Advertisement

அத்தியாயம் – 18
கதவு தட்டப்பட, கவனம் கலைந்தவன் சென்று பார்க்க, காபியோடு , இட்லி சாம்பாரையும் கொண்டுவந்திருந்தார் மலர்.
ட்ரேவை வாங்கிக்கொண்டு நன்றி சொன்னவன், “சாப்ட்டு இன்னும் கொஞ்சம் தூங்கறேங்க்கா. நீங்க மதியத்துக்கு செஞ்சிட்டு கிளம்புங்க. நைட் நான் பார்த்துக்கறேன்.”, எனவும், சரியென்று கிளம்பிவிட்டார்.
உணவும் காபியும் உள்ளே செல்ல, மூளை கொஞ்சம் சுறுசுறுப்பாகியது. இன்று ஞாயிற்றுக்கிழமை. அவள் கேட்கும் தனிமையை கொடுத்துவிட்டு, மாலை அவளை அழைத்து வரலாம் என்று முடிவு செய்தான். எதுவானாலும் வீட்டில் வைத்து பேசலாம் என்று சொல்லியாவது இங்கே கூட்டி வந்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
அதற்கு முன்னர், அவனின் கடந்த காலத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதற்கு முதலில் அவன் ஸ்வேதாவோடு வாழ்ந்த வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும். இவன் நினைத்திருந்தது ஒன்று, மற்றவர்கள் பார்வையில் ஸ்வேதா முற்றிலும் வேறொருத்தியாக இருந்திருக்கிறாள். அந்த முகம்தான் அவள் நிஜ முகம் போல.
அவன் தாயைப் பற்றி எவ்வளவு தரக்குறைவாக நினைத்திருக்கிறாள்…சை…அவள் லாப்டாப்பைப் பார்த்தான். கண்டிப்பாக அவளது கிறுக்கல்களைப் படித்தாக வேண்டும். வானதி ஸ்வேதா அவளை மிரட்டியதாக சொன்னது ஞாபகம் வந்தது. அவள் கையைப் பார்த்து இவன் துடித்தபோது, ஏதோ அக்குள் முடியை ஷேவ் செய்யும்போது தவறுதலாய் கீறி விட்டது என்று சொல்லியிருந்தாள். நன்றாக நினைவிருந்தது. ஏன் அதையெல்லாம் இப்போது செய்கிறாய் என்று கடிந்திருந்தான். ‘உள்ளுக்குள்ள சரியான ஏமாந்த சொங்கின்னு நினைச்சிருப்பா என்னை.’, என்று தன்னையே திட்டிக்கொண்டான்.
‘முதல்ல, அவ துணி எல்லாத்தையும் வெளியேத்தணும். லூசு மாதிரி வெச்சிருந்திருக்கேன் பாரு. ‘. ஒரு பெட்டியை எடுத்தவன், அதற்குள் எல்லாவற்றையும் திணித்தான். வம்சியின் உடைகளையும் சேர்த்து. அந்த முயல் பொம்மை போறும் என் பிள்ளையின் நினைவாக, என்று அனைத்தையும் பெட்டிக்குள் அடக்கிவிட்டு நிமிர்ந்தான்.
லாப்டாப்பின் அருகில் சென்று அமர இருந்தவனை வாசலின் அழைப்பு மணி நிறுத்தியது. வானதியோ என்று படிகளில் பாய்ந்து சென்று கதவை திறந்தவன், வாசுவைப் பார்த்து ஒரு நொடி முழித்தாலும், அவன் பின்னால் வானதியை தேடினான். அவன் தனியாக வந்திருக்க,
“ வாங்க வாசு. எப்படியிருக்கீங்க?”, என்று உள்ளே அழைத்து அமரவைத்தான். சாப்பாட்டு மேசையில் இருந்த குவளையிலிருந்து தண்ணீரை டம்பளரில் ஊற்றி வாசுவிடம் தர.
