Advertisement

ஏர்போர்ட் பார்க்கிங்கில் விட்டிருந்த அவன் காரை எடுத்து, ஒரு வழியாக அவர்கள் வீடு வந்ததும், “வா பையெல்லாம் அப்பறம் எடுத்துக்கலாம்.”, என்று உள்ளே அழைத்துச் சென்றான்.
“சீக்கிரம் ஒரு குளியலைப் போட்டுட்டு வருவோம். செம்ம பசில இருக்கேன்.  .”, என்று அவசரப் படுத்த, வானதியும் வேகமாக அவள் அறைக்கு சென்றதை உறுதி செய்தவன், அவன் அறையைத் திறக்க, பூவின் மணமும், ஏசியின் குளிரும் முதலில் தெரிந்தது.
படுக்கையின் எதிரே இருந்த சுவர், ஸ்வேதா போட்டோ இருந்த இடத்தில் இரண்டு இதயங்கள் ஒன்றோடு ஒன்று கோர்த்தபடி சம்பங்கி சரங்கள் தொங்க வடிவமைக்கப்பட்டிருந்தது. பார்டர் ஆரஞ்சு வண்ண சாமந்தி. ஒரு அம்பு இரு இதயங்களையும் துளைத்திருந்தது, செவ்வரளிப்பூவின் அடர் சிவப்பு நிறத்தில்.
படுக்கை மேல் சம்பங்கி இதழ்களைக் கொண்டு வரிவடிவமாக இதயமும், அதில் கண்ணடிக்கும் ஒரு ஸ்மைலி சாமந்தி இதழ்களில் செய்யப்பட்டிருந்தது. வாசனை மெழுவர்த்தி ஒன்று எரிந்துகொண்டிருந்தது.
ஒரு பெரிய புன்னகையோடு… “தாங்க்ஸ் மச்சி… கலக்கிட்ட!” , என்று சங்கருக்கு மெசேஜ் தட்டியவன், போனை அணைத்து வைத்தான். அவசரக் குளியல் ஒன்றைப் போட்டு, இலகுவான உடைக்கு மாறி, வெளியே வரவும், வானதி இன்னும் வந்திருக்கவில்லை. தன் அறையை சாத்தியவன், அவள் அறையை தட்ட, உள்ளே குரல் கேட்டது. ‘இன்னியோட இந்த தனித்தனி ரூமுக்கு தடா போடறேன்.’, என்று மனதில் சபதமெடுத்தவன், கதவைத் திறந்து எட்டிப் பார்க்க, முழுவதும் மூடிய ஒரு நைட்டியில், தலையை வாரி கொண்டையிட்டுக் கொண்டிருந்தாள் வானதி.
‘ஹ்ம்ம்… இந்த பாதிரியார் அங்கி மாதிரி இருக்க நைட்டியெல்லாம் கொளுத்திட்டு வேற வாங்கணும்… விக்டோரியா சீக்ரெட் ஸ்டைல்ல…டேய்..ரொம்ப ஓவரா போறடா… பார்வையிலேயே பஸ்பமாக்கிடுவா…’ என்று மனசாட்சி எச்சரித்தது. ‘அதெல்லாம் கூல் பண்ணிக்கலாம்.’, இவனாக வாதிட்டுக்கொண்டிருக்க,
“வினோத்… என்னாச்சு ? போலாம்னு இரண்டு வாட்டி சொல்லிட்டேன். என்ன யோசனை?”, என்று வானதி அருகே வரவும்… மூச்சை உள்ளிழுத்தவன், “ம்ம்ம்…உன் சோப்பை வாசம் பிடிச்சிகிட்டு இருந்தேன். வா.”, என்று கள்ளச்சிரிப்புடன் முன்னே சென்றான்.
இருவருமாக பேசியபடியே சாப்பிட்டு முடித்தனர். ட்ரெக்கில் எடுத்த புகைப்படங்கள் பற்றிப் வானதி பேச, அவன் கேட்டுக்கொண்டிருந்தான். வினோத்துக்கு முகத்தில் ஆர்வத்தை மறைப்பது பெரும் பாடாக இருந்தது. ஒரு வழியாக சாப்பிட்டு, எடுத்து வைத்தவுடன்,
“வானதி, அத்தை மாமாகிட்ட வந்துட்டோம்னு சொல்லு. நடுவுல போன் பண்ணாங்க. நாளைக்கு பொறுமையா பேசலாம். இப்ப போய் உன் போட்டோவையெல்லாம் பார்க்கலாம்.“,  எனவும், வானதியும் உற்சாகமாக வீட்டுக்கு அழைத்தாள்.
