Advertisement

அத்தியாயம் – 15
சற்று நேரத்திற்கெல்லாம், கையில் போனை பிடித்தபடியே, படியில் தடதடத்து வந்தவனைத்தான் பெண்கள் இருவரும் பார்த்திருந்தனர். கீரீம் கலரில் லினென் சட்டை, அடர் சாம்பல் நிற ஜீன்ஸ் அவன் உடற்பயிற்சி செய்த உடலை பறைசாற்ற, கையில் அவன் விரும்பிக் கட்டும் டாக்ஹாயர் வாட்ச். கவர்ந்திழுக்கும் புன்னகை மட்டுமே முகத்தின் ஒரே அணிகலன். அதுவே போதுமானதாக இருந்தது.
“என்னக்கா… கிளம்பலையா?”, என்றவனை,
“இல்ல தம்பி, இரண்டு பேரையும் சேர்த்து பார்த்துட்டு போலாம்னு இருந்தேன். மனசுக்கு நிறைவா இருக்கு. நாளைக்கு சுத்திப் போடறேன். பத்திரமா போயிட்டு வாங்க.”, மலர் சொன்னதைக் கேட்டவன், கண்கள் சுருக்கி, புன்னகையை மேலும் விரிக்க, ஒரு பக்கம் கன்னத்தில் லேசான குழி விழுந்தது. அதில் பாவம் வானதிதான் விழுந்தாள்.
“வானதி… வா..”, என்று இழுத்து அருகில் நிற்க வைத்து லேசாய் தோள் அணைக்க, அப்போதுதான் போன் மலர் கையில் இருக்க அவர் இவர்கள் இருவரையும் போட்டோ எடுக்க ரெடியாக இருந்தார் எனபதே அவளுக்குப் புரிந்தது.
நிமிர்ந்து அவன் முகத்தைக் காண, அந்த நொடி வினோத்தும் அவளைக் காண, அவன் பார்வையில் முகம் சற்றே சிவப்பை பூசிக்கொண்டது வானதிக்கு. அதில் அவன் சிரிப்பு இன்னும் விரிய, மலர் புண்ணியத்தில் அழகாய் அந்த நொடி பதிவாகியது.
திரும்பி இருவரும் அவரைப் பார்க்க, மேலும் இரண்டு புகைப்படும் எடுத்துவிட்டு தந்தார் கைபேசியை. அவனின் நெருக்கம் தந்த தடுமாற்றம் போக்க, மலரை அனுப்பி, உடைக்குத் தோதான ஹீல்ஸ் செருப்பை எடுக்கும் சாக்கில் விலகி வாசலுக்குச் சென்றாள்.
காரில் வந்து கொண்டிருந்த போதும் பார்வைகள் பரிமாறிக்கொண்டார்கள், பேச்சுகள் குறைவாகவே இருந்தது. சித் ஸ்ரீராம் மெலிதான சத்தத்தில் உருகிக்கொண்டிருந்தார்.
அந்த புதிதாக திறக்கப்பட்ட உயர் நட்சத்திர உணவகத்தின் வாயிலில் கார் சாவியை அங்கிருந்த சிப்பந்தியிடம் கொடுத்தவன், அவளை கைப்பிடித்து அழைத்துச் சென்றான்.
உள்ளே வெயிட்டிங் ஏரியாவில் நடக்க, எதிரே வந்தவனைப் பார்த்து நின்றாள் வானதி. அவந்தானா என்று பார்க்க, அந்த ஆடவனும் இவளை திரும்பிப் பார்த்து, அடையாளம் தெரிந்து பெரிதான புன்னகையோடு வந்தான்.
“ஹாய் வானதி… எப்படியிருக்க?”, ஆறடி உயரத்தில், நல்ல கலர், கம்பீரம், எதோ சினிமா ஹீரோ போன்ற தோற்றத்தில் இருந்தவன், அவர்கள் அருகே வரவும், ‘யாருடா இது?’, என்று பார்த்திருந்தான் வினோத்.
