Advertisement

இரவு மலர் போனதும், இவர்கள் இருவரும் சாப்பிட அமர்ந்த பின், வினோத் மெதுவாக ஆரம்பித்தான்.
“வானதி… நாம் பேசணும். கல்யாணத்துக்கு முன்ன நம்ம வாழ்க்கையை எப்படி கொண்டு போகணும் நிறைய யோசிச்ச. ஆனா, நம்ம இரண்டு பேருக்குமே ஒரு பிடித்தம் வரும்னு யோசிச்சயா?”
“இல்லை…. “,
“ஏன்? அதுவும் ஒரு ஆப்ஷந்தானே?”, வினோத் கேட்கவும், தோளைக் குலுக்கியவள்,
“உங்களுக்கு என்னைப் பிடிக்கும்னு நான் நினைக்கலை. “, என்று சொன்னாள்.
“உனக்கு என்னை பிடிச்சிருக்கும்னு நினைச்சியா?”, கேள்வியை திருப்பினான் வினோத்.
புருவம் சுருக்கியவள், “ பிடிச்சா நல்லது… வாழ்க்கை ஸ்மூத்தா போகும்னு நினைச்சேன்.”
“அது மட்டும்தானா? “
“ம்ப்ச்…. ப்ளீஸ்…. என்ன கேட்கணுமோ நேரடியா கேளுங்களேன்? “, அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியவில்லை வானதிக்கு.
“ஹ்ம்ம்…. நேத்து நடந்தது பத்தி யோசிச்சேன். எனக்கு சில கேள்விகள் இருந்துச்சு.”, வினோத் அப்போதும் சுற்றி வளைத்துக்கொண்டிருந்தான்.
“சரி… கேளுங்க.”
“நீ பேசினதும் தப்பு, அதுக்கு நான் பேசினதும் தப்புதான். ஆனா அதுக்கு  நீ ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்ட. நான் கொஞ்சம் பயந்துட்டேன். நீ அதிகம் எமோஷனலாகி நான் பார்த்ததில்லை. நான் பேசினது அபத்தம்னு தெரிஞ்சும் நீ அதை இக்னோர் பண்ணாம, ஏன் அவ்வளவு ஃபீல் ஆன?”, கொஞ்சம் வருத்தமாகவே கேட்டான் வினோத்.
அவனையே உற்றுப் பார்த்தவள், “ நேத்து என்னை குத்தம் சொன்னீங்க. அதுக்கப்பறம் உங்களைக் குத்தம் சொல்லிகிட்டீங்க. ஆனா ஸ்வேதா சொன்னது தப்புன்னு ஒரு செகண்ட் கூட நீங்க சொல்லலை. ஏன்?”, என்று கேட்கவும், ஒரு நிமிடம் திகைத்துப் பார்த்தான் வினோத்.
அவள் கேட்டபின்தான் அவனுக்கே உரைத்தது. அவன் திகைப்பைப் பார்த்தவள், “ஸ்வேதா மேல தப்புன்னு உங்களால ஒத்துக்கவே முடியாது. நீங்க எங்கிட்ட சொன்னீங்களே மசில் மெமரி… அது போல இதுவும் மூளையின் உடனடி ரியாக்ஷன். உங்களுக்கே இப்ப நான் சொல்ற வரை தோணலை.”
யோசனையாக ஆமோதித்தவன், “சரி, இதுக்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்?”, என்றான்.
“அதே மாதிரிதான். இப்படி, இந்த ஒரு விஷயத்துக்கு என் மேல அபாண்டமா பழி வரவும், இன்ஸ்டென்ட் ரியாக்ஷன்.  என் காரக்டரை பழிச்சீங்க. நான் உங்ககிட்ட அதெல்லாம் சொல்லியிருக்கவே கூடாது. அங்கயே என் மூளை வேலை செய்யலை. அப்பறமும் செய்யலை. நான் உளறினது உங்களுக்கு எவ்ளோ சங்கடத்தைக் குடுக்கும்னு இன்னிக்கு யோசிக்கும்போதுதான் புரிஞ்சுது. சாரி.”
புரிந்தது போலவும் இருந்தது, புரியாமலும் இருந்தது. ஆனாலும் அதற்கு மேல் என்ன கேட்பது என்று தெரியவில்லை வினோத்திற்கு.