“வினோத்…. எதுக்கு வானதி அம்மா வீட்டுக்கு வந்தா? வந்தவ, ட்ரெக் போறேன்னு கிளம்பிட்டா. அம்மா வேணாம்னு சொல்ல சொல்ல மீறி போயே ஆவேன்னு போயிருக்கா? உங்களுக்கு தெரியுமா? இல்லை உங்க இரண்டு பேருக்கும் எதுவும்…பிரச்சனையா?”, வாசு படபடவென்று பேச, அவன் சொல்வதை கிரக்க சில வினாடிகள் பிடித்தது வினோத்திற்கு. வாசுவின் எதிரில் அமர்ந்து அவன் கண்களை நோக்கி,
“அது…. நேத்து ஒரு ஆர்க்யூமென்ட் எங்க இரண்டு பேத்துக்குள்ள. வெறுமன எனக்கு மெசேஜ்தான் போட்டிருந்தா. நான் அம்மா வீட்டுக்குப் போறேன். அப்பறமா கூப்பிடறேன்னு. சரி கொஞ்சம் சமாதானமாகட்டும் சாயந்திரம்போல உங்க வீட்டுக்கு வரலாம்னு இருந்தேன்.”, நிதானமாக வினோத் கூறினான்.
“வெறும் வாய் வார்த்தை தானா வினோத்? அவ கையில் ஏதோ வெட்டுக் காயம், ஹாஸ்பிடல்ல தையல் போட்டுட்டு வந்திருக்கா காலையிலேயே. “, வாசு சந்தேகமாக பார்க்க, அவன் சொன்ன செய்தியில் திகைத்த வினோத்…
“என்ன? என்னாச்சு ? நான் மாத்திரை போட்டு தூங்கிட்டேன். அவ கிளம்பிப் போனதே தெரியாது.எப்படி வெட்டு காயம் ஆச்சு ?” என்று பதற, அதில் நடிப்பில்லை என்று தோன்றியது வாசுவிற்கு.
அதற்குள் வானதியை அழைத்திருந்தான் வினோத். ஆனால் கைபேசி அணைத்து வைக்கப்பட்டதாக செய்திதான் வந்தது.
“இப்ப மதுரை ப்ளைட்ல இருப்பா.வைங்க.”, வாசு சொல்லவும்,
“தையல் போடுற அளவு காயம்னா, எதுக்கு அவளை போக விட்டீங்க வாசு?”, அவனிடம் கோவித்தான்.
“நான் இருந்திருந்தா, கண்டிப்பா போக விட்டிருக்க மாட்டேன். அப்பா அம்மாகிட்ட பணம் கட்டியாச்சு, இது சின்ன காயம்தான, இதுக்காக போகாம இருக்க முடியாதுன்னு எதேதோ கதை சொல்லிட்டு கிளம்பிட்டா. உன் மாப்பிள்ளை கிட்ட கொஞ்சம் சண்டை. நான் ட்ரெக் போயிட்டு வந்து எங்க வீட்டுக்கு போறேன், அதுக்குள்ள நானும் சமாதானம் ஆகிடுவேன்னு அம்மாட்ட எதோ சொல்லியிருக்கா. நான் அவங்களைப் பார்க்க போகவும்தான் தெரிஞ்சுது. மனசு கேட்கலை. அதான் நேரா உங்களைப் பார்த்து கேட்டுட்டு போலாம்னு வந்தேன்.”
ஒரு அண்ணனாக வாசுவின் அக்கறையும் கவலையும் புரிந்து லேசாய் சிரித்தவன், “தப்பு முழுசா என் மேலதான்.  அவ வந்ததும் நாந்தான் மன்னிப்பு கேட்கணும் வாசு. வெறும் ஆர்க்யுமெண்ட்தான் எங்களுக்குள்ள. அப்படி அவளை வெட்டற அளவு நான் கோவக்காரனும் இல்லை, அதை பார்த்துட்டு சும்மயிருக்கவளும் இல்லை வானதி. இன்னேரம் போலீஸ்ல டொமெஸ்டிக் வயலன்ஸ்ன்னு புகார் குடுத்திருப்பா, நான் அப்படி எதுவும் செஞ்சிருந்தா.”
அதைக் கேட்டு நகைத்த வாசு, “ம்ம்.. செய்யக் கூடியவதான். “, சொல்லிக்கொண்டிருக்கும்போதே மெசேஜ் வர, “ மதுரை ரீச்சாகிட்டா.”, என்றதும், வேகமாக வினோத் தன் கைபேசியை எடுத்தான்.
