Advertisement

 “விடு வானதி… என் மேலையும் தப்புதான். நீ சொன்ன மாதிரி நான் யோசிச்சு என்னை மாத்திக்க வேண்டியது நிறைய இருக்குன்னு புரியுது…. ம்ம்… மதன் குழந்தை பிறந்ததை சொன்னதும், நாம் போய் பார்த்துட்டு வரலாம். அப்படி நான் வெட்டினாப்பல கிளம்பியிருக்கக் கூடாது. சாரி. “
வினோத்தின் நிஜமான வருத்தத்தைப் பார்த்தவள், “ பரவாயில்லை விடுங்க. மதனுக்கு என் நம்பர் தெரியாது. குழந்தை பிறந்தாலும் நமக்குத் தெரியாது. எதேச்சையா இப்ப பார்த்ததுதான்.”, என்று தேற்றினாள்.
ஆச்சரியமாகப் பார்த்தவன், “நீங்க நம்பர் கேட்டுக்கலையா?”, என்று வினவ,
“இல்லை… தேவையில்லை.. வாங்கலை. ப்ளீஸ்… நாம வேற பேசலாமா?”, என்றாள்.
வெயிட்டர் வந்து சூப்பை பறிமாறிவிட்டுப் போனதும், “ம்ம்…. சிக்கன் மஷ்ரூம் சூப், ஸ்வேதாக்கு ஆகவே ஆகாது. அவளை வெறுப்பேத்தவே ஆர்டர் செய்வேன். “, என்றாள் புன்னகையோடு.
அவனிடம் இருந்த சூப்பைப் பற்றி சொல்லியபடியே தன் கார்ன் சூப்பை சூடாற்ற ஊதினாள்.
“நீ எனக்கு சொன்னதுதான் வானதி உனக்கும். உனக்கு என்ன பிடிக்கும், எனக்கு என்ன பிடிக்கும்னு, நம்மளைப் பத்தி பேசலாமா? “, ஆழந்த குரலில் வினோத் கேட்கவும், நிமிர்ந்தவள், அவன் பார்வையில் உறைந்தாள்.  வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போலிருந்தது.  முதன் முதலாய் ஸ்வேதா பற்றிப் பேசுவதைத் தவிர்த்து, அவளைப் பற்றி தெரிந்துகொள்ள விழைகிறான்.
முயன்று இருவரும் அதன் பின்னர் பொதுவாகப் பேசிக்கொண்டனர். காரில் வரும்போது இருந்த எதிர்பார்ப்பு சற்று கலைந்திருந்தாலும், மொத்தமாக பறிபோகாமல் அன்றைய மாலையை காப்பாற்றிக் கொண்டனர்.
சிங்கப்பூரைப் பற்றி அவன் கேட்க, அந்த பேச்சை லாவகமாக அவன் ஜெர்மனியில் இருந்த காலத்தைப் பற்றி மாற்றினாள். ஆனால் அந்த நாட்கள், ஸ்வேதாவின் தாக்கம் அதிகம் இருந்த நேரம், அதைப் பற்றி பெரிதாக பேச விரும்பாதவன், வேறு திசையில் கொண்டு செல்ல, அவள் புகைப்பட பொழுதுபோக்கை பற்றிக் கேட்டான். அதிலும் சிறிது நேரத்தில், மதன் பற்றி பேச்சு எழ, அதையும் விடுத்து, சினிமா பக்கம் போகவும், அதில் எந்த தடுமாற்றமும் இல்லாமல் கொஞ்ச நேரம் ஓடியது.
‘என்னடா இது சோதனை, பேசக்கூடாத டாப்பிக் லிஸ்ட் ஏறிக்கிட்டே போகுதே’, என்றுதான் இருவருக்குமே மைண்ட் வாய்ஸ் சென்றது.
இரவு ஒரு வழியாக கிளம்பி வீடு வரும் பொழுது, கொஞ்சம் இலகுவானார்கள். எல்லாம் டெசர்ட் புண்ணியம் கட்டிக் கொண்டது.
வினோத் தான் எதேச்சையாக ஆரம்பித்தான், “ நீ எனக்கு என்ன பிடிக்கும்னு கெஸ் பண்ணி ஆர்டர் செய். நான் உனக்கு செய்யறேன். பார்க்கலாம்.”, என்று சவால் விட,  வானதி அவனுக்கு ஆப்பிள் க்ரம்பிள் தேர்வு செய்தாள், வினோத் மிகவும் யோசித்துவிட்டு, ஸ்ட்ராபெரி சீஸ் கேக் ஆர்டர் செய்தான்.