“நான் ஜெர்மனி போறேன்னு சொன்னதும், ஏன் நின்னு சண்டை போடாம ஓடி போறீங்கன்னு நீ கூடத்தான் என் மேல பழி சொன்ன?”
“உண்மைதானே… நீங்க போறதாத்தான சொன்னீங்க?”
“இந்த விஷயத்துல நான் தப்பு செய்யலைன்னு சொல்ல எனக்கு எந்த ப்ரூஃபும் இல்லை. அப்படியே என் மேல தப்பில்லைன்னு சொன்னாலும், நாலு பேர் நம்பினா, இரண்டு பேர் நெருப்பில்லாம புகையாது, அந்த பொண்ணை மிரட்டி வாபஸ் வாங்க வெச்சிட்டார்னு பேச்சு தொடர்ந்து வந்துகிட்டேதான் இருக்கும். இதெல்லாம் என்னை டிஸ்டர்ப் செய்யும். அதனாலதான் விலகிப் போக முடிவு செஞ்சேன். இந்த மாதிரி காரெக்டர் அசாசினேஷன் ஆச்சுன்னா, நின்னு ஃபைட் பண்ண முடியாது. எத்தனை பேருக்கு விளக்கம் சொல்ல முடியும்? இல்லை எத்தனை பார்வையை தட்டிட்டு போக முடியும்? எல்லாமே என்னுடைய வளர்ச்சியைத்தான் பாதிக்கும்.”
“நீ அந்த வீடியோவை அப்படி பிரிச்சு போட்டு டெமோ எடுத்துக் காட்டியிருந்தாலும் ஒன்னு ரெண்டு பேச்சு இருந்திருக்கும். கார்த்திகேயன் விஷயம் வரம்வும்தான் என் பேரு மொத்தமா கிளியர் ஆச்சு. அதுக்கு நன்றி கூட உனக்கு நான் சொல்லலை. அதுக்குள்ள ….”, என்று நிறுத்தினான்.
“அதான் முத்தம் குடுத்து உங்க நன்றியை சொல்லிட்டீங்களே.”, வானதி சொல்லவும், சட்டென்று அவளை முறைத்தான்.
“அது நன்றிக்காகவா?”
“இத்தனை நாள் இல்லாம நேத்துதான தோணுச்சு குடுக்க? அப்ப நான் அதை எப்படி எடுத்துக்க?”, பேசிவிடுவது என்ற முடிவில் இருந்தாள் வானதியும்.
“அப்ப நான் சொன்னது எதுவும் நீ காதுல வாங்கல? நான் ஜெர்மனி போனா, நீ வருவியா? என்ன சொல்லி உன்னை கன்வின்ஸ் பண்றதுன்னு நான் யோசிச்சு மண்டை காஞ்சிருந்தேன். நீ என்னடான்னா சாதாரணமா, நீயும் அம்மாவும் என்னை நம்பி இருக்கீங்கன்னு சொல்ற, என் கூட வந்திருப்பேன்னு சொல்ற…. அந்த ஸ்டேட்மென்ட்… அது கொடுத்த ஒரு ரிலீஃப்… அதுல வந்த சந்தோஷம்… அதோட தாக்கம்தான் என்னையும் மீறி குடுத்த முத்தம்.”
அது கேட்டு ஒரு திருப்தி வானதிக்கு. ஆக நன்றிக்காக செய்யவில்லை. தலை சாய்த்து, ஒரு சின்ன சிரிப்புடன், “அது என்ன… என்னை மீறி குடுத்தேன்னு சொல்றீங்க? ஏன்… என்ன ஒரு கன்ட்ரோல் ?”
அவளைப் பார்த்து விழித்தவன், “நீதான சொன்ன கல்யாணத்துக்கப்பறம் நாம் வெறும் ஹவுஸ் மேட்ஸ், ஃப்ரெண்ட்ஸ்னு? அதைப் பத்தியும் பேசணும் வானதி.”
“பேசலாம்.”
“ரூல் மாத்திக்கலாமா?”
“எது… ப்ரெண்ட்ஸ் வித் பெனெஃபிட்ஸ் மாதிரியா? நாசூக்காகக் கேட்டாள்.
