Advertisement

அத்தியாயம் – 14
கதவு தட்டப்பட்டது. அதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். மெல்ல திறந்தது. உள்ளே எட்டிப் பார்த்தவன் கண்டது, படுக்கையில் சாய்திருந்த வானதியின் ஓய்ந்து போன தோற்றம். முகம் அழுததில் வீங்கியிருந்தது. சற்றே வெளுத்திருந்தது.
கையில் பால் டம்ளருடன் வந்தவன், “டின்னர் சாப்பிட வரலை. இந்தா, பாலையாவது குடிச்சிட்டு படு வானதி. “, அவளிடம் நீட்டினான். வானதி வாங்கிக்கொள்ளவில்லை.
“என் மேல ஒரு பழியைப் போட்டு கண்டபடிக்கு பேசிட்டு போனீங்க. என் பக்கத்தை பேசவே விடலை. அது என் மனசை அறுக்குது. நான் எப்படி சாப்பிட முடியும்?”, அவள் குரலே மாறியிருந்தது. பார்வை அவனை சந்திக்க வில்லை, விட்டத்தையேதான் பார்த்திருந்தது.
என்னவோ அவளை அப்படிப் பார்த்தவன் மனது பிசைந்தது. ‘இன்று மதியம் எல்லோரையும் இவளா தன் பேச்சால் கட்டிப் போட்டு வித்தை காண்பித்தாள்? ‘, என்று தோன்றியது.
அவள் கையைப் பிடித்துப் பாலைத் தந்தவன், “தப்பு என் பேர்லதான். அப்ப நீயும் சின்ன பொண்ணுதான். ஸ்வேதாவும் நீயும் சின்ன வயசுலர்ந்து ஒண்ணா இருந்திருக்கீங்க. மே பி இது சாதாரணமா பேசிக்கறதுதான் போல. நாந்தான் கொஞ்சம் அதிகப்படியா ரியாக்ட் பண்ணிட்டேன். சாரி. நீ பாலைக் குடி. டையர்டா இருக்க…”
அவன் பேசினதை அவள் காதில் வாங்கினது போலவே தெரியவில்லை. “நான் அவளை ஒரு தடவை கூட இது பத்திக் கேட்டதில்லை. அதுதான் சத்தியம். முதல் முறை நீங்க உங்க நிச்சயதார்தத்துல அவளுக்கு முத்தம் குடுத்தீங்க. எதிர்பார்க்காத சர்ப்ரைஸ். அவ நேரா எங்கிட்டதான் ஓடி வந்தா. என்னை கட்டிப் பிடிச்சு, ஒரு சுத்து சுத்தி… தரையில கால் பதியலை அவளுக்கு. அடுத்த இரண்டு நாள் இதைத்தான் பேசிகிட்டு இருந்தா. இப்படி இருந்துச்சு, அப்படி ஃபீல் ஆச்சுன்னு. அவளோட சந்தோஷத்தை வேற யார்கிட்ட போய் அவ சொல்ல முடியும்? அப்ப எனக்கு தப்பா தெரியலை.”
“வானதி… நான் சொன்னேனே…”, இடை மறித்தவனைக் கண்டு கொள்ளவேயில்லை.
“உங்க கல்யாணம் முடிஞ்சு மறு வீடுன்னு அவ வீட்டுக்கு வந்தப்போ என்னைப் பிடிச்சிக்கிட்டா. அப்பத்தான் அவ ஃபர்ஸ்ட் நைட் பத்தி சொன்னா. அப்பவும் ஸ்வேதா… இதையெல்லாம் சொல்லக் கூடாதுன்னு சொன்னேன். உனக்கு யூஸ் ஆகும்டின்னு சொல்லி அவ பாட்டு பேசினா. முடிஞ்சவரை சீக்கிரமா பேச்சை மாத்திட்டேஎன். திரும்ப ஹனி மூன் முடிஞ்சு வந்தப்பறம் என்னை பார்க்க வந்தா. அம்மாவும் இருந்தாங்க. ஜெய்பூர்லர்ந்து எனக்கு வாங்கிட்டு வந்த மெட்டல் ஜிமிக்கி , வளையல்னு எல்லாத்தையும் குடுத்தா. அவ போய் வந்த இடம் பத்தி பேசினா போட்டோ காட்டினா. லன்ச் எங்க வீட்லதான் சாப்பிட்டா. எங்க ரூம்ல வெட்டியா பேசிகிட்டு இருந்தப்போ, எல்லாத்தையுவிட, வினோத் கூட ஆடின மங்காத்தா ரொம்ப பிடிச்சுது வன்ஸ்னு சொன்னா. சத்தியமா நான் அது சீட்டு விளையாட்டுன்னுதான் நினைச்சேன், அவ ரூல்ஸ் சொல்ற வரை.  எனக்கு ரொம்ப கோவம் வந்துச்சு. நல்லா பிடிச்சு திட்டிவிட்டேன்.