இருவரும் தான்தான் வெற்றி பெற்றதாக வாக்குவாதம் செய்தாலும், ஆர்டர் செய்த இரண்டையும் வழித்து சாப்பிட்டுத்தான் வெளியே வந்தார்கள்.
காரிலும், “எனக்கு கொஞ்சம் டேஸ்ட் பண்ண குடுத்துட்டு, மொத்த கேக் நீதான் சாப்பிட்ட, இதுல பிடிக்காதுன்னு சீனா?”, என்று கலாய்த்துக்கொண்டுதான் வந்தான்.
“முதல் ராங்க் அதுக்குக் கிடையாதுன்னுதான் சொன்னேன். சாக்லெட் ஃபட்ஜ் இருந்தா, எப்பவும் அதுதான் என் சாய்ஸ்.”, வானதி சொன்னதை மனதில் குறித்து வைத்தான்.
அதே போன்று, கஸ்டர்ட்  பெனா கோட்டா, அவனது முதல் விருப்பம் என்று அவள் தெரிந்துகொண்டாள்.
ஒரு வாரம் போல சுமூகமாகச் சென்றது. வாசுவின் வீட்டிற்கு விருந்துக்கு சென்று வந்தார்கள். இந்த முறை நன்றாக பேசினான் அவர்கள் எல்லாருடனும். வாசுவிடம், வானதியின் குழந்தை பருவக் கதைகள், குறும்புகள் என்று கேட்கவும், வாசுவும், அவன் அன்னையும் விருப்பமாகவே அவனோடு பகிர்ந்துகொண்டார்கள்.
 “இதெல்லாம் இப்ப எதுக்கு சொல்றண்ணா? அப்பறம் என்னை கேலி செய்வார்.”, என்று வானதி சிணுங்க, வினோத், “ எங்கம்மாகிட்டருந்து எல்லா கதையும் கேட்டு நீ என்னை கலாய்க்கும்போது, எனக்கு நாலு விஷயம் தெரியணுமே, தப்பி பிழைக்க..”, என்று சிரித்துக்கொண்டே கூறியதில், வானதியின் பெற்றோர் மகிழ்ந்து போனார்கள்.
மகளை இப்படி பார்க்க தெவிட்டவில்லை. வினோத் கொஞ்சம் முசுடோ, கோபக்காரனோ என்று எண்ணியிருக்க, அவர்கள் பேசிக்கொண்டதில் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பது தெளிவாய் தெரிந்தது.
செப்டம்பர் பிறக்கவும், வினோத் கொஞ்சம் தடுமாறினான். இந்த மாதமே அவனுக்குப் பிடிக்காது. ஸ்வேதா, வம்சி திதி வரும். அவர்கள் அவனைவிட்டுப் போய்விட்டார்கள் என்ற உண்மையை அறைந்து சொல்லும். திதி கொடுத்துவிட்டு அன்று முழுதும் தனியாக திரிவான். யாரோடும் பேசக் கூட பிடிக்காது. அலைந்து திரிந்து அலுத்துப் போய் நள்ளிரவில் திரும்பினால் அடித்துப் போட்டது போல தூங்கியிருப்பான்.
இந்த முறை, என்ன செய்வது? வானதி இருக்கையில், ஸ்வேதாவிற்கு திதி கொடுக்கலாமா என்பது முதல் சந்தேகம். அவன் தாயிடமே கேட்டான்.
“அதுக்கென்னடா…  தாராளமா செய்யலாம். நீதான் செய்யணும். அதெல்லாம் வானதி தப்பா நினைக்கமாட்டா. ஆனா ராஜா… எப்பவும் போல நாள் பூரா அலையாத. வீட்டுல வானதியிருக்கா. உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குன்னு செய்ய வேண்டிய கடமையை முடிச்சிட்டு எப்பவும் போல இருக்கணும், சரியா?”, அவன் கேட்காத கேள்விக்கும் சேர்த்து பதில் சொன்னார்.
கடந்த பத்து நாட்களாய் ஸ்வேதாவைப் பற்றி பேச்சே எடுக்காது கவனமாக இருந்தார்கள் இருவரும். அதை உடைத்து, அன்று மாலை,
“வானதி… இன்னும் இரண்டு நாள்ல வம்சி, ஸ்வேதா திதி வருது.”, மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.
“தெரியும் வினோத். வழக்கமா ஒரு குழந்தைங்க ஆசிரமத்துக்கு அவ பேர்ல சாப்பாடு குடுப்பேன். இந்த முறையும் சொல்லியிருக்கேன். இங்க எதுவும் செய்யணுமா?”, அமைதியாக கேட்டாள் வானதி.