“வானதி… கல்யாணத்தை நிஜமாக்கலாமான்னுதான் கேட்டேன். அப்படி என் தேவைக்கு வேணும்னா ஏதோ ஒரு பொண்ணு போறும். உன்னையே  நீ ஏன் இப்படி தாழ்த்திக்கற?”, கோவமும், வேதனையுமாகக் கேட்டான் வினோத்.
“இல்ல … தெளிவுபடுத்திக்கத்தான் கேட்டேன். நான் பாட்டுக்கு ஒன்னு நினைச்சு, நீங்க அப்படி நான் யோசிக்கலைன்னு சொல்லக் கூடாதில்ல?”
தலையில் கைவைத்து  உட்கார்ந்தவனைப் பார்த்தவள், “ இதை நிஜமாக்கலாமான்னு என் கிட்ட கேட்டதுக்கு முன்னாடி, உங்க கிட்ட கேட்டீங்களா? ஸ்வேதா விட்டு என்னை மனைவிங்கற ஸ்தானத்துல வெக்க உங்களால முடியுமா?”
அவளை நிமிர்ந்து பார்த்தான் வினோத். “ பொய் சொல்ல விரும்பல. நான் அதைப் பத்தி ரொம்ப ஒன்னும் யோசிக்கலை. உன்னை பிடிச்சிருக்கு. உன் கூட வாழத் தோணுது. உனக்கும் என்னை பிடிக்கற மாதிரிதான் எனக்கு தோணுது. எனக்குள்ளையே நிறைய போராடிட்டு இருந்தேன். ஸ்வேதாவைத் தவிர ஒரு பொண்ணும் என் வாழ்க்கையில இல்லைன்னு நினைச்சிகிட்டு இருந்தவனை சில மாசத்துலயே இப்படி பேச வெச்சிருக்க. அதனால, என்னப் பத்தியே எனக்கு நம்பிக்கை கம்மியா இருக்கு. அதான், ரொம்ப யோசிக்காம, ஒரு கட் ஃபீல்ல, உள் உணர்வு தப்பாகாதுன்னு நிம்பி உன்னை கேட்கறேன்.”
இவ்வளவு வெளிப்படையாக சொல்லுவான் என்று வானதி எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அந்த நேர்மை பிடித்திருந்தது.
“வினோத்… நான் ப்ரெண்டா தள்ளியிருக்கப்போ உங்களைப் பத்தி எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. ஆனா, இந்த கல்யாணத்தை நிஜமாக்கினா, எனக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும். அப்ப இந்தளவு உங்களுக்காக நான் விட்டுக் குடுப்பேன்னு நிச்சயமில்லை. உங்க ரூம் கப்போர்ட்ல கூட எனக்கு இடமில்லை. உங்க மனைவியானா இதெல்லாம் என்னால சகஜமா கடக்க முடியாது. நாளைக்கு நான் வந்து ஸ்வேதா நினைப்பை மறக்கடிச்சிட்டேன்னு உங்களுக்குள்ள ஒரு எண்ணம் வந்துடக் கூடாது. இன்னும் மனசளவுல ஸ்வேதாவை விடலை நீங்க. அவளோட உங்களுக்காக நான் போட்டி போட முடியாது. போடவும் மாட்டேன். அது எல்லாருக்கும் கசப்பைத்தான் குடுக்கும். நீங்க இதெல்லாமும் யோசிக்கணும். அவசரப்படாதீங்க. பொறுமையா போகலாம்.”, அவள் யோசித்ததையும் சொல்லிவிட்டாள். மனது லேசானதுபோல இருந்தது.
“அப்ப… நான் மட்டும்தான் யோசிக்கணுமா? நீ ஏற்கனவே ரெடியாத்தான் இருக்கியா?”, மோவாயில் கை வைத்துக் கேட்டவனின் குரலில் குறும்பு கொஞ்சம் எட்டிப்பார்த்ததோ?
அவனை லேசாக முறைத்தவள், “நான் ரெடின்னு எப்ப சொன்னேன்? நானும்தான் யோசிக்கணும்.”
