Advertisement

“என்னையும் இப்படி ஒரு வாட்டி மிரட்டினா. அவ சீமந்தத்துக்கு லீவ் கிடைக்காது, என்னால வரமுடியாதுன்னு சொன்ன போது…. ப்ளேடால கையை கிழிச்சி ஒரு போட்டோ அனுப்பினா. நீ டிக்கெட் போடற வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு வாட்டி இப்படி செய்வேன்னு மெசேஜோட… அடுத்த நிமிஷம் டிக்கெட்டை எடுத்து அவளுக்கு ஒரு காப்பி அனுப்பினேன். அப்பறம் கூப்பிட்டு அப்படி திட்டினேன். அத்தனையும் வாங்கிகிட்டா. “
“இல்ல வானதி… ரொம்ப லேசாத்தான் கீறினேன். அதுவும் புது ரேசர்தான்.ஒன்னும் ஆகலைன்னு ஆயிரம் சமாதானம் செய்தா… ஆனாலும், இனிமே இந்த மாதிரி மடத்தனம் பண்ண மாட்டேன்னு சத்தியம் செய்தா…. இப்பத்தான் தெரியுது… காப்பாத்தலைன்னு…”, வானதி முடிக்கவும்,
“ஏன்… ஏன் ஒரு வார்த்தை எங்கிட்ட இதைப் பத்தி சொல்லலை வானதி? நானாவது கொஞ்சம் உஷாரா இருந்திருப்பேன்ல?”, வானதியின் தோளகளைப் பிடித்து உலுக்கினான். அவன் நெஞ்சில் கை வைத்தவள்,
“அவ சத்தியம் செய்ததை நம்பினேன் வினோத். இதுவுமே அவள் லேசா இடிக்கத்தான் நினைச்சிருப்பா… வம்சி மேல உயிரா இருந்தா… கண்டிப்பா அவனுக்கு அடியெல்லாம் படற மாதிரி எதுவும் செய்திருக்க மாட்டா…. நீங்களே கொஞ்சம் யோசிங்க வினோத்… “,வானதி ஸ்வேதாவுக்கு பரிந்து பேச, அதில் வெகுண்டவன்,
“இது என்ன விளையாடற விஷயமா வானதி… இடிக்கறதுல லேசா இடிக்கணும், அதுல இப்படி அடிபடணும்ன்னு எப்படி கன்ட்ரோல்டா இடிக்க முடியும்? அதுவும் அந்த பிசி ரோட்ல ? சைட் ரோட்ல வந்த வண்டி, இவ பண்ண கூத்துலதான் தட்டி தூக்கியிருக்கணும்.”, என்று கத்த,
“ரிஸ்க்தான்… அவ மேல அவ்வளவு ஓவர் கான்ஃபிடென்ஸ், கூட உங்க இரண்டு பேர் மேலையும் கோவம்… அவளை கிறுக்குத்தனமா யோசிக்க வெச்சுது. சத்தியமா இப்படியாகும்னு அவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள் வினோத்…”. அவளை விட்டு அகன்றவன்,
“புல் ஷிட்…. இதெல்லாம் ஒரு சமாதானமா? அடுத்து என்ன, ரயில் ஏறும்னு தெரியாது, எனக்கு பயங்காட்ட தண்டவாளத்துல சும்மா படுத்து எந்தரிக்க நினைச்சான்னு சொல்லுவியா?”, கை நீட்டி கேட்டதில், அவன் கோவமும் அதில் இருந்த நியாயமும் புரிந்தாலும்,
“அவ செஞ்சதை நான் சரின்னு சொல்லலை வினோத்… அவ என்ன நினைச்சு கிளம்பியிருப்பான்னுதான் சொன்னேன். “, மெல்ல வானதி விளக்க முற்பட்டாள்.
