Advertisement

ஸ்வாதி வம்சியின் நினைவு நாள் முடிந்த ஒரு இரண்டு மூன்று நாட்களில் தேறிக்கொண்டான் வினோத். வானதி எந்த விதத்திலும் அவனை தொந்தரவு செய்யாமல் இருந்தாள். அவள் செய்த ஒரே வேலை, பூஜை அறையின் ஒரு பக்கத்தில் ஸ்வேதா, வம்சியின் போட்டோவை மாட்டிவைத்ததுதான். சுவாமி படங்களுடன் சேர்த்து அதற்கும் பூ வைத்தாள்.
வினோத் பார்த்தாலும் ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை. முன்பிருந்த அந்த நெருக்கம் இல்லாமல் இருந்தது. அதை எப்படி மீட்டெடுப்பது என்றும் அவனுக்குத் தெரியவில்லை. வானதி தேவைக்கு பேசினாள். மற்றபடி அவள் அறைக்குள் இருந்துகொண்டாள். ஒரு வேளை தான் கலகலப்பாக பேசினால், அவன் தவறுதலாய் எடுத்துக்கொள்வானோ என்ற எண்ணத்தில் இவள் விலக, நுண்ணுயிரைப் பற்றி நன்கு அறிந்தவன், நுண்ணுணர்ச்சிகளைப் பற்றி அதிகம் தெரிந்தான் இல்லை.
அன்றும் வழக்கம்போல எழுந்து கல்லூரிக்கு கிளம்பினான். வானதியின் அறை திறந்திருக்கவும், சரி கீழே போய்விட்டாள் என்று புரிந்து படிகளில் இறங்கினான்.  போன் பேசிக்கொண்டிருந்தவள், சரிம்மா அப்பறம் பேசறேன், என்று வைத்துவிட்டு அவன் புறம் பளிச்சென்ற புன்னகையுடன் நின்றாள். தானாக வினோத் முகமும் புன்னகையைப் பூசிக் கொண்டது.
“சாப்பிடலாமா வானதி?, காலேஜ் சீக்கிரம் போகணும் இன்னிக்கு.”, என்று சாப்பாட்டு மேசையின் அருகே செல்ல, புன்னகை சற்று மங்கினாலும், “ ஓ.. உக்காருங்க.”, என்று அவளும் அமர்ந்து அவனுக்குப் பரிமாறினாள்.
“என்ன இன்னிக்கு கேசரி?”, வினோத் கொஞ்சம் வைத்ததும் போறும் என்று தடுத்துவிட்டு, சாப்பிட்டான்.
“அது…”, வானதிக்கு சொல்ல மனமில்லை. “சும்மாதான்…”, என்று விட்டு, இட்லி, சாம்பார் சட்னி வைத்தாள்.
“நீ பொறுமையா சாப்பிடு. இன்னிக்கு கொஞ்சம் சீக்கரம் போய் இரண்டு முக்கியமான வேலை முடிக்கணும். “, என்றவன் ஐந்து நிமிடத்திற்கெல்லாம் கிளம்பிவிட்டான்.
எதுவும் எதிர்பார்க்காதே என்று ஆயிரம் முறை சொல்லிக்கொண்டாலும், மானம்கெட்ட மனது, எதிர்பார்த்து ஏமாந்துபோனது. ‘சின்ன குழந்தையா நீ? இன்னிக்கு பிறந்த நாள்னு தெரிஞ்சிருந்தா ஒரு வாழ்த்து சொல்லியிருப்பார். அவ்ளதான? நீ சொல்லலை, அவருக்கு தெரியலை.  முப்பது வயசுல உனக்கு என்ன கேக் வெட்டி கொண்டாடணுமா? நீ என்ன ஸ்வேதாவா?’, என்னென்னவோ சொல்லித் தன்னை தேற்றிக்கொண்டாள். 
வாசு அழைத்து, “வனுமா, சாயந்திரம் உன் பிறந்த நாளுக்கு ஹோட்டல் போலாமா? இல்லை மாப்பிள்ளையோட வேற ப்ளான்ல இருக்கீங்களா?”, என்று கேட்கவும் வானதிக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. ‘என்னிக்கும் உன் ரத்த சொந்தம் உனக்கு நிக்கும் வனு. ‘, என்று தோன்ற, “அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைண்ணா…”, என்றாள்.
“சந்தோஷம்மா. நம்ம எல்லாருக்கும் டேபிள் ஒரு ஏழரைக்கு புக் பண்ணிடறேன் என்று ஹோட்டலை சொல்லவும், சரியென்று வைத்தாள்.
