Advertisement

அத்தியாயம் – 16
திதி  அன்று காலையில் சவரம் செய்து, குளித்து, வேட்டி, சட்டை, மேல் துண்டு சகிதம் எழுந்து வந்தான். சமையலறையில் அதற்குள் தலைக்குக் குளித்து, புடவையில் வானதி எதோ கிண்டிக்கொண்டிருந்தாள், ஏலக்காய் மணம் கமழ்ந்தது.
“நான் கோவிலுக்கு கிளம்பறேன் வானதி.”, என்றான்.
வாசலில் நின்றவனைத் திரும்பிப் பார்த்தவள், முகம் மீசை, தாடி எடுத்து மழமழவென்று இருந்தது பார்த்து ஒரு நொடி திகைத்தாலும், அதை பெரிதாகக் காட்டிக்கொள்ளாமல்,
“முடிச்சிட்டு வருவீங்களா? இங்க பூஜைக்கு ?”, என்று கேட்டாள்.
காலையில் எழுந்து அவள் மெனக்கெடுவதற்காக வேணும் வரவேண்டும் என்பது புரிந்து, “ம்ம்.. வரேன். ஒரு எட்டு மணியாகும்.”
“சரி… காபி தரவா?”, என்றவளை, “வேணாம்.”, என்றுவிட்டு கிளம்பிவிட்டான்.
அவன் சென்ற கால் மணி நேரத்தில் சம்பூர்ணம் அழைத்துவிட்டார் வானதியை. “எழுந்திட்டியா கண்ணு? “, என்ற கேள்வியுடன்.
“சொல்லுங்க அத்தை.”
“இல்ல… இன்னிக்கு ஸ்வேதா திதி… வினோத் சொன்னானா?”, மெதுவாய் கேட்டார்.
“ம்ம்… சொன்னார். இப்பதான் கோவிலுக்கு கிளம்பி போயிருக்கார். வர எட்டு மணியாகும்னு சொல்லிட்டு போயிருக்கார் அத்தை.”
குக்கர் விசிலடிக்கவும், அடங்கும் வரை பொறுத்துவிட்டு,
“ஓ… வீட்டுக்கு வரேன்னானா? சந்தோஷம். என்னமா காலையிலேயே குக்கர் சத்தம் கேட்குது? மலர் இதுக்குள்ள வந்துட்டாளா? ”, நேரடியாக கேட்காமல் சுற்றி வளைத்து பேசும் சம்பூர்ணத்தை நினைத்து சிரிப்பு வந்தாலும்,
“இங்க வீட்ல ஸ்வேதாக்கும், வம்சிக்கும் பூஜை வெச்சிருக்கேன், அதுக்கு படையல் ரெடியாகுது அத்தை.”, இலகுவாகவே கூறினாள்.
“அம்மாடி… என்னடா இவன்னு நினைச்சிக்காத… இன்னிக்கு பூரா பச்சத் தண்ணி பல்லுல படாம இருப்பான் என் புள்ளை. எப்படியாச்சம் ஒரு வாய் சாப்பிட வெச்சுடுமான்னு சொல்லத்தான் கூப்பிட்டேன். இங்க நானுந்தேன் அவளுக்கும் என் பேரனுக்கும் படையல் போடறேன். குழந்தையோட இருக்க நம்ம தோட்ட ஆளுங்களுக்கு மதியம் சாப்பாடு போடறேன். ஆனா என் புள்ளை ஒரு வாய் சாப்பிடாம கெடக்கேன்னு மனசு அடிச்சிக்கும். அப்பறம் எனக்கு எங்க இறங்கும் ?”, சம்பூர்ணம் சொல்லவும் வானதி நெகிழ்ந்துவிட்டாள்.
“அத்தை… அவரை எப்படியாவது கொஞ்சம் சாப்பிட வெக்கறேன். சாப்பிட்டதும் நானே உங்களை கூப்பிட்டு சொல்றேன். நீங்களும் சாப்பிடுங்க. சரியா?”
“சந்தோஷம் கண்ணு… நீ அவனை நல்லா பார்த்துக்குவே. ஆனாலும் மனசு கேட்கலை. அதான் ஒருக்கா கூப்பிட்டேன். மனசுல வெச்சுக்காதம்மா.”, என்று சொல்லவும், ஒரு வழியாக அவரை தேற்றி வைத்தாள்.
