Advertisement

“சர்… நான் வானதிகிட்ட பேசலை. நீங்க கைட் கூட பேசும்போது நானும் இருக்கேன்னுதான் சொன்னேன். வானதிகிட்டயும் எதுவும் சொல்லணும்னு அவசியமில்லை. ப்ளீஸ்.”
அவன் குரலில் இருந்த தவிப்பைக் கண்டுகொண்டவர், என்ன நினைத்தாரோ… “சரி சார். ஒரு ஏழே முக்காலுக்கு இங்க இருக்கா மாதிரி பார்த்துக்கோங்க.”, என்று வைத்துவிட்டார்.
மணி அப்போதுதான் நாலு. வினோத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. காட்டெருமை வானதியை துரத்துவது போலவும், கயறு ஏறும்போது, பிடிக்க முடியாமல் அவள் விழுவது போலவும், சகதியில் சறுக்கி மலையில் உருளுவது போலவும் காட்சிகள் வந்து வந்து போனது.
தலையை உலுக்கியவன், “சை… அதெல்லாம் ஒன்னும் இல்லை. நல்ல படியே போயிட்டு வருவா.”, எழுந்து சென்று பூஜை அறையில் கடவுளிடம் வேண்டி விபூதி வைத்துக்கொண்டு திரும்பினால், போட்டோவில் ஸ்வாதியும் வம்சியும் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
இவங்களை மாதிரியே அல்பாயுசில் வானதியும் போய்விடுவாளோ என்று பயம் கவ்வியது. வீண் பயம் என்று ஒரு பக்கம் தோன்றினாலும், அதை உதறமுடியவில்லை.
“ஊர்ல ஏறதுக்கு வேற மலையே இல்லையா? இருக்கறதுலயே கஷ்டமானதாத்தான் போகணுமா? அவளை மாதிரியே நீயும் பழி வாங்கறியா என்னை?”, ஆத்திரத்தில் கத்தினான்.
“ம்ச்ப்… நோ… வானதி அப்படி இல்லை. ஜாக்ரதையாத்தான் இருப்பா என்று சொல்லிக்கொண்ட அதே வேளை, அப்ப எப்படி கையை கிழிச்சிகிட்டா? அன்னிக்கும், தடுமாறி முள்ளு செடியை பிடிச்சாளே…”, மனம் இரு வேறாக யோசிக்க, வினோத்திற்கு வியர்த்தது.
உலர்ந்த நாவை தண்ணீர் குடித்து நனைத்தவன், மணியைப் பார்க்க அது நாலரையைத் தாண்டவில்லை. அடுத்த மூன்று மணி நேரமும் தவித்துப்போனான். எதிர்மறை எண்ணங்களைப் போக்க சஷ்டிக் கவசம் சொல்ல ஆரம்பித்தான். மனம் முழுவதும் அவள் நலமாக இருக்க வேண்டும் என்ற பிராத்தனை மட்டுமே.
ஏழு மணிக்கெல்லாம் கிளம்பி ஏழரைக்கு தணிகாசலத்திற்கு முன்னால் நின்றான்.
“நீங்க இவ்வளவு வொர்ரி பண்றதுக்கு, கூடவே போயிருந்திருக்கலாம் சர்.”, என்றவர், ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார். அடுத்து ஒரு போன் வரவும், பேச சென்றுவிட்டார். நகத்தைக் கடித்து, நேரத்தை நெட்டித் தள்ளினான்.
எட்டு மணிக்கு அழைப்பு வரவில்லை. திகிலாய் வினோத் தணிகாசலத்தைப் பார்க்க, “சில நேரம் கொஞ்சம் முன்ன பின்ன ஆகும் சார். வரும் ரிலாக்ஸ்.’, என்றார். வினோத்திற்கு மனதுக்குள் சஷ்டிக் கவசம் ஓடிக்கொண்டேயிருந்தது.
