Advertisement

அத்தியாயம் – 13
“காபியை மேலே கொண்டு வா வானதி ப்ளீஸ். பேசணும். “, வினோத்தின் கோரிக்கைக்கு சம்மதமாக தலையசைத்து அவனை அனுப்பி வைத்தவள்,
‘கூல் வானதி… அவரை கோவிக்க உனக்கு எந்த ரைட்சும் கிடையாது.’ என்று நூறாவது முறையாக சொல்லிக்கொண்டாள்.
அவனுக்கான காபி, சிற்றுண்டியை ட்ரெயில் அடுக்கி எடுத்துக்கொண்டு, அவன் அறை வாசலை தட்டவும்,
“வா வானதி…”, என்ற குரல் கேட்டது.
அவன் மேசையில் ட்ரெயை வைத்துவிட்டு, அவள் இடமான சோஃபாவில் அமர்ந்துகொண்டாள். திருமணம் முடிந்த இத்தனை மாதங்களில் ஒரு சில முறைதான் அவன் இருக்கும்போது வந்திருக்கிறாள், அப்போதும் கூட அவள் படுக்கையில் அமர்ந்ததில்லை.
முகத்தை துடைத்துக்கொண்டே குளியலறையிலிருந்து வந்தவன், காபியை எடுத்துக்கொண்டு, அவள் எதிரே படுக்கையில் அமர்ந்தான்.
“இன்னேரம் அங்க நடந்ததெல்லாம் உனக்குத் தெரிஞ்சிருக்கணுமே?”, வினோத் பேச்சை ஆரம்பிக்க,
“இல்லைன்னா, நீங்க சொல்லப் போறீங்களா?”, இடக்காகக் கேட்டாள் வானதி.
“உனக்கு எப்படி இத்தனை விஷயம் தெரிஞ்சது? எப்படி டெமோ வீடியோ எடுக்க முடிஞ்சது? எவ்வளவு யோசிச்சும் என்னால கெஸ் பண்ண முடியலை. “, அவள் ஏதேனும் கூறுவாள் என்று எதிர்பார்த்து நிறுத்தினான்.
பதிலே பேசாமல் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“எதுவும் சொல்ல மாட்டியா?”
“நீங்க எதுவும் கேள்வி கேட்கலையே என்னை? நீங்களா உங்களுக்கே கேட்டுக்கறீங்கன்னு நினைச்சேன். “, இப்போது அவள் நக்கலடிக்கிறாள் என்பது வினோத்தின் அறிவிற்கு எட்டியது.
‘டேய் கோவமா இருக்கா போல? மூக்கு லேசா சிவக்குது பாரு’, என்று நினைத்தவன்,
“என்ன வானதி… சரி உன்னைத்தான் கேட்கறேன். எப்படி உனக்கு விஷயம் தெரிஞ்சது? அந்த விடியோவை இப்படி அக்கக்கா உடைச்சு போட எப்படி ஐடியா வந்துச்சு? “
அவனையே பார்த்தவள், “காத்து வாக்குல விஷயம் வந்தது. ஒரு விடியோவை ஃப்ரேம் ஃப்ரேமா பிரிச்சிப் பாக்கற எடிட்டிங் சாஃப்ட்வேர் எங்கிட்ட இருக்கு. கூடவே காமெரா ஆங்கிள், பொசிஷன் பத்தின அறிவும், பொது அறிவும் கொஞ்சம் இருக்கு. நான் கேட்டதை செஞ்சு தர சில நல்ல உள்ளங்களும் இருந்தாங்க. அவ்வளவுதான். மிக்சர் சாப்பிடுங்க.”, எழுந்து தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
அவள் சென்றதும் தட்டைப் பார்த்தவனுக்கு அதில் கொழுகட்டைதான் இருந்தது தெரிய வந்தது. ‘அப்ப மிக்சர் சாபிடுங்கன்னு என்னை கலாய்ச்சிட்டு போறாளா? என்ன கோவம்?’, யோசித்தவனுக்கு, ‘அவளிடம் சொல்லதுதான் கோவமா என்று சந்தேகம் வந்தது.
அவள் அறைக்குச் சென்று வாசலில் நின்றான். கதவு திறந்திருந்தது. வானதி ஜன்னலருகே நின்றிருந்தாள்.
“வானதி…. நான் உங்கிட்ட சொல்லலைன்னுதான் கோவமா?”, சந்தேகத்தை தெளிவுபடுத்தக் கேட்டான். ஸ்வேதா அவனை கோவிக்கும்போதும் இப்படித்தான் அவன் கோவத்துக்கான காரணத்தை தெளிவுபடுத்திக்கொள்வான் முதலில். அவன் கேட்டாலே போறும் என்று ஸ்வேதா லிஸ்ட் போட்டு அவள் மனத்தாங்கலை கூறிவிடுவாள். அதே அனுபவத்தில் வானதியிடமும் கேட்டான்.
அவனைத் திரும்பிப் பார்த்தவள், “உங்க மேல கோவப்பட எனக்கு எந்த ரைட்சும் இல்லை வினோத். இங்க நான் ஒரு ஹௌஸ் மேட் அவ்வளவுதான்.”, தோள் குலுக்கித் தெனாவட்டாக திரும்பிக்கொண்டவளைப் பார்த்து காண்டாகியது வினோத்திற்கு.