“ஹாய்… நல்லா இருக்கேன். வினோத், இவர் மதன்மோகன். சிங்கப்பூர்ல இருக்கார் என்று ஒரு புகழ்பெற்ற வங்கியின் பெயரைச் சொல்லி, ஃபண்ட் மானேஜரா இருக்கார். கொஞ்ச நாள், இரண்டு பேரும் ஒண்ணா வேலை செய்தோம், அவர் இந்த பாங்க் சேரதுக்கு முன்னாடி. மதன், என் பெட்டர் ஹாஃப், டாக்டர் வினோத், மைக்ரோபயாலஜி ப்ரொஃபசர், என்று அவனது கல்லூரியின் பெயரைச் சொல்லி அறிமுகம் செய்தாள். அவளின் கணவன் என்ற குறிப்பில் சற்றே ஆச்சரியம் வந்து போனது மதனின் கண்களில்.
பார்வையால் அளந்தபடியே கைகுலுக்கினார்கள் மரியாதை நிமித்தம். “கங்க்ராட்ஸ், எப்ப கல்யாணம் ஆச்சு?”, என்று மதன் கேட்க, வினோத் பதிலளித்தான்.
வானதியைப் பார்த்த மதன் கண்ணாலேயே ஏதோ கேட்க, வானதியும் ஆமோத்ததுபோலத் தெரிந்தது. அதற்கு மேல் வினோத்திற்கு இருப்பு கொள்ளவில்லை.
“வெல்… நீ பேசிட்டு வா வானதி. நான் டேபிள் ரெடியாச்சா பார்க்கறேன். சீ யூ மதன்.”, என்று கையாட்டிவிட்டு, இடத்தை காலி செய்தான்.
அவன் அப்படி சட்டென்று அகன்றது பார்த்து, துணுக்குற்றாலும், வானதி முகத்தில் எதுவும் காட்டவில்லை.
“எப்ப வந்தீங்க மதன் சென்னைக்கு? ஹாலிடேவா ?”
“இல்லை, சிங்கப்பூர்லர்ந்து கிளம்பிட்டேன், அடுத்த மாசம் லண்டன் ப்ரான்ச் போறேன்,யூரோப் ஹெட்டா ப்ரமொஷன் வந்திருக்கு.”,மெல்லிய புன்னகையோடு சொல்லவும், நிஜமான மகிழ்ச்சியுடன்,
“வாவ்… வாழ்த்துக்கள் மதன்.”, என்றவளைப் பார்த்தவன், “ம்ம்…இப்ப வந்திருக்கறது என் மனைவியோட டெலிவரிக்கு. அனேகமா அடுத்த வாரத்துல இருக்கும்.”, என்றுவிட்டு அவளைப் பார்க்க, வானதி முகத்தில் கலவையான உணர்ச்சிகள், இறுதியில் மகிழ்ச்சியில் நின்று, “நிஜமாவே ரொம்ப சந்தோஷம் மதன், வாழ்த்துக்கள், உங்க மனைவிக்கும்.”, என்றவள் ஏதோ கேட்க யோசித்து பின் அமைதியாக, அவள் உணர்வுகளை சரியாகப் படித்தவன்,
“எங்க அம்மாவோட செலக்ஷன் சுனிதா. பப்ளி, இன்னொசென்ட் பொண்ணு.”, மதன் சொல்லவும், இந்த வரையறை எதிலும் பொருந்தாத வானதி, “க்யூட். “, என்றாள். அவள் முகம் படித்து சரியாக மதன் கணித்து பதில் கூறியதைப் பற்றி அவளும் கேட்கவில்லை, அவனும் சொல்லவில்லை. ஒரு காலத்தில் இது வாடிக்கைதான் இருவருக்கும்.
“நீ தேர்ந்தெடுத்த வாழ்க்கை உனக்கும் சந்தோஷத்தை குடுக்கட்டும் வானதி. பை.”, என்றவன் அதோடு பேச்சை முடித்து விறுவிறுவென்று சென்றுவிட்டான்.
ரெஸ்டாரண்ட் வாசலில் இருந்த பணியாள், இவள் வினோத்தின் பெயர் சொன்னதும், அழைத்து வந்தான். அவள் வினோத் எதிரே அமர நாற்காலியை இழுத்துவிட்டு, முகமன் கூறி அகலவும்,
“என்ன வினோத். சட்டுனு வந்துட்டீங்க? “, என்றாள்.
