Advertisement

‘என்ன முட்டாள்தனம்டா பண்ணிவெச்சிருக்க ? மாரேஜ் சர்டிஃபிகேட் கூட உங்கிட்டதான இருக்கு. எப்ப வேணாலும் அதுலயே பார்த்திருக்கலாம்தான? பெருசா அவகிட்ட ரூல் மாத்திக்கலாமா, புடிச்சிருக்குன்னு பேசின?  இந்த சின்ன விஷயத்தைக்கூட தெரிஞ்சிக்கலை.’, என்னதான் திட்டிக்கொண்டாலும் நடந்ததை மாற்ற முடியாது என்று புரிந்தது.
‘சரி… எதாவது கிஃப்ட் வாங்கிட்டு இன்னிக்கு படம், டின்னர் போலாமான்னு கேட்கலாம். வானதி கொஞ்சம் மெச்சூர்ட்தான, சொன்னா புரிஞ்சுக்குவா.’, என்று சரியாக தப்பாய் நினைத்தவன், வகுப்பு இருக்கவும், இதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பாடத்தை எடுக்க சென்றான்.
மாலை ஒரு மணி நேரம் முன்னரே கிளம்பி, ஒரு நகைக் கடைக்கு சென்றவன், தங்க நகைகளைப் புறக்கணித்து நேராக வைர செக்ஷன் சென்றான். ஒரு வைரத் தோடு பார்த்ததும் பிடித்தது. தினப்படி போட்டுக்கொள்ளும் அளவு சிறியதாகவும் இருந்தது. சரியென்று எடுத்துக்கொண்டான்.
வீடு வந்து சேரவும், மலர் அக்கா மட்டுமே இருந்தார்.
“வாங்க தம்பி… சீக்கிரம் வந்துட்டீங்க? சின்னம்மா அவங்க காய்கறி செடிங்களுக்கு தண்ணி பாச்சிகிட்டு இருக்காங்க. கூப்பிடவா?”, அவன் கண்கள் தேடுவதைப் பார்த்து அவரே சொல்லவும்,
“இல்ல, நானே போறேன். எனக்கு ஒரு காபி குடுங்க.”, என்றான் தன் பையை சோஃபாவில் போட்டபடியே.
“இதோ கலக்கிட்டேதான் இருந்தேன். “, அவர் உள்ளே செல்லவும், “ம்ம்ம் அக்கா, இன்னிக்கும் நாங்க வெளிய போறோம். காபி குடுத்துட்டு நீங்க கிளம்புங்க. “, என்றான்.
“ஓஹ்… சரி தம்பி.”, என்றவர் சற்று நேரத்திற்கெல்லாம் இரு கோப்பைகளுடன் வரவும், இரண்டையும் நன்றி சொல்லி வாங்கியவன்,  “நீங்க கதவை சாத்திட்டு போங்கக்கா. நான் அவளோட குடிச்சிக்கறேன்.”, என்று பின்புறம் சென்றான்.
இவன் வந்தது கூட தெரியாமல், குத்துக்காலிட்டு அமர்ந்து, கத்தரிச் செடியின் இலைகளை ஆராய்ந்துகொண்டிருந்தாள்.
“வானதி…”, இவன் குரல் கேட்கவும், சட்டென்று நிமிர, கொஞ்சம் தடுமாறியவள், கை கொண்டு ஊன்றிக்கொண்டு, பின் ஒரு சிறிய புன்னகையோடு எழுந்தாள்,
“நீங்க வந்ததை கவனிக்கலை, அதுக்குள்ள, டைம் ஆகிடுச்சா என்ன?”, எனவும்,
“இல்லை, நான் இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்துட்டேன்.”, கவனமாக அவள் முகத்தை ஆராய, பெரிதாக கோபம் எதுவும் தெரியவில்லை. ஒரு வேளை இதெல்லாம் பெரிதாக எடுக்க மாட்டாளோ என்னவோ? இந்த அம்மாதான் கிளப்பிவிட்டாங்களோ?’, என்று யோசனை செல்ல, அதற்குள் கை அலம்பிக்கொண்டு வந்து காபியை வாங்கியவள், “நானே வந்திருப்பேனே… நீங்க எதுக்கு எடுத்துட்டு வந்தீங்க?”, என்று திரும்பி அவள் வழக்கமாக அமரும் மூங்கில் ஊஞ்சல் நாற்காலியில் அமர்ந்தாள்.
“ம்ம்.. வானதி…. ஐ’ம் சாரி… பிலேட்டட் பர்த்டே விஷஸ் வானதி.”, என்று அவள் முகம் பார்க்க, ஒரு நொடி கசங்கி பின் மீண்டு கொண்டாள்.
