Advertisement

அத்தியாயம் – 20
என்ன நினைத்தாளோ… அத்தனை வார்தையாடல்களுக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாக, படுக்கையில் சாய்ந்து அமர்ந்தவள், பேசத் தொடங்கினாள்.
“நான் வேலைக்கு சேர்ந்து ஒரு ஏழு எட்டு மாசத்துல கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பிச்சாங்க வீட்ல. நான் உள்ள இருக்கறது தெரியாம, அப்பா ஒரு ஜாதகம் வந்திருக்குன்னு அம்மாகிட்ட காமிச்சாங்க. அம்மா கூட இருந்த போட்டோ பார்த்துட்டு ‘பையன் அழகா இருக்காங்கன்னு’ சொல்லவும், எனக்கு ஆர்வம். இதுதான் எனக்குத் தெரிஞ்சு வர முதல் அலையன்ஸ்.
அப்பா, ‘உள்ள வை. ஜாதகமெல்லாம் பொருந்தினா, அப்பறம் வானதிகிட்ட காட்டிக்கலாம். இப்ப எதுவும் சொல்லாதன்னு’ சொல்லிட்டார். ஆனாலும் எனக்கு அதை எடுத்து பார்க்கணும்னு ஒரே க்யூரியாசிட்டி.
அன்னிக்கு ராத்திரி இரண்டு பேரும் சீரியல்ல மூழ்கியிருக்கும்போது, போய் அம்மா ரூம்ல ட்ராயர்ல இருந்த கவரை பிரிச்சு பார்த்தேன். போட்டோ பார்த்ததும் என்னவோ டக்குனு உடனே பிடிச்சுது. கூட இருந்த விவரமெல்லாம் பார்த்ததுமே மனப்பாடமாகிருச்சு. டீ.வில ஆட் வர சத்தம் கேட்டதும், எடுத்த மாதிரியே வெச்சிட்டு,என் ரூமுக்கு ஓடிட்டேன்.
அன்னிக்கு கனவெல்லாம் நான் பார்த்த போட்டோல இருந்தவர்தான். அவர்தான் உனக்குன்னு மனசு சொல்லிகிட்டே இருந்துச்சு.எனக்கெல்லாம் இப்படி ஆகும்னு சத்தியமா நினைக்கலை. ஒரு போட்டோ பார்த்து இப்படி ஒரு கற்பனை கோட்டை கட்டுவேன்னு இப்ப நினைச்சாக்கூட அபத்தமா இருக்கு.
மறுனாள், ஸ்வேதா கூப்பிட்டாளேன்னு வேண்டா வெறுப்பா அவளோட ஷாப்பிங் போனேன். ஃபூட் கோர்ட்ல உட்கார்ந்திருக்கும்போதுதான் கொஞ்சம் தள்ளி ஒருத்தரைப் பார்த்தேன். நேத்து நான் ஃபோட்டோல பார்த்த அதே வரன். செம்ம ஷாக். சினிமாலதான் இப்படியெல்லாம் வரும்னு நினைச்சிருந்தேன். பார், உனக்குத்தான் அவர், நான் சொன்னேந்தானேன்னு மனசு குதிச்சிகிட்டு இருந்துச்சு. நம்ப முடியாம அவரையே பார்த்தேன்.
யாரோ அவரையே பார்க்கறாங்கன்னு தோணுச்சு போல. சுத்தி முத்தி பார்த்தார், ஒரு தரம் என்னையும் கிராஸ் பண்ணி போச்சு அவர் பார்வை, ஆனா நிக்கலை. எனக்குத்தான் அவரை தெரியும், அவருக்கு தெரியாதில்லன்னு மனசே ஒரு சமாதானம் சொல்லுச்சு.
அப்பதான் ட்ரிங்க்ஸ் ஆர்டர் செய்யப் போன ஸ்வேதா, நேரா அவர் டேபிள்க்கு போனா. லாங் ஸ்கர்ட், சின்ன டாப்ஸ், பெரிய ஜிமிக்கி, வளையல்னு ஒரு மினி நயன்தாரா மாதிரி இருந்தா ஸ்வேதா அன்னிக்கு. அவளைப் பார்த்த மனுஷன் முகம் ப்ரகாசமாச்சு. அவ பேசினதைக் கேட்டு எதோ சிரிச்சார். அப்பறம் அவ கூடவே எங்க டேபிள்க்கு வந்தார்.
ஸ்வேதா என்னை அறிமுகப்படுத்தினா. ஒரு மரியாதையான ஒரு சின்ன புன்னகை. அதுக்கப்பறம் பார்வை கவனம் எல்லாம் ஸ்வேதா மேலதான் இருந்துச்சு.
