Advertisement

வினோத்தைப் பார்த்து மெல்ல புன்னகைத்தவள், “எனக்கு தெரிஞ்ச வரை, உங்களுக்கு ஸ்வேதா மேல இருந்த காதல் மாறாது, அப்படியே மாறினாலும், என் மேல வராதுன்ற எண்ணத்துலதான் இருந்தேன். என் மேலயும் உங்க பார்வை விழறது தெரிஞ்சப்போ நான் தடுமாற ஆரம்பிச்சேன். அப்பவும் நான் உங்க மனைவிங்கறதால, உங்களுக்கு வந்த ஒரு அபிமானமாத்தான் இருக்கும். அதனாலதான் நான் மனைவியா இருந்தா எதிர்பார்ப்புகள் வரும். நீங்க ஸ்வேதா விட்டு விலகி வர வேண்டியிருக்கும்னு உங்களுக்கு சொன்னேன். அப்படியாவது விலகிடுவீங்கன்னு. ஸ்வேதா,வம்சி போனதை ஒரு மாதிரி உங்க மனசு ஏத்துக்க ஆரம்பிச்சிருந்தது. என் ஆசையும் பலிக்குமான்னு அது எனக்கும் ஒரு ஹோப் குடுத்துச்சு. அதுக்குள்ள ஸ்வேதா பண்ண காரியம்… ம்ப்ச்… “, கைகளை ஆட்டி தன் கடுப்பைக் காட்டியவள்,
“வினோத்… வேணாம், உங்க மேல இத்தனை வருஷம் பைத்தியமா இருக்கேன். அதை காதல்னு கூட சொல்ல முடியாது. இப்ப இந்த சில மாசத்துல இன்னுமே கூடித்தான் இருக்கு. ஏன் இப்படி ஒரு பிடித்தம்னு இன்னமும் எனக்கு புரிஞ்சிக்கவே முடியலை. நீங்க ஒன்னும் ப்ர்ஃபெக்ட் கிடையாது, ஆனாலும் ஏன் என்னை மீறி உங்க சந்தோஷம் எனக்கு முக்கியமா இருக்குனு எனக்கே தெரியலை.’, அவள் சொல்ல சொல்ல போன உயிர் மீண்டது வினோத்திற்கு. நம்பிக்கை துளிர் விட்டது. வானதி அவள் பேச்சை நிறுத்தவில்லை….
“ இதுல நம்ம கொஞ்ச நாள் வாழ்ந்து, என் அதீத எதிர்ப்பார்பு கசந்து போச்சுன்னா, இல்லை உங்களை கஷ்டப்படுத்தி வெறுப்பாக்கிட்டா, இல்லை உங்களுக்காக மன்னிச்சு மன்னிச்சு விட்டுகொடுத்து என்னை தொலைச்சிட்டேன்னா சத்தியமா நான் தாங்க மாட்டேன். எனக்கு பயமா இருக்கு. அதுக்கு தெ..தெரியாமலே பி…பிரிஞ்சிடலாம்”, கண்ணில் நீர் கொட்ட,   நெஞ்சடைக்க திக்கித்தான் கூறினாள்.