“அப்படியா? ஹௌஸ் மேட்டுன்னு நினைச்சுத்தான் அங்க எல்லார் முன்னாடியும், நான் என் புருஷனுக்காக பேச வந்திருக்கேன்னு சொன்னியா?”
அவன் கோபத்தை அசட்டை செய்தவள், “ உலகத்துக்கு அப்படிதான சொல்ல முடியும்? அங்க வந்து நான் ஹௌஸ் மேட்டுன்னா சொல்லமுடியும்? இல்லை இந்த விஷயத்தைப் பத்தி நீங்க மூச்சு கூட விடலை எங்கிட்டன்னு சொல்ல முடியுமா?”, அலட்சியமாகக் கேட்டாள்.
“என் மேல அக்கறை இல்லைன்னா ஏன் வந்து என்னை காப்பாத்திவிட்ட?”, அவள் அலட்சியம் அவனை மேலும் வெறியேற்றியது.
“உங்க பேர் கெட்டா, அத்தைக்கு எவ்வளவு கஷ்டமாகும்? அவங்க முகத்துக்காகத்தான் வந்தேன். அப்படியும், உங்களை நீங்களே காப்பாத்திக்குவீங்களோன்னு பக்கத்து ரூம்ல ரெக்கார்ட் ஆகிட்டு இருந்த ஆடியோ, வீடியோவைப் பார்த்துகிட்டுதான் இருந்தேன். உங்களை காப்பாத்திக்க உங்ககிட்ட எந்த ப்ளானும் இல்லைன்னு தெரிஞ்சதும்தான் உள்ளே வந்தேன்.”, நுனி மூக்கு சிவக்க, சீறினாள் வானதி.
அவள் மூக்கின் சிவப்பு அதிகரிப்பதில் அவள் கோவம் தெரிந்து, கண்ணை ஒரு நிமிடம் மூடித் திறந்தவன், “எனக்கு சத்தியமா புரியலை. இப்ப கோவம் நான் உனக்கு எதுவும் சொல்லலைன்னா, இல்லை என்னைக் காப்பாதிக்க எந்த முயற்சியும் எடுக்கலைன்னா?”
“கோவமே இல்லை. நீங்க ஏன் வந்து காப்பாத்தினன்னு கேட்டீங்க. அத்தைக்காக வந்தேன், அதுவும் உங்களால முடியலைன்ற பட்சத்துல வந்தேன். பதில் சொல்லிட்டேனா? போறுமா?”
தலை முடியை இரு கைகளாலும் அழுத்திக் கோதியவன், அவள் மேசைக்கருகில் இருந்த நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்து,
“ப்ளீஸ்… நீயும் உக்காரு. உணர்ச்சிவசப்படாம கொஞ்சம்  சாதாரணமா பேசலாம். நான் உங்கிட்ட சொல்லாம இருந்ததுக்கு காரணம், முதல்ல அதிர்ச்சி, எப்படி இந்த மாதிரி மாட்டுவடான்னு என் மேலயே இருந்த கோவம், அப்பறம் இந்த அசிங்கத்தை எப்படி சொல்றதுன்னு தயக்கம்… அதெல்லாம் தாண்டி…” , ஒரு நொடி தயங்கியவன், “நீ என்னை தப்பா நினைச்சிடுவியோன்னு ஒரு பயம்… “, தவிப்புடன் அவளைப் பார்த்தான், அவள் பார்வையின் வீச்சை தாங்க முடியாது பார்வையைத் தழைத்தான்.
“அவ்வளவுதான் இத்தனை மாசத்துல என்னை தெரிஞ்சு வெச்சிருக்கீங்களா?”
“இல்லை… நீ என்னை நம்புவன்னு மனசு சொல்லுச்சு…. ஆனாலும் ….. “, இழுத்தவன் அதற்கு மேல் சொல்ல முடியாமல் நிறுத்த,
“ஸ்வேதாக்கு இது தெரிஞ்சிருந்தா முதல்ல உங்க மேல சந்தேகப்பட்டு அழுது ஆர்பாட்டம் செஞ்சிருப்பா… நானும் அப்படி சந்தேகப்படுவேனோன்னு பயம்…அதான?”, சலனமற்று வரண்டு வந்தது அவள் குரல்.
“நீ அவளை மாதிரி இல்லைன்னு என் புத்திக்கு தெரியுது, ஆனா மனசு… நீ சந்தேகப்படுவியோன்னு நினைக்கும் போதே… இல்லை … வேணாம்… தெரியவே வேணாம்னு தோணுச்சு.”, தரையைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தவன்,
“ஆனா… நீ எப்பவும் அறிவைக் கொண்டுதான் யோசிக்கற, நடந்துக்கற இல்ல? அறிவு சொல்றதுதான் மனசு கேட்குது உனக்கு. இன்னிக்கு கூட பார்த்தேன். எமோஷனே காட்டாம இருந்த, கீதா போட்டோ பார்த்து அவங்க அப்பா அம்மா அதிர்ச்சியாகி உடைஞ்ச போது கூட உன் முகத்துல சலனமே இல்லை. கரெஸ்க்கே ஆர்டர் போடற…”, அவளைப் புரியவில்லை என்பதாகப் பார்த்தான்.