நாந்தான் பக்கபக்கன்னு முழிச்சிகிட்டு இருந்தேன். என்ன பேசன்னு தெரியலை. எதாவது பேசுடின்னு எனக்கு நானே திட்டிகிட்டாலும் ஒன்னும் தோணலை. அதுக்குள்ள ஸ்வேதா, ‘ஜூஸ் கலெக்ட் பண்ணிட்டு வா வன்ஸ்னு’ பில்லை எங்கிட்ட குடுத்து அனுப்பிட்டா.
நான் போயிட்டு வரதுக்குள்ள, போன் நம்பர் மாத்திகிட்டாங்க. அங்கிருந்த ஒரு கண்ணாடில என்னைப் பார்த்தேன். ஒரு சாதாரண டைட்ஸ், குர்த்தா. முகத்துல ஒரு மேக்கப் கிடையாது. ஏன் பொட்டு கூட வெக்கலை. முகம் கொஞ்சம் எண்ணெய் வடிஞ்சிட்டிருந்தது. காதுல ஒரு சின்ன ஸ்டட். வளையல், வாட்ச் எதுவும் இல்லை. முடியை இழுத்து ஒரு போனிடெயில் போட்டிருந்தேன். அன்னிக்கு என் கர்வத்துக்கு ஒரு பெரிய அடி. குல்ஃபி ஐஸ் மாதிரி இருக்க ஸ்வேதாவைத்தான் எந்த பையனும் பார்ப்பாங்க. சுமாரா இருக்க என்னை ஏன் திரும்பிக் பார்க்கணும்?
ஆனாலும் ஒரு கோவம். நியாயமில்லாத கோவம்னும் தெரியும். ஆனாலும் அதெப்படி, எனக்கு பார்த்ததும் பிடிச்சுதே, ஆனா அவருக்கு அப்படியில்லையே, அப்ப என் மனசு பில்டப் பண்ண மாதிரி இல்லையா, அது எப்படின்னு ஒரே குழப்பம்.
அவள் சொல்லச் சொல்ல, அது ஸ்வேதாவை வினோத் முதன் முதலாக பார்த்த  நாள் என்று புரிந்தது. அவனுமே திகைத்துப்போய் பார்த்திருந்தான். அவன் ஜாதகம் போட்டோ தரகரிடம் போனது கூட அவனுக்குத் தெரியாது. அசரடிக்கும் அழகான ஒரு பெண் தானே வந்து பேசவும், வினோத்திற்கு பெருமையாக இருந்தது அன்று. வானதி இருந்தாள் என்ற வரைதான் ஞாபகம். ஆனால் தன் போட்டோ அவர்கள் வீட்டிற்கு போயிருக்கும், இப்படி ஒரு மனக்கோட்டை கட்டியிருப்பாள் என்பது அவன் எதிர்பார்க்காதது.
அவன் முகத்திலிருந்தே அவனுக்கு புரிந்துவிட்டது என்று உணர்ந்த வானதி, “ஹ்ம்ம்… நீங்கதான். வெளித் தோற்றம் எவ்வளவு முக்கியம்னு அன்னிக்கு உணர்ந்தேன். அவ்வளவு ஏமாற்றம் எனக்கு. ஒரு ஸ்டைலிஸ்ட் கிட்ட போய், எந்த மாதிரி ட்ரெஸ், கலர் எனக்கு அழகா இருக்கும்னு கன்சல்ட் பண்ணேன். மேக்கப் ப்ரொஃபெஷ்னல் கிட்ட போய், முகத்துல எது அழகா இருக்கு, இல்லைன்னு பார்த்து , எதை எடுப்பா காட்டணும், எதை மறைக்கணும்னு இரண்டு, மூணு மாச சம்பளத்தைக் கரைச்சு, கத்துக்கிட்டேன். உங்களுக்காக இல்லை, என்னோட சுய கெரவத்துக்காக கத்துக்கிட்டேன். இனி எப்பவும் அலங்கார விஷயத்துல ஏனோதானோன்னு இருக்கக் கூடாதுன்னு முடிவெடுத்திருந்தேன்.”