லேசாய் தோளை குலுக்கியவள், “இதுல என்ன இருக்கு.”, என்று காபியில் கவனமானாள். அவள் நன்றி கூறி ஏற்றுக்கொள்ளவில்லை என்பது  வினோத்திற்கு புரிந்தது.
“இல்லை… அது நீயும் சொல்லலை… அம்மாவோ இல்லை உங்க வீட்லயும் கூட…எனக்கு தெரியலை…”, தன்னிலை விளக்கம் கொடுக்க, கண்ணை ஒரு முறை இறுக்கி மூடித் திறந்தவள்,
“வினோத் … நான் உங்ககிட்ட எதுவுமே கேட்கலை. விடுங்க.”
“இல்லை… நீ வருத்தப்பட்டிருப்ப… நேத்து நைட் டின்னருக்கு நான் வராம இருந்ததும் உங்க வீட்ல எதுவும் சொன்னாங்களா?”
ஒரு பெருமூச்சுடன், “ நைட் கேக் வெட்டினோம், காலையில கோவிலுக்கு போனோம், நேத்து நான் போட்டிருந்த ட்ரெஸ், நகை நீங்க கிஃப்ட் பண்ணது. காலேஜ்ல அவசர மீட்டிங், அதனாலதான் வரமுடியலைன்னு சொல்லியிருக்கேன். எதாவது பேச்சு வாக்குல வந்தா, இப்படியே சொல்லிடுங்க. “, என்று விட்டு மிச்சமிருந்த காபியை ஒரே மிடறில் விழுங்கினாள்.
“வானதி…. அதெல்லாம் இன்னிக்கு பண்ணலாம். மலரக்காவை அனுப்பிட்டேன். சாயந்திரம் மூவி, டின்னர் போகலாம் வா. அண்ட்…உனக்கு கிஃப்ட்டும் வாங்கி வந்திருக்கேன். “, தன் பாக்கெட்டிலிருந்த சிறிய பெட்டியை தரவும், அவனை ஒரு பார்வை பார்த்தவள், அதை வாங்கி பிரித்து,
“நைஸ், அழகா இருக்கு. எனக்காக எதுக்கு இவ்வளவு மெனக்கெடறீங்க?”, என்றவள் மூடி அவன் கையிலேயே திணித்தாள்.
“இது எனக்கு வேணாம் வினோத். எப்படியும் நான் போட மாட்டேன். இது பார்க்கும்போதெல்லாம், மறந்துபோன விஷயத்துக்கு வந்த சமாதான  நஷ்ட ஈடாத்தான் தெரியும்.  சாரி.  நாளைக்கு நான் சீக்கிரம் கிளம்பணும், முட்டுக்காடு லேக் போறோம் போட்டோ கிளாஸ்ல, தண்ணில சன்லைட் ஷைன் வர மாதிரி எடுக்கற சில டெக்னீக்ஸ் பழக. இன்னிக்கு வெளிய போனா டயர்ட் ஆகிரும். கூட கொஞ்சம் படிக்க வேண்டியிருக்கு எனக்கு.”, உள்ளே சென்றுவிட்டாள்.
“அம்மாடியோ… இவ சைலன்ட்டா கொல்லுவா போலவே? எதாவது பேசி சரி கட்டணுமே!”
அவள் பின்னோடே சென்றவன், “வானதி… உன் கோபம் புரியுது. நான் செஞ்சது தப்புதான்.  பட் நீ புரிஞ்சுப்பன்னு நினைச்சேன். “, என்றான்.
“என்ன புரியணும் வினோத்?”, நின்று நிதானமாகக் கேட்டாள்.
“அதான் எனக்கு தெரியலை… அதுனால மிஸ் ஆச்சு… சாரி…இனி அப்படி ஆகாது.”, முயன்று வினோத் மன்னிப்பு வேண்ட,
“வினோத்… ப்ளீஸ். இதுல நீங்க மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. என் பிறந்த நாள் தெரிஞ்சிக்க உங்களுக்கு தோணலை, நீங்க தெரிஞ்சிக்கலை. இதெல்லாம் தானா வரணும், தடி கொண்டு வர வெக்க முடியாது. “, இழுத்து வைத்த பொறுமையுடன் பேசினாள் வானதி.