பத்து நிமிடம் அவனை மேலும் சோதித்துவிட்டு அழைப்பு வந்தது. தணிகாசலமும், கைட் கிரிதரும் பேசி முடிக்க, பெரிதாக எதுவும் சொல்லும்படி இல்லை. பாதை சகதியாக இருந்ததால் கொஞ்சம் லேட்டானது, மற்றபடி எல்லோரும் நன்றாக உள்ளார்கள் என்று கேட்டதும்தான் உயிர் வந்தது வினோத்திற்கு.
ஒரு புன்னகையுடன் தணிகாசலம், “அப்பறம் கிரி, வானதின்னு ஒருத்தவங்க, கைல காயம் பட்டதோட வந்திருக்காங்கன்னாங்க. ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே?
“யாரு… அந்த போட்டோ எடுக்கறவங்களா? நல்லாத்தான் இருக்காங்க. வலிக்கறதா எதுவும் சொல்லலை. கைக்கும் சப்போர்ட் பாண்ட் போட்டிருக்காங்க தணிகா. இன்னிக்கு அவங்களுக்கும் நல்ல வேட்டை. ஒரு காட்டெருமை கூட்டம் பார்த்தோம். நிறைய போட்டோஸ் எடுத்தாங்க. அவங்க பாட்டு சரசரன்னு மரத்துல ஏறிட்டாங்க போட்டோ எடுக்க. நீங்க இப்படி கேக்கறீங்க?”, கிரிதர் சொன்னதில் வினோத்திற்கு பயப்படுவதா, இல்லை பெருமைபடுவதா என்று சத்தியமாக புரியவில்லை. ‘அவளை அப்படியே பாதுகாப்பா தூக்கிட்டு வந்துடணும்.’, என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கியது.
தணிகாசலம் பேசி வைத்ததும், “ஏன் வினோத் சர். பொண்டாட்டி மேல இவ்ளோ லவ் இருக்கறவர் எதுக்கு தனியா அனுப்பினீங்க?”, என்று கேட்டார்.
“நான் எங்க சர் அனுப்பினேன்?”, என்றான் பாவமாக.
அதில் பெரிதாக சிரித்தவர், “ம்ம்… அவங்க ஸ்ட்ராங் லேடி. தெரிஞ்சது. நீங்களும் அவங்க மேல நம்பிக்கை வைங்க சர். கிரி சொன்னதை கேட்டீங்க இல்ல? நல்லா இருக்காங்க. அங்க எஞ்சாய் பண்ணிட்டு இருக்காங்க.  போய் நிம்மதியா தூங்குங்க, நாளைக்கு சாயந்திரம் அவங்ககிட்ட பேசலாம் நீங்க.”, வினோத்தின் தோள் தட்டி அனுப்பி வைத்தார்.
நன்றாக இருக்கிறாள் என்பது தெரிந்ததும், கவலை அகன்று, பசி தெரிந்தது. வீடு திரும்பும் வழியிலேயே, ஹோட்டலில் உணவருந்தியவன், வாசுவிற்கும் அவள் நலனை விசாரித்ததைப் பகிர்ந்து கொண்டான்.
அறைக்குத் திரும்பியவன், முதல் வேலையாக மதுரைக்கு மறு நாள் செல்லும் முதல் விமானத்தில் டிக்கெட் போட்டான்.  அடுத்ததாக ஸ்வேதாவின் லாப்டாப்பை தூக்கிக் கொண்டு படுக்கையில் சாய்ந்தான். படித்துதான் ஆக வேண்டும். ஆரம்பத்திற்கு சென்றான். அவர்கள் சந்திப்புக்கு ஒரு ஆறு மாதம் முன்னால்தான் தொடங்கியிருந்தாள்.
பெரிதாக ஒன்றும் இல்லை. வேலை, வானதியுடன் வெளியே சென்றது, மற்ற சில நண்பர்கள், தோழிகள் பற்றி, என்று போரடிக்க, வேகமாக நகர்த்தினான். அவனை சந்தித்த தினம் வந்தது. வேகமாக படித்தவன், சட்டென்று நிதானித்து மீண்டும் படித்தான். விருப்பமில்லாதவளை வற்புறுத்தி மாலுக்கு அழைத்து வந்ததைப் பெருமையாக எழுதியிருந்தாள் ஸ்வாதி.
