Advertisement

“அதேதான்…அதேதான் எனக்கும் தோணுச்சு. இந்த பொண்ணு ஏன் இப்படி நடந்துக்கணும்? வினோத் கைடா இருக்க மாட்டேன்னா, அடுத்து கார்த்திகேயன் சார் கைடா வந்துட்டார். மிஞ்சிப் போனா இதுனால ஒரு மூணு மாசம் வேஸ்ட்டாச்சு. அதைத் தாண்டி, இப்படி ஒரு குற்றச்சாட்டை வினோத் மேல சொல்றதுக்கும், தன் பேரை தானே கெடுத்துக்கவும் என்ன காரணம்னு எனக்கு டவுட்டு.”, தனஞ்சயனை ஒட்டியே பேசினாள் வானதி.
“வினோத் இங்க சேரலைன்னா, கார்த்திகேயன் சார்தான் H.O.D ஆகிருப்பார் இல்லையா? அவருக்கு சீனியாரிட்டி இருந்துச்சு. இவருக்கு அவரை விட க்வாலிஃபிகேஷன் இருக்கவும், நேரா H.O.Dயா வினோத்தை அப்பாயிண்ட் பண்ணிட்டீங்க இல்லையா சர்?”, வானதி ஜெகன்னாதனைக் கேட்டாள்.
“அதுக்கும் இப்ப இருக்கற பிரச்சனைக்கும் என்னம்மா சம்மபந்தம்? நீ பாட்டுக்கு என்னனென்னவோ பேசிட்டு போற?”, தனஞ்சயனுக்கு முன்பாக அவரது மனைவி பேசினார்.
அங்கிருப்பவர்களுக்கு அதற்குள்ளாக வானதி எங்கே செல்லவிருக்கிறாள் என்ற அனுமானம் வந்திருந்தது.
ஜெகன்னாதன் கீதாவின்புறம் திரும்பி, “கீதவர்ஷிணி… இப்படி செய்ய சொல்லி உனக்கு வேற யாரும் பிரஷர் குடுத்தாங்களா? கார்த்திகேயன் சர் இப்படி செய்யாட்டா உன்னை கைட் பண்ண முடியாதுன்னு மிரட்டினாரா?”, என்று கேட்கவும், பயந்து போனாள் கீதா. அவள் பயம் அப்பட்டமாக தெரிந்தது அவள் முகத்தில். அதைப் பார்த்த அவள் தந்தையும், “ கீதுமா… அப்படியா? உண்மைய சொல்லிடுமா… இந்த அவமானத்தைவிட வேறெதுவும் பெரிசில்லை.”, என்று ஊக்கினார்.
“இல்ல… இல்ல … அந்த மாதிரியெல்லாம் எதுவும் இல்லை. இந்தம்மா எதோ கதை கட்றாங்க. “, தலையை இடவலமாக ஆட்டி, கண் மூடி கைகள் இரண்டையும் இறுக்கி மூடி மறுத்தாள் கீதா.
“சரி… கூல்… இதுக்கு மேல நான் எதுவும் கிளறப் போறதில்லை. என்புருஷன் கீதாவை முத்தமிடலைன்னு ப்ரூவ் பண்ணதோட விட்டுடறேன். நீங்க அதுக்கு மேல பார்த்துக்கோங்க.”, என்று கூறிவிட்டு மீண்டும் லாப்டாப் அருகே சென்று அமர்ந்துகொண்டாள்.
வானதி இப்படி தன் வாதத்தை பாயிண்ட் பாயிண்ட்டாக விளக்குவதை வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள் கல்லூரி முதல்வரும், மற்ற இரண்டு துறைத் தலைவர்களும்.  வினோத் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் விலகியிருந்தது. கண்டிப்பாக இது கார்த்திகேயன் வேலை என்று நம்பினார்கள். அவர் மறைமுகமாக இவனுக்கு கொடுத்துக்கொண்டிருந்த குடைச்சல்கள் எல்லோரும் அறிந்ததுதான். இப்போது அவன் ரிசர்ச் லண்டன் நாளிதழில் வரப்போவது, அவனுடன் ஜெர்மன் பேராசிரியர்களும் அவர்கள் ஆராய்ச்சி பற்றி விளக்கப் போகிறார்கள் அவனுக்கான பாராட்டு விழாவில் என்பது அவரை புகைய வைத்ததும் தெரிந்ததுதான். அதற்காக மனிதர் இவ்வளவு கீழாக இறங்குவார் என்பதுதான் அவர்கள் எதிர்பார்க்காதது.