கதவை சரி பார்த்து, விளக்குகளை அமர்த்தியவன், அவள் பேசி முடிக்கவும், எழுப்பி, “வா… “, என்று படியேறினான். அவன் அறை வாசலில் நிறுத்தி, சட்டென்று கைகளில் தூக்கினான்.
“ஹே…என்ன… “, என்றவள் நிதானித்து வினோத்தின் முகம் நோக்க, “கதவைத் திற கண்ணம்மா…”, என்றான்.
“என்ன.. இப்பல்லாம் கண்ணம்மான்னு கூப்பிடறீங்க?”, என்று கேட்டபடியே கதவைத் திறந்தவள் கண்ட காட்சியில் உறைந்தாள். கண்கள் விரிந்து அறையை சுற்றி வந்தது. ஒரு கை அவன் கழுத்தை சுற்றியிருக்க, மறு கை கொண்டு தன் வாயை மூடினாள்.
மெல்ல பார்வை அவனை நோக்கித் திரும்ப, ஒரு மென்னகையுடன், “என் பொண்டாட்டிக்கு இன்னிக்கு மறக்க முடியாத ஒரு இரவு…”, கண்ணடித்தான் உள்ளே மெல்ல அவளை சுமந்து சென்றபடி.
“இல்லை… வேணாம்… உங்களுக்கு… கஷ்ட… ஆ”, பொத்தென்று படுக்கையில் விழவும், அவள் பேசினது நின்றது.
“மூச்… இன்னிக்கு இது உனக்கு… யூ டிசர்வ் திஸ் அண்ட் மோர்…. எனக்காக எனக்காகன்னு யோசிச்சு உனக்காக எதுவும் செய்யலை. இப்பத்திலர்ந்து அது மாறுது. “, அவள் வாயில் கை வைத்து இவன் மிரட்டவும், மலங்க மலங்க விழித்தாள்.
அவள் கை பிடித்து தன் நெஞ்சில் வைத்தவன், ‘வில் யூ பீ மைன் கண்ணம்மா?”, என்று மீண்டும் கேட்க, அவன் பார்வையின் தீவிரத்தில் தானே தலை சம்மதாக ஆடியது.
“அப்போ உன் மூளையை கொஞ்சம் நேரம் ஆஃப் பண்ணி வை. ஜஸ்ட் ஃபீல் !”, என்றவன் கைகள் தானே அருகிருந்த லைட்டை அணைக்க ஒற்றை மெழுகுவர்த்தியின் சுடர் மட்டுமே. அவனுள் எழுந்த பழைய ஞாபகங்களை புறந்தள்ளினான். அவன் மனம் முழுதும் வானதியை கொண்டுவர அவளை கண்களால் நிரப்பியவன், கைகளுக்கும், இதழ்களுக்கும் கூட அதே  சுதந்திரத்தைக் கொடுக்க முற்பட்டான்.
உன்னை யோசிக்க விட்டாத்தானே கண்ணம்மா ப்ரச்சனை. இப்ப பார் என்று நினைத்தவன், அவளை யோசிக்கவேவிடாமல் அசரடிக்க, அதிலிருந்த கவனம் அவன் நினைவுகளையும் நிகழ்வதில் வைத்திருந்தது. அவனால் அவளிடம் ஏற்படும் தாக்கம் கண்டு கிளர்ந்து, அவனும் அவளோடு அலையில் விரும்பியே சிக்கினான். தகித்துக்கொண்டிருந்த சில கடந்த கால நினைவுகளை இருவருமாக சேர்ந்து எழுப்பிய பேரலை அடித்துச் செல்ல, நிர்மலமான மனதுடன் உறங்கினர்.
வானதியின் காலை விடியல் மீசையின் குறுகுறுப்புடன் இருந்தது. மெல்ல விழித்தவள் கண்டது கணவனின் ஆர்வம் மின்னும் கண்களை. மெல்ல ஒரு புன்முறுவல் அவள் முகத்தில் பூக்க,
“ஹாப்பி மார்னிங் கண்ணம்மா…”, வினோத்தின் குரல் வசீகரித்தது. அதே அடிக்குரல் நேற்று இரவு கேட்டது நினைவுக்கு வர, முகம் சிவந்தாள் வானதி. அதைப் பார்த்த வினோத்தின் நமுட்டுச் சிரிப்பில் அவன் கழுத்து வளைவில் முகம் புதைக்க, அவன் சிரிப்பு அதிகரித்து, உடல் குலுங்கியது.