“சாப்பிட புட் கோர்ட்டில் ஆர்டர் செய்துட்டு திரும்பி காஃபி வேணுமான்னு கேக்கலாம்னு பார்த்தா, வன்ஸ் கவனம் வேற எங்கயோ இருந்தது. என்னடான்னு பார்த்தா, நம்ம சாமியாரிணி செம்மையா சைட் அடிச்சிகிட்டு இருக்கா ஒருத்தனை. சும்மா சொல்லக்கூடாது… சாமியாரிணிக்கு செம்ம டேஸ்ட். இவ பார்க்கறது கூட தெரியாம, போனை பார்த்துகிட்டு இருக்கவன் நிஜமா ஹாண்ட்சம் கை. அட, இப்படியெல்லாம் வெச்ச கண்ணு வாங்காம பார்க்கத் தெரியுமா என் வன்ஸ் குட்டிக்கு?
அவளை கலாய்க்க தோணுச்சு, சரின்னு ஜூஸ்க்கான பில்லை வாங்கிட்டு நேரா அந்த ஆளு இருக்க டேபிள்க்கே போய் ஹலோ சொல்லி, ‘ஏன் இங்க யாரும் உங்க லெவல்க்கு அழகா இல்லைன்னு போனை பார்த்துகிட்டு இருக்கீங்களான்னு’ கொஞ்சமா கலாய்ச்சா, அழகா சிரிச்சார். ‘நான் அப்படியெல்லாம் யோசிக்கலைங்க.’னு  சொல்லவும், என்னா ஒரு பேஸ் வாய்ஸ், ஜிவ்வுனு ஒரு ஃபீல்.
அதற்கு மேல் வானதியைப் பற்றி எதுவும் இல்லை, அவனைப் பற்றிய வர்ணனைகள்தான் நிரம்பியிருந்தது.
உண்மையாக ஸ்வேதாவை சந்தித்த அன்று அவளைத்தான் ஞாபகம் இருந்தது. வானதியை பார்த்தான், ஸ்வேதா அழைத்துச் சென்று அறிமுகம் செய்துவைத்தாள், ஆனால் பெரிதாக எதுவும் நினைவில் இல்லை.
‘வானதி ஒரு வேளை முதலிலேயே என்னை விரும்பியிருப்பாளோ? ஆனால் அப்படி ஒரு பார்வையும் வானதியிடமிருந்து வந்ததில்லை ஸ்வேதாவுடன் இருக்கும்பொழுது. சரி அப்போதுதான் இல்லை. ஸ்வாதி போனபின் இத்தனை வருடம் எதற்காக காத்திருந்தாள் ? வானதியும் சென்னை வந்து இரண்டு வருடங்களாகியிருந்தது. வினோத்தும் சென்னையில்தான் இருந்தான்.ஒரு முறை கூட சந்திக்க முயற்சிக்கவில்லை. ‘பூம்மா எத்தேச்சையாக கல்யாணத்தில் பார்த்ததுதான், அதுவும் இவங்கதான் அடையாளம் கண்டு பேசியிருக்காங்க. வானதி விரும்பியிருந்தா இரண்டு வருஷம் முன்னவே  இதை நடத்தியிருக்கலாமே?’
‘டேய்… ஏதோ பார்க்க லட்சணமா இருக்கவும் பார்த்திருக்கா. நீ ஸ்வேதாவைப் பார்த்து சொக்கிப்போகவும், திரும்ப எதுக்கு பார்த்திருக்கப் போறா? அந்த வயசுல யார்தான் சைட் அடிக்கலை? அதைக் கொண்டே நீ பாட்டுக்கு கற்பனை வளர்க்கற? அந்த மதனை மறந்துட்டியா? அவனைவிடவா நீ ?’, மனசாட்சியின் கேள்விகளுக்கு விடையில்லை.