இப்போது போன் செய்து கூற விரும்பவில்லை வானதி. மாலை வரட்டும் சொல்லிக்கொள்ளலாம். எப்படியும் மாலை ஐந்து மணிக்கெல்லாம் வந்துவிடுவாந்தானே என்று நினைத்தாள்.
ஞாபகங்கள் சுழன்றடித்தன.
ஸ்வேதா கல்யாணத்துக்கு முன்பு வரை, முன்னாள் இரவே வந்துவிடுவாள். வீட்டையே ஒரு கலக்கு கலக்கி நள்ளிரவு பர்த்டே கேக் அவள்தான் முதலில் ஊட்டுவாள். தனக்கும் வாங்கிக்கொள்வாள். அவள் கல்யாணம் முடிந்த சில மாதங்களிலேயே இவள் சிங்கப்பூர் வரவும், அங்கே முதல் பிறந்தனாள் மறக்கமுடியாதபடி அமைந்தது.
மதன் அவள் பிறந்த நாள் என்று அலுவலகத்திற்கு ரகசிய ரசிகன் என்ற பேரில் அனுப்பி வைத்த கேக்கும் பொக்கேவும், அதில் அவளை எல்லோருடனும் அவனும் சேர்ந்து செய்த கேலியும் வந்து சென்றது. “சும்மா, இன்னிக்கு ஸ்பெஷலா உன்னை எல்லாரும் கவனிக்க வைக்கணும்னு தோணுச்சு வனு… அதான்.”, அன்று மாலை அவனே ஒத்துக்கொண்டான்.
அதன் பின் பெரிதாக கொண்டாடிக்கொள்ளவில்லை. ஸ்வேதா மறைவுக்குப் பிறகு நின்றே போனது. கல்யாணம் ஆகாத பெண்ணிற்கு பிறந்த நாள் வந்தால், பெற்றவர்களுக்கு கவலைதான் கூடும் இதில் எங்கே கொண்டாட்டம்.  இறுக்கமாகவே நகரும்.
அவள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, வினோத் அழைத்தான்.
“வானதி…இன்னிக்கு சங்கர், சாம் கௌதமோட வெளிய போறேன்மா. டின்னர்க்கு வெய்ட் பண்ணாத, அவங்களோடவே சாப்பிட்டுட்டு லேட்டாதான் வருவேன்.”
“ஓஹ்… “, வானதிக்கு என்ன சொல்வது என்று கூட தெரியவில்லை.
அதற்குள் யாரோ அவனிடம் பேசுவதும், “ஓஹ்… மறந்துட்டேன். வரேன். “, என்றவன்,
“சாரி வானதி… கொஞ்சம் பிசி… எனிவே இதை சொல்லத்தான் கூப்பிட்டேன். பை.”, என்று வைத்துவிட்டான்.
நெஞ்சு வரை வந்த விசும்பலை அடக்கியவள், தன்னை விதவிதமாக திட்டி தேற்றிக்கொண்டு யோசிக்கலானாள்.
இந்த வருடம்தான் பெற்றவர்களுக்கு சந்தோஷம். இதில் வினோத்திற்கு தெரியக்கூட இல்லை என்பது மீண்டும் அவர்களுக்கு தேவையில்லாத சந்தேகத்தைக்கிளப்பும். நேரத்தைப் பார்த்தவள், அருகேயிருந்த  நகைக்கடைக்கு சென்று தனக்கு கழுத்தோடு ஒட்டிய ஒரு மெல்லிய  நெக்லஸ் , கம்மல் செட் வாங்கிக்கொண்டாள். அடுத்து துணிக் கடைக்கு சென்று ஒரு அழகிய சலவார் வாங்கிக்கொண்டு வீடு வந்தாள்.
மலரிடம் வெளியே சென்று இருவரும் உணவருந்தப்போவதாகக் கூறி அவரை சீக்கிரம் கிளப்பினாள். இவள் பிறந்த நாள் என்று அவருக்கும் தெரியாது.
மாலை அழகாகக் கிளம்பி நின்றாள்.  தானே காரை எடுத்துக்கொண்டு ஹோட்டல் சென்று, தன் குடும்பத்துடன் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடினாள். அண்ணி கேட்டதற்கும், இந்த சல்வார், அப்பறம் நகை வாங்கிக் கொடுத்தார். இரவு கேக் வெட்டினோம், காலையில் கோவில் சென்றோம் என்று அடுக்கினாள்.
மாலை திடீரென்று கல்லூரியில் மீட்டிங். எப்படியும் முடிய எட்டாகிவிடும், அங்கேயே சாப்பிட வேண்டியிருக்கும் என்று வினோத் சொன்னதாக மழுப்பிவிட்டாள்.
ஒன்பதரை போல அவர்கள் உணவருந்திக் கிளம்பவும், வினோத் அழைத்தான்.