அவள் முகத்தை இரு கைகளிலும் ஏந்தியவன், இரு பெரு விரலால், கண்ணீர் தடம் துடைத்து,
 “கண்ணம்மா… ப்ளீஸ்… ரொம்ப யோசிக்காதே. சில உணர்வுகள் ஏன் தோணுதுன்னு காரண காரியம் கண்டே பிடிக்க முடியாது. அதுல காதலும் ஒண்ணு. பழசையெல்லாம் விடு. என் போட்டோ பார்த்து வந்த க்ரஷோ, ஸ்வேதா மூலமா என்னை பார்த்து அதனால வந்த பிடித்தமோ, எதுவா இருந்தாலும் விட்டுடு. இப்ப இந்த சில மாசம் நாம ஒன்னாதான் இருக்கோம். இந்த முப்பது வயசுல , உனக்கு என் மேல இஷ்டம் வந்ததுதான? ஏன் வந்துச்சுன்னு ஆராய்ச்சி வேண்டாம்.  அப்படியாகுமா… இப்படியாகுமான்னு யோசிச்சி யோசிச்சி என்ன ப்ரயோஜனம்? உன்னை நீயே ரொம்ப கஷ்டப்படுத்திகிட்டு இருக்க…. உன் மனசுக்கு பிடிச்சிருக்கு. என் மனசுக்கும் பிடிச்சிருக்கு. அந்த பிரியத்துக்கு வழிவிடு. நீ அப்போ உன் எதிர்பார்ப்புகளை சொன்னப்போ நான் அதை சாதாரணமா எடுத்துகிட்டேன்… ஆனா இப்ப புரியுது…
எனக்கு இல்லை… நமக்கு ஒரு வாய்ப்பு குடு. சத்தியமா மிச்ச இருக்க காலம் பூரா உனக்கு நான் உணர்த்துவேன் நீ எடுத்த இந்த முடிவு சரின்னு. உன்னை காயப்படுத்தவே மாட்டேன்னு சொல்லமாட்டேன். சண்டை சமாதானம் எல்லாம் இருக்கும். காயத்துக்கான மருந்தாவும் இருப்பேன். எதுவானாலும் உன்னை விடமாட்டேன். அதேதான் நானும் உங்கிட்ட எதிர்பார்ப்பேன். இத்தனை வருஷமா என்னை நினைச்சு இப்படி ஒருத்தி இருந்திருக்கான்றதே எனக்கு ப்ரமிப்பா இருக்கு….எப்படி எடுத்துக்கறதுன்னே தெரியலை. எனக்கு சொல்ல வரலை….இன்னும் முழுசா என்னால அக்செப்ட் பண்ண முடியலை. ஆனா அதை கண்டிப்பா நான் உதாசீனப் படுத்த மாட்டேன். இதெல்லாம் எனக்கு தெரியறதுக்கு முன்னாடியே, உன்னை விரும்பினேன், அதை உனக்கும் சொன்னேன். உணர்த்தினேனா தெரியாது, ஆனா, கண்டிப்பா சொன்னேன். அதை நம்பறதானே? உன்னை உனக்காகப் பிடிச்சுத்தான் நம்ம கல்யாணத்தை நிஜமாக்கலாம்னு நினைச்சேன். என் விருப்பத்தை எதுவும் செயல்ல காட்டலை. தப்புதான். 
அப்படி நான் சறுக்கும்போது நிறுத்தி கேளு, உனக்குள்ளயே வெச்சு மறுகாதே, விட்டுக்குடுக்காதே. ஆத்திரம் வந்தா எங்கிட்ட சண்டைபோடு, உன்னை காயப்படுத்திக்காதே. நமக்குள்ள எந்த ஈகோவும் வேண்டாம். நீ சொன்ன மாதிரி நான் பர்ஃபெக்ட்ல்லாம் இல்லைதான். ஆனாலும் உன் மேல நிஜமான லவ் இருக்கு. கண்டிப்பா நீ பயப்படற மாதிரி ஒரு வழி பாதையா இருக்காது. என்னை நம்பி என்னோட வாழ வருவியா கண்ணம்மா?”, அவன் தவிப்பெல்லாம் முகத்தில் தெரிய, வானதியால் எதுவும் யோசிக்க முடியவில்லை. சஞ்சலம் நிறைந்து அவள் விழிகள் ஒரு நிலையில் இல்லாமல் ஆட… அவள் முகத்தை பிடித்தவன், அவள் பார்வையை அவன் புறம் திருப்பினான். அவன் கண்களில் தெரிந்த நம்பிக்கையிலும் காதலிலும் தொலைந்தவள் தலை தானாக சம்மதித்து ஆடியது.
இழுத்து நெஞ்சோடு அணைத்தவன் கண்ணிலும் கண்ணீர் துளிகள். நெஞ்சில் புதைந்தவளுக்கு வேகமாய்த் துடிக்கும் அவன் இதயத் துடிப்புக் கேட்டது. அதுவே சொன்னது, எவ்வளவு உணர்ச்சிகரமாய் இருக்கிறான் என்பதை. அவனை ஆசுவாசப்படுத்த வானதியின் கைகள் மெல்ல அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தது. அதில் தளர்ந்தவன், தானும் அணைத்து, அவள் உச்சந்தலையில் முத்தங்கள் வைத்தான்.