“அவர் கண்ணாலயே ஏதோ கேட்கவும், நீ அதுக்கு பதில் சொல்லவும் இருந்தீங்க. எதுக்கு நான் இடைஞ்சலா? அதான் ஃப்ரீயா பேசுவீங்கன்னு வந்துட்டேன்.”, கொஞ்சம் குத்தலாக பதில் வந்தது.
‘அச்சோ பார்த்துட்டாரா?’, என்று நினைத்தவள், “அப்படியெல்லாம் எதுவும் இல்லை..”, என்று சமாளிக்க,
“ப்ளீஸ்,  அது என்ன விஷயம்னு நீ சொல்ல வேண்டாம், பட், நான் பார்த்ததை இல்லைன்னு சொல்லி என்னை முட்டாளாக்காதே. “, தண்ணீரை எடுத்து ஒரு மடக்கு பருகிவிட்டு, “ஆர்டர் பண்ணேன்.”, என்றான்.
மெனுவை எடுத்துப் பிரித்தவள், “ பெருசா ஒன்னுமேயில்லை. நான் கல்யாணம் செய்வேன்னு மதன் எதிர்பார்க்கலை. அதான் கேட்டார், அவ்ளதான்.  அவர் மனைவிக்கு இந்த வாரத்துல ப்ரசவம்னு சென்னை வந்திருக்கார். ஒரு மாசம் கழிச்சு லண்டன் போறார், அங்க அவருக்கு ப்ரமோஷனோட போஸ்டிங்.”, ஒப்பித்தாள்.
 “உன் மேல ரொம்ப பாசம் போல ?
“நீங்க இருந்த இரண்டு நிமிஷத்துலயே தெரிஞ்சுதா?”, மெனு கார்ட்டின் மேலே அவள் கண்கள் மட்டும் தெரிய, ஒரு புருவம் உயர்ந்தது.
“ம்ம்… கண்ணுலயே பாசம் பொங்குச்சே. பார்த்தேன். வீட்டுக்கு கூப்பிட்டியா?”, வினோத் கேட்கவும், இல்லை என்று தலையசைத்தவள்,
“ரொம்ப நல்ல ஃப்ரெண்டா இருந்தார் மதன். ஆனா, அவருக்கு நான் கொஞ்சம் கஷ்டம் குடுத்துட்டேன். விலகியிருக்கறதே பெட்டர்.  அவர் மனைவி, குழந்தைன்னு ஹாப்பியா இருக்கார். அதே போறும்.”, வானதி வருத்தமான குரலில் சொல்லவும், கேட்ட வினோத்திற்கு பொறாமை பொங்கியது.
“ஏன், அவரை லவ் பண்ணியா? பார்க்க ஹீரோ மாதிரி இருக்காரே. பண்ணலைன்னாத்தான் அதிசயம்.”, என்று வாயைவிட, பார்வையாலேயே சுட்டெரித்தாள் வானதி. மெனுவை இறக்கியவள்,
“வினோத்….நீங்களா இட்டுகட்டி பேசாதீங்க.”, எச்சரித்தாள். அவள் மூக்கு நுனி சிவப்பைப் பார்த்தவன், ‘டேய்… இப்ப எதுக்கு இதை கிளற்ர? ‘, என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டவன்,
“சரி விடு. நீ ஆர்டர் குடுக்க ரெடியா?”, என்று கேட்டான்.
“உங்களுக்கு என்ன வேணும்னு நீங்க பாருங்க.”, அவன் புறம் மெனு கார்ட்டை தள்ளினாள்.
