Advertisement

அவனையும் மீறி வினோத் லேசாக உறும, அவனை நிமிர்ந்து பார்த்தவள், அவன் முக பாவனையைக் கண்டு, “கேட்கறதே கஷ்டமா இருக்குல்ல உங்களுக்கு? தெரியும், அந்த வலி தெரியும் எனக்கும்.”, லேசாக புன்னகைத்தவள்,
“அன்னிக்கு ராத்திரி எனக்குள்ள பெரிய போராட்டம். மதன் கிட்ட எல்லாமே இருந்தும், அவர் என் கை பிடிச்சு காதல் சொன்ன போது, சத்தியமா ஒன்னுமே தோணலை. ஒரு சின்ன ஈர்ப்பு கூட இல்லை. அப்பத்தான் எனக்கே தெரிஞ்சது, உங்களை மனசுல எவ்வளவு ஆழமா போட்டு புதைச்சு வெச்சிருந்தேன்னு.”
“நீங்க உங்க வாழ்க்கையை சிறப்பா சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருக்கீங்க. இதுல நான் காத்துகிட்டு இருக்கறது முட்டாள்தனம். தப்பும் கூட. மதனோட என் வாழ்க்கை கண்டிப்பா நல்லா இருக்கும்னு என்னை நானே நம்ப வெக்க முயற்சி பண்ணேன். ஆனாலும், மதனை புருஷனா என்னால நினைக்கவே முடியலை. எனக்குள்ள அப்படி ஒரு எரிமலை. எப்பவுமே அறிவு சொல்றதைக் கேட்டு நடக்கறவ நான்.  ஒரு போட்டோ, ஒரு நாள் கனவு, அது என்னை இப்படி கொண்டு வந்து நிறுத்துமான்னு என்னாலயே நம்ப முடியலை. என் மேலையே வெறுப்பாகிடுச்சு. யோசிக்காம,  எதையும் சட்டுனு எமோஷனலா செய்ய மாட்டேன். இந்த விஷயத்துல இப்படி என்னால எனக்கு நல்லதுன்னு தெரிஞ்சும் சம்மதிக்க முடியலைன்னு அப்படி ஒரு கோவம் என்மேலயே.”, இன்னும் கூட அந்த கோவத்தின் சுவடுகள் இருந்தது அவள் குரலில்.
“டைனிங் டேபிள்ல பழம் வெட்டற கத்தி இருந்தது ஸ்டான்ட்ல, எடுத்து அப்படியே கட் பண்ணிகிட்டேன் தொடையில. நைட் ஷார்ட்ஸ் போட்டிருந்தேன். இரத்தம் பாட்டு வழியுது. நான் பார்த்துகிட்டே இருக்கேன். எப்ப கத்தி எடுத்தேன், எப்ப கிழிச்சேன்னு எனக்கே தெரியலை. சுதாரிச்சு,  நானே ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிகிட்டேன். ரொம்ப பயந்துட்டேன். அதுதான் முதல் வாட்டி. “
அவள் வர்ணித்ததில் மிரண்டு போய் பார்த்திருந்தான் வினோத்.
 “மதன்கிட்ட ‘வீக்கெண்ட் முழுசா யோசிச்சேன். இல்லை. கண்டிப்பா என்னால முடியாது. சாரி.’ன்னு சொல்லிட்டேன். கொஞ்சம் பேசினதுக்கப்பறம், புரிஞ்சிகிட்டு விலகிட்டார். எங்க கம்பனி விட்டு மாறியும் போயிட்டார். ஒரு நல்ல ஃப்ரெண்டை இழந்துட்டேன்.”, குரலில் வருத்தம் இழையோடியது.
“மறுபடி தனிமை. நானும் என்னோட நினைவுகளும்தான். என்னையே டைவர்ட் பண்ணிக்க நீச்சல், ஹைக்கிங்னு போனேன். மதனை நான் வேண்டாம்னு சொன்னதும், ஒன்னு தெளிவா புரிஞ்சுது. உங்களைத் தவிர வேற யாரையும் நான் கல்யாணம் செய்ய மாட்டேன்னு.  வீட்ல அலையன்ஸ் பார்க்க ஆரம்பிக்கவும், எல்லாம் நான் வந்து பார்த்துக்கலாம் இருங்கன்னு சொல்லியிருந்தேன். இதெல்லாம் சரி, ஆனா என்னை மீறிய செயல் ஒன்னுதான் ரொம்ப பாதிச்சுது. ராத்திரி தனிமையில உங்களையும் என்னையும் வெச்சு ஒரு கற்பனை வாழ்க்கை உருவாக்கினேன். ஸ்வேதா சொன்ன அத்தனையும், ஆனால் ஸ்வேதாவுக்கு பதிலா நான். “, தலை கவிழ்ந்து மெல்லிய குரலில் கூறிக்கொண்டிருந்தாள்
“காலையில என் முகத்தை பார்க்க எனக்கே ஒப்பலை. ஸ்வேதாவுக்கு துரோகம் பண்ற மாதிரியே ஒரு ஃபீல்.   மாதிரி என்ன அதுதான் நிஜமும். கூட உங்களுக்கு அவ்வளவு பவர் எப்படி நான் கொடுத்தேன்? இத்தனைக்கும் நான் பெருசா பேசினது கூட இல்லை உங்ககிட்ட. முக்கால்வாசி அவ சொன்னதை வெச்சித்தான் உங்களைத் தெரியும். அப்படி இருக்க ஏன் …ஏன் நீங்க இப்படி என்னை ஆகர்ஷிக்கணும்? எவ்வளவு யோசிச்சும் எனக்கு பதில் தெரியலை. இந்த பழக்கத்தை நிறுத்தவும் முடியலை.”
“என்னை நானே வெறுக்க ஆரம்பிச்சேன். இராத்திரி தூக்கத்தையே விட்டேன். தூங்காம வேலை பார்த்துகிட்டு இருப்பேன். அப்படியே டயர்டாகி மேஜை மேலயே படுத்து கண் அசந்திருக்கேன். கனவுலயும் நீங்க. அப்பத்தான் கோவமாகி இரண்டாவது வாட்டியும் தொடையில் கிழிச்சிட்டேன். இரத்தத்தை நிறுத்தக் கூட தோணாம, யோசிப்பியா… திரும்ப இந்த மாதிரி கேவலமா யோசிப்பியான்னு என்னை நானே அறைஞ்சிகிட்டு, அழுது… ம்ப்ச்….”
“வானதி….”, அவள் அறியாமலேயே கண்ணில் பொங்கி வந்த கண்ணீரை துடைக்கப்போனவனை தடுத்து, தானே துடைத்துக்கொண்டாள். மூக்கை உறிந்து கொண்டிருந்தவளிடம் தன் கைகுட்டையைக் கொடுத்தான். தன்னை சீர் செய்தவள்,
“மூணாவது வாட்டி என்னை கிழிச்சிகிட்டதும், கண்டிப்பா இதை என்னால நிறுத்த முடியாதுன்னு புரிஞ்சுது. சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட கவுன்சலிங் போனேன். இவன் இல்லைன்னா அவன்னு தூக்கி போட்டுட்டு போம்மா, இதை ஒரு ப்ரச்சனைன்னு வந்துட்ட சொல்லன்னு மனசுக்குள்ள நினைச்சாலும், அந்தம்மா பொறுமையா கேட்டாங்க.”
“வேணாம் வேணாம்னு நான் அழுத்தி அழுத்தி வைக்கவும், உங்க நினைப்பு என்னை ரொம்ப தீவிரமா ஆக்ரமிச்சிடுச்சு. அப்பவும், எனக்கு நானே ‘நீ எதிர்பார்க்கற குவாலிட்டீசோட ஒருத்தன் வந்தா சரியாகிடும்னு ஒரு லாஜிக்கலான சமாதானம் சொல்லிக்கவும் அமைதியா இருந்தது, மதனை வேணாம்னு சொல்லவும், அழுத்தி வெச்சிருந்த நினைப்பெல்லாம் வெடிச்சு வெளிய வந்திருச்சு. ‘நீ அப்பவே அவர் மேல இருந்த கரஷ், காதல் போச்சேன்னு அழுது புலம்பி, ஸ்வேதாகிட்ட சண்டைபோட்டு விலகியிருந்தேன்னா உன் மனசு சமாதானமாகியிருந்திருக்கலாம். நீ கூடவே இருந்து கல்யாணம், அதுக்கப்பறமான அவங்க வாழ்க்கை எல்லாத்தையும் பார்த்து, உன் ஆசையை உனக்குள்ளையே அழுத்தி, அதை புரையோட விட்டுட்ட’,ன்னு நிறைய சொன்னாங்க.”
“தூக்க மாத்திரை தயவுல சில காலம் போச்சு.  போராடாதே.  நீ உன்னை உயர்வா ஒரு இடத்துல வெச்சிருக்க, நானா இப்படின்னு உன்னால ஏத்துக்க முடியலை. அந்த ஈகோவை விடு. இதுவும் நாந்தான். யாரும் பெர்ஃபெக்ட் கிடையாதுன்னு ஒத்துகிட்டு போ. அவரைப் பத்தின யோசனை வந்தா வரட்டும். தடுக்காதே. தானே வந்து அடங்கும்னு அட்வைஸ் பண்ணாங்க.”
“ஸ்வேதா சீமந்தமப்போ வந்து இரண்டே நாள்ல ஓடிட்டேன். உங்களைப் நேரா பார்க்கக்கூட முடியலை எனக்கு. அப்போ நான் கவுன்சலிங்லதான் இருந்தேன். போன்ல ஸ்வேதா பேசுவா. முடிஞ்சவரை குழந்தையப் பத்தி பேசற மாதிரியே பார்த்துக்குவேன். ஒரு மாதிரி என்னை நானே தேத்திகிட்டு இருந்தேன். கொஞ்ச நாள் போனா வீட்ல பார்க்கற மாப்பிள்ளையை கல்யாணம் செய்துக்கணும்னு நினைச்சிருந்தேன். அப்பத்தான் இந்தியா வந்தப்போ, ஸ்வேதா ஆக்சிடென்ட்.”
வினோத்திற்கு என்ன யோசிப்பது என்று கூட தெரியவில்லை. தன்னால் ஒருத்தி இவ்வளவு துன்பப்பட்டிருக்கிறாள். ஸ்வேதா நினைத்திருந்தால் வானதிக்கு உதவியிருக்கலாம், அவள் முக மாற்றத்தை அறிந்தவள் அதைப் பற்றி கொஞ்சம் கேட்டிருந்தால் ஒருவேளை வானதி மனதில் இருப்பதை சொல்லியிருக்கலாம். ஆனால் ஸ்வேதா தன்னைப் பற்றி மட்டும் எப்போதும் போல யோசித்திருந்தாள். இதில் வானதியின் துன்பத்தைப் பார்த்தும் கூட அதில் ஆராய்ச்சி செய்திருக்கிறாள் என்ற நினைப்பு கசந்தது.
“என்னோட எண்ணங்களாலத்தான் அவள் சீக்கிரம் போய் சேர்ந்துட்டாளோன்னு ரொம்ப குற்ற உணர்ச்சியாகிருச்சு. சத்தியமா அவ போகணும்னு நான் நினைக்கலை…. ஆனாலும் அழ் மனசுல இருந்திருக்கலாம்… என்னென்னவோ நினைச்சு குழம்பினேன். திரும்ப தூக்க மாத்திரை, கவுன்சிலிங்னு போனேன். வீட்ல கலயாணப் பேச்சை மறுபடியும் ஆரம்பிச்சாங்க. சத்தியமா யாரையும் கல்யாணம் செய்ய முடியும்னு தோணலை எனக்கு. என்னதான், அவ போனதுக்கு நான் காரணமில்லைன்னு புத்திக்கு தெரிஞ்சாலும், எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நான்  அமைச்சிக்கவோ, வாழவோ என் மனசு ஒப்பலை. அதுக்கும் ஒரு பேர் சொன்னாங்க. சர்வைவர்ஸ் கில்ட். அதை எப்படி போக்கறதுன்னு நிறைய அறிவுரை என் சைக்யாட்ரிஸ்கிட்டருந்து. ஒரு மாதிரி தேறி இந்தியாக்கு வந்தேன். “
“அப்பறம் ஒரு கல்யாணத்துல அத்தையைப் பார்த்தேன். அவங்க உங்களைப் பத்தி சொன்னதும், எனக்கு மனசே கேட்கலை. ஒரு இழப்பை மனசு ஏத்துகிட்டு வாழ்க்கையை தொடர பல நிலைகள் இருக்கு. அதிர்ச்சி, அழுகை, போயிட்டாங்கன்றதை ஏத்துக்க முடியாம இருக்கறது, அப்பறம் போனவங்க மேல கோவம், ஏன் எனக்கு மட்டும் இப்படின்னு கழிவிரக்கம்னு கடந்து கடைசியா அவங்க போனாலும் உங்க வாழ்க்கை அதோட முடியலை, அதை நீங்க வாழறதுல தப்பில்லைன்னு தெளிஞ்சி வரணும். இதெல்லாம் படிப்படியா கடந்து வரணும். நீங்க அவங்க போயிட்டாங்கறதையே ஏத்துக்க முடியாம இருக்கீங்கன்றது புரிஞ்சுது.  ஸ்வேதாவை மறக்க வேணாம், ஆனால் அவ போயிட்டாங்கறதை உணரணும். அதை ஏத்துகிட்டு, உங்க வாழ்க்கையை வாழ நினைக்கணும். உங்க சந்தோஷத்தை நீங்க மீட்டுக்கணும்னு ஆசைப்பட்டேன். அப்படி ஆச்சுன்னா, அட்லீஸ்ட் என் குற்ற உணர்வு கம்மியாகும்னு நினைச்சேன்.
“கூடவே, கல்யாணப் ப்ரெஷர், நம்ம இரண்டு பேருக்குமே இருந்துச்சு.  அதனாலதான் கல்யாணப் ப்ரபோசல். அதுவும், உங்க பேரை சட்டுனு சொல்லிட்டேன். அப்பறம்தான் சாதக பாதகத்தை யோசிச்சேன். “
“அப்போ, உன் குற்ற உணர்ச்சியை தீர்த்துக்கத்தான் என்னை கல்யாணம் செய்ய நினைச்சியா வானதி?”, சற்று அடிபட்ட குரலில் கேட்டான் வினோத்.
“முக்கியமான காரணம் அதுதான். கூடவே, இவந்தான ஊர்லயே இல்லாத மகராசன். இவனைக் கட்டலைன்னுதான இந்த ஆர்பாட்டம். கட்டிக்கோன்னு மனசு பிரகாரமே விட்டுட்டேன். முன்னாடியே என்னை நீங்க கண்டுக்கலை. இப்பவும் என்னை விரும்ப மாட்டீங்கன்னு நினைச்சேன். ஓரு வேளை உங்க கூட பழக பழக, சே, இவ்வளவுதானா இவர், இதுக்கா நீ ஆர்பாட்டம் பண்ணன்னு என் மனசை தெளிய வெச்சிக்கலாம்னு ஒரு எண்ணம். ஆனா இந்த முறை திரும்ப எனக்கு உங்களை பிடிச்சிருந்தா, அது ஏன்னு புரிஞ்சிக்கவும் ஆசைப்பட்டேன். ரிஸ்க்குதான். ஆனாலும், இந்த முறையும் ஒரு வேளை உங்க மேல நிஜமாவே காதல் வந்தா, டைவர்ஸ் வாங்கிட்டு, அந்த சைக்கியாட்ரிஸ்ட் சொன்ன மாதிரி அழுது புலம்பி, காதலுக்கு சமாதி கட்ட நினைச்சிருந்தேன்.”, அவள் சொல்லி முடிக்கவும்,
“அப்ப, அந்த காதலை நிறைவேத்தற ஐடியாவே இல்லையா உனக்கு?”, ஆதங்கமாய்க் கேட்டான் வினோத்.
‘இவ சொல்றதைப் பார்த்தால, வந்த வேலை முடிஞ்சுது, நான் கிளம்பறேன்னு சொல்லுவா போலருக்கேடா? நீயோ, உன் காதலோ, எதையும் அவ கன்சிடர் செய்யலையா… இரு முதல்ல, இப்ப அவ உன்னை காதலிக்கறாளா இல்லையா? அதையும் சொல்லலையே…’, உள்ளுக்குள் நெஞ்சம் தடதடத்தது வினோத்திற்கு.

Advertisement