தோழியின் நினைவாக அதுவும் ஸ்வேதா பேரில் வானதி செய்வது வினோத்தின் மனதை தொட்டது. ஆனால் புகழ்ந்து எதுவும் சொன்னால், அதற்கு, ‘என் அன்பு விலைக்கு இல்லை’, என்று கோவிப்பாள் என்பதும் புரிந்தது. எனவே அதைப் பற்றியே எதுவும் சொல்லாமல்,
“ம்ம்.. தெரியலை. நான் கோவில்ல திதி குடுத்துடுவேன். வீட்ல செஞ்சது இல்லை. நீ அம்மாட்ட கேட்டுக்கோ.”,
“உங்களுக்கு என்ன செய்யணுமோ செய்யலாம் வினோத். இதுல வேற யாரு கிட்டயும் கருத்து கேட்க வேணாம். இது சும்மா முறைக்கு செய்யறது இல்லை. உங்களோட ஆத்ம திருப்திக்கு பண்றது. நீங்க சொல்லுங்க.”, வானதி கேட்கவும், வினோத்திற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவனுக்கு அந்த நாளே உவப்பானதாக இருக்காது. இதில் என்ன செய்து என்ன திருப்தி அடைவது ? ஆனால் அதை வானதியிடம் சொல்லுவதா இல்லையா என்பது குழப்பமாக இருந்தது. முன்பென்றால் இதுதான், இப்படித்தான் என்று சொல்லியிருப்பான்.
அவன் தர்மசங்கடமாக இருப்பதைப் பார்த்து, வானதியே, “ஏன்… என்னாச்சு வினோத் ? “, என்று கேட்டாள்.
“இல்ல… நீ திடீர்னு கேட்கவும் எதுவும் தோணலை. இங்க வீட்ல எதுவும் செய்ய உனக்கு கஷ்டமா இருக்கும்தானே… வேணாம்.”
அவனைப் பார்த்தவள், “ஸ்வேதா உங்க மனைவி, வம்சி உங்க பிள்ளைங்கறது மாறாது. அவங்களுக்கு இங்க பூஜை பண்றதுல எனக்கு என்ன கஷ்டம்? உங்களை நான் மொத்தமா மறந்துடணும்னு சொன்னேனா? ஏன் இத்தனை தடுமாற்றம் வினோத்? ஸ்வேதா உங்க பாஸ்ட்ன்னு மனசுல பதிய வைங்கன்னுதான் கேட்டேன்.
நீங்க எனக்காகன்னு உங்க உணர்வை மறைச்சீங்கன்னா, கொஞ்ச நாள்ல அது வெறுப்பாத்தான் மாறும். “, என்றாள்.
அழுத்தமாக வந்த அவள் பேச்சில் இருந்த நியாயம் வினோத்தை சுட்டது. “ம்ம்… உன்னை மாதிரி அறிவுக் கண்ணால பார்க்கலை நான். அதான் அந்த தெளிவு கிடைக்காம தடுமாறேன். ஃப்ராங்க்லி, இத்தனை வருஷம் இந்த நாளைக் கடக்க நான் கஷ்டப்படுவேன். கோவிலுக்குப் போய் திதி குடுத்தாலும், திரும்ப வீட்டுக்கு வராம எங்கயாவது சுத்திகிட்டு இருப்பேன்.  இந்த வருஷம் என்ன, எப்படின்னு எனக்கே தெரியலை.”, வினோத் நெற்றியைத் தேய்த்தபடியே கூறவும், அவனின் போராட்டத்தைப் பார்க்க சகியாமல்,
“வினோத்… மனசுக்கு தோணுனபடி இருங்க. யாரும் உங்களை ஜட்ஜ் பண்ணப் போறதில்லை, நான் உட்பட. உங்க வேதனையோட அளவு கண்டிப்பா எனக்கு தெரியாது. அதனால, நான் எந்த அட்வைசும் தரப் போறதில்லை. நீங்கதான் முயற்சி பண்ணி வெளிய வரணும். அது மட்டும்தான் சொல்வேன். அண்ட் எனக்காக பார்க்காதீங்க. “, வானதி சொல்லவும், எழுந்து வந்து அவளைத் தன் வயிற்றோடு அணைத்தவன், குனிந்து அவள் உச்சந்தலையில் ஒரு முத்தம் வைத்து,
“ நீ ஏன் என்னை கல்யாணம் செய்ய முடிவு செஞ்சன்னு எனக்கு இன்னுமே தெரியலை வானதி. பட் அப்படி முடிவு செஞ்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. “.
‘என்னடா நடக்குது’, என்று அவனை நிமிர்ந்து பார்த்து முழித்தவளின் கன்னம் வருடிவிட்டு, “குட் நைட்”, சொல்லி அவன் அறைக்குச் சென்றுவிட்டான்.

Advertisement