அடுத்த அரை மணியில் மலர் வந்துவிட, செய்த சக்கரை பொங்கல், பாயாசத்தை தனியாக எடுத்து வைத்தவள், வடைக்கு அவரை மாவரைக்கச் சொல்லி, சமையலுக்கான மெனுவையும் சொல்லி அவரோடு இணைந்து வேலை பார்க்க ஆரம்பித்தாள்.
அதற்குள், அவள் அம்மா பார்வதி அழைத்தார்.
“சொல்லுங்கம்மா. என்ன காலையிலயே?”, என்று கேட்கவும்,
“இப்பத்தாண்டி காலன்டரைக் கிழிக்கவும், தேதி பார்த்து ஞாபகம் வந்துச்சு. இன்னிக்கு ஸ்வேதா நினைவு நாள்ல ?”
“ஆமாம். திதி குடுக்க உன் மாப்பிள்ளை போயிருக்கார்.”
“வானதி, அவர் மனசு சங்கடப்படாம, ஸ்வேதாக்கும் பிள்ளைக்கும் என்ன செய்ய சொல்றாரோ செஞ்சுடுமா.”, என்ற அறிவுரையில் கண்ணை உருட்டியவள், “படையல் போடத்தான் ரெடி பண்றேன் மா. எட்டு மணிக்கு வந்துடுவார். அதுக்குள்ள நான் எல்லாத்தையும் தயாரா வெக்கணும். நான் பார்த்துகறேன்மா.”
“தெரியும்டி… இருந்தாலும், சொல்லணும்னு தோணுச்சு. சொன்னேன். சரி நீ போய் பாரு. இன்னிக்கு அவர எதுவும் சங்கடப்படுத்திடாத, சரியா?”, மீண்டும் ஆரம்பிக்கவும்,
“ம்மா…”, என்பதிலேயே அவள் கோவம் புரிந்து,
“சரி சரி… வெக்கறேன்.”, என்று வைத்துவிட்டார்.
“ஷப்பா…”, ரவுண்டு கட்றாங்களே…என்று மனதுக்குள் புலம்பியவள், வேலையில் கவனமானாள்.
பூஜைக்கான ஆயத்யங்கள் எல்லாம் முடிக்கவும், வினோத் வரவும் சரியாக இருந்தது. தளர்வாக வந்தவனை, “டயர்டா இருக்கீங்க, காபி தரவா?”, என்று விசாரித்தாள்.
“இல்லை. நீ ரெடி பண்ணிட்டா பூஜை முடிக்கலாம்.”, என்றான்.
“சரி. கை கால் கழுவிட்டு வாங்க. எல்லாம் ரெடிதான்.”, என்று அனுப்பியவள், உள்ளே வந்து ஒரு முறை பார்வையிட்டு, இலையைப் போட்டு அனைத்தையும் பறிமாறினாள். உடன் ஒரு சிறிய வெள்ளிக் கிண்ணத்தில் பால் வைத்தாள் வம்சிக்காக.
வானதி நிமிரவும் வினோத் உள்ளே வரவும் சரியாக இருந்தது. வந்தவன் கண்ணில் பட்டது, ஸ்வேதா, வம்சியைத் தூக்கி வைத்து இருவரும் சிரித்துக்கொண்டிருந்த புகைப்படம், பூமாலை தாங்கியிருந்தது. இறப்பதற்கு ஒரு மாதம் முன் வினோத்தான் எடுத்திருந்தான். ஏதோ விழாவிற்கு செல்லும்முன் எடுத்தது. கண்ணீர் மறைத்தது.
கைகாட்டியவன், தொண்டையைக் கனைத்து, “எங்கருந்து எடுத்த ?”, என்றான்.
“ஸ்வேதா அது எடுத்தப்போ எனக்கு அனுப்பியிருந்தா. அதுலர்ந்து எடுத்து லாமினேட் செய்தேன். அவங்க ஆத்மா சாந்தியடையணும்னு வேண்டிகிட்டு, கற்பூரம் காட்டுங்க வினோத்.”, அவன் கையில் ஆரத்தி தட்டைக் கொடுத்து உந்தினாள்.