“இதெல்லாம் ஒரு பக்கம் நான் செய்ய, நீங்களும் ஸ்வேதாவும் டேடிங், மீட்டிங்னு போயிட்டிருந்தீங்க. முதல் வாட்டி படத்துக்கு உங்க இரண்டு பேரோட வந்து, எனக்கு ரொம்ப அனீசியா இருந்துச்சு. அதுக்கப்பறம் ஸ்வேதா எங்க போறீங்கன்னு சொல்லிட்டு போவா. அவங்க வீட்லர்ந்து போன் வந்தா நான் சமாளிக்கணும். ஆனா போயிட்டு வந்து அரை மணி நேரம் அவ சொல்றதெல்லாம் நான் கேட்கணும். எல்லாம் உங்க புராணம்தான். வினோத் இப்படி, அப்படி, இதை சொன்னார், அதை கேட்டார்னு. நிஜமாவே நீங்க ரொம்ப ஜெனுயின் பெர்ஸன்னு தெரிஞ்சுது. நீங்க அவளை தொட்டு கூட பேசலைன்னு அவளுக்கு வருத்தம், ஆனா அந்த கண்ணியம் எனக்கு பிடிச்சிருந்தது. நான் எனக்கு வர வேண்டியவர்கிட்ட எதிர்பார்த்த குவாலிட்டீஸ் எல்லாம் அவ சொன்னதுலர்ந்து உங்ககிட்ட இருக்குன்னு தெரிஞ்சுது. சரி விடு, இது மாதிரி ஊர்ல இன்னொருத்தன் இருக்காமலா போயிருவான்னு என்னை நானே சமாதானம் படுத்திகிட்டேன்.”
“ அவ பேச்சிலேயே, கண்டிப்பா, நீங்க ப்ரபோஸ் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சுது. நல்லா பதிய வெச்சிக்கோ மனசே… உனக்கில்லை வினோத்ன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். வீட்லையும் அப்பறம் உங்களைப் பத்தி பேசலை. ஜாதகம் பொருந்தலையோன்னு நானே நினைச்சிகிட்டேன். ஆனாலும், ஏன் உங்களை நான் முதல்ல போட்டோல பார்க்கணும், பார்த்ததும் பிடிக்கணும், மறு நாளே திரும்ப பார்க்கணும், எதுக்கும் எங்கிட்ட பதில் இல்லை. ஒரு வேளை என் மனசு அன்னிக்கு ராத்திரி உங்களை வெச்சு அப்படியெல்லாம் மனக்கோட்டை கட்டலைன்னா, உங்களை நான் வித்தியாசமா பார்த்துருக்க மாட்டேன். அதுவும்,  நான் உங்களை இம்ப்ரெஸ் பண்ணாத போது, கண்டிப்பா உங்களை திரும்பி பார்த்திருக்க மாட்டேன். இப்பவும் எதுவும் மாறலை, எனக்குன்னு ஒருத்தர் வரும்போது சரியாகிடும்னு நம்பிகிட்டு இருந்தேன்.”, கதை சொல்வது போல சொல்லிக்கொண்டிருந்தாள் வானதி. ஆனால் அவன் முகம் பார்க்கவில்லை. குறைந்தபட்சம் கைகளைக்கூட ஆட்டிப் பேசவில்லை. தனக்குத்தானே பேசிக்கொள்வது போல பாவனையற்ற பேச்சாக இருந்தது.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த வினோத்திற்கு ஒன்று தெளிவாகியது. சற்று முன் அவள் ஸ்வேதாவோடு ஒப்பிட்டது, ‘நானே முதலில் பேசியிருந்தாலும், ஸ்வேதாவைத்தான் நீ பார்த்திருப்பாய்’, என்று அவனிடம் சண்டையிட்டதெல்லாம், எதிர்பார்த்து ஏமாந்து போன அந்த சிறு பெண்ணின் ஆற்றாமையின் வெளிப்பாடு.
இப்போதைய வானதிக்குப் புரியும், நடந்தவற்றில் யார் மீதும் தவறு இல்லை. யாரும் யாரையும் தட்டிப் பறிக்கவும் இல்லை, விட்டுக் கொடுக்கவும் இல்லை. வானதி முதலில் பார்த்ததால், ஸ்வேதா தன்னை பார்த்திருக்கலாம், வந்து பேசியிருக்கலாம். ஆனால் ஸ்வேதா இவனிடம் வந்து பேசியதிலிருந்தே இருவருக்கும் பிடித்துப்போனது. இதில் வானதி வந்து சொல்லியிருந்தாலும் எதுவும் மாறியிருக்காது. வானதியே சொன்னது போல, அவளைப் பார்க்காதவனின் பின்னால் கண்டிப்பாக வானதியும் சென்றிருக்க மாட்டாள். அவள் தன்மானம் இடம் கொடுத்திருக்காது. ஆனாலும் தன் போட்டோவைப் பார்த்துக் கனவு கண்டிருந்த வானதியை நினைக்கையில் கொஞ்சம் உருகித்தான் போனான். இத்தனை ஆளுமையும் ஆற்றலும் இருக்கும் பெண்ணிற்குள் மெல்லிய மனம் படைத்த ஒரு சின்னப் பெண் தன் ஹீரோவிற்காக எதிர்பார்த்திருந்திருக்கிறாள் என்பது புரிய, அவளை அணைத்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று துடித்தது மனது. ஆனாலும் கட்டுப்படுத்திக்கொண்டான். அவள் பேச்சை தடை செய்யாமல் மொத்தமும் வர வழைக்க வேண்டும், என்று அமைதியாக இருந்தான்.