“வானதி?  வெளிய போயிருக்கியா? நான் இப்பத்தான் வீட்டுக்கு வந்தேன்.”
“கிளம்பிட்டேங்க. இன்னும் அரை மணியில வந்துடுவேன்.”, என்று பொதுவாக பேசி வைத்தாள்.
“மாப்பிள்ளையே வீட்டுக்கு வந்துட்டார். நீ கிளம்பு.”, என்று அவள் அம்மா கிளப்பிவிட்டார்.
ஹாலில் அமர்ந்திருந்தவன், வானதி உள்ளே நுழைந்ததும் அவள் அழகாக இருப்பதைப் பார்த்து, “எங்க வானதி, பார்ட்டியா? அழகா கிளம்பிப் போயிருக்க?”, என்றான்.
முகம் மாறாது இருக்க முயன்று, “ அண்ணா ட்ரீட், அப்பா, அம்மாவும் வந்திருந்தாங்க. “, என்றாள்.
“ஓ… எனக்கு அழைப்பில்லையா?”, சற்று வருத்தம் இருந்தாலும் அதை மறைத்துக் கேட்டான்.
“உங்களுக்கு இல்லாமையா? நீங்க உங்க ப்ளான் சொன்னப்பறம் நான் எங்க இதை சொல்ல? அதான் நான் மட்டும் போயிட்டு வந்தேன்.”
“நீ முதல்லயே சொல்லியிருக்க வேண்டியதுதானே?”
அதற்கு மேல் பேச விருப்பமில்லாதவள், தோளைக் குலுக்கி, “அண்ணா காலையிலதான் கூப்பிட்டு கேட்டான். சாயந்திரம் ஃப்ரீதான் சொன்னேன். அதுக்கப்பறம் நீங்க பேசினீங்க. உங்க ப்ளான் சொன்னீங்க. அதனால என்ன இப்ப? நீங்க உங்க ஃப்ரெண்ட்ஸ் கூட எஞ்சாய் பண்ணீங்க. நான் அப்பா அம்மா கூட ஜாலியா இருந்தேன். “, அவள் குரலில் லேசாய் எரிச்சல் தெரியவும், வினோத் அமைதியானான்.
“உங்களுக்கு பால் எதுவும் வேணுமா?”
“இல்லை… “
“சரி… குட் நைட்”, என்று விடு விடுவென்று மேலே அவள் அறைக்கு சென்றுவிட்டாள்.
வினோத்திற்கு ஒன்றும் புரியவில்லை. நாம் போனது பிடிக்கவில்லையா? இல்லை அவள் பெற்றோர் இவன் வராததுக்கு எதுவும் சொன்னார்களா? ஏன் ஒரு மாதிரி இருக்கிறாள்? என்று யோசித்தவன், ‘சரி ஏதோ மூட் அவுட்ல இருக்கா. விடுடா.’, என்று விளக்குகளை அணைந்துவிட்டு படுக்கச் சென்றான்.
காலையில் வானதி எப்போதும் போல் இருந்தாள். நேற்று என்னவாகிற்று என்று கேட்க தோன்றினாலும், வினோத்திற்கு யோசனையாக இருந்தது. மீண்டும் ஏன் கிளறுவானேன் என்று நினைத்தான். மலர் அக்காவும் இருந்ததால், சரி மாலையில் கேட்டுக்கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டான்.
நேற்று நடந்தது பற்றி ஒன்றுமே சொல்லாமல் வினோத் கிளம்பவும், ‘தெரியுதா? உன் இடம் அவ்வளவுதான். வந்த வேலை முடிஞ்சா, டைவர்ஸ் குடுத்துட்டு கிளம்பு. ஏதோ ஒரு மயக்கத்துல அவன்தான் நிஜமாக்கலாமான்னு கேட்டா, உடனே கோட்டை கட்டிடுவியா? முட்டாள் பொண்ணே!  கொஞ்சமாவது புத்தி வேலை செய்யவும்தான், அன்னிக்கு தடை சொன்ன. ஸ்வேதா போனாலும், அவ இடத்தை யாரும் தொட முடியாது.  உன்னால அவர்கிட்ட இருக்க மிச்ச மீதி அன்பை… இல்லை… அக்கறையை வெச்சிகிட்டு வாழ்ந்திட முடியுமா? அவள்கிட்ட அப்படி இருந்தார், எங்கிட்ட இல்லைன்னு கம்பேர் செய்து பார்த்தே அழிஞ்சிடுவ. இப்பதான் திரும்ப ஃப்ரெண்ட்ஸ் கூட பழகறார், வெளிய போறார். இன்னும் கொஞ்ச நாள், முழுசா ஸ்வேதாவோட இழப்பிலிருந்து வெளிய வந்துட்டா, நீ கிளம்பிடலாம். அது வரைக்கும் ஸ்டெடியா இருக்கணும் வனு. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம பழையபடி இருக்கப் பழகு.’, என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.