 “நம்பு, இது நம்ம வாழ்க்கை, அதை நாம சரியா வாழுவோம்னு நம்பு. உன்னோட அன்பும் அக்கறையும் ஒரு வழிப் பாதையில்லைன்னு உனக்கு நம்ம வாழ்க்கை பூரா நான் ப்ரூவ் பண்றேன்…இல்லைன்னா சண்டை போட்டு உன் உரிமையை நீ வாங்கிக்குவன்னு நம்பிக்கை வை.” ஒரு பெருமூச்சுடன் விலகியவன், போய் முகம் கழுவிட்டு வா. சாப்பிட எதாவது ஆர்டர் செய்யறேன். வீட்டுக்கு போலாம். “, என்றான்.
“ஓஹ்?”, மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள். கண்ணில் ஒரு எதிர்பார்ப்பு எட்டிப்பார்த்ததோ?
ஈரக் கண்களும், சிவந்த மூக்கும், கண்ணீர் தடங்களால் நிறைந்த கன்னங்களும் என்று வானதியைப் பார்க்க அள்ளி அவள் துயர் போக்க வேறு விதமாக ஆசை எழுந்தாலும்,
“ம்ம்… வீட்டுக்கு போலாம். நீ டயர்டா இருக்க. ரெஸ்ட் வேணும். “ நெற்றியில் அழுத்தமாய் ஒரு முத்தம் வைத்தவன் கைகள் அவள் இடையையும் சேர்த்து அழுத்தியது.
விலகியவன், “போ…  டெம்ப்ட் ஆகுமுன்ன கிளம்பு.”, எழுந்து வெளியில் சென்றான்.
உதடு பிதுக்கியவள், ‘ம்ஹூம்… இப்படி மூக்கை உறிஞ்சிகிட்டு இருந்தா கிட்ட வரத் தோணுமா’, என்று தோன்றியதை அப்படியே தலையில் தட்டி, ‘தோணவேதான் டெம்ப்ட் பண்ணாதன்னு வெளிய போறார். இடுப்பை அழுத்தினதுல தெரியலையா உனக்கு’, என்று மனம் சொன்னதை ஆமோதித்து கிளம்பச் சென்றாள்.
‘எல்லாத்துக்கும் இப்படி எதிர்மறையாவே யோசிக்கறதை முதல்ல நிறுத்தணும். எனக்கு நானே வில்லியா இருக்கேன்.’, தனக்குள்ளேயே ஒரு கொள்கை முடிவை எடுத்தவளாக குளியலறைக்குச் சென்றாள்.
காரில் மெல்லிசை ஒலிக்க, மிதமாக ஏசி குளிரும், உண்ட மயக்கமும், இரண்டு நாட்களாக நடந்த களைப்பும், மன பாரம் மொத்தமும் நீங்கிய ஒரு விடுதலை உணர்வும் ஒருங்கே சேர சீக்கிரமே ஆழந்த ஒரு தூக்கத்திற்கு சென்றுவிட்டாள் வானதி.