வினோத்துமே அதிர்ச்சியில்தான் இருந்தான். கார்த்திகேயன் இப்படி தன்னை கட்டம் கட்டுவார் என்று எதிர்பார்க்கவில்லை. அதோடு, இவ்வளவு விவரங்கள் யார் இவளுக்கு சொல்லியது என்பது அடுத்த அதிர்ச்சி. அத்தனைக்கு மத்தியிலும், அவள் இப்படி ஆதாரத்தை பிரித்து மேய்வது பிரம்மிப்பாக இருந்தது. கூடவே, தன் மனைவி என்று சொல்லி தனக்காக வாதாடுவது, அவனுக்கு ஒரு கேடயமாக இருப்பது, வினோத்திற்கு ஒரு கர்வத்தை, பெருமிதத்தைக் கொடுத்தது.
“காமெரா ஆங்கிள் பத்தி உங்களுக்கு அவ்வளவா பரிச்சயமில்லாட்டாலும், எனக்கு உண்டு, போட்டோகிராபில இப்ப படிச்சிகிட்டும் இருக்கேன். அதனால், எனக்கு புரிஞ்சதை உங்களுக்கு சிம்பிளா புரிய வைக்க, வினோத்தோட ஹைட், சைஸ்ல இருக்க ஒரு பையனையும், கீதா ஹைட், வெயிட்ல இருக்க ஒரு பொண்ணையும் இதை அப்படியே நடிக்க வெச்சி, அதே காமிரால ரெக்கார்ட் பண்ணேன். இதை பாருங்க.”, புதிய வீடியோவை ஓட விட்டாள்.
கிட்டத்தட்ட ஒரிஜனல் மாதிரியே இருந்தது.
“இதுலையும் முத்தம் குடுத்த மாதிரி இருக்கு இல்லையா? ஆனா, அந்த இடத்துல என்ன நடந்துச்சுன்னு இந்த முறை, சைட்லயும் ஒரு போன் காமெரா வெச்சி பதிவு செஞ்சோம். இதுல பாருங்க.”, என்று ஓட விட்டாள்.
அதிலிருந்த பெண்ணும் கையில் புத்தகத்தை  நெஞ்சுக்கருகில் இரு கைகளையும் கொண்டு பிடித்திருந்தாள், தலை மேலே லேசாக நிமிர்த்தியிருந்தாள், அந்த மாணவன் நேராக நடந்து வர, இருவருக்கும் இடைவெளி நன்றாகவே இருந்தது தெரிந்தது. அதை அங்கேயே நிறுத்தியவள், வேண்டுமென்றே, மீண்டும் ஒரு அம்பை வரைந்து,
“இந்த இடைவெளி இல்லாம வினோத் முத்தம் குடுக்கணும்னா, அவர் கழுத்து நல்லா மூணு இன்ச்சாவது குனியணும். இல்லையா? இப்ப பழைய வீடியோவைப் பார்க்கலாம்.”, வினோத், கீதாவின் வீடியோவை ஓடவிட்டு அதே இடத்தில் நிறுத்தியவள்,
“அவர் கழுத்து நேராக இருக்கு பாருங்க. இன்ஃபாக்ட், கொஞ்சம் பின்னாடி தலையை இழுக்கறார். அப்படி நேரா நடந்தா, கண்டிப்பா  நாம பார்த்த அதே இடைவெளியிருந்திருக்கணும்.”, என்று கூறி அவன் கழுத்தை சுற்றி ஒரு வட்டம் போட்டாள்.
இப்ப தெளிவா புரியுதுங்களா? இல்லை அந்த பசங்களை இங்கயே கூப்பிட்டு டெமோ காட்டணுமா? கீதாவுக்கு என்ன பிரச்சனைன்னு நீங்களே விசாரிங்க. எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை.”, இருக்கையை விட்டு எழுந்து வினோத் பின்னால் வந்து நின்றாள்.
“பாப்பா…. என்னம்மா இது? பொய் சொன்னியா? இப்படி சொல்ல வெச்சது யாரு?”, தனஞ்சயன் மகளை உலுக்க, தாயும் மகளும் கண்ணீரில் கரைந்தனர்.
ஜெகன்னாதனை நோக்கித் திரும்பியவள், “சர்… கீதா எதுக்காக சொல்லியிருந்தாலும், இப்போ வினோத் பேர் கெட்டுப்போச்சு. யாரோ பசங்க மத்தியில விடியோவை லீக் செஞ்சிருக்காங்க. இந்த மாதிரி விஷயத்துல இப்பல்லாம் ஆண்கள் ஈக்வலா பாதிக்கப்படறாங்க. இந்த கறை அவர் மேல வரக்கூடாது.”