“ உனக்கு பிடிச்சதையே இரண்டு மூணு சொல்லு. மிச்சம் நான் சாப்பிட்டுக்கறேன்.”, என்று வினோத் சொல்லவும்,
அவனையே பார்த்தாள் வானதி. என்ன என்று அவனும் பார்க்க,
“எனக்கு வேண்டியதை நான் செலக்ட் பண்ணிட்டேன். உங்களுக்குப் பிடிச்சதை நீங்க சொல்லுங்க. ஷேர் பண்ணிக்கலாம். நான் ஸ்வாதி இல்லை, அது, இதுன்னு ஆர்டர் பண்ணிட்டு எல்லாத்துலையும் மிச்சம் வைக்க.”, வானதியின் குரல் வறண்டு ஒலிக்க,
‘ஐயோ…’, என்றானது வினோத்திற்கு. கண்களை ஒரு முறை இறுக்கி மூடி, திறந்தவன்,  நெற்றியைத் தேய்த்து, “சாரி… அப்படி நினைச்சு சொல்லலை… அது…”, சங்கடமாகக் கூறியவனை பார்த்து,
“தெரியும்… பழக்க தோஷத்துல சொல்லிட்டீங்க. இப்ப மெனுவைப் பார்த்துட்டு ஆர்டர் செய்ங்க.”, என்றாள். ஒரு வழியாக சிப்பந்தியை அழைத்து ஆர்டரைக் கொடுத்தான். அவர் போனதும்,
“எனக்கு ஒரு விஷயம் புரியலை. இதுக்கு முன்னாடியும் இந்த சில வருஷத்துல வெளிய சாப்பிட்டு இருக்கீங்க. என் கூடவும் கல்யாணத்துக்கு முன்னாடி சாப்பிட்ட போதும், ஒரு வாட்டி நான் சொன்னது ஓகேன்னு சொன்னீங்க, அடுத்த முறை நீங்கதான ஆர்டர் பண்ணீங்க. இப்ப மட்டும் எப்படி ஸ்வேதாவோட இருக்கும்போது இருந்த பழக்கம் வருது உங்களுக்கு?”, வானதியின் கேள்வியில் நிமிர்ந்து அமர்ந்தான் வினோத்.
“நான் உன்னை மாதிரி எல்லாத்தையும் அனலைஸ் பண்ணலை வானதி. யோசிக்காமத்தான் பேசினேன். ஏன், எதுக்குன்னு ஆராய்ச்சி எதுக்கு ?”, ஆனாலும் அவள் கேட்ட கேள்வி அவனை யோசிக்க வைத்தது.
“இல்லை…. ஸ்வேதாக்கு பதிலா நானா? இல்லை என் ரூபத்துல ஸ்வேதா கூட இருக்க மாதிரி தோணுதா?”, வானதி கேட்கவும் மனதில் அடிவாங்கினது போலிருந்தது வினோத்திற்கு.
“வானதி… எனக்கு இல்லைன்னாலும் உனக்கு கொஞ்சம் மரியாதை குடு. உன்னை மனைவின்னு நினைக்கவும்தான் அப்படி பேசியிருக்கேன்னு ஏன் தோணலை உனக்கு ? “, முகம் வாடிக் கேட்பவனைப் பார்த்ததும் கஷ்டமாகிப் போனது வானதிக்கு. ‘ஏன் இப்படி எடக்கு மடக்கா யோசிச்சு அவரையும் கஷ்டப்படுத்தி, உன்னையும் கேவலப்படுத்திக்கற வனு.”, என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டவள்,
“சாரி வினோத். நான் பேசினது தப்புதான். மன்னிச்சிருங்க.”, என்றாள் அமைதியாக.
முதல் முறையாக வினோத்திற்கு உறைத்தது. இத்தனை நாள், ஸ்வேதாவைப் பற்றி பேசும்போதெல்லாம் முகம் சுளிக்கவில்லை. கல்யாணத்தை நிஜமாக்கலாம் என்று கேட்ட பின்பும், தான் இப்படி நடப்பது மிகவும் தவறு, அதற்கும் முகத்தை தூக்காமல், நிதானமாக இருக்கிறாள். ஒரு சின்ன விஷயம், அப்படியே மதனைக் காதலித்திருந்தாலும், இருவர் வாழ்க்கையும் வேறு பாதைகளில் போக, இவன் பொறாமையில் பேசியது எவ்வளவு சிறுபிள்ளைத் தனம். அவனுக்கே வெட்கமாக இருந்தது அவன் நடத்தையில்.

Advertisement