வானதியை பற்றி இப்போது புரிந்தது. அவளை சிந்திக்க விட்டால்தான் பிரச்சனை. மனம் விரும்புவதை அவள் மூளை ஒப்புதல் அளித்தால்தான் நிறைவேற்றுகிறாள். ஆசைப்பட்டேன், செய்தேன் என்பதே இல்லை. தனியாய் எத்தனை போராட்டம். ஸ்வேதா போனபின்னர் கூட, தன் ஆசையை நிறைவேற்ற ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை. எத்தனை கட்டுப்பாடு வேண்டும். பிரம்மிப்பாக இருந்தது. இளமையின் முக்கியமான பருவம், இருபதுகள். அதில் பெரும் பகுதியை தன்னால் தொலைத்திருக்கிறாள். ‘ஏன், மதன் கொஞ்சம் சந்தோஷத்தை மீட்டுக் குடுத்தானே..’, மனசாட்சி நினைவுறுத்தியது. முகம் சுருங்கினாலும், அவனாவது கூட இருந்தானே என்று தோன்றியது. கூடவே, அவன் காதல் சொல்லவும்தான், அவள் பிரச்சனை அதிகமானதும் என்று புரிந்தது. ஒரு பெருமூச்சு வந்தது வினோத்திடமிருந்து. முதலில், அவளை தன் மனைவியாக உணர வைக்க வேண்டும். அவளிடம் தன் காதலை வெளிப்படையாக காட்ட வேண்டும்.  இத்தனை வருஷமாக அவள் பொத்தி வைத்ததெல்லாம் வெளியே கொண்டு வரவேண்டும். அடுக்கடுக்காக யோசனை வந்தது. இனி அவளுக்காகன்னு நான் இருக்கேன்னு உணர்ந்தாத்தான் அவ மேலயே அவளுக்கு நம்பிக்கை வரும்டா வினோத்து…, என்று தனக்குத்தானே சொலிக்கொண்டான்,
அவ்வப்போது அவளைப் பார்த்துக்கொண்டே வாடகைக் காரை மதுரைக்கு ஓட்டிச் சென்றவன், பெட்ரோல் போட நிறுத்தினான்.  ஒரு முடிவோடு, சற்று தள்ளி வந்து சங்கரை அழைத்தான்.
“ஹலோ… சொல்லு மச்சான்…”, சங்கரின் குரல் வரவும்,
“மாப்ள… எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்டா…”
“சொல்லு மச்சி… “
“வானதி கூட நான் வந்துகிட்டு இருக்கேன். மதுரை ஃப்ளைட் எடுத்து, ஏர்போர்ட்லர்ந்து வீடு,ம்ம்ம்…. எப்படியும் இன்னும் நாலு மணி நேரம் ஆகும் வர. அதுக்குள்ள நீ என் வீட்டுக்குப்போய் என் ரூமை அலங்காரம் பண்ணனும்…”, அவனையும் மீறி ஒரு புன்னகை வந்தது.
“ஆங்…”, கேட்டது சரிதானா என்று போனை ஒரு முறை பார்த்த சங்கர்,
“நீ… அலங்காரம்னு சொல்றது…?”
“அதே மச்சி… இந்த வாட்டி ஹார்டின் போடு… குப்பைக்கு போகாது.”, என்று சிரித்து கொண்டே சொல்ல,
“ஹோ… சந்தோஷம்டா… இப்ப … இப்ப கிளம்பறேன்… கோயம்பேடு லோடை அப்படியே தூக்கறேன்.”, சங்கர் ஆர்பரித்தான்.
“இரு… மல்லி, ரோஜா வேணாம். வேற என்ன பூ?”
“மல்லி, ரோஜா வேணாம்னா… “, புனிதாவிடம் ஏதோ கேட்பது புரிந்தது, ‘அச்சோ, இவனோட’, என்று எண்ணிக்கொண்டான் வினோத்.
“ஆஹ்… சம்பங்கி ஓக்கேவாடா? கான்ட்ராஸ்ட்க்கு கொஞ்சம் சாமந்தி?”
“சங்கரா….ரூம் சுவத்துல எவ்வளவு வேணாலும் அலங்காரம் பண்ணு…ஆனா, படுக்கையில கொஞ்சமா போடுடா ராஜா… “
“ஏண்டா… பெட் மேலதான செய்வாங்க?”
“டேய்…. உஃப்… அது..பூ ஒட்டும்… உனக்கு தெரியாதாடா…’, என்று கேட்க…
“ம்க்கும்…. என் கஞ்ச மாமானார் எங்கடா பூவெல்லாம் போட்டார்? எனக்கு தெரியாதுடா….”, சங்கரின் ஆதங்கத்தில் வாய்விட்டுச் சிரித்தான் வினோத்.
“இதுக்கு மாமனார் காசை எதிர்ப்பார்க்காம, சொந்த காச செலவு பண்ணணும்டா…. ஆனாலும் அனுபவஸ்தன் பேச்சை கேட்டு பெட் மேல கம்மியா போடு. ஏது, புனிதா இல்லையா பக்கத்துல ? தைரியமா மாமனாரை திட்டற?“
“ஹ்ம்ம்… கிளம்பறதுக்கு உள்ள போயிட்டா.  சரி மச்சி… நாங்க ரெடி பண்ணிடறோம். வீட்டு சாவி?”