“வானதி … அப்படியெல்லாம் இல்லை… நான் பிறந்த நாள் பெருசா எதுவும் பாக்கறது இல்லை. முதல் முறை நீயாவது சொல்லியிருக்கலாம்….”, வினோத் இன்னும் சொதப்ப,
“ஸ்டாப் இட் வினோத்.  என்கிட்ட இந்த மாதிரி சொல்லி முட்டாளாக்காதீங்க. ஸ்வேதா பிறந்த நாள் எப்பனு அவளைப் பார்த்த இரண்டாவது மீட்டிங்ல என்னைத்தான் கேட்டீங்க. படத்துக்கு எல்லாருமா போயிருந்தோம் அன்னிக்கு. அதைத்தான் சொல்றேன், தானே தெரிஞ்சக்கணும்னு தோணணும். நான் குழந்தையா, சாக்லெட்டை தூக்கிட்டு உங்ககிட்ட என் பர்த்டேன்னு சொல்ல ?”, சாட்டையாக விளாசிய வார்த்தைகளின் வலியை வாங்கியவன் வாயடைத்து நின்றான்.
அவனது அதிர்ந்த, குன்றிய முகத்தைப் பார்த்தவள், மனதுக்குள் ‘நிறுத்து,..பேசாதே…பேசாதே…’ என்று சொல்லிக்கொண்டவள், ஒரு மூச்செடுத்து,
“இதுக்குதான் …இதுக்குத்தான் அன்னிக்கு சொன்னேன். நட்புன்ற எல்லைக் கோடு மட்டும் இருந்தா,எனக்கும் எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. என் பிறந்த நாளுக்கு நானே உங்களை வாங்கன்னு ட்ரீட் கூட்டிட்டு போயிருப்பேன். வீணா ரூலை மாத்தலாம், பிடிச்சிருக்கு அது இதுன்னு சொல்லி எதிர்பார்க்க வெச்சு ஏமாந்து என்னை படுத்தறீங்க. உங்க பாஸ்ட் தெரியாத ஒரு பொண்ணாயிருந்தா நீங்க சொல்றதை நம்பி சரி இப்படித்தான் போலன்னு நினைக்கலாம். அதை எங்கிட்ட எப்படி நீங்க ட்ரை பண்ண முடியும்? அவ்ளோ முட்டாளாவா தெரியறேன் நான்? இல்லை வைரக் கம்மலைக் கண்டதும் எல்லாத்தையும் மறந்து ஈன்னு பல்லைக் காட்டுவேன்னு நினைச்சீங்களா? பொருளோட விலையில இல்லை அதுக்கான மதிப்பு, கொடுக்கறவங்களோட எண்ணத்துலையும் அன்பிலையும் இருக்குன்னு நினைக்கறவ நான். உங்களையே கேட்டுக்கோங்க, இது நீங்க ப்ராயசித்தமா வாங்கனீங்களா இல்லை மனசுக்கு பிடிச்சவளோட பிறந்த நாளுக்குன்னு வாங்கனீங்களா?”, மீண்டும் அவளையும் மீறி பேச பேச, வினோத் கந்தலாய் கிழிந்து தொங்க, முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள்,
“சாரி… ரொம்ப பேசறேன்… அந்த அளவுக்கு இது ஒரு பெரிய விஷயமே இல்லை. ஃப்ரீயா விடுங்க.“, அவனைப் பாவமாகப் பார்த்தவள், அவள் அறைக்கு சென்றுவிட்டாள்.
‘இதுக்கு அம்மா சொன்ன மாதிரி இவ விளக்குமாத்தாலயே நாலு சாத்து சாத்தியிருக்கலாம்.’, தளர்ந்து போய் கையில் இருந்த காபி கப்பை சிங்கில் போட்டவன், சோஃபாவில் பொத்தென்று விழுந்தான்.
அடித்து ஓய்ந்த புயலிலிருந்து சில விஷயங்கள் தெளிவாக புரிந்துகொண்டான் வினோத். வானதியிடம் எதையாவது சொல்லி தாஜா செய்யலாம் என்று நினைப்பது முட்டாள்தனம். உண்மைக்கே அவள் அதிகம் மதிப்பு தருகிறாள். இன்னொரு கையில் இருந்த கம்மலைப் பார்த்தவன், ‘என்னக்கு முன்னாடியே நான் என்ன நினைச்சு வாங்கியிருக்கேன்னு சரியா புரிஞ்சிருக்கா. ‘ என்று யோசித்தவனுக்கு சற்று வெட்கமே. ‘விலை அம்பதாயிரத்துக்கு குறையாமல் இருக்கணும், பார்க்க அழகா இருக்கணும்’ என்ற நினைப்பில்தான் வாங்கினான்.