அவளோட அப்பப்ப முட்டிக்கும், ஆனா அன்னிக்கு என்னையும் மீறி பேசிட்டேன். கண்ல தண்ணி வந்துடுச்சு அவளுக்கு. உடனேயே சமாதானம் ஆகிட்டோம். ஆனா அவ மூடை ஸ்பாயில் பண்ணிட்டேன்னு அவளுக்கு கோவம் இருந்துச்சு போல. கிளம்பிப்போகும் போது, மழை வரும் போலங்கறத சொல்ற மாதிரி உங்க மச்சத்தை சொன்னா. அதுக்கு அவ பேரு வெச்சதை சொன்னப்போகூட மறுபடியுமான்னுதான் தோணுச்சு. வாசலகிட்ட போனவ, ‘வன்ஸ் அந்த மச்சம் எங்க இருக்கு தெரியுமான்னு சொல்லி, காதுகிட்ட சொல்லிட்டு கலகலன்னு சிரிச்சிகிட்டே போயிட்டா. முழிச்சிகிட்டு நின்னது நாந்தான். அவ குணம் தெரிஞ்சு நான் திட்டியிருக்கக் கூடாது. அவ பாணியில என்னை பழி வாங்கிட்டா.”, பேசுவதை நிறுத்தி சற்று மூச்சு வாங்கினாள்.
கேட்டவனுக்குத்தான் பரிதாபமாகிப்போனது. ஸ்வேதாவின் அந்த குணத்தை அவனும் அறிவான். திருமணத்திற்கு முன், அவனையும் இப்படி ஏடாகூடமாக எதையாவது சொல்லி மண்டை காயவிட்டவள்தான்.
வானதியின் கை பிடித்து, பால் டம்ளரை வாயருகில் கொண்டு சென்று குடிக்குமாறு தலையாட்டியவன், “ என்னை மன்னிச்சிடு வானதி. நான் உன்னை பேசினது தப்பு. “
“ஹம்ம்… ரொம்ப தப்புதான். ஆனா பேசினது மறக்குமா? ராத்திரியில ஞாபகம் வந்து அறுக்குமே…”, குரல் கம்மிப்போயிருந்தது வானதிக்கு.
“சாரி …. சாரிம்மா… உன்னை காயப்படுத்தணும்னு சொல்லலை. ஒரு கோவத்துல வந்துச்சு… அது…எனக்கு சொல்லத் தெரியலை…. நீ அப்படியான்னு ஒரு ஏமாற்றம்..அது வெறுப்பா….”, அவன் அவசர புத்தியை எதால் அடிப்பது என்று வினோத்திற்கு தெரியவில்லை. அவன் பேச்சிற்கு வானதி இவ்வளவு வருத்தப்படுவாள் என்பதும் அவன் எதிர்பாராதது. ஆனால் அவள் தரப்புக் கதையைக் கேட்டபின் அவன் பேசியது முற்றிலும் அபாண்டம்தான். அவன் யோசிக்கையிலேயே வானதி தொடர்ந்தாள்.
“ம்ம்ம்… எனக்கும் என் மேலயே வெறுப்பாகிருச்சு. அப்பத்தான் சிங்கப்பூர் ஆஃபரை எடுத்துகறதா முடிவு செஞ்சேன். அவகிட்ட சொல்லாம நான் எடுத்த முதல் முடிவு. விசா எல்லாம் வந்தப்பறம் சொல்ற வேளைக்கு அவ மாசமாகியிருந்தா. அந்த சந்தோஷத்துல, என்கிட்ட ரொம்ப சண்டை போடாம சரின்னுட்டா. சீமந்தத்துக்கு வரேன்னு ப்ராமிஸ் செஞ்சதும், சந்தோஷமாகிட்டா.”,
“வானதி…. வானதி… என்னைப் பாரு… ப்ளீஸ்….”, அவளைத் தொட்டு லேசாய முகத்தைத் திருப்பவும், இமை சிமிட்டி அவனைப் பார்த்தாள்.
“பால்… பாலைக் குடி முதல்ல… என்னவோ மாதிரி இருக்க. இப்ப எதையும் நினைக்காத… உன் மேல எந்த தப்பும் இல்லை. நாந்தான் அவசரப்பட்டுட்டேன்.அது என்னையும் மீறி நடந்தது. சாரி… இனியும் அப்படி உன் சம்மதமில்லாம நடக்காது.”
அவன் என்ன பேசுகிறான் என்பது புரியாமல் அவனைப் பார்த்து முழிக்கவும், “ நான் என்னை மீறின உணர்வுலதான் உன்னை கிஸ் பண்ணேன். ஆனா, நீ அதுக்கு ரெடியில்லைன்னு புரியுது. “, மீண்டும் அவன் அவள் கையை உந்தி குடிக்க சைகை செய்ய,
பாலை ஒரே மூச்சில் குடித்தவள், “எப்படி தெரியும்?”, என்று கேட்டாள். சற்று தெளிவாகியிருந்தது அவள் முகம்.