இவள் இந்த நினைப்பில் உழன்று கொண்டிருக்க, வினோத் அவன் ப்ரேக் டைமில் இருந்தான். கைபேசி அழைக்கவும்,
“சொல்லுங்க பூம்மா? எப்படி இருக்கீங்க?”, என்றான் உற்சாகமாக.
“நல்லாயிருக்கேன் ராஜா? நேத்து நேரத்துக்கு வீடு போய் சேர்ந்தீங்களாப்பா?”, நேற்று அவன் டின்னரில் இருந்த போது அழைத்திருந்தார். எடுத்தவன், வெளியே டின்னரில் இருப்பதாக சொல்லவும் வைத்துவிட்டார்.
“ஹான்… வந்துட்டேன்மா… என்ன விஷயம் கூப்பிட்டிருந்தீங்க?”
“எனக்கு நீங்க வெளிய சாப்பிட போயிருப்பீங்கன்னு தோணலைடா. இல்லைன்னா தொந்தரவு செய்திருக்க மாட்டேன். “
“உங்களுக்கு ஏன் தோணணும்? நான் காலேஜ் பசங்களோட போனேன். சாம்க்கு ப்ரமோஷன்னு ட்ரீட் வெச்சான். திடீர்னுதான் சொன்னான். வானதிக்கும் அவ வீட்டு ஆளுங்களோட டின்னர் ப்ளான் அன்னிக்குதான் பிக்ஸ் ஆச்சுன்னு சொன்னா.”
“….”
“ம்மா ?”
“ராஜா…. நேத்து நீங்க இரண்டு பேரும் ஒன்னா டின்னர் போகலியா?”, குரல் சற்று மாறி வந்தது சம்பூர்ணத்திடமிருந்து.
“இல்லை… இது ஒரு விஷயமா? சரி எதுக்கு நேத்து போன் பண்ணீங்க. அது சொல்லுங்க.”, இதென்னடா என்று நினைத்து பேச்சை மாற்றப் போனான்.
“ஒன்னும் விஷயமில்லை. வானதிக்கு என்ன வாங்கி குடுத்த? அவளுக்கு பிடிச்சிருந்துதான்னு கேட்கத்தான் கூப்பிட்டேன்.”, மொட்டையாக சம்பூர்ணம் சொல்லவும், வினோத் முழித்தான்.
“இப்ப எதுக்கு அவளுக்கு நான் வாங்கி தரணும்? என்ன..”, என்று கேட்கும் போதே லேசாய் உதைத்தது. நேற்று அவள் அழகாய் அலங்கரித்திருந்தது, காலையில் கேசரி, மாலை அவனிடம் முகம் கொடுத்துப் பேசாதது என்று ஓட, அவன் எண்ணம் சரி என்பது போலவே,
“அப்ப, அவ பிறந்த நாள்னு உனக்கு தெரியாதாடா? நீ அவளுக்கு எதுவும் செய்யலியா?”, அதிர்ச்சியாகக் கேட்டார் சம்பூர்ணம்.
“ஒஹ்…ஷிட்… எனக்கு தெரியாதும்மா….அவளும் சொல்லலை…. யாரும் எனக்கு சொல்லலை…”, நொந்து போய் சொன்னான்.
பல்லைக் கடித்த சம்பூர்ணம், “உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடா. எனக்கு மட்டும் வானதி சொல்லுச்சா என்ன? உங்க கல்யாண தேதி பார்க்க பிறந்த நாள், நட்சத்திரம் குடுத்தப்போ குறிச்சு வெச்சேன். இத்தனை மாசத்துல இதுகூட நீ கேட்டுக்கலை, பார்த்துக்கலை. என்ன பிள்ளையோ. இங்க பாருடா… போனதை பத்தியே யோசிச்சு இப்ப இருக்கறதை இழந்துட்டு நின்ன, புள்ளைன்னு கூட பார்க்காம ஒதுக்கி வெச்சுடுவேன். அவளை மாதிரி தங்கமான பொண்ண உனக்கு போய் கட்டி வெச்சேன் பாரு, என்னைதான் விளக்குமாத்தாலயே அடிச்சிக்கணும். போய் அவளை சரி பண்ணிட்டு பேசு எங்கிட்ட. பித்தளையெல்லாம் தூக்கி வெச்சிக் கொண்டாடுவான், தங்கத்த தரையில போடுவான். என்னத்தை படிச்சு என்ன கிழிச்சானோ.”, அவனிடம் பொரிய ஆரம்பித்து தன்னோடு புலம்பியபடியே வைத்துவிட்டார்.

Advertisement