“உண்மைதான். என்ன செய்யணும்னு எதிர்பார்க்கறீங்க வானதி?”, ஜெகன்னாதன் நிமிர்ந்து அவளைப் பார்த்து கேட்டார்.
“வீண் பழி சுமத்துனவங்க, காலேஜ் ஆடிடோரியத்துல வெச்சி பகிரங்க மன்னிப்பு குடும்பத்தோட கேட்கணும். இல்லைன்னா, பெண்ணை மிரட்டி மானேஜ்மென்ட் வினோத்தை காப்பாத்திட்டாங்கன்னு வீணா ஒரு கதை கட்டிவிடுவாங்க. இதுக்கு மேல கீதா இங்க படிக்கறதும் நல்லதில்லைன்னு நினைக்கறேன்.”, சிறு தடுமாற்றமும் இல்லாமல் பதில் வந்தது வானதியிடமிருந்து. கீதா குடும்பத்தினர் அவளை தேற்றுவதில் இருக்க, இதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
“டிபார்மென்ட் லெவல்ல நீங்க விசாரிச்சு இதுக்குக் காரணமானவங்களை டிஸ்மிஸ் செய்வீங்கன்னு நம்பறேன். அதுவும், வினோத்துக்கான பாராட்டு விழாவுக்கு முன்னாடி நடக்கணும். இல்லைன்னா இந்த விழாவே வேணாம். அவருக்கு இதுல இஷ்டமே இல்லை, பசங்க நல்லதுக்குன்னு நீங்க சொல்லவும்தான் சரின்னார். இது நடந்தாலும் நடக்காட்டாலும், அவருக்கான அங்கீகாரம் அவருக்கு கிடைக்கும்.”, ஜெகன்னாதனுக்கே கெடுவும் வைத்து, அது இல்லாவிட்டால் என்ன நேரும் என்றும் தெளிவாய் கூறிவிட்டாள்.
எங்களுக்கு இந்த விழாவால் ஆதாயம் இல்லை. உங்கள் கல்லூரிக்கும், மாணவர்களுக்கும்தான் இதில் நன்மை. அது கிடைக்க, அவன் பெயரில் எந்த களங்கமும் இருக்கக் கூடாது என்ற உட்கருத்து அங்கிருந்தவர்களுக்குப் புரிந்தது.
இப்போது முதல்வரும், துறைத் தலைவர்களும், கரஸ்க்கே ஆர்டரா என்று மிரட்சியாய் பார்க்க, ஜெகன்னாதனோ மெச்சுதலாய் அவளைப் பார்த்தவர், “வினோத் மாதிரி ஒரு ஜெம்முக்கு ஏத்த மனைவின்னு நிரூபிக்கறீங்க வானதி. கண்டிப்பா விழாவுக்கு முன்னாடி நீங்க கேட்டது நடக்கும். “
‘அடிப்பாவி, அந்த மனுஷன் எவ்வளவு பெரிய ஆள். அவரையே பந்தாடிட்டாளே’, என்று வியந்துபோய் அமர்ந்திருந்தான் வினோத்.
“என்ன மிஸ்டர் தனஞ்சயன்? வினோத்திற்கான மன்னிப்பு உங்ககிட்டருந்தும், உங்க பொண்ணுகிட்டருந்தும் வரணும். அதுக்கு முன்னாடி கீதா ஏன் இப்படி பொய் சொன்னான்னு நாங்க கேட்கவா, இல்லை நீங்களே தனியா கூட்டிட்டு போய் விசாரிச்சு சொல்றீங்களா?”, ஜெகன்னாதன் பொறுப்பை கீதாவின் தந்தையிடம் விட்டார்.
“ஆஹ்.. ஒரு நிமிஷம். இன்னும் ஒரு விஷயம் இருக்கு. அதென்ன சொன்னீங்க, அவளை கல்யாணம் செய்ய மாப்பிள்ளை இருந்தாலும், இப்படி ஒரு விஷயத்தால அவ லைப் பாதிக்குமா? அப்போ உங்க வருங்கால மாப்பிள்ளை கண்ல இதெல்லாம் படாத மாதிரி பார்த்துக்கோங்க சார்.”,
லாப்டாப்பிற்கு சென்றவள், ஒரு படத்தைப்போட, அந்த பெரிய திரையில் ஒரு ஆடவனின் மேல் படர்ந்திருந்தாள் கீதவர்ஷிணி. அவன் கைகள் எவ்வளவு தாராளமாக சொன்னாலும் இடுப்பில் இருப்பதாக கூறமுடியாத அளவிற்கு கீழே படர்ந்திருந்தது. அத்தனை பல்லும் தெரிய, போதை ஏறிய கண்களுடன் சிரித்தபடி போஸ் கொடுத்திருந்தாள்.