அவளை ஒரு முறை பார்த்தவன், ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து, தட்டைக் கையில் வாங்கி கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டினான். அவன் கை நடுக்கத்தைப் பார்த்தவளுக்கு பரிதாபமாக இருந்தாலும், காட்டிக்கொள்ளவில்லை.
அவன் கீழே வைக்கவும், அவளும் ஆரத்தி காட்டி முடித்து நீர் வளவினாள்.  அது முடித்து திரும்பிப் பார்ப்பதற்குள் வினோத் சென்றுவிட்டிருந்தான்.
வானதியுமே ஓய்ந்து போய் அமர்ந்தாள். பார்த்துக்கொண்டிருந்த மலருக்கும் கண்ணில் கண்ணீர் பொங்கிக்கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம், அவர் ஏற்பாடு செய்திருந்த அவருக்குத் தெரிந்த ஒரு ஏழைப் பெண், குழந்தையோடு வந்தாள். ஸ்வேதாவிற்கும் வம்சிக்கும் வைத்த புதுத் துணியை அவர்களிடம் கொடுத்தவள், அமரவைத்து உணவும் பறிமாறினாள்.
“நீ தம்பியைப் பாருமா. நான் இங்க கவனிச்சு அனுப்பறேன்.”, என்று மலர் சொல்லவும், மெல்ல படியேறி வந்தாள். அவன் அறை மூடியிருக்க, தட்டவும் பயமாக இருந்தது வானதிக்கு. எப்படி உணர்கிறான், அவளைப் பார்த்தால் கோவம் வருமா என்று தெரியாததால், சற்று நேரம் அவள் அறையில் விட்டத்தைப் பார்த்து அமர்ந்திருந்தாள்.
அரை மணி நேரத்தில் கதவு திறக்கவும், உடனே எழுந்து சென்றாள். வெளியே செல்ல கிளம்பியிருந்தான்.
“வினோத்…. ப்ரசாதம் கொஞ்சம் சாப்பிட்டு போங்க.”, என்றாள். கண்கள் லேசாய் வீங்கிச் சிவந்திருந்தது அழுதிருப்பான் என்று கோடிகாட்டியது.
“ம்ப்ச்… வேணாம் வானதி…. நீ சாப்பிடு.”, என்று இறங்க முற்படவும்,
“வினோத்…. இது விருந்து சாப்பாடு இல்லை. ஸ்வேதாக்கு பிடிச்ச அவல் பாயாசம், சக்கரை பொங்கல் மட்டுமாவது சாப்பிடுங்க. அவளுக்கு செய்யற மரியாதை. அதோட, நீங்க எதுவும் சாப்பிடாம, எனக்கும் இறங்காது, அத்தைக்கும் இறங்காது. அப்பறம் உங்க இஷ்டம்.”, அவனுக்கு முந்தி படிகளில் வேகமாக இறங்கினாள்.
ஒன்றும் சொல்லாமல் சாப்பாட்டு மேசைக்கு வந்து அமர்ந்தான். ஒரு தட்டில் படையல் இலையிலிருந்தே கொஞ்சம் எடுத்து வைத்து பறிமாறினாள். இத்தனை வருடங்களாக இல்லாமல், இன்று அவள்  நினைவு நாளில் முதன் முறையாக உண்கிறான். ஏதோ ஒரு வகையில் அவர்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டதைப் போல இருந்தது வினோத்திற்கு. இன்று காலையில் அவன் திதி கொடுக்க உதவிய அந்த பெரியவரும் அவனிடம் எத்தனையாவது ஆண்டு என்று விசாரித்துவிட்டு,  “இரண்டு பேரோட ஆத்மா சாந்தியடையணும்னு வேண்டிகிட்டு செய்ங்க, அப்பத்தான் அவங்களுக்கும் விமோசனம் கிடைக்கும். அவங்க கர்மா பலன்களுக்குத்தக்க மறுபிறப்பு ஏற்படும். இன்னும் உங்களுக்கு பற்று விடலை. எள்ளும் தண்ணியும் இறைச்சு அவங்களை மனசார அனுப்புங்க. “, என்று சொல்லியிருந்தார். அவனுமே இத்தனை வருடங்களில் இம்முறைதான் இருவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று வேண்டியிருந்தான். இதுவரையில் ஒரு சடங்காக செய்துவிட்டு கிளம்பிவிடுவான். இதுவரை சடங்கு செய்ய வந்தவர்களும், இதைப் போல எதுவும் சொல்லாமல் மந்திரங்களையும் வழிமுறைகளையும் மட்டுமே கூறியிருந்தனர்.