“ம்ம்.. அப்ப என் மூளைக்குள்ள ஒரு யோசனையும் ஓடலை, முழுசா நீதான் நிறைஞ்சிருந்த…ஆனா உனக்கு அப்படியில்லை போல… நான் உன் கையைப் பிடிச்சதும், உன் எண்ணம் ஸ்வேதாகிட்ட , அவ பேசினதுன்னு எங்கெங்கையோ ஓடிருக்கு. அப்ப எனக்கிருந்த அந்த ஈர்ப்பு இன்னும் உனக்கு வரலை போல? வரட்டும்… காத்திருக்கேன்…”, மெல்லிய ஒரு புன்னகையுடன் எழுந்துகொண்டான்.
அவன் பேசியதைக் கேட்டு திருதிருவென்று முழித்தாள் வானதி. கதவருகில் சென்றவன், திரும்பி,
“நான் ஸ்வேதாவை நினைச்சு எதுவும் செய்யலை வானதி. எதையுமே நினைக்கற நிலையில அப்ப நான் இல்லை. அவளுக்கு கைல நகம் ஜாஸ்தி. ப்ராண்டி வெச்சிருவா. அது காலேஜ் போகும்போது தெரிஞ்சா சங்கடம். அதான் கையைப் பிடிச்சிடுவேன். “, வானதி அவள் நகங்கள் வெட்டப்பட்ட அவள் விரல்களைப் பார்க்க, அதில் புன்னகைத்தான்.
“உன் கையைப் பிடிச்சது மசில் மெமரி…  பழக்க தோஷத்துல கை தானா செஞ்சது. மாத்திக்கறேன்…. அடுத்த வாட்டி இப்படி நடக்காது. ப்ராமிஸ்.“, அவன் நெஞ்சில் கைவைத்து கட்டியம் கூறி, “குட் நைட் வானதி… ஸ்வீட் ட்ரீம்ஸ்”, என்று கதவை சாத்திக்கொண்டு வெளியேறினான்.
அவன் குரலின் வசீகரத்தில் வாடிய மனம் உயிர்த்தெழுந்து லாலாலா பாடிக்கொண்டிருந்தது. “அடுத்த வாட்டி நடக்காதாமே… மசில் மெமரியாமே…”, ஒவ்வொன்றாய் அசை போட வேண்டியிருந்தது வானதிக்கு. எழுந்து விளக்கை அமர்த்திவிட்டு தலையணையைக் கட்டிப்பிடித்து யோசிக்க ஆரம்பித்தவள், ஒரு புன்னகையோடே தூங்கிப்போனாள்.
காலையில் லேட்டாகத்தான் எழுந்தாள் வானதி. மெதுவாக குளித்து முடித்து கீழே வரவும் மணி பத்தாகியிருந்தது. மலர் அமர்ந்திருந்தவர் “என்னம்மா… இப்ப தலைவலி பரவாயில்லையா? மேல போகாதீங்கக்கா… விடியல்லதான் தூங்கினான்னு தம்பி சொல்லிட்டுத்தான் காலேஜுக்கு போச்சு…. முகமே கொஞ்சம் ஊதுனாப்புல இருக்கே?”, அருகே வந்து அவள் முகத்தை இப்படியும் அப்படியுமாகப் பார்த்தார்.
அவளுக்குமே அடித்துப் போட்டது போலத்தான் இருந்தது. நேற்று முழுதுமே ஏதோ ஒரு வகையில் டென்ஷன் இருந்துகொண்டேதான் இருந்தது.
“இப்ப பரவாயில்லைக்கா. காபி கொஞ்சம் சூடா தாங்க. அப்பறமா சாப்பாடே சாப்பிட்டுக்கறேன். சீக்கிரம் சமையலை முடிச்சிடுங்க.”, என்றாள்.
வானதிக்குமே யோசிக்க வேண்டியிருந்தது. ஆசை அபிலாஷைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, கொஞ்சம் அறிவு பூர்வமாக யோசிக்க முடிவெடுத்திருந்தாள். காபி வரவும், பின்பக்கம் அவள் தோட்டம் தெரியும்படி போட்டிருந்த ஒற்றை ஊஞ்சலில் சென்று அமர்ந்தாள்.
வினோத்திடம் அவன் மச்சம் வரை தனக்குத் தெரியும் என்று பேசியது எவ்வளவு பெரிய மடத்தனம் என்று புரிந்தது. கோவமாக கத்தி தீர்த்துவிட்டுப் போனவன், தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்காத போதும், எதுவுமே சொல்லாமல், தன்னிடம் சாரி கேட்டதும், அக்கறையாகப் பார்த்துக்கொண்டதும் அவளை நெகிழ்த்தியது.