எதையுமே அவன் கேட்கும் நிலையில் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. உணர்ச்சிகளின் பிடியில் இருந்தான். கோவம், அழுகை, புலம்பல், ஆற்றாமை, குற்ற உணர்ச்சி, கழிவிரக்கம் என்று சுற்றி சுழன்றடித்தது வினோத்தை. ஒரு கட்டத்தில் வானதி கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தாள், வினோத் அவள் அருகே படுத்திருந்தான், அவள் கை வளைவில். ஒரு பாட்டம் அழுது புலம்பி ஓய்ந்திருந்தான். வளர்ந்த ஒரு ஆடவன் இப்படி சிதறிக்கிடப்பதைப் பார்க்க முடியவில்லை வானதியால். ஆனால் இத்தனை வருடமாகப் புரையோடிப் போயிருந்த இந்த துக்கம் வெளியே வருவது அவனுக்கு நல்லது என்பது அப்போதும் அவள் புத்திக்கு எட்டியது. இப்போது தெரிந்த விஷயத்திற்காக மட்டுமில்லை, அவர்கள் போன துயரத்தையும் சேர்த்து அழுது கரைகிறான். அதனால் அவள் தடுக்கவில்லை. கோவத்தில் கத்தினாலும், அழுதாலும், புலம்பினாலும் உடன் ஆறுதலாய் மட்டுமே இருந்தாள்.
எளிதாகக் கிடைப்பதன் அருமை எப்போதும் தெரிவதில்லை. ஸ்வேதாக்கு எல்லாமே எளிதாக அமைந்தது. கண்டதும் காதல், இரு பெற்றோரும் உடனே சம்மதம் சொல்ல, சிறப்பான ஒரு கல்யாணம். அன்பான கணவன், மூன்றே மாதத்தில் குழந்தை உண்டானாள். அழகான மகன் பிறந்தான். எதற்குமே அல்லல்படாத அருமையான வாழ்க்கை. எல்லாம் அவள் விருப்பப்படி அமைந்தும் அதை காத்துக்கொள்ளும் பக்குவம் இல்லாமல், ஒரு சின்ன விஷயத்திற்காக முட்டாள்தனமாக யோசித்து இப்படி அழித்துவிட்டாள்.
ஈ.சி.ஆர் ரோட்டில் காரை இடித்து, நிறுத்திவிடலாம் என்று நினைத்தது ஒரு பக்கம். எப்படி அந்த பின் மதிய வேளையில் மற்ற வண்டிகள் இல்லாமல் இருக்கும். காரை அப்படி இடித்து நிறுத்தினால், வேறு எதுவும் வண்டி மோதாமல் இருக்கும் என்று என்ன நிச்சயம்? இதைக்கூடவா ஒரு பெண் யோசிக்க மாட்டாள். வானதி இதையெல்லாம் நினைக்க நினைக்க ஸ்வேதாமேல் அப்படி ஒரு ஆத்திரம் வந்தது. அதுவும் குழந்தையோடு செல்ல நினைத்தது என்ன ஒரு பைத்தியக்காரத்தனம்?
இவள் யோசனையில் உழன்று கொண்டிருக்க, அப்போதுதான் வினோத்திடம் அந்த மாறுதலைக் கண்டாள். அவன் கைகள் வானதியின் இடுப்பு வளைவை அழுத்தின, முகம்  அவள் தோள்தாண்டி முட்ட வந்தது.
“வினோத்… “, எழ முற்பட்டவளால் அவன் பிடியை மீறி வர முடியவில்லை.
“வினோத்… என்ன செய்யறீங்க? விடுங்க…”, அதட்டலாய் ஒரு குரல் கொடுத்த படியே, இடுப்பிலிருந்த அவன் கையை விலக்க முற்பட்டாள்.
“வானதி…. “, வினோத்தின் குரல் கரகரத்து வந்தது. வெகு வருடங்களுக்குப் பிறகு ஒரு பெண்ணின் நெருக்கம், அல்லாடும் உணர்ச்சிகளின் போக்கில் போனதன் அயர்ச்சி, அத்தனையிலும் வானதி உடனிருந்ததில் அவள் மேல் ஏற்பட்ட பிரியம் நன்றியுணர்ச்சி, ஏற்கனவே அவள் மேல் இருந்த ஈர்ப்பு என்று கலவையானதொரு உணர்வின் பிடியில் அவளை இன்னும் இறுக்கி அணைக்க முற்பட, வானதி மேலும் திமிறினாள்.
“நோ…நோ… வினோத்….”
“ப்ளீஸ் …. வானதி… விலகாதே….”,என்று அவன் தொடர, நெகிழும் தன் மனதையும் உடலையும் சற்று போராடி மீட்டவள், அவனைத் தள்ளிவிட்டு படுக்கையைவிட்டு எழ முற்பட்டாள்.