“முகம் காட்டுமா… எப்படியெல்லாம் சிவக்கறன்னு நான் பார்க்கவேணாமா ?”, அவனின் கொஞ்சல் மனதை நனைக்க, “ஹ்ம்ம்…. நீங்க கேலி பண்ணுவீங்க…”, கழுத்து வளைவில் அவள் பேசுவது, அவனை வேறு இடம் கொண்டுசெல்ல, மெல்ல நிமிர்ந்தவன், “ நீயும் என்னை கேலி பண்ணு கண்ணம்மா… “, என்றான், போர்வைக்குள் போயிருந்த அவள் முகத்தைப் பார்க்க போர்வையை இழுத்தபடியே.
மெல்ல பாதி முகத்தைக் காட்டி எட்டிப்பார்த்தவள், “அதென்ன கண்ணம்மா… நேத்தும் கேட்டேன்… நீங்க சொல்லலை…”,
நெற்றியில் இன்னும் மிச்சமிருந்த லேசான சிவப்பினைப் பார்த்தவன், அவள் கண்களை நோக்கி, “என் பூம்மாக்கு அப்பறம், என்னப் பத்தியே யோசிக்கறவ  என் கண்ணம்மா.”, என்றான் ஆழ்ந்த குரலில்.
மெல்ல போர்வையை விலக்கி அவனைப் பார்த்தவள் கன்னம் வருடி, “எனக்கு எவ்வளவு ப்ரெஷ்ஷியஸ் நீன்னு சொல்லவும் என் கண்ணம்மா…”
வானதியின் கண்கள் லேசாய் கலங்க, “கண்ணம்மா… இந்த ஒரு வாட்டிதான் இதை சொல்லுவேன். நிறைய பழசை யோசிச்சு நம்ம ப்ரெசென்டை இழந்துட்டோம்…. பழைய நியாபகத்தையெல்லாம் போக்க, தினமும் புதுசு புதுசா நமக்குன்னு மெமரீஸ் சேர்க்கணும். அதைப் பத்தி மட்டும்தான் நம்ம ஞாபகம் இருக்கணும். சரியா?”
“ம்ம்ம்….”, புன்னகையோடு சம்மதித்தாள்.
“இப்படியே நீ படுத்துகிட்டே இருந்தா, நான் உன்னோட போர்வைக்குள்ள வரவா ? இல்லை காலை டிபன் காபி எதாவது சாப்பிடுவோமா?”, ரகசியப் புன்னகையோடு, உதடு கடித்து, கண் அடிக்கும் கணவனை தள்ளியவள், “இல்ல… எழுந்துக்கறேன்.”, போர்த்தியிருந்த போர்வையை சுற்றிக்கொண்டே எழுந்தவள் பாத்ரூம் செல்ல,
“பஞ்ச வர்ணக் கிளி நீ பறந்தபின்னாலும்
அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு…..”, என்று பாடும் வினோத்தைப் பார்த்து சிரித்தவள்,
“அய்ய… ரொம்பத்தான்…. “, உதடு சுழித்து பாத்ரூம் உள் சென்று கதவை சாத்த,
“தித்திக்குதே…..”, என்று பாடல் படுக்கையறையிலிருந்து கசிந்து வந்தது, இருவர் உள்ளத்தையும் பறைசாற்றும் விதமாக.
வினோத்தோடு தான் கனவில் கண்ட வாழ்க்கை இன்று நிஜமாக, கண்ணாடியில் தன் முகத்தைப்பார்த்தவள், அதில் இருந்த மகிழ்ச்சியும், நம்பிக்கையும், மலர்ச்சியும் பார்த்து, ‘வனு…’, என்று தன்னைத் தானே கொஞ்சிக்கொண்டாள்.
இன்னும் கடக்க வேண்டியது உள்ளது. ஒரே நாளில் எல்லாம் சரியாகிவிடாது. சில தடுமாற்றங்கள் வரக்கூடும்..கூடும் என்ன கண்டிப்பாக வரும்.ஆனாலும் கடக்கும் பக்குவம் இருவருக்குமே உள்ளது என்று நம்பினாள். அவனிடமிருந்து ஒளித்து வைக்க மனதில் இப்போது எதுவுமேயில்லை. போராட்டமெல்லாம் முடிந்து மனது மிகவும் லேசாக, மகிழ்ச்சியாக இருந்தது.