நேற்று பேசியதில், வினோத்திற்கு தன் மேல் ஈர்ப்பு இருப்பதாக அவனே உறுதி செய்திருக்கிறான். இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்லவும் ரெடியாக இருக்கிறான். ஆக மனதளவில் ஸ்வேதாவிடமிருந்து சற்று தள்ளி வருகிறானோ?
ஆனால் அவன் சொன்ன வார்த்தை ‘ஈர்ப்பு’. ஒரு வேளை அது உடலளவில் மட்டுமேயா என்பது தெரியவில்லை. கண்டிப்பாக  இந்த சில வாரங்களாக அவன் பார்வையை கண்டுகொண்டிருக்கிறாள்தான். அவன் மறைத்தாலும், சில நேரங்களில் வெளிப்படத்தான் செய்கிறது. அவளும் அதே நிலையில்தான் இருக்கிறாள். இது வேண்டாமென்று தடுத்தாலும், அவன் பார்க்கையில் எல்லா எண்ணமும் தவிடு பொடியாகிவிடுகிறது.
ஆனால், மனம் ஸ்வேதாவிடம், உடல் என்னிடம் என்னும் ஒரு நிலையில் வினோத் இருந்தால், தன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? சில வருடங்களில் ஈர்ப்பு காணாமல் போய் மீண்டும் நண்பர்கள் என்ற நிலைக்குத் திரும்பினால், எந்த கசப்பும் இல்லாமல் தன்னால் இருக்கமுடியுமா? கடினமான கேள்விகள்தான். ஆனால் கேட்கப்படவேண்டிய கேள்விகள்.
‘இப்படியெல்லாம் யோசிச்சா, யாருமே கல்யாணம் செய்ய முடியாது. இங்க  நடக்கற அனேகக் கல்யாணம் உடல் ஈர்ப்புன்னுதான் ஆரம்பிக்குது. அப்பறம் குழந்தைகள், அவங்க வளர்ப்புன்னும், கூடவே தன்னோடவன்னு ஒரு உரிமை இருக்கறதால ஒரு ஆசாபாசமும்தான் பிடிச்சு வைக்குது. ‘, மனது நிதர்சனத்தை எடுத்துரைத்தது.
‘ஆனா… அவரோட அன்புக்கு போய் சேர்ந்துட்டவளோட போட்டி போட முடியுமா? அத்தனை கோவத்துலயும் உன்னை திட்டினார். அப்பறம் அவரையே திட்டிகிட்டார். ஸ்வேதா மேல தப்பே சொல்லலை பார்த்தியா? இது இப்படியே தொடர்ந்தா, உன்னால துடைச்சு போட்டுட்டு ஒரு வாழ்க்கைய வாழ்ந்துட முடியுமா? கோவம் வந்தா என்ன பேசறோம்னே தெரியாத அளவுக்கு பேசற மனுஷன். அப்பறம் ஆயிரம் வாட்டி சாரி சொல்லி பேசினா எத்தனை முறை மன்னிப்ப? நேத்து திட்டிட்டு போன அந்த ரெண்டு மணி நேரம் பட்டதெல்லாம் மறந்துடுச்சா? அவரே மறுபடியும் வரலன்னா, நேத்து பூரா அதுதான் உன் நிலைமையா இருந்திருக்கும். மெண்ட்டலாக வழி செய்யாதே!’, அறிவு எச்சரித்தது.
போன தலைவலி திரும்ப வந்துவிடும்போல இருந்தது வானதிக்கு. ‘ நீயே யோசிச்சு யோசிச்சு குழம்பறதுல அர்த்தம் இல்லை. வினோத் இது பத்தி பேசினா, அவரோட டிஸ்கஸ் பண்ணு. இப்பதிக்கு ஒதுக்கி வை.’, என்று ஒருவழியாக முடிவு செய்தவள், தோட்டத்துக் காய்களை பார்க்க எழுந்து சென்றாள்.
மதியம் போல வினோத் பேசினான்.
“இப்போ பரவாயில்லையா வானதி? காலையில நான் பார்க்கும்போது அடிச்சிபோட்ட மாதிரி தூங்கிட்டு இருந்த…”
“ம்ம்… இப்ப சரியாகிருச்சு. கொஞ்சம் கோர்ஸ் வொர்க் பார்க்க வேண்டியிருந்துச்சு. அதைத்தான் இப்ப எடுத்தேன்.”
இப்படி பொதுவான பேச்சுக்கள் ஓடியது.  மாலை அவன் வந்த பின்பும், நேற்று நடந்தவை பற்றிப் பேசுவான் என எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே. அவளாக பேசவும் வாய் வரவில்லை.

Advertisement