“நீயும் போறியா…. போடி..”, என்று கோவமாய் வினோத் திரும்ப,
அவள் குர்த்தி வினோத் அடியில் மாட்டியிருக்க, வானதி எழுந்த வேகம் அது கிழிந்தது. அதில் சற்று உணர்வு பெற்றவன், “ சாரி… சாரி…”, என்று எழவும் சற்று தள்ளாடினான்.
“நான்… வானதி…. “, அவன் என்ன சொல்ல வருகிறான் என்று கேட்கவில்லை வானதி.
“இங்கயே இருங்க வினோத். நான் திரும்ப வர வரை நகரக் கூடாது.”, எச்சரித்துவிட்டு வெளியே சென்றாள்.
பத்து நிமிடத்திற்கெல்லாம் திரும்பி வந்தவள், வேறு உடை அணிந்திருந்தாள். கையில் ஒரு கிளாஸ் பாலும், உடன் ஒரு மாத்திரையும் தந்தாள்.
“என்னதிது ?”
“ தூக்க மாத்திரை. பாலை குடிச்சிட்டு போடுங்க. எல்லாத்தையும் கொஞ்ச நேரம் மறக்க, இப்ப உங்களுக்கு தேவை நான் இல்லை, தூக்கம்தான். இது மைல்ட் டோஸ். ம்ம் … போடுங்க.”, என்றாள் விரைப்பாக.
ஒன்றுமே பதில் பேசாமல் பாலைக் குடித்துவிட்டு மாத்திரையை போட்டுக்கொண்டான். “வாஷ்ரூம் போயிட்டு வந்து படுங்க. பத்து நிமிஷத்துக்கெல்லாம் தூக்கம் சுழட்டும். தூங்குங்க. நாளைக்கு பேசிக்கலாம்.”, கட்டளையாகக் கூறிவிட்டு கீழே சென்றாள்.
அக்கறையில் பேசுகிறாளா, கோவத்தில பேசுகிறாளா என்று அனுமானிக்க முடியவில்லை வினோத்தால். என்னவோ யோசிக்க முடியாத படி ஒரு மந்தகதியில் இருந்தது மூளை. அவள் சொன்னதை செய்தவன், படுக்கையில் விழுந்தான்.
காலையில் வினோத்திற்கு முழிப்பு வந்தபோது மணி ஒன்பதை நெருங்கியிருந்தது. மெல்ல எழுந்தவன், தலை பாரமாக இருக்க மெல்ல தலையை ஒரு உலுக்கு உலுக்கி சுற்றிலும் பார்த்தான். ஸ்வேதாவின் உடைகள் இறைந்து கிடந்தன.  அதுவே நேற்றைய பிரளயத்தை ஞாபகத்திற்கு கொண்டு வந்தது. உடலில் ஒரு நடுக்கம் ஓடியது. தள்ளாடியபடியே பாத்ரூமிற்கு சென்றான்.
முகம் அலம்பும்போது, வானதியிடம் தான் அத்து மீறி நடந்ததும், அவள் உதறிவிட்டு அவனை கண்டித்து தூக்க மாத்திரை தந்ததும் நினைவு வந்தது. ஒரு நிமிடம் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தான். வீங்கிச் சிவந்து சற்றே சுருங்கியிருந்த கண்களும், உப்பியிருந்த முகமும், இரண்டு நாட்களாய் வளர்ந்திருந்த தாடியும், பரட்டையாய்க் கலைந்திருந்த முடியும் பைத்தியக்காரனைப் போன்றதொரு தோற்றத்தைக் கொடுத்தது.