தலையை உலுக்கியவன், மீண்டும் ஸ்வேதா எழுதியதை படிக்கத் தொடங்கினான். அவர்களின் சந்திப்பு, ஸ்வேதா விரும்புவது என்று பத்தி பத்தியாக இருந்தது. கல்யாணம் நிச்சயம் ஆனது, அவன் கொடுத்த முத்தம், வானதியிடம் சிலாகித்தது என்று எல்லாம் எழுதியிருந்தாள். ஒரு புன்னகையுடன் படித்துக்கொண்டிருந்தான். படிக்கப் படிக்க, அவள் முதிர்ச்சியில்லாத ஒரு  பதின்ம வயதுப் பெண்ணாக தெரிந்தாள். ஆனால் அவனை காதலித்திருந்தாள், அவளுக்கு தெரிந்த வகையில். சினிமா, கதை புத்தகங்களில் வருவது போல சித்தரித்திருந்தாள்.
அவன், அவள் என்ற இருவர் மட்டுமே என்ற கோணத்தில்தான் நடந்துகொண்டிருந்தாள் ஸ்வாதி.
‘ நீ மட்டும் யோக்கியமா? அவளை உச்சாணியில் வச்சிருந்தியே, அது மட்டும் என்னவாம்? அவளால அம்மா தள்ளி நின்னது கூட தெரியாம இருந்திருக்க’, மனசாட்சி கொட்டியது.
படித்துக்கொண்டிருந்தவன், சட்டென்று நிறுத்தி அந்த வரியை மீண்டும் படித்தான்.
“அதென்னமோ தெரியலை, வினோத்துதோட என் அந்தரங்கத்தைப் பத்தி பேசினா அவ கண்ல என்னவோ வந்து போகுது. கண்டிப்பா ஆர்வம் கிடையாது, சாமியாரிணிக்கு அதெல்லாம் பெரிசா இன்ட்ரெஸ்ட் இல்லை. ஆனா,  தெரியலை, என்னவோ ஒரு மாற்றம். பார்க்கணும் அடுத்தவாட்டி.”
‘அடிப்பாவி, இதெல்லாம் கூடவா எக்ஸ்பெரிமெண்ட் பண்ணுவா? இவளுக்காகப் போய், அன்னிக்கு வானதியை அப்படி பேசியிருக்கேன்.’, தலையில் அடித்துக்கொண்டான். ‘அதாண்டா… எனக்கு இந்த கல்யாணத்துல நியாயம் கிடைக்கலைன்னு’, காரி துப்பிட்டு போயிருக்கா.
கண்களை அழுந்தத் தேய்த்தவன், மீண்டும் படிக்க ஆரம்பித்தான். அவர்கள் தேனிலவுக்கு சென்று வந்தபின் ஒரு பதிவில் மீண்டும் அதைப் பற்றி தொட்டிருந்தாள்.
“கண்டிப்பா சாமியாரிணிக்கு வினோத் மேல என்னவோ இருக்கு. இன்னிக்கு ஹனிமூன்ல நாங்க ஆடின மங்காத்தா பத்தி சொன்னதும், திரும்ப அந்த லுக், எனக்கு சொல்ல தெரியலை, ஒரு வலியா, இல்லை வேதனையா என்னன்னு தெரியலை. ஆனா அடுத்த நிமிஷமே கோவம், ரொம்ப கோவப்பட்டா. கிளம்பும்போது வினோத் மச்சம் பத்தி சொன்னதும், மறுபடி அந்த லுக்… ஆனா வினோத் கூட இருக்கும்போது ஒரு வித்தியாசமும் தெரியலை அவகிட்ட. ஒரு விலகல்தான் பார்த்திருக்கேன். வினோத்துக்கு இவ பத்தி எதுவும் பெருசா அபிப்ராயம் இல்லை.  நான் இருக்க, இவளை ஏன் பார்க்கப்போறார், அது வேற விஷயம். ஏதோ ஒரு வகையில் என் பேச்சு அவளை காயப்படுத்துது. ஆனா அது எனக்கு என்னவோ ஒரு அல்ப சந்தோஷத்தை கொடுக்குதே. சே… நான் கெட்ட பொண்ணு, அவ என் பெஸ்டி, ஆனா அவகிட்ட போய்… ஹ்ம்ம் இனி இந்த டாபிக்கே பேசக் கூடாது… பார்க்கலாம் முடியுதான்னு.”