“மலர் அக்காகிட்ட சொல்லிட்டேன். அங்க வீட்ல இருப்பாங்க. சமைக்க சொல்லியிருக்கேன்.”
“ரைட்டு. நீ வீட்டுக்கு வரதுக்கு ஒரு அரை மணி நேரம் முன்னாடி சொல்லுடா, நாங்க எஸ்ஸாகிடறோம்.”
“ஒகேடா…. அப்பறம் மச்சி… முக்கியமாக விஷயம்….”, வினோத்தின் குரலில் சீரியசாக சங்கரும், “சொல்லுடா…”, என்றான்.
“ஹார்ட்டின்ல அந்த அம்பு போட மறந்துடாதடா…. “, வினோத் சொல்லவும் சங்கர் வசை மாரி பொழிய, சிரித்துக்கொண்டே இணைப்பை அணைத்தான் வினோத்.
இந்த ஏற்பாடுகள் எதுவும் தெரியாமல் ஆழ்ந்த ஒரு நித்திரையில் இருந்தாள் வானதி. விமானப் பயணத்திலும் ஏறியதும் உறங்கிவிட்டாள்.
அவள் பேசியதெல்லாம் மீண்டும் அசை போட்டுக்கொண்டிருந்தான் வினோத். அத்தனைப் பேச்சிலும், அவன் மேல் காதல் கொண்டதாக வானதி சொல்லவேயில்லை. க்ரஷ் என்றாள், பிடித்தம், பைத்தியம் என்று என்னனென்னவோ பெயர் சொன்னாள். மனதளவில் கூட ஒத்துக்கொள்ள முடியவில்லை அவளால். அவள் காதல் என்று ஏற்றுக்கொள்ள இருக்கும் பயத்தைப் போக்க வேண்டும். அந்த நம்பிக்கையை அவன்தான் தர வேண்டும் தன் செய்கைகளால் என்று மீண்டும் சொல்லிக்கொண்டான்.அவளயே வந்து அவ காதலை சொல்ல வைக்கறேன் என்று சபதமெடுத்துக்கொண்டான்.
சென்னையில் விமானம் இறங்கவும் விழிப்பு தட்டி எழுந்தவள்,  சுற்றிப் பார்த்து, “ஓஹ்… வந்துட்டோமா? எனக்குத் தெரியவேயில்லை.”, என்றாள்.
“நீ எங்க… வாயை பிளந்து, குறட்டை விட்டுல்ல தூங்கிட்டு இருந்த?”, வினோத் சொல்ல,
“பொய்… நான் குறட்டையெல்லாம் விடமாட்டேன். “, வீம்பாக சொன்னாலும், அப்படி எதுவும் இருக்குமோ என்று வினோத்தைப் பார்க்க, “ஏன்… குறட்டை விட்டா தப்பா? நான் குறட்டை விட்டு தூங்குனா, என்னை கீழா பார்ப்பியா?”, அவள் பார்வையை சரியாக படித்தவன் கேட்க, கொஞ்சம் அசடு வழிந்தாள் வானதி.
“இல்லை… அது…. “, அவள் இழுக்க….
 “ ம்ம்ம்… பழகிக்கலாம்.”, என்றவன், அவள் கையை எடுத்து சுவாதீனமாக உள்ளங்கையில் ஒரு முத்தம் பதித்து விடுத்தவனைப் பார்த்து முழித்தாள் வானதி. எதிர்பாராமல் இந்த சின்ன நெருக்கம், கைகளில் பதிந்த அவன் மீசையின் குறுகுறுப்பு, தீண்டிய நுனி நாக்கின் தகிப்பு, வானதியின் முகத்தை சிவக்க வைக்க, ஓரக் கண்ணால் பார்த்தவன், ‘ஹையோ… கண்ணம்மா… இதுக்கே இப்படி ஒரு ரியாக்ஷ்னா….’, என்று மனதுக்குள் குதுகலித்தான்.

Advertisement