“கண்ணம்மா… உன் டவல் , நைட்டி, ப்ரஷ் வெளிய வெச்சிருக்கேன். எடுத்துக்கோ. நான் கீழ போய் பால் காய்ச்சறேன்.”, என்ற குரல் வந்தது.
அப்போதுதான், அவன் பாத்ரூமில் தான் இருப்பது புரிந்தது. அவன் இங்கிதம் கண்டு ஒரு புன்முறுவல் பூத்தாள்.
“சரிங்க… ஒரு பத்து நிமிஷம்…”, என்று பதில் தந்தாள். கண்ணம்மா என்ற விளிப்பே ஒரு சந்தோஷத்தைத் தந்தது. நேற்றும் லீவ் எடுத்துவிட்டான். இன்று கல்லூரி செல்ல வேண்டுமே என்று  இவள் வேகமாக கிளம்ப, கீழே வினோத், சாவகாசமாய் இன்றும் தன்னால் வர முடியாது என்று சொல்லி, அன்று செய்ய வேண்டிய விஷயங்களை கைமாற்றிக் கொண்டிருந்தான்.
வேகமாக கீழே வந்தவள் கண்டது சாவகாசமாக விசிலடித்துக்கொண்டே பாலை காய்ச்சி இறக்கிக்கொண்டிருக்கும் வினோத்தைதான்.
“காலேஜ் போகலையா வினோத்?”, என்றவளைப் பார்த்து பெரிய புன்னகையுடன், “நோப்… இன்னிக்கு பூரா உன்னோடதான்.” என்றான்.
இரண்டு கப்பை எடுத்த வைத்தவன், சர்க்கரை டப்பாவை திறந்து, “உனக்கு எவ்வளவு சர்க்கரை போடணும்?”, என்று கேட்டான்.
“தள்ளுங்க. நானே போடறேன்.”, என்று வானதி சொன்னதும்,  அவளை இழுத்து தன் முன்னே நிற்க வைத்து டப்பாவை அவள் கைகளில் திணித்தவன், அவள் இடைய பிடித்தபடியே முதுகில் ஒட்டிக்கொண்டு கழுத்து வளைவில் எட்டிப் பார்த்தான்.
அவன் செய்கையில் உறைந்து நின்றவளை லேசாக அசைத்து, “ம்ம்.. போடு. நான் பார்த்து வெச்சிக்கறேன்.”, என்று உந்தினான், அவள் நிலைமையை அறியாதவன் போல.
அவள் தடுமாறி, பின் நிதானித்து சர்க்கரையும் காபித்தூளையும் போட்டதும், லாவகமாக இடையோடு இழுத்து அவன் மறுபுறம் நகர்த்தியவன், பாலை தானே கலந்து, ஆற்றி அவளிடம் ஒன்றை தந்து, தனக்கும் ஒன்று எடுத்துக்கொண்டு தோளோடு கைபோட்டு ஹாலுக்கு இழுத்து வந்தான்.
இத்தனை தொடுகை அவனிடம் எதிர்பார்க்காதவள்தான் திணறிப்போனாள். பேச்சே வரவில்லை. அவர்கள் வரவும், சோஃபா மேல் அவளின் கைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது.
“அத்தை”, என்றவள், ஓரே எட்டில் நகர்ந்து சென்று அழைப்பை ஏற்றபடியே சோஃபாவில் அமர, வினோத்தும் அருகில் அமர்ந்தான்.
“சொ..சொல்லுங்க அத்தை…”, என்றாள் வானதி.
“என்னமா… அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்தியா?”, என்றார் சம்பூர்ணம். மலர் கண்டிப்பாக பேசியிருப்பார் என்பது புரிந்தது இருவருக்கும்.
“ஆமா அத்தை.”
“புள்ளைன்னு ஒன்னு பெத்து போட்டேனே? காலேஜ்க்கு கிளம்பிடுச்சா?”, மகன் இன்னும் அழைத்துப் பேசாத கோபத்தில் காரமாய் வந்தது சம்பூர்ணத்தின் குரல்.
“அச்சோ அத்தை… ஏன் இவ்ளோ கோவம்?”, என்றாள் அவளையும் மீறிய புன்னகையுடன்.