“எனக்கும் மனசு இருக்கு. அதுவும் சில நேரம் அறிவுக்கு எதிரா நடக்க முயற்சி செய்யும். எல்லார மாதிரியும் எனக்குள்ளவும் இந்த போராட்டம் இருக்கும். ஆனா இன்னிக்கு அறிவு மனசு எல்லாம் நேர்கோடுல இருந்துச்சு.
ஒரு நிமிஷம் நான் இளகியிருந்தாக்கூட கீதாவும் அவளுக்கு கேடயமா இருந்த அவங்க அப்பா அம்மாவும் உங்களை பலியாக்கியிருப்பாங்க. கார்த்திகேயனைப் பத்தி அவளை சொல்ல வைக்கணும்னா, அவளை நான் தனிமை படுத்தணும். அவங்க அப்பா, அம்மாவே அவளை சந்தேகமா பார்க்கணும். அவ டீனேஜ் பொண்ணு இல்லை. இருவத்தி மூணு வயசாகுது. அந்த மனுஷன் என்ன சொல்லியிருந்தாலும், இப்படி உங்க மேல பழி போடறதுக்கு பதிலா, அவ அப்பாகிட்ட அந்த மிரட்டலை சொல்லியிருக்கலாம், ப்ரின்சி, கரஸ், ஏன் உங்ககிட்ட வந்து கூட சொல்லியிருக்கலாம். படிச்சுதான் ஆகணும்னு ஒரு நிர்பந்தமும் இல்லை அவ வீட்ல. அப்ப உங்க மேல இருக்க வெறுப்புல, பழி வாங்க ஒரு வாய்ப்பாத்தான் அவ கார்த்திகேயன் சொன்னதுக்கு சம்மதிச்சிருக்கணும். அப்ப அவளுக்கு நான் எந்த கரிசனமும் காட்டத் தேவையில்லை.“, தன் செயலில், எடுத்த முடிவில் முழு நம்பிக்கை இருந்தது வானதியின் பதிலில்.
“நீ போன அரை மணி நேரத்துலையே எல்லாம் முடிஞ்சிருச்சு. பத்து நிமிஷத்துல கீதா கார்த்திகேயனை மாட்டி விட்டுட்டா.  வாட்ஸப் எவிடென்ஸ் இருந்தது. காலேஜ் பூரா விஷயம் லீக் ஆனது அவராலன்னு தெரிஞ்சதும் திட்ட ஆரம்பிச்சிட்டா. அந்த மனுஷனால எதுவும் சொல்ல முடியலை. கையோட டிஸ்மிஸ் பண்ணிட்டார் கரெஸ். கீதா அப்பாவும், டி.சி. வாங்கிக்கறதா எழுதிக் கொடுத்துட்டார். காலேஜ் ஆடிடோரியத்துல பசங்க நடுவுல சுருக்கமா சொல்லிட்டு, கீதாவை மன்னிப்பு கேட்க சொன்னாங்க. அவ அப்பாவும் என் கையை பிடிச்சிகிட்டு மன்னிப்பு கேட்டார். எனக்குத்தான் இருப்பு கொள்ளலை. ரொம்ப சங்கடமா இருந்துச்சு.”, வினோத் விவரித்தான்.
பொறுமையாக அவன் சொல்லி முடிக்கும் வரை காத்திருந்தவள், போனிலிருந்து ஒரு வீடியோவை ஒலிக்க விட, கரெஸ் மாணவர்களிடம் மாலை பேசியது ஒலித்தது.
“ஓஹ்… லைவ் ரிலே வந்துச்சா? அப்பறம் எதுக்கு என்கிட்ட கதை கேட்ட?”, மீண்டும் சுறுசுறுவென்று ஏறியது வினோத்திற்கு.
“நான் என்ன நடந்துச்சுன்னு கேட்டனா? நேத்து சொல்லியிருந்தா அது வேற விஷயம். “, உன்னை மன்னிப்பதாக இல்லை என்பது போல பேசினாள் வானதி.
“ஷ்… யாரு… யாரு உனக்கு சொன்னது. எப்படி இதெல்லாம் செய்ய முடிஞ்சுது? அதையாவது சொல்லு.”
“உங்க மேல பாசமா இருக்க பசங்கதான், என் நம்பர் கண்டுபிடிச்சு, மேம் சார் மேல பழி போட்டிருக்கா ஒரு பொண்ணு, ஆனா சாரை தப்பா நினைக்காதீங்க. அவரு ரொம்ம்பப நல்லவரூன்னு சொன்னாங்க.”, என்று அழுத்திச் சொன்னாள்.
“வானதி…. வெறுப்பேத்தாம சொல்லு.”… இவ்வளவுதான் என் பொறுமை என்பது தெளிவாகத் தெரிந்தது அவன் குரலில்.

Advertisement