கெடுவது வினோத்தான். அவள் உபகரணங்களை சுமந்து செல்வதாகட்டும், அவளோடு ஒரு விடியலுக்காக காத்திருப்பதாகட்டும், மனமுவந்து செய்வான். ஒரு சிறந்த புகைப்படம் அவள் எடுக்கவேண்டுமென்று, சாம்பவியை சம்பூர்ணத்திடமோ, இல்லை பார்வதியிடமோ விட்டு இரண்டு மூன்று நாட்கள் கூட அவளோடு இருப்பான்.  
வானதியின் தொலைபேசி அழைக்க, எடுத்துப் பார்த்த வினோத்… “ம்ம்… உன் விசிறிதான்… உன் குரல் கேட்காம நாள் தொடங்காதே அவருக்கு.”, என்று கிண்டலடித்தபடியே கொடுத்தான்.
அவனைப் பார்த்து கண்களை உருட்டியவள், அழைப்பை ஏற்று, “சொல்லுங்க ஆடிட்டர் சார்.”, என்றபடியே அகன்றாள்
வானதியிடமே அத்தனை வருமான விஷயங்களையும் விட்டிருந்தான். அவன் துறையில் அவன் எழுதிய புத்தகங்களும் வெளி நாட்டு கல்லூரிகளிலும் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களாக இருக்க, வருமானம் டாலர்களிலும் வந்து கொண்டிருந்தது. எல்லா கணக்கு வழக்குகளையும் அவள்தான் பராமரித்து வந்தாள்.
ஆடிட்டர் கணேசன் வானதியின் பணத்தை பெருக்கும் வழிகளிலும், வருமான வரியின் சந்து பொந்துகளை எப்படி சாதகமாக்கிக்கொள்வது என்ற  நுட்பத்திலும் அவளின் விசிறியாகிவிட்டிருந்தார்.
வானதி அவர் கேட்ட விவரங்களை கூறி வைக்கவும், பின்னோடே வந்து அவளை கட்டிக்கொண்ட வினோத்… “அந்த மனுஷனை தூக்கிட்டு வேற ஆளை போடலாமான்னு இருக்கேன். ரொம்ப வெறுப்பேத்தறான் என்னை.”, என்று புகார் வாசித்தான்.
“அறுவது வயசு ஆகுது அவருக்கு . எதுக்கு அவரப்பார்த்து உங்களுக்கு பொறாமை?”, என்றாள் சிரிப்புடன்.
“எத்தனை வயசானா என்ன?  அப்படித்தான் அன்னிக்கு அந்த ராபர்ட், பத்து நிமிஷம் உன்ன பத்திதான் பேசறான்.“, என்று முறைத்தான்.
ராபர்ட், அவன் எழுதும் புது புத்தகத்தின் வடிவமைப்பாளர். வெளினாட்டு பதிப்பகம் என்பதால் எல்லாம் அயல் நாட்டவர்கள்.
“என்னவாம்?”, என்றான் அவன் கண்ணில் தெரியும் பொறாமைப் புகையைக் கண்டு ரசித்தபடி.
“ம்ம்… அவனோட சண்டை போட்டியாமே? என் போட்டோ சின்னதா இருக்கு,  அட்டைபட கலருக்கு, என் போட்டோ டல்லடிக்குதுன்னு அவன் குடுத்த ப்ரபோசலை கிழிச்சிட்டியாம். இவ்ளோ நுணுக்கமா இதுவரைக்கும் யாரும் பார்த்ததில்லை. வானதி குடுத்த ஐடியா எல்லாமே சூப்பர்… எல்லாம் சொல்லிட்டு, கடைசிய ஒன்னு சொன்னான் பாரு… காண்டாகிட்டேன்…”,
வினோத் நிறுத்தவும், என்ன என்பதுபோல வானதி புருவம் உயர்த்தினாள்.
“இவ்ளோ அழகா, அறிவா ஒரு பொண்ணு உன்னை இவ்ளோ லவ் பண்றா, உன் கரியர்ல இவ்ளோ ஹெல்ப் பண்றா… இதுக்கெல்லாம் நீ குடுத்து வெச்சிருக்கணும் மேன்… என்னா ட்ரிக் அது கொஞ்சம் சொல்லுங்கறான் பரதேசி….”, என்று வினோத் முறைக்க… வானதி கலகலத்து சிரித்தாள்.