“வைங்க. அவ பாட்டரி லோ. ஸ்விட்சிங் ஆஃப்.”, னு போட்டிருக்கா. என் பதில் மெசேஜ் அவளை சேரலை வினோத்”, என்றான்.
“தெரியாத ஊருக்கு போறா, எப்படி பாட்டரி இல்லாம போவா?”, வினோத் கடுப்பாக,
“இன்னும் அவளை தெரியலையா உங்களுக்கு ?  அவளுக்கா பேசணும்னு தோணற வரை பாட்டரி லோவாத்தான் இருக்கும். என் தங்கச்சி எப்பவும் பவர் பாங்க் இல்லாம போகமாட்டா.“, என்று தோளை குலுக்கினான் வாசு.
“உஃப்”, என்று பெருமூச்சுவிட்ட வினோத், தன் மெசேஜை பார்க்க, அவனுக்கு எதுவும் அனுப்பவில்லை வானதி. ‘ நீ பண்ண வேலைக்கு மெசேஜ் வேற எதிர்பார்க்கறயா’, என்று மனசாட்சி அவனை துப்ப, ஒன்றும் சொல்லவில்லை.
“வாங்க வாசு. சாப்பாடு ரெடியா இருக்கு. என்னோட சாப்பிடுங்க.”, என்று அழைத்தான்.
பேச்சுவாக்கில் “எங்க ட்ரெக் போயிருக்கா வானதி?”, என்று வினோத் கேட்க, ஏதோ தேனி, பெரியகுளம் பக்கம்னு சொன்னாங்க அம்மா. அவ எப்பவும் போற ட்ரெக் கிள்ப் மூலமாத்தான், இரண்டு நாள் போல. “
வினோத்திற்கு தெரிந்து அங்கு எதுவும் மலையேற்றப் பாதை இருப்பதாக ஞாபகமில்லை. ஒரு வழியாக உண்டு, பேசி வாசு கிளம்ப, அமைதியாக ஹாலில் வந்து அமர்ந்தான் வினோத்.
‘டேய்… நீயெல்லாம் ஒரு ரிசர்சர், சைண்டிஸ்ட்ன்னு வெளிய சொல்லிடாத. கொஞ்சம் உன் வாழ்க்கையையும் அலசிப் பாரு. எப்ப பார்த்தாலும் புள்ளி விவரம் பார்த்து, அது சொல்ற விஷயத்தை கண்டுபிடிப்பியே, கொஞ்சம் அதை இங்கையும் யூஸ் பண்ணு.’, மனது மூளையை கட்டளையிட்டது.
முதலில் எங்கே சென்றிருக்கிறாள் என்று தெரிய வேண்டும். அவளது ட்ரெக் கிளப்பின் நம்பரைத் தேடி அழைத்தான். எடுத்த பெண்ணிடம், தணிகாசலத்தைக் கேட்க, நல்ல வேளையாக இருந்தார்.
அவரிடம் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டவன், வானதி பெரியகுளம் அருகில் எந்த ட்ரெக் சென்றிருக்கிறாள் என்று சொல்ல முடியுமா? பெயரை  மறந்துவிட்டதாகக் கூறினான்.
அவனை நாகலாபுரம் ட்ரெக்கில் ஞாபகம் வைத்திருந்தவர், “இருங்க சார். ரெக்கார்ட் எடுத்து பார்க்கறேன்.” என்றவர், “ ஓ… வட்டக்கனல் போயிருக்காங்க சர். இது கொஞ்சம் சவாலான ட்ரெக்காச்சே, நீங்க போகலையா கூட?”, என்று இழுத்தார்.