“உன் பொறந்த நாளை மறந்துட்டான்னு திட்டினேன். அதுக்காக எங்கிட்ட பேசவேயில்லை உன் புருஷன்….”, குரலில் கொஞ்சம் வருத்தம் தெரியவும்,
“பூம்மா… என் பொண்டாட்டியை சமாதானம் செஞ்சிட்டு பேச சொன்னீங்க. எங்க சமாதானம் ஆகறா? கையை காலை சுட்டுகிட்டு காபி போட்டு குடுத்தேன் இப்பதான்.”, என்றான் வினோத், அவள் முகத்தின் அருகே வந்து.
வானதி கை தானாக ஸ்பீக்கரை உயிர்பித்தது.
“டேய்..போக்கிரி…ஒட்டு கேட்கறியா?”, என்றார் சம்பூர்ணம் பொய் கோபத்துடன்.
“காலேஜ் லீவ் போட்டு, ஒட்டிகிட்டு கேட்டுட்டு இருக்கேன் பூம்மா….”, வினோத் சொல்லவும், “ஹோ..”, என்றவள் மூச்சைப் பிடித்து அவனைப் பார்த்து முழிக்க,
“ஓ… சரிதான்… அப்போ உன் சமாதானம் தொடரட்டும்பா….”, என்று சந்தோஷமாக சிரித்துக்கொண்டே கைபேசியை அணைத்தார்.
“என்ன வினோத்… அத்தை என்ன நினைச்சிருப்பாங்க?”, வானதி கடிய,
“மகனும் மருகளும் சந்தோஷமா இருக்காங்கன்னு நினைப்பாங்க. அவங்களும் ஹாப்பியா இருப்பாங்க. கூடவே….”, என்று நிறுத்தினான்.
“கூடவே ?”,
“இந்த ஹெட்லைட் வெளிச்சத்துல சிக்கின மான் முழிக்குமே…. அந்த மாதிரி நீ முழிச்சு நிக்கறத பாக்க எனக்கு செம்ம ஜாலியா இருக்கு,”, வினோத்தின் குறும்புப் புன்னகை மனதை கவர, முயன்று அவனை முறைத்தாள்.
“செல்லாது … செல்லாது….”, அவள் இமைகள் மேல் இதமாக முத்தம் வைத்தவன், மீண்டும் அவள் கண்கள் திறக்க, இப்போது சற்று கிறங்கிக்கிடந்த பார்வையைப் பார்த்து, “ஹ்ம்ம்ம்…. இதான் கரெக்டான லுக்..”, என்றான்.
“என்ன வினோத்… இப்படி ஒரே நாள்ல…எப்படி உங்களால… எனக்கு….”, அவள் சொல்ல வருவதைப் புரிந்தவன், இழுத்து அவளை மடி மேல்  சாய்த்துக்கொண்டு,
“இந்த மூளை இருக்கு பாரு மூளை, இதுதான் எனக்கு வில்லனே. அதை மத்தவங்ககிட்ட யூஸ் பண்ணு. நான்னு வரும்போது, பூ மாதிரி இருக்கே உன் மனசு…”, என்று தொடவந்தவன் கையை பிடித்துக்கொண்டாள். சரி என்று அவள் பிடியிலேயே இருக்க விட்டவன், “ பெரிய மேதைங்க எல்லாம்  follow your heartன்னுதான் சொன்னங்க follow your brain சொல்லலை. அதையே சிம்பிளா மனம் போல் மாங்கல்யம்னு நம்மாளுங்க சொன்னாங்க. யாருமே அறிவை சொல்லலை பார்த்தியா? அதனால இந்த செல்லாக்குட்டி மனசு என்ன சொல்லுதோ அதும்படியே இரு. நான் அப்படித்தான் இருக்கேன். “, அவள் தலையில் முட்ட, அவன் சொன்னதைப் பற்றி அவள் யோசிப்பது தெரிந்தது.
“டேய்… யோசிக்க விடாத… பாயின்ட் பாயின்ட்டா ஆர்க்யூ பண்ணுவா.”, என்று நினைத்தவன், “கண்ணம்மா, வீக்கென்ட் சந்தவாசல் போலாமா? எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு அங்க”, என்றான்.
அவன் எதிர்பார்த்தது போன்றே, யோசிப்பதை விட்டு, “போலாம்… என்ன வேலை?”, என்றாள் வானதி.