“இனி அவனோட பேசாத… நான் பப்ளிஷர்கிட்ட சொல்லி வேற ஒரு லேடி டிசைனர் வேணும்னு கேட்கறேன்….”, வினோத் விறைப்பாக சொல்ல
“அப்படியா… அப்ப கூடவே மார்கெட்டிங்க்கு, அந்த ஜெர்மன் பொண்ணு வேணாம், வேற ஆளை அனுப்புங்கன்னு சொல்லுங்க. என் எதிரவே கட்டிப் பிடிச்சா உங்களை. “, உதடு பிதுக்கினாள் வானதி.
“ஹே அது அவங்க கலாச்சாரம் கண்ணம்மா… “, அன்று வானதி கண்களில் புகைந்த பொறாமையை நினைத்து சிரித்தான்.
“ஆமா… ஆமா… அவ பாய் ஃப்ரண்டு என்னை கட்டி பிடிக்க வந்தப்போ மட்டும் குறுக்க பாஞ்சிவந்து தடுத்தீங்க?”, வானதி புருவம் உயர்த்த,
“நம்ம கலாசாரத்தை காப்பாத்தினேன்மா… நீ ரொம்ப கேள்வி கேட்கற… இதை விடு…. நான் எப்ப மெட்டி போடலாம்னு கேட்க வந்தேன்…”, அடிக் குரலில் அவளைக் கேட்க… எப்போதும் போல அந்தக் குரலில் வசீகரிக்கப்பட்டவள்,
“ம்ம்… நீங்க அதோட நிறுத்த மாட்டீங்களே…”, என்று கொஞ்சினாள்.
“ம்ம்… ஆமா… கொலுசு போட தோணும்…அப்பறம் ஒட்டியாணம், வங்கி, ஹாரம்….”, என்று வினோத் குறும்புப் பார்வையோடு அடுக்கினான்.
“ஹா… ஒட்டியாணம் இடுப்புல போடுவாங்க…நீங்க …”, என்ற வானதி மேலே சொல்லாமல் முறைக்க.
கள்ளச்சிரிப்பை உதிர்த்தவன், “அதை அப்ப கேட்காம, ஒரு வாரம் கழிச்சு வந்து கேட்கற?”
முகம் வெட்கம் பூச… “ம்ம்… அப்ப தோணலை…”
“ஓ… என் உதடு… என் பொண்டாட்டி ….என் இஷ்டம்.”, என்று அவள் காதை கடிக்க…. வானதிதான் தடுமாறிப்போனாள் அவனின் இந்த ஆட்டத்தில்.
“அம்மா…”, சாம்பவின் குரலில் இருவரும் விலக,
“போட்டோஸ் எல்லாம் டௌன்லோட் பண்ணிட்டேன். நீ வந்து பார்த்துட்டு ஓக்கே சொல்லு. நான் வினய் பார்ட்டிக்கு போகணும் மூணு மணிக்கு.” , என்றாள்.
“ஓ… பார்ட்டியா செல்லம். கூட பாட்டி வராங்களா?”, வினோத் ஆர்வமாக விசாரிக்க, “ஆமா… வினய் பாட்டிக்கு சம்பு பாட்டி ஃப்ரெண்டாச்சே…ஏன் பா?”, என்று சாம்பவி கேட்டாள்.
வினோத்தின் விரிந்த புன்னகை எதற்கு என்று புரிந்த வானதி அவனை முறைத்து, “ம்ம்… நீ வா பட்டு….”, என்று உள்ளே செல்ல,
“கண்ணா… இரண்டு லட்டு திங்க ஆசையா?”, என்று வினோத்தின் குரலில் சாம்பவி திரும்பிப் பார்க்க,
“உங்க அப்பா அப்பப்ப கொஞ்சம் அப்படித்தான் சம்மந்தமில்லாம பேசுவார்… விடு பட்டு…”, என்று மகளிடம் சமாதானம் சொன்னாலும், வானதியின் மலர்ந்த முகம் லட்டு தின்ன ஆசைதான் என்று வினோத்திற்கு உணர்த்திவிட்டே சென்றது.
தகித்துக்கொண்டிருந்த நினைவுகள் எல்லாம் குளிர்ந்து…இப்போது மலர்ந்து மணம் கமழும் இனிய நினைவுகளே நிரம்பியிருந்தது இருவரின் மனதிலும்.

Advertisement