“கரெக்ட்தான். இது வரைக்கும் நான் என்ன யோசிக்கணும்னு யோசிச்சிருக்க. இனி நீ என்ன யோசிக்கணும்னு யோசிப்பையா?”, சிரிப்புடன் கேட்டவன், “ ரொம்ப யோசிக்காத வானதி… எல்லா முடிவுமே அறிவு பூர்வமாத்தான் எடுக்கணுமா? “
கேட்டவளுக்கும் ஆசையாகத்தான் இருந்தது. ஆனாலும் எதுவோ தடுத்தது. மையமாக ஒரு புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தாள்.
என்னவோ யோசித்துக்கொண்டிருந்தவன், சட்டென்று, “ஒரே ஒரு முத்தம் குடுத்துட்டு உங்கிட்ட நான் படற பாடு…. அதுக்கே இத்தனை கேள்வி, இத்தனை விளக்கம். அடடடா. ஊர்ல எவனுக்கும் இப்படி இருந்திருக்காதுன்னு நினைக்கறேன்…”, என்று அடக்கமாட்டாமல் சிரித்தான்.அதைக் கேட்டவளுக்குமே சிரிப்புத்தான்.
“ஓரே ஸ்டேட்மென்ட்ல என்னை மொத்தமா காலி பண்ணிட்டே. இனி அடுத்த வாட்டி உங்கிட்ட வரதுக்கு நான் ரொம்ப யோசிக்கணும் போல.”, இலகுவாகக் கூறவும்,
“சாரி… ரொம்ப சாரி… அண்ட் தாங்க்ஸ், இதை நீங்க இழுத்துப் பிடிக்காம, புரிஞ்சிகிட்டதுக்கு.”, கொஞ்சம் நெளிந்தபடித்தான் மீண்டும் மன்னிப்பைக் கேட்டாள்.
 “ம்ம்… எம்பாரசிங்காத்தான் இருந்தது, இருக்கு. பட்.. நான் என்ன விடலை பையனா? ஸ்வேதா என்னை பத்தி உயர்வாத்தான் சொல்லியிருப்பா, சோ…”, தோளைக் குலுக்கியவன் கண்ணடிக்க, வெட்கப்பட்டது என்னவோ வானதிதான்.
கையெழுதிடாமலேயே, ஒரு புது ஒப்பந்தம் அங்கே அமூலுக்கு வந்தது. இருவருக்குமே அந்த சூழல் பிடித்திருந்தது. வினோத் ஸ்வேதாவை உடனே மறந்துவிடுகிறேன் என்று சொல்லவில்லை. சொல்லியிருந்தாலும் வானதி நம்பியிருக்க மாட்டாள். ஆனால் வானதியின் எதிர்பார்ப்புகளை கேட்டுக் கொண்டவன் மறுத்து எதுவும் சொல்லவில்லை. வானதி மெதுவாகப் போகலாம் அவசரமில்லை என்றதற்கும் பெரிதாக மறுக்கவில்ல.
‘கொஞ்ச நாட்கள் இந்த உணர்வைத்தான் ஃபீல் பண்ணி சந்தோஷப்படேன் வானதி. எப்பவும் இது ப்ளஸ், இது மைனஸ்னு கணக்கு போட்டுகிட்டே இருக்கணுமா?’, மனது கேட்டது. ‘ஹூம் …. பார்க்கலாம் அவருக்கு ஸ்வேதாவை விட்டு முதல்ல விலகி வர முடியுதான்னு. அப்பறமா ரூலை மாத்தறதான்னு யோசிப்போம்’, என்று அறிவும் அறிவுருத்த, இதை எதையும் காட்டாமல், அவன் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தாள்.
மறுனாள், டின்னர் போகலாம் ரெடியாக இரு, என்று காலையிலேயே சொல்லிவிட்டு சென்றான். ‘முதல் டேட் வினோத்தோட’, மனம் குதூகலிக்க, ‘இல்லை, ஏற்கனவே இரண்டு வாட்டி கல்யாணத்துக்கு முன்னாடியே சேர்ந்து சாப்பிட்டுருக்க, நீயே கற்பனையை தட்டி விடாத வனு.’, தனக்கு தானே எச்சரித்துக்கொண்டாள்.