“ஹ…”, அதிர்ச்சியில் உறையும் கீதாவின் குரல் மட்டும் கேட்டது. பெற்றவர்கள் அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
சலனமே இல்லாமல், அடுத்த போட்டோவைப் போட்டிருந்தாள். “இரு ஆடவர்கள் மத்தியில் ப்ரெட்டுக்கு நடுவில் இருக்கும் ஜாம் போல இருந்தாள். ஒருவன் முத்தமிட குனிந்திருக்க, உதவு குவித்து வாங்க ரெடியாக இருந்த நொடி புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
“கடவுளே….”, கீதாவின் தாய் முனகினார்.
“ஃபேஸ்புக்ல ஃபேக் ஐடி போட்டா, யாருக்குமே தெரியாதா என்ன? உன் முகத்தை டாக் செய்யும்னு கூட தெரியாத தத்தியா நீ கீதா?”, போரடித்த குரலில் கேட்ட வானதி, அந்தக் குடும்பம் நிலைகுலைந்து நிற்பதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல், திரையில் தெரிந்த புகைப்படத்தை மூடி, பென் ட்ரைவை எடுத்தவள்,
“உங்களுக்குத் தேவையான வீடியோஸ் மட்டும் லாப்டாப்ல போட்டிருக்கேன். கீதாவோட போட்டோ உங்களுக்கு தேவைப் படாது. தாங்க்யூ சர்.”, வினோத்தை மட்டும் பார்த்து லேசாய் ஒரு தலையசைப்பைத் தந்தவள், மற்றவர்களை திரும்பிப்பாராமல் கிளம்பிவிட்டாள்.
“ரிமார்க்கபிள் லேடி…”, ஜெகன்னாதன் அவள் சென்று சில நொடிகள் கழித்து கூறவும், முதல்வர் ஆமோதித்தார்.
தளர்ந்துபோய் அமர்ந்திருந்த கீதாவையும், இறுகிப்போய் அமர்ந்திருந்த தஞ்சயனையும் பார்த்து வருந்தினவர், “என்ன முடிவு செய்திருக்க கீதா? “, என்று அடுத்த கட்ட விசாரணையை ஆரம்பித்தார்.
அட்மின் ப்ளாக்கைவிட்டு வரும்போது, வினோத்தின் மாணவர்கள் அவளை சூழ்ந்தனர். “உங்க சார் மேல எந்த தப்பும் இல்லைன்னு ப்ரூவ் ஆகிருச்சு பசங்களா. ரிலாக்ஸ். உங்க உதவிக்கெல்லாம் தாங்க்ஸ்.”, என்றாள் புன்னகையுடன்.
ராக்கியைப் பார்த்தவள், அவனுக்குப் புரியும் விதமாக கண் சிமிட்டி சிமிக்ஞ்சை செய்தாள். சார் பெயர் இப்படித்தான் கிளியர் ஆனது என்று மாணவர்களிடையே தெளிவுபடுத்த இவர்கள் தயாரித்த வீடியோ லீக் ஆவதற்கான ஏற்பாடு தொடங்குவதற்கான சிக்னல் அது. மாணவ மாணவிகள் சத்தமிட்டு தங்கள் ஆதரவைக்காட்ட, சிரிப்புடன் கண்களை சுற்றிலும் ஓடவிட்டாள். ஒரு ஒரம் காக்கி உடையில் நின்ற ஒரு மனிதரைப் பார்த்து வணக்கம் வைக்க, அவர் பதில் வணக்கம் வைத்தார் பெரிய புன்னகையுடன். அவர் ப்யூன் வேலு. இவர் உதவியினால்தான் பல விஷயங்களும் தெரிந்தது.
அன்று மாலை வினோத் உள்ளே வர, சாவகாசமாய் ஒரு சாதாரண சல்வார் அணிந்து எதோ பத்திரிக்கையை புரட்டிக்கொண்டிருந்தாள் வானதி.
“வானதி….”, அவளைப் பார்த்து நின்றவனிடம்,
“ஹாய்.. போய் ரிஃப்ரெஷ் ஆகுங்க வினோத். காபி , ஸ்னாக்ஸ் ரெடி செய்ய சொல்றேன்.”, எதுவுமே காட்டிக்கொள்ளாமல் வானதி பேசவும், ஒரு நிமிடம் முழித்தான் வினோத்.
அவள் கனன்று கொண்டிருக்கும் எரிமலை என்பது அவன் பார்வைக்கோ, அறிவிற்கோ புலப்படவில்லை.

Advertisement