தன்னை ஒரு தலையாகக் காதலித்திருக்கிறாளா வானதி? அப்போ மதன்? அப்போ ஏன் இந்த “நண்பர்களா” இருப்போம்னு ஆஃபர்? , வினோத் யோசனையானான்.
‘டேய்…. அப்போ விரும்பினாளோ இல்லையோ, இப்போ கண்டிப்பா விருப்பம் இருக்கு, இருக்கணும். நீ இத்தனை மாசத்துல பண்ண அலப்பறையெல்லாம் பொறுத்திருக்கான்னா, வேற என்ன காரணம் இருக்க முடியும் ?’
ஸ்வேதா எழுதியவற்றை மேலோட்டமாக வேகமாக படித்தான். அவன் தாயைப் பற்றி அமிலமான வார்த்தைகள். போகப் போக இவனைப் பற்றியும் சில நேரம் அவளுக்கு வளைந்து கொடுக்காத போது திட்டியிருந்தாள். வளராத அதிகம் செல்லம் கொடுத்து கெடுக்கப்பட்ட ஒரு சண்டிக் குழந்தை என்பது புரிந்தது. ‘ம்ம்… போயே சேர்ந்துட்டா… இனி என்ன தெரிஞ்சு என்ன? ‘, உதடு சுழித்தான்.
இத்தனையிலும் ஒரே ஆறுதல், ‘அவன் மேல், குழந்தை மேல் நிஜமாகவே எக்கச்செக்க அன்பு வைத்திருந்தாள். வானதி சொன்னது போன்று, முட்டாள் பெண்ணுக்கு தம் மேல் அசாத்திய குருட்டு நம்பிக்கை, அதுதான் காவு கொடுத்துவிட்டது அவளையும், அவன் பிள்ளையையும்.’, அறிவுக்கு எட்டியது. மனம்தான் இன்னும் ஆறவில்லை.
உணர்ச்சிகளை ஒத்துக்கிவிட்டுப் பார்த்தால்,  ‘ஸ்வேதாவைப் பற்றி புரிந்து கொள்ளாமல் இருந்தது இவன் தவறு. பிள்ளையை பறிகொடுத்ததில் இதுவும் ஒரு காரணம். அம்மாவின் அனுபவ அறிவு தடுத்தது. இவந்தான் பெரிய புத்திசாலி என்று நினைத்து அனுப்பிவைத்தான், கண்டிப்பாக இவனும் தவறிழைத்திருக்கிறான்.’ கண்ணில் நீர் கசிந்தது. காலத்திற்கும் அந்த வடு இருக்கத்தான் போகிறது. ஸ்வேதாவின் டைரியை அழித்தான். இனியும் அதில் தெரிந்துகொள்ள வேண்டியது எதுவும் இல்லை. இதைப் பற்றி யாரிடமும் பகிரவும் போவதில்லை. லாப்டாப்புடன் சேர்த்து ஸ்வேதாவையும் மூடி வைத்தான்.
நடு நிசியைத் தாண்டியிருக்க, காலையில் ஃப்ளைட் என்று அலாரம் வைத்து, படுக்கச் சென்றான். வானதிக்கு தன் மேல் ஏதோ ஒரு பிடித்தம், காதல் இருக்கிறது. அது ஒன்றே இப்போது பற்றுகோல். ‘பாயின்ட் பாயின்ட்டா பேசி சுத்தல்ல விடுவா. அதுக்கு இடம் கொடுக்காதேடா.’, அவள் என்ன பேசினாலும், எப்படி பேசினாலும், மறவாதே மனமே என்று எச்சரித்துக்கொண்டான். நினைத்ததை செயல்படுத்துவானா? இல்லை கோவத்தில் எப்போதும் போல நிதானம் இழப்பானா?

Advertisement