“எனக்கு லீவ் எடுக்க முடியலை… ஏன் சர், வானதி நிறைய ட்ரெக் போயிருக்காங்களே, இது கஷ்டமா?”, வினோத் கேட்கவும்,
“ம்ம்… தமிழ் நாட்ல இருக்க ட்ரெக்கிங்ல சவாலான பாதையில இதுவும் ஒன்னு சார். பாதை ரொம்ப செங்குத்தா இருக்கும். அதனாலயே இரண்டு நாளா பிரிச்சிருக்கோம், முதல்ல வெள்ளக்கெவி வரைக்கும் போயிட்டு, அங்க கொஞ்சம் தள்ளியிருக்க இடத்துல எங்க காம்ப் சைட்ல தங்கிட்டு, திரும்ப காலையில் வட்டக்கனல் போவாங்க. நல்லா ட்ரெயின் ஆனவங்களைத்தான் சேர்ப்போம் இந்த ட்ரெக்குக்கு. “, தணிகாசலம் சொல்ல, சற்று கவலையானவன்,
“ஓஹ்…”
“வானதி மேடம் நடந்துடுவாங்க. அதுல சந்தேகம் இல்லை. பாதை முக்கால்வாசி காட்டுக்குள்ளதான். நிறைய காட்டெருமை, முள்ளம்பன்றினு அவங்க போட்டோ எடுக்க நிறைய பார்க்கலாம். ஜாக்கிரதையா இருக்கணும் அதுங்க கிட்ட போயிடாம, அது எங்க கைட் இருப்பார். நான் யோசிச்சது, போன வாரம் நல்ல மழையாச்சே… இப்ப கொஞ்சம் சகதி வழுக்குமேன்னுதான்.”, அவர் சொல்ல சொல்ல இங்கே வினோத்திற்கு அள்ளுவிட்டது.
“கூட போயிருக்க கைட் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கறவரா சர். மொத்தம் எத்தனை பேர்?”, இவன் கவலை அவரை சென்று அடைந்ததுபோல.
“கவலைப்படாதீங்க சர். போயிருக்கறவருக்கு இருவது வருஷ சர்வீஸ். கூட வெள்ளக்கெவில தேவைன்னா, அந்த ஊர் ஆளுங்களை உதவிக்கு கூட்டிப்பார். அவங்களுக்கும் வருமானம் ஆச்சே. ஒரு பத்து பேர் போயிருக்காங்க சர், மூணு லேடீஸ் வானதி மேடத்தோட சேர்த்து. “
“ம்ம்… மொபைல் எடுக்காது, அவங்க சேஃப்ன்னு தெரிஞ்சுக்க வழியிருக்கா சர்?”, என்னவோ உடனே அவள் நலனை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்போல் இருந்தது.
“அச்சோ கவலை படாதீங்க சர். இப்ப அவங்க ட்ரெக் ஆரம்பிச்சு ஒரு மணி நேரம்தான் ஆகியிருக்கும். நைட் எட்டு மணிக்கு காம்ப் சைட் போய் செட்டிலானதும் ரிபோர்ட் வரும் அவர் வாக்கி டாக்கிலர்ந்து. “
“ஒன்னுமில்லை, கிளம்பும்போது கையை கிழிச்சிகிட்டாங்க, ஒரு மூணு தையல் போட்டிருக்காங்க. அதான் கொஞ்சம் டென்ஷன்.”, வினோத் சொல்லி சமாளிக்கவும்,
“அடடா… அப்படியிருந்தா எதுக்கு போகணும்? சில இடம் கயிறு கட்டித்தான் ஏறணும், கையில ஸ்ட்ரெயின் ஆகுமே… ம்ம்.. சரி… நான் விசாரிக்கறேன் சார், ரிபோர்ட் வரும்போது. இன்னிக்கு எனக்குத்தான் ட்யூட்டி.”, தணிகாசலம் சொல்லவும்,
“சர்…. உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா, நான் உங்க ஆபிஸ்க்கு நைட் வரவா, நேர்ல கேட்டுக்கறேனே?”
“ம்ம் இது ரூல்ஸ் இல்லையே சர். எதுவும் எமர்ஜென்சின்னா மட்டும்தான் வெளி ஆளுங்க கான்டாக்ட் பண்ணலாம். அதுவுமே ரொம்ப கம்மிதான். திடீர்னு நைட்டே அவங்க திரும்பணும்னு பிரச்சனை செய்தா ஒன்னும் செய்ய முடியாது பாருங்க? அதுக்காகத்தான் இதெல்லாம் அனுமதிக்கறதில்லை.”, தணிகாசலம் இழுத்தார்.

Advertisement