இப்போது வானதி சொன்னதும் கிட்டதட்ட ஒரே மாதிரி இருக்க, தான் அவர்களை விட்டு விலகுகிறோமா, மனதளவில் அவர்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டோமா? என்று வினோத்தின் எண்ணம் எங்கெங்கோ உழன்று கொண்டிருந்தது. இப்போதுதான் துக்கத்தின் கடைசி நிலைக்கு வந்திருக்கிறான். ஸ்வேதாவும் வம்சியும் இனி வரப்போவதில்லை. அவர்கள் வேறு பிறவிகள் எடுத்தாலும் நன்றாக இருக்க வேண்டும். இனி என் வாழ்க்கை இங்கே வானதியோடு என்ற புரிதலின் எல்லைக்குள் வந்துவிட்டான்.
“ம்மா… கிளம்பறோம். ரொம்ப நன்றிங்க.”, என்ற குரல் பின் கட்டு வாசலில் கேட்க, திடுக்கிட்டுத் திரும்பினான். குழந்தையுடன் ஒரு பெண் செலவதைப் பார்த்தவனுக்கு என்னவோ ஸ்வேதா வம்சியுடன் போவது போலவே இருந்தது. அவர்கள் பிரிவை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்த வினோத்தின் மனது, இப்படி வெளிச்சான்றுகளை தேடி சமாதானம் அடைந்துகொள்ளுதலும் இயற்கைதான்.
அவன் நிலை குத்திய பார்வையைப் பார்த்த வானதி, வேகமாக அவன் அருகே வந்து,
“வினோத்… ஒன்னுமில்லை, படையலுக்கு வெச்ச ட்ரெஸ் குடுத்து, சாப்பாடு போட்டு அனுப்பினேன் அந்த அம்மாக்கும் குழந்தைக்கும்.  அதான் சொல்லிட்டு கிளம்பினாங்க. நீங்க சாப்பிடுங்க.”, என்றாள்.
“ஓஹ்… “, என்றவன், வேறு பேச்சின்றி சாப்பிட்டதும், “நான் கொஞ்ச நேரம் படுக்கறேன் வானதி, டயர்டா இருக்கு.”, என்று சொல்லி சென்றுவிட்டான். உண்மைக்குமே அவனுக்கு அசதிதான். உடலின் சோர்வைவிட மனதின் சோர்வு என்பது பார்க்கும்போதே தெரிந்தது.
போன் செய்து, அவன் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றிருப்பதை சம்பூர்ணத்திடம் கூறியவள் தானும் உண்டு சற்று நேரம் படுத்திருந்தாள். அவள் நினைத்த மாதிரி, வினோத்திற்கு ஒரு பிடிமானம் தேவைப்பட்டது, அந்த ஊன்றுகோலாக, உந்து சக்தியாக அவள் இருக்கவும், ஸ்வேதா, வம்சியின் இழப்பை, இறப்பை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டான்.
கொஞ்சம் புத்துணர்ச்சியுடன் அவனை வைத்துக்கொண்டால் முற்றிலும் வெளிவந்துவிடுவான். அதன் பின்னரும் அவன் கூறும் இந்த ஈர்ப்பு தன் மேல் இருக்குமா? இல்லை அது நன்றிக் கடனாக மாறிவிடுமா? இல்லை இனி இந்த ஊன்று கோல் தேவையில்லை என்று தன் வழியில் செல்லுவானா? அவளை கண்டிப்பாக பாதுகாப்பாகத்தான் விடுவான், ஆனால் விட்டுவிடுவானா? வானதியின் எதிர்மறை எண்ணங்கள் குழப்பி எடுத்தது. ஒரு புறம் மனமோ, அவன் உன் மேல் கண்டிப்பாக இன்னுமே காதல் கொள்வான் என்று கூறினாலும், ஏன் எப்படி என்று தெரியவில்லை. அதனால் அவளுக்கு நம்பிக்கையும் வரவில்லை.
இதற்கெல்லாம் முடிவு, எதிர்பாராமல் தாக்கியது. புயலைத் தாங்கி வெற்றி கொண்டு இணைவார்களா அல்லது பாதை மாறிப் போவார்களா?

Advertisement