“என் போட்டோ பார்த்து ஒரு குட்டிப் பொண்ணு மயங்கினாளாம். அது எந்த போட்டோன்னு எனக்கு தெரியணும். அம்மா குடுத்திருக்காங்கன்னா, அங்க வீட்லதான் இருக்கும். அதை எடுத்துட்டு வந்து…பெருசா மாட்டி வைக்கணும்.”, என்றான் அவளை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே….அவள் நினைத்து வருந்தும், அவமானப்படும், வெட்கப்படும் நினைவுகள் அனைத்தையும் அறிந்து அதை அவன் கொண்டாடுவது என்று முடிவெடுத்திருந்தான். அப்போதுதான் அதைக் கொண்டு அவளிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மை விலகும். அதன் முதல் படிதான் அந்த போட்டோ.
அவன் கூறியதைக் கேட்டு முகம் சிவந்த வானதி, அவன் பார்வையை சந்திக்க முடியாமல், “இப்ப எதுக்கு அதெல்லாம்…. “, என்று வினோத்தின் நெஞ்சில் முகம் மறைக்க, “எப்படியும் எதாவது சொதப்பி உங்கிட்ட மாட்டுவேன்… அப்ப அந்த போட்டோ பக்கத்துல போய் நின்னு சாரி சொன்னா… நீ கொஞ்சம் கூலாயிடுவதான? “, என்று அவன் விளக்கம் கேட்டு சிரிக்கத் தொடங்கினாள்.
“ஓ …மாஸ்டர் ப்ளான் போல…”, என்று அவனைப் பார்த்தவளை காதலாய்ப் பார்த்தவன், ‘ இந்த சந்தோஷம் இவ கண்ல எப்பவும் இருக்கணும், இருக்க வைப்பேன்.’, என்று நினைத்துக்கொண்டான்.
அவனது பார்வையில் சிக்குண்டு மயங்கியவளோ…. ‘ நிஜமா… இத்தனை வருடங்களுக்குப் பின், நடக்க வாய்ப்பே இல்லை என்று  நினைத்தது இப்போது கைகளில் என்று எண்ணம் ஓட, அவளை அறியாமலேயே அவள் கைகள் அவன் தோளணைத்தது.
கை கட்டை எடுத்திருந்ததால், அவள் கிழித்த வடு சிகப்பாய் இருக்க, அதில் மென்மையாக ஒரு முத்தம் வைத்தவன், “எனக்கு ப்ராமிஸ் பண்ணு கண்ணம்மா, இனி அப்படி ஒரு கோவம் வராது…. வந்தா, அதை எங்கிட்ட காட்டு, எப்பவும், உன்னை இந்த மாதிரி காயப்படுத்திக்க மாட்டேன்னு சொல்லு. என் மேல ப்ராமிஸ் செய்…”, என்றான் தீவிரப் பார்வையுடன்.
அவன் வாயை கை கொண்டு மூடியவள், கண்கள் லேசாய் கலங்க, “ ப்ராமிஸ். இந்த மாதிரி செய்ய மாட்டேன்.”, என்றாள் மென் குரலில்.
“என் மேல எப்ப கோவம் வந்தாலும், உன் மனசு சொல்ற மாதிரியே நடக்கணும்… சரியா கண்ணம்மா?”, என்று  நைசாக போட்டு வாங்க, இன்னும் அவன் சொன்னதிலேயே லயித்திருந்தவள், சம்மதமாக தலை அசைத்தாள். அப்பறம்தான் அவன் சொன்னது புரிந்தது.
“ஹான்…. அதெல்லாம் முடியாது…. “, என்று உஷாராகவும்…
வினோத் உடனே.. “ஹே.. ஆஃப் பண்ணு ஆஃப் பண்ணு… நம்ம சந்தோஷமா இருக்கும்போது, உன் மூளைக்கு என்ன வேலை?”…. “, என்றவன் முத்தக் கணைகளை தொடுக்க,  வானதி யோசிக்க மறந்து, அவன் ஜாலங்களில் விரும்பியே கரைந்துபோனாள்.
வாழ்க்கை எப்போதும் வண்ணமயமாக இருக்காது. ஆனாலும் அதன் ஏற்றங்களில் தன்னோடு மகிழவும், இறக்கங்களில் தோள் சாயக்கவும் நேசம் கொண்ட நெஞ்சம் உடன் இருக்கையில், எல்லாவற்றையும் கடக்கும் தன்னம்பிக்கை வரும், அதுவே மேலும் மேலும் வெற்றிகளையும் சந்தோஷத்தையும் அள்ளிக்கொடுக்கும்.
  • முற்றும்

Advertisement