ஸ்வேதா முதல் பிறந்த நாள், அவர்கள் கல்யாணத்திற்கு ஒரு மாதம் முன் வந்தது. அதற்கு எத்தனை உற்சாகமாக ஏற்பாடுகள் செய்தான். அந்த மாதிரியெல்லாம் இப்போது இந்த வயதில் உற்சாகம் வருமா?’, கொஞ்சம் சந்தேகமாக யோசித்தான். கையில் இருந்த வைரக் கம்மல் அவனைப் பார்த்து கண்ணடித்தது. வானதி பொருளின் விலையைப் பற்றி கூறியது ஞாபகம் வந்தது. அப்போதுதான் பல்ப் எரிந்தது. ‘அவளை பிடிக்கும்னு சொல்லிகிட்டு இருக்கியே, எதையாவது செயல்ல காட்டியிருக்கியாடா முட்டாளே!’. வானதி எதிர்பார்ப்பது ஸ்வேதாவிற்கு அவன் செய்ததை செய்ய வேண்டும் என்பதல்ல என்று ஒரு வழியாக புரிந்தது. ‘ம்ம்… வானதிக்கு ஒரு ஹைக்கிங்க் ஷூ, ஒரு காமெரா பாக், இல்லை தண்ணிய சில்லுன்னு வெச்சிருக்கற மாதிரி ஒரு வாட்டர் பாட்டில் கூட சந்தோஷத்தை குடுத்திருக்கும். என்ன இதுக்குடா போய் நகையை வாங்கின? அதான் நாக்கை பிடுங்கற மாதிரி கேட்டுட்டு போறா.’, தன்னையே திட்டிக்கொண்டிருந்தான்.
வாசலில் மணியடிக்கவும் எழுந்து சென்று திறந்தால், வெளியே சொமேடொவிலிருந்து உணவுடன் நின்றிருந்தான் ஒருவன். கையில் பார்சலைக் கொடுத்தவன், ‘ப்ரீ பேமென்ட் பண்ணிட்டாங்க சார்.’, என்று சென்றுவிட்டான்.
“இதான்…இதைத்தான் எங்கிட்டருந்தும் எதிர்பார்க்கறா போல. பசியில் இருப்பன்னு தெரிஞ்சு அக்கறையா ஆர்டர் பண்றா, அவளே காசைக் கொடுத்து கெத்தைக் காட்றா பார்.”, ஒரு புன்சிரிப்புடன் வாங்கி வந்து திறந்து பார்த்தான்.
அவனுக்குப் பிடித்த சூடான கொழுக்கட்டைகள், இனிப்பு, காரம் என்று கலந்து இருந்தது. கூடவே குழிப்பணியாரம், ஊத்தப்பம் என்று களை கட்டியது. ஒரு தட்டில் எல்லாவற்றிலும் கொஞ்சம் வைத்தவன் அவள் அறைக்கு சென்று கதவை தட்டினான்.
‘ஹான்…’, என்ற குரலில் கதவைத் திறந்து உள்ளே வந்தவன், “இந்தா, என்னை திட்டினாலும், நான் பசியா இருப்பன்னு ஆர்டர் பண்ணிருக்கதான? அதே மாதிரி, கோவமா இருந்தாலும், நான் உனக்காக எடுத்துகிட்டு வந்ததால சாப்பிடு. “, தட்டை வைத்து நிமிர, அவனைப் பார்த்து முழித்தாள் வானதி. அவள் பேசியதற்கு கண்டிப்பாக கோவத்தில் இருப்பான். கொஞ்ச நேரம் கழித்து போய் சாப்பிட அழைக்கலாம் என்று நினைத்திருந்தாள்.
சாப்பிட்ட பின் அவள் கிளம்பி கீழே சென்றபோது, அவன் உண்டுவிட்டு எல்லாத்தையும் சுத்தம் செய்துவிட்டு அவன் அறையில் இருந்தது தெரிந்தது. சரி நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று அவளும் திரும்பிவிட்டாள்.
காலையில் வினோத் இறங்கி வரும் நேரம், வாசலை அடைந்திருந்தாள் வானதி.
“அதுக்குள்ளயே கிளம்பிட்டியா? பை வானதி.”, உற்சாகமாக வினோத் சொல்ல, தலையசைத்து விடை பெற்றுக் கிளம்பினாள் வானதி.
‘வரட்டும், இனி செயல்ல காட்டறேன் நான்.’, என்று மீண்டும் உறுதி செய்து கொண்டவன், வரப்போகும் சுனாமியைப் பற்றி அறியாது, சந்தோஷமாக செய்தித்தாளும், மலர் தந்த காபியுமாக காலைப் பொழுதை ஆரம்பித்தான்.

Advertisement