ஆனாலும், அழகாக கிளம்பியிருந்தாள். அவள் நிறத்தை எடுத்துக் காட்டும் ஒரு கனகாம்பர நிறத்தில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட, உடலை கச்சிதமாக கவ்விப் பிடித்திருந்த ஒரு நீள் குர்தியும், இப்போதைய ஃபாஷனான லூசான மென் க்ரீம் கலரில் சல்வாரும் அணிந்து, தலையை ப்ரென்ச் பின்னல் போட்டிருந்தாள். காதில் பெரிய தொங்கட்டான் தோடுகளும், தாலியும் மட்டுமே அணிகலங்கள். ஒரு கை வெறுமையாக இருக்க, மற்றொன்றில் க்ரீம் பட்டையில் வாட்ச். மெலிதான நறுமணமும், போட்டது போன்றே தெரியாத மேக்கப் கண்களை இன்னும் எடுப்பாகக் காட்ட, மெல்லிய லிப் க்ளாசில் உதடுகள் பளபளத்தன.
‘இப்ப என்ன, வினோத்தை மயக்கப் பாக்கறியா?’, அவளையே கேட்டுக்கொண்டாள். ‘ ஏன், என்ன தப்பு? ‘ என்ற மனதிடம், ‘இப்படி நீ ஒரு மணி நேரம் செலவு செஞ்சு மெருகேத்தின உன் அழகைப் பார்த்துதான் மயங்கணும்னா, அப்படி ஒன்னு தேவையா? ‘, என்ற எண்ணத்தில் ஒரு நிமிடம் தடுமாறி நின்றாள். அவள் ரிசெப்ஷனுக்குப் பிறகு, மேக்கப் போட்டது,வினோத் கல்லூரிக்கு சென்ற போது, ஆனால் அது அவனுக்கு அழகான மனைவி இருக்கிறாள் வீட்டில் என்பதை பறைசாற்றவே. அதை தவிர்த்து, இப்போதுதான்.
‘எடுத்துவிடலாமா’, என்று நினைக்கும் போதே, கதவு தட்டப்பட்டது. மலர் என்று நினைத்து, ‘வாங்கக்கா…’, என்றாள்.
கதவைத் திறந்தவன், அவளைக் கண்டு ஒரு நிமிடம் கண்கள் விரித்து திகைத்து, ‘வாவ்… செம்மையா இருக்க….’, என்றான் முகமலர்ந்து.
குரலில் இருந்த பாராட்டை உள் வாங்கிய மனது ஆர்பரிக்க, “தாங்க்ஸ்”, என்றாள். ஆனால் அவன் பாராட்டில் வானதியின் முகத்தில் இன்னும் ஒளி கூடியதை கவனிக்க வேண்டியவன் கவனமாக குறித்துக்கொண்டான்.
“பத்து நிமிஷம். கிளம்பிடுறேன். அக்காவை சீக்கிரமே அனுப்பிடு.”, எனவும் சரி என்று தலையாட்டினாள். கதவை சாத்தப்போனவன், “ வானதி, என்னோட ஒரு டின்னருக்கு இவ்ளோ முக்கியத்துவம் குடுத்து கிளம்பியிருக்க, வெரி ஹாப்பி. தாங்க்ஸ்.”, வசீகரப் புன்னகை ஒன்றை உதிர்த்தபடியே சொல்லிச் சென்றான்.
‘ஓஹ்… ‘, என்று மட்டுமே நினைக்கமுடிந்தது வானதியால். ‘பாரு, சும்மா எதை எதையோ நினைச்ச. நீ மெனக்கெட்டு கிளம்பினது, அவருக்கு தர முக்கியத்துவம்னு யோசிச்சியா? சும்மா எனக்குதான் தெரியும்னு எப்பப் பாரு அழுது வடியறது,’ என்று நிந்தித்த மனதை சமாதானம் செய்து, கீழே இறங்கி வந்தாள்.
அவளைப் பார்த்ததும் மலர் மகிழ்ச்சியாக திருஷ்டி கழித்தார். “இருக்கட்டும்மா, தம்பியும் வரட்டும். இரண்டு பேரையும் சேர்ந்து பார்த்துட்டு போறேன். நல்லா ஜாலியா போயிட்டு வாங்க.”, என்று உட்கார்ந்துவிட்டார்.
ஹ்ம்ம்… அங்கே மதன் வராமல் இருந்திருந்தால் ஒரு வேளை ஜாலியாக இருந்திருப்பார்களோ என்னவோ? யாருக்குத் தெரியும் !

Advertisement