வானதியை பார்க்கவே கூசியது. அத்தனை களேபரத்திலும் அவனுக்கு ஆறுதலாய் இருந்தவளை எப்படி அவனால் அணுக முடிந்தது என்று புரியவில்லை. ‘என்ன நினைத்திருப்பாள் என்னைப்பற்றி? பெண்ணைக் கண்டதும் எல்லா சோகமும் காணாமல் போய், இச்சை முந்திக்கொண்டதா?. நல்ல வேளையாக பெரிதாக எந்த விபரீதமும் நடைபெறுவதற்கு முன், அவளே தடுத்துவிட்டாள். இல்லை இல்லை அவனை காப்பாற்றியிருக்கிறாள்.’, எண்ணங்கள் ஓட, மெல்ல அவன் அறையில் இறைந்திருந்த துணிகளை எல்லாம் எடுத்து ஸ்வேதாவின் அலமாரியில் அடைத்தான். வம்சியின் முயல் மட்டும் அவன் மேசைமேல் இடம் பிடித்தது. இனியும் இங்கே இருக்க முடியாது, வானதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவள் அடித்தாலும் வாங்கிக்கொள்ளத்தான் வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வெளியே வர, மலர் மெல்ல படியேறி வந்துகொண்டிருந்தார்.
“தம்பி, எழுந்துட்டீங்களா? சின்னம்மா ஒன்பது மணியாகியும் வரலைன்னா கதைவை தட்ட சொல்லுச்சு. அதான் வந்தேன். என்னப்பா முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு ?” அக்கறையாய்க் கேட்கும் மலரை நோக்கி ஒரு புன்னகையை உதிர்த்தவன்,
“தலைவலிக்கா. வானதி ஒரு தூக்க மாத்திரை குடுத்தா, அதோட எஃபெக்ட்போல. ஒரு காபி குடுங்க. வானதி எங்க?”
“என்ன தம்பி என்னை கேட்கறீங்க? அவங்க அம்மா வீட்டுக்கு போறேன்னு காலையிலேயே போன் பண்ணி சொல்லுச்சே, உங்களுக்கு தெரியாதா?”, ஆச்சரியமாக மலர் கேட்க,
“ஓஹ்… ஆமா..சொன்னா. இந்த மாத்திரை போட்டது இன்னும் கேரா இருக்குகா. நீங்க காபியை போடுங்க, நான் இப்ப வரேன்.”, அவரை அனுப்பியவன், அவசரமாக போனைத் தேட, வாட்சப்பில் அவள் மெசேஜ் இருந்தது.
“வினோத்… நான் கொஞ்சம் யோசிக்கணும். அம்மா வீட்டுல கொஞ்ச நாள் இருக்கேன். நான் பேச ரெடின்னதும் நானே சொல்றேன். இப்படி இருக்கறது சரி வராது. This is completely unfair to me. (இது முற்றிலும் எனக்கு அநியாயமா இருக்கு.)”
படித்தவன், புரியாமல் மீண்டும் படித்தான். விலகிப் போய் என்ன யோசிக்கப்போகிறாள் ? நேற்று நடந்தது அநியாயம் என்கிறாளா? அவனுமே ஒத்துக்கொள்வான் தான்.  அவனது கோபம், அழுகை எல்லாவற்றிர்க்கும் வடிகாலாய் இருந்திருக்கிறாள். எல்லை மீறியபோதுதான் தடுத்தாள். அப்போதும் அவனை உறங்க வைக்க அக்கறையாக பாலும் மாத்திரையும் கொடுத்தாள். தன் மேல் கோபமாக இருக்கிறாளா, வருத்தமாக இருக்கிறாளா என்று கூட புரியவில்லை வினோத்திற்கு. நிரந்திரமாக பிரிய வேண்டும் என்று சொல்வாளா? அவனை திருமணம் செய்ததில் அவளுக்கு எதுவுமே நன்மையில்லையா? இதை நினைத்தவன், சட்டென்று நிமிர்ந்தான். ஆம், இதுவரை இந்தத் திருமணத்தில் எல்லா நன்மையும் அவனுக்குத்தான். வானதிக்காக அவன் எதுவுமே செய்யவில்லை, சொல்லப்போனால நிறைய சங்கடங்களைத்தான் கொடுத்திருக்கிறான்.
அவர்கள் திருமணத்தில் ஆரம்பித்து, அவள் வீட்டு ஆட்களுடன் பேசாதது என்று அடுக்கடுக்காக நினைவு வந்தது. அப்போதுதான் ‘வானதி ஏன் என்னை திருமணம் செய்தாள்? என்ன எதிர்பார்த்தாள் இந்தக் கல்யாணத்தில்?’, என்று தோன்றியது. முதல் முறையாக அவன் திருமணத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். முடிச்சுகள் கண்ணுக்கு புலப்பட்டது.

Advertisement