இவன் எண்ணவோட்டத்தை அறியாதவள், பேசிக்கொண்டிருந்தாள்.
“நீங்க டின்னர் கூட்டிட்டு போய், ப்ரபோஸ் பண்ணதும் நேரா எங்க வீட்டுக்குத்தான் வந்தா ஸ்வேதா. எங்கூட தங்கப்போறதாதான் அவ வீட்ல சொல்லியிருந்தா. எங்க வீட்ல, அவ ஒரு பார்ட்டிக்கு போயிட்டு அப்படியே இங்க வந்ததா சொல்லிட்டா. இராத்திரியெல்லாம் பேசிகிட்டு இருந்தா. செம்ம ஹைப்பரா இருந்தா. மறு நாளே, நான் அவங்க வீட்டுக்குப்போய் உங்க காதல் விஷயத்தை சொல்லிட்டேன். ஸ்வேதா முறைச்சாலும், உங்க பயோ டேட்டா எனக்குத்தான் தெரியுமே, எல்லாம் சொல்லி, அவ அப்பாவையும் விசாரிக்கச் சொன்னேன். இது வேற யார் மூலமாவது தெரிஞ்சா, என்னைத்தான் முதல்ல கேட்பாங்க அவ வீட்ல.”
“உங்க கல்யாணம் கூடி வரவும், எல்லாத்தையும் இழுத்து போட்டு செஞ்சேன். நீங்க அவளுக்குத்தான், உங்க மேல எனக்கு எந்த க்ரஷ்ஷும் இல்லைன்னு எனக்கு நானே ப்ரூவ் பண்ணிக்க அது ஒரு வாய்ப்பா எடுத்துக்கிட்டேன். டேட்டிங் போனதை விலாவாரியா சொன்னவ, உங்க இன்டிமேட் லைஃப் பத்தியும் சொல்ல ஆரம்பிச்சதும், இது சரியில்லைன்னு நான் சிங்கப்பூர் ப்ரான்ச்சுக்கு ஒரு வருஷம் போறியான்னு ஆஃபிஸ்ல கேட்ட ஆஃபரை எடுத்துகிட்டேன். உங்க புராணம் கேட்காம இருந்தாலே உங்களுக்கான முக்கியத்துவம் போயிடும்னு நினைச்சேன்.”
“விலகி வந்ததும், நான் எதிர்பார்த்தபடியே அவளோட பேச்சு குறைஞ்சுது. கூடவே பாப்பா வரப்போகுதுன்னதும் அவளும் பிசியாகிட்டா. ஆனா, தனியா வந்தும் அப்பப்ப உங்க நினைவுகள் வந்துகிட்டுதான் இருந்துச்சு. கொஞ்ச நாள் போச்சுன்னா சரியாகிடும்னு நினைச்சேன். அப்பதான் சிங்கப்பூர் ஆஃபிஸ்ல மதன் ஃப்ரெண்டானார்.”
“பல விஷயத்துல எங்க இரண்டு பேருக்கும் அலைவரிசை ஒத்துப்போச்சு. புக்ஸ், போட்டோகிராஃபின்னு நிறைய விஷயம். பார்க்கவும் ரொம்ப ஹாண்ட்சம்மா இருப்பார். நீங்கதான் பார்த்திருக்கீங்களே. தம், தண்ணி எதுவும் கிடையாது. கிட்ட தட்ட உங்க குவாலிட்டீஸ் எல்லாமே, இன்னும் பெட்டர், ஏன்னா கோவம் வந்தா அமைதியா விலகிப் போயிடுவார், கண்டபடி பேச மாட்டார்.”, நிறுத்தினாள்.
அவனைப் ஏகத்துக்கும் புகழவும் வினோத்திற்கு எரிந்தது.  அன்றே வானதியை அப்படி பாசமாகப் பார்த்து , விசாரித்தவனைப் கண்டு பொறாமைதான்.
“என்னை டின்னர் கூட்டிட்டு போய், சாப்பிட்டு முடிஞ்சதும் அப்படியே கடல் ஓரமா நடந்துபோன போது காதலிக்கறதா சொன்னார். சத்தியமா அவரை வேண்டாம்னு சொல்றதுக்கு எனக்கு ஒரு காரணமும் கிடையாது. அறிவு, ஒத்துக்கோன்னு ஒரு பக்கம் சொல்லுது. மனசு முடியாதுன்னு அலறுது. என் முகத்துல என்ன பார்த்தாரோ, டென்ஷன் வேண்டாம். பொறுமையா யோசி. நீ இதை எதிர்பார்த்திருப்பன்னு நினைச்சேன். யோசிச்சு சொல்லுன்னு அதோட விட்